The Adventures of TinTin

by Karundhel Rajesh November 10, 2011   Comics Reviews

Rascar Capac. பெரூ நாட்டின் பண்டையகால இன்கா மக்களில் புகழ்பெற்று விளங்கிய மனிதன். இவனது பழங்கால மம்மி, ஆண்டெஸ் மலையில் புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சில ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் ஒரு ஆராய்ச்சியாளரான ப்ரொஃபஸர் டார்ரகான் வீட்டில் வைக்கப்படுகிறது.

ப்ரொஃபஸர் டார்ரகானின் வீடு. இறுக்கமான சூழ்நிலை. அவரருகில் ஒரு சிறிய மனிதன் அமர்ந்திருக்கிறான். அவனருகில், முரட்டுத்தனமான நபர் ஒருவர். பக்கத்திலேயே, வயதான விஞ்ஞானி போல் தோற்றமளிக்கும் மனிதர் ஒருவர். தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் டார்ரகான்.

க்ரா……க் !

பளிச்சிடும் மின்னல் ஒன்று, டார்ரகானின் வீட்டு ஜன்னல் கண்ணாடியைத் தூள்தூளாக்குகிறது. திடீரென்று ஒரு கண்ணாடி உருண்டை, உள்ளே விழுந்து வெடிக்கிறது.

Rascar Capac மம்மி……. அதனைக் காணவில்லை !

அன்று இரவு, ப்ரொஃபஸர் அறையில் அலறல் கேட்கிறது. Rascar Capac தன்னைத்தேடி வந்ததாக அலறுகிறார் ப்ரொஃபஸர். கோமாவிலும் விழுந்துவிடுகிறார். இத்தோடு, புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனைவரும் இதே போல் கோமாவில் விழுந்துவிடுகின்றனர். ப்ரொஃபஸரே கடைசி.

என்ன நடந்துகொண்டிருக்கிறது?

தீவிரமான விசாரணையில் இறங்குகிறான் அந்தக்ச் சிறிய மனிதன். திடுக்கிடவைக்கும் திருப்பங்களோடு கூடிய கதை, ஆரம்பிக்கிறது.

அவன் தான் டிண்டின்.

மேலே நாம் பார்த்த கதை, ‘Seven Crystal Balls‘ என்ற பெயரில் அமைந்த அட்டகாசமான காமிக்ஸ். இந்தக் கதை, ‘Prisoners of the Sun‘ என்ற இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது. அந்தக் கதை, முதல் கதையை விட விறுவிறுப்பானது.

எண்பதுகளின் நடுப்பகுதி. எனது தாய்மாமா குன்னூரில் வேலையில் இருந்தபோது, அங்குள்ள நூலகத்திலிருந்து டிண்டின் காமிக்ஸ்களை எடுத்துவருவார். நான் ஒரு காமிக்ஸ் வெறியன் என்பது தெரிந்திருந்ததால், அங்கிருந்த டிண்டின் கதைகளை ஒவ்வொரு மாதம் வரும்போதும் தூக்கிவருவார். உடனேயே அவைகளைப் படித்துவிட்டுத் திருப்பிக்கொடுப்பேன். இப்படி நான் படித்த முதல் டிண்டின் கதையே இந்த ‘Seven Crystal Balls‘ என்பதாகும்.

யார் இந்த டிண்டின்? என்ன இது படு வித்தியாசமான பேராக இருக்கிறது?

Le Petit XXe என்ற பெல்ஜியன் பத்திரிகை ஒன்றின் ரிப்போர்ட்டரே டிண்டின். மிக இளம் வயதினன். அவனது உற்ற தோழனாக, அவனது நாய். பெயர் ஸ்னோவி (மிலூ என்பதே இதன் நிஜ ஃப்ரென்ச் பெயர்). டிண்டின், பொதுவில் எதாவது ஒரு ப்ரச்னையில் அகப்பட்டுக்கொள்வான். அந்தப் பிரச்னையை அவன் ஆராயத் துவங்குவதே அதன்பின் கதையாக நம்முன் விரியும். அதுவும், மிக சுவாரஸ்யமான கதையாகவே அது இருக்கும். இதுதான் டிண்டின் கதைகளின் மைய அம்சம்.

