Godzilla (2014): 3D – English

by Karundhel Rajesh May 17, 2014   English films

இன்றைய தேதி வரை 28 திரைப்படங்கள். ஹாலிவுட்டில் இரண்டாவது அட்டெம்ப்ட். ஜப்பானின் கலாச்சர சின்னங்களில் ஒன்று. உலகின் ஃபேவரைட் மான்ஸ்டர். கொஜிரா என்றால் ராட்சத கொரில்லாத் திமிங்கிலம் என்று அர்த்தப்படும் இந்த ஜந்து இந்தமுறை எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது?

1998ல் வந்த ‘Godzilla’ திரைப்படத்தை CITயில் படித்துக்கொண்டிருந்தபோது கோவையின் செண்ட்ரலில் பார்த்தேன். அந்தச் சமயத்தில்தான் ஜுராஸிக் பார்க்கில் தொடங்கி, டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மெண்ட் டே, ஜுராஸிக் பார்க்: லாஸ்ட் வேர்ல்ட், கிங் காங் லிவ்ஸ் (ஆமாம். இப்படிக்கூட ஒரு படம் வந்தது), அனகோண்டா போன்ற மான்ஸ்டர் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. இதில் காட்ஸில்லா வெளியானபோது ’Size Does matter’ என்று ஒரு டேக்லைன் வேறு போட்டுப் பரபரப்பை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். ஆனந்த விகடனில் அப்போது ‘காட்ஸில்லா’ இயக்குநர் ரோலாண்ட் எம்மரிஷ்ஷின் பேட்டி வந்திருந்தது. ரோலாண்ட் எம்மரிஷ் காட்ஸில்லாவைப் ப்ரமோட் செய்ய சிங்கப்பூர் வந்திருந்தபோது மதன் அவரைச் சந்தித்து ஒரு விரிவான பேட்டியை எடுத்திருந்தார். அதில் காட்ஸில்லாவின் சைஸைப் பற்றி எக்கச்சக்கமான பில்டப்பைக் கொடுத்திருந்தார் எம்மரிஷ். அந்தப் பேட்டியில் ஜுராஸிக் பார்க்கின் டி ரெக்ஸைப் பற்றிச் சொல்லியிருந்த எம்மரிஷ், காட்ஸில்லாவின்முன் டி ரெக்ஸெல்லாம் ஜுஜுபி என்று பயங்கர நம்பிக்கையோடு சொல்லியிருப்பார். வெள்ளை மாளிகையை காட்ஸில்லா தகர்க்கப்போவதைப் பற்றியும், டிஸாஸ்டர் படங்களைப் பற்றியும் எம்மரிஷ் மதனுக்குக் கொடுத்திருந்த விபரமான அந்தப் பேட்டியைப் படித்துவிட்டு அட்ரினலின் வேறு எக்கச்சக்கமாக ஏறியதால் அந்தப் படத்தை உடனடியாகப் பார்த்தேன். எனக்கு அந்தப் படம் மிகவும் பிடித்தது (அப்போதெல்லாம் ப்லாக் இல்லை என்பதால் உடனுக்குடன் விமர்சனம் எழுத வாய்ப்பு இல்லை).

இப்போதும் அவ்வப்போது HBOவில் அந்தப் படம் வருகையில் அதன் பல காட்சிகள் இப்போது காமெடி ஆகிவிட்டாலும், ஒருசில காட்சிகளை பார்ப்பது வழக்கம். அதில் காட்ஸில்லாவின் அறிமுகம் நன்றாகக் காட்டப்பட்டிருக்கும். அதேசமயம் அந்தப் படத்துக்கும் ஜுராஸிக் பார்க் முதலிரண்டு பாகங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன.

அதன்பின் சென்ற வருடம் காட்ஸில்லாவை மறுபடி எடுக்கப்போவதாக வார்னர் ப்ரதர்ஸின் செய்தியைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், அட்டகாசமான ஸிஜியில் நல்ல அனுபவம் கிடைக்கப்போகிறது என்பதுதான். கூடவே Pacific Rim வேறு பிரமாதப்படுத்தியதால் காட்ஸில்லாவுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமும் கிடைத்தது.

இந்த அடிப்படையில், காட்ஸில்லா 2014 எப்படி?

