திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 8

by Karundhel Rajesh September 30, 2011   series

சென்ற அத்தியாயத்தில், ஒரு கதாபாத்திரத்திலிருந்து திரைக்கதையை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். அதில், அஞ்சலி என்ற பிரதான கதாபாத்திரத்தை உருவாக்கினோம். அக்கதாபாத்திரம், சென்னையைச் சேர்ந்த மயில்சாமி என்ற பணக்கார மருத்துவருக்கும், லீலா என்ற பெண்ணுக்கும் ஒரே மகள். அரசியல் படிப்பை முடித்துவிட்டு, தில்லிக்குச் சென்று வேலை தேட வேண்டும் என்ற எண்ணம் உடைய சுதந்திரமான, புத்திசாலிப்பெண் என்பது வரை பார்த்தோம்.

இப்போது, மேலே தொடருமுன், ஒரு விஷயத்தைப் பற்றிப் பார்த்துவிட்டுத் தொடரலாம் என்று தோன்றியது. அதாவது, திரைக்கதையிலிருந்துதான் கதாபாத்திரங்கள் உருவாக்கப்படவேண்டும்; மாறாக, ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிவிட்டு, அதனை ஆராய்ந்து, அக்கதாபாத்திரத்தைச் சுற்றிலும் நிகழும் இயற்கையான சம்பவங்களை வைத்து ஒரு திரைக்கதையை உருவாக்குதல் அந்த அளவு சரியில்லாத விஷயம் என்ற நம்பிக்கை பொதுவில் இருக்கிறது. நானுமே இவ்வாறுதான் சில வருடங்கள் வரை நம்பி வந்தேன். ஆனால், சிட் ஃபீல்டின் புத்தகத்தைப் படித்தபின், இரண்டு வகையாகவும் திரைக்கதை எழுதமுடியும் என்று தெரிந்துகொண்டேன். அதாவது, ஒரு கருவை உருவாக்குவது; அதிலிருந்து கதாபாத்திரங்களைப் படைப்பது; அதன்பின் திரைக்கதையை விரிவாக்குவது என்று செய்தாலும் சரி, அல்லது முதலில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிவிட்டு, அதனைச் சுற்றி நிகழும் இயற்கையான சம்பவங்களை வைத்து ஒரு திரைக்கதை எழுதுவது என்றாலும் சரி, இரண்டுமே தவறில்லை.

சிட் ஃபீல்ட், இந்த இரண்டுமே சரிதான் என்கிறார். ஆனால், இந்த இடத்தில், ஒரு சந்தேகம் எழுவது இயல்பு. கதாபாத்திரத்தை உருவாக்கிவிட்டால், அதன்பின் நாம் எழுதப்போகும் திரைக்கதை அந்த அளவு தத்ரூபமாக இருக்காதே?

இந்தியாவில், மசாலா ஹீரோக்களுக்காகவே எழுதப்படும் திரைக்கதைகளைப் பார்த்துவரும் நமக்கு, இந்தச் சந்தேகம் எழுவது இயல்புதான். ஆனால், இந்தியாவுக்கு வெளியே எடுக்கப்படும் தரமான படங்களைப் பார்த்தால், சந்தேகம் தீர்ந்துபோகிறது. இதற்கு ஃசிட் பீல்ட் பல உதாரணங்களைத் தருகிறார். The Hours படத்தில் வரும் Virginia Woolf கதாபாத்திரம் ஒரு உதாரணம் (வாழ்க்கையின் முரண்பாடுகளுக்கிடையே, எழுத்தில் நிம்மதி தேடும் ஒரு கதாபாத்திரத்தின் கதை). The pianist படத்தின் கரு, போரில் இருந்து உயிர்பிழைத்த ஒரு வீரனைப் பற்றிப் படித்ததும் உருவானது என்று ரோமன் பொலான்ஸ்கி சொல்லியிருக்கிறார். , Lost in Translation படத்தின் கதையுமே, தனிமையில் தள்ளப்படும் ஒரு மத்தியதர மனிதனைப் பற்றி யோசித்ததும் எழுதியது என்று சோஃபியா கேப்பலா சொல்லியிருக்கிறார்.

