மொத்தக் கதைகள் 36 – 2

by Karundhel Rajesh April 11, 2013   Cinema articles

சென்ற கட்டுரையில் போல்டியின் புத்தகத்தின் முதலிரண்டு சிச்சுவேஷன்களைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மூன்றாவது சிச்சுவேஷனிலிருந்து தொடருவோம்.

Situation 3: Crime pursued by Vengeance – குற்றமும் பழிதீர்த்தலும்

இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான கதாபாத்திரங்கள் இரண்டு.

கதாபாத்திரம் 1: குற்றம் புரிந்தவன் (அல்லது) கும்பல்
கதாபாத்திரம் 2: பழிதீர்க்கும் நபர் (அல்லது) குழு

இந்த சிச்சுவேஷனுமே பல எழுபதுகள் மற்றும் எண்பதுகளின் தமிழ்ப்படங்களின் டெம்ப்ளேட் என்று சொல்லமுடியும். ஒரு குற்றம் – அதனைத் தொடர்ந்து, அந்தக் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கொடியவனைப் பழிதீர்த்தல் என்ற இந்த சிச்சுவேஷன் மொத்தம் மூன்று வகைப்படும். (இதில் முதலிரண்டு வகைகளுக்கு போல்டியே பெயர் வைக்கவில்லை).

1.

A. பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ அல்லது மூதாதையர்களையோ கொன்றதைப் பழிவாங்குதல்
B. பிள்ளைகள் அல்லது வழித்தோன்றல்கள் கொல்லப்பட்டதைப் பழிதீர்த்தல்
C. அவமானப்படுத்தப்பட்ட பிள்ளை: அதற்காகப் பழிவாங்குவது
D. மனைவி அல்லது கணவன் கொல்லப்பட்டதற்காக கணவனோ அல்லது மனைவியோ பழிதீர்த்தல்
E. மனைவி அவமானப்படுத்தப்பட்டதையோ அல்லது அவளை யாரேனும் அவமானப்படுத்த முயன்றதையோ பழிவாங்குதல்
F. காதலி கொல்லப்பட்டதைப் பழிதீர்த்தல்
G. படுகாயமடைந்த (அல்லது) கொல்லப்பட்ட நண்பனுக்காகப் பழிவாங்குதல்
H. மானபங்கப்படுத்தப்பட்ட சகோதரிக்காக பழிதீர்த்தல்

2.

A. காயப்படுத்தப்பட்டதையோ அல்லது சரிசெய்யவே முடியாத கொடூரமான சிதைத்தலையோ எதிர்த்துப் பழிவாங்குவது
B. உரியவர் இல்லாதபோது அவருக்குப் பிடித்தமான பொருட்களையோ அல்லது ஆட்களையோ கடத்துவதற்குப் பழிதீர்த்தல்
C. கொலைமுயற்சிக்காகப் பழிவாங்குதல்
D. போலியான குற்றச்சாட்டை சுமத்தியவர்களைப் பழிதீர்த்தல்
E. கற்பழிப்புக்காகப் பழிவாங்குவது
F. தன்னிடமிருந்து திருடப்பட்ட அல்லது பறிக்கப்பட்டவைகளுக்காகப் பழிதீர்ப்பது
G. துரோகம் செய்ததற்காக, அதை செய்தவரின் பாலினத்தைச் சேர்ந்தவர்களை ஒரே நபர் கொல்லுவது

3. கிரிமினல்களை, போலீஸோ அல்லது துப்பறிவாளர்களோ துரத்துவது

Situation 4: Vengeance taken for kindred upon kindred – உறவுகளின்மீதான பழிதீர்த்தல்

இந்த முப்பத்தாறு சிச்சுவேஷன்களில், சிலமுறை இரண்டு சிச்சுவேஷன்களை ஒன்றுசேர்த்து ஒரு புதிய சிச்சுவேஷனை போல்டி உருவாக்கியது உண்டு. இந்த நான்காவது சிச்சுவேஷன் அப்படிப்பட்டது. தனது பட்டியலின் 27வது சிச்சுவேஷனான ‘உறவினரின் அவமானத்தைத் தெரிந்துகொள்ளல்’ என்பதை மூன்றாவது சிச்சுவேஷனான பழிதீர்த்தலுடன் சேர்த்து உருவாக்கியதே இந்த நான்காவது சிச்சுவேஷன். இந்த சிச்சுவேஷனின்படி, குற்றம் புரிந்த உறவினரை இன்னொரு உறவு பழிவாங்குவார். உறவினர்களுக்கிடையான பிரச்னைகளைப் பற்றிய சிச்சுவேஷன் இது.

