4 Months, 3 weeks and 2 days (2007) – Romanian
ஒரு நட்புக்காக எவ்வளவு தூரம் செல்லலாம்?
இதுதான் 4 Months, 3 weeks and 2 days என்ற இப்படத்தின் டேக்லைன். எனக்குத் தெரிந்து, சாருவின் வலைத்தளத்தில் இப்படத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன். ருமேனியாவில், 1987ல், கடுமையான சட்டதிட்டங்கள் நிலவிய ஒரு காலத்தில், இப்படம், இரண்டு நண்பர்களான ஒடீலியா மற்றும் காப்ரியேலாவின் ஒரு நாள் வாழ்க்கையைச் சொல்லும் படம். அவர்கள் இருவரும், ஒரு கல்லூரியின் விடுதியில் ஒன்றாகத் தங்கியிருப்பவர்கள். இருவரும், தங்கள் உடைகளை பேக் செய்துகொண்டிருப்பதில் இருந்து ,படம் துவங்குகிறது.
பக்கத்து அறைக்குச் சென்று, சோப்பும் சிகரெட்டுகளும் வாங்கி வருகிறாள் ஒடீலியா. இருவரும், மௌனமாக உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். தனது பரீட்சைக்குப் படிக்க, புத்தகத்தைத் தன்னுடன், தாங்கள் போகும் இடத்துக்கு எடுத்து வரலாமா என்று கேப்ரியேலா கேட்க, ஒடீலியா தலையாட்டுகிறாள்.
பேக்கிங்கை முடித்துவிட்டு, ஒடீலியா, தனது பாய் ஃப்ரெண்டைப் பார்க்கச் செல்கிறாள். அவனிடம், தான் ஏற்கெனவே கேட்டிருந்த பணத்தை வாங்கிக்கொள்கிறாள். அவன் பெயர் ஏடி. அன்று ஏடியின் அம்மாவுக்குப் பிறந்த நாள். எனவே, அவர்களது வீட்டுக்கு ஒடீலியாவை அழைக்கிறான் ஏடி. ஆனால், ஒடீலியா மறுக்கிறாள். ஏடியின் மீது கோபப்படுகிறாள். ஏடி அவளை சமாதானப்படுத்த முயல்கிறான். முடிவில், ஒடீலியா, அன்று இரவு அவன் வீட்டுக்கு வர ஒத்துக்கொள்கிறாள். அவளை வரும்போது சில பூக்கள் வாங்கிவரச் சொல்லி, அதர்கும் பணம் கொடுக்கிறான் ஏடி.
அங்கிருந்து ஒடீலியா, நேராக ஒரு ஹோட்டலுக்குச் சென்று, முந்தைய நாள் கேப்ரியேலா தொலைபேசியின் மூலமாக புக் செய்த அறையைக் கேட்கிறாள். ஆனால், ஹோட்டல் சிப்பந்திகள், தொலைபேசியில் புக் செய்தது செல்லாது என்று கூறி, அவளை அனுப்பி விடுகிறார்கள்.
அங்கிருந்து வேறு ஒரு சிறிய ஹோட்டலுக்குச் செல்லும் ஒடீலியா, அங்கு ஒரு அறையை புக் செய்கிறாள். கேப்ரியேலாவுக்கு ஃபோன் செய்து அவளை இந்த ரூமில் இருக்கச் சொல்கிறாள். அங்கிருந்து, பெபே என்ற ஆளைச் சந்திக்கச் செல்கிறாள். எல்லாமே ஒரு மர்ம நாடகம் போல் நடக்கிறது. பெபே இவளைப் பார்த்ததும் கேப்ரியேலா எங்கே என்று கேட்கிறான். அவளுக்கு உடம்பு சரியில்லை என்று கூறும் ஒடீலியா, தான் புக் செய்த ஹோட்டலில்தான் அவள் இருக்கிறாள் என்றும் சொல்கிறாள். எரிச்சல் அடையும் பெபே, முந்தைய ஹோட்டலில் தான் அறையை எடுத்திருக்க வேண்டும் என்றும், அவனைச் சந்திக்க கேப்ரியேலா தான் வந்திருக்க வேண்டும் என்றும் சொல்லி, எரிந்து விழுகிறான். திட்டங்கள் மாறியது அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
இருவருமாக ஹோட்டலுக்குச் செல்கிறார்கள். ரிசப்ஷனில் பெபெவின் ஐ.டி கார்டைக் கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். இதனால் பெபே மேலும் கடுப்படைகிறான். மேலே அவர்களது அறையில் கேப்ரியேலாவையும் ஒடீலியாவையும் சந்திக்கும் அவன், தனது வாழ்வையே பணயம் வைத்து இங்கு வந்திருப்பதாகவும், அவன் பிடிபட்டால் சாவு நிச்சயம் என்றும் கத்துகிறான்.
