கருந்தேள் டைம்ஸ் 5 – SOPA & PIPA
கருந்தேள் டைம்ஸ் என்ற இந்த வகையான பதிவுகளைக் கடைசியாக எழுதி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. காரணம் மிகவும் சிம்பிள். எனக்கு எழுத வராது. திரைப்படங்களைப் பற்றி எழுதுவதே போதும் என்று நினைத்து வந்தேன். ஆனால் இப்போது இதனை மறுபடி எழுத நினைத்தது, நண்பர் பாலகிருஷ்ணன், SOPA & PIPA பற்றி ஒரு கட்டுரை எழுத முடியுமா என்று கேட்டதால்தான். எழுதத் துவங்குமுன்னர் அவற்றைப் பற்றி முதலில் நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா? ஆகவே அவற்றைப் பற்றி விரிவாக இணையத்தின் உதவியால் படித்தேன். அப்படி நான் படித்தவற்றைப் பற்றி முடிந்த அளவில் எளிமையாக எழுத முயல்கிறேன். இவற்றைப் பற்றிய சில செய்திகளைப் பகிர்வதே நோக்கம். எங்காவது தவறு ஏதாவது இருப்பின், நண்பர்கள் அவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். திருத்தி விடலாம்.
SOPA & PIPA என்றால் என்ன?
SOPA என்பது, Stop Online Piracy Act என்பதன் சுருக்கம். அதுபோலவே, PIPA என்பது, Protect IP Act என்று பொருள்படும்.
இவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர், இன்னொரு விஷயத்தைப் பற்றிக் கொஞ்சம் விவாதிப்போம். அதிலேயே இந்த இரண்டு விஷயங்களைப் பற்றிய தகவல்களும் எளிதில் புரிந்துவிடும்.
Piracy.
மீடியா பைரஸி என்பது தற்போது வெகு தீவிரமாகப் பரவிவிட்ட ஒரு விஷயம். ஒரு படம் வெளியானால், அன்றே அதன் டாரண்ட் ஃபைல் அப்லோட் செய்யப்பட்டுவிடுகிறது. அதேபோல, பாடல்களும். இப்படிப்பட்ட மீடியா பைரஸியை அங்கீகரித்து ஊக்குவிக்கும் பல இணையதளங்கள் உலகெங்கும் இருக்கின்றன. எல்லோருக்கும் Isohunt பற்றித் தெரிந்திருக்கும். அதுபோலவே piratebay, kickasstorrents போன்ற தளங்கள். இவற்றில், முறையாகக் காப்புரிமை பெறப்படாத திரைப்படங்கள், டாக்குமென்ட்ரிக்கள், பாடல்கள், வீடியோக்கள், மென்பொருட்கள் ஆகியவை இறைந்து கிடக்கின்றன. யார் வேண்டுமானாலும் அவற்றைத் தரவிறக்கிக்கொள்ளலாம்.
இதனால் என்ன பிரச்னை என்பதும் அத்தனைபேருக்கும் தெரிந்த ஒன்றுதான். முறையாகக் காப்புரிமை பெறப்பட்ட ஒரு பொருளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய், இப்படிக் காப்புரிமை பெறாமல் அதே பொருளைத் திருட்டுத்தனமாக வெளியே விடுவதன் மூலம் குறைகிறது. இதுதான் மூலகாரணம். மட்டுமல்லாமல், முறையாகக் காப்புரிமை பெறப்படாமல் உருவாக்கப்படும் இதுபோன்ற விஷயங்கள், அப்பட்டமான திருட்டேயன்றி வேறில்லை என்ற காரணமும் சேர்ந்துகொள்கிறது (காப்புரிமை பெறாமல் காப்பியடிப்பதன் தீமைகள் பற்றி நண்பர்களுக்கு நன்கு தெரியும் அல்லவா? தமிழ்த்திரையுலகில் ஒவ்வொரு மாதமும் வரும் ஏதாவது ஒரு படத்தின் மூலம் அதனைக் கவனித்துக்கொண்டே இருக்கிறோமே? கமல் அடித்த காப்பிகளைப் பற்றி நான் எழுதுகையில், ‘இட்லிகளை ஒரே போன்று தயாரிப்பதில்லையா? தோசை மாவு ஒன்றுதானே? ஹா ஹூ’ என்று ‘அவசர’ அறச்சீற்றம் அடைந்து பொங்கி, காமெடியனாக மாறிய சில பிரபல பதிவர்களுக்கு இப்போதாவது இது புரிந்திருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்).
