The Hobbit – An unexpected Journey (3D) – 2012
[quote]’எண்பதுகளின் மத்தியில், அதுவரை மிகப்பிரபலமாக இருந்துவந்த இசைத்தட்டுகளை மீறி, காம்பாக்ட் டிஸ்க்கள் வெளிவர ஆரம்பித்தன. நான் ஒரு பீட்டில்ஸ் விசிறி. அந்தச் சமயத்தில் ஒரு கட்டுரையில், ’பீட்டில்கள் ஒருபோதும் இந்த சிடிக்களில் அவர்களது பாடல்களை வெளியிட மாட்டார்கள் – ஏனெனில் இவற்றில் எல்லாமே தெளிவாக இருப்பதால், அவர்களது அத்தனை இசையமைப்பும் எல்லாருக்கும் தெரிந்துவிடும்’ என்று படித்தேன். இந்த ஹிஸ்டீரியா கொஞ்சகாலம் தொடர்ந்தது. ஆனால் இதற்கெல்லாம் காரணம், மனிதர்களாகிய நாம் மாற விரும்புவதில்லை என்பதே.'[/quote]
சென்ற வாரம் ஹாபிட் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பீட்டர் ஜாக்ஸன் சொன்னதே இது. வழக்கமான 24FPS (Frames per Second) முறையில் அல்லாமல், இந்தப் படம் 48FPS என்ற ரேஷியோவில் எடுக்கப்பட்டிருப்பதைக் குறித்த கேள்வி ஒன்றுக்கு இப்படி பதிலளித்திருந்தார்.
இன்று மதியம் ஹாபிட்டை அதன் ஒரிஜினல் 48FPSல் பார்த்தேன்.
இந்த FPS என்பது என்ன? 24 மற்றும் 48 FPSக்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாடுகள் என்னென்ன?
ஒரு திரைப்படம் என்பது, ஃப்ரேம்கள் எனப்படும் தொடர்ந்த படங்களை வரிசையாக ஓட்டுவதன்மூலம் சாத்தியமாகிறது. ஒரு ஃபில்ம் சுருள் – அதில் படங்கள் வரிசையாக இருக்கும். அந்தப் படங்களை வேகமாக நகர்த்துவதன்மூலமே திரையில் நகரும் உருவங்கள் சாத்தியம். இதுதான் திரைப்படங்களின் அடிப்படை. இப்படி வேகமாக இமேஜஸ் எனப்படும் இந்தப் படங்களை நகர்த்தும் விஷயத்தை Frame Rate என்ற வார்த்தை குறிக்கிறது. ஒவ்வொரு படமும் ஒரு ஃப்ரேம். வழக்கமாக, இந்த ஃப்ரேம் ரேட் என்பது, ஒரு வினாடிக்கு 24 படங்களை வேகமாக நகர்ர்த்துவதாகவே இருக்கும். ஒரு செகண்டுக்கு நமது கண் முன்னர் 24 படங்கள் ஒன்றின்பின் ஒன்றாக சர்ரென்று நகர்த்தப்படும்போது திரையில் தடைபடாத காட்சிகள் தெரிகின்றன. இப்படி ஒரு ஃபில்ம் சுருளின் மொத்த ஃப்ரேம்களும் நகர்த்திமுடிக்கப்படும்போது திரைப்படம் முடிகிறது. ஃப்ரேம்களை நகர்த்த உபயோகப்படும் கருவி? ப்ரொஜெக்டர்.
திரைப்படங்களை எடுக்க ஆரம்பித்த காலத்திலிருந்து முக்காலே மூணுவீசம் படங்களும் 24ஃப்ரேம் ரேட்டில்தான் எடுக்கப்பட்டன. ஒரு நொடியில் 24 ஃப்ரேம்கள் – இமேஜ்களை ஒன்றின்பின் ஒன்றாக ஓடவிடுவது. டைட்டானிக்கும் 24FPSதான். லார்ட் ஆஃப் த ரிங்ஸும் 24 FPSதான். பேஸிக் இன்ஸ்டிங்ட்டும் இதே.
இந்த 24FPS முறையின்மேல் பல இயக்குநர்களுக்கும் குற்றச்சாட்டுகள் இருந்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட ஷாட்டில், காமெராவை வேகமாக நகர்த்தும்போது (Pan), பின்னணி டக்கென்று மங்கலாவது இதில் முக்கியமான ஒன்று. நாமே இதைப் பல படங்களில் கவனித்திருக்கிறோம். சேஸிங் காட்சிகள், சண்டைக்காட்சிகளில் காமெரா ஓரிடத்திலிருந்து டக்கென்று வேறோறிடத்தை நோக்கி திருப்பப்படும்போது அப்படி திருப்பப்படும் காட்சிகள் மங்கலாகவே இருக்கும்.
இப்போது, இப்படி கற்பனை செய்யலாம். வழக்கமான 24 FPSஸுக்கு பதில், அதை அப்படியே இரட்டிப்பாக்கி, ஒரு வினாடியில் 48 இமேஜஸை வரிசையாக ஓடவிடுவது.