கேப்ரியேலாவிடம், இது எத்தனையாவது மாதம் என்று அவன் வினவுகிறான். அவள், இது நான்காவது மாதம் என்று சொல்ல, எரிச்சலின் உச்சத்துக்குச் செல்கிறான் பெபே. ஏனெனில், கேப்ரியேலா அவனிடம் தொலைபேசியில் பேசும்போது, இது இரண்டாவது மாதம் என்று சொல்லியிருக்கிறாள். எனவே, அவன் அங்கிருந்து செல்ல முயல்கிறான். ஆனால், அவனைத் தடுக்கும் ஒடீலியா, அவனுக்கு மூவாயிரம் லெய் (ருமானியன் பணம்) தருவதாகச் சொல்கிறாள். ஆனால் அவனோ, தான் பணத்துக்காக இங்கு வரவில்லை என்றும், கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்றால், அவனுடன் இரு பெண்களும் படுக்க வேண்டும் என்றும் கூறிவிடுகிறான்.
வேறு வழியே இல்லாமல், ஒடீலியாவும் ஒத்துக்கொள்கிறாள். இருவருடனும் உறவு கொள்ளும் பெபே, முடிவில், கேப்ரியேலாவின் அல்குலில் (நன்றி: சாரு) ஒரு மருந்தைச் செலுத்தி, அவளை அசையாமல் படுக்கச் சொல்கிறான். கொஞ்ச நேரத்தில், கரு வெளியே வந்து விழும் என்று கூறும் அவன், அப்படி அது விழுந்தவுடன் அதை எங்கேயாவது போட்டுவிட்டு வரும்படி ஒடீலியாவிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றுவிடுகிறான்.
சற்று நேரம், அந்த அறை நிசப்தத்தில் தோய்ந்திருக்கிறது. திடீரென்று கேப்ரியேலா, மெலிதான குரலில், பெபெயை அழைத்தது தவறு என்றும், தனது தோழி சொன்ன பெண் மருத்துவரிடம் அவர்கள் சென்றிருக்கலாம் என்றும் சொல்கிறாள். ஒடீலியா சொன்னதால் தான் பெபெவிடம் இப்பொழுது வந்திருப்பதாகவும் சொல்கிறாள். எரிச்சலடையும் ஒடீலியா, தான் அப்படிச் சொல்லவில்லை என்றும், இரண்டு வழிகளில், செலவு கம்மியாக உள்ள வழியைத் தான் அவள் தேர்ந்தெடுக்கச் சொன்னதாகவும் சீறுகிறாள்.
