Quentin Tarantino: Chapter 1 – Reservoir Dogs

by Karundhel Rajesh August 27, 2014   Cinema articles

Prologue

1992ம் ஆண்டில் வெளிவந்த ஹாலிவுட் படங்களைக் கவனித்தால் அந்த ஆண்டில் பெருமளவு ஓடிய படங்களாக ‘Aladdin’, ‘The Bodyguard’, ‘Home Alone – 2’, ‘Wayne’s World’, ‘Lethal Weapon 3’, ‘Batman Returns’, ‘A few good men’, ‘Sister Act’, ‘Dracula’, ‘Basic Instinct’ ஆகிய படங்களே இருக்கின்றன. அந்த ஆண்டில்தான் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கிய Unforgiven படமும் வெளிவந்திருந்தது. அதற்கு 4 ஆஸ்கர்களும் அடுத்த வருடத்தில் கிடைத்தன. எந்த ஆண்டிலுமே இப்படிப்பட்ட முக்கியமான படங்களைக் கவனித்தால் ஆடியன்ஸின் ட்ரெண்ட் புரிந்துவிடும். அதேபோல் திரைப்பட நிறுவனங்கள் எப்படிப்பட்ட படங்களை எடுக்க விரும்புகிறார்கள் என்பதும் நன்றாகவே தெரிந்துவிடும்.

ஒரு அனிமேஷன் படம், ஒரு ரொமான்ஸ் படம், ஒரு காமிக்ஸ் படம், ஒரு action படம், ஒரு பேய்ப்படம், ஒரு drama என்றே அந்த ஆண்டின் வசூலில் சிறந்துவிளங்கிய படங்கள் இருந்திருக்கின்றன. இந்தப் படங்களுக்கு நடுவே 1992ன் இறுதியில் வெளிவந்த Reservoir Dogs படம், இவற்றிலிருந்து முற்றிலும் விலகி, அன்றிலிருந்து ஆடியன்ஸுக்கு ஒரு அட்டகாசமான திரைப்பட அனுபவத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. அந்த அனுபவம் இன்னும் க்வெண்டின் டாரண்டினோவின் படங்களின் மூலம் திரைப்பட ரசிகர்களுக்குக் கிடைத்துக்கொண்டிருக்கிறது. இப்போதுகூட ரிஸர்வாயர் டாக்ஸ் படத்தைப் பார்த்தாலும் புத்தம் புதிய படத்தைப் போலவே ஒரு அனுபவத்தைக் கொடுப்பதே அதன் சிறப்பம்சம். அந்தப் படம் மட்டும் அல்லாமல், அத்தனை டாரண்டினோ படங்களுமே அப்படித்தான் (Death Proof தவிர).

கடந்த மூன்று வாரங்களாக, I was totally obsessed with Tarantino like never before. எனக்குப் பிடித்த இயக்குநராக டாரண்டினோ இருந்தாலும், இன்னும் சில இயக்குநர்களையும் எனக்குப் பிடிக்கும். இப்போதும்தான். ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு எப்படிப்பட்ட படங்கள் பிடிக்குமோ – நான் எந்தெந்த வகையான படங்களைத் திரையரங்கில் பார்க்க விரும்புவேனோ – அப்படிப்பட்ட படங்கள்தான் டாரண்டினோவின் படங்கள் என்பதை ஒரு revelation போல நான் உணர்ந்தது மூன்று வாரங்கள் முன்னர்தான். அதனால்தான் அத்தனை டாரண்டினோ படங்களையும் பல முறைகள் திரும்பத்திரும்பப் பார்த்தேன். அவரது அத்தனை திரைக்கதைகளையும் பலமுறை படித்தேன். அவரது பல பேட்டிகளை (சரியாகச் சொல்லவேண்டும் என்றால் 320 பக்கங்கள்) எக்கச்சக்கமான முறைகள் படித்தேன். அவரைப் பற்றிய ஏராளமான விடியோக்களையும் பார்த்தேன். இதன்விளைவாக டாரண்டினோவின் மனதுக்குள் இந்த மூன்று வாரங்களும் வசிக்க நேர்ந்தது. நான் எப்படிப்பட்ட அனுபவங்களை அடைந்தேனோ அப்படிப்பட்ட அனுபவங்களை இந்தக் கட்டுரைகள் ஓரளவாவது படிக்கும் நண்பர்களுக்கு அளித்தால் I will be real happy. Even otherwise, பிடித்த படங்களைப் பற்றிப் பேசுவதே ஜாலிதானே?

