Achcham Yenbadhu Madamaiyada (2016) – Tamil

by Karundhel Rajesh November 26, 2016   Tamil cinema

இரண்டு வாரங்கள் முன்னரே பார்த்துவிட்ட படம். இப்போதுதான் எழுத முடிந்தது. வேலை.

Spoiler Alert. Please read at your discretion.

காட்ஃபாதரின் ஒரு குறிப்பிட்ட தருணத்தால் இன்ஸ்பையர் செய்யப்பட்ட படம் என்ற டிஸ்க்ளெய்மருடன் அச்சம் என்பது மடமையடா துவங்குகிறது. என்ன தருணம் அது? மைக்கேல் கார்லியோனி, மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் காட்ஃபாதரைப் பார்க்க வருகிறான். அப்போது அங்கே இவர்களது ஆட்கள் யாருமே இல்லை என்பதைப் புரிந்துகொள்கிறான். உடனடியாக அங்கிருக்கும் ஒரு நர்ஸின் உதவியுடன் அப்பாவை வேறொரு அறைக்கு மாற்றுகிறான். அண்ணன் சான்னிக்கு அழைத்து, ஆட்களை அனுப்பிவைக்கச் சொல்கிறான். இதெல்லாம் தெரியாத சோலெஸ்ஸோ, தத்தாலியா குடும்பத்தின் அடியாட்களுடன் டான் கார்லியோனியைக் கொல்ல அங்கு வர, எதேச்சையாக காட்ஃபாதரைப் பார்க்கவந்த ஒரு இளைஞனுடன் வாசலில் நின்றுகொண்டு, ஆட்கள் அதிகமாக இருப்பதுபோன்ற ஒரு பிரமையை மைக்கேல் ஏற்படுத்துகிறான். திட்டம் பாழான கடுப்பில், தங்களின் ஆளான போலீஸ்காரர் மெக்லஸ்கியை சோலெஸ்ஸோ அனுப்ப, மெக்லஸ்கி மைக்கேலின் முகத்தில் அடித்துவிடுகிறான். அதுதான், அதுவரை ராணுவவீரன் மைக்கேல், இடாலியைச் சேர்ந்த கடத்தல் குடும்ப வாரிசாக உருவெடுக்கும் முதல் காட்சி. இதுதான் காட்ஃபாதர் படத்தின் மிகவும் முக்கியக் காட்சிகளில் ஒன்று. இதன்பின்னர்தான் படமே வேகமெடுக்கிறது.

இந்தக் காட்சியால் இன்ஸ்பையர் ஆகித்தான் அச்சம் என்பது மடமையடா படத்தை எடுத்ததாக மிகவும் நேர்மையாக கௌதம் வாசுதேவ் குறிப்பிடுகிறார். டைட்டிலில் இதைச் சொன்னதற்கு வாழ்த்துகள். அவரது நேர்மையைப் பாராட்டுகிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அக்னி நட்சத்திரம் படத்தின் ஒட்டுமொத்த க்ளைமேக்ஸும் இதே காட்சிதான். ஆனால் அதில் எங்குமே க்ரெடிட்ஸைப் பார்த்ததாக நினைவில்லை. கௌதமுக்கு இது கட்டாயம் தெரிந்திருக்கும். அதனால்தான் – இக்காட்சி ஏற்கெனவே தமிழில் சுடப்பட்டுவிட்டது என்பதால்தான் – நேர்மையாக டைட்டிலில் அக்காட்சியைப் பற்றிச் சொன்னார் என்பது என் அனுமானம்.

இதோ இந்தக் காட்சியில் 12:00ல் இருந்து பார்க்கவும்.

ஓகே. டைட்டில் இன்ஸ்பிரேஷன் பற்றி விரிவாகவே பார்த்துவிட்டோம்.

