திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 9

by Karundhel Rajesh October 4, 2011   series

Chapter 6 – Endings & Beginnings

கேள்வி: திரைக்கதையைத் தொடங்குவதற்கான சிறந்த வழி எது?

படம் பார்க்கும் ஆடியன்ஸின் கவனத்தை எந்த சீன் அல்லது காட்சி கவரும்? பிரதான கதாபாத்திரம் கையில் துப்பாக்கியுடன் எதையோ யோசிப்பது போன்ற காட்சியை முதலில் எழுதலாமா? அல்லது கதாநாயகனும் நாயகியும் டூயட் பாடும் காட்சியை திரைக்கதையின் ஆரம்பத்தில் வைக்கலாமா? அல்லது வில்லன் கதாபாத்திரம் யாரையோ சித்ரவதை செய்வது போன்றதொரு காட்சியுடன் திரைக்கதையை ஆரம்பிக்கலாமா? இல்லையேல், ஒரு அழகான குடும்பத்தைக் காண்பிக்கும் காட்சியுடன் துவங்கலாமா?

ஒரு திரைக்கதையை எண்ணற்ற விதங்களில் துவக்க முடியும் என்று சிட் ஃபீல்ட் சொல்கிறார்.

இதுவரை, திரைக்கதை பற்றிய சில பொதுவான அம்சங்களைப் பார்த்தோம். இனி, திரைக்கதை அமைப்புக்குள் முழுமையாக இறங்கப் போகிறோம். இதுவரை பார்த்த பொதுவான அம்சங்களை விட்டுவிட்டு, இனிமேல் திரைக்கதையின் இன்றியமையாத பிரதான அம்சங்களைப் பார்க்கப்போகிறோம். ஆகையால், இதுவரை பார்த்ததை சுருக்கமாக ஒருமுறை revision செய்துகொள்வோம்.

எல்லாத் திரைக்கதைகளிலும், subject என்ற ஒன்று இருந்தே தீரும். இந்த Subject என்பது, action மற்றும் character என்று இரண்டாகப் பிரியும். character என்பது பிரதான கதாபாத்திரம் அல்லது கதாபாத்திரங்கள். Action என்பது, இந்தப் பிரதான கதாபாத்திரங்களுக்குத் திரைக்கதையில் என்ன நடக்கிறது என்ற விஷயம். Action என்ற இந்தச் சம்பவங்கள், இரண்டு வகைப்படும். Physical மற்றும் Emotional Action. Physical Action என்பது, கதாபாத்திரங்களுக்கு வெளிப்புறமாக – புறவயமாக நடக்கும் விஷயங்கள். ஒரு கார் சேஸ், சண்டை முதலியன. Emotional Action என்பது, கதாபாத்திரங்களின் மனதில், உணர்வுகளோடு சம்மந்தப்பட்டு நடக்கும் விஷயம். முத்தம், தவறாகப் புரிந்து கொள்ளுதல் ஆகியன. கதையின் பிரதான கதாபாத்திரமான character என்ற நபருக்கு ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். எதையோ அடைய அது முயல வேண்டும். அது நடந்ததா இல்லையா என்பதைத் திரைக்கதையின் இறுதியில் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்பதையும் பார்த்தோம். இந்த character என்ற விஷயத்தை, interior மற்றும் exterior என்றும் இரண்டாகப் பிரித்தோம். Interior என்பது, கதாபாத்திரம் பிறந்தது முதல், திரைக்கதை நிகழும் கணம் வரையிலான அதன் வாழ்வு. Exterior என்பது, திரைக்கதையின் ஆரம்பம் முதல் திரைக்கதையின் இறுதிவரை அக்கதாபாத்திரத்துக்கு நடக்கும் சம்பவங்கள் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள உறவுகள் இத்யாதி. Character என்ற கதாபாத்திரத்துக்கு இருக்கவேண்டிய நான்கு விசேட குணங்கள் பற்றியும் (Dramatic need, Point of View, Attitude & Transformation) பார்த்தோம். Content (கதாபாத்திரத்தின் சூழல்) மற்றும் context (திரைக்கதையின் உட்பொருள்) என்பவை பற்றியும் விரிவாகப் பார்த்தோம்.

இவை, பொதுவான அம்சங்கள்.

இனி என்ன? அடுத்து என்ன செய்யப்போகிறோம்? கீழே இருக்கும் திரைக்கதை அமைப்பைக் கவனியுங்கள்.

இப்படத்தில் இருந்து நம் தெரிந்துகொள்வது என்ன?

திரைக்கதை செல்லும் திசை !

பாயின்ட் A வில் இருந்து பாயின்ட் Z வரை ஒரே திசையில் திரைக்கதை செல்கிறது. பகுதி பகுதியாக, memento படம் போலவோ அல்லது Pulp Fiction போலவோ கதை சொல்லப்பட்டாலும் சரி; கதை முழுதும் ஃப்ளாஷ் பேக்கில் சொல்லப்பட்டாலும் சரி; ஒரே சீரான கதையாக இருந்தாலும் சரி – நாம் நினைவு கொள்ளவேண்டிய ஒரே ஒரு முக்கியமான விஷயம் – ‘திரைக்கதை என்பது, ஒன்றுக்கொன்று சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளைக்கொண்டு, ஒரு முடிவை நோக்கிக் கதையை நகர்த்துவதே’.