சிறிது நேரத்தில், ஒடீலியா தனது பாய் ஃப்ரெண்டின் வீட்டுக்குச் செல்லக் கிளம்புகிறாள். ஒரு டிராமைப் பிடித்து, அங்கு செல்கிறாள். சிறிது தாமதம் ஆகி விடுகிறது. ஏற்கெனெவே அங்கு பார்ட்டி தொடங்கிவிடுகிறது. உள்ளுக்குள் சுக்குநூறாகக் கிழிந்துபோயிருந்தாலும், தனது காதலனுக்காக அந்த விருந்தில் அவள் கலந்து கொள்கிறாள். அங்கு, சில வயதான மனிதர்கள், பெண்களின் பொறுப்பைப் பற்றி ஒடீலியாவுக்கு எரிச்சல் வருமளவு உணவு மேஜையில் நீண்ட உரை நிகழ்த்துகிறார்கள்.ஒடீலியா ஒரு சிகரெட்டைக் கேட்க, ஒரு பெண், பெண்ணைப் போல் தான் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதுதான் அந்தக் குடும்பத்துக்கே பெருமை சேர்க்கும் என்றும் அதே கிழம் அறிவுறை சொல்கிறது. அவர்கள் யாவரும், உருளைக்கிழங்குகளைப் பற்றியும் இன்னபிற மொண்ணையான விஷயங்களைப் பற்றியும் பேசிச் சிரித்துக்கொள்ளத் துவங்குகிறார்கள். ஒரு சமயத்தில், ஒடீலியாவுக்கு அவர்கள் பேசும் எந்த விஷயமும் காதில் விழுவதே இல்லை. அங்கு ஒரு கனத்த மௌனத்தை உணர்கிறாள்.
விருந்து முடிந்தவுடன், அவள் தாமதமாக வந்த காரணத்தை ஏடி கேட்கிறான். அவனிடம் நடந்ததையெல்லாம் ஒடீலியா சொல்கிறாள். உடனே ஏடி, தான் கருக்கலைப்புக்கு எதிரானவன் என்றும், அது ஆபத்தானது என்பதுதான் அவன் அப்படி நினைப்பதற்கு ஒரே காரணம் என்றும் சொல்கிறான். எரிச்சலாகும் ஒடீலியா, அவன் சென்ற வாரம் அவளுக்குள் பீய்ச்சிய விந்து, குழந்தையாக மாறினால் அவன் என்ன செய்வான் என்று அவனைக் கேட்கிறான். அவனோ, அப்பொழுது அவளைக் கல்யாணம் செய்து கொள்வான் என்று சொல்கிறான். பயங்கரக் கடுப்பாகும் ஒடீலியா, அங்கிருந்து அவனைத் திட்டிவிட்டு வெளியேறிவிடுகிறாள்.
ஹோட்டலில், கேப்ரியேலா சுருண்டு படுத்துக்கொண்டிருக்கிறாள். குளியலறையில், கரு கிடப்பதாக முனகுகிறாள். குளியலறை ஒரே ரத்தமயமாக இருக்கிறது. ரத்தத்தின் நடுவில், அந்த நான்கு மாதக் கரு கிடக்கிறது. குளியலறையைச் சுத்தப்படுத்தும் ஒடீலியா, கருவை ஒரு டவலில் சுற்றி எடுத்துக்கொண்டு, அதனை வெளியே எறியக் கிளம்புகிறாள்.
அவள் கருவை வெளியே எறிய முடிந்ததா? கடைசியில் கேப்ரியேலா என்ன ஆனாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நமது முகத்தில் யாரோ ஒருவர், ஆணி வைத்த செருப்பால் ஓங்கி அறைந்தால் எப்படி இருக்கும்? இப்படத்தைப் பார்த்து நான் திகைத்துப் போய் நின்றது போலவே இருக்கும்.
நிகழ்கால இளைஞர்களைப் பற்றி ஒரு அப்பட்டமான பதிவாக இப்படம் உள்ளது. இளைஞர்களுக்கும், பழம்பெருமை பேசியே கொல்லும் முதியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை, இப்படம் அருமையாக விண்டு வைக்கிறது. ஏடியின் வீட்டில் நடக்கும் விருந்து இதற்கு ஒரு மிக நல்ல உதாரணம்.
ஒடீலியாவுக்கும் கேப்ரியேலாவுக்கும் உள்ள உறவு, இப்படத்தின் முக்கிய அம்சம். கேப்ரியேலா செய்த எதுவுமே ஒடீலியாவுக்குப் பிடிக்கவில்லையானாலும், வெறு வழியின்றி அவளுடன் இருக்கிறாள். அவள் மீது கொண்ட நட்பால், பெபே போன்ற ஒரு தடியனுடன் உறவு கொள்கிறாள். படத்தின் இறுதிவரை, ஒரு மிகத் தைரியசாலியான பெண்ணாக இருந்து, எல்லாவற்றையும் செய்து முடிக்கிறாள்.