படத்தின் முதல் பாதி, முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை என்பது இன்னேரம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். பாடல்கள், காட்சிகள் ஆகிய எல்லாமே ஒரு முழுநீள ரொமான்ஸ் படம் பார்க்கும் உணர்வையே கொடுக்கின்றன. கூடவே, எங்கும் அலுக்காமல் படம் செல்கிறது. அதற்கு கௌதம்+ ரஹ்மான் கூட்டணி ஒரு முக்கியமான காரணம். வெறுமனே கேட்கையில் இப்படத்தின் பாடல்கள் அப்படியொன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடவில்லை. ஆனால் படத்தோடு பார்க்கையில் அட்டகாசமாக இருந்தன.

படத்தின் இரண்டாம் பாதி பற்றிப் பலரும் என்னிடம் பேசினர். பலருக்கும் இரண்டாம் பாதி பிடிக்கவில்லை என்றே தெரிந்துகொண்டேன். இதற்கு வலுவான காரணங்கள் உண்டு. முதல்பாதி முழுக்க ஒரு ரொமான்ஸ் படமாகச் செல்லும் கதை, இடைவேளைக்கு சற்றுமுன்னர் டக்கென்று மாறி, இரண்டாம் பாதி முழுக்க ஆக்‌ஷன் கதையாகச் செல்கிறது. அதுகூடப் பரவாயில்லை. ஆனால் படத்தின் க்ளைமேக்ஸில் வரும் பல விஷயங்கள் நம்பும்படி இல்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாகவும் இருந்தது. எனக்கும் அதே கருத்துதான். ஆனால் அதில் ஒரு வித்தியாசம். கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள இயலாத இறுதி நிமிடங்களைப் பார்த்துவிட்டு வெளியே வரும் ஆடியன்ஸை இரண்டாம் பகுயை முழுக்க முழுக்க நிராகரிக்கவே அவர்களின் மனம் தூண்டுகிறது. இதை என்னால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நான் சொல்லிய வித்தியாசம் என்னவென்றால், இரண்டாம் பகுதி ஆரம்பித்து, க்ளைமேக்ஸ் நோக்கிச் செல்லும் தருணம் வரை இப்படத்தின் கதை ஓரளவு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது என்பதே என் கருத்து. ஆனாலும், முதல் பாதி குற்றம் சொல்ல முடியாமல் இருந்த அளவு இரண்டாம் பாதி இல்லை என்பது உண்மையே.

இரண்டாம் பாதியின் பிரச்னைகள்:

1. எதிரிகளால் துரத்தப்படும் சிம்புவுக்குத் துப்பாக்கிகள் கிடைக்கின்றன. அவருக்கு சுடத்தெரியாது என்பதை சொல்லும்விதமாகவே காட்சிகள் நகர்கின்றன. இருந்தாலும், அவரது துப்பாக்கியில் குண்டே தீராதா?

2. எதிரிகளிடம் இருந்து தப்பித்து, புல்லட்டைத் திருடிக்கொண்டு செல்லும் சிம்பு, திடீரென்று திருப்பித்தாக்க முடிவுசெய்கிறார். அதுவரை ஓகே. ஆனால் அப்படி முடிவு செய்து வீறுகொண்டு எழுந்து வேகமாக வரும் சிம்பு என்ன செய்கிறார்? முதலில் ஒளிந்துகொண்டு எதிரிகளைக் கண்காணிக்கிறார். பின்னர் அவர்கள் தங்கும் அதே ஹோட்டலில் அறை எடுக்கிறார். காதலியை அங்கே தங்கச்செய்கிறார். அதே ஃப்ளோர் (ஒருவேளை வேறு ஃப்ளோராக இருந்தாலுமே அது பிரச்னைதான்). சரி. தங்கச்செய்துவிட்டார். அடுத்து என்ன செய்கிறார்? திடீரென்று காதலியைக் கிளம்பிவரச்சொல்கிறார். ஏன்? அவருக்கே தெரியாது. ஏனெனில் அது கௌதம் திடீரென்று ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த முடிவு. அப்படித்தான் தோன்றியது. ‘நீ முன்னால போ.. அப்புறமா வெளில வா.. கிளம்பிடலாம்’ என்றுதான் இந்தக் காட்சியே இருக்கிறது. ஆக, வீறுகொண்டு எழும் சிம்பு எப்படி அவரது ஆத்திரத்தையும் பழி உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்? ரூம் போடுவதன் மூலம்தான்.

