Amadeus (1984) – English
இது, நான் ஃபெப்ருவரியில் எழுதிய பதிவு. பாகம் ஒன்றான இப்பகுதி, ஒரு மீள்பதிவு. இந்தப் பதிவிலேயே, மோஸார்ட்டின் இசை பற்றியும் அவரது வாழ்வைப் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்கள் பலவற்றை மறுநாள் எழுதப்போவதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் மறந்துவிட்டேன். நண்பர் சுப. தமிழினியன் பல பதிவுகளில் வந்து நினைவூட்டிக்கொண்டே இருந்தார். ஆனால் அவருமே சலித்துப் போய் விட்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.
இதோ. இப்போது, மோஸார்ட்டைப் பற்றிய அந்த விபரங்களை இந்தக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் அளித்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். இரண்டாம் பாகம், புதியது.
பாகம் ஒன்று
வுல்ஃப்கேங் அமடியுஸ் மோட்ஸார்ட்.
உலக அளவில் இன்றும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். 250 வருடங்களாகக் கேட்கப்படும் இசை இவருடைய படைப்பு. இந்த உலகம் கண்ட ஜீனியஸ்களில் ஒருவர். மிகச்சிறிய வயதில் – 35 – இறந்த ஒரு மேதை. தனது ஐந்தாவது வயதில் இருந்து இசையமைக்க ஆரம்பித்தவர். இன்றும் பிரபலமான பல சிம்ஃபனிகளையும் ஓபராக்களையும் எழுதியவர். நமது டைட்டன் விளம்பரத்தில் வரும் இசை கூட இவருடையது தான். அப்படிப்பட்ட ஒரு ஜீனியஸின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு விறுவிறுப்பான படமே இந்த அமெடியுஸ்.
இசைத் துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர் ஸாலியேரி. வியன்னாவின் அரசவை இசையமைப்பாளர். தனது வாழ்வின் கடைசி வருடங்களில் இருப்பவர். ஒருநாள், அவர் தனது கழுத்தை அறுத்துக் கொள்வதிலிருந்து படம் தொடங்குகிறது. மருத்துவமனையில் அவரை ஒரு பாதிரியார் சந்திக்கிறார். கழுத்தை அறுத்துக் கொள்வதற்கு முன், தான் தான் மோஸார்ட்டைக் கொன்றதாக அவர் கூக்குரலிட்டதைப் பற்றி வினவும் பாதிரியார், தன்னிடம் அவரது பாவங்களைச் சொல்லி, பாவமன்னிப்பு வாங்கிக் கொண்டால் கடவுள் அவருக்கு அருள் புரிவார் என்று சொல்கிறார். இதைக் கேட்டு சிரிக்கும் ஸாலியேரி, அவருக்குத் தனது முக்கிய இசைக்கோர்ப்புகளிலிருந்து சில பகுதிகளை வாசித்துக் காட்டுகிறார். எதுவும் பாதிரியாருக்குத் தெரிவதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட இசையைக் கண்டுகொண்டு, அதனுடனே பாடவும் செய்கிறார். அது மோஸார்ட்டின் இசை என்று சொல்லும் ஸாலியேரி, பேச ஆரம்பிக்கிறார்.
ஸாலியேரி இறைவனின் ஆணைப்படி வாழும் ஒரு ஒழுக்கமான பிரஜை. தான் இசையமைப்பாளராக ஆனது கடவுளின் கிருபை என்றும், தனக்குக் கடவுளின் ஆசி எப்பொழுதும் உண்டு என்றும் எண்ணி வாழ்ந்துகொண்டிருப்பவர். அப்போது ஒருநாள், வியன்னாவுக்கு மோஸார்ட் வந்திருப்பதாக ஒரு பரபரப்பு கிளம்புகிறது. மோஸார்ட்டின் இசை, ஒரு புயல் போல ஜெர்மனியைக் கலக்கிக் கொண்டிருந்த ஒரு காலகட்டம். தனக்குப் போட்டியாக வந்துள்ள ஒரு இசையமைப்பாளர், எப்படி இருப்பார் என்று காண ஸாலியேரி செல்கிறார். அங்கு, அனைவரும் குழுமியிருக்க, மோஸார்ட்டைக் காணவில்லை. ஸாலியேரி இனிப்புப் பிரியராக இருப்பதால், உணவு மேஜை அருகில் சென்று இனிப்புகளை உண்டு கொண்டிருக்கையில், அங்கு திடீரென ஒரு பெண்ணைத் துரத்திக்கொண்டு ஒரு இளைஞன் வருகிறான். ஹாலில் இசை தொடங்குகிறது. தான் இல்லாமலேயே தனது இசை தொடங்கிவிட்டது என்று கூறிக்கொண்டே அவன் ஓடுகிறான். அப்பொழுதுதான், ஸாலியேரி, அதுதான் மோஸார்ட் என்று தெரிந்து கொள்கிறார். மோஸார்ட்டின் இசை, அங்குள்ள அனைவரின் இதயங்களிலும் நிரம்புகிறது. அதுவரை அப்படிப்பட்ட இசையை ஒருவரும் கேட்டதில்லை. ஸாலியேரி பிரமித்து நின்றுவிடுகிறார். கடவுளே வந்து வாசிப்பதுபோன்ற ஒரு தெய்வீக இசை அது.