படப்பிடிப்புகளில் நாய் அசுத்தம் செய்யும்போதெல்லாம் ஓடிவந்து அதை சுத்தப்படுத்துபவராகத் தனது முதல் வேலையைச் செய்திருக்கிறார் டாரண்டினோ. இதன்பின் Porn படங்கள் திரையிடப்படும் ஒரு திரையரங்கில் மக்களை டார்ச் லைட் அடித்து அமரவைக்கும் நபராகக் கொஞ்சகாலம் வேலை செய்திருக்கிறார். இதன்பின் இதைப்போன்ற சின்னச்சின்ன வேலைகள் செய்துவந்தவருக்கு முதன்முதலாகத் திரைப்படங்களுடனேயே சேர்ந்திருக்கும் வேலை கிடைத்தது ஒரு விடியோ கடையில். Video Archives என்ற அந்தக் கடையில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் வேலை செய்த டாரண்டினோ, இஷ்டத்துக்குப் படங்கள் பார்ப்பது, படங்களைப் பற்றி அங்கே வருபவர்களிடமும் வேலை செய்தவர்களிடமும் பேசித்தள்ளுவது (சக தொழிலாளியின் பெயர் – ரோஜர் ஆவெரி) என்று வாழ ஆரம்பித்தார். படங்களின் பக்கம் முழுதும் ஈர்க்கப்பட்டபின்னர், இயக்குநராக ஆவது என்பதில் அவரது மனம் உறுதிப்பட ஆரம்பித்த காலகட்டம். எண்பதுகளின் பிற்பகுதி. தடாலடியாக சில திரைக்கதைகள் எழுத ஆரம்பித்தார். அவசரமாக அவற்றைப் பல நிறுவனங்களுக்கும் அனுப்பினார். அப்படி அவர் அனுப்பிய ஒரு நிறுவனம், டாரண்டினோவின் ஏஜெண்ட்டுக்குக் கடுமையாக அனுப்பிய பதில் இங்கே.

[quote]Dear Fucking Cathryn,
How dare you send me this fucking piece of shit. You must be out of your fucking mind. You want to know how I feel about it? Here’s your fucking piece of shit back. Fuck you.[/quote]

இப்படி ஒரு பதிலைப் பெற்ற திரைக்கதை – True Romance. அதைப்பற்றி அவசியம் கவனிக்கத்தான் போகிறோம். இப்படிப்பட்ட கோபமான பதில்களைப் பெறக்காரணம் – திரைக்கதைகளில் டாரண்டினோ உபயோகப்படுத்திய வசை வார்த்தைகள். ஆனால் இதனாலெல்லாம் மனம் தளராத அவர், தனது நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு தானே ஒரு படத்தை இயக்க முற்பட்டார். அந்தப் படத்தின் பெயர் – My best friend’s birthday. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அந்தப் படம் எடுக்கப்பட்டது. முதல் இரண்டு வருடங்களில் எடுத்த ஷாட்களைப் பற்றி டாரண்டினோவே ‘எப்படியெல்லம் ஒரு படத்தை எடுக்கக்கூடாது என்பதைக் கற்றுக்கொடுத்த அனுபவங்கள் அவை’ என்று சொல்லியிருக்கிறார். கடைசி ஒரு வருடத்தில்தான் ஒரு திரைப்படத்தை எப்படி எடுப்பது என்று டாரண்டினோவுக்குப் புரிந்தது.

திரைப்படக் கல்லூரிக்குச் செல்லாமல், திரைப்படங்களில் பணிபுரியாமல் எப்படி உங்களால் அட்டகாசமான படங்களை எடுக்க முடிகிறது என்ற கேள்விக்கு, ‘I didn’t go to film school, but I went to Films’ என்று டாரண்டினோ சொல்வது வழக்கம். அவரது இந்த அனுபவமும், படங்களைப் பார்ப்பதில் இருந்த வெறித்தனமுமே காரணம். அடிப்படையில் டாரண்டினோ ஒரு movie geek. எந்தப் படமாக இருந்தாலும் அதன் முழு விபரங்களும் அறிந்தவர். எனவே அவரது படங்களில் காட்சியமைப்பு, இசை போன்றவற்றை எந்தப் படத்தில் இருந்து எப்படியெல்லாம் எடுக்கவேண்டும் என்பதெல்லாம் நன்றாக உணர்ந்தவர்.