இதனால் என்னாகும் என்பது எளிதாகவே புரிகிறதல்லவா? ஒரு வினாடியில் ஓட்டப்படும் படங்கள் இரட்டிப்பாவதால், திரையில் உருவங்கள் மிகத் துல்லியமாகத் தெரிய ஆரம்பிக்கின்றன. அதேபோல், காமெராவை வேகமாக நகர்த்தும்போது அந்தக் காட்சிகள் மங்கலாவது பாதியாகக் குறைகிறது. இன்னொன்று – இமேஜஸ் இரட்டிப்பாவதால் திரையில் சொல்லவந்த காட்சிகள் மிக மிக தெளிவாக படம் பார்க்கும் ஆடியன்ஸின் கண்களில் பதிவாகின்றன.
அப்படியென்றால் எப்போதோ 48FPSஸை ஹாலிவுட் முயன்றுபார்த்திருக்குமே? இதுவரை ஏன் அப்படி செய்யவில்லை?
காரணம், ஒரு திரைப்படத்தை 24FPSஸில் எடுக்கும்போது எவ்வளவு ஃபில்ம் ரோல் செலவாகிறதோ, அதைப்போல் இரண்டு மடங்கு இந்த 48FPSஸுக்கு செலவாகும். கூடவே, 48 இமேஜ்களை ஒரு வினாடியில் வேகமாக ஓடவிடும்போது, திரையில் சில உட்டாலக்கடி வேலைகள் நடைபெறும். என்னவென்றால், கதாபாத்திரங்கள் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்யப்பட்டு வேகமாக நடமாடுவது போன்ற பிரமை உண்டாகும். இதற்குக் காரணம், நமது பிறப்பில் இருந்து நமது மூளை, இந்த 24FPSஸுக்குதான் ப்ரொக்ராம் செய்யப்பட்டிருக்கிறது. நாம் இதுவரை பார்த்த அத்தனை திரைப்படங்களும் 24FPSதான். ஆகவே, இத்தனை வருடங்கள் கழித்து கண்களுக்கு எக்ஸ்ட்ரா வேலை கொடுப்பதால், அதை மூளை புரிந்துகொள்ள கொஞ்சம் அவகாசம் தேவைப்படும். அதேபோல், ஸிஜி காட்சிகளின் துல்லியம் பிசகிவிட்டால், அது எளிதில் பல்லிளித்துவிடும். படம் பார்ப்பவர்கள் ஒரே நொடியில் ‘அட இது மினியேச்சருல்ல.. ‘ என்று எண்ணத் துவங்கிவிடுவார்கள்.
மார்ச் 21:2011 – ஹாபிட் படங்களின் படப்பிடிப்பை பீட்டர் ஜாக்ஸன் துவங்கிய நாள். அன்று 48 FPSஸில் ஒளிப்பதிவைத் துவக்கிய ஜாக்ஸனுக்கு, அந்த நாளில் உலகில் எந்த திரையரங்குமே இந்த 48FPS தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யக்கூடிய ப்ரொஜெக்டரை வைத்திருக்கவில்லை என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனால், துணிந்து இந்த ரிஸ்க்கை எடுத்தார் ஜாக்ஸன். காரணம்- தொழில்நுட்பத்தை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்வதே (சமீபத்தில் ‘விஸ்வரூபம்’ படத்தை DTHல் வெளியிடுவது மற்றும் அதன் பிரத்யேக ஒலியமைப்பு (AURO 3D) குறித்து கமல்ஹாஸன் எடுத்திருக்கும் முடிவுகளும் இப்படிப்பட்டதே. தொழில்நுட்பத்தை அடுத்த லெவலுக்கு நம்மூரில் எடுத்துச் செல்வது).
படம் ஆரம்பித்தவுடன் 48FPSஸின் அருமை நன்றாகவே புரிந்தது. மிகத்துல்லியமான காட்சிகளின்மூலம். ஆனால், ஆரம்பித்த கொஞ்சநேரத்துக்கு, கதாபாத்திரங்கள் மிக வேகமாக செய்கை புரிவதுபோலவே தோன்றிக்கொண்டிருந்தது. ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்யப்படுவதுபோல. என் மூளையில் இது ரிஜிஸ்டர் ஆவதற்கு அரை மணி நேரம் பிடித்தது. அதெபோல், ஆரம்ப காட்சிகளில் மினியேச்சர் வைத்து எடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை சரியாக உபயோகிக்க இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும். அனேகமாக ஹாபிட்டின் இரண்டாம் பாகத்தில் இது சரிசெய்யப்படலாம்.
ஹாபிட் படங்கள் டிஜிட்டல் கேமராவால் எடுக்கப்படுபவை. ஆகவே ஃபில்ம்ரோல் இழப்பு இங்கே இல்லை. டிஜிட்டலில் 48FPSஸில் எடுக்கப்பட்டு, ப்ரொஜெக்டர்களில் அதே 48FPS அளவில் ப்ரொஜெக்ட் செய்யப்படும் இந்தத் தொழில்நுட்பம் உண்மையில் சினிமாவுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்.