ஆகவே, உங்கள் மனதில் ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய எண்ணம் எழுகிறதா? அங்கேயே அமர்ந்து அக்கதாபாத்திரத்தை விரிவுபடுத்துங்கள். நாம் சென்ற கட்டுரையில் செய்ததைப் போல.

இனி, அஞ்சலி தில்லிக்குச் செல்வதிலிருந்து தொடருவோம்.

இதுவரை நாம் பார்த்தது, அஞ்சலி என்ற கதாபாத்திரத்தின் உட்புற கதாபாத்திர விளக்கம் (Interior). இந்தப் படத்தைப் பாருங்கள்.

இந்த உட்புற விளக்கமானது, திரைக்கதையில் வராது. அஞ்சலி என்ற கதாபாத்திரத்துக்குத் திரைக்கதையில் நிகழும் சில சம்பவங்களுக்கு அக்கதாபாத்திரம் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதை வைத்தே, அஞ்சலி தைரியமானவள், புத்திசாலி, ஒரே பெண், அரசியல் படித்தவள் ஆகிய விஷயங்களை விளக்கிவிட முடியும். இங்கே அஞ்சலியின் பிறப்பில் இருந்து தில்லிக்குச் செல்வது வரை நாம் ஆராய்ந்தது, திரைக்கதை எழுத ஆரம்பிக்குமுன் கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு தெளிவான புரிதல் நமக்கு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இதுவரை அஞ்சலி என்ற கதாபாத்திரத்தின் சூழலைக் (context) கவனித்தோம். இனி, திரைக்கதையின் உட்பொருளை (content) கவனிப்போம். இதுதான் திரைக்கதை என்ற விஷயம். இனிமேல்தான் திரைக்கதையை எழுத ஆரம்பிக்கப்போகிறோம்.

மேலே உள்ள படத்தில் exterior என்று இருக்கும் வெளிப்புற விஷயங்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.

அஞ்சலி தில்லி வந்துவிட்டாள். அங்கே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்குகிறாள். அவளது பணக்கார அப்பா, அஞ்சலியின் தாய்க்குத் தெரியாமல் அவளுக்கு மாதாமாதம் பணம் அனுப்பி உதவுகிறார்.

அடுத்து? அவள் ஒரு வேலையில் சேர்கிறாள்.

என்ன விதமான வேலை?

அஞ்சலியைப் பற்றி நமக்குத் தெரியும். பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த, சுதந்திரமான, புரட்சிகரமான, சொந்தக் காலில் நிற்க விரும்பும் பெண் அவள். அப்படியென்றால், அவளுக்கு எந்த விதமான வேலை செய்வது பிடிக்கும்?

எந்த விதமான வெளிப்புற சூழல் அஞ்சலியைச் சுற்றி இருக்கிறது?

தில்லி. அரசியல்வாதிகளின் தலைமையகம். காங்கிரஸும் பா.ஜ. க வும் ஒருவரையொருவர் எதிர்த்து லாபி செய்துகொண்டிருக்கும் இடம். நீரா ராடியா போன்ற முதலைகள் உலவும் நகரம். பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாமல், கற்பழிக்கப்படும் காலம். எங்கு பார்த்தாலும் ஊழல்.

இந்த நிலையில், அரசியல் படித்த அஞ்சலிக்கு எந்த விதமான வேலை பொருத்தமாக இருக்கும்?

பத்திரிக்கை அல்லது தொலைகாட்சி நிருபர்.

அஞ்சலியைப் போன்ற ஒரு பெண்ணுக்கு சந்தோஷம் தரக்கூடிய வேலை வேறு எதுவாக இருக்க முடியும்?