Reservoir Dogs வெளிவந்த வருடம், 1992. டாரண்டினோ திரையுலகுக்கு வந்து 22 வருடஙள் ஆகிவிட்டன. தனது 29ம் வயதில் முதல் படத்தை இயக்கிய டாரண்டினோவுக்கு இப்போது 51 வயது. ஆனாலும் டாரண்டினோவின் பேட்டிகளைப் படிக்கும்போதும் அவரது வீடியோக்களைப் பார்க்கும்போதும், எப்போதும் நமது நண்பர்களுக்கு மத்தியில் தீவிரமாகப் பேசிக்கொண்டு, ஜாலியாகக் காமெடி செய்துகொண்டு எப்போதும் துறுதுறுப்பாக இருந்துகொண்டிருக்கும் ஒரு நண்பனைப் பார்ப்பதுபோலத்தான் இருக்கிறது. அவரைப் பற்றி ஒரு legend, Icon என்றெல்லாம் நினைக்கத் தோன்றவில்லை. காரணம் ஏற்கெனவே சொன்னதுதான். தனிப்பட்ட முறையில் ஒரு திரையரங்குக்குச் சென்றால் நான் என்னென்ன படங்களைப் பார்க்க விரும்புவேனோ, எந்தப் படங்களைப் பார்த்தால் சந்தோஷம் அடைவேனோ அப்படிப்பட்ட படங்களையே தொடர்ந்து எடுத்துக்கொண்டிருப்பவர் அவர்.

The Story

Reservoir Dogs

க்வெண்டின் டாரண்டினோ வேலை செய்துகொண்டிருந்த விடியோ கடையில் உள்ள அத்தனை படங்களுமே அவருக்கு அத்துபடி என்பதால், வேலை அலுக்காமல் இருக்க அவ்வப்போது தனக்குத்தானே திரைப்பட விழாக்கள் கொண்டாடிக்கொள்வது அவரது வழக்கம். எதாவது ஒரு genreஐ எடுத்துக்கொண்டு அந்த வகையைச் சேர்ந்த படங்களை மொத்தமாகப் பார்ப்பது இந்தத் திரைப்பட விழாவில் அடங்கும். இப்படி ஒருமுறை சிறந்த Heist படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்த டாரண்டினோ, ‘பல வருடங்களாக ஒரு நல்ல Heist படமே வரவில்லையே?’ என்று யோசிக்க ஆரம்பித்தார். So, I wrote one என்று கூலாகச் சொல்வது டாரண்டினோ ஸ்டைல். எல்லாப் பேட்டிகளிலும் இப்படித்தான் பல விஷயங்களை மிகவும் ஜாலியாக just like that சொல்லிச்செல்வது டாரண்டினோவின் வழக்கம்.

இப்படி ஒரு திரைக்கதையை டாரண்டினோவால் மூன்றே வாரங்களில் முடிக்க முடிந்திருக்கிறது. முடிந்ததும் இந்தத் திரைக்கதையைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு 16MM கேமராவில் கறுப்பு வெள்ளையில் எடுக்கவேண்டும் என்பதே டாரண்டினோவின் எண்ணம். அதன்படியே எடுப்பதற்கான pre-production வேலைகள் துவங்கின. ஆனால், டாரண்டினோவின் நண்பராக அப்போது இருந்த லாரன்ஸ் பெண்டர் என்பவர் (do you remember the name?) ஒரு நடிப்புப் பள்ளியில் சேர்ந்து நடிப்புக் கற்றுக்கொண்டிருந்த காலம் அது. அவருக்கு நடிப்புச் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் மனைவி, Actors Studio என்ற புகழ்பெற்ற அமைப்பில் இருந்தார். இந்த அமைப்பு, ஹாலிவுட்டின் பாரம்பரியம் மிக்க நடிப்புப் பட்டறைகளில் ஒன்று. இதன் புகழ்வாய்ந்த முதல்வர்களில் லீ ஸ்ட்ராஸ்பெர்க்கும் ஒருவர். (இவரைப்பற்றிப் படிக்க method acting பற்றி நான் எழுதிய மூன்று கட்டுரைகளை இங்கே படிக்கலாம்). எனவே, லாரன்ஸ் பெண்டரின் குருநாதரின் மனைவி, Actors Studioவில் இருந்ததால் அங்கே இருந்த புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான ஹார்வி கய்டெலின் (Harvey Keitel) நண்பராகவும் இருந்தார். இந்த சூழலில், டாரண்டினோவின் திரைக்கதையைப் படித்த நண்பர் லாரன்ஸ் பெண்டர் அதனைத் தனது குருநாதருக்குக் கொடுக்க, அதைப் படித்து வியந்த குருநாதர் தனது மனைவியிடம் அதைச் சொல்ல, திரைக்கதையைப் படித்த மனைவி மிகவும் இம்ப்ரஸ் ஆகி அதனை நேராகத் தனது நண்பர் ஹார்வி கய்டெலிடம் கொடுத்துவிட்டார். ஹார்வி அந்தத் திரைக்கதையைப் படித்தார்.