இந்த 48FPS பற்றி நீங்களே பரிசோதித்துப் புரிந்துகொள்ள ஒரு லிங்க் இங்கே. இதில் பின்னணி, இரண்டு கால்பந்துகள் ஆகியவற்றை நீங்களே 48FPS செலக்ட் செய்து, அவற்றின் துல்லியத்தைப் பார்த்துக்கொள்ளலாம்.
[divider]
படம் எப்படி?
லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பார்த்துவிட்டு இந்தப்படத்தை அதைப்போலவே எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு – முதலில் ‘The Hobbit’ நாவலைப்பற்றிச் சொன்னால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. ஹாபிட் நாவல், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் காலகட்டத்துக்கு 60 வருடங்கள் முன்னால் நடக்கிறது. எனவே, தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவெனில், LOTRல் நாம் பார்த்த கதாபாத்திரங்கள், ஹாபிட்டில் சற்றே வேறு குணநலன்களுடன் இருப்பதே. உதாரணத்துக்கு, ஸாருமான் – LOTRல் இவர் ஸாரோனின் கைத்தடி. வில்லன்களில் ஒருவர். ஆனால், ஹாபிட்டில் இன்னமும் காண்டால்ஃபின் இனமான இஸ்தாரி மந்திரவாதிகள் ஐவருக்கு உறுதியான, நேர்மையான தலைவராக இருந்துகொண்டிருப்பவர். ஸாரோன் இன்னமும் உரு எடுத்து வரவில்லை. ஆகவே ஸாருமானின் மனமும் இன்னமும் மாறவில்லை.
இதுபோல், காண்டால்ஃப் – LOTR படங்களைவிட அறுபது வயது இளையவர் (???!!) என்பதால், இதில் இன்னமும் தீவிரமான செயல்வேகத்தோடு இவரைப் பார்க்க முடியும். எதிரியின் தலையை காண்டால்ஃப் சீவுவது போல இதில் ஒரு காட்சி வருகிறது.
ஹாபிட் நாவலின் ஆறாவது அத்தியாயமான ‘Out of the frying pan, in to the fire’ என்பதன் முடிவு வரை இந்த முதல்பாகம் எடுக்கப்பட்டிருக்கிறது. நாவலுக்கும் படத்துக்கும் என்னென்ன வித்தியாசங்கள்?
பொதுவாக பீட்டர் ஜாக்ஸனின் ஸ்டைல் LOTRல் என்னவாக இருந்தது என்றால், நாவலின் முக்கியமான கரு – மோதிரத்தை அழிப்பது – என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்கேற்ற வகையில் மூலக்கதையை மாற்றியமைத்து, வரிசையாக சம்பவங்கள் நடப்பதுபோல் திரைக்கதை எழுதியிருப்பார். இதனால், இந்தக் கருவுக்கு சம்மந்தமில்லாத நாவலின் பல கதாபாத்திரங்களும் சம்பவங்களும் ஜாக்ஸனால் வெட்டப்பட்டுவிட்டன. முக்கியமாக, நாவலில் இல்லாத சில விஷயங்களும் அவரால் திரைப்படத்துக்காக எழுதப்பட்டிருந்தன (ஃப்ரோடோவும் ஸாமும் இரண்டாவது பாகத்தில் ஃபாராமிரை சந்திக்கும் பகுதிகள் நாவலில் இல்லை).
இம்முறை உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், ஹாபிட் நாவலை அப்படியே எடுக்க முயன்றிருக்கிறார் என்றே சொல்லலாம். நாவலின் கதை அப்படியே வருகிறது. பல இடங்களில், நாவலில் எழுதப்பட்டுள்ள வசனங்களும் அப்படியப்படியே வருகின்றன. உதாரணத்துக்கு, படத்தின் துவக்கத்தில் காண்டால்ஃபை முதன்முறையாக பில்போ சந்திக்கும் காட்சியில் பில்போ குட்மார்னிங் சொன்னபின் அதை வைத்து காண்டால்ஃப் நகைச்சுவை செய்யும் வசனம். இது ஒரு சிறிய உதாரணம். இப்படி படம் நெடுக நாவலின் வசனங்கள் வருகின்றன. இந்த ஆறாவது அத்தியாயத்தின் பெயர் – ‘Out of the frying pan, in to the fire’ – என்பதே கூட காண்டால்ஃபும் தோரினும் பேசும் ஒரு வசனத்தில் இடம்பெறுகிறது.
ஆனால், ஜாக்ஸனின் ஸ்டைல் – கதையில் ஆங்காங்கே இருக்கும் பகுதிகளைப் போட்டுக் கலப்பது – LOTRல் இரண்டாம் பாகத்தின் இறுதியில் படத்தில் வரும் காட்சிகளெல்லாம் உண்மையில் நாவலின் மூன்றாம்பாக ஆரம்பத்தில் வருவன – அப்படியே ஹாபிட்டிலும் இருக்கிறது. ஆனால், இம்முறை LOTR நாவலின் சில பகுதிகளை எடுத்து ஹாபிட்டில் நுழைத்திருக்கிறார். காண்டால்ஃபின் இஸ்தாரிகளில், மந்திரவாதிகள் மொத்தம் ஐவர். ஸாருமான் மூத்தவர். இதில் ஐந்தாவது மந்திரவாதியின் பெயர்- ரடகாஸ்ட் (Radagast the Brown). இவர் LOTR நாவலில் வருவார். காண்டால்ஃபை ஆர்தாங் வரவைத்து சிறைப்பிடிக்க ஸாருமான் செய்யும் தந்திரத்தில் ஏதுமறியாது மாட்டிக்கொள்வார். அதன்பின் க்வாய்ஹிர் என்ற ராட்சத கழுகை ரடகாஸ்ட் தான் காண்டால்ஃபை காப்பாற்ற அனுப்புவார். இதன்பிறகு அந்நாவல்களில் ரடகாஸ்ட் வருவதில்லை.