இப்படிக் காப்புரிமை பெறாமல் திருட்டுத்தனம் செய்த வலைத்தளங்களை முடக்க அமெரிக்க அரசும் நிறுவனங்களும் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ISPக்களிடம் சென்று, இப்படி இந்தத் திருட்டு வலைத்தளங்களைத் தொடர்பு கொண்டு தரவிறக்குபவர்களை அடையாளம் கண்டு தண்டிக்கும் வேலையை அமெரிக்க அரசு கொஞ்ச காலம் முயன்றது. ஆனால் அந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்ததால், அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சம்மந்தப்பட்ட வலைத்தளங்களை மூடுவதும் பலனளிக்கவில்லை. காரணம், இவற்றில் பல தளங்கள், வெளிநாடுகளில் இயங்கிக்கொண்டிருந்தன.
மண்டையைப் பிய்த்துக் கொண்ட அமெரிக்க அரசு, சில செனட்டர்களின் உதவியால் கொண்டுவந்திருக்கும் மசோதாக்களே இந்த இரண்டும். இவை இன்னமும் சட்டமாக்கப் படவில்லை. இவற்றின் மீதான விவாதங்கள் இனிதான் நிகழ இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவற்றைப் பற்றி விரிவாக இனி பார்ப்போம்.
SOPA & PIPA எப்படி செயல்பட இருக்கின்றன?
இந்த இரண்டு மசோதாக்களும், இரண்டு வகையான வழிமுறைகளை, சட்டவிரோதமான மீடியா காப்புரிமை மீறலுக்கு எதிராகப் பரிந்துரைக்கின்றன. முதல் வழியில், அமெரிக்க சட்டத்துறை, சம்மந்தப்பட்ட ISPக்களுக்கு, சட்டவிரோதமான இப்படிப்பட்ட காப்புரிமை மீறக்கூடிய வலைத்தளங்களை அடியோடு block செய்யுமாறு நீதிமன்ற ஆணை பிறப்பிக்கமுடியும். அதாவது, இப்படிக் கற்பனை செய்துகொள்வோம். இந்தியாவில் ஆர்டெல் நிறுவனத்துக்கு இந்திய அரசாங்கம் பிறப்பிக்கும் ஆணை ஒன்றின்படி, குறிப்பிட்ட சில வலைத்தளங்களைத் தனது சந்தாதாரர்கள் access செய்யமுடியாமல் அந்நிறுவனம் தடை செய்ய வேண்டும். இது ஒரு வழி. இந்த வழியில் ஒரு பிரச்னை இருக்கிறது. வலைத்தளங்களின் பெயரை மட்டுமே block செய்யவேண்டும் என்பது இந்த மசோதாக்களில் உள்ள ஒரு விஷயம். ஆகவே, அந்த வலைத்தளங்களின் IP அட்ரஸ்கள் இன்னமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கும். ஐபி அட்ரஸையும் block செய்ய வேண்டும் என்று இந்த மசோதாக்கள் ஆரம்ப காலத்தில் குரல் கொடுத்தாலும், அவற்றால் எழக்கூடிய நடைமுறைச் சிக்கல்களை மனதில் கொண்டு, அந்த கோஷத்தைக் கைவிட்டுவிட்டன.