மூன்று நாட்கள் கழித்து, டாரண்டினோவின் மிகச்சிறிய அறைக்கு ஒரு ஃபோன் வருகிறது. ஃபோனை எடுத்ததும், தனது பிரத்யேக உப்புக்காகிதக் குரலில் ‘நான்தான் ஹார்வி கய்டெல். நீ தான் டாரண்டினோவா? உனது திரைக்கதையைப் படித்தேன். எனக்குப் பிடித்திருந்தது. உடனடியாக அங்கே வருகிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பில் நான் பங்குபெற விரும்புகிறேன்’ என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார் கய்டெல்.

இதற்கு டாரண்டினோவின் ரியாக்‌ஷன் எப்படி இருந்தது என்பதைக் கீழே இருக்கும் விடியோவில் பார்க்கலாம். Reservoir Dogs படத்தின் பத்தாவது anniversaryயைக் கொண்டாடும் வகையில் 2002ல் வெளிவந்த டிவிடியின் behind the scenesல் இருக்கும் விடியோ அது. மறக்காமல் அந்த விடியோவைப் பார்த்துவிடுங்கள். 1992ல் ரிஸர்வாயர் டாக்ஸ் படம் வந்ததுமே டாரண்டினோ எப்படி இருந்தார் என்பதையும் அவரது எதிர்வினையையும் அந்த விடியோவில் பார்க்கலாம். பார்த்துமுடித்ததும், ஜாலியாகத் தெருவில் சுற்றிக்கொண்டு படங்கள் பார்த்த ஒரு இளைஞன் இப்படித்தான் இருப்பான் என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம். அந்த இளைஞனின் ஆசைகள் என்னவாக இருக்கும்? கையில் கிடைக்கும் பணத்தையெல்லாம் வைத்துக்கொண்டு விடியோ காஸெட்கள் வாங்கவேண்டும்; பெரிய இசைத்தட்டுகள் (LP) வாங்கவேண்டும்; திரைப்பட போஸ்டர்கள் வாங்கி அறையெங்கும் ஒட்டவேண்டும்; படங்களுக்குச் செல்லவேண்டும்; ஹோட்டல்களில் போய் சாப்பிடவேண்டும்’ என்பதாகத்தான் இருக்கும். இதையெல்லாம் டாரண்டினோ சொல்வதைக் கவனியுங்கள்.

திரைப்பட வெறியனாக இருந்த அப்படிப்பட்ட இளைஞன் ஒருவனுக்கு, தனது திரைக்கதையைத் திரைப்படமாக எடுக்க முதன்முதலில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? உச்சபட்ச உற்சாகத்தில் களத்தில் இறங்கிய டாரண்டினோவின் பிரமாதமான படங்களில் முதலாவதாக அமைந்தது ரிஸர்வாயர் டாக்ஸ்.

டாரண்டினோவின் திரைக்கதையால் எக்கச்சக்கமாகக் கவரப்பட்ட ஹார்வி கய்டெல், லாஸ் ஏஞ்சலீஸில் இருந்த டாரண்டினோவையும் லாரன்ஸ் பெண்டரையும் தனது சொந்தச் செலவில் ந்யூயார்க் அழைத்துச்சென்று தங்கவைத்து, பிற நடிகர்களை ஒப்பந்தம் செய்வதில் உதவினார். ஒவ்வொருவராகப் படத்தில் நுழைந்தனர். மைக்கேல் மாட்ஸன் (Mr. Blonde), ஸ்டீவ் பூஷெமி (Mr. Pink), லாரன்ஸ் டியர்னி (Joe Cabot), க்ரிஸ் பென் (Nice guy Eddie), டிம் ராத் (Mr. Orange), எட்வர்ட் பங்கர் – இவர் நிஜவாழ்க்கையிலும் வங்கிக்கொள்ளையராக இருந்தவர், இவர்களுடன் க்வெண்டின் டாரண்டினோவே Mr. Brownஆக நடித்தார்.