வீட்டுக்குச் செல்லும் ஸாலியேரி, ஏசுவிடம் முறையிடுகிறார். இவ்வளவு காலம் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, கடவுள் அளித்த கொடையான இசையை வாசித்துக் கொண்டு இருக்கும் தனக்குக் கடவுளின் இந்த விசேஷக் கிருபை கிடைக்காமல், பெண்களைத் துரத்திக் கொண்டிருக்கும் ஒரு ஊதாரி இளைஞனுக்கு இந்த அருமையான இசைத் திறமை எப்படி அளிக்கப்பட்டது என்று இறைஞ்சுகிறார்.
மோஸார்ட்டின் இசையில் வியந்த ஜெர்மானிய அரசர் ஜோஸப் II, அவரைச் சந்திக்க விரும்புகிறார். அப்பொழுது, அரசவை இசையமைப்பாளரான ஸாலியேரி, ஒரு இசைக்கோர்வையை எழுதி, மோஸார்ட்டுக்கு வரவேற்பை அளிக்க விரும்பி, மன்னரிடம் செல்கிறார். மன்னரே அந்த இசையை, மோஸார்ட் வரும்போது பியானோவில் வாசிக்கிறார். மோஸார்ட் என்ற அந்த இளைஞன், குறும்புச் சிரிப்போடு அங்கு ஓடி வருகிறான். அவனிடம் மன்னர், ஒரு ஓபெராவை இசையமைக்கச் சொல்கிறார். அப்போது, ஸாலியேரியின் இசையைப் பற்றிச் சொல்லும் மோஸார்ட், அது தனது மூளையில் பதிவாகியிருப்பதாகக் கூறி, அதை வாசித்துக் காட்டி, அதில் ஓரிரு திருத்தங்கள் செய்து இன்னமும் மெருகேற்றி விடுகிறான். இது ஸாலியேரியின் பொறாமைத் தீயைக் கிளறி விடுகிறது.
வியன்னாவில் மோஸார்ட்டின் முதல் ஓபெரா. ‘Abduction from the Seraglio‘. பார்வையாளர்கள் மெய்மறந்து ரசிக்கும்படியான இசை. மன்னர் அசந்துபோய் விடுகிறார். அவரைச் சுற்றியுள்ள இத்தாலியன் இசையமைப்பாளர்களுக்கோ, ஒரு இளைஞன் திடீரென வந்து தங்களது பழமையான சங்கீதத்தை மாற்றி, புதுப்புது இசைக்குறிப்புகளை எழுதி, நிறைய புத்துணர்ச்சியோடு இசைப்பது பிடிக்கவில்லை. மன்னருமே இப்படிப்பட்ட ‘அரைத்த மாவு’ சங்கீதத்திலேயே ஊறித் திளைத்தவராதலால், அவராலும் இந்த இசைப்புயலைத் தாங்க முடிவதில்லை. இருந்தாலும், அவருக்கு மோஸார்ட்டின் இசை, மிகவும் பிடித்து விடுகிறது. எனவே, அவரது இசையில், மனிதக் காதுகளின் கேட்கும் வரம்புக்கும் மீறிய குறிப்புகள் பல இருப்பதாகவும், அவற்றை அகற்றினால் மோஸார்ட் ஒரு மேதையாகலாம் என்றும் சொல்லி விடுகிறார்.
