80’களின் தமிழ்ப்படங்கள்–4 – சத்யராஜ்
சத்யராஜ் என்னும் நடிகரை நான் முதல்முதலில் பார்த்த படம், நான் சிகப்பு மனிதன். அதிலும், சிறுவனாக நான் இருந்தபோது, ரஜினியின் தங்கையைக் காட்டுத்தனமாக ரேப் செய்துவிட்டு சத்யராஜ் நிமிரும்போது, அவரது வாயெல்லாம் மல்லிகைப்பூ ஒட்டியிருக்கும் காட்சியைப்பார்த்துவிட்டு, நிஜமாகவே பயந்திருக்கிறேன். இதற்குப்பின் ஜப்பானில் கல்யாணராமன் பார்த்தேன். அதிலும் சத்யராஜை அடையாளம் காண முடிந்தது. இந்தக் காலகட்டம்தான், தமிழ்ப்படங்களை நான் பார்க்க ஆரம்பித்த காலம். இதற்குப் பின், தினசரி குறைந்தபட்சம் ஒருதமிழ்ப்படம் என்பது எங்கள் இலக்காக இருந்தது. காரணம்? எங்கள் வீட்டில் புதிதாக வாங்கிய வீசீஆர். அக்காலத்தில், எங்களுக்குத் தெரிந்த கடை (உமா டூல்ஸ்) இருந்ததால், எந்தப் படம் வந்தாலும், உடனே எங்கள் வீட்டுக்கும் வந்துவிடும். கேமரா பிரிண்ட் என்ற அக்காலத்திய திருட்டு விசிடிக்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அதேபோல், எங்கள் மாமாவின் இசைத்தட்டு நூலகமும் இருந்த காரணத்தினால், எந்தப் புதிய படமானாலும் சரி, அதன் பாடல்கள் மனப்பாடமாகிவிடும் (இதனால்,இப்போதும் பழைய பாடல்கள் அப்படியே நினைவில் இருக்கின்றன). எனவே, எண்பதுகளில் வந்த படங்களில், நான் பார்க்காத படம் என்று மிகச்சில படங்களையே சொல்லமுடியும். அதேபோல், அக்காலத்தில் நான் பார்த்த வில்லன்களில், சத்யராஜையே நன்றாக நினைவு இருக்கிறது. பிடித்தும் இருந்தது. அவரது கேலி, கிண்டல் எல்லாம், தொண்ணூறுகளில் இந்தப் படங்களைத் திரும்பப்பார்க்கும்போதுதான் எனக்கு நன்றாக விளங்கியது. இருந்தாலும், அவரது ஆகிருதி மற்றும் ஓரிரு வசன உச்சரிப்புகள் ஆகியவற்றினாலோ என்னவோ, எனது நினைவுகளில் தங்கிய படங்களாகஅவரது படங்கள் ஆகிப்போனது.
எனக்கு இன்றுவரை மிகப்பிடித்த சத்யராஜின் சில படங்களை நினைவுகூர்வதே நோக்கம்.
ஒகே. முதலில், ஜீவா.
யார்யாருக்கெல்லாம் ‘ஜீவா’ நினைவு இருக்கிறது? அக்காலத்தில், எனது இன்னொரு மாமா, கல்கியில் வந்த பொன்னியின் செல்வனைத் தொகுத்து வைத்திருந்தார். அப்புத்தகத்தைப் புரட்டும்போது, ஒரு பக்கத்தில், இந்த ஜீவாவின் விமர்சனம் கண்ணில் படும். இந்தப் படத்தையும் கேமரா பிரிண்டில் தான் பார்த்தோம். இன்று வரை, இப்படத்தை இரண்டே இரண்டு முறை மட்டுமே பார்த்திருந்தாலும், மிக நன்றாக இப்படம் நினைவிருக்கிறது. பிரதாப் போத்தன் இயக்கிய இப்படம், ஒரு டோட்டல் மசாலா. எல்லா வகையான சமாச்சாரங்களும் சம அளவில் கலக்கப்பட்டு, படுஜாலியான வகையில் பரிமாறப்பட்டிருக்கும். மிக சிம்பிள் கதை. தனது குடும்பத்தைக் கொன்ற வில்லனைப் பழிவாங்குகிறான் கதாநாயகன். ஆனால், அதை, சத்யராஜுக்கே உரிய வகையில் அமைத்திருப்பதுதான் புத்திசாலித்தனம். குடும்பமே பிக்னிக் செல்லும் ஆரம்பக்காட்சியில், ஜீவாவின்அம்மா, ‘ஜீவா’ என்று கத்த, ‘சங்கீதம் கேளு . . நீ கைத்தாளம் போடு‘ பாடலின் ஆரம்ப இசை ஒலிக்க, பெட்ரோல் கேன்களுடன் சத்யராஜ் அறிமுகமாகும் காட்சியில் இருந்து, படம் சர்ர்ரென்று டேக் ஆஃப் ஆகிவிடும். இந்தப் பாடல், படுஜாலியான பாடல். சத்யராஜின் தங்கையாக, ராசி. எத்தனை படங்களில் அப்பாவித் தங்கையாக நடித்திருக்கிறார் இவர்! (கமலின் ‘சத்யா’ உட்பட) . . அவருக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையாக, நிழல்கள் ரவி. சத்யராஜின் வேலை, புகைப்படங்கள் எடுப்பது. ஒருநாள், மாடல் சில்க்கைப் புகைப்படம் எடுக்கப்போய், அதில் எழும் ஒரு சிக்கலினால், வில்லன் கும்பலின் பார்வை சத்யராஜின் மீது படிய, அவரது தாயும் தங்கையும் கொலை செய்யப்படுகின்றனர். மிகுந்த கோபத்துடன், வில்லன்களை எப்படிக் கொல்கிறார் சத்யராஜ் என்பதே கதை. இப்படத்தில், மறக்க முடியாத விஷயங்கள் சில உண்டு. குடிகாரராக வரும் ஜனகராஜ் (’தகுடு தகுடு தகரத்தகுடு தங்கமாச்சிடா’ என்ற பாடல், ஜாலியான ஒன்று) அதேபோல், கண்டபடி கெட்டவார்த்தை பேசும் சத்யராஜின் கேரக்டர். மாஜிக் நிபுணராக வந்து, ஒரு பாடலைப் பாடிச் செல்லும் பிரதாப் போத்தன் (’ஷாலகாலபூபா’ பாடல்). இதன் இசை, கங்கை அமரன். படத்தின் கதாநாயகி, அமலா.
அடுத்ததாக எனக்குப் பிடித்த படம், ஜல்லிக்கட்டு.
இந்தக் கதையுமே, படு மசாலாதான். கொடும் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படும் சத்யராஜ், தப்புவிக்கப்படுகிறார். அதற்குக் காரணம், இவருக்குத் தீர்ப்பை அளித்த ஜட்ஜான சிவாஜி. ஜட்ஜே ஏன் ஒரு கைதியைத் தப்புவிக்க வேண்டும்? அவரது மகள், வில்லன்களால் கொல்லப்படுகிறாள். அவர்களைக் கொல்லத் தேவை ஒரு முரட்டு வீரன். இதுதான் காரணம். ஆரம்பத்தில், சிவாஜியை சத்யராஜுக்குப் பிடிப்பதில்லை. ஆனால், படிப்படியாக சிவாஜியின் மீது அன்பு கொண்டு, அவரைக் குருவாக ஏற்றுக்கொள்கிறார். ஒவ்வொரு வில்லனையும், திட்டம் போட்டுக் கொல்கிறார். இதுவே கதை. இப்படத்தின் மறக்கமுடியாத அம்சங்கள் என்னவெனில், ஒவ்வொரு வில்லனையும், ஒவ்வொரு கெட்டப்பில் கொல்லும் விதம். அதிலும், அந்தக் கெட்டப்கள் அத்தனையும், பழைய சத்யராஜ் பட கதாபாத்திரங்களாகவே இருப்பது, ஜாலி. ‘முதல் வசந்தம்’, ‘கடலோரக்கவிதைகள்’ ஆகிய இரண்டு கெட்டப்கள் நன்றாக நினைவிருக்கிறது. இன்னொன்று, ‘விடிஞ்சா கல்யாணம்’ என்று நினைக்கிறேன். நண்பர்கள் யாருக்காவது நினைவிருந்தால், பின்னூட்டமிடவும். அதேபோல், இதன் பாடல்கள். குறிப்பாக, ‘ஹேய் ராஜா.. ஒன்றானோம் இன்று’ என்ற பாடல் – மனோவும் எஸ்பிபியும் பாடியது. இன்றும் எனக்குப் பிடிக்கும் பாடல் இது. அதேபோல், ‘ஏரியில் ஒரு ஓடம்’ பாடல். ப்ளஸ், ‘காதல் கிளியே’ பாடல். இப்படத்தை இயக்கியவர், மணிவண்ணன். இசை, இளையராஜா.
இந்த வரிசையில் இன்னொரு படம் – கனம் கோர்ட்டார் அவர்களே.