படத்தில் Breaking Bad ப்ரையன் க்ரான்ஸ்டன் இருக்கிறார். எனக்கு அந்த சீரீஸ் பிடிக்காது. (சாதாரண சீரீஸை ஹைப் ஏற்றிவிட்டுவிட்டனர் என்பது என் கருத்து. அதன் நான்கு சீஸன்கள் பார்த்திருக்கிறேன்). படத்தின் டைட்டில்கள் பிரமாதமாக டிஸைன் செய்யப்பட்டிருக்கின்றன. அதில் காட்ஸில்லாவின் முன்கதை வருகிறது. அதன்பின் படத்தில் வரும் நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பமாக ஒரு மிகப்பெரிய எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்படுகிறது. அங்கே இரண்டு கக்கூன்கள் இருக்கின்றன. அதில் ஒன்று உடைந்திருக்கிறது. இதைப் பார்ப்பவர் டாக்டர் இஷிரோ ஸெரிஸாவா (கென் வாடானபே). அவர் டோக்யோவின் ஒரு அணு மின் நிலையத்தில் விஞ்ஞானி. அங்கேதான் ஜோ ப்ராடி என்பவர் (ப்ரையன் க்ரான்ஸ்டன்) மனைவியுடன் வேலை செய்கிறார். அங்கே பூகம்பம் என்று நம்பப்படும் ஒரு விபத்தால் அணுக்கசிவு நிகழ்கிறது என்று நம்பி, மொத்த அணுமின் நிலையத்தையும் மூடுகின்றனர். அந்த விபத்தில் அவரது மனைவியை இழக்கிறார் ஜோ. அந்த ஒட்டுமொத்தப் பகுதியுமே மக்கள் தொடர்பிலிருந்து துண்டிக்கப்படுகிறது.

பதினைந்து வருடங்கள் கழித்து, அந்தப் பகுதிக்குள் அத்துமீறி நுழைகிறார் ஜோ. ஏற்கெனவே நிகழ்ந்த பூகம்பத்துக்குக் காரணம் என்ன என்று அவருக்கு லேசாகத் தெரிந்திருக்கிறது. மிகமிகப் பழையகாலத்தில் பூமியில் வாழ்ந்த சில ராட்சத ஜந்துக்கள், அப்போது பூமி இப்போதிருப்பதை விடப் பத்து மடங்கு அணுக்கதிர்வீச்சோடு இருந்ததால் அந்தக் கதிர்களையே உறிஞ்சிக்கொண்டு வாழும் தன்மை பெற்றிருந்தன. ஆனால் சிறுகச்சிறுக பூமியின் தன்மை மாறியதால் உயிர்வாழமுடியாத அந்த ஜந்து மெல்ல மெல்ல பூமியின் ஆழத்துக்குச் சென்று அங்கே கிடைக்கும் அணுக்கதிர் வீச்சை உணவாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தது. அதன்பின் தானாக ஆழ்னஹ்ட உறக்கத்துக்குச் செல்கிறது. பல கோடி ஆண்டுகளாக அதே நிலையில் இருக்கும் இந்த ஜந்து, பூமியில் மறுபடி அணுக்கதிர்கள் அணுமின் நிலையங்களின் வாயிலாகப் பரவ ஆரம்பிக்கும் இந்தக் காலகட்டத்தில் மெல்ல விழிக்கிறது. இந்த ஜந்துவின் அசைவால்தான் பூகம்பம் போன்ற எதுவோ நேர்ந்திருக்கிறது என்று தெரிந்துகொள்கிறோம். அப்போது அந்த ஜந்து சில சமிஞ்ஞைகளை வெளிப்படுத்துகிறது. இவற்றைத்தான் கச்சிதமாகக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார் ஜோ.