இந்தக் காமிக்ஸை உருவாக்கியவரின் பெயர், டிண்டின் ரசிகர்களால் மறக்கவே இயலாத ஒன்று. Hergé. 1929ல், காமிக்ஸ் ஸ்ட்ரிப்பாக உருவான இந்தத் தொடர், உலகெங்கும் வரவேற்பைப் பெற்ற ஒரு பிரம்மாண்டமான விஷயமாக மாறியது. அதில் ஆச்சரியமே இல்லை என்றே இப்போது தோன்றுகிறது. டிண்டின் படித்தவர்களுக்கு அது தெரியும். அதில் வரும் கதாபாத்திரங்கள், அவற்றின் நகைச்சுவை, மர்மங்கள், திருப்பங்கள் ஆகிய அத்தனையுமே சரிவிகிதத்தில் கலக்கப்பட்டு, எடுத்தால் கீழே வைக்கமுடியாத கதைகளாகவே அவை இருக்கும். (விதிவிலக்கு – TinTin in America. எனக்குப் பிடிக்காத ஒரு கதை).

டிண்டினின் உற்ற தோழராகக் கதைகளில் வருபவர், கேப்டன் ஹேட்டாக் (Haddock). இவரது பஞ்ச் டயலாக்குகள் உலகப்பிரசித்தம். எங்காவது தடுக்கி விழும்போதோ அல்லது அடிபடும்போதோ அல்லது தனது இயலாமையையோ கோபத்தையோ வெளிப்படுத்தும்போதோ இவர் உதிர்க்கும் பஞ்ச்களில் ஒரு சில இங்கே:

‘Ectoplasm!’. . ‘Bald headed Budgerigar!’…. ‘Billions of Blue Blistering Barnacles !’…..’Thundering Typhoons!’…..

இதையெல்லாம் வெறுமனே படிக்கையில் சுவாரஸ்யமாக இருக்காது. தலைக்கேறிய கோபத்திலோ அல்லது வலியிலோ, இரண்டு கைகளையும் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு, கழுத்து நரம்புகள் புடைக்க அவர் கத்துவதை, காமிக்ஸில் படித்தால்மட்டுமே அந்த நகைச்சுவை புரியும்.

டிண்டின் மற்றும் ஹேட்டாக்குடன், அவ்வப்போது தலைகாட்டுபவர், ப்ரொஃபஸர் கால்குலஸ். மிக வயதான மனிதர். கதைகளில் வரும் சில விஞ்ஞானம் சார்ந்த மர்மங்களை உடைப்பவர். அவ்வப்போது காதில் உள்ள இயர்ஃபோனை நழுவவிட்டுவிடுவதால், ஹேட்டாக் சொல்லும் எதையும் செவிமடுக்காமல், படு கேஷுவலாக, அவர் அரைமணிநேரமாகக் கத்திய விஷயத்தையே மறுபடி முதலில் இருந்து பேச ஆரம்பிக்கும் மனிதர்.

இவர்கள் மட்டுமல்லாமல், டிண்டின் கதைகளில், கவுண்டமணி செந்தில் போலவே வரும் இரட்டைப் போலீஸ்காரர்கள்தான் ‘தாம்ஸன்’ மற்றும் ‘தாம்ப்ஸன்’. ஜான்சன் & ஜான்ஸன் போல. நமது இயக்குநர் சரணின் ஆரம்பகாலப் படங்களில் வந்து தற்குறித்தனமாக எதையாவது செய்துவைக்கும் வையாபுரி & தாமுவைப் போன்றவர்கள் இவர்கள். டிண்டினைப் பின்தொடர்கிறேன் பேர்வழி என்று இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் சிரித்து மாளாது.

இதுதவிர, எப்போதாவது டிண்டின் கதைகளில் தலைகாட்டி, தனது பாட்டாலேயே அனைவரையும் மிரண்டு ஓடவைக்கும் ‘காஸ்டஃபியோர் சீமாட்டி’, ஜெனரல் ஆல்கஸார் போன்ற துணைக் கதாபாத்திரங்களும் உண்டு.