இந்த சிச்சுவேஷனின் விசேடம் என்னவென்றால், இதிலுள்ள பல சாத்தியக்கூறுகள்தான். அதாவது, குற்றம் புரிந்தவரைப் பழிவாங்கும்வரையில் அவருக்கும் தனக்கும் உள்ள உறவுமுறையே தெரியாமல் இருக்கக்கூடிய சாத்தியம் உண்டு. கூடவே, இறக்கும் தருவாயில் இருப்பவரின் கடைசி ஆசையாகக் கூட இந்தப் பழிவாங்கல் இருக்கலாம். போலவே இறந்தவரின் நினைவுகள் மனதை ஆட்டிப்படைப்பதால் இந்தப் பழிவாங்கல் நடக்கலாம். அல்லது முறையாக சட்டப்படிக்கூட இந்தப் பழிவாங்கல் நிறைவேறலாம் (பழிவாங்கும் நபர் போலீஸாகவோ சட்ட அதிகாரியாகவோ இருந்தால்). அதேபோல் உறவினரையோ அல்லது உறவினர்களையோ அல்லது ஊர் மக்களையோ காக்கும் முயற்சியாகவோ இந்தப் பழிவாங்கல் நடக்கலாம். உறவினரைப் பழிவாங்குகையில் அவர் நிரபராதி என்று தெரியவரலாம் (அதற்குள் சம்மந்தப்பட்டிருப்பவர் இறந்திருப்பார்). இதனால் பழிவாங்கியவர் ஒரு கிரிமினலாக மாறலாம். போலவே, குற்றம் புரிந்த நபரைப் பழிவாங்குமுன்னர், அந்த நபர் உயிரையே வைத்திருப்பவர்கள் கூட தண்டிக்கப்படலாம். இறுதியாக, மனிதர்களாகவே இல்லாமல் அவர்களின் பொருட்களான வீடு, தோட்டம் போன்றவை கூட அழிக்கப்படலாம்.

இப்போது, இந்த சிச்சுவேஷனின் நான்கு வகைகள்.

1.

A. தந்தையைக் கொன்ற தாயைப் பழிவாங்குதல்
B. தாயைக் கொன்ற தந்தையைப் பழிவாங்குதல்

2. சகோதரனைக் கொன்ற மகனை, அவனது தந்தை பழிவாங்குவது

3. தந்தையைக் கொன்ற கணவனை, மனைவி பழிவாங்குவது

4. கணவனைக் கொன்ற தந்தையைப் பழிவாங்கும் மனைவி

இவையே இந்த சிச்சுவேஷனின் பிரதான பிரிவுகள். இதைத்தவிரவும் இன்னும் பல உட்பிரிவுகளை சுட்டிக்காட்டும் போல்டி, அவற்றையும் மிகச்சுருக்கமாக எந்த உதாரணங்களும் இல்லாமல் விளக்குகிறார். ஆனால் அவைகளை இங்கே பட்டியலிட்டால் குழப்பமே மிஞ்சக்கூடும் என்பதால், எந்த உறவினர்கள் மீதும் பிற உறவினர்கள், இறந்தவர்களுக்காக அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்தப் பழிவாங்கும் முயற்சியை நடத்தலாம் என்பது மட்டும் கவனத்தில் வைப்போம்.

Situation 5: Pursuit – பின்தொடர்தல்(அல்லது) துரத்தப்படுதல்

இந்த சிச்சுவேஷன், துரத்தப்படும் ஹீரோ அல்லது ஹீரோயினை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இதன்படி அப்படி தப்பியோடும் நபர் செய்த குற்றம் மன்னிக்கப்படலாம். அந்த நபரே ஒரு நிரபராதியாகக்கூட இருக்கலாம். மிகச்சிறிய குற்றமாகவும் அது இருக்கலாம். ஆனால், நாம் நினைவுகொள்ளக்கூடிய விஷயம் என்னவென்றால், அப்படி ஓடும் நபரை ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்பதே. பெரும்பாலும் அப்படித் தப்பியோடும் நபர் தனிமையாகவே உணர்வார். அவரது வாழ்வில் இதன்பின் நடக்கும் சம்பவங்களையே இந்த சிச்சுவேஷன் மையமாக வைக்கிறது. குற்றத்தைப் பற்றி நாம் இங்கு பார்க்கப்போவதில்லை. மாறாக, அந்த நபரின் பயணம்தான் முக்கியம்.

இந்த சிச்சுவேஷன் நான்கு வகைப்படும்.

1. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடும் நபர்கள், அவர்கள் செய்த அரசியல் குற்றங்கள் மற்றும் கொள்ளை, திருட்டு ஆகியவற்றுக்காக துரத்தப்படுதல்.

2. காதல், கட்டாயத் திருமணம், ஒருதலைக் காதல் போன்ற விஷயங்களில் இருந்து தப்பி ஓடுதல்

3. ஒரு மாபெரும் சக்திக்கு எதிராகப் போரிடும் ஹீரோ

4. ஒரு சைக்யாட்ரிஸ்ட்டிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் போலி பைத்தியம் (அல்லது) பைத்தியமாக நடிக்கும் மனிதன்

Situation 6: Disaster – கொடுந்துன்பம்

மனித மனதுக்கு பெரும் துன்பம் தரக்கூடிய விஷயங்கள் இந்த சிச்சுவேஷனின் கீழ் வருகின்றன. நான்கு வகைகளில் இந்த சிச்சுவேஷனை விலக்குகிறார் போல்டி.

1.

A. தோல்வியடைதல் – இது, போரில் அடையும் தோல்வியாக இருக்கலாம். அல்லது இரண்டு மனிதர்களுக்கிடையே நடக்கக்கூடிய போட்டியில் தோல்வியடையும் நல்ல மனமாக இருக்கலாம். எந்த நிலையானாலும் சரி, தோல்வி அடைந்து, அதனால் நேரக்கூடிய துன்பமே இந்த முதல் வகை.