அத்துமீறி அந்தப் பிராந்தியத்துக்குள் நுழையும் ஜோ, அங்கே ஒரு மிகப்பெரிய விஞ்ஞானக் கூடம் செயல்படுவதை அறிகிறார். அதன் நடுவே இருப்பது – முதல் காட்சியில் வந்த கக்கூன்களில் ஒன்று. திடீரென்று அது வெடித்து, அதில் இருக்கும் ராட்சத ஜந்து பறந்துசெல்கிறது. இந்தக் களேபரத்தில் இறக்கிறார் ஜோ. அவரது மகன் ஃபோர்ட், விஞ்ஞானி இஷிரோ ஸெரிஸாவாவால் அழைத்துச்செல்லப்பட்டு இத்தனை கதையையும் தெரிந்துகொள்கிறான். அப்போது இன்னொரு ஜந்துவைப் பற்றியும் ஸெரிஸாவா சொல்கிறார். அதன் பெயர் கோஜிரா என்றும், ஐம்பதுகளில் அமெரிக்காவின் பிகினி தீவுகளில் நடத்தப்பட்ட அணு ஆயுதப் பரிசோதனைகள் எல்லாமே இந்த ஜந்துவைக் கொல்வதற்கான முயற்சிகள்தான் என்று சொல்கிறார். எதுவாவது அத்துமீறினால் இயற்கை அவற்றை சமன்படுத்த இன்னொன்றை உருவாக்கும் என்று சொல்லும் ஸெரிஸாவா, அந்த இன்னொன்றுதான் கோஜிரா என்றும், தப்பித்துச் சென்ற ராட்சத ஜந்துவை கோஜிராதான் கொல்லமுடியும் என்றும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

தப்பித்துச் சென்ற ஜந்து வெளிப்படுத்திய சமிஞ்ஞைகள், ஆரம்பத்தில் பார்த்த அந்த இன்னொரு கக்கூனுக்குதான் என்று இறந்துபோன ஜோவின் குறிப்புகளிலிருந்து தெரிகிறது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தக் கக்கூன் இருக்கும் இடத்துக்குச் சென்று பார்த்தால் சுவற்றில் பெரிய ஓட்டைதான் இருக்கிறது. அந்தக் கக்கூனும் வெடித்து, அதிலிருக்கும் ஜந்து அந்த இன்னொரு ஜந்தைத் தேடிச் சென்றுவிட்டது.

இதே சமயத்தில் கடலில் கொந்தளிப்பு ஏற்படுகிறது. காட்ஸில்லா வெளிப்படுகிறது. நேராக முதல் ஜந்து இருக்கும் இடத்துக்குச் சென்று அதனுடன் சண்டையில் ஈடுபட்டு அந்த ஜந்தைத் துரத்திவிடுகிறது. அதன்பின் காட்ஸில்லா கடலில் தனது ராட்சத செதில்கள் தெரிய நீந்தி எங்கோ செல்கிறது. அது அந்த ஜந்தைத்தான் தேடுகிறது என்று ’புரிவதால்’ (??!!) அமெரிக்க அரசு தனது இரண்டு போர்க்கப்பல்களை காட்ஸில்லாவின் இருபுறமும் செல்லுமாறு அனுப்புகிறது. அரசு மரியாதையோடு காட்ஸில்லா தனது வேட்டையை ஆரம்பிக்கிறது.

தப்பிச்சென்ற இரண்டு ஜந்துக்கள் ஒன்றுசேர்கின்றன. ஏன்? ஏனென்றால் அவற்றில் ஒன்று ஆண். மற்றொன்று பெண். இரண்டும் சேர்ந்தால்தான் பல குட்டிகளைப் போட்டு உலகை டார்ச்சர் செய்யமுடியும். இதனை அழிக்க இன்னொருபுறம் காட்ஸில்லா வேகமாக நீந்தி வந்துகொண்டிருக்கிறது. மூன்று ஜந்துக்களும் ஒரு இடத்தில் சந்திக்கின்றன. இதன்பின் என்ன ஆயிற்று என்பதே மீதிப்படம்.

சென்ற ஆண்டு வெளியான பஸிஃபிக் ரிம் படம் உங்களுக்குப் பிடிக்குமா? அப்படியென்றால் அதைப்போலவே எடுக்கப்பட்டிருக்கும் காட்ஸில்லா உங்களுக்குப் பிடிப்பது சந்தேகம்தான். பஸிஃபிக் ரிம்மில் இருந்த கியர்மோ டெல் டோரோவின் க்ரியேட்டிவிடி இந்தப் படத்தில் மிஸ்ஸிங். கூடவே, ராட்சத ஜந்துக்களை வைத்து எத்தனையோ முறை எடுக்கப்பட்டிருக்கும் அதே கதை. என்ன நடக்கப்போகிறது என்பது ஆரம்பத்திலேயே நமக்குப் புரிந்துவிடுகிறது என்பதால் அந்த வகையிலும் சுவாரஸ்யம் குறைவு. இப்படிப்பட்ட ராட்சத ஜந்துக்களை வைத்து டிஸாஸ்டர் படங்களை எடுக்கச் சில விதிகள் இருக்கின்றன. நாம் நமது ‘Fade In முதல் Fade Out வரை’ திரைக்கதைத் தொடரில் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் ப்ளேக் ஸ்னைடர் இதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அவரது சுருக்கமான கருத்து இதோ:

