3000 Miles to Graceland (2001) – English

by Karundhel Rajesh January 7, 2010   English films

இம்முறை, நோ சீரியஸ் படம். இன்று நாம் பார்க்கப்போகும் படம், ஒரு பக்கா அதிரடி action படம். கதை, செண்டி என்ற எதுவும் இல்லை இதில். ஜாலியாக ஒரு action படம் பார்க்கவேண்டும் என்றால், இதைப் பார்க்கலாம். எனக்கு மிகப்பிடித்த இருவர் – காஸ்ட்னர் மற்றும் கர்ட் ரஸ்ஸல் இணைந்து மிரட்டிய படம். கதை என்று பார்த்தால், தம்பிடி கூட மிஞ்சாது. ஆனால், வார இறுதியில், ஒரு டமால் டுமீல் படம் பார்த்தால் நன்றாக இருக்குமே என்று உங்களுக்குத் தோன்றும்பட்சத்தில், இதைப் பார்க்கலாம்.

க்ரேஸ்லாண்ட் என்பது, எல்விஸ் ப்ரெஸ்லியின் சமாதி உள்ள இடம். இப்படத்தில் எல்விஸ் ப்ரெஸ்லி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறார். படத்தின் நாயகன் மைக்கேல் (கர்ட் ரஸ்ஸல்). அவன் ஒரு பாலைவனத்தில், அங்குள்ள ஒரு விடுதியில் தங்க வருவதுடன் படம் ஆரம்பிக்கிறது. அந்த விடுதியின் உரிமையாளி தான் சிபில் என்ற பெண் (கோர்ட்னி காக்ஸ்). அவளுக்கு ஒரு மகன் உண்டு. பெயர் ஜெஸ். அவளை மைக்கேலுக்குப் பிடித்துப் போய் விடுகிறது. சிறிது நேரம் கழித்து, ஒரு காரில் வரும் நால்வர், மைக்கேலை அழைத்துச் செல்கின்றனர். அந்த நால்வருமே எல்விஸ் ப்ரெஸ்லியைப் போல் உடையணிந்துகொண்டிருக்கின்றனர். அந்த கும்பலுக்குத் தலைவன், மர்ஃபி என்றவன் (காஸ்ட்னர்). எல்விஸ் ப்ரெஸ்லியைப் பற்றி யார் கிண்டல் செய்தாலும் அவனுக்குக் கோபம் வருகிறது. துப்பாக்கியை எடுத்து மிரட்டுகிறான்.

மறுநாள், இவர்கள் அனைவரும், லாஸ் வேகாஸில் உள்ள ஒரு கேஸினோவுக்குச் செல்கின்றனர். அந்த வாரம், எல்விஸ் ப்ரெஸ்லி வாரமாகக் கொண்டாடப்படுவதால், அனைவரும் எல்விஸைப் போலவே உடையணிந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள், அந்தக் காஸினோவுக்குச் சென்று, அத்தனை பணத்தையும் கொள்ளையடித்து, நேராக மைக்கேல் தங்கியுள்ள விடுதிக்கே வருகின்றனர். மொத்தப்பணத்தையும் பங்குபோடும்போது, கொள்ளையில் ஒருவன் இறந்துவிடுவதால், நான்கு பங்குகளாகப் பிரிக்கிறான் ஹேன்ஸன் என்ற ஒருவன். இறந்தவன் பங்கையும் தாங்கள் நால்வரே பிரித்துக்கொள்ளலாம் என்று சொல்கிறான். ஆனால் மர்ஃபியோ, இறந்தவன் பங்கைப் பிரிக்கவே கூடாது என்று சொல்லிவிடுகிறான். ஆத்திரமடையும் ஹேன்ஸன், மர்ஃபியைத் துப்பாக்கி முனையில் மிரட்டுகிறான். அவன் துப்பாக்கியை இறக்கியவுடன் அவனைச் சுட்டுக்கொல்லும் மர்ஃபி, பணத்தை விடுதியிலேயே ஒளித்து வைத்துவிட்டு, மற்றவர்கள் உதவியோடு அந்தப்பிணத்தை அப்புறப்படுத்துகிறான். பிணத்தைப் புதைக்கையில், மர்ஃபி மைக்கேலையும், எஞ்சி நிற்கும் இன்னொருவனையும் சுட்டு விடுகிறான். அங்கிருந்து விடுதியை நோக்கி வரும் மர்ஃபி, சாலையில் ஒரு ஓநாயின் மேல் காரை ஏற்றி, அதனால் விபத்துக்குள்ளாகி, காரிலேயே மயக்கமடைகிறான்.