இந்தப் படத்தில், சத்யராஜ், கேஸ் கிடைக்காமல் திண்டாடும் ஒரு சோடாபுட்டி வக்கீல். எஸ்.எஸ். சந்திரனின் ஜூனியர். இதில், எஸ்.எஸ்.சந்திரன், ஒரு சபலிஸ்ட். மனைவி, ஸ்ரீவித்யா. தன்னுடைய சபலத்தால், தன்னிடம் கேஸுக்காக வரும் கேபரே டான்ஸர் சில்க்கை நாடிச் செல்லும் அவர், சில்க் கொலை செய்யப்பட்டதால், மாட்டிக்கொண்டுவிட, உண்மைகளை சத்யராஜ் வெளிக்கொணர்வதே கதை . இதில் சில்க்கின் பார்வையில்லாத அண்ணனாக, தியாகி சந்திரசேகர். பட இறுதியில் வரும் ஹெலிகாப்டர் ஃபைட் நன்றாக நினைவிருக்கிறது. அதேபோல், இதில் சத்யராஜ் போடும் பல கெட்டப்களும் – குறிப்பாக ராணுவ அதிகாரி வேடம் – நன்றாக நினைவிருக்கிறது. இயக்கம் – வழக்கப்படி மணிவண்ணன்.
அதேபோல், மக்கள் என் பக்கம். இது, அமிதாப் & ஸ்ரீதேவி நடித்த ஹிந்திப்படமான ’இன்குலாப்’ (Inquilaab) படத்தின் ரீமேக். இரண்டையும் பார்த்திருக்கிறேன். மக்கள் என் பக்கம் படத்தின், ‘ஆண்டவனப் பார்க்கணும்.. அவனுக்கு ஊத்தணும்’ பாடல் மிகவும் பிடிக்கும். அட இது என்ன பிரமாதம்? சத்யராஜ் மற்றும் அம்பிகா நடித்த ‘ஆளப்பிறந்தவன்’ படத்தையே பார்த்திருக்கிறேன். பெரிய கொலைவாள் ஒன்றை வைத்துக்கொண்டு, நாடகங்களில் ராஜாவாக நடிகும் சத்யராஜ், இரவில், ராபின்ஹூட்டாக மாறி, தீயவர்களைக் கொன்று, கத்தி படம் போட்ட கொடியை நட்டுவிட்டுச் சென்றுவிடுவதே கதை (நான் சிகப்பு மனிதன் போலவே இருக்கிறதல்லவா? இரண்டுக்கும் மூலம், சார்லஸ் ப்ரான்ஸன் நடித்த ’Death Wish’ படம் தான்). இதில் வேடிக்கை என்னவெனில், இப்படம் வந்தவுடன், சில மாதங்களில், ராஜா கதாநாயகனாக நடிக்க, ‘அடக்கப்பிறந்தவன்’ என்ற படமும் வெளிவந்து இதைப்போலவே படுதோல்வி அடைந்தது. அடக்கப்பிறந்தவன் படத்தை நல்லவேளையாகப் பார்க்கவில்லை. இருந்தாலும், இந்த விஷயம் நினைவில் இருக்கிறது. இடைப்பட்ட நேரத்தில், அனைவரும் அறிந்த ‘வேதம் புதிது’, ‘பூவிழி வாசலிலே’, ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ (இப்படத்தின் ‘டர் டர் டாக்டர்’ பாடலும், ‘பத்தரை மாத்துச் சித்திரப்பெண்ணே’ பாடலில் ரகுவரனும் சத்யராஜும் காமெடி செய்து ஆடுவதும் பிடிக்கும்), ‘ரசிகன் ஒரு ரசிகை’ (பாடல்கள் டாப். குறிப்பாக, யேசுதாஸின் ‘ஏழிசை கீதமே’ & ‘பாடி அழைத்தேன்’), ‘சின்னதம்பி பெரியத்தம்பி’, ‘அண்ணாநகர் முதல் தெரு’, ‘சின்னப்பதாஸ்’, ‘பிக்பாக்கெட்’ ஆகிய படங்களும் பார்த்திருக்கிறேன். கூடவே, ‘திராவிடன்’, சிவாஜியும் சத்யராஜும் நடித்த ‘புதியவானம்’, டி.எம்.எஸ் சத்யராஜுக்காகப் பாடிய ‘தாய்நாடு’ (அத்தனை பாடல்களும் அவரே பாடியிருப்பார். ‘தாளம் தட்டிப் பாட வந்தேன், தேவன் உன்னைத்தேடி வந்தேன்’ & ‘தாய்மாமன் கையைத்தொட்டு’ பாடல்கள் நன்றாக நினைவுள்ளன). ஏவிஎம்மின் தயாரிப்பில், சத்யராஜ் இருவேடங்களில் நடித்த ‘உலகம் பிறந்தது எனக்காக’ படமும் அந்தச் சமயங்களில் பிடித்தது. இதன் டிரெய்லரை, கோவை ரயில்வே ஸ்டேஷனில்தான் முதன்முதலாகப் பார்த்தேன். தொண்ணூறுகளில், அக்காலத்திய ‘கமல்தான்யா டாப்பு’ மனப்பான்மை எனக்கும் இருந்த காரணத்தால், சத்யராஜை விட்டுவிட்டேன். ஆனால், கமலின் கண்களில் சத்யராஜ் கையையே விட்டு ஆட்டிய எண்பதுகளின் அதிரடிப் படங்களான ‘விக்ரம்’, ‘ஜப்பானில் கல்யாணராமன்’, ‘காக்கிசட்டை’, ‘மங்கம்மா சபதம்’ ’எனக்குள் ஒருவன்’ ஆகிய படங்களில் சத்யராஜை மிகவும் பிடிக்கும் (விக்ரம் & காக்கிசட்டையைப் பற்றி, இந்த 80’களின் திரைப்படங்கள் வரிசையில், இரண்டு பதிவுகளே எழுதியிருக்கிறேன். க்ளிக்கிப் படிக்கவும்). அதேபோல், ரஜினியுடன் சத்யராஜ் வில்லனாக நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’, ‘பாயும்புலி’, மிஸ்டர் பாரத்’ , ‘நான் மகான் அல்ல’ படங்களும் பிடிக்கும். கூடவே, ’24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’ படங்களும் பார்த்து பயந்திருக்கிறேன்.