இங்கிருந்துதான் இனி நமது கதைக்கான கருவை நாம் முடிவுசெய்யப்போகிறோம். திரைக்கதையின் குறிக்கோள் என்ன? பிரதான கதாபாத்திரம் வரிசையாகப் பல தடைகளைச் சந்திக்க வேண்டும். அந்தத் தடைகளை ஒவ்வொன்றாக முடியடித்து, தனது குறிக்கோளில் வெற்றிகாண வேண்டும். ஆக, அஞ்சலியின் குறிக்கோள் என்ன என்று முடிவுசெய்வதில்தான் மொத்தத் திரைக்கதையும் இருக்கிறது. அஞ்சலியின் குறிக்கோளை முடிவுசெய்துவிட்டால், திரைக்கதையில் தடைகளை உருவாக்கிவிட முடியும்.

சட்டென்று அந்த அறையில் ஒரு கனத்த பரபரப்பு உருவாகிறது. அந்த அறையின் ஐம்பது பேரும் ஒரே கதாபாத்திரமான அஞ்சலியைப் பற்றியும், அவளுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும், ஒரேவிதமாக யோசிக்க ஆரம்பித்தாயிற்று.

திடீரென்று ஒரு குரல் கேட்கிறது.

‘ஸ்பெக்ட்ரம் !’

பிரமாதம் ! இதோ நாம் தேடிக்கொண்டிருந்த மைய இழை கிடைத்துவிட்டது. ஆம். பத்திரிக்கை நிருபராக இருக்கும் அஞ்சலி, ஸ்பெக்ட்ரம் பற்றிய ஒரு முக்கிய செய்தியைக் கண்டுபிடிக்கிறாள். அந்தச் செய்தி வெளியே கசிந்தால், அவளது உயிருக்கே ஆபத்து. இதுதான் மையக்கரு.

அஞ்சலிக்கு எப்படி அந்தச் செய்தி கிடைக்கிறது? அவளுக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளில், ஒரு பிரதான அரசியல்வாதியிடமிருந்து இந்த ஆதாரம் அவளுக்குக் கிடைக்கிறது. இந்த ஆதாரத்தின்படி, ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்த அனைவருமே தக்க தண்டனைக்கு உள்ளாகும் அளவு பலம்வாய்ந்த ஆதாரம் அது.

இனி என்ன ? அந்த ஆதாரம் அவளிடம் இருப்பதை அறிந்த அரசியல்வாதிகள், அவளைக் கொல்ல முயல, அவற்றிலிருந்து தப்பி, அரசியல்வாதிகளின் முகத்திரையை அஞ்சலி எப்படிக் கிழிக்கிறாள் என்பதே மீதிக்கதை.

இக்கதையில், மேலும் சில தடைகளை, அஞ்சலியின் தந்தை, ஸ்பெக்ட்ரமில் சம்மந்தப்பட்ட ஏதாவது கட்சியைச் சேர்ந்தவராகக் காட்டும் பட்சத்தில் உருவாக்கமுடியும்.

சரி. இப்போது, இந்தக் கதையை, நமது திரைக்கதையின் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அப்படியே, ப்ளாட் பாயிண்ட்கள் எவை என்றும் ஆராயலாம்.

திரைக்கதையின் முதல் முப்பது பக்கங்கள்: அரசியல்வாதியைக் காட்டுகிறோம். அவரது கையில் எப்படி ஆதாரம் வந்து சேர்ந்தது என்று விரிவாகக் காட்டுகிறோம். திகில் நிறைந்த நிமிடங்களாக அவை கழிகின்றன. ஸ்பெக்ட்ரம் சதியில் யாரெல்லாம் உடந்தை, அவர்களின் தலைமை எது ஆகியவற்றைப் பற்றி சில க்ளூக்கள் தருகிறோம். இந்த ஆதாரம் அஞ்சலியின் கையில் வந்து சேருவதுதான் முதல் ப்ளாட் பாயின்ட். அந்த அரசியல்வாதி அதன்பின் கொல்லப்படுவதுபோலவும் காட்டலாம்.