இப்படத்தை நான் கோவையில் வாங்கும்போது, அந்தக் கடையின் உரிமையாளர் – எனது நல்ல நண்பர் (இவரைப் பற்றியும், இவரது டி வி டி கடையைப் பற்றியுமே ஒரு தனிப்பதிவு எழுத வேண்டும். இங்கு கிடைக்காத படமே இல்லை. எஸ்கிமோக்கள் நடித்த படம் என்று ஒன்று இருந்தாலுமே, இவர் அதைப் பார்த்திருப்பார். பார்த்து, எங்களுக்கு அப்படத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்வார். கமலின் விக்ரம் படத்தின் டி வி டி, நான்கு வருடங்களாக எங்கு தேடியும் கிடைக்காமல், இவரிடம் கிடைத்தது. அப்படித்தான் அறிமுகமானார்) – இப்படத்தை எனக்குத் தருகையில், ஒவ்வொரு கல்லூரியிலும் இப்படம் ஒரு கட்டாயப் பாடமாக்கவேண்டும் எனறு கூறினார். அவ்வலவு அருமையான படம் இது.
2007 வருடத்தின் Palm d’Or விருது கான் திரைப்பட விழாவில் இப்படத்துக்குக் கிடைத்தது.
நீங்களும் பாருங்கள். பார்த்து, இதனைப் பற்றி எழுதுங்கள்.
4 Months, 3 weeks and 2 days படத்தின் டிரைலர் இங்கே.
பாத்து? என்ன செய்யனும்? திருந்தனுமா இல்ல ஜாக்ரதையா இருக்கனுமா? புரியலியே…தலைமுறை வித்தியாசம் தவிர்க்க முடியாதது…
நண்பரே,
சாருவின் ஸீரோ டிகிரியில் ஒரு கருக்கலைப்பு பற்றி அவர் எழுதியிருப்பார். அது எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உங்களிடமிருந்து மீண்டும் சிறந்த ஒரு பதிவு.
நம்ம ஏரியா இல்ல போலயிருக்கே!!! 🙂 🙂
கரு கலைப்பு, ருமேனியான்னு பீதியை கிளப்புறீங்க! 🙂
—
ஆக்ஸிடண்ட்ஸ் பதிவில்.. ஒரு லேடி 200,000 தெண்டமா அழுதாங்களே… அவங்க ருமேனியா. இந்த முக்கியமான, நாட்டுக்குத் தேவையான மேட்டர்.. இந்தப் பதிவுக்கு உபயோகப் படுமா??
அருமையான விவரணை.ஸ்பெல்லிங் மிஸ்டேக்க கொஞ்சம் குறைங்க சாமி…….இல்லன்னா வாட்டாள் நாகராஜ்கிட்ட சொல்லிருவேன்… நாங்களும் ஒன்ஸ் அபான் எ டைம் யஸ்வந்த்புரா தங்கி பீன்யா எஸ்டேட்ல பொட்டி தட்டிருக்கோம்ல..நல்ல படம்.நன்றி.
ஹெவி வெய்ட் படங்களா இருக்கும் போலயே!
///கேப்ரியேலா////
அந்த நாட்டுக்கு தேவையான மேட்டரில் இன்னொன்னு… இந்த அம்மா பேரும் இதேதான்.
நண்பரே.. விமர்சனம் நல்லா இருக்கு…ஆ ஒ பதிவு மூலம்தான் இங்கு வந்தேன்…கோவையில் dvd வாங்கியதாக கூறினீர்கள். சாய்பாபா காலனியில் உள்ள கடையா? அல்லது ராமகிருஷ்ண ஹாஸ்பிடல் எதிரேவா? வேறு எங்கு என்றால் வாங்க வசதியாக இருக்கும்.சொல்ல முடியுமா?