டிண்டின் கதைகளின் பெருமை என்னவென்றால், ஐம்பதுகளில் எழுதப்பட்ட கதைகளில், நவீன தொழில்நுட்பம், அவ்வப்போது வந்துபோகும். ‘Destination Moon‘ மற்றும் ‘Explorers on the Moon‘ ஆகிய இரண்டு காமிக்ஸ்களை எடுத்துக்கொள்ளலாம். அவை, 1950ல் இருந்து 1953 வரை ஸ்ட்ரிப்பாக வெளிவந்தவை. அவற்றில், சந்திரனுக்குச் செல்லும் ராக்கெட் ஒன்றே பிரதான விஷயம். அந்த ராக்கெட்டைச் சுற்றியே கதை நடக்கும். அந்த ராக்கெட்டைத் தத்ரூபமாக வரைந்திருப்பார் Herge. ஒவ்வொரு பாகமாக, ராக்கெட்டின் முழு வரைபடமும் அதில் இருக்கும். மட்டுமல்லாமல், அந்த ஒவ்வொரு பாகங்களும் என்ன செய்கிறது என்பதையும் 1950ல் விளக்கியிருப்பார். யோசித்துப்பாருங்கள். மனிதன் முதன்முதலில் சந்திரனில் இறங்கியது, 1969ல். நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் ஆகிய இருவரும், அப்போலோ 11 என்ற ராக்கெட்டில் சந்திரனில் இறங்கிய வீடியோவை யாரும் மறந்திருக்க முடியாது. அதற்குப் பத்தொன்பது வருடங்கள் முன்பே அதைப் படம் வரைந்து பாகம் குறித்தார் Herge. இதற்காகக் கடுமையான ஆராய்ச்சி செய்திருக்கிறார் அவர்.

இது ஒரு ஸாம்பிள்தான். இதைத்தவிர, பல டிண்டின் கதைகளிலும் கையாளப்படும் பல இடங்கள், நாடுகள் ஆகியவற்றையும் பற்றித் தீவிர ஆராய்ச்சி செய்திருக்கிறார் அவர்.

TinTin in Tibet‘ என்று ஒரு கதை. இதில், நேபாளத்தில் விமான விபத்தில் இறந்துவிட்டதாக நம்பப்படும் தனது நண்பன் ஒருவனைத்தேடி இந்தியா வருவான் டிண்டின். இந்தியாவிலிருந்து நேபாளம் செல்வான். பனிப்புயல், யெடி என்றழைக்கப்படும் பனிமனிதன், பௌத்த மடாலயங்கள் ஆகிய விஷயங்கள் அதில் வரும். எனக்குப் பிடித்த இன்னொரு கதை அது.

டிண்டினில் மொத்தம் 23 காமிக்ஸ்கள் உண்டு. அத்தனையும், பெங்களூர் ‘Blossoms Book House‘ல் கிடைக்கின்றன. புத்தம் புதிய பிரதிகள். தள்ளுபடி விலையில். பெங்களூரில் இருப்பதிலேயே பெரிய புத்தகக் கடைகளில் இது ஒன்று. ஏற்கெனவே இதனைப்பற்றி எழுதியிருக்கிறேன். இதன் இணையதள முகவரி ——->http://www.blossombookhouse.com/. இதில் புத்தகங்களைத் தேடலாம். வாங்கலாம்.

இப்படிப்பட்ட டிண்டினைப் பற்றி இப்போது நான் எழுதியிருப்பதன் காரணம், நாளை வெளியாக இருக்கும் ‘The Adventures of TinTin‘ என்ற 3D படம்தான். இதனை இயக்கியிருப்பவர், ஸ்டீவன் ஸ்பீல்பர்க் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். The Crab with the Golden Claws (1941), The Secret of the Unicorn (1943), Red Rackham’s Treasure (1944) ஆகிய காமிக்ஸ்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம்.

படத்தைப் பற்றி ஆரம்பித்துவிட்டதால், சுருக்கமாக இப்படத்தின் சிறப்புகளைப் பார்த்துவிடலாம்.

இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர், பீட்டர் ஜாக்ஸன். ஸ்பீல்பெர்க், லைவ் ஆக்‌ஷன் அனிமேஷனாக இப்படத்தை எடுக்கமுனைந்தபோது, ஜாக்ஸன் குறுக்கிட்டு, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் மற்றும் கிங்காங் படங்களில் தான் உபயோகித்த மோஷன் காப்சர் டெக்னிக்கைப் பயன்படுத்தினால் படம் இன்னமும் தத்ரூபமாக இருக்கும் என்று வலியுறுத்தியதால், தனது வாழ்நாளில் மோஷன் காப்சர் படங்களுக்குள் நுழைந்திராத ஸ்பீல்பெர்க், முதலில் திகைக்கவே செய்தார். அவருக்குத் தைரியமூட்டிய ஜாக்ஸன், AVATAR படம் (ஸிஜி செய்தது, ஜாக்ஸனின் WETA நிறுவனம்) எடுக்கப்பட்ட இடமான Playa Vista ஸ்டுடியோவில், சோதனை முயற்சியாக, சில க்ளிப்பிங்குகளை ஸ்பீல்பெர்க்குக்கு எடுத்துக்கொடுத்தார். ஜாக்ஸனே டிண்டினாக நடிக்கவும் செய்தார். உடன் இருந்தது, மோஷன் காப்சர் நடிகர் திலகமான ஆண்டி செர்கிஸ் (கோல்லும், கிங்காங் மற்றும் Rise of the Planet of the Apes படத்தில் ஸீஸர்). இந்தக் க்ளிப்பிங்குகள், WETA கொண்டுசெல்லப்பட்டு, ஸிஜி செய்யப்பட்டு, தத்ரூபமான டிண்டின் கதாபாத்திரங்களாக மாற்றப்பட்டு, ஸ்பீல்பெர்க்குக்குப் போட்டுக்காட்டப்பட்டன. இதன்பின்னரே மோஷன் காப்சர் தொழில்நுட்பத்தில் திருப்தியடைந்தார் ஸ்பீல்பெர்க்.

32 நாட்களில் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. படம் நெடுகவும், வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் படப்பிடிப்பைக் கவனித்துக்கொண்டே இருந்தார் ஜாக்ஸன். அவ்வப்போது ஸ்பீல்பெர்க்குக்கு ஆலோசனையும் வழங்கினார். அப்போது அங்கு இருந்த தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர், “படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது, ஜாக்ஸனின் குரல், கடவுளின் அசரீரி போல அவ்வப்போது ஒலித்து எங்களை வழிநடத்தியது” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன்பின் படம் WETAவில் உருவாகத் தொடங்கியது. போஸ்ட் ப்ரொடக்‌ஷன். இந்த முறை, WETAவில் ஜாக்ஸன் முழுநேரமும் இயங்க, அதனை வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் மேற்பார்வையிட்டார் ஸ்பீல்பெர்க்.

இந்தப் படம், ஒரு துவக்கம்தான். இதன் இரண்டாம் பாகத்தை ஜாக்ஸன் இயக்கப்போகிறார். அதன்பின், மூன்றாம் பாகம், ஸ்பீல்பெர்க் மற்றும் ஜாக்ஸனின் இயக்கத்தில் வெளிவரப்போகிறது.

படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தொழில்நுட்பத் தகவல்கள், இந்த வார இறுதியில் இப்படத்தை நான் பார்த்தபின் விவரமாக எழுதுகிறேன். அதுவரை, மேலே நான் குறிப்பிட்ட விபரங்களோடு இன்னமும் பல விபரங்களை, விகிபீடியாவில் படித்துக்கொள்ளவும்.

The Adventures of TinTin – 3D‘ படத்தின் ட்ரைலரை இங்கே பார்த்து ரசிக்கலாம். படத்தை மிஸ் செய்துவிடாதீர்கள்.

படத்தை சனிக்கிழமை பார்த்துவிட்டு வருகிறேன். Brace Yourselves !

  Comments

10 Comments

  1. வந்தோம்ல பஸ்ட்
    ரொம்ப நாளா எதிர்பார்த்துகிட்டு இருக்குற படம்

    Reply
  2. இந்த படத்த கண்டிப்பா 3Dல தான் பாக்கணும் …

    இத படமா எடுக்கிற hollywood பசங்க ஏன் calvin and hobbesஅ படமா எடுக்கல ?? அட்லீஸ்ட் ஒரு கார்டூனா கூட அது வரல என்பது ஏன் வருத்தம் …

    Reply
  3. நண்பரே!
    படம் பற்றிய தகவல்கள் படத்தை இன்றே தியேட்டரில் பார்க்கத்தூண்டுகிறது.