இந்த ரடகாஸ்ட், ஹாபிட் நாவலில் வருவதே இல்லை. ஆனால், கதைக்கு சுவாரஸ்யம் அளிப்பதற்காக ஜாக்ஸன் நுழைத்துள்ள கதாபாத்திரங்களில் ரடகாஸ்ட்டும் ஒருவர். ஸாரோனின் ஆவி மிடில் எர்த்துக்குள் மறுபடி நுழையும் காலகட்டமே ஹாபிட் கதை நடக்கும் காலம். அப்போது படத்தில் அதைக் கண்டுபிடித்து கண்டால்ஃபுக்கு சொல்வதாக இவரது கதாபாத்திரம் இருக்கிறது. Necromancer என்ற பெயரில், டால் குல்டூர் (Dol Guldur) கோட்டையில் ஒளிந்திருக்கும் ஸாரோன், ரடகாஸ்ட்டை பயமுறுத்துவதாக படத்தில் வரும். இதே கோட்டையில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் தொடரிலும் மின்புத்தகத்திலும் நாம் விரிவாகப் பார்த்த அங்மாரின் சூனிய மன்னன் (The Witch King of Angmar – ஸாரோனின் பிரதான தளபதி – ஒன்பது இறந்த மன்னர்களான நாஸ்கூல்களின் தலைவன் – பச்சைக் கோட்டையான மினாஸ் மோர்கலில் வசிப்பவன்) ரடகாஸ்ட்டை தாக்க முனைவதாகவும் காட்சி வைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ஹாபிட் நாவலில் பெருமளவு இல்லாத – ஆனால் படத்தில் வரும் இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக, அஸாக் (Azog) என்ற பூதம். நாவலில் மிகக் குறைவாகவே பேசப்படும் இந்தக் கதாபாத்திரம், படத்தின் சுவாரஸ்யத்தை ஏற்றுவதற்காக (பிரதான வில்லனான டிராகன் ஸ்மாக் முதல் பாகத்தில் வருவதில்லை என்பதால்) இப்படத்தில் அஸாக்தான் வில்லன். அஸாக் பற்றித் தெரிந்துகொள்ள இரண்டு பேராக்கள் தாண்டி படிக்கவும்.
நாவலின் ஆறாவது அத்தியாயமான ‘Out of the frying pan, in to the fire’ என்பதில் உண்மையில் தோரின் குழுவினரை ஓநாய்கள் துரத்தும். ஆனால் படத்தில், அவை அஸாக்கின் படைகளாக இருக்கின்றன.
இந்த அஸாக்கைப் பார்ப்பதற்கு முன்னர், படத்தின் நாயகன் தாரின் ஓக்கென்ஃபீல்ட் பற்றியும் லைட்டாக பார்ப்போம் (ஓடாதீர்கள்). அப்படியே படத்தின் கதையையும்.
[divider]
எரெபோர் (Erebor) என்பது, ஹாபிட் கதை நடந்த காலகட்டத்தில் மிடில் எர்த்தின் பிரதான சாம்ராஜ்யங்களில் ஒன்று. இந்த சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவர், த்ரார் (Thrór) என்ற ட்வார்ஃப். இவரது ஆட்சியில் அந்த சாம்ராஜ்யம் புகழ் பெற்று விளங்கியது. மிடில் எர்த்தின் பிரம்மாண்ட தங்கப் பொக்கிஷம் இவருடையது. இவரது மகனின் பெயர் த்ராய்ன் (Thráin). இந்தத் தங்கத்தால் கவரப்பட்ட ஸ்மாக் (Smaug) என்ற ட்ராகன், எரபோரைத் தாக்கி, அனைவரையும் துரத்தியடித்தது. த்ராரும் த்ராய்னும் தப்பித்தனர். இந்த த்ராய்னின் மகனின் பெயர் – தோரின் ஓக்கென்ஷீல்ட் (Thorin Oakenshield). தப்பித்த மன்னர் த்ரார் மோரியா எனப்படும் பாதாள சாம்ராஜ்யத்தைக் கைப்பற்ற நடந்த போரில், அஸாக் என்ற பூதத்தினால் கொல்லப்பட்டு இறக்கிறார். அதன்பின் த்ராய்ன் திடீரென்று காணாமல் போகிறார் (உண்மையில் நாவலின்படி இவர் ஸாரோனால் சிறைபிடிக்கப்பட்டு இறக்கிறார்). இதன்பின் தோரின் கண்டால்ஃபை சந்திக்க, நாரதரான கண்டால்ஃப், இழந்த சாம்ராஜ்யத்தை ட்ராகனைக் கொன்று மீண்டும் கைப்பற்ற ஒரு திட்டம் தீட்டுகிறார். இதன்படி தோரினையும் சேர்த்து மொத்தம் பதிமூன்று ட்வார்ஃப்கள் ஒன்றுசேர்ந்து, ட்ராகனின் பிடியில் உள்ள எரெபோருக்குள் செல்ல பலே திருடன் ஒருவனைப் பிடிக்கிறார்கள். அவன்தான் பில்போ பேகின்ஸ்.