B. தாய்நாடு சிதைக்கப்படுவது

C. மனித சமுதாயத்தின் வீழ்ச்சி

D. இயற்கைப் பேரழிவு

2. ஒரு சர்வாதிகாரி வீழ்த்தப்படுதல்

3.

A. செய்நன்றி மறத்தல்

B. அநியாயமான, நேர்மையற்ற தண்டனை அல்லது விரோதத்தால் துன்பமடைதல்

C. அக்கிரமத்தால் பாதிக்கப்பட்டு வருந்துதல்

4.

A. காதலன் அல்லது கணவனால் கைவிடப்படுதல்

B. பெற்றோரால் தொலைக்கப்பட்ட குழந்தைகளின் துன்பம்

Situation 7: Falling prey to cruelty or misfortune – கொடூரம் அல்லது துரதிருஷ்டத்தால் பாதிக்கப்படுவது

Pessimism என்று சொல்லக்கூடிய எதிலுமே நம்பிக்கையற்ற குணத்தின் முழு வெளிப்பாடாக இந்த சிச்சுவேஷனைப் பற்றிச் சொல்கிறார் போல்டி. வழக்கப்படி இதுவும் நான்கு வகைப்படுகிறது.

1. ஒரு அப்பாவி, சூழ்ச்சியில் மாட்டிக்கொள்வது

2. தன்னைக் காப்பவர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் நம்பிக்கையான சிலரே ஒரு அப்பாவியை ஏமாற்றுதல்

3.

A. செல்வாக்கும் மரியாதையும் மிக்கவர்கள் திடீரென அத்தனையும் பறிக்கப்பட்டு மிகுந்த துயரமிக்கவர்களாக மாறுதல்

B. எப்போதும் அன்பிற்குகந்தவர்களாக கருதப்படுபவர்கள் திடீரென மறக்கப்படுதல்

4. துர்ப்பாக்கியசாலிகள், அவர்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கையையும் பறிகொடுத்தல்

Situation 8: Revolt – கிளர்ச்சி (அல்லது) புரட்சி

புரட்சி அல்லது கிளர்ச்சி என்பது எப்போதும் மக்களின் விருப்பத்துக்குகந்தவைகளாகவே இருக்கின்றன. அடிமைப்பட்டவர்கள் கிளர்ந்து எழும்போது எப்போதுமே அது பெரும் சுவாரஸ்யத்தையும் மகிழ்ச்சியையுமே உண்டுசெய்கிறது அல்லவா? இது இரண்டுவகைப்படுகிறது.

1.

A. ஒரு தனிமனிதனின் சதித்திட்டம்

B. ஒரு கும்பலின் சதித்திட்டம்

2.

A. ஒரு தனி மனிதனின் புரட்சியினால் பிறரும் உந்தப்பட்டு அவனுடன் சேர்தல்

B. பலரும் சேர்ந்து புரட்சி செய்தல்

பழங்காலத்திய நாடகங்களும் கதைகளும், ‘அடிமைப்படுத்தப்பட்ட மனிதன், தனது பாதி ஆன்மாவை இழக்கிறான்’ என்று சொல்லியுள்ளதை நினைவுகூரும் போல்டி, அவரது காலத்தின் புத்தகங்களில் விவாதிக்கப்பட்டுள்ள புரட்சிகளின் விவரணைகளுடன் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.

Situation 9: A daring enterprise – துணிச்சலான செய்கை

இந்த சிச்சுவேஷனுக்குத் தேவையான கதாபாத்திரங்கள் மூன்று.

கதாபாத்திரம் 1: துணிவு நிரம்பிய ஹீரோ
கதாபாத்திரம் 2: இந்த ஹீரோ துணிச்சலுடன் அடைய நினைக்கும் பொருள்
கதாபாத்திரம் 3: வில்லன்

ஹீரோ ஒரு துணிச்சலானவன். அவன் அடைய நினைக்கும் பொருளை எப்பாடுபட்டாவது துணிகரச்செயல் புரிந்து அடைய நினைப்பவன். ஆனால் இடையில் நிற்பது வில்லன். அப்போது என்ன ஆகும்?

1. போர் புரிய ஆயத்தம் செய்தல்

2.

A. போர்

B. கைகலப்பு (அல்லது) சிறிய அளவிலான சண்டை

3.

A. யாருக்கேனும் பிடித்த ஒரு நபரையோ அல்லது பொருளையோ கவர்ந்து சென்றுவிடுவது

B. கவர்ந்து செல்லப்பட்ட பொருளை மீட்டுக் கொண்டுவருதல்

4.

A. சாகஸமிக்க பயணங்கள்

B. ஹீரோ விரும்பும் பெண்ணை அடைவதற்காக மேற்கொள்ளும் சாகஸப் பயணம்

யோசித்துப் பாருங்கள். சிந்துபாதின் கதைகள், ஆயிரத்தோரு அராபியக் கதைகள், ரஷ்ய நாடோடிக் கதைகள் போன்ற பலவற்றில் இப்படிப்பட்ட சாகஸப் பயணங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களை மறக்க முடியுமா? இப்படிப்பட்ட கதைகளில் இயல்பாகவே நமது சுவாரஸ்யம் அதிகரிக்கிறது. ஆனால், எனக்குத் தெரிந்து தமிழில் இப்படிப்பட்ட கதைகள் அரிது. தற்காலத்தில், ஆயிரத்தில் ஒருவன் படத்தை சொல்லலாம்.