டாரண்டினோவின் இன்றுவரை பிரபலமான இன்னொரு விஷயம் – அவரது படங்களில் பிற படங்களில் இருந்து எடுக்கப்பட்ட இசைதான் பெரும்பாலும் வைக்கப்படும். இதற்கான விதையும் ரிஸர்வாயர் டாக்ஸில்தான் போடப்பட்டது. இந்தப் படத்தை எழுதும்போதே எழுபதுகளின் ஜாலியான பாடல்களை வைத்தே பின்னணி இசையை அமைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் டாரண்டினோ. காரணம் என்னவென்றால், அதற்குமுன்னர் வந்திருந்த அப்படிப்பட்ட பாடல்களைத் திரையில் பார்த்து வியந்திருந்ததுதான். உதாரணமாக, ரிச்சர்ட் வாக்னரின் இசைக்கோர்ப்பான Ride of the Valkyrieஸை Apocalypse Now படம் வந்தபின்னர்தான் பலரும் அறிந்திருப்பார்கள் என்று டாரண்டினோ சொல்கிறார். அதேபோல்தான் ஸ்கார்ஸேஸியின் Mean Streets (ஹார்வி கய்டெல்தான் ஹீரோ) படத்தின் டைட்டிலில் வரும் Be my Baby பாடல். அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் அந்தப் படம்தான் நினைவு வரும் என்பது டாரண்டினோவின் எண்ணம். அப்படித்தான் அவருக்குப் பிடித்த பாடல்களை ரிஸர்வாயர் டாக்ஸில் வைக்கவேண்டும் என்று முடிவுசெய்தார்

(இன்னொரு பாடல் – Singin’ in the Rain. க்ளாக்வொர்க் ஆரஞ்ச் பார்த்தவர்களுக்கு இந்தப் பாடல் நினைவிருக்கும். இந்தப் பாடலின் ஸ்பெஷாலிடி – பாடல் உபயோகப்பட்டிருப்பது ஒரு டார்ச்சர் காட்சியில். இன்னும் இப்படிப்பட்ட ஒரு விஷயம் கீழே)

இப்படித் தனது முதல் படத்துக்காகப் பாடல்களைத் தேர்வு செய்தார் டாரண்டினோ. படத்தின் டைட்டில் பாடலாக, Little Green Bag தேர்வானது. படத்தின் ஆரம்பத்தில் வரும் மிகநீண்ட மடோனா பேச்சைத் தொடர்ந்து அனைவரும் வெளியே வரும்போது இந்தப் பாடல் துவங்கும். பாடலில் உள்ள அந்த rhythm, நடிகர்களின் சந்தோஷமான அந்தத் தருணங்களை நன்றாகவே பிரதிபலிக்கும். அதேபோல் படத்திலேயே அவ்வப்போது ரேடியோவில் பேசுவதுபோன்ற ஒரு குரல் வரும். இதெல்லாம் typical டாரண்டினோ பாணியேதான்.

பொதுவாகத் தனது படங்களின் ஆடியன்ஸைத் தான் நினைத்தபடி கட்டுப்படுத்துவது டாரண்டினோவுக்குப் பிடிக்கும். அதற்கும் இந்தப் படத்திலேயே பல உதாரணங்கள் உண்டு. முதலில் படம் துவங்கியதும் மடோன்னாவைப் பற்றிய பிரபலமான பேச்சு துவங்கும். அதன்பின்னர் டிப்ஸ் வைப்பது பற்றிய ஒரு கருத்து ஓடும். இது எல்லாமே ஆடியன்ஸுக்குச் சிரிப்பு வரவழைக்கும் இடங்கள். அதன்பின்னர் இந்த டைட்டில் சீக்வென்ஸ். அது முடிந்ததுமே கோரமான ஒரு சீக்வென்ஸ் துவங்கும். டிம் ராத் காரில் வயிற்றில் குண்டடிபட்டு ரத்தக்களறியாகத் துடித்துக்கொண்டிருக்கும் காட்சி துவங்கும். அந்தக் காட்சி முடிந்ததுமே ஹார்வி கய்டெலும் டிம் ராத்தும் படத்தின் புகழ்பெற்ற கோடௌனுக்குள் வந்துவிடுவார்கள். அங்கே ஸ்டீவ் பூஷெமி வருவார். டிம் ராத்தைத் தரையில் கிடத்திவிட்டு அவருடன் ஹார்வி கய்டெல் பேச ஆரம்பிப்பார். அப்போது ஃப்ளாஷ்பேக்குகள் ஆங்காங்கே வரும். அதன்பின் அங்கே மைக்கேல் மாட்ஸன் வருவார். அவரை ஒரு ஸைக்கோ என்றே அழைப்பார் கய்டெல். காரணம், கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில் பலரையும் அவர் சுட்டுக்கொன்றிருப்பதே. அப்போது மைக்கேல் மாட்ஸனின் காரில் மாட்டியிருக்கும் ஒரு போலீஸ் அதிகாரியைப் பற்றி மாட்ஸன் சொல்வார். அந்த ஆளை உள்ளே கொண்டுவந்து கட்டிப்போட்டுவிட்டு அங்கே வரும் க்ரிஸ் பென் கதாபாத்திரத்துடன் அனைவரும் வெளியே செல்வார்கள். அப்போதே உள்ளே ஒரு துரோகி இருக்கிறான் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். தனியாக விடப்பட்டதும் மைக்கேல் மாட்ஸன், ஜாலியாக ஆடிக்கொண்டே அந்தப் போலீஸிடம் செல்வார். அப்போது வரும் பாடல் – Stuck in the middle with you (Stealers Wheel). இந்தப் பாடலை அவர் ஹம் செய்துகொண்டே லேசாக நடனம் ஆடுவது ஒரு மிகப்பிரபலமான காட்சி. இதற்கு முந்தைய காட்சிகளைப் பார்த்துக் கொஞ்சம் பயந்திருந்த ஆடியன்ஸ் இந்தப் பாடலைக் கேட்டதும் சற்றே ஆசுவாசம் அடைந்திருப்பார்கள். காரணம் அது ஒரு மிகப் பிரபலமான பாடல். ஆனால் அந்தப் பாடல்தான் படத்தின் கோரமான காட்சிகளில் ஒன்றைத் துவக்குகிறது.