இது மோஸார்ட்டுக்குப் பிடிப்பதில்லை. ஐரோப்பாவிலேயே தனக்கு நிகரான ஒரு இசையமைப்பாளர் இல்லை என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அது உண்மையும் கூட. எனவே, இந்த இத்தாலியர்கள் தனக்கெதிராகப் பறிக்கும் குழியை எண்ணி எண்ணி வெறுப்படைகிறார். தனது இசையை ரசித்த ஸாலியேரி, தன்னுடைய அனுதாபி என்று எண்ணிக்கொண்டு, தனது மனக்குமுறலை ஸாலியேரியிடம் கொட்டுகிறார். ஸாலியேரியும் அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே, இன்னொருபுறம் மன்னரிடம் சென்று மோஸார்ட்டைப் பற்றிக் கோள் மூட்டுகிறார்.
மன்னரின் உறவுக்கார இளவரசிக்கு இசை ஆசிரியரை நியமிக்க, மன்னர் முடிவு செய்கிறார். ஸாலியேரியிடம், மோஸார்ட் தான் இதற்கு சரியான ஆள் என்றும் சொல்கிறார். பொறாமைத்தீயில் வெந்துகொண்டிருக்கும் ஸாலியேரி, மன்னரின் மனதை மாற்றி, அனைத்து இசையமைப்பாளர்களின் இசைக்குறிப்புகளையும் வாங்கி, அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கச் சொல்லிவிடுகிறார். மோஸார்ட்டுக்கு மறுபடியும் கோபம் வருகிறது. தனது குறிப்புகளைத் தரமுடியாது என்று முடிவெடுத்து விடுகிறார். மோஸார்ட்டின் மனைவியான கான்ஸ்டேன்ஸ், மொஸார்ட்டுக்குத் தெரியாமல் ஸாலியேரியிடம் சென்று, மோஸார்ட்டின் இசைக்குறிப்புகளை அவரிடம் அளித்து, மோஸார்ட்டைத் தேர்ந்தெடுக்குமாறு மன்றாடுகிறாள். இந்த வாய்ப்பு கிடைக்காவிடில், வியன்னாவில் தங்கள் குடும்பம் வாழ வழியில்லாமல் போய்விடும் என்று கெஞ்சுகிறாள். இந்த இசைக்குறிப்புகள், மோஸார்ட்டே தன் கைப்பட எழுதியவை. ஒரிஜினல் பிரதிகள். அவற்றைக் கையில் வாங்கிப் பார்க்கும் ஸாலியேரியின் மனதில் அந்த இசை பெருகி வழிகிறது. உணர்ச்சிப் பெருக்கால் அவரது கண்களில் கண்ணீர் ததும்புகிறது. அந்த இசைக்குறிப்புகள் எதிலும் ஒரு சிறிய அடித்தல் திருத்தல் கூட இல்லை. அத்தனையும் மோஸார்ட்டின் மூளையில் உதித்தவை. அவற்றை மோஸார்ட் கடகடவென்று எழுதிச் செல்வதை உணர்கிறார்.
கான்ஸ்டேன்ஸிடம், மோஸார்ட் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால், அன்று இரவு அவள் மட்டும் தனியாக வரவேண்டும் என்று சொல்கிறார். அதிர்ந்து போகும் கான்ஸ்டேன்ஸ், தங்களது குடும்பத்தின் வறுமை காரணமாக, அன்று இரவு தனித்து வருகிறாள். தனது உடைகளை அவிழ்க்கும் அவளது நிர்வாணத்தை, வேலையாள் பார்க்க வைக்கும் ஸாலியேரி, அவளைக் கிளம்பிச் செல்லச் சொல்லிவிடுகிறார். வாய்ப்பும் இன்னொரு இசையமைப்பாளருக்குப் போகிறது. கான்ஸ்டேன்ஸ் மனது வெறுத்துப் போய் விடுகிறாள்.
மோஸார்ட், மதுபானம் அருந்திக்கொண்டும், வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டும் இருப்பதால், அவர்களது குடும்பம் வறுமையில் வாடுகிறது. குடிகாரரான மோஸார்ட்டை, எவரும் தங்களது பிள்ளைகளூக்கு இசை கற்றுக்கொடுக்க அழைப்பதில்லை. ஆனால் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் எழுதிக்குவிக்கும் மோஸார்ட், ஏராளமான தரமான இசைக்குறிப்புகளை உருவாக்குகிறார். மோஸார்ட்டின் தந்தை, இந்தக் காலகட்டத்தில் இறந்து விடுகிறார். தந்தை மீது பேரன்பை வைத்திருக்கும் மோஸார்ட்டுக்கு இது ஒரு அதிர்ச்சி. தந்தையின் நினைவை மறக்க முடியாமல், அவரது நினைவாக ‘Don Giovanni’ என்ற இன்னொரு அற்புத ஓபெராவை எழுதி உருவாக்குகிறார்.