கருந்தேள்,
படம் ரணகளமாக இருக்கும் போலிருக்கே. அல்குல், கரு களைப்பு, த்ரீசம் என்று எங்ககெங்கோ பயணிக்கிறது… ஆனால் சொல்ல வந்த விஷயமான நட்பிற்கான எல்லை எங்கோ தொலைந்து விட்டது போல இருக்கிறது.
இவைகள் எச்சரிக்கையா… இல்லை ருமேனியா நாட்டில் நடக்கும் அவலங்களின் வெட்டவெளிச்சமா…
சரி படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். அருமையான விமரிசனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது.
நீங்கள் எப்போது தமிழ் தளத்திற்கு மாறினீர்கள் என்றே தெரியாமல் இருந்திருக்கிறேன். தமிழிலும் பிழந்து கட்டி கொண்டிருக்கிறீர்கள்… அமர்க்களமாக தொடருங்கள்.
@ அண்ணாமலையான் – பார்த்து நாம ஒன்னும் பண்ண வேணாம் . .அந்த நாட்டுல நடக்குற பிரச்னைகள வெட்டவெளிச்சமாக்கிய படம் இது . . 🙂
@ காதலரே – ஆம். கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் அவளால் அகற்றவே இயலாத ஒரு துன்பியல் நினைவு. சாரு அதனை மனதைத் தொடும் வகையில் எழுதியிருப்பார். உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே . .
@ பாலா – இது ஹார்ட்கோர் சீரியஸ் படம். . . ஆனா, உங்களுக்குப் புடிக்கும். அவங்க நாட்டுப் பிரச்னைகள நச்சுனு சொல்லிருப்பாங்க. .
ஆஹா, அப்ப ருமேனியால இருக்குற மாக்சிமம் பொண்ணுங்க பேரு இதாதான் இருக்குமோ . . 🙂
@ ரகுநாதன் – அதேதான் . . சாய்பாபா காலனி கடையே தான் . .ஹாலிவுட் டி வி டி ஷாப். கரெக்டா புடிச்சீங்க . .:- )
@ ரபீக் ராஜா – உங்கள இங்க பார்த்தது ரொம்ப சந்தோஷம் . . பல நாள் கழிச்சி மீட் பண்ணுறோம் . .உங்க அன்புக்கு ரொம்ப நன்றி . .
உண்மைய சொல்லப்போனா, நட்பின் ஆழம் யுந்தப் படம் பூராவுமே அருமையா காட்டப்பட்டிருக்கு . .அது ஒரு அழகான தின் லைன் . . இந்தப்படம் சொல்ல வர்றது, அந்த நாட்டோட பிரச்னைகளப்பத்தி. நல்ல படம். அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க . . 🙂
@ மயில்ராவணன் – எத்தன தடவ ப்ரூப் பார்த்தாலும், ஒன்னு ரெண்டு எழுத்துங்க தடம் மாறிடுது. . இனிமே கண்ணுல விளக்கெண்ணைய உட்டுகினு பார்த்துடுறேன் . . அட.. நீங்களும் பெங்களூர்ல இருந்தீங்களா . .சூப்பர் . . 🙂
@ பப்பு – ஹெவி வெயிட் படம் தான் . .ஆனா நல்லா இருக்கும். . 🙂
கொஞ்சம் terrorana படம் போல…,
ரொம்ப ரியலிஸ்டிக்கான படம் பாஸு . . 🙂
திரைப்பட விழாவில் பார்த்தேன் ஸார்..! அரசியல் அதிகாரத்தை மீறிய மனிதர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்தப் பிட்டு பிட்டு வைத்திருந்தது..
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸம் வீழ்ந்தபோது மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இவைகள் போன்ற திரைப்படங்கள் தந்த கோபத்தினால்..