ராட்சத ஜந்துக்களை வைத்து எடுக்கையில் நம் திரைக்கதையில் இடம்பெற வேண்டிய பாயிண்ட்கள்:

1. ஒரு வெறிபிடித்த ஜந்து.
2. அதைக் கொல்லத் துடிக்கும் மனிதர்கள்.
3. அந்த ஜந்து அதகளம் செய்ய ஒரு இடம்.
4. அந்த ஜந்து வெளிவந்து அதன் அட்டகாசத்தை ஆரம்பிக்க ஒரு சம்பவம். இந்தச் சம்பவம் பொதுவாக ஏதேனும் ஒரு பாவச்செயலாகத்தான் இருக்கும். சுயநலத்துக்காக யாராவது ஒரு மனிதன் செய்யும் இந்தப் பாவம்தான் அந்த ஜந்துவை வெளிக்கொண்டுவரும்.
5. அந்தப் பாவம் செய்தவர்களை எதேச்சையாகவோ அல்லது குறிப்பாகவோ அந்த ஜந்து வேட்டையாடும்.
6. இதற்குப் பிறகு எல்லாமே அந்த ஜந்துவை எப்படி நாயகன் துரத்துகிறான் என்பதில்தான் இருக்கிறது.

ஜுராஸிக் பார்க் இதற்கான சரியான உதாரணம். அதில் சுயநலத்துக்காக ஒரு மனிதன் டைனஸார் DNAவைக் கடத்த முயற்சி செய்து அந்தத் தீவில் மின்சாரத்தைக் கட் செய்யும்போதுதான் டி.ரெக்ஸ் வெளிவருகிறது. அவனுமே ஒரு குட்டி டைனஸாரால் மாண்டுபோகிறான். இதுவேதான் உலகின் பெரும்பாலான மான்ஸ்டர் படங்களின் கதை.

காட்ஸில்லாவிலும் அப்படித்தான். மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காக உருவாக்கிய அணுமின் நிலையங்களால் படத்தின் வில்லன்களான ஜந்துக்கள் உயிர்பெற்று எழுகின்றன. அந்த ஜந்துக்கள் அதகளம் செய்யும் இடத்துக்கே காட்ஸில்லா சென்று அவற்றுடன் சண்டையிடுகிறது.

இருந்தாலும், படத்தில் எக்கச்சக்கக் குறைகள் உள்ளன.

1. படத்தில் காட்ஸில்லாவுக்கு மனதைக் கவரும் அட்டகாசமான அறிமுகம் இல்லை. மாறாக, படத்தின் ஏறத்தாழ முப்பது நிமிடங்களில்தான் வில்லன் ஜந்துக்களே அறிமுகமாகின்றன. அதன்பின்னர்தான் காட்ஸில்லா அறிமுகம். முதல் முப்பது நிமிடங்களில் ஜோவின் கதையைத்தான் நாம் பார்க்கிறோம். விலாவாரியாக வரும் இந்தக் கதை, படத்தின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது (இந்த இடத்தில் 1998ன் காட்ஸில்லாவை ஒப்பிட்டுப் பார்த்தால், அதில் படுவேகமான சம்பவங்களால் படம் அலுக்காது. காட்ஸில்லாவின் அறிமுகம் பிரமாதமாக இருக்கும்).

2. ஜந்துக்களும் காட்ஸில்லாவும் அறிமுகமான பின் என்ன நடக்கிறது என்று பார்த்தால், எதுவுமே நடப்பதில்லை. அந்த ஜந்துக்கள் அஜீத்தைப் போல் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டே இருக்கின்றன. காட்ஸில்லா அரசு மரியாதையோடு கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறது. நடக்கின்றன. நீந்துகிறது. நடக்கின்றன. நீந்துகிறது. ‘யாமம்’ கதையில் பண்டாரமும் நாயும் நடப்பதே கிட்டத்தட்ட பாதி நாவலில் வருவதுபோல. முதல்முறையாக காட்ஸில்லாவும் ஜந்துவும் மோதும் காட்சி ஒரு கொடுமை. ஏன் என்று படத்தைப் பார்த்தால் தெரியும்.