இந்தக் குழுவினருடன் காண்டால்ஃபும் பயணிக்க, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில் நாம் பார்த்த பல லொகேஷன்களின்வழியாக கதை செல்கிறது (குறிப்பாக ரிவெண்டெல் – எல்ஃப்களின் அரசர் எல்ராண்டையும், கலாட்ரியல் சீமாட்டியையும் நினைவிருக்கிறதா?). மோரியா போரில் தனது தாத்தா த்ராரைக் கொன்ற அஸாக்கின் கையை அந்தப் போர்க்களத்திலேயே வெட்டுகிறான் தோரின். இதனால் அஸாக்கும் தோரினும் பரம எதிரிகளாகின்றனர். இவர்களது பயணத்தைக் கண்காணிக்கும் அஸாக், அவ்வப்போது இவர்களைத் தாக்க, காண்டால்ஃபின் உதவியோடு அவனை முறியடிக்கின்றனர் ட்வார்ஃப்கள்.
இந்தப் பயணத்தில்தான் கோல்லுமை பில்போ சந்தித்து, மோதிரத்தைத் திருடுகிறான் (இந்த மோதிரம், அடுத்த பாகத்தில் பயன்படப்போகிறது).
இதுதான் ஹாபிட்டின் முதல்பாகத்தின் கதைச்சுருக்கம்.
இந்தப் படத்தில், லார்ட் ஆஃப் த ரிங்ஸுடன் இப்படத்தை இணைக்கும் சிறுசிறு க்ளூக்கள் படம் நெடுக அமைக்கப்பட்டுள்ளன. அதை நாவல்களையோ அல்லது படங்களையோ மனப்பாடம் செய்திருக்கும் நண்பர்கள் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். புரிந்தபின் சந்தோஷமாகவும் இருக்கும். உதாரணமாக, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தில் அரகார்னுடனும் லெகோலாஸுடனும் நண்பனாக வரும் கதாபாத்திரம், கிம்லி. ட்வார்ஃப்கள் என்ற இனத்தின் பிரதிநிதி. இந்த கிம்லியின் தந்தை பெயர் க்லோய்ன். இந்த க்லோய்ன், தோரினுடன் இருக்கும் பன்னிரண்டு ட்வார்ஃப்களில் ஒருவர்.
லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதை, ஹாபிட் கதையில் துவங்குகிறது. அதாவது, ஹாபிட் நாவலில் நடக்கும் சில சம்பவங்கள்தான் பின்னாட்களில் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதையை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. கோல்லுமிடமிருந்து ஜஸ்ட் லைக் தட் மோதிரத்தை பில்போ திருடுவது அப்படிப்பட்ட சிறிய சம்பவங்களில் ஒன்று. அதேபோல், நெக்ரோமான்ஸர் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் கரும் ஆவிதான் பின்னாட்களில் ஸாரோனாக உருவெடுத்து மிடில் எர்த்தையே அலற வைக்கப்போகிறது. காண்டால்ஃபின் மரியாதைக்குரிய ஸாருமான்(இவர் ஹாபிட்டில் இன்னமும் நல்லவரே)தான் லார்ட் ஆஃப் த ரிங்ஸில் காண்டால்ஃபுக்கு எதிராகத் திரும்பி ஒரு பெரும் படையைத் திரட்டப்போகிறார்.
இத்தகைய சம்பவங்களின் ஆரம்ப நிமிடங்கள் இத்திரைப்படத்தில் நன்றாகவே நமக்குக் காட்டப்படுகின்றன. அவற்றின் செய்தியை எளிதாகப் புரிந்தும் கொள்ளலாம்.