    Reply
  4. முதல் முதல்ல நா படிக்க ஆரம்பிச்ச ஆங்கில காமிக்ஸ் இதான்…..The Weekல ரெகுலரா வந்துச்சு…………லைப்ரரில படிச்சேன்……..அப்பறம், பெரிய சைஸ் புக்க எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்……..ஆஸ்ட்ரிக்ஸ் கூட அதே போல வந்து படிக்க ஆரம்பிச்சதுதான்…..

    1929……..யப்பா….என்பது வருசத்துக்கும் மேல….truly remarkable……..இன்னமும் சுவாரசியம் கொறையல……தூர்தர்சன்ல தொடரா வேற வந்துச்சுல…..அந்த மொத்த கார்டூன் கலெக்சன் என்ட இருக்கு…….அப்பப்ப பாக்குறது உண்டு………..அதுவும் ஔ பெல்ஜியம் கதாபாத்திரம் இத்தன புகழ் பெற்றது ஆச்சரியமே…..

    Reply
  5. ஹெல்பாய் – நீங்க எழுதியத படிச்சிட்டு தான் முழுமையா அதன் பின்னணி தெரிய வந்தது………….செம பதிவு அது…..தொடர்ந்து இந்த சேவையை தொடரவும்………..

    Fbல ஒரு மெசஜ் நேத்து பாத்தேன்…80’sல பிறந்தவங்கள பத்தி (டெக்னிகலி நீங்க இந்த category கெடையாதுன்னாலும்)….காமிக்ஸ் படிச்சது போக, PS3லையும் அந்த காமிக்ஸ் கதாபாத்திரத்த வெளையாடுறோம்…அந்த கேரக்டர 3dலையும் பாக்குறோம்…..95 – 2000க்கு பிறகு பிறந்தவர்கள், காமிக்ஸ் அந்தளவுக்கு வாங்கிற மாதிரி எனக்கு தெரியல…(நடுத்தர குடும்பங்களை பொறுத்த வரை)….கம்புயூட்டர் கேம்ஸ் – டிவின்னு ஆகிப்போச்சு(கொஞ்சம் வயசான ஆளு மாதிரி தொனி இருக்கோ…)நா சொல்ல வர்றது, 80’s – உண்மையிலயே கலக்கலான வாழ்க்கைமுறை….எல்லா வகை விஷயங்களையும் பாத்தாச்சு..பாத்துகிட்டும் இருக்கோம்…..

    Reply
  6. சின்ன வயசில் தூர்தர்ஷன்ல் பார்த்தது உங்கள் பதிவை படிக்கும் போது கண்களுக்கு தெரிகின்றது…

    Reply
  7. @ லக்கி – எதிர்பார்ப்பு வீண்போகல பாஸ் 🙂

    @ போதைதர்மன் – calvin and hobbes வேற மாதிரி இல்லையா . . ரெண்டு மூணு கட்டங்கள்ல ஒரு கதை அதுல முடிஞ்சிரும். டின்டின் மாதிரி பெரிய கதைகள் அதுல இல்லை. calvin and hobbes லயும் சில பெரிய கதைகள் உண்டுன்னாலும், அது தத்துவம் மாதிரி. அதைப் படமா எடுக்க முடியாதுன்னு தோணுது.

    @ உலக சினிமா ரசிகரே – பார்த்தீங்களா இல்லையா 🙂

    @ செ. சரவணக்குமார் – பஸ்ஸில் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல 🙂

    @ கொழந்த – டின்டின் கதைகள், அவ்வளவு சுவாரஸ்யம் மிக்கவையாச்சே. பல நாடுகள், பல இடங்கள், பல மனிதர்கள், கப்பல்கள், விமானங்கள், மர்மங்கள்… பல விஷயங்கள் இருக்குறதுனால அந்த சுவாரஸ்யம் மெயின்டைன் செய்யப்படுது.

    80 கள்ள பொறந்தவங்க மெசேஜ் நானும் பார்த்தேன். அது எனக்கும் அப்புடியே பொருந்துது. கார்ட்டூன்கள், காமிக்ஸ்கள், கேம்கள் இதுல நம்மளை அடிச்சிக்க தொண்ணூறுகள்ள பொறந்த மனிதர்களால முடியாது 🙂 . கண்டிப்பா. அங்கதானே நாமெல்லாம் நிக்குறோம் 🙂

    Reply

Join the conversation