மோஸார்ட்டின் அத்தனை ஓபெராக்களையும், சில நாட்களிலேயே தனது செல்வாக்கை வைத்து இழுத்து மூடி விடுகிறார் ஸாலியேரி. ஆனால், இச்சமயங்களில் கூட மோஸார்ட்டின் கூடவே இருந்து, அவரை ஆதரிப்பது போன்ற ஒரு நடிப்பை நடிக்கிறார். மட்டுமல்லாது, மோஸார்ட்டைக் கொலை செய்யவும் ஒரு திட்டம் தீட்டி விடுகிறார். அத்தனையும், மோஸார்ட்டின் இசை மேதமையைக் குறித்த அவரது போறாமையின் விளைவே. இது எதையும் அறியாத மோஸார்ட், பல இடங்களில் சென்று, பணத்துக்காக இறைஞ்சுகிறார். எந்தப் பலனும் இல்லை.
ஸாலியேரி, மோஸார்ட்டின் தந்தையைக் குறிக்கும் ஒரு மாறுவேடமிட்டு, மோஸார்ட்டிடம் சென்று, ஒரு பெரிய மனிதர் இறந்துவிட்டதாகவும், அவருக்காக ஒரு இரங்கல் இசை (Requiem) எழுத வேண்டும் என்றும் கூறி, பணத்தை அளிக்கிறார். ஆனால், இது மிகவும் சீக்கிரம் நடக்க வேண்டும் என்றும் சொல்கிறார். தனது தந்தையின் ஆவிதான் தன்னிடம் திரும்ப வந்திருப்பதாக எண்ணும் மோஸார்ட்டுக்கு, உடல்நலம் குன்றுகிறது. ஸாலியேரி மீண்டும் மீண்டும் வந்து மோஸார்ட்டைப் பயமுறுத்தத் தொடங்குகிறார். ஒரு சமயத்தில், இரண்டே நாட்களில் இந்த இரங்கல் இசை வேண்டுமென்றும், அதற்காக நூறு வெள்ளிப்பணம் அளிக்கப்படும் என்றும் மோஸார்ட்டுக்குத் தெரியப்படுத்துகிறார்.
பணத்திற்காக மிகவும் ஏங்கும் மோஸார்ட், தான் மிகவும் உடல்நலம் குன்றியிருப்பதால், ஸாலியேரியின் உதவியை நாடுகிறார். மோஸார்ட் படுத்துக்கொண்டே இசைக்குறிப்புகளைச் சொல்ல, ஸாலியேரி அவற்றை எழுதத் தொடங்குகிறார். மோஸார்ட் சொல்லிச் செல்லும் வேகத்துக்கு அவரால் எழுத முடிவதில்லை. இருந்தாலும், அந்த இரங்கல் இசையை ஓரளவுக்கு முடிக்கிறார்கள் இருவரும். அப்போது அங்கு வரும் கான்ஸ்டேன்ஸ், ஸாலியேரியைக் கண்டு அதிர்ந்து அவரை வெளியே போகச் சொல்கிறாள். மறுக்கும் ஸாலியேரியை வெளியே அனுப்பச் சொல்லி மோஸார்ட்டிடம் முறையிடுகிறாள். மோஸார்ட் இறந்து வெகுநேரம் ஆனது, அப்பொழுதுதான் அவளுக்குத் தெரிகிறது. ஸாலியேரியின் திட்டம் பலிக்கிறது.
மோஸார்ட்டின் உடல், அக்காலத்திய வழக்கப்படி, மற்ற பிணங்களோடு சேர்ந்து புதைக்கப்படுகிறது.
இக்கதையைச் சொல்லி முடிக்கும் ஸாலியேரி, ஒரு மனநிலை நோயாளிகளின் கூடத்தில் இருக்கிறார். ஏதேதோ உளறிக்கொண்டே, சக்கர நாற்காலியில் தள்ளிச் செல்லப்படுகிறார். படம் முடிகிறது.