3. சரி. இதன்பின் என்ன நடக்கிறது? அங்கிருந்து சிம்பு தப்புகிறார். தமிழகம் வருகிறார். அவரைத் தேடி ரவுடி போலீஸ் பாபா சேகல் தமிழகம் வருகிறார். ஆனால் சிம்புவின் வீட்டில் அவரது பெயரில் இருப்பது வேறு ஒரு ஆள். ஃபோட்டோக்கள் உட்பட மாறியிருக்கின்றன. சிம்பு அட்ரஸே இல்லை. எங்கே சென்றார்? எங்கோ தனியாக ஒளிந்துகொண்டு போலீஸாகவேண்டும் என்று படித்துக்கொண்டிருக்கிறார் (!!!??). படித்துமுடித்து, பரீட்சையில் பாஸாகி, ஐ.பி.எஸ் தேர்வு செய்து பாபா சேகலுக்கே தலைமையதிகாரியாக வருகிறார்.

சினிமா பார்க்கும் ஆடியன்ஸை ஏமாளிகள் என்று கண்மூடித்தனமாக நம்பினால்தான் இப்படி ஒரு க்ளைமேக்ஸை எழுத/யோசிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. சினிமாவே தெரியாத ஒரு ஸ்கூல் பையன் கூட இதை யோசிக்கமாட்டான். அதிலும் சந்தேகமில்லை. லாஜிக்கே இல்லாத, கோமாளித்தனமான காட்சி இது. இதெல்லாம் எப்படி சாத்தியம்? ஒரு போலீஸ் அதிகாரியால் கண்டுபிடிக்க முடியாமல், அவரது ஒட்டுமொத்த ஐடெண்டிடியையும் இரண்டரை வருடங்கள்  மாற்றிக்கொண்டா சிம்பு வாழ்ந்தார்?

4. ஹீரோயினுக்கான கதையாக வரும் மிகப்பெரிய வாய்ஸ் ஓவர் கதை அடுத்த பிரச்னை. அறுபதுகளின் படங்களில்தான் இப்படிப்பட்ட கதையைச் சொல்லலாம். இப்போதெல்லாம் இதை ஒரு வார்த்தை கூட பேசவோ எழுதவோ கூடாது. அப்படிப்பட்ட ஓட்டை இது. துளிக்கூட நம்பமுடியாத, மொக்கையான கதை.

5. இந்த இரண்டு பாயிண்ட்களிலும் ஆடியன்ஸின் மனது டுமீரென்று வெடித்துவிட்டது. இதனால்தான் படமே மொக்கை என்றும், இரண்டாம் பாதி கொடூரம் என்றும் பலரும் சொல்கின்றனர் என்பதில் சந்தேகமே இல்லை.

அதுதான் நிஜம். ஒரு மறக்கமுடியாத படமாக ஆகியிருக்கவேண்டிய படம், இந்தப் பிரச்னைகளால் எளிதில் மறக்கப்படக்கூடிய படமாக மாறிவிட்டது.

படத்தில் ஒருசில ப்ளஸ்கள் உண்டு. ஹீரோ & ஹீரோயின் புல்லட்டில் செல்லும் பயணம். இப்படி ஒரு பயணத்தைத் தமிழில் பார்த்ததே இல்லை. பாடல்கள்+காட்சிகளோடு சேர்ந்து இவை ஜாலியாக அமைந்திருக்கின்றன. அடுத்து, தள்ளிப்போகாதே பாடலின் சிச்சுவேஷன். காக்க காக்க படத்தில், உயிரின் உயிரே பாடலின் சாகக்கிடக்கும் ஹீரோ-கொல்லப்படும் தருவாயில் ஹீரோயினுடன் டூயட் என்ற அதே சிச்சுவேஷனை அப்படியே இதில் உபயோகப்படுத்தியிருக்கிறார் கௌதம். எனவே, இது முற்றிலும் புதிய சிச்சுவேஷன் இல்லை. ஆனால், அந்தப் பாடலை அட்டகாசமாக எடுத்திருக்கிறார். பாடலுக்கேற்ற படமாக்கம். அதேபோல், விபத்திலேயே ஹீரோ & ஹீரோயின் பரஸ்பரம் காதலை முதலிலும் இறுதியிலும் பேசிக்கொள்ளும் வசனங்கள் & சிச்சுவேஷன். சிம்புவின் நடிப்பு இன்னொரு ப்ளஸ். கதாபாத்திரத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு நடித்திருக்கிறார்.