3. அதன்பின்னாவது ஏதாவது மோதல் உள்ளதா என்று கவனித்தால், படத்தின் க்ளைமேக்ஸ் வந்துவிடுகிறது. மூன்று ஜந்துக்களும் மோதுவதுதான் அந்த க்ளைமேக்ஸ். அதுவும் படுபயங்கர இருட்டில் தூசியும் தும்புமாக ஏதோ ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போல இருந்தது. யார் யாரை அடிக்கிறார்கள் என்பதே புரியாமல், 3டி கண்ணாடியில் அப்பியிருந்த அழுக்கால்தான் அப்படித் தெரிகிறதோ என்று எண்ணிக்கொண்டு அதனை எச்சில் துப்பித் துடைத்து மாட்டியபோதும் எந்தப் பயனும் இல்லை.

ஒரு மான்ஸ்டர் படத்தை மிக மிக மெதுவாக எடுத்து ஆடியன்ஸின் பொறுமையைச் சோதிப்பதில் மகத்தான வெற்றி அடைந்திருக்கிறது காட்ஸில்லா என்று சொல்லலாம். அவ்வளவே. எப்போதாவது இருட்டில் அவுட்லைனில் தெரியும் காட்ஸில்லாவைப் பார்க்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கலாம். இல்லாவிட்டால் 1998ல் வெளியான காட்ஸில்லாவையே இன்னொருமுறை அவசியம் பார்க்கலாம். இந்தப் படம், அந்தப் படத்துக்கு ஒரு ‘க்ளாஸிக்’ ஸ்டேட்டஸை அளித்துவிட்டது. அதுதான் irony.

ட்ரெய்லரை நம்பிக்கொண்டு படத்துக்குச் செல்வதன் தீமைக்கு இது ஒரு சரியான உதாரணம்.

  Comments

9 Comments

  1. Rajesh

    oh fusk we lost rs.2000 … 2Morrow v book imax 3d….OMG plz save me

    Reply
  2. Karthick nagarajan

    நேத்துதான் இந்தப் படத்தப் பாத்திட்டு வீட்டுக்குப் போய் விழுந்து புரண்டு அழுதேன்… அதிலயும் அந்த காட்ஸில்லாவோட தோற்றம் இருக்கே, பாதி கரடி, பாதி நாய், பாதி பன்னி இதெல்லாம் ஒன்னு சேர்ந்த மாதிரி ஒரு உருவம்…

    Reply
  3. Karthick nagarajan

    டிக்கேட் புக் பண்ணவங்களோட பைசாவுக்கெல்லாம் உ ஊஊ…

    Reply
  4. Watched the movie last night. CGI & Cinematography is Excellent. All other aspects like Music, acting(though the cast has Oscar nominated, golden globe actors) are very ordinary.

    Movie is worth one-time watch in Big screen & I loved the grandeur scenes in dark foggy atmosphere. Though many bash this Movie, Americans & Global Godzilla Fan-boys are loving this movie(and hate 1988 version).Because this is an ‘Original’ Gojira movie. The looks, the lesser screen-time,the fire breathing & the ‘Hero’ status of Godzilla are all part of how Japanese Godzilla was in its prime time(old Japanese movies). So this 2014 version be given ‘classic’ status.

    Honestly, I’ll prefer 1998 Godzilla most of the times!!!!.

    Reply
  5. muthuventhan

    நன்றி, பார்க்க நினைத்தேன். டிக்கெட் இல்லை. தப்பியது பணம். ஏதக்காக இந்தமுயற்சி. கற்பனை வறட்சி அங்கும்.

    Reply
  6. sekar

    ப்லாக் இல்லை ப்ளாக்.

    அந்த ஜந்துக்கள் அஜீத்தைப் போல் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டே இருக்கின்றன..
    —-ROFL

    Reply
  7. siva

    Sir, காட்சில்லானாவே சும்மா orru orruனு சவுண்ட் வுட்டு பாதி படத்த இருட்லயே முடிபானுங்க …..இந்த அனிமல்ஸ் வெச்சி படம் எடுக்கிற எல்லா டைரக்டர்சும் இருட்லயே படத்த எடுபானுங்க.

    Reply
  8. praveen ser

    breaking bad pidikathaaaaaaa ?????? sari ok athu unga virupam

    Reply

Join the conversation