உண்மையைச் சொல்லி விடுகிறேன். சமீப காலத்தில், நான் இந்த அளவு engross ஆகிப் பார்த்த படம் வேறு ஒன்றுமில்லை. இதன் இயக்குநர் மிலோஸ் ஃபோர்மேன். One Flew Over a Cuckoo’s Nest’ படத்திற்காக ஆஸ்கர் வென்ற அதே இயக்குநர். இப்படத்துக்கும் ஆஸ்கர் வென்றார். எட்டு ஆஸ்கர்களை வென்ற இப்படத்தில் நான் கண்ட சிறப்பம்சங்களைப் பற்றி நாளை தனியாக ஒரு பதிவிடுகிறேன். இப்பொழுதே பதிவு வெகு நீஈஈஈஈஈளமாக ஆகிவிட்டது. நாளை வரும் பதிவில், மோஸார்ட்டைப் பற்றிய நிறைய சுவாரஸ்யமான தகவல்களோடு, அவரது இசையைப் பற்றியும் நிறைய தகவல்களைப் பார்க்கப் போகிறோம். இந்தப் படத்தைப் பற்றிய என்னுடைய அலசலையும் நாளை படிக்கலாம். எனவே, நாளை சந்திப்போம்.
Amedeus படத்தின் ட்ரெய்லர் இங்கே.
பாகம் இரண்டு
உலக இசையில், மோஸார்ட்டுக்கு மட்டும் அப்படி என்ன முக்கியத்துவம்? அவர் என்ன பெரிய கொம்பரா? போன்ற கேள்விகள் பல எழுப்பப்பட்டுள்ளன இதுவரையில். இதற்குப் பதில் தேடி நாம் பயணித்தால், பல அட்டகாசமான தகவல்கள் கிடைக்கின்றன. அத்தனையையும் இப்போது பார்ப்போம்.
தனது மிகச்சிறு வயதிலிருந்து இசையமைக்க ஆரம்பித்தவர் மோஸார்ட் என்று சரித்திரம் சொல்கிறது. சரியாகச் சொல்லப்போனால், ஐந்து வயதிலிருந்து. இவரது தந்தை, ஒரு வயலின் கலைஞராக இருந்தவர். ஐரோப்பிய நகரமான சால்ஸ்பெர்க்கின் ஆர்ச்பிஷப்பின் ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் இருந்தவர். தனது மகனான மோஸார்ட்டுக்கு விளையாட்டாக இசை கற்றுக்கொடுக்க ஆரம்பித்த நிகழ்ச்சியிலிருந்து மோஸார்ட்டின் இசைப்பயணம் துவங்கியது எனலாம்.
நான்காவது வயதில் இவ்வாறு பியானோ வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த மோஸார்ட், வெகுவிரைவிலேயே கற்றுக்கொடுக்கப்பட்டதைப் பிழைகளின்றி அப்படியே வாசிக்க ஆரம்பித்தார். அத்தோடுகூடவே, சிறிய இசைக்கோர்ப்புகளையும் சொந்தமாகவே வாசிக்க ஆரம்பித்தார். அவர் தனது ஐந்தாவது வயதில் எழுதிய இசைக்கோர்ப்புகள், இன்றும் காணக்கிடைக்கின்றன.
அன்றிலிருந்து, தனது தந்தையோடு அவர் மேற்கொண்ட உலகப்பயணங்கள் பல. உலகப்பயணங்கள் என்று அதிசயோக்தியாகச் சொன்னாலும், பெரும்பாலும் ஐரோப்பாவுக்குள்ளேயே அமைந்த பயணங்களே அவை. இந்தப் பயணங்களில், பல நாடுகளிலும் தனது திறமையை சிறுவன் மோஸார்ட் காட்ட, தங்களது ஏழ்மை நிலையை இதில் வந்த பணத்தின் மூலம், மோஸார்ட்டின் தந்தையால் சமாளிக்க முடிந்தது.
மோஸார்ட், தனது சிறுவயதில் சந்தித்த ஒரு முக்கியமான இசையமைப்பாளர், ஜொஹான் க்ரிஸ்டியன் பாக்ஹ். இவர், நமக்கெல்லாம் தெரிந்த ஜொஹான் செபாஸ்டியன் பாக்ஹின் மகன். லண்டனில் இருந்த பாக்ஹை சிறுவன் மோஸார்ட் சந்தித்தது, அவனது வாழ்வின் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக அமைந்தது.