படத்தின் இசை, வழக்கப்படி ஹோவார்ட் ஷோர். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் போலவே, இப்படத்திலும் ஒவ்வொரு பிரதான சம்பவத்துக்கும் ஒரு தனிப்பட்ட இசையை அமைத்திருக்கிறார். கூடவே, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் கதாபாத்திரங்கள் வருகையில், அவர்களுக்குரிய அந்த இசையை அப்படியேவும் அளித்திருக்கிறார். ஹாபிட்கள் வரும் இடத்தில் வரும் அதே தீம் ஒரு உதாரணம். இப்படத்தில் குறிப்பிடத்தகுந்த இன்னொரு விஷயம், ஹாபிட் நாவலில் வரும் சில பாடல்கள் இப்படத்தில் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. தோரின் பாடும் பாடலான ’Far over hte Misty Mountains’ என்ற டால்கீனால் எழுதப்பட்ட பாடல் அட்டகாசமாக இசையமைக்கப்பட்டிருக்கிறது. இப்பாடலின் இசைதான் தோரின் மற்றும் அவனது ட்வார்ஃப் படையினரின் பின்னணி இசை. இப்படத்திலும் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்திற்கு இசையமைத்த அதே டெக்னிக்கை உபயோகித்திருக்கிறார் ஷோர். அதாவது, LOTRல் ஃபெலோஷிப்பைக் காட்டும்போது அதன் தீம் இசை மெலிதாக ஆரம்பிக்கும். கொஞ்சநேரத்தில் ஃபெலோஷிப் தனது பயணத்தைத் துவக்கும்போது முழுவீச்சில் ராஜகம்பீரத்துடன் இந்த இசை ஒலிக்கும். இதேபோல், தோரினின் படையின் தீம் மிக மெலிதாக ஆரம்பித்து, அவர்களின் பயணத்தில் அற்புதமாக ஒலிக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த தீம் இதுதான். அதேபோல் ஒவ்வொரு காட்சிக்கும் பிரத்யேகமான இசையை நல்கியிருக்கிறார் ஷோர். பின்னணி இசையை படம் பார்க்கும்போது தவறவிட்டுவிடவேண்டாம்.
இப்படம் முதலில் இரண்டு பாகங்களாக வரப்போவதைப் பற்றிச் சொல்லியிருந்த ஜாக்ஸன், தற்போது மூன்று பாகங்களாக ரிலீஸ் செய்யப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அது அப்போது எனக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் ஹாபிட் என்பது LOTR போன்ற பெரிய நாவல் அல்ல. மிகச்சிறிய நாவல். ஆகவே அதை எப்படி மூன்று பாகமாகப் பிரிக்கமுடியும் என்று எண்ணிக்கொண்டுதான் இப்படத்துக்குச் சென்றேன். ஆனால், படத்தைப் பார்த்தபின் – எப்படி ஜாக்ஸன் கச்சிதமாக இப்படத்தை நாவலிலிருந்து எடுத்திருக்கிறார் என்பது புரிந்தபின் – எனக்கு அந்த சந்தேகம் போய்விட்டது. கட்டாயம் மூன்று பாகங்களும் அற்புதமாக இருக்கப்போகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக மூன்றாவது பாகம், LOTRன் மூன்றாவது பாகமான ரிடர்ன் ஆஃப் த கிங் நாவலின் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ள அப்பெண்டிக்ஸ்களிலிருந்து பல தகவல்களை வைத்து எப்படி ஹாபிட் LOTRருடன் இணைகிறது என்பது பற்றித்தான் இருக்கும் என்று ஜாக்ஸன் சொல்லியுள்ளதால், மூன்றாவது பாகத்தை எதிர்பார்க்கிறேன்.
இன்னமும் எக்கச்சக்கமான விஷயங்கள் இப்படத்தைப் பற்றி எழுத இருக்கின்றன. இன்னொரு முறை ஐமேக்ஸில் இப்படத்தைப் பார்த்துவிட்டு, எழுத முயல்கிறேன்.
முடிவாக . . .
லார்ட் ஆஃப் த ரிங்ஸ் போல ஹாபிட் ஒரு எமோஷனல் கதை அல்ல. இது ஒரு சந்தோஷமான, ஜாலியான படம். ஆகவே, லார்ட் ஆஃப் த ரிங்ஸில் இருந்த அருமையான ஒரு அனுபவம் இப்படத்தில் கிடைக்காது. இது குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு இனிமையான படத்தைக் காணப்போவதாக எண்ணிக்கொண்டு இப்படத்துக்குச் செல்லலாம்.
படத்தின் ட்ரெய்லர் இதோ. கட்டுரையைப் படித்துவிட்டு ட்ரைலரைப் பாருங்கள். நமது அன்பிற்குகந்த மனிதர்களை ஒருமுறை பார்ப்பதுபோல இருக்கும்.
பி.கு
1. இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களின் பின்னணி அறிய – War of the Ring இலவச மின்புத்தகத்தை இங்கே க்ளிக்கி டௌன்லோட் செய்யலாம். இந்தப் புத்தகத்தியேயே ஹாபிட் படத்தை ஜாக்ஸன் எடுக்க முனைந்த வரலாறு இருக்கிறது. ஆகவே அதை இங்கே எழுதவில்லை.
2. படத்தின் behind the scenes – இதோ இங்கே முழுதாக ஒருமணிநேரத்துக்கும் மேல் ஜாக்ஸனே ரிலீஸ் செய்தது இருக்கிறது. பார்த்து மகிழுங்கள்.
சான்சே இல்ல ராஜேஷ்.. போஸ்ட் முழுசா படிக்க படிக்க படு ஆர்வமா இருக்கு படம் பாக்கணும் ன்னு… ஆனாலும் LOTR மறுபடியும் ஒருக்கா பாத்துட்டு தான் பாக்கணும் ன்னு ஒரு முடிவு ல இருக்கேன்… ஸோ இந்தா வாரத்துக்குல பாத்துருவேன்… நான் 3D with 48fps ல பாக்கலாம் ன்னு இருக்கேன்.. நீங்க 3D ல பாத்திங்களா??? 3D எப்புடி இருக்கு….