இரண்டாம் வழிமுறையின்படி, காப்புரிமையை முறையாகப் பெற்றிருக்கும் நிறுவனங்களோ அல்லது மனிதர்களோ, சட்டவிரோதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் வலைத்தளம் ஒன்றுக்குக் கிடைக்கக்கூடிய அத்தனை உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்று சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கமுடியும். அதாவது, குறிப்பிட்ட வலைத்தளம் ஒன்றுக்கு வெளியேயிருந்து கிடைக்கும் பண உதவிகள், விளம்பரங்கள் ஆகியவற்றை நிர்ப்பந்தப்படுத்தி நிறுத்த முடியும். மட்டுமல்லாமல் கூகிள் போன்ற search engineகளையும் அந்தத் தளங்களைத் தனது தேடுதலில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று நிர்ப்பந்தப்படுத்தவும் முடியும். அதாவது, அந்த வலைத்தளத்தை ஊரை விட்டே ஒதுக்கிவைக்கக்கூடிய முயற்சி இது.
இந்த இரண்டு மசோதாக்களில், SOPAவே மிகவும் தீவிரமான மசோதா என்று சொல்லப்படுகிறது. SOPAவினால் எந்த வெளிநாட்டு வலைத்தளத்தையும் இப்படிக் கேள்வி கேட்க முடியும். உதாரணத்துக்குத் தமிழில் ஒரு வலைத்தளத்தில் யாராவது ஏதாவது பின்னூட்டத்தில் டாரண்ட் தளம் ஒன்றின் லிங்க் கொடுத்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இது அமெரிக்காவில் இருக்கும் ஏதாவது ஒரு சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்குத் தெரிய வந்தால், அமெரிக்க அரசின் நீதிமன்ற உத்தரவு, இந்தத் தமிழ் வலைத்தளத்தின் மீது பாயும். அப்படிப்பட்டதொரு தீவிரமான, கடுமையான மசோதா இந்த SOPA. இதனுடன் ஒப்பிடும்போது PIPA என்பது தீவிரத்தன்மை குறைந்ததொரு மசோதா என்றுதான் சொல்லவேண்டும். PIPA கேள்விகேட்பது, காப்புரிமை மீறலுக்கேன்றே செயல்படும் தளங்களை மட்டுமே.
SOPA & PIPAவின் தீமைகள்
இப்போது இதனைப் படித்துவந்த நண்பர்களுக்கு எளிதாக இவற்றின் தீமைகள் புரிந்திருக்கும். ஏதாவது ஒரு நிறுவனம் நினைத்தால், போட்டி நிறுவனத்தின் செயல்பாடுகளை எளிதில் முடக்கிவிடமுடியும். போட்டி நிறுவனம் காப்புரிமை விதிகளை மீறுகிறது என்று ஏதாவது ஒரு லின்க்கையோ அல்லது வேறு ஏதாவதையோ சுட்டிக்காட்டி, அதன் வலைத்தளத்துக்கு வந்துகொண்டிருக்கும் விளம்பரங்களையும் பணத்தையும் எளிதில் முடக்கி, அந்தத் தளத்தைத் தனிமைப்படுத்திவிட முடியும். ஒருவேளை அப்படிச் சொல்லப்படும் குற்றச்சாட்டு பொய் என்றால், சம்மந்தப்பட்ட நிறுவனம் இதனை நிரூபிப்பதற்குள் உயிரே போய்விடும்.
அதேபோல், தனது தளங்களை மக்களே உபயோகிப்பதுபோல் இதுவரை இருந்துவந்த Wikipedia , Youtube போன்ற தளங்கள் இதனால் கொடும் பாதிப்புக்கு உள்ளாகவும் நேரிடும். ஒவ்வொரு சந்தாதாரரும் எதனை அப்லோட் செய்கிறார்கள் என்பதனைக் கண்கொத்திப் பாம்பு போல கவனிக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இவை தள்ளப்பட்டுவிடும்.