என்றால், நமது கதை, ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை முன்னோக்கி நகர்கிறது என்று புரிந்துகொண்டோம். படம் பார்க்கும் ஆடியன்ஸுக்குக் கதையில் சுவாரஸ்யம் ஏற்படுத்த நமக்குத் தரப்பட்டுள்ளது, திரைப்படத்தின் முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே! முதல் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் எதுவும் நிகழாமல் கதை போரடிக்கிறது என்று ஆடியன்ஸுக்குத் தோன்றினால், அதன்பின் படம் டண்டணக்கா. ஆகவே, ஆடியன்ஸுக்கு நாம் மூன்று விஷயங்களை, படம் ஆரம்பிக்கும் பத்து நிமிடங்களில் சொல்லிவிட வேண்டும்.

  1. படத்தின் பிரதான கதாபாத்திரம் அல்லது பாத்திரங்கள் எவர்?
  2. படத்தின் கதை, எதைப்பற்றி?
  3. படத்தின் சிச்சுவேஷன் என்ன? அதாவது, கதையைச் சுற்றியுள்ள அம்சங்கள்.

இப்போது, முதலில் கேட்ட கேள்வியை நினைவுபடுத்திக் கொள்வோம்.

திரைக்கதையைத் தொடங்குவதற்கான சிறந்த வழி எது?

திரைக்கதையின் முடிவைத் தெரிந்துகொள்வதே !

முடிவு என்றதும், திரைப்படம் முடியும் கடைசி ஷாட் – அதாவது, கதாபாத்திரங்கள் எல்லாம் சேர்ந்து நின்றுகொண்டு, அசட்டு ஜோக் ஒன்றை யாராவது அடித்ததும் பகபகவென்று செயற்கையாக சத்தம்போட்டு சிரிக்கும் ஷாட் – என்று குதர்க்கமாக நினைத்துக்கொள்ளக் கூடாது. திரைக்கதையின் முடிவு என்பது, திரைக்கதையின் இறுதியில் என்ன நடக்கிறது – பிரதான கதாபாத்திரம் ஜெயித்ததா அல்லது தோற்றதா? என்ற கேள்விக்கு விடை. திரைக்கதையின் முதல் வரி எழுதப்படும் முன்பே, திரைக்கதை எப்படி முடிகிறது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். திரைக்கதையின் முடிவு, பிரதான பாத்திரங்களுக்கும் ஏற்றதொரு முடிவாக இருக்க வேண்டும். கதாநாயகி ஸ்பெக்ட்ரம் ஊழலின் முக்கியமான ஆதாரத்தை அம்பலப்படுத்தினாளா இல்லையா? கதாநாயகன் தனது தொலைந்த காதலியைக் கண்டுபிடித்தானா இல்லையா? பேங்க்கைக் கொள்ளையடித்த திருடர்கள் தப்பினார்களா இல்லையா?

சிட் ஃபீல்ட் சொல்லும் விஷயம் – ஹாலிவுட்டில் பலரும் தங்களது திரைக்கதையின் முடிவு என்ன என்று யோசிப்பதற்குள்ளாகவே திரைக்கதை எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள் என்பது. இதனால், கதையின் பாதியில், என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல், இழுத்தடிக்கும் படலம் அரங்கேறுகிறது. பல கதாபாத்திரங்கள் திடீரென்று உட்புகுவதற்கும், இறப்பதற்கும், காணாமல் போவதற்குமே இது காரணமாக அமைகிறது. ஒரு நாவலிலோ அல்லது நாடகத்திலோ, முடிவு தெரியாமல் எழுத ஆரம்பித்து, சிறுகச்சிறுக ஏதாவதொரு முடிவை நிர்ணயிக்க முடியும். அனால், திரைக்கதையில் அது நடவாத காரியம் என்கிறார் சிட் ஃபீல்ட். ஏன்? திரைக்கதையில் மொத்தமே 110 அல்லது 120 பக்கங்களே உள்ளன. நாவலைப்போல் அது ஐந்நூறு பக்கங்கள் உடையது அல்ல. ஆகவே, இந்த 110 பக்கங்களுக்குள் ஒரு விறுவிறுப்பான கதையைச் சொல்லவேண்டும் என்றால், முடிவு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பது சிட் ஃபீல்டின் வாதம். முடிவு தெரிந்திருந்தால்தான் கதாபாத்திரங்களை அம்முடிவை நோக்கி நகர்த்த முடியும்.