முரளி – நான் 3டி & 48FPS லதான் பார்த்தேன். அட்டகாசம். மறுபடியும் ஐமேக்ஸ்ல பார்ப்பேன்
ட்ரேயிலர் லையே இந்த பாட்டு வருது… செம யா இருக்கு…
நான் உங்களிடமிருந்து இன்னொரு தொடரை எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் சொன்னது போல் உங்கள் ஈ-போக்கிலேயே விவரங்கள் நிறையா இருப்பதனால் பிரச்சினையில்லை.. ஊருக்கு வரும்போது பார்க்க முயல்கிறேன். முடிந்தால் 3 -d யில்..
Rajesh
I have seen all your posts on LOTR. I also had the same fear with the Hobbit being made into 3 movies. Looks like the movie is god. I read the CNN reivew and specifically on the 48 FPS . The review was negative. I was wondering whether i should see the movie at all . I have been a tolkien fanatic for the last 15 years ad have read the books many times.
I really admire the depth of knowledge you have on the book . Every tikme i read your article on LOTR, I end up reading the book again . Keep writing. My only complaint is that you dont write enough, specificlally in the last 2 months
Regards
Sathish
Dear Sathish..
Thank you for the supportive comment. I have read LOTR and the Hobbit – yes. But, whenever I feel like I want to see those characters, I had always preferred seeing the LOTR movies. Somewhow, that works for me. But at the same time, I don’t get much time to read the books again. Genius work indeed. Tolkien rocks.
I had started writing again, and hopefully this time will try to post more 🙂 . Thank you
ஒவ்வொரு முறையும் கடுமையாய் உழைக்கிறீர்கள்…உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இக்கட்டுரையில் நீங்கள் குறிப்பிடும் கதாபாத்திர மற்றும் கதை போன்றவற்றிலிருந்து ஏதும் கேள்வி எழுப்பும் அளவுக்கு எனக்கெல்லாம் ஏதும் தெரியாது..ஆணால் உங்களது உழைப்பும் ஆர்வமும் என்னையும் தூண்டுகிறது..ஆச்சரியமூட்டுகிறது வாழ்த்துக்கள் ”பிரா”பல பதிவரே
நமக்குப் புடிச்ச விஷயத்துல எத்தன உழைச்சாலும் ஜாலியாதான் இருக்கும் பூர்ணா :-).. இந்த கதாபாத்திர மேட்டர்லாம் நாவலை படிச்ச யாரா இருந்தாலும் சொல்லிடுவாங்க. மிக்க நன்றி 🙂
அட்டகாசம் போங்க…
வழக்கம் போல டவுன்லோட் செஞ்சு பாக்கும் போது, இந்த 48fps மேட்டர் எப்படித்தெரியும்னு ஆவலா இருக்கு.
அடப்பாவி. ஏன் இந்த கொலைவெறி 🙂
ராஜேஷ் நீங்கள் கூறுகிற போன்று தான் அந்த பிரேம் தொழில்நுட்பத்தால் காட்சி பட வேகம் சற்று அதிகமாகவே உள்ளது எகா :அந்த பாதாள லோகத்தில் எதிரிகளால் கான்டல்ஃம் அவரது நன்பர்களும் துரத்தப்படும் போது ஒரு பள்ளத்தில் நன்றாகவே தெரிகிறது எனினும் புதிய முயற்ச்சிக்கு என் வரவேற்ப்புகள்ம இயல்பு முந்தை படத்தை விட சற்று மாறுபட்டிருக்கிற ஜாக்சனும் மற்றவர்கள் போன்று மாறி விட்டாரோ என்று தோன்றுகிறது .பின்னனி இசை பிரமாதம்!!!
நீங்க சொல்ற மாதிரி சில இடங்களில் மினியேச்சர் தெரியுதுதான். ஆனா இதானே முதல் அட்டெம்ப்ட் என்பதால் மன்னிப்போம் :-).. ரெண்டாவது & மூணாவது பாகங்கள் அசத்தப்போகுதுன்னு நினைக்கிறேன்
sterday I watch Movie in 3D (@ Fun cinemas, Coimbatore) it is gud, but your review s as usual awesome than movie…
i’ll watch it in Tamil again (I cant understand sum dialogues 🙁 -)
Sure Boss. Try watching in Tamil and tell me how did you feel. If you want, please try reading the novel too. That will help you
Dear scorp,
Do you know any nice websites to download movie soundtracks/ theme songs?
Dear Lithu,
I have taken a resolution this new year not to download anything :-).. So couldn’t help you. Sorry though
தல , எனக்கு ஒரு டவுட் … 48 frame ps என்றால் கதாபத்திரங்கள் மெதுவாக செய்கை புரிவது போல் தானே தெரிந்திருக்க வேண்டும் எனக்கு குழப்புகிறதே .