Reservoir Dogs2

இதைப்பற்றித் தனது பேட்டிகளில் டாரண்டினோ இப்படிச் சொல்கிறார்.

’You’re supposed to laugh until I stop you laughing. ஜாலியாகப் பாடலை ரசிக்கிறோம். நடனம் சிரிப்பை வரவழைக்கிறது. திடீரென்று கத்தியை எடுத்து மைக்கேல் மாட்ஸன் போலீஸின் முகத்தில் கோடு போடும்போது அத்தனை சிரிப்பும் ஒரே நிமிடத்தில் உறைகிறது. பின்னர் போலீஸின் காதை மைக்கேல் மாட்ஸன் வெட்டியெடுக்கும்போது அதுவரை நாம் சிரித்ததற்கு நேர்மாறாகப் பீதி அடைகிறோம்’ (பொதுவாக ஆடியன்ஸைப் பார்த்து எழுதியது. எனக்கு எந்தப் பீதியும் இல்லை). நிஜவாழ்க்கையின் வன்முறைக்கும் திரைப்படங்களில் வரும் வன்முறைக்குமான தொடர்பைப் பற்றி டாரண்டினோவிடம் பலர் கேட்டதுண்டு. அப்போதெல்லாம் ஒரே பதில்தான் வரும். ‘வன்முறை என்பது முற்றிலும் ஒரு அழகியல் உணர்வுதான் (aesthetic). எப்படி சிலருக்குக் காதல் உணர்வு படங்களில் பிடிக்கிறதோ அப்படி எனக்கு வன்முறை பிடிக்கிறது.  ஒருவேளை உங்களுக்குக் காதல் படங்களோ சண்டைப்படங்களோ பாடல்களோ பிடிக்கவில்லை என்றால், உலகிலேயே அற்புதமான ஒரு காதல் படத்தை நான் எடுத்தாலும் நீங்கள் அதைப் பிடிக்கவில்லை என்றுதான் சொல்வீர்கள். காரணம் அடிப்படையிலேயே உங்களுக்குக் காதல் படங்கள் பிடிக்காது. ஆனால் உங்களுக்குப் பிடிக்காது என்பதற்காக நான் அதைக் காட்டக்கூடாது என்று சொல்வது எப்படி நியாயம்? எக்கச்சக்கமாகப் படங்களில் காமெடி வருகிறது என்று வைத்துக்கொள்ளலாம். அதனால் இனிமேல் உலகில் எல்லாருமே காமெடியன்களாக மாறிவிடுவார்களா? அப்படிப்பட்டதுதான் சினிமாவில் வரும் வன்முறையால் எல்லாருமே வன்முறையாளர்கள் ஆகிவிடுவார்கள் என்பதும்’.