என்னைப்பொறுத்தவரை, எம்ஜியாருக்குப் பின்னர், எத்தகைய வேடம் போட்டாலும் அது ஒட்டிக்கொள்ளும் நடிகர் என்று சத்யராஜை சொல்லிவிடலாம். எம்ஜியார், என்னதான் மசாலா நடிகர் என்றாலும்கூட, அப்படங்களில் அவர் போடும் வேடங்கள் (தாத்தா ,இயேசு இத்யாதி), அவருக்கு மிகச் சரியாக அமைந்துவிடும். அதேபோல், சத்யராஜின் முக அமைப்பும், போடும் வேடங்களுக்குத் தோதாக அமையும்படி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ‘நடிகன்’ படத்தின் வேடம் ஒரு சான்று. பெரியாரை மறந்துவிட இயலுமா? இங்கே இன்னொரு விஷயம். நடிகன், அமைதிப்படை, வில்லாதிவில்லன் போன்ற தொண்ணூறுகளின் படங்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெறாது. இது, எண்பதுகளின் முடிவு வரை சத்யராஜ் நடித்த படங்களைப் பற்றிய ஒரு கட்டுரை மட்டுமே.
சத்யராஜ் என்றதும், சிவாஜி கணேசனுடன் அவர் சேர்ந்து நடித்த சில படங்கள் நினைவு வருகிறது. ஜல்லிக்கட்டு, முதல் மரியாதை ஆகிய படங்கள் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். ‘முத்துக்கள் மூன்று’ என்று ஒரு படம் உண்டு. பாண்டியராஜன், சிவாஜி ஆகியவர்களுடன், சத்யராஜ் நடித்த படம். இந்தப் படமும், எனது எண்பதுகளின் ஹிட்லிஸ்டில் உண்டு. சிவாஜியும் சத்யராஜும் நடிக்கும்போது, இருவருக்கும் இடையே நிலவும் ஒரு அலைவரிசையை நம்மால் கண்டுகொள்ள முடியும். இதற்கு ‘ஜல்லிக்கட்டு’ ஒரு நல்ல உதாரணம்.
ரஜினியுடன் சத்யராஜ் நடித்த படங்களைப் பட்டியல் இடும்போது, ஒரு படத்தை மேலே சொல்லவில்லை. அது, ‘ஸ்ரீ ராகவேந்திரர்’. இப்படம் வெளிவந்த வருடம், 1985. ரஜினியின் நூறாவது படம். இதில், கௌரவவேடத்தில் சத்யராஜ் நடித்திருப்பார். ஒரு முஸ்லிம் பிராந்திய அதிகாரி, ராகவேந்திரரைப் பரிசோதித்து, அதன்பின் அவரது பக்தராக மாறுவதுபோன்ற ஒரு plot அது. ராகவேந்திரர் படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும் (விஷ்ணுவர்த்தன், மோகன் உட்பட), சத்யராஜின் கதாபாத்திரம், எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. சத்யராஜிடம் உள்ள ப்ளஸ் பாயின்ட் என்னவெனில், ரஜினியிடம் இருந்த அதே ப்ளஸ் பாயின்ட் என்பது என் எண்ணம். அதாவது, ரஜினி வந்த சமயத்தில், கிட்டத்தட்ட அத்தனை தமிழ்ப்பட கதாநாயகர்களும், கர்லிங் கிராப் வைத்துக்கொண்டு, ஒரே போன்ற ஸ்டீரியோடைப் நடிப்பையே வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர் (இந்த கர்லிங் கிராப் லிஸ்டில், அப்போதைய கமலும் அடக்கம்). ரஜினியின் ஸ்டைலான நடிப்பு, பரட்டைத்தலை, வேகமான வசன உச்சரிப்பு ஆகியன, அவரைப் புகழேணியின் உச்சத்தில் கொண்டுசென்று வைத்தன. அதேபோல், சத்யராஜ் வந்த காலகட்டத்தில், அனைத்து வில்லன்களும் , ‘ஏய் மாடசாமி.. லக்ஷ்மிய நம்ம காட்டு பங்களாவுக்குக் கடத்திட்டு வந்திரு’ என்னும் வசனத்தை ஒரே