தனது பதினைந்தாவது வயதில், ரோம் நகரத்தின் ஸிஸ்டைன் சேப்பலில் (மைக்கலாஞ்சலோ, நான்கு ஆண்டுகள் தொங்கிக்கொண்டே அதன் விதானத்தில் வரைந்த ஓவியங்கள், இன்றும் அப்படியே உள்ளன), வாடிகனின் இசையமைப்பாளராக இருந்த க்ரெகோரியோ அல்லெக்ரியின் ஒரு ஸிம்ஃபனியை ஒருமுறை கேட்க நேர்ந்த மோஸார்ட், அதனை அப்படியே அடித்தல் திருத்தல் இல்லாமல் முழுமையாக எழுதி, அதில் இருந்த சிறிய இசைப் பிழைகளையும் சரி செய்து கொடுத்த சம்பவம் நடந்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள். ஒரு பெரிய ஸிம்ஃபனி. ஒரு சிறுவன் ஒரே முறைதான் அதனைக் கேட்க நேர்கிறது. கேட்ட உடனேயே அதனை கடகடவென்று அவன் எழுதிக்கொடுத்தால், எப்படி இருக்கும்? வாடிகன் நிர்வாகிகள், அரண்டுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.
இதே போன்ற ஒரு விஷயம், படத்திலும் வருகிறது. ஸாலியேரி, மோஸார்ட்டின் இசைக்கோர்ப்புகளைப் படித்துப் பார்க்கும்போது. ஒரு இடத்தில் கூட எங்குமே எந்த விதமான அடித்தல் திருத்தலும் இல்லாமல், மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும் அந்த இசையைப் படிக்கையிலேயே, கண்ணீர் அவரது கண்களிலிருந்து தாரை தாரையாகப் பெருகுகிறது. இசையின் உச்சத்தை அடைந்த ஒரு மனிதனின் பொக்கிஷத்தைக் கண்டேன் என்று ஸாலியேரியின் குரல், பின்னணியில் ஒலிக்கிறது. இசையை உள்ளபடி புரிந்துகொண்ட ஒரு மனிதனின் கதறல் அது.
இவரது கதை, அப்படியே நம்மிடை வாழும் ஒரு இசையமைப்பாளரின் கதையை ஒத்திருப்பதைக் கவனியுங்கள். மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ் என்றே பெயர்பெற்ற அவருக்கு, அந்தப் பெயர் வெறும் குருட்டாம்போக்கில் வைக்கப்படவில்லை என்பது, மோஸார்ட்டின் கதையைப் பார்க்கும்போது தெரிகிறது.
மொஸார்ட்டின் அருமையான, மனதை உருகவைக்கும் இசைக்கு ஒரு உதாரணமாக, இதோ இந்த இசைக்குறிப்பைக் கேட்டுப் பாருங்கள். இடையே வரும் ஒரு ஒலிக்குறிப்பு, எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதா? இது ஒரு மிகப்பிரபலமான இந்திய இசை. 1:50யிலிருந்து 2:20 வரை உன்னிப்பாகக் கேட்கவும்.
இவ்வளவு மேதையாக விளங்கிய மோஸார்ட் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்? ஒல்லியாக, குள்ளமாக, வெளுத்துப்போய், தெருவில் நாம் பார்க்கும் ஒரு சாதாரண ஆளாகத்தான் மோஸார்ட் இருந்திருக்கிறார். அவரது உருவத்தை மட்டும் பார்த்தால், இவர் ஒரு ஜீனியஸ் என்று யாராலும் கணிக்கவே முடியாது என்று இவரது காலத்தில் வாழ்ந்த சிலரது குறிப்புகள் கூறுகின்றன.
மோஸார்ட்டின் இசை எப்படிப்பட்டது? இதற்கு, அவர் வாழ்ந்த காலத்தையும் நாம் சற்றுக் கவனிக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பா. பெருமளவில் பழமையையும் பாரம்பரியத்தையும் கட்டிக்காத்து வந்த ஒரு பூமி. எப்பொழுதும், பழமையை எதிர்க்கும் ஒரு புதிய அலை அவ்வப்போது எழுமல்லவா? அக்காலத்தில் பொதுவாக வழங்கிவந்த இசை முறையானது, பரோக் (Baroque) என்ற வகை. இந்த பரோக்கை எதிர்த்து, கேலண்ட் (Galant) என்ற புதிய அலை மேலெழும்பிய நேரம். மோஸார்ட்டின் இசையோ, பழைய பரோக்கை மீண்டு எடுத்துவந்தது என்று விமர்சகர்கள் சொல்கின்றனர். ஆனால், இந்தப் பழைய இசையையே, மிகப் புதியதாக, தெளிவாக, பல நுணுக்கங்களுடன் மோஸார்ட்டால் வெளிக்கொணரமுடிந்தது.