திரைக்கதையின் அடுத்த அறுபது நிமிடங்கள்: இங்கே, அஞ்சலி, தன கையில் இருக்கும் ஆதாரத்தை எப்படி வெளிப்படுத்தப் போராடுகிறாள் என்று காட்டப்போகிறோம். பல தடைகள் அவளுக்கு முன்னே இருக்கின்றன. தன்னையே அவளால் நம்பமுடியாத சூழல். வெளியே அவளைக் கொல்ல அனைவரும் வெறியுடன் திரிகிறார்கள். இந்த நேரத்தில், யாருடனாவது அவள் பேச வேண்டும். யாரவது நம்பிக்கைக்குரிய நபர் வேண்டும். அவளுக்கு ஒரு காதலனை உருவாக்கலாம். காதலனுடன் அவளுக்கு இருக்கும் உறவுமுறை எப்படிப்பட்டது? தெளிவானதா? அல்லது பல பிரச்னைகளுடன் இருக்கிறதா? இதைக் காண்பிக்கும் சில காட்சிகள் வைக்கலாம். அதன்பின், அஞ்சலியின் அலுவலகத்தில் அவளுக்கு நேரும் பிரச்னைகள் – அவளது அலுவலகத்தில் இருக்கும் முக்கிய புள்ளி, வஞ்சகமாகப் பேசி ஆதாரத்தை வாங்க முயல்வது; அஞ்சலிக்கு யாருமே உதவ முன்வராதது; இதுபோன்ற துடிப்பான, வேகமான சம்பவங்களால் நிரப்பப்படுவதே இந்த இரண்டாம் பகுதி. அதன் இறுதியில் வரும் இரண்டாம் ப்ளாட் பாயின்ட் எது? அஞ்சலியின் கையில் இருக்கும் ஆதாரம், அரசியல்வாதிகளின் கையில் போய் சிக்கி விடுகிறது. அவளுக்கே தெரியாமல் அது நடந்துவிடுகிறது. இப்படி இருக்கலாம்.

இதன்பின், திரைக்கதையின் இறுதி முப்பது நிமிடங்கள் – எப்படி அஞ்சலி ஸ்பெக்ட்ரம் ஊழலின் அதிமுக்கிய ஆதாரத்தை வெளிப்படுத்தி, அரசியல்வாதிகளுக்குத் தண்டனை வாங்கித்தருகிறாள்?

இந்த இடத்தில், க்ளைமேக்ஸ்களைப் பற்றி சிட் ஃபீல்ட் சொல்வது என்னவென்றால்: க்ளைமேக்ஸ்கள் மூன்று வகைப்படும். பாஸிடிவ் முடிவுகள் என்ற முதல் வகையில், எல்லாமே நல்லதாக முடியும் வகையில் இருக்கும். வில்லன் இறந்து ஹீரோ வெற்றிபெறும் படங்கள். குழப்பமான முடிவுகள் என்ற இரண்டாவது வகையில், படம் எப்படி முடிந்தது என்பது படம் பார்க்கும் ஆடியன்ஸின் முடிவுக்கே விடப்படும். அதாவது, இறுதியில் நடப்பதை நாமே புரிந்துகொள்ளவேண்டும். நெகட்டிவ் முடிவுகள் எனப்படும் மூன்றாவது வகையில், இறுதியில் நடப்பது நெகட்டிவாக சித்தரிக்கப்பட்டிருக்கும். வில்லன் வெற்றிபெறுவது, கதாநாயகன் இறப்பது, நல்ல குடும்பம் தற்கொலை செய்துகொள்வது ஆகியவை இந்த வகையில் அடங்கும்.