போன்று உச்சரிக்கும் நபர்களாகவே இருந்தனர் (நம்பியார் உட்பட). இப்படிப்பட்ட ஒரு சூழலில், ‘பிறந்ததே வில்லத்தனம் செய்யத்தான்; மனதில் அதைப்பற்றி எந்த வருத்தமும் இல்லை; அப்படித்தான் கெட்டவனாக இருப்பேன். அடப்போங்கய்யா’ என்ற விதத்தில், ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு வில்லனாக சத்யராஜ் இருந்ததே அவரது வெற்றிக்குக் காரணம். அவர் கதாநாயகனாக ஆனபின்னும், இந்தக் கேஷுவலான பாணி அவரிடம் இன்னமும் இருக்கிறது. ஒன்றைக் கவனியுங்கள்: சத்யராஜும் கமலும் நடித்த எந்தப் படமாக இருந்தாலும், அத்தனை காட்சிகளிலும், மிகுந்த பிரயாசைப்பட்டு நடித்திருக்கும் கமலைவிடவும், சத்யராஜ் அப்ளாஸ் வாங்குவது மிக எளிதாகத் தெரிந்துவிடும் விஷயம். உதா: விக்ரம் படத்தின் சுகிர்தராஜா. எனது ஆல்டைம் ஃபேவரைட் வில்லன். காரணம்? கமல் இருப்பது, சிவாஜி பள்ளி. அதில், கேஷுவல் என்ற வார்த்தை, கெட்டவார்த்தை. மிகைநடிப்பு என்பதுதான் அங்கே மரியாதைக்குரிய சொல். இயல்பாக நடிப்பது என்பது, தடைசெய்யப்பட்டுவிட்ட ஒரு விஷயம். இத்தகையதொரு சூழ்நிலையில், தனக்கேயுரிய ஒரு கேஷுவலான வில்லத்தனத்தை சத்யராஜ் வெளிப்படுத்தியது, அவரது வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம்.
எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் என்னும் இந்த கட்டுரைத்தொடரை, சத்யராஜ் இல்லாமல் எழுதவே முடியாது என்பதுதான் அவரது வெற்றி. இன்னமும், சத்யராஜ் எனது ஃபேவரைட் நடிகர்களில் ஒருவர். மீண்டும், 80களின் திரைப்படங்களின் அடுத்த பகுதியில் சந்திப்போம்.
பி.கு – இந்தக் கட்டுரையில் உள்ள பாடல்களின் மீது க்ளிக்கி, அவைகளை, நாஸ்டால்ஜியா வெறியர்கள் பார்க்கலாம் (சில பாடல்கள், எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை).
// சிறுவனாக நான் இருந்தபோது, ரஜினியின் தங்கையைக் காட்டுத்தனமாக ரேப் செய்துவிட்டு //
சிறுவனா இருந்தப்ப இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுமா..அட..நித்தியானந்தாவே…இப்ப வரைக்கும் எனக்கு அர்த்தம தெரியாது…..
பூவிழி வாசலிலே படத்துல ஒரு அலாரம் வரும்-கயில திருகி சுத்தி அமுக்குனா கிர்ரர்ர்ர்னு சவுண்ட் வரும்…அந்த படத்த பாத்துட்டு அத கேட்டேன்னு எங்கப்பா அலைஞ்சு திரிஞ்சு மதுரைக்கு போய் வாங்கிட்டு வந்தார்…
பி.வாசு கயில சத்யராஜ் மாட்டி – நடிகன் தவிர – டௌன் ஆகிட்டார் என்பது என் எண்ணம…குறிப்பா 95க்கு அப்பறம்….சுத்தம்…
ஆனா படங்கள்ல புரட்சிகரமா பேசியும் – வெளியவும் அதே மாதிரி காமிச்சுகிட்டாலும் ஊட்டி மாதிரி இடங்கள்ல இவரு பண்ணி வச்சிருக்குற – பொறம்போக்கு இடங்கள், ரியல் எஸ்டேட் – இதெல்லாம் ரொம்பவே அதிகம்..
கவுண்டமணி – சத்யராஜ் காம்பினேசன் யாருதான் மறக்க முடியும்….
போட்டா கெழவன் வேஷம்தான் போடணும்…எல்லாத்துக்கும் வசதி….