Situation 10: Abduction – கடத்திச் செல்லுதல்

கடத்துதல் என்ற இந்த சிச்சுவேஷன் பல தமிழ்ப்படங்களில் கையாளப்பட்டிருக்கிறது. ஆங்கிலப்படங்களிலும் இது மிகவும் சுலபமான கரு. இதில் உள்ள பல்வேறு வகைகளை இதோ போல்டி விளக்குகிறார்.

1. விருப்பமில்லாத பெண்ணைக் கடத்திச் செல்லுதல்
2. விருப்பமுடைய பெண்ணை கடத்திச் செல்லுதல்
3.

A. கடத்திச் செல்லப்பட்ட பெண்ணை, கடத்தியவர்களைக் கொல்லாமல் திரும்ப அடைதல்
B. கடத்திலவரைக் கொன்றுவிட்டு, கடத்திச்செல்லப்பட்ட பெண்ணை அடைதல்

4.

A. கடத்தப்பட்ட நண்பனையோ தோழியையோ காப்பாற்றுதல்
B. கடத்தப்பட்ட குழந்தையை விடுவித்தல்
C. வாழ்வின் குறிக்கோள் அறீயாமல் சீரழிந்துகொண்டிருக்கும் ஆன்மாவை சரியான பாதியில் மீட்டு வருதல் (புத்தரின் கதை. ஆன்மீக மஹான்களின் கதை).

இத்துடன் முதல் பத்து சிச்சுவேஷன்கள் முடிகின்றன. இதே ரீதியில் பிற 26 சிச்சுவேஷன்களையும் பார்த்துவிட்டு முடிப்போம்.

பி.கு – இதில் உதாரணங்கள் கொடுக்கப் புகுந்தால் எப்படி மிகவும் நீளமாக அந்தக் கட்டுரை மாறுகிறது என்று சென்ற கட்டுரையில் தெரிந்துகொண்டதால் இந்தக் கட்டுரையில் உதாரணங்கள் இல்லை. ஆனால், படிக்கும் நண்பர்கள் சிச்சுவேஷன்களைப் படிக்கும்போதே அவர்களுக்கு உதாரணங்கள் தோன்றாமல் இருக்காது. ஆகவே உங்கள் மனதில் தோன்றும் உதாரணங்களை நீங்களேஉருவகித்துக் கொள்ளலாம்.

தொடரும்…

  Comments

16 Comments

  1. Karthick Nagendran

    எ.கா
    Situation 3: Crime pursued by Vengeance – குற்றமும் பழிதீர்த்தலும்
    ரஜினியின் பாயும் புலி (தங்கையை கற்பழித்தற்க்காக பலி வாங்கும் அண்ணண்)

    Situation 4: Vengeance taken for kindred upon kindred – உறவுகளின்மீதான பழிதீர்த்தல்
    தாமிரபரணி ( முதல் பாதியில் விசால் நித்தியாவையும் அவர்களின் குடும்பத்தையும் தன் சொந்த அத்தை என தெரியாமல் பழி வாங்குதல்)

    Situation 5: Pursuit – பின்தொடர்தல்(அல்லது) துரத்தப்படுதல்
    ரஜினியின் ஜானி ( ஒரு ரஜினி செய்த கொலைக்காக, (அந்த கொலையும் நியாமான காரணத்திற்க்காக இருக்கும்) இரண்டு ரஜினிகளையும் துரத்துதல்)

    Situation 6: Disaster – கொடுந்துன்பம்
    schindler’s list ( ஜெர்மனியின் நாஜி படைகள் யுதர்களை துன்புறுத்துவது)

    Situation 7: Falling prey to cruelty or misfortune – கொடூரம் அல்லது துரதிருஷ்டத்தால் பாதிக்கப்படுவது
    படையப்பா ( சிவாஜி தனது தம்பி இடத்தில் அனைத்து சொத்துகளையும் இழத்தல், இந்த படத்தையே Situation 4: Vengeance taken for kindred upon kindred – உறவுகளின்மீதான பழிதீர்த்தல் சுச்சுவேசனுக்கும் பயன்படுத்தலாம்)

    Situation 8: Revolt – கிளர்ச்சி (அல்லது) புரட்சி
    ஆயுத எழுத்து, கோ (மாணவர்கள் அரசியலில் இறங்கி புரட்சி செய்வது)

    Situation 9: A daring enterprise – துணிச்சலான செய்கை
    தில் (போலிசாக துடிக்கும் ஹீரோ விக்ரம் அதை தடுக்க முயற்ச்சி செய்யும் வில்லன்)
    சாகச பயணத்திற்க்கு தசவதாரம் ஒரு உதாரணம் ( உலகை அழிக்கும் வைரஸ் வைல் ஐ அழிக்க எடுத்து செல்லும் ஹீரோ அதை தடுக்க முயற்ச்சிக்கும் வில்லன்,

    Situation 10: Abduction – கடத்திச் செல்லுதல்
    திருடா திருடா ( இந்திய அரசாங்கத்தின் பணப்பெட்டியை கடத்தி செல்லும் வில்லன்)

    பி.கு – ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு படம் மட்டுமே உதாரணம் சொல்லப்பட்டு இருக்கிறது ஏனெனில் நாம் ராஜேஸ் அளவிற்க்கு டைப் செய்வதற்க்கு பொறுமை இல்லை, ஒவ்வொரு உட்பிரிவுக்கும் சில (பெரிய) வித்தியாசங்கள் இருக்கிறது இந்த உதாரணங்கள் உங்களுக்கு ஒவ்வோரு தலைப்பை பற்றியும் ஒரு சிறிய புரிதலை ஏற்படுத்தும் அவ்வளவுதான். மேலும் அனைத்து சுச்சுவேசன்களுக்கும் ஓரிரு படங்களை மட்டுமே வைத்து விவரிக்க முயற்ச்சிக்கிறேன் விரைவில் அதை பற்றி ஆராய்ந்து பின்னூட்டமிடுகின்றேன்.