புல்லட் ப்ரூஃப் அணிந்திருந்ததனால், சாகாமல் தப்பித்துவிடும் மைக்கேல், விடுதிக்குச் சென்று, பணத்தை எடுத்துக்கொண்டு, தன்னுடன் வரத் தயாராக இருக்கும் சிபிலையும் அவளது மகனையும் அழைத்துக்கொண்டு, தப்பி விடுகிறான். அவனுக்கு, மர்ஃபி பணத்தை மாற்ற ஏற்பாடு செய்திருக்கும் ஒருவனின் முகவரி தெரியும். எனவே, நேராக அங்கு இந்தக் கும்பல் செல்கிறது. பின்னாலேயே, மர்ஃபி வெறித்தனமாக இவர்களைத் துரத்திக்கொண்டு வருகிறான். வழியில், ஒரு ரெஸ்டாரெண்டில் சாப்பிடும்போது, சிபில் நைஸாக நழுவி, பணம் இருக்கும் காரை ஓட்டிக்கொண்டு ஓடிவிடுகிறாள். மண்டை காய்ந்துபோய், தன் காரையும் பணத்தையும் தொலைத்துவிட்டு, கையில் சிபிலின் பையனை வேறு வைத்துக்கொண்டு நிற்கும் மைக்கேலை, பையன் ஜெஸ் சமாதானப்படுத்துகிறான். அவனே ஒரு தேர்ந்த பிக்பாக்கெட்டாக இருப்பதால், அங்குள்ளவர்களின் பணத்தைத் திருடித் தருகிறான்.

சிபில், பணத்தை மாற்றப்போகும் பீட்டர்சன் என்ற நபரை ஃபோனில் அழைத்து, பாஸ்வேர்டை சொல்கிறாள். அதற்குள் அங்கு வந்துவிடும் மர்ஃபி, அவனும் பாஸ்வேர்டை சொல்ல, குழம்பும் பீட்டர்சன், சிபில் தான் முதலில் பாஸ்வேர்டை சொன்னதால், அவளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று சொல்கிறான். அங்கு சற்று நேரம் கழித்து வரும் சிபில், பீட்டர்சனைப்போல் அமர்ந்திருக்கும் மர்ஃபியிடம், பாஸ்வேர்டைச் சொல்லி, பணத்தையும் தருகிறாள்.

பின்னர் அங்கு வரும் மைக்கேல், பீட்டர்சனின் பிணத்தைக் காண்கிறான். சிபிலைக் கடத்திக்கொண்டு போய்விட்ட மர்ஃபியின் மேல், தன்னுடைய காரைத் திருடியதாக மைக்கேல் போலீஸிடம் புகார் தருகிறான். மர்ஃபியைப் பிடித்து சிறையில் தள்ளிவிடுகிறது போலீஸ். ஆனால், மைக்கேல் ஓட்டிவந்த ட்ரக்கும் திருடப்பட்ட ஒன்று என்பதனால், அவனையும் பிடித்து, மர்ஃபியின் செல்லுக்குப் பக்கத்து செல்லில் போலீஸ் அடைத்து விடுகிறது.

சிறையில், திடீரென்று மைக்கேல், ஜாமீனில் எடுக்கப்படுகிறான். எடுத்தது, ஜெஸ். தன்னைப் பார்ட்னராக சேர்த்துக்கொண்டால்தான் அவனை ஜாமீனில் எடுக்க முடியும் என்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, அதன்பின் மைக்கேலை ஜாமீனில் எடுக்கிறான்.

வேளியே வந்து காரின் டிக்கியைத் திறந்தால், உள்ளே இருப்பது சிபில். பணமும். கடுப்பில், சிபிலுக்கு அவள் பங்கைக் கொடுத்து, துரத்திவிடுகிறான் மைக்கேல். மர்ஃபி, தன்னுடைய அடியாள் ஒருவனை, தன்னை ஜாமீனில் எடுக்க ஏற்பாடு செய்கிறான்.