நல்ல திரைப்படங்கள், எப்போதும் தெளிவாக முடிகின்றன. உதாரணம்: லார்ட் ஆஃப் த ரிங்ஸ். மொத்தப் படமுமே, ஃப்ரோடோ, மோதிரத்தை அழிக்கச்செல்லும் பயணத்தைப் பொறுத்தே அமைகிறது அல்லவா? இறுதியில், மிகச்சரியான தருணத்தில் அவன் அதனை அழித்தும் விடுகிறான். இதைப்போல் பல படங்கள். Finding Nemo இன்னொரு உதாரணம். தன் மகனைத் தேடிச்செல்லும் தந்தை மீன், இறுதியில் மகனுடன் இணைந்ததா? இணைந்தால்தான் கதை முழுமை பெறும். ஆகவே, சந்தோஷமாகத் தனது மகனுடன் இணைகிறார் தந்தை மீனார்.

நல்ல திரைக்கதை முடிவுக்கு சிட் ஃபீல்ட் இங்கே எடுத்துக்கொண்டுள்ள படம், Chinatown. அத்திரைக்கதை, மூன்று முறை முழுதுமாக மாற்றி எழுதப்பட்டது. ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு முடிவு. திரைக்கதையாசிரியர் ராபர்ட் டௌன், முதல் முறை எழுதுகையில், சந்தோஷமான முடிவாக ஒன்றை எழுதியிருந்தார். சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், படத்தின் வில்லன் ஒரு பெரிய அரசியல் புள்ளி. அவர் சாவதுபோல் இருந்தது க்ளைமேக்ஸ். இதன்பின் இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கி ஒப்பந்தம் செய்யப்பட, உடனடியாக அவர் தெரிவித்த பல திருத்தங்களால் ராபர்ட் டௌனுக்கும் பொலான்ஸ்கிக்கும் மிகப்பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பொலான்ஸ்கியின் எண்ணம், வில்லன் இறுதியில் பிழைத்துவிட வேண்டும் என்பதே. இதன்பின் இரண்டாம் முறை மாற்றி எழுதப்பட்ட திரைக்கதையில், வில்லன் தப்பிப்பதுபோல் எழுதப்பட்டது. இதன்பின்னரும் சிற்சில திருத்தங்கள் செய்யப்பட்டபின், மூன்றாவது முறை எழுதப்பட்ட திரைக்கதையே நாம் திரைப்படத்தில் காணும் இறுதி வடிவம்.

திரைக்கதையின் முடிவு தெரிந்திருக்க வேண்டும். ஆனால், பல சமயங்களில், முடிவு தெரிந்திருந்தாலும், திரைக்கதை படு மெதுவாக இருந்துவிடுகிறது. அல்லது, தற்போதைய புதிய திரைக்கதையாசிரியர்கள், திரைக்கதையின் முடிவில் அனைவரும் சாவதே சிறந்த திரைக்கதை என்று எண்ணி, அப்படியே எழுதியும்விடுகிறார்கள் என்று சிட் ஃபீல்ட் குறிப்பிடுகிறார்.

சிட் ஃபீல்ட், ஹாலிவுட்டில் தனது வாழ்க்கையைத் தொடங்குகையில், அவர் செய்த வேலை: மலைமலையாகக் குவிந்திருக்கும் திரைக்கதைகளில், திரைப்படமாக எடுக்கத்தக்க திரைக்கதைகளைத் தரம்பிரிப்பது. இந்த வேலையை அவர் பல வருடங்கள் செய்திருக்கிறார். ஸ்டுடியோவுக்கு தினமும் மூட்டைகளில் வரும் திரைக்கதை பார்சல்கள் இவரது மேஜையில் குவிந்திருக்கும். அவற்றை ஒவ்வொன்றாகப் படிப்பது அவரது வேலை. ஒரு காலகட்டத்தில் கனவுகளில் கூட எழுத்துக்கள் பளிச்சிடும் நிலைக்குத் தள்ளப்பட்ட சிட் ஃபீல்ட், அதிலிருந்து ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்தார். அந்த வழியை உபயோகித்து, அவரால் இன்னும் வேகமாகத் திரைக்கதைகளைப் படிக்க முடிந்தது.

அந்த வழி?

தொடரும் . . .

  Comments

5 Comments

  1. உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

    Hot tamil actresses

    Reply
  2. //முடிவு என்றதும், திரைப்படம் முடியும் கடைசி ஷாட் – அதாவது, கதாபாத்திரங்கள் எல்லாம் சேர்ந்து நின்றுகொண்டு, அசட்டு ஜோக் ஒன்றை யாராவது அடித்ததும் பகபகவென்று செயற்கையாக சத்தம்போட்டு சிரிக்கும் ஷாட் – என்று குதர்க்கமாக நினைத்துக்கொள்ளக் கூடாது//
    அதைத்தானே பாஸ் தலைமுறை தலைமுறையா காட்டுறானுங்க!
    இன்னும் கே.எஸ்.ரவிக்குமார் விடலையே! 🙂

    Reply
  3. @ ஜீ – அதென்னமோ உண்மைதான் 🙂 . . என்னதான் சினிமா மாறுனாலும் இவங்க மாறமாட்டாங்க போலயே 🙂

    Reply
  4. வழக்கம் போல் நன்று. அப்படியே திரைக்கதையை சுவாரசியமாகும் இதர விசயங்களையும் எழுதுங்கள் (எ-கா: sub text )

    Reply

Join the conversation