மோஸார்ட்டின் இசையில் ஓரிரண்டு துணுக்குகளைத்தான் இதுவரை கேட்டிருக்கிறேன். ஆனால், அதிலேயே, சில விஷயங்களை என்னால் அவதானிக்க முடிந்தது. அவை சரியா தப்பா என்று இசை விமர்சகர்கள் தான் சொல்ல வேண்டும். மோஸார்ட்டின் இசையில், ஒரு துள்ளல் இருந்தது. புதுமை என்று சொல்ல, இசையை நன்கு படித்தவனாக நான் இருக்க வேண்டும். ஆனால், இசையைப் பற்றி ஒன்றும் தெரியாதவன் நான். எனவே, இனிமை, சந்தோஷம் ஆகிய உணர்வுகள் எனக்குக் கிடைத்தன என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.
மோஸார்ட் இறந்தது, அவரது முப்பத்தைந்தாம் வயதில். காரணம்? கடும் நோய். காய்ச்சல் என்று மட்டும் பரவலாக சொல்லப்படும் காரணத்தை விட, அவர் சதியால் கொல்லப்பட்டார் என்பதே எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் விஷயம். அது எவ்வளவு உண்மையோ தெரியாது. ஆனால், இந்த விஷயத்தை வைத்துத்தான் அமேடியஸ் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இறக்கும் நேரத்தில், ஒரு ரெகீம் (Requiem) – இரங்கல் இசை அமைக்கும் வேலையில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்ததும் உண்மை. அவரால் முடிக்கமுடியாமலே போன ஒரு அருமையான இசைக்கோர்ப்பு அது.
மோஸார்ட்டின் சில அருமையான இசைக்கோர்ப்புகள் இதோ உங்கள் ரசிப்புக்காக. இரவில் அமைதியாகக் கேட்கவும்.
- Jupiter Symphony
- The Magic Flute
- Piano Sonata in B major part 3 (இதிலேயே இன்னும் மூன்று கோர்ப்புகள் உள்ளன)
- Violin Concerto no.3
- Symphony 25 Mvmt 1 Allegro Con brio (இதில் தான் டைட்டன் இசை வருகிறது)
- Requiem (மோஸார்ட்டின் கடைசிக் குறிப்புகளில் ஒன்று)
- The Marriage of Figaro
கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்.
டிஸ்கி – இந்த விமர்சனத்தில் வரும் மோஸார்ட்டைப் பற்றிய குறிப்பும் ஸாலியேரியைப் பற்றிய குறிப்பும் வேறு தமிழ் இசையமைப்பாளர்களைக் குறிப்பதாக இதைப் படிப்பவர்கள் கருதினால், அதற்கு www.karundhel.com எந்தவிதப் பொறுப்பும் ஏற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வழக்கமா சொல்றதுதான்…
மொசார்ட் பத்தி நானும் ஒரு பதிவு போடலாம்ன்னு இருந்தேன்…உங்க பதிவை படிச்ச பிறகு என் இசை அறிவை வளர்த்து கிட்டு அப்பறம் போடலாம்ன்னு விட்டுவிடும் முடிவுக்கு வந்துட்டேன்…
நண்பர்கள் விவால்டியையும் பாக்கையும் இன்னபிற சிறந்த classical இசையையும் சேர்த்து இங்கிருந்து தரவிறக்கலாம்..நான் இங்கிருந்துதான் சுட்டேன்
http://thepiratebay.org/torrent/3914124/Classical_Music_Top_100
மொசார்டுக்கு….
http://isohunt.com/torrent_details/240510965/Best+Best+2006+Classical?tab=summary
http://www.torrentreactor.net/torrents/19412/VA-The-Best-Of-Mozart-Classical-2005-www-pctrecords-com
மொசார்ட்டை பாராட்டும்போது ஞானியை ஏன் அனாவசியமா மொத்தணும்?????