இதுதான் டாரண்டினோ சொல்லும் பதில். ஆனால் இதை மேலே முதலில் நாம் பார்த்த ரிஸர்வாயர் டாக்ஸ் behind the scenes விடியோவிலேயே டாரண்டினோ சொல்லியிருப்பார். அப்போதே அவர் அப்படித்தான் இருந்தார். இன்றும் அப்படியே தொடர்கிறார்.

படத்தில் பின்னணியில் வரும் இன்னொரு பாடலும் அந்தக் காட்சியுடன் அட்டகாசமாகப் பொருந்தும். அதுதான் Hooked on a Feeling – Blue Swede. சமீபத்தில் வெளியான Guardians of the Galaxy படத்திலும் இதே பாடல் அப்படியே உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் பாடலின் வீச்சு அத்தகையது.

இந்தப் படத்தில் subtext என்று சொல்லக்கூடிய ஒரு உள்ளுறை விஷயமும் உள்ளது. ஆனால் அப்படி இருப்பதை டாரண்டினோ பின்னால்தான் கவனித்திருக்கிறார். படத்தில் பாஸாக வரும் லாரன்ஸ் டியர்னியைக் கிட்டத்தட்ட ஒரு தந்தையைப் போல் பார்ப்பவர் ஹார்வி கய்டெல். ஆனால் டிம் ராத் கதாபாத்திரத்தைக் காரில் அழைத்துவரும்போது அவருக்கே அது தனது மகனைப்போன்ற பாத்திரம் என்று தோன்றுகிறது. அவனைக் காப்பதுதான் தனது லட்சியம் என்று நினைக்கிறார். அதனால்தான் அந்தக் காட்சி முழுதுமே ‘ஜோ வந்தவுடன் உன்னை சரிசெய்துவிடலாம்’ என்றே சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் டிம் ராத்தைப் பற்றிய உண்மை அவருக்குத் தெரியாது. டிம் ராத்துக்கோ தான் ஒரு துரோகி என்பது தெரியும். இதனால் ஒருவித குற்ற உணர்ச்சியில் இருப்பார். இறுதியில் டிம் ராத் சுடப்படும்போது தனது தந்தையை விடவும் மகன்தான் தனக்குத் தேவை என்றே முடிவுசெய்வார். அதுதான் அந்த mexican standoff க்ளைமாக்ஸில் முடிகிறது.  இதைக் கண்டுகொண்டவுடன் டாரண்டினோ மிகவும் மகிழ்ந்துபோனார் என்பதை அவரே சொல்லியிருக்கிறார்.

மொத்தமாகப் பார்க்கும்போது Reservoir Dogs போன்ற ஒரு திரைக்கதை எந்தக் காலத்தில் வந்தாலும் அவசியம் பேசத்தான் பட்டிருக்கும். அதுதான் அந்தத் திரைக்கதையின் தனித்துவம். ஒரு நகைக்கடைக் கொள்ளையைப் பற்றிப் பேசும் படத்தில் அந்தக் கொள்ளையே வராது. படம் முழுவதையுமே வசனங்களால் நகர்த்தக்கூடிய திரைக்கதை அது. அந்த வசனங்களுமே, சுற்றிலும் இருக்கும் சமுதாயத்தைக் கூர்ந்து கவனித்து அதைப்பற்றிய ஒரு வெளிப்பாடாகத்தான் இருக்கும். அந்த வகையில் டாரண்டினோவே சொல்வது போல, அவரது திரைக்கதைகள் அவசியம் இலக்கியம்தான். நல்ல இலக்கியமா கெட்ட இலக்கியமா என்பதை ஆடியன்ஸ்தான் முடிவு செய்துகொள்ளவேண்டும்.

இந்தக் கட்டுரையைப் படித்தபின் அவசியம் ரிஸர்வாயர் டாக்ஸ் படத்தை ஒருமுறை முழுதும் பாருங்கள். பல விஷயங்கள் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் படித்துவிட்டுப் பார்த்தால் அந்தப் படம் முற்றிலும் அட்டகாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பி.கு

1. டாரண்டினோவின் படங்களின் இறுதியில் வரும் Title Creditஸை – குறிப்பாக அதன் இறுதிப்பகுதியைத் தவறவிடவேண்டாம். அவற்றின்மூலம் எனக்குக் கிடைத்தவை எக்கச்சக்கம். பல பாடல்கள், படங்கள், நடிகர்கள் போன்றவை. உங்களுக்கும் கிடைக்கும்.