வெளியே வந்து, வழக்கப்படி ஒரு ஆளிடம் லிஃப்ட் கேட்டு, பின்னர் அவனைக் கொன்று விட்டு, காரில் சென்றுகொண்டிருக்கும் மர்ஃபியின் கண்களில் சிபில் தென்படுகிறாள்.

இதன் பின் என்ன நடந்தது? சிபிலும் ஜெஸ்ஸும் என்ன ஆனார்கள்? மர்ஃபிக்குப் பணம் கிடைத்ததா? மைக்கேல் என்ன ஆனான்? இந்த அனைத்துக் கேள்விகளுக்கும், படத்தைப் பாருங்கள்.

இப்படத்தை, மிகவும் தற்செயலாக சில வருடங்களுக்கு முன், ஹெச். பி. ஓ வில் பார்த்தேன். பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. இத்தனைக்கும், படம் ஒரு சாதாரண மசாலாதான். இப்படம் எனக்குப் பிடித்ததன் காரணம், கெவின் காஸ்ட்னர். இத்தனை நாள் ஹீரோவாகவே பார்த்துப் பழக்கப்பட்ட ஒரு ஆள், திடும்மென்று கொடூர வில்லனாக நடித்தால்? மனிதர் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ! எல்விஸைப் பற்றிப் பேசினால், ஒடனே கோபப்படுவதில் தொடங்கி, அலட்சியமாக சுட்டுக்கொல்வது, காமெடியாகப் பேசி, பீட்டர்சனைப்போல் நடித்து, சிபிலைக் கடத்துவது, வழியில் ஒரு இளம்பெண்ணுக்கு காரில் லிஃப்ட் கொடுத்து, அவளிடம் கில்மா செய்வது.. என்று, மொத்தத்தில், பின்னியெடுத்திருக்கிறார். இவருக்காகவே இப்படத்தைப் பார்க்கலாம்.

கர்ட் ரஸ்ஸல், வழக்கமான ஹீரோ.

சிபிலாக வரும் கோர்ட்னி காக்ஸ்.. இவரைப் பற்றிச் சொல்வதை விட, ‘பார்த்துத்’ தெரிந்து கொள்ளுங்கள். ஜாலியான இரண்டு ‘பலான’ காட்சிகள் வேறு உண்டு . . ?

மொத்தத்தில், ஒரு ஃபுல் டைம் மசாலா. ஸ்டைலிஷாக எடுக்கப்பட்டுள்ள படம். அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் படு தோல்வி அடைந்தது. இருந்தாலும், எனக்கும் என் நண்பர்களுக்கும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று (டேய் பாலு . . .எப்படா எங்கிட்டெருந்து சுட்ட இதோட டி..வி.டி ய தர போற.. மவனே இந்தப் பொங்கலுக்கு வருவேன் . . டி. வி. டி வரல, சங்குதாண்டி) . .

இதன் ட்ரைலர் இங்கே.

பி.கு – இப்படத்தின் முடிவில், டைட்டில் போடும்போது வரும் ‘Such a night‘ என்ற எல்விஸின் பாடலைக் காணத் தவறாதீர்கள்.

  Comments

12 Comments

  1. அப்ப படத்த பார்க்கலாம்னு சொல்றீங்க. ரைட்டு.

    Reply
  2. இந்த வீக் எண்ட் இந்த டமால் டுமீல் படத்த பார்க்க வேண்டியதுதான்…
    நல்ல அறிமுகம் …

    Reply
  3. @ பின்னோக்கி – பாருங்க . .ஆனா ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம் . .ஜாலியா பாருங்க . .