சார்லி சாப்ளின் படங்கள் 12 அல்லது 16 fps எடுக்கப்பட்டதால் வேகமாக செய்கை புரிவதாக தோன்றுகிறது என கேள்வி பட்டேன். அப்ப 48 என்றால் மெதுவாக தானே தெரிய வேண்டும். கொஞ்சம் விளக்குங்கள்
இது ஒரு செம்ம கேள்வி. அட்டகாசம். உண்மைல நானும் அப்படிதான் நினைச்சிக்கினு இருந்தேன் (கொஞ்ச நாளு முன்னால வரை). அப்பால கொஞ்சம் பீராய்ஞ்சதுல எனக்கு விடை கிடைச்சது. இதோ:
ஒரு ஃப்ரேம்ரேட்ல எடுத்த ஃபூட்டேஜை அதைவிட கம்மியான இன்னொரு ஃப்ரேம்ரேட்ல கன்வெர்ட் பண்ணும்போதுதான் ஸ்லோமோஷன் நடக்குது. உதாரணம்: இப்போ ஹாபிட் 48fps. அதை 24fpsல ப்ரொஜெக்ட் பண்ணும்போது அது ஸ்லோவா தெரியும். காரணம், 48fpsல எடுத்ததை 24fpsல போடும்போது, எத்தனை மணிநேரம் ஃபூட்டேஜ் இருந்ததோ அது அப்படியே டபிளாகுது. ரெண்டு செகண்டு வீடியோ நாலு செகண்ட் ஆகும். அதுனால, இப்போ ஹாபிட்டை 24fpsல போடும்போது அது நார்மலா இருக்கும். (காரணம் 48fps கொஞ்சம் ஃபாஸ்ட்டா இருக்கு).
ஹாபிட்டை ஆல்ரெடி 48fps காமெராலதான் எடுத்திருக்காங்க. அதை 48fps ப்ரோஜெக்டர்ல தான் போடுறாங்க. அதுனால அதுல இயல்புப்படி ஒரு செகண்டுக்கு 24 இல்லாம 48 ஃப்ரேம்ஸ் இருப்பதால் – இதுவரை நாம் பார்த்ததைவிட டபிள் ஃப்ரேம் ரேட் – ஆரம்பத்துல நம்ம மூளை அட்ஜஸ்ட் ஆக கொஞ்சம் டைம் தேவைப்படும். அதுதான் இந்த ஃபாஸ்ட் பார்வேர்டுக்கு காரணம்.
இப்போ சாப்ளின் படங்கள் எல்லாம் எடுக்கப்பட்டது அல்ரெடி கம்மி ஃப்ரேம்ரேட்ல. ஆனா அதை இப்போ பார்க்கும்போது அது ப்ரொஜெக்ட் செய்யப்படுவது 24fps தான் என்பதால், கம்மி –> அதிகம் என்ற விகிதத்துல, அது ஃபாஸ்ட்டா இருக்கும். ஆனா சாப்ளின் வீடியோவை ஹாபிட் மாதிரி எடுத்து 24fpsல பார்த்தா அது ஸ்லோவா இருக்கும்.
இன்னொண்ணு – மேலே என் கமெண்ட் பார்த்தா, 24fpsல ஹாபிட் மொத்தம் நாலு மணி நேரம் ஓடும்னு நான் எழுதிருக்குற மாதிரி இருக்கு. ஆனா, அதை கன்வெர்ட் பண்ணும்போதே அந்த டிலேயை சர்வீஸ் பண்ணிட்டாங்க. அதுனால நார்மல் ட்யூரேஷன்லதான் படம் ஓடும்.
ராஜேஷ். அற்புதமான விமர்சனம். தங்களின் உழைப்புக்கு நன்றி. ப்ரேம் ரேட் தொடர்பாக எனக்கும் இதே சந்தேகம் இருந்தது. இப்போது தெளிவு கிடைத்தது. நன்றி. கண்டிப்பா படத்தை 48 ப்ரேம்ஸ் ஓட்டும் தியேட்டரில் பாக்கனும்.
I didnt see lord of the rings yet.but interested to see it. if had mad a review in tamil about the film means pls give link.
I have written a series of articles about LOTR and have published a free ebook also siva. Here is the link for everything – http://karundhel.com/category/war-of-the-ring-2/page/3. You can read all articles and can download the ebook too. Let me know your views. Thanks.
நான் இன்னும் LOTR பார்க்கவில்லை. செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ நினைவுக்கு வந்தது.
ஜாலியா பார்க்கலாம் அருண். முடிஞ்சா பார்க்கவும். நல்லா இருக்கும் பாஸ்
padam pathen nanba, kandipa hobbit lotr la irundhu different than. peter jackson noveluku full justice koduka ninaikirar, lotr la journeya neraya maathi irupar…..first 1 hour kalichu padam nalla speed a poguthu, aana naama innum 2 varusham wait pannanum indha series mudika….waiting….
Yea true. WE need to wait for 2 long years. That’s the disappointment.
sir maduraila release aagala then tamila release aaguma
Fantastic Rajesh, i have been reading all your posts great work , btw i saw this movie in Sathyam cinemas in chennai, i felt that the sound was not adequate, i even felt the same while watching Avengers. Where did u saw this movie US ?