ஆனால் இந்தப் ப்ளஸ்கள் போதாது. அல்டிமேட்டாகப் பாடல்கள் & முதல்பாதிக்காக மட்டுமே படம் பார்க்கலாம் என்ற பொதுவான கருத்தையே இவைகளால் உருவாக்க முடிந்திருக்கிறது.

தன்னுடைய திரைக்கதை எழுதும் ஸ்டைலைப் பற்றி கௌதம் பலமுறை சொல்லியிருக்கிறார். 60%-70% மட்டுமே எழுதப்பட்ட திரைக்கதையோடு, படப்பிடிப்புக்கு சென்று, அங்கே நடிகர்கள் கதாபாத்திரத்தில் நடிப்பதை வைத்துக்கொண்டு பிற காட்சிகளை முழுமையாக்குவதுதான் அது. இதனால் பல பிரச்னைகள் உண்டு என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். இதை யாரும் ஃபாலோ செய்யவேண்டாம் என்று அவரே சொல்லவும் செய்கிறார். ஆனால் தொடர்ந்து அப்படிச் சொல்லிக்கொண்டே இருந்தால் போதுமா? முழுத் திரைக்கதையையும் தெளிவாகத் தயார் செய்துவைத்துக்கொண்டபின்னர்கூட, ஷூட்டிங்கில் காட்சிகளை ஆங்காங்கே மாற்றலாமே? இதனால் இப்படத்தில் வருவதுபோன்ற, ஆடியன்ஸை முட்டாள்கள் ஆக்க முயலும் காட்சிகள் தவிர்க்கப்படுமே? ‘என்னை அறிந்தால்’ படத்திலும் இதுபோன்ற சம்மந்தம் இல்லாத காட்சிகள் உண்டு. வாரணம் ஆயிரம் படத்தின் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் சம்மந்தமே இருக்காது. இதுபோல் தொடர்ந்து அவரது படங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மூலகாரணமே அவரது திரைக்கதை எழுதும் முறைதான் என்பதைத் தெரியாமல் இருந்தால்கூட மன்னித்துவிடலாம். ஆனால் தன் தவறை முழுக்கமுழுக்கத் தெரிந்துகொண்டபின்னரும், அதையே விடாமல் செய்துகொண்டிருந்தால் எத்தனை காலம்தான் அது தெரியாததுபோலவே நடிப்பது?

அடுத்த படத்திலாவது கௌதம் இதை சரிசெய்யவேண்டும். ஒரு திரைப்படம் முழுமையான அனுபவம் தந்தால்மட்டுமே அது நல்ல படமாக இருக்கும். பாதி படம் ஓகே – பாதி மொக்கை என்ற கருத்துகள் பரவுவது அந்தப் படத்துக்கும் இயக்குநருக்கும் நல்லதல்ல.


கௌதமின் பிற படங்கள் பற்றி நமது தளத்தில் எழுதப்பட்ட விமர்சனங்கள்.

  Comments

3 Comments

  1. Arul

    Dear rajesh ,,படம் பார்த்தேன்…its not the inspiration about the hospital scene… Its about the guy turning himself to save family… Its in the second part of godfather…Michael telling his wife after got shooted in the bed room. Simbu always telling why unnecessaryl should have got involved him selves to save family?…. Discuss to more ….i liked ur writing…

    Reply
  2. Arul

    The one line of godfather is the son trying to save his family….including the three parts…so simbu tried one small part…but i liked the movie.. As u reviewd lots of logical mistake in second half…

    Reply

Join the conversation