    @ சிவன் – இந்த படத்துல ஒரு ட்விஸ்ட்டு கூட உண்டு . .படம் போக போக நமக்கே தெரியும் . .என்ஜாய் . .ஒருவேளை படம் புடிக்கலேன்னா சொல்லுங்க . .உங்களுக்கு புடிச்ச ஒரு படத்தோட விமர்சனம் போட்டுருவோம் . . 🙂

    Reply
  4. இந்த வருஷம் ஆரம்பிச்சதில இருந்து ஒரே கலக்கல இருக்கு கருந்தேள்…. அட்டக்கசமான விமர்சனம் … இருந்தாலும் நானும் HBO வோட தீவிர ரசிகனாக ஒருகாலத்தில இருந்ததால பார்த்தாச்சு…. மறுபடியும் பார்த்திடவேண்டியதுதன்…. :)))))))))))))

    Reply
  5. பல முறை பார்க்க ஆரம்பிச்சும்.. ஒரு ஒட்டுதல் வராமயே… நிறுத்திட்டேன் கருந்தேள்.

    நீங்க ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா எழுதியிருக்கீங்கன்னு நெட்ஃப்ளிக்ஸில் போட்டுட்டேன். 😉

    படம் மட்டும் நல்லாயில்ல…………………………………………. 😉

    Reply
  6. shoot ’em up மாதிரி இருக்குமா?

    Reply
  7. @ mahee – வாங்க . . .நீங்களும் பார்த்தாச்சா . .சூப்பர் . . 🙂 . . H B O வ பாக்குறதே பொளப்புன்னு வாழ்ந்த அந்த நாட்கள மறுபடியும் நெனைவுபடுத்திட்டீங்க . . வாவ் . . 🙂

    @ பாலா – அய்யய்யோ . . நீங்க இப்புடி சொல்லிப்புட்டீங்களே . . .ஒருவேளை உங்களுக்குப் புடிக்கலேன்னா . . . நெனைச்சாலே பயங்கரமா இருக்கே . . .அய்யகோ . .

    @ லக்கி – சொல்லிட்டேங்கள்ள . .இனி கொஞ்ச நாள் ஜாலியான படங்கள பத்தி எழுதிருவோம் . . 🙂

    @ பப்பு – நானு இன்னும் Shoot em up பாக்கலையே . . 🙁 . . ஒரு தடவ ஜாலியா பாக்குற மாதிரி தான் இருந்திச்சு . .

    Reply
  8. நண்பரே,

    சிறப்பான பதிவு, நல்ல ஆக்‌ஷன் படங்கள் என்றால் ஆவலுடன் பார்ப்பேன். கெவின் நல்ல நடிகர். அவரிற்கு இப்போது அதிர்ஷ்டம் விட்டுப்போய்விட்டது போலும். திரும்பி வராமலா போய்விடுவார். க்ளிண்ட் இஸ்வூட் இயக்கத்தில் அவர் நடித்த A Perfect World படம் பார்த்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன்.

    Reply
  9. நண்பா கெவினுக்கு ஹாலிவுட்டில் ஏகப்பட்ட போட்டி,அதையெல்லாம் மீறி இனிமேல்,இவரின் ஸ்விங் வோட் என்னும் படம் பார்த்தென் உருப்படி இல்லை,the guardian, வாடர் வோர்ல்ட் நன்றாய் இருக்கும்.

    Reply
  10. @ காதலரே – நீங்கள் அதிரடிப்படங்களின் காதலர் என்று அறிந்ததில் மகிழ்ச்சி . . 🙂 கெவின் அற்புதமான நடிகர். . திரும்ப வரட்டும். . ஒரு நல்ல படத்தை இயக்கி . . பெர்பெக்ட் வேர்ல்ட் படத்தின் டி வி டி என்னிடம் உண்டு. ஆனால், இன்னும் அதைப் பார்க்க இயலவில்லை . . இன்னும் வேலை வரவில்லை என்று நினைக்கிறேன் . . ஆனால், கட்டாயம் பார்த்து விடுவேன் . . 🙂

    @ கார்த்திகேயன் – ஆமாங்க . .கார்டியன் . . அதே போல், நான் இங்க எழுதிருக்குற, ‘டான்செஸ் வித் வுல்ப்ஸ் ‘ மற்றும் ‘அன்டச்சபிள்ஸ்’ உம் அவரோட டாப் படங்கள் . .நீங்க கண்டிப்பா பார்த்திருப்பீங்க . . 🙂 ஓட்டுக்கு நன்றி நண்பா . .

    Reply

Join the conversation