SOPA & PIPA வுக்கு ஆதரவும் எதிர்ப்பும்
இப்போது இந்த இரண்டு மசோதாக்களை எவர் எவர் ஆதரிப்பார்கள் என்பதும், எதிர்ப்பாளர்கள் யாராக இருக்கமுடியும் என்பதும் எளிதாகப் புரிந்துவிடுகிறது அல்லவா? திரைப்பட தயாரிப்பாளர்கள், ஆடியோ நிறுவன முதலாளிகள், டிவி நிறுவனங்கள், புத்தகப் பதிப்பாளர்கள், காப்புரிமை சம்மந்தமாக அடிக்கடி வழக்கு போடக்கூடிய நிலையில் இருக்கும் சில நிறுவனங்கள் (மேக்கப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்) ஆகியவை இந்த மசோதாக்களை பலமாக ஆதரிக்கின்றன.
பிரபல வலைத்தளங்களான EBay, Craigslist, Google, Mozilla, Twitter போன்ற தளங்கள் இந்த மசோதாக்களை முற்றிலும் எதிர்ப்பதற்கான அறிக்கையில் கையெழுத்தைப் பதித்திருக்கின்றன. இவற்றில் விக்கிபீடியா வெளிப்படையாகவே இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முழுதும் இயங்காமல் இருப்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.
SOPA & PIPA வின் தற்போதைய நிலைமை
இவற்றுக்கான வலுவான எதிர்ப்பில் சுதாரித்துக்கொண்ட இந்த மசோதாக்களில் இருந்து தற்போது வலைத்தளங்களின் பெயர்களை block செய்யும் சங்கதி தூக்கப்பட்டுவிட்டது என்பது சற்றே ஆறுதல் தரக்கூடிய விஷயம். SOPA, மேலும் அதில் திருத்தம் செய்யும் பொருட்டு, தற்போது நிறுத்தியே வைக்கப்பட்டு விட்டது. PIPA வைப் பற்றிய ஒட்டு மட்டும் வரும் 24 ம் தேதி அமெரிக்க செனட்டில் துவங்க இருக்கிறது.
இதுவே இவற்றைப் பற்றிய தற்போதைய செய்தி. இனிமேலும் இவற்றைப் பற்றிய புதுத் தகவல்களைத் திரட்டித் தர முயல்கிறேன்.
குறிப்பு – இந்தக் கட்டுரை, http://goo.gl/BhdWW இந்தத் தளத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு என்றே சொல்லும் அளவுக்கு, அதில்தான் அத்தனை தகவல்களையும் எடுத்தேன்.
இதுவரை SOPA, PIPA வசனங்களை அடிக்கடி கேள்விப்பட்டிருந்தாலும் இன்றுதான் அதற்கான முழுவிளக்கத்தை அறிந்தேன். பதிவிற்கு மிகவும் நன்றி பாஸ்.
ஆனால் இந்த மசோதாக்கள் அறிமுகமானால், படங்கள் வெளியிடப்படாத, ஒரிஜினல் பட டீவிடிக்கள் விற்கப்படாத ஊர்களில் உள்ளவர்கள் (என்னையும் சேர்த்து), எவ்வாறு என்டர்டெயின் ஆவது? மேலும் இங்குள்ள காசுப்படி பார்த்தால் டீவிடிக்களின் விலை மிகவும் அதிகமே. ரொம்ப கஷ்டம் தான்.
இணையத்தில் இன்று மிகவும் சூடான டாபிக்கைத் தான் கையில் எடுத்திருக்கீங்க. நான் இன்று விசிட் பண்ணிய அனேகமான தளங்கள் STOP SOPA பேனர்களை போட்டுள்ளன.
SOPA, PIPA பற்றி சிறப்பாக அறிந்துக்கொள்ள உதவிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
எல்லாம் சரி. ஒரு பாடாவதிப் படத்தை கொள்ளை ரேட்டுக்கு விற்கும்போது அந்தப் படத்திற்கான ரீபண்ட் ரசிகனுக்குக் குடுக்கப்பட எதாவது மசோதா வருமா? வராது.