நண்பா அட்டகாசமான நினைவூட்டல் பதிவு
எனக்கு சத்யராஜ் நடிப்பில் மிகவும் பிடித்தது கடமை கண்ணியம் கட்டுப்பாடு,வேதம் புதிது,காக்கி சட்டை,விக்ரம்,கடலோர கவிதைகள்,ஜீவா,பூவிழி வாசலிலே,ஒம்பது ரூபா நோட்டு ,அமைதிப்படை அவர் மட்டும் அந்த ராஜ்கபூர்,மணிவாசகம் கும்பலை நம்பி மோசம் போயிருக்காவிட்டால் நல்ல படங்களில் நின்றிருப்பார். முதல் வசந்தம் செம படம்,இவருக்கும் மலேசியாவும் செம போட்டி அதில். வில்லனுக்கே படங்கள் அதிகநாள் ஓடியிருக்கும் என்றால் இவருக்காகதான் இருக்கும்.விடிஞ்சா கல்யாணம் மங்கலா நினைவிருக்கு.
அப்போ வீடியோ கேசட்டில் படம் எடுப்பவர்களின் முதல் சாய்ஸ் சத்யராஜ் தான்,கேசட்டே க்டையில் இருக்காது,சுத்திகிடே இருக்கும்
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQft28_z4A6cyGYR-DmPYSKvtripuaQKyUz2T0fh7sQ3V-zc-TZ&t=1
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
வேலை கிடைச்சிடுச்சு ரொம்ப புடிச்ச படம்,
/// கமல் இருப்பது, சிவாஜி பள்ளி. அதில், கேஷுவல் என்ற வார்த்தை, கெட்டவார்த்தை. மிகைநடிப்பு என்பதுதான் அங்கே மரியாதைக்குரிய சொல். இயல்பாக நடிப்பது என்பது, தடைசெய்யப்பட்டுவிட்ட ஒரு விஷயம். ///.. நெத்தி அடி தல… என்னதான் சத்யராஜ் ரொம்ப ஜாலி ஆ நிறைய படம் நடிச்சுருந்தாலும், எனக்கு பூவிழி வாசலிலே ரொம்ப பிடிக்கும் தல… Feels close to heart.. சின்ன வயசுல அடிக்கடி சன் டிவி ல போடுவான்… ஒரு சாவு சீன் ல அந்த வில்லன் ஆண்டனி போவான், அப்ப அந்த குழந்த கத்தும் அப்ப ஒரு எக்ஸ்பிரஷன் கொடுப்பார் பாருங்க… அட்டகாசம்…
// சத்யராஜ் எனது ஃபேவரைட் நடிகர்களில் ஒருவர். மீண்டும், 80களின் திரைப்படங்களின் அடுத்த பகுதியில் சந்திப்போம்//
அதுவரைக்கும் நாங்க இருந்தாதான….இப்பவே அவனவன் ப்ளேக் வந்த சூரத் நகரம் மாதிரி தெரிஞ்சு ஓடுறாங்கன்னு பேசிக்கிறாங்க…
Jokes apart, வழமை போல நல்ல பதிவு….50களின் படத்தையும் நீங்க கீதப்ப்ரியன் போன்றவர்கள் எழுதுனா என்ன…
அருமையான தொகுப்பு மற்றும் பதிவு, பூவிழி வாசலிலே மற்றும் முதல் வசந்தம் என்னுடைய Fav
one of the getups of sathyaraj in jallykattu film is the famous 24 mani neram(en keraktaraiyae purinchukka mattengireengale) am i right?
உங்கள் எழுத்துக்களில் இந்தத் தொடர் மிக முக்கியமானது என நினைக்கிறேன். ஒவ்வொரு படத்தையும் பெயர் குறிப்பிடுவதோடு விட்டுவிடாமல் அந்தப் படத்தினுடனான உங்கள் அனுபவங்களை, நீங்கள் ரசித்த அம்சங்களை கொஞ்சம் விரிவாகவும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம். தொடர் ஒரு 50 பகுதிகளாவது வரட்டும் நண்பா.
சத்யராஜ் என்றென்றும் என் விருப்பத்திற்குரிய நடிகர். தமிழில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய முக்கியமான நடிகர்களில் ஒருவர்.
பதிவை ரசித்துப் படித்தேன். நன்றி நண்பா.
ஆளப்பிறந்தவன் படத்தின் ஸ்பிலிட் பர்ஸ்னாலிட்டி பாதிப்புக்குள்ளான கதாபாத்திரத்தில் சத்யராஜ் சிறப்பாக நடித்திருப்பார். எனக்கு மிகவும் பிடித்த சத்யராஜ் படங்களில் அதுவும் ஒன்று. கடந்த விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்தபோது மோசர்பேர் டி.வி.டி களில் இந்தப் படத்தைத் தேடிப்பார்த்து ஏமாந்துபோனேன். அப்போது கிடைத்தது விடிஞ்சா கல்யாணம் படம் தான். அதிலும் சத்யராஜின் நடிப்பு டாப்.