சிட் ஃபீல்ட், நீங்கள் எடுக்கும் படங்கள் வணிகப்படங்களாக இருந்தால், பாஸிடிவாகவே முடியுங்கள் என்று அறிவுறுத்துகிறார். படம் பார்க்கும் மக்களைத் திருப்திப்படுத்தினால்தான் படம் வெற்றிபெறும் என்பது அவரது கணிப்பு. ஆனால் இந்த விதி, வணிகப்படங்களுக்கு மட்டுமே என்பதையும் மறவாதீர்கள். பிற ஆங்கில மற்றும் உலகப் படங்களைக் காப்பியடித்து எடுக்கப்படும் ’கோ’, ’நந்தலாலா’, ‘மங்காத்தா’ ஆகிய படங்கள் போன்று எடுத்தால் இந்த விதி பொருந்தாது. சிட் ஃபீல்ட் சொல்வது, தரமான படங்களாகிய ’ஆரண்யகாண்டம்’, ‘Catch me if you can’, ‘Gone in 60 seconds’ போன்ற வேகமான படங்களையே. இதில், ஆரண்யகாண்டம், ஒரு உலகப்படத்துக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கும் தமிழ்ப்படம். மற்ற இரண்டு ஆங்கிலப்படங்களும், மசாலாக்களாகவே இருந்தாலும், மிகத் தரமானதாக எடுக்கப்பட்டிருப்பவை. இத்தகைய தரத்தில் எடுக்கப்படும் படங்களையே சிட் ஃபீல்ட் குறிப்பிடுகிறார்.

சில நண்பர்களுக்கு, நாம் மேலே சொல்லிய அஞ்சலியின் கதை பிடிக்காமல் போக வாய்ப்புண்டு. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம், ஓரிரு மணி நேரம் விவாதத்தில், ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அதிலிருந்து ஒரு திரைக்கதையை நம்மால் உருவாக்க முடிந்ததல்லவா? அதுதான் வேண்டும். அதைப்போலவே உங்களாலும் முடிய வேண்டும். அது மிகவும் எளிதானதும் கூட.

இத்துடன், சிட் ஃபீல்டின் புத்தகத்தின் ஐந்தாவது அத்தியாயமான Chapter 5 : Story and Character முடிகிறது.

அடுத்து?

தொடரும்…..

  Comments

7 Comments

  1. சுமாரா ஆரம்பிச்ச கதை இப்ப பரபரப்பாகிவிட்டது. சொல்ல முடியாது இந்த கதையையும் யாராவது காபி அடிச்சாலும் அடிக்கலாம்.

    Reply
  2. செ.சரவணகுமார் சொன்ன மாதிரி சீக்கிரம் “அது” வெளிவர வாழ்த்துக்கள்……

    Reply
  3. barathi raja

    நான் ஒரு புதிய கருந்தேள் விருந்தாளி ,தினகரனில் வெள்ளிமலரில் வெளிவரும் திரைக்கதை எழுதலாம் வாங்க ,என்ற தொகுப்பின் மூலமே ,எனக்கு கருந்தேள் அறிமுகமானது,,,நான் தொடர்ந்து 8 அத்தியாயங்கள் படித்து ஒரு கதாப்பாத்திரம் உருவாக்கிவிட்டேன் ,,கருவும் கிடைத்துவிட்டது ,பாதி திரைக்கதை முடிவு செய்துவிட்டேன் ,மீதி திரைக்கதை நடப்பு சூழலுக்கு ஒத்துவரது என்று எனக்கு தெரிகிறது ,இருந்தும் அந்த கதையை எழுதலாமா?அது ஒரு அரசியல் சம்மந்தமான கதை..

    Reply
    • அவசியம் நீங்கள் எழுதலாம் பாஸ். நடப்பு சூழலுக்கு ஒத்துவராது என்றாலுமே உங்களுக்கு ஒரு பயிற்சிக்காக அது உதவும். ஒருவேளை எழுதி முடித்தபின் அட்டகாசமாக இருந்தால் தாராளமாக இப்போது யூஸ் செய்யலாமே

      Reply

Join the conversation