    Reply
  2. It’s a very interesting comment karthick. Thank you. And please come back with more as you have mentioned.

    Reply
    • Karthick Nagendran

      ஆனா ராஜேஸ் நீங்க கொழந்த கூட பேஸ்புக்ல சாட் செய்யும் போது, இந்த மாதிரியான சுச்சுவேசன்ஸ் படத்தோட ஒன் லைங்க்கு தான் பொறுந்துமன்னு சொல்லியிருக்கிங்க, அப்ப நான் படையப்பா படத்த உதாரணமாக காட்டியது சரியில்லை தானே ( தன் சொத்துக்களை எல்லாம் சூழ்சியினால் இழத்தல்) நான் அந்த படத்த உதாரணம் காட்டியத்தற்கு காரணம் சிவாஜி தன் சொத்துக்களை தன் தம்பிக்கு கொடுத்துவிட்டு வந்துவிடுவார் , ஆனா படத்தோட ஒன் லைன் வேர (ஒரு பெண் தான் காதலிச்சவன் தன்னை கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்பதற்க்காக அவனை பழி வாங்குகிறாள் அதை அவன் எப்படி முறியடிக்கிறான் என்பதுதான் கதை), இப்ப ஏன் சந்தேகம் என்னன்னா ஒன்றுக்குக்கு மேற்ப்பட்ட சுச்சுவேசன்களை ஓரே படத்தில் சில முக்கியமான காட்சிகளை கொண்டு சொல்ல முடியும்,அவ்வாறு கொண்டுவருவது சரியா. தாம் தூம் படத்திற்க்கு மேலே கூறிய சுச்சுவேசங்களில் ஒன்று உதவி செய்தல்(லட்சுமி பிரியா ஜெயம் ரவிக்கு) இரண்டு துரத்தல் (ஜெயம் ரவி சிலரின் சூழ்சியால் கொலைபழி சுமத்தப்பட்டு துரத்தப்படுதல்),

      பி.கு இது ஒரு தவறான புரிதல் தான், இந்த புரிதல் தமிழ் சினிமாதான் எனக்குள் ஏற்படுத்தியிறுக்கு உதாரம் ஏரத்தாள லவ் இல்லாத தமிழ் படங்களே இன்று இல்லை எந்த ஜொனர் ஆனாலும் சரி.

      Reply
      • viruchigam

        “The Thirty-Six Dramatic Situations is a descriptive list which was created by Georges Polti to categorize every dramatic situation that might occur in a story or performance.”-wikipaedia

        36 கதைகள் தான் உண்டு என்று அவர் சொல்லியதாக இருக்க முடியாது-நீங்கள் அவ்வாறுதான் புரிந்துகொண்டுள்ளிர்கள் எனக் கருதுகிறேன்-ஒவ்வெரு கதையும் அல்லது காட்சியும் ஏன் ஒரு frameகூட பல சூழ்நிலைகளின் கோவை-இந்ததச் சூழ்நிலைகள்தான் 36.

        அதைவிட அவர் காலத்தின் பின் வந்த themes like A.I -இவர்களின் சூழ்நிலைகள் முற்றாக இவ் வகைகளில் அகப்படும் என்று தோன்றவில்லை.

        Reply
        • Rajesh Da Scorp

          முதல்ல கார்த்திக்குக்கு என்னோட பதில். உண்மைல நான் கொழந்த கூட சாட் பண்ணதுல சொல்லவந்தது, ஒன்லைன் என்றால் படத்தின் ஒரே ஒன்லைன் இல்ல. நம்ம போல்டி சொல்லவர்ரதுதான் என் கருத்தும். ஒரு படத்தில் இந்த மாதிரி பல தீம்கள் இருக்கலாம். பல சிச்சுவேஷன்கள் சேர்ந்ததுதான் கதை. போல்டி கொடுக்கும் உதாரணங்கள் அவரது காலத்தில் இருந்த கதைகள், நாடகங்கள் மற்றும் கவிதைகளை வைத்துதான். அவற்றில் ஒரே கதையில் இதுபோன்ற பல சிச்சுவேஷன்கள் வருவதையும் அவர் எழுதியிருக்கிறார். எனவே நீங்கள் கொடுக்கும் உதாரணங்கள் சரிதான்.