Mudhal Vasantham, Vidincha Kalyanam, Poovizi Vaasalile & Kadalora Kavithagal. Also Balu Thevar in Vedam Pudhithu is one of the best movies of Sathya Raj
ஒரு தகவலுக்காக இது.. சத்யராஜ், திலீப் போட்டி போட்டு நடித்த அகத்தன் என்ற மலையாளப் படத்தை சமீபத்தில் பார்த்தேன். படம் அத்தனை சுவாரஸ்யமாக இல்லையென்றாலும் சத்யராஜ் தனது நடிப்பில் வேறு ஒரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருப்பார்.
சிவாஜி போல இந்த மனிதரை வீணடித்துவிடக்கூடாது என்று தோன்றுகிறது. அமிதாப் போல வெரைட்டியான பாத்திரங்களில் சத்யராஜ் தன்னை வெளிப்படுத்த முயற்சிக்கவேண்டும். படங்களைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதே அதற்கான வழி. மிக முக்கியமாக கௌரவர்கள் போன்ற படங்களைத் தவிர்ப்பது நலம்.
சரி நண்பா. நீண்ட பின்னூட்டம் எழுதிவிட்டேன். சத்யராஜ் பற்றிய பதிவென்றதும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. நீங்கள் தொடருங்கள். மின்னஞ்சலில் பேசலாம். நன்றி.
@ கொழந்த – நான் சிறுவயதில் இருந்தபோது சத்யராஜின் நில ஆக்கிரமிப்பு பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. இது வெறும் nostalgia பதிவு மட்டுமே. அதையெல்லாம் வேறு பதிவில் டிஸ்கஸ் செய்யலாம் 🙂 . . உங்கள் பி. வாசு கருத்து மிக உண்மை. சத்யராஜ் டோட்டல் டேமேஜ் ஆனது அதுக்கப்புறம்தான். அவரை இப்போ ஒரு காமெடியன் ஆக்கிட்டாங்கன்றது எனக்கு வருத்தம்தான். பழைய சத்யராஜை வெச்சி இன்னும் நிறைய விளாடலாம். பார்ப்போம்.
@ கீதப்ரியன் – நண்பா. மணிவாசகம் லொட்டு லொசுக்கு எல்லாம் சத்யராஜை நாசமாக்கிட்டாங்க. கரெக்டா சொன்னீங்க. எண்பதுகளில் வந்த அத்தனை படங்கக்ளிலும் இவரோட பங்களிப்பு பிரம்மாதமா இருக்கும். அவரு அதே போல மறுபடி வரணும்ன்றது என்னோட ஆசை. விடிஞ்சா கல்யாணம் & முதல் வசந்தம் – சூப்பர் !
கௌதமன் – மிக்க நன்றி .
@ அரன் – கரெக்டா புடிச்சீங்க. பட ஆரம்பத்தில் அந்த மொட்டை கெட்டப்ல தான் வருவார். நன்றி
@ செ.சரவணக்குமார் – ரைட்டு. உங்க அட்வைசை பாலோ பண்றேன். இன்னும் கொஞ்சம் டீட்டெயிலா இனிமே எழுதறேன். ஓ நீங்களும் ஆளப்பிறந்தவன் பார்த்தாச்சா? 🙂 அதேபோல், சத்யராஜை வீணடிப்பது குறித்து நீங்கள் சொல்லியிருப்பது மிகச்சரி. முழுதும் உடன்படுகிறேன். மிக்க நன்றி
Dev – Absolutely ! அந்த டைம் அவரோட பொற்காலம். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
dei..padhivu romba nallarukku..seekerama draft la vechrukrathyum podu..appo appo indha maadiri eludhunaina..oru chinna time travel panna maadiri irukum:)vidinja kalyanam (half boil aarumugam,sukirtharaja..my fav)
இந்த படங்கள் எல்லாம் சன் டீவில அந்த வாரம் இந்த வாரம்ன்னு தெனமும் படம் போடும் காலத்துல பாத்தது :)… அப்புறம் நீங்க சொல்லி இருக்குற எல்லா படமும் நா பொறக்குறதுக்கு முன்னால வந்தது..,
@ balu – ட்ராப்ட்ல இருக்குறதை, அடுத்த மாசம் போடுறேன். இப்பவே போட்டா, மக்கள் தாங்க மாட்டாங்க 🙂 . . மாசம் ஒரு பதிவு இனி இப்புடி எழுதுவேன் 🙂
@…αηαη∂…. – இப்புடியெல்லாம் சொன்னா, நீங்க என்னை விட யங்னு ஆயிருமா? 🙂 . . Jokes apart, இதெல்லாம் என்னோட சின்ன வயசு மலரும் நினைவுகள்.