@கொழந்த – Thanks for the links… 🙂
மொஸார்ட்டும் பீத்தோவனும் எனக்கு ரொம்ப பிடிச்சவங்க, அவங்க இசையை கேட்டாலே மனசு அமைதியாகி மகிழ்ச்சி கிடைக்குது!
நண்பரே,
இவ்வகையான இசைக்கோர்ப்புக்களை ரசிக்கும் பக்குவத்தை இன்னமும் மனம் முழுமையாக அடையவில்லை என்பதுதான் என் கவலை.
வாவ் வெரி சூப்பர் பதிவு
கலக்குங்கள் கண்ணாயிரம் :))
.
நேற்று காலையே பதிவைப் படிச்சாலும், அப்ப மொபைல் வெப்ல இருந்ததால, கமெண்ட் போடல(தமிழ்ல தட்டச்ச முடியாது)… நீங்க சொன்ன மாதிரி இனிமே அவரே எப்ப பப்ளிஷ் பன்றாரோ அப்ப பாத்துக்கலாம், இப்ப விட்ருவோம்னு தான் அமைதியா இருந்தேன்… இதோ இப்ப நீங்களே செய்துட்டீங்க…
//உண்மையைச் சொல்லி விடுகிறேன். சமீப காலத்தில், நான் இந்த அளவு engross ஆகிப் பார்த்த படம் வேறு ஒன்றுமில்லை…//
எனக்கும் இப்படித்தான். மொஸார்ட்டின் இசையே படத்தில் அவர் இசையமைக்கும் போது, பயண்படுத்தப்படுவதும், சின்னச் சின்ன இடங்களிலெல்லாம் பின்னணி இசையாக அவருடைய இசையே வருவதும் நல்லா இருந்தது…
பகிர்வுக்கு நன்றி
இந்த டாய்லட் பேப்பர் ஆப இந்தியா ரகுமானை மொசார்ட் ஆப மெட்ராஸ்-நு சொல்லுவது கேலிக்கூத்து..தயவு செய்து மொஜார்டையோ பீதோவனையோ யாருடனும் ஒப்பிட வேண்டாம்…அது அபத்தம்..மற்றபடி இந்த படம் உள்ளது..இன்னும் பார்க்கவில்லை(வழக்கம் போல..!!!!)நன்றி
நண்பா
அருமையான மீள்பதிவும்,மோசர்ட் பற்றிய மேலதிக தகவல்களையும் பகிர்ந்தீர்கள்,மோசார்ட்,பீத்தோவன்,பாக்ஹ்,விவால்டி இவர்களின் சாயல் இல்லாமல் எந்த உலக இசையமைப்பாளராலும் இசையை வழங்க முடியாது.
===
நான் வாழும் காலத்திலேயே நான் கண்ட மொசார்ட் என்றால் அது இசைஞானி தான்.அதை நான் என் ஐம்பது வயதிலும் மனமாற சொல்வேன்,என் உயிர் போகும் என்றிருந்தால் இசைஞானியின் குரலை ஒலிக்க விட்டு கேட்டே உயிர்பிரிவேன்.
பதிவுக்கு நன்றி!
🙂
மிக நேர்த்தியான,சிறப்பான பதிவு.ஆனால் மேலை நாட்டினருடன் நமது இசைகலைஞர்களை ஒப்பிடுவது சரியானதாக உங்களுக்கே தோன்றவில்லை என்பது பாராட்டுக்குறியது…
////கீதப்ப்ரியன்|Geethappriyan| said…
என் உயிர் போகும் என்றிருந்தால் இசைஞானியின் குரலை ஒலிக்க விட்டு கேட்டே உயிர்பிரிவேன்.////
அதற்கு முன், உங்கள் நண்பர்களுக்கு ஒரு SMS அனுப்ப முடியுமா நண்பரே? உங்கள் கைத்தொலைபேசி அப்பொழுதாவது வேலை செய்கிறதா என்று பரிசோதித்துப் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையுமே தோழர்?!
நீண்ட காலமாக வாசிக்கிறேன் ரொம்ப நல்லா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.
@தமிழனானி
தோழர்,
நான் நம்பரே மாத்தலை,
எனக்கு போன் ரீச் ஆகுமே,இந்தியாலேந்து கால்ஸ் வருது,அமெரிக்க கால்ஸ் ஏன் வர மாட்டேங்கிது?இது பன்னாட்டு சதி.:)
into the wild,motorcycle diaries பட விமர்சனம் போடுங்க பாஸ்……………..