          அடுத்து விருச்சிகத்துக்கு என் பதில் மேலே கார்த்திக்குக்கு சொல்லியிருக்கும் பதிலே உங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். நான் எழுதும்போது இந்த போல்டியின் பல சிச்சுவேஷன்கள் பற்றி சரியாக என் நிலைப்பாடை எழுதவில்லை. சிம்பிளாக – மொத்தம் 36 கதைகள் தான் என்று போல்டி சொல்லவில்லை. சிச்சுவேஷன் என்று அவர் தலைப்பிட்டுள்ளதே இதன் காரணமாகத்தான். சூழ்நிலைகளை மட்டும்தான் அவர் குறிப்பிடுகிறார். இதை சரியாக நான் எழுதாததால்தான் உங்களுக்கு இந்த doubt தோன்றியிருக்கிறது போலும். இதோ அடுத்த கட்டுரையில் அதை தெளிவு படுத்திவிடுகிறேன்.

          Thank you both for the comments.

          Reply
  3. viruchigam

    பதிவுக்கு நன்றி

    situation 3-1-A. பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ அல்லது மூதாதையர்களையோ கொன்றதைப் பழிவாங்குதல்-ஜீவா நடித்த ராம்-இங்கு ஒரு சந்தேகம்-ராம் ஏதாவது படத்தின் தழுவலா,ஆதி பகவனில் அமீர் scarfaceயும் american gangsterயும் காப்பி அடித்ததுதான் இந்த கேள்விக்கு காரணம் .

    அதே போல் நான் தமிழில் வந்த original சிறந்த படம் (அதுவும் psychological thriller ) எனக்கருதும் கற்றது தமிழ்லும் எதாவதின் தழுவலா என அறிய விரும்பிகிறேன்.

    F. காதலி கொல்லப்பட்டதைப் பழிதீர்த்தல்-memento

    2.-G. துரோகம் செய்ததற்காக, அதை செய்தவரின் பாலினத்தைச் சேர்ந்தவர்களை ஒரே நபர் கொல்லுவது-சிம்புவின் மன்மதன்

    E. கற்பழிப்புக்காகப் பழிவாங்குவது-the brave one

    situation 4-மாற்றான்,The Godfather

    சம்பந்தம் இல்லா விட்டாலும் மாற்றான் பற்றி இங்கு ஒரு விடயத்தை பதிய ஆசைப்படுகிறேன்.இந்தப் படத்திட்க்கு ஏன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்-முரணான சகோதரர்களே போதுமே-இது தான் படம் பார்த்த பின் எழுந்த முதல் கேள்வி-அதற்க்கு பதிலை நான் கண்டுபிடித்தபோது எவ்வளவு அழகான கதைக் கருவை சிதைத்து விட்டார்கள் என்று புரிந்தது.

    மகனை கொல்லும் அளவுக்கு தந்தைக்கு சரியான பின்னணி வேண்டும்-அங்குதான் நுழைகின்றது ஒட்டிப்பிறத்தல்.-ஒரு மகனைக் காப்பாற்ற இனொரு மகனைக்
    கொல்ல வேண்டும்-எனவே அகிலனைக் கொல்வதற்க்கு,அவனை இழப்பதற்க்கு தந்தை தயார் செய்யப்படவே ஒரு இதயம் உள்ள இரட்டையர்கள்.

    விமலன் இறந்தது ஒரு விபத்து-chipஐ வேண்டிவரவே சொன்னார் ஆனால் ஏற்பட்ட சண்டையில் அவன் இறந்து விட்டான்.

    இதுவே விமலன் இறக்காமல் அகிலன் அங்கு இறந்தால் ,தந்தை அவனை கொல்லும் அளவு போயிருக்க மாட்டார்,ஆனால் சாரு அவர்கள் சொன்னது போல் binary oppositionக்காக தந்தையை முற்றிலும் கெட்டவனாக்கி கதையை கெடுத்துவிட்டனர்.

    situation 5-a beautiful mind-சில காட்சிகள் என்றாலும் இதை நான் குறிப்பிடக் காரணம்-உண்மையில் அவனை யாரும் பின்தொடரவில்லை அது அவன் கற்பனையே.

    4. ஒரு Psychiatristஇடம் தவறாக அகப்படல்-Terminator 2.

    Reply
  4. viruchigam

    தங்கள் Talaash படத்தின் விமர்சனம் (http://karundhel.com/2012/12/talaash-2012-hindi.html) வாசித்தேன். அதில் உங்கள் வாதம்

    1)அமீரின் சோக பின்னணி, படத்துக்கு தேவையே இல்லை.

    2)படத்தில் logic இல்லை.

    நான் புரிந்து கொண்ட வரை:

    அமீர் குற்ற உணர்வால் வேதனை படுகிறான் ,ஆனால் அவன் மனைவி போல் ஆவிகளோடு பேசலாம் என்பதை இவனால் நம்ப முடியவில்லை.ஆனால் அதை நம்புவதே குற்ற உணர்வில் இருந்து அவனாக வெளிவர ஒரே வழி.