// என்னைப்பொறுத்தவரை, எம்ஜியாருக்குப் பின்னர், எத்தகைய வேடம் போட்டாலும் அது ஒட்டிக்கொள்ளும் நடிகர் என்று சத்யராஜை சொல்லிவிடலாம். //
இதற்க்கு அவருக்கு எந்த விக் வைத்தாலும் செட்டாகி விடுவதும் ஒரு காரணம் எனலாம்
எல்லாம் எழுதினீங்க முதல் வசந்தம் படத்தை எப்படி மறந்தீங்க. அப்போது வ்ந்த படங்களிலேயே புதுமையான climax உள்ள படமாச்சே, அதிலும் சத்யராஜின் வசனம் பிரமாதம். இல்லை அடுத்த பதிவில் போட எழுதி வைத்திருக்கிறீர்களா. ஜல்லிகட்டு இயக்குனர் உதயகுமார் அல்லவா.
சத்யராஜ் படங்களிலே எனக்கு பிடிக்காத ஒரு படம் சேனாதிபதி பஸ்ல போகும்போது பார்த்துதொலைச்சிட்டேன்…ஸ்ஸஸபா….:)
ஆளப்பிறந்தவன் படம் நலலா ஞாபகம் இருக்கு…கொலைபண்ணிட்டு துணில வாள் வரைஞ்சு கொடி நட்டுட்டுப்போறது… சின்னவயசுல வாயைபொளந்துட்டு பார்த்த படங்கள் அத.. இப்போ காமெடியா இருக்கு..
சத்யராஜீன் என்னுடையை ஆல்டைம் பேவரிட் கடலோர கவிதைகள்தான்…அதைமாதிரி ஒரு படம் சத்யராஜீகிட்டருந்து அதுக்கப்புறம் வரவே இல்ல…..
சூப்பர்பா….
இருந்தாலும் கமலுக்கு கொஞ்சம் நன்றி சொல்லிக்கலாம்..
விக்ரம் படத்துல….ஹீரோயின(மூணுல ஏதோ ஒண்ணு) ரேப் பண்றதுக்கு நம்ம ராஜூ(சத்யராஜூ)..சொல்ற காரண வசனம் அந்தாளா சொந்தமா சொன்னதா ஒரு பேட்டியில பாத்தேன்….அத எடிட்டிங்கல..கட் பண்ணாம வுட்டதுக்கே கமலுக்கு ஒரு பெரிய நன்றிய சொல்லலாம்….செம டைமிங் டையலாக்…
நீங்க சொன்ன எல்லா படமுமே நமக்கும் ரொம்ப பிடிக்கும்..
தொண்ணூறுகளோடா தனி ராஜ்ஜியமே…ராஜூ-கவுண்டரோடதுதாங்க்றது என்னோட எண்ணம்…..
Vedhem Puthithu, Kadalorak Kavithaigal, Nadigan FULL STOP
தலைவா….
மற்றுமொரு கலக்கல் பதிவு…..
அந்த கால பாலையா போல், தன்னுடன் நடிக்கும் சக பெரிய நடிகர்களையே ஓவர்டேக் செய்யும் நடிப்பு திறமை உள்ள மிக சில நடிகர்களில் சத்யராஜ் மிக முக்கியமானவர்…
ஜீவா படத்துல டூ-பீஸில் வரும் அமலா-வை மேலிருந்து கீழ் வரை முகரும் போது அவர் பண்ணும் அடாவடி மறக்க முடியாதது. பூவிழி வாசலிலே படத்தில் சத்யராஜ்க்கு சமமாக ரகுவரன் வில்லனா அசத்தியிருப்பார். அந்த படத்தின் “பாட்டு இங்கே…ரப..ப்பா ” ரொம்பநாள் கேட்டுகிட்டு இருந்தேன்.
ஜீவாவின் நினைவுளை மீண்டும் அசைபோட வைத்ததற்க்கு நன்றி.
அந்த படத்தின் பெயர் ‘கனம் கொட்டர் அவர்களே’ யா?
தகவலுக்கு மிக்க நன்றி.
சத்யராஜ் வில்லனாகவும், கதாநாயகனாக, குணச்சித்திர நடிகனாக, காமெடியனாக எல்லா வேடத்திலும் சிறப்பான நடிப்பை தந்த நல்ல நடிகர். புதிய இயக்குனர் களும் அவரை பயன்படுத்தி க்கொள்ள வேண்டும்.
சத்யராஜ் வில்லனாகவும், கதாநாயகனாக, குணச்சித்திர நடிகனாக, காமெடியனாக எல்லா வேடத்திலும் சிறப்பான நடிப்பை தந்த நல்ல நடிகர். புதிய இயக்குனர் களும் அவரை பயன்படுத்தி க்கொள்ள வேண்டும்.ஆனால் நாத்திகம் பேசுவதால் பலருக்கும் பிடிக்காமல் போய்விட்டது என்பதுவும் உண்மை.