75 பைசா கலர் தண்ணியைக் கோலா என்று 25 ரூபாய்க்கு விற்பவர்கள் நியாயம்தானே வேதவாக்கு???
நாணயத்துக்கு ரெண்டு பக்கம் கீது நைனா. :))
ஆண் வெஜ் பெண் வெஜ் மாதிரி இருக்கும்னு வந்து ஏமாந்து போய்டேன் தல
அருமை………….ஆச்சரியம்…………இதுவந்தா நானெல்லாம் எப்புடி படம் பாக்குறது ? பாட்டு கேக்குறது ?? கலி முத்திருச்சு………….
// கருந்தேள் டைம்ஸ் என்ற இந்த வகையான பதிவுகளைக் கடைசியாக எழுதி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. காரணம் மிகவும் சிம்பிள். எனக்கு எழுத வராது.//
ஒலக நடிப்புடா சாமீ…………..
@ டெனிம்…..
// ஆண் வெஜ் பெண் வெஜ் மாதிரி இருக்கும்னு வந்து ஏமாந்து போய்டேன் தல //
ஐ…….padhivar.blogspot.comல எழுதுறீங்கள்ள…அந்த தாக்கமா இருக்கும்
///ஆண் வெஜ் பெண் வெஜ் மாதிரி இருக்கும்னு வந்து ஏமாந்து போய்டேன் தல////
வை பிளட் ???? சேம் பிளட் 🙂 🙂 🙂
ஹாலிவுட்டின் அதிகமாக வசூலித்த டாப் பத்து படங்களில் எட்டு 2005 கு பிறகு வெளிவந்தவை. அதாவது இன்டர்நெட் பைரசி அதிகமாக இருக்கும் காலகட்டத்தில்…அதுவும் பாதிக்கு மேல் ஓவர்சீஸ் (அமெரிக்காவிற்கு வெளியே) மார்க்கெட்டில் கல்லா கட்டியவை. அதிகமாக பைரசி செய்யப்பட்ட படங்களே அதிகமாக வசூலையும் வாருகின்றன என்பது கூட ஹாலிவுட்காரர்களுக்கு புரியவில்லை.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!:-)
ஆயிரம் சட்டங்கள் வந்தாலும் தப்பு செய்ய ஏதாவது வழி கண்டுபிடிச்சிடுவாங்க!
உங்க வலைப்பக்கம் அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு சிலரோட வலைதளங்கள் திறக்கும்போது, அங்க ஒண்ணும் இங்க ஒண்ணுமா ஏதாவது விட்ஜேட் ஓடிகிட்டே இருக்கும்.
பதிவுகள படிக்கிறதுக்குள்ள கடுப்பாய்டும்.
இதுக்கே உங்கள பாராட்டணும் சார்.
//கருந்தேள் டைம்ஸ் என்ற இந்த வகையான பதிவுகளைக் கடைசியாக எழுதி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. காரணம் மிகவும் சிம்பிள். எனக்கு எழுத வராது//…enga ithu niayama….
90% PADAM INGA RELEASE AAGATHU…NANGA EPDI PADAM PAKARATHU….
பின்னூட்டமிட்ட அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. SOPA & PIPA தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு.
@ ஷங்கர் – //எல்லாம் சரி. ஒரு பாடாவதிப் படத்தை கொள்ளை ரேட்டுக்கு விற்கும்போது அந்தப் படத்திற்கான ரீபண்ட் ரசிகனுக்குக் குடுக்கப்பட எதாவது மசோதா வருமா? வராது.
75 பைசா கலர் தண்ணியைக் கோலா என்று 25 ரூபாய்க்கு விற்பவர்கள் நியாயம்தானே வேதவாக்கு???
நாணயத்துக்கு ரெண்டு பக்கம் கீது நைனா. :))//
ஹாஹ்ஹா 🙂 . . இதை முழுமையாக வழிமொழிகிறேன்.