    எனவே அவனே ஒரு பேயை சந்தித்தால் மட்டுமே அவன் இதை நம்புவான்.
    ஒரு police அதிகாரியின் வாழ்வில் பேயை எப்படி கொண்டுவருவது?இரண்டாவது கதை தேவைப்படுகிறது.
    திடிர் என்று கொண்டுவந்தால் அவன் நம்ப மாட்டான்,எனவே மெதுவா ஒரு துப்பறியல் முயற்சியில் அவன் அவளை எதிர்கொள்கிறான்,

    ஆனால் உங்கள் பார்வை (உங்கள் commentல் இருந்து)-

    “அமீரின் சோக பின்னணி, எப்படி இந்தக் கதையில் புகுத்தப்பட்டுள்ளது என்பதை இனி விளக்குகிறேன். படத்தின் க்ளைமேக்ஸ் என்ன? மரணங்களைத் தூண்டிவிட்டது பேய் என்பதே. திரைப்படத்தில் அதுதான் இறுதி ட்விஸ்ட். இறுதிவரை இந்தப் படத்தைக் காணும் ஆடியன்ஸு க்குக் கிடைக்கும் செய்தி அதுதான். இந்த கிளைமேக்சை நோக்கி ஆடியன்சை நகர்த்தும் முயற்சிதான் ராணி தன மகனின் ஆவியுடன் பேச முயலும் காட்சிகள். ஏன்? அது ஆடியன்சுக்குத் தரப்படும் ஒரு செய்தி. ‘இறுதியில் தடாலென்று ஆவியை நாங்கள் காட்டப்போகிறோம் – ஆகவே இது இல்லாஜிகலாக இருக்கிறதே என்று எங்களைத் திட்டாதீர்கள் – இதோ ஆரம்பத்திலேயே ஆவிகளைப் பற்றிய சில காட்சிகளை இணைத்திருக்கிறோம் – ஆகவே அதைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்பதே இப்படத்தின் சீக்வென்ஸ்.”

    நான் சொன்னதன் தலைகீழான வடிவம் இது-கரீனா ஒரு பேய் என்பதை நம்பவைக்கவே அமீரின் சோக பின்னணி என்கிறீர்கள் -நான் சொன்னது-சோகங்களில் இருந்து தானாக (emphazis on “தானாக “) விடுபட பேய்கள் இருக்கு என்று நம்பவேண்டிய ஒருவனுக்கு அந்த நம்பிக்கையை (மூடநம்பிக்கையை whatever )கொடுப்பதற்கே கரீனா .வித்தியாசம் புரிகிறதா.

    பேய்க்கதைகளை 2 மணி நேரம் நம்ப தயரிள்ளாதவர்களுக்கு (ஆனால் இந்தக் கூட்டத்தில் 6th senseஇன் ரசிகர்களும் உண்டு ) -இது அவனுடைய hallucinationsதான் i .e -அவனோட துப்பறியும் உள்ளுணர்வுகலே ஒரு hallucinationஆக மாறி அவனை வழிநடத்துகிறது-என்று logic கொடுக்கவும் அமீரின் சோக பின்னணி தேவை-சோகம் இல்லாட்டி hallucination ஏன் வந்தது என்ற கேள்வி வருமே.

    நீங்களும் சரி உங்களுடன் தர்க்கம் புரிந்த ராஜாராமும் சரி இந்த மூன்றாம் பர்வைக்கோணத்தை விட்டு விட்டீர்கள்.

    அப்பொழுது ராணி முகர்ஜின் கடிதங்களும் hallucinationsஅ என்றால்-இவ் மாதிரி கடிதங்கள் ஊடாக ஆவிகளுடன் கதைப்பது நம் ஊர்களில் நடப்பதுதானே-அது நடத்துபவர்களின் tricksஒ என்னவோ அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் தானே.அது நடத்துபவர்கள் தாங்களே எழுதிவிட்டு ஆவி எழுதியது என்றுகூட இருக்கலாம்-ஆனால் நம் சமுதாயத்தில் அந்த நம்பிக்கை உடையவர்களும் உண்டு-அந்த மாதிரி கடிதங்களும் உண்டு.

    Reply
    • Rajesh Da Scorp

      விருச்சிகம். உங்களது கருத்தை புரிந்துகொண்டேன். அதற்கு என் பதில் எப்படி இருக்கும் என்றால் – நீங்கள் சொல்வதுபோல் அமீரின் சோகப் பின்னணிஇலிருந்து அவன் விடுபடவேண்டும் என்பது படத்தின் முக்கியமான plot ஆக இருந்தால், அப்படித்தான் படத்தின் perspective இருந்திருக்க வேண்டும். அதாவது படத்தின் ஆரம்ப விபத்து, அதன்பின்னான அமீரின் துப்பறிதல் ஆகிய காட்சிகளின் மீதான முக்கியத்துவம் குறைந்து, அமீரின் சோகத்தின்மீதான முக்கியத்துவமே அதிகமாக இருந்திருத்தல் வேண்டும். மாறாக, ஆடியன்சுக்கு அந்தக் கொலையில் சம்மந்தப்பட்டுள்ள அடியாள், அவன் மனைவி, அங்கே பெண்களுக்கு நடுவே அமர்ந்திருக்கும் கரீனா பேசுவது போன்ற காட்சிகளெல்லாம் ஒவ்வொன்றாகக் காட்டப்படுவதால், படத்தின் இந்த முக்கியமான (அமீரின் redemption) விஷயம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. அமீரின் சோகம் படத்தின் subplot போலத்தான் படம்முழுக்கவே காட்டப்படுகிறது.