2. படத்தில் ஆங்காங்கே டாரண்டினோவுக்குப் பிடித்த அம்சங்கள் தலைகாட்டும். Hooked on the Feeling பாடல் வருமுன்னர் கதவில் ஒட்டப்பட்டிருக்கும் Silver Surfer poster போல.

3. ஹார்வி கய்டெல் எனக்கும் மிகவும் பிடித்த ஹாலிவுட் நடிகர். இதை ஏற்கெனவே சில கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். 4. Reservoir Dogs என்றால் என்ன? விடியோ கடையில் வேலை செய்தபோது Au Revoir Les Enfants படத்தைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் ‘Oh that.. the Reservoir film’ என்றுதான் டாரண்டினோ சொல்வது வழக்கம். காரணம் அது அவரது வாயில் நுழையவில்லை. இது நினைவிருந்ததால்தான் தனது முதல் படத்துக்கு Reservoir Dogs என்று பெயர் வைத்தார். அந்தப் பெயருக்கு இன்றுவரை அர்த்தமே இல்லை என்பதே டாரண்டினோ ஸ்பெஷல்.

4. முடிந்தால் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தையும் கேட்கவும். பின்னர் படத்தில் அவை எங்கெல்லாம் வருகின்றன என்பதைக் கவனியுங்கள். இதன்மூலம் டாரண்டினோவின் பாணி பிடிபடும்.

  Comments

10 Comments

  1. senthil kumar

    Dear Mr.Rajesh,
    I have been reading your blog for the past two years.Just like u iam a big fan of tarantino.I came across Reservoir dogs when i was browsing through a video casette store in London.That was way back in 1998.I was bowled over.After that there was no turning back.
    I was captivated by your indepth analysis of KILL BILL.It was like you were echoing my mind.I was surprised when i found no mention of Res dogs in your blog.Lacunae has been filled now.Your analysis/review was good like always.
    Looking forward to learn more about Tarantino & his films through you.
    By the way have you seen the indian version of Reservoir dogs-KAANTE.?
    with regards
    senthil

    Reply
    • Rajesh Da Scorp

      Thanks for the comment Senthil. Infact I wanted to write about Tarantino long before, but somehow I couldn’t get that feel. But in the past three weeks, I have had truckloads of that ‘feel’ and hence I am determined to write everything I have come across of Tarantino. Let’s see how it goes. And BTW – Kaante?? Aaaaaaaaaaaaaaaaaaaaaaargh

      Reply
      • senthil

        HaHaHa…..yeah…u r right .Kaante was a kootuporial of reservoir dogs & usual suspects….not very much palatable.Ur series on Pulp fiction is good..but looks like u r rushing through.Have u noticed the special brand of cigarettes(red apple),airlines,burgers(kahuna),radio channel(Kbilly), They dont exist in real life.And did u notice the phrase on Uma thurman’s shoe heels in the climactic fight at the japanese night club..(Kill bill 1).There is a shot when she is walkin over glass .i freezd that shot just to read it…hahaha.If u know it,sorry i didnt mean any offense.
        .We r alike Mr.Rajesh.All the very best.Lookin forward to read more from u.
        with regards,
        senthil

        Reply
  2. Jayesh San

    Anna, I am translating this article

    Reply
    • Rajesh Da Scorp

      Sure Jayesh.. Cheers and blast !!

      Reply
    • Rajesh Da Scorp

      Yes boss. this is the first one

      Reply
  3. Haran

    தனது நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு தானே ஒரு படத்தை இயக்க முற்பட்டார். அந்தப் படத்தின் பெயர் – My best friend’s Birthday not Wedding

    Reply
    • Rajesh Da Scorp

      யெஸ். நினைவுல இருந்து எழுதுறதுனால வர்ர சில டைபோஸ் இது. பட், இத்தா பெரிய ஆர்டிகிள்ல சரியா – கச்சிதமா எழுதியிருக்கும் மத்த மேட்டர் பத்தி எதுவுமே சொல்லாம இதை மட்டும் கரெக்டா பாயிண்ட் பண்றீங்கல்ல… உங்க கடமை உணர்ச்சி சூப்பர் 🙂

      Reply
  4. rajesh oru kelvi..podhuvaana oru kelvi? tamilil miga perum vetri petra surya vamsam, nattamai, padayappa, unnidathil ennai koduthen pondra padangal stupid padangalaa?neengal sollum screenplay format padi vandha padangal endru enakku thondra villai?andha padangal hit aagum poludhu..screen play enbadhu completely subjective endru naan ninaikiren..?screen plays are subjective to culture and psycology of locals ..wat is your thought

    Reply

Join the conversation