வாங்க உண்மைத்தமிழன் . .ஹ்ம்ம் . . அரசியல் அதிகாரம் மனிதனின் வாழ்க்கையில் அளவுக்கு மீறி மூக்கையோ அல்லது வேறு எதையோ நுழைத்தால், அதை மீறுவது தவறில்லை. இல்லையா.. . இம்மாதிரிப் படங்கள், ஆயிரம் புத்தகங்கள் கொடுக்கும் பாதிப்பை, ஒரே படத்தில் கொடுக்கின்றன. அரசியல் அதிகாரமும், தனிமனித சுதந்திரத்தை எந்த விதத்திலும் பாதிக்காது, போலிக் கட்டுப்பாடுகளையும் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கிறோம் பேர்வழி என்னும் போலி சட்டதிட்டங்களையும் கொண்டுவந்து, கலாச்சாரத் தாலிபான்களாக மாறினால், இப்படித்தான் நடக்கும். . உங்கள் கருத்துக்கு நன்றி. .
//எந்த விதத்திலும் பாதிக்காது// இந்த வரியை, எல்லா விதத்திலும் பாதித்து – என்று படித்துக்கொள்ளவும்.
இந்த கதையை படிக்கும்ப்பொழுதே தலயை சுத்துது..
பார்த்தா நல்லா இருக்குமோ..:)
பார்த்தா உடம்பே சுத்தும் . . 🙂 டோட்டலா ஒரு கலக்கு கலக்கும் . . 🙂 அப்புடி !
நண்பா படத்தை பார்த்துவிட்டேன்,நமக்கு எடுக்கிறது பதட்டம், அருமையான நடிப்பு,எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க?
இதெல்லாம் ஒருகாலத்தில் யாராலோ பட்ட வேதனைகள் தானே?நல்ல பகிர்வு,ஓட்டுக்கள் போட்டாச்சி
நண்பா . .நீங்க சொல்றது முற்றிலும் உண்மை . .எல்லாமே ஒரு காலத்துல யாரோ பட்ட வேதன தான் . .அத ரொம்ப அருமையா எடுத்துருக்காங்க . . அந்த காலத்துல ருமேனியா இந்த அளவு சீரியஸா இருந்திருக்கு . .கொடும . . இந்தப்படம் என்ன யோசிக்க வெச்சுது . . உங்க கருத்துக்கு நன்றி நண்பா . .
ஒண்ணு கவனிச்சீங்களா… (ஒரு சில காட்சிகளை தவிர)படம் முழுவதும் பின்னனி இசையே இல்லை..
குறிப்பா அந்த ஹோட்டல இரண்டு பேரு மட்டும் இருக்கிறப்ப…
பகிர்வுக்கு நன்றி!
/உங்களிடமிருந்து மீண்டும் சிறந்த ஒரு பதிவு./
ரிப்பீட்டே…
ஆமாம் . . அது ஒரு நல்ல அம்சம். இரானியப் படங்களிலும் இதே விஷயத்தைக் கவனித்திருக்கிறேன் . . மிக்க நன்றி . .அடிக்கடி வாருங்கள். .
.
பார்த்தா உடம்பே சுத்தும் . . 🙂 டோட்டலா ஒரு கலக்கு கலக்கும் . . 🙂 அப்புடி !///
.
கொஞ்சம் பயமாகத்தான் உள்ளது.ஏனெனில் மிக மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்களை பார்த்தால் பல நாட்களுக்கு எனக்கு அந்த பாதிப்பு இருக்கும்(Ladri de biciclette பார்த்தபோது அப்படி இருந்தது).
படம் பார்த்தால் கண்டிப்பாக இது பற்றி எழுதுகிறேன்.என்ன சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும்.
விக்கி – கண்டிப்பாகப் பாருங்கள் . . பார்த்து விட்டு எழுதவும் செய்யுங்கள் . .மிக நல்ல படம் . .
சாருவின் மூலமே அவ்வப்போது தங்கள் வலைதளத்தை பார்த்ததுண்டு
சமீபத்தில் நான் கண்டு மிகவும் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்த படம் இது. யதார்த்த சினிமாவின் உச்சம். அதன் முக்கிய காரணம் மிக சிறந்த ஒளிப்பதிவு. மேலும் படம் முழுவதும் பின்னணி இசையே இல்லாதது பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். படம் முழுவதையும் இப்படி scene by scene விவரித்திருப்பது சற்றே சலிப்பை தருகிறது.
P.s. sorry, just noticed someone had pointed about that background score