      நான் சொல்லவரும் விஷயத்தின் முக்கியத்துவம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். என்னவென்றால், படத்தின் திரைக்கதையே அந்த கார்விபத்தை சுற்றித்தான் பின்னப்பட்டிருக்கிறது. ஒரு ஆடியன்ஸாக எனக்குக் கிடைத்த செய்தி அதுதான். காரணம் அதனைச் சுற்றியுள்ள காட்சிகள்தான் என் மீது சுமத்தப்படுகின்றன. இது அந்தப் படத்தின் திரைக்கதையின் தோல்வி. மாறாக, அமீரைப் பற்றிய காட்சிகளோடு அந்தத் திரைக்கதை எழுதப்பட்டிருந்தால் (அதாவது அந்தக் காட்சிகள் படத்தில் பிரதான plot ஆக இருந்திருந்தால்) நான் சந்தோஷப்பட்டிருப்பேன். அப்போது உங்கள் வாதத்தை ஆதரிக்கவும் செய்திருப்பேன்.

      எனவேதான் கரீனா ஒரு பேய் என நம்பவைக்கவே அமீரின் redemption பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்கிறேன் (அதாவது, ஒருவேளை படத்தில் நீங்கள் சொல்லியதுபோல் திரைக்கதையின் நோக்கம் இருந்திருந்தால்கூட, அது நான் சொல்லியதுபோல்தான் ஆடியன்சான எனக்கு convey ஆகிறது).

      Reply
      • viruchigam

        நீங்கள் சொல்வது சரி -நான் சொல்லவந்தது இப்பதான் எனக்கே சரியா புரியுது-அதாவது இந்தக்கோணத்தில் படத்தைப்பார்த்தால் படம் நன்றா இருக்கும் என்று சொல்லவந்திருக்கேன் that is அவங்க அப்படி “convey” பண்ணல்ல ஆனா நாம அப்படி எடுத்துக்கிட்டா நல்லாஇருக்கும் -என்னவோ நான் சொல்ற கோணம் படத்தில இருக்கு ஆனா இல்லை,anyway பதிலுக்கு நன்றி and புதுவருட நல்வாழ்த்துக்கள் .

        Reply
        • Rajesh Da Scorp

          யெஸ். கரெக்டா புடிச்சிட்டீங்க. இருந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும். ஆனா அவங்க மிஸ் பண்ணிட்டாங்க. வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.

          Reply
  5. viruchigam

    fbல் என் நண்பன் எழுதின ஒரு கவிதை இது, கேவலமா இருக்கின்னா அவன் கேக்க மாட்டேங்கிறான்,ellipseன்ன இரண்டு மையம்,அது இதுன்றான்-நீங்களே சொல்லுங்க பாஸ் இதுக்கு original பாட்டே betterதானே

    alternate lyrics for ” இரட்டை கதிரே ” song in mattrraan.

    மையம் ரெண்டு
    இல்லை இங்கு ஏது
    மழை தரும்
    பருவ மாற்றம்

    நெஞ்சம் ரெண்டு
    கொண்டவன்தான் யாரும்
    நெஞ்சம் ஒன்றில்
    வாழும் இருவர்

    உயிர் ரெண்டு
    உடல் ஒன்று
    கனவுகள் எண்ணில் அன்று

    ஒரு வானில்
    இரு மேகம்
    சேரும் நொடியாகும்
    சில நேரம்
    கணலோடு
    சில மின்னல்கள் மண்ணில் குதிக்கும்

    ஒரு மெழுகாக அட அவன் நெஞ்சம்
    அதில் தீ போலே அட இவன் கொஞ்சம்
    சுடும் வான் மழை இவர்

    அவன் நெஞ்சோரம் என்றும் ஒரு காயம்
    இவன் கண்ணோரம் இன்பம் அலைபாயும்
    படும் மரப் பூ இவர்

    இதழ்கள் ஒன்றாக
    பூ பூத்தாலும்
    இவர் நினைவில்
    வேறு வேறு வாசம் வீசும் இதழ்கள்

    தனைச் சுற்றும் சூரியனாய்
    இருள் தேடும் சூரியனாய்
    கலக்கா நெருப்புகள்

    இமை மூடி அட அவன் வாழ்க்கை
    ஒரு நிழல் தேடி அட இவன் வேட்க்கை
    தொடரும் தவிப்புகள்

    இவன் அவனோடு
    அவன் இவனோடு
    ஏன் ஏனோ
    இந்த பிணைப்இன் பின்னே உள்ள அர்த்தம் ஏதோ?

    Reply
    • Rajesh Da Scorp

      நான் இன்னும் ஒரிஜினல் பாட்டையே கேக்கலையே 🙂

      Reply
      • Viruchigam

        தமிழ்படப் பக்கம் தலையவைச்சுக்கூடப் படுக்க மாட்டீங்க போல

        Reply
        • Rajesh Da Scorp

          ஹா ஹா …. நேரமில்ல பாஸ். அதான் காரணம்

          Reply
  6. Karthick Nagendran

    அப்ப சரி ராஜேஸ் நான் படங்கள லிஸ்ட் பண்ற வேலைய ஆரம்பிக்கிறேன், (கூடவே ஒரு விசயத்தயையும் வெச்சிருக்கேன் அத அப்புரம் சொல்லரேன் )… 36 சுச்சுவேசனையும் முடிஞ்ச வரைக்கும் குரைவான படங்களில் உதாரணத்தை கொடுக்க முயற்ச்சிக்கிறேன்,

    Reply
    • Rajesh Da Scorp

      சூப்பர். ஆரம்பிங்க.

      Reply

Join the conversation