All the President’s Men (1976) – English

by Karundhel Rajesh January 2, 2011   English films

அரசியலில் நிகழும் ஊழல்களைப் பற்றிய உண்மைக் கதைகள், என்றுமே நம்மைக் கவர்ந்தவண்ணமே இருக்கின்றன. மக்கள், நம்பிக்கையுடன் வோட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தும் மக்கள் பிரதிநிதிகள், பதவி கிடைத்தவுடன், இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அடிக்கும் கொள்ளைகளைப் பற்றி நாம் தொடர்ந்து படித்து வந்திருக்கிறோம். அதுவும் இந்தியாவில் , இது மிக அதிகமாக இருக்கிறது. அதேபோல், அப்படி நிகழும் ஊழல்களை முதலில் வெளிக்கொணர்வது ஒரு பத்திரிகையாளராகவே இருப்பதையும் நாம் பார்க்கிறோம். இதற்குக் காரணம், சமுதாயப் பொறுப்புணர்ச்சி என்பதை விட, செய்திகள் வெளியிடுவதில் உள்ள ஆர்வம் என்று சொல்லலாம். இதில், பிறநாடுகளில் நடக்கும் ஊழல்களுக்கும் இந்தியாவில் நடக்கும் ஊழல்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவெனில், பிற நாடுகளில், ஊழலில் சிக்கினால் கடும் தண்டனைகள் கிடைக்கும். அதேபோல், வெகுஜன மீடியா, அந்த ஊழலை வெளிக்கொண்டுவரத்தான் செய்யுமே தவிர, ஊழல் செய்த கட்சிக்கு ஆதரவாகச் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை.

உலகையே உலுக்கிய அப்படிப்பட்ட ஒரு நிஜ ஊழலை எப்படி இரண்டு துடிப்பான பத்திரிகையாளர்கள் வெளியே கொணர்ந்தனர் என்பதைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரு படத்தையே நாம் இன்று பார்க்கப்போகிறோம்.

ரிச்சர்ட் நிக்ஸன் என்ற பயரை நாம் கேள்விப்பட்டவுடன், தொடர்ந்து நமது மனதைத் தட்டும் ஒரு விஷயம் – வாட்டர்கேட் ஊழல். நம்மில் பல பேருக்கு இது என்னவென்றே தெரியாமல் இருந்தாலும், வாட்டர்கேட் என்ற பெயர் மட்டும் நினைவில் பளிச்சிடும். அதுதான் இந்த ஊழலின் தாக்கம். எனவே, எளிமையான வார்த்தைகளில், இந்த வாட்டர்கேட் சமாசாரத்தை முதலில் பார்த்து விடுவோம். அதன்பின், படத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

ஆண்டு – 1972. ஒரு ஜூன் மாத மாலை. தேதி – 17. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், வாட்டர்கேட் என்ற ஒரு கட்டிடம். அதில்தான், டெமோக்ராட் கட்சியின் தலைமை அலுவலகம் இருக்கிறது. இந்த வாட்டர்கேட் கட்டிடத்தின் நுழைவாயில் கதவில், டேப்புகள் ஒட்டப்பட்டு, அதன் காரணமாக அதன் கதவு மூடப்படாமல் லேசாகத் திறந்திருப்பதை, செக்யூரிட்டி ஃப்ரான்க் வில்லிஸ் கண்டுபிடிக்கிறார். இதனைப் போலீஸுக்கு அவர் தெரிவிக்க, டெமாக்ராட் கட்சி அலுவலகத்துக்கு உள்ளே பதுங்கியிருந்த ஐந்து பேரைப் போலீஸ் கைது செய்கிறது. இந்த ஐந்து பேரும் யார் என்று பத்திரிகைகள் நோண்ட ஆரம்பிக்க, இந்த ஐந்து பேருமே, ரிபப்ளிக் கட்சியின் ஒரு முக்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த ஆண்டில், நிக்ஸன் மறுபடி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Committee to Re-elect the President’ (இனி, சுருக்கமாக CReeP) என்ற ரிபப்ளிக் கட்சியின் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருப்பதைப் பத்திரிக்கைகள் – குறிப்பாக – The Washington Post’ என்ற பத்திரிகை – தோலுரித்துக் காட்டியது. இந்த விஷயத்திலிருந்து, பட்டாசு பற்றிக்கொண்டது.

இதுதான் வாட்டர்கேட் ஊழலின் முதல் படி. சரி. இந்த ஐவரும், எதற்காக டெமோக்ராட் கட்சியின் அலுவலகத்துக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்தனர்? படத்தைப் பார்த்தால், இதற்கு விடை கிடைத்துவிடும். படத்தின் நிகழ்வுகளைப் பார்ப்பதன் மூலம், இக்கேள்விகளுக்கு விடை அறிய முயற்சிக்கலாம்.

இந்த ஐவரின் மீதும் கேஸ் நடக்கும் செய்தி, வாஷிங்டன் போஸ்ட்டின் நிருபர் பாப் வுட்வோர்டுக்குக் கிடைக்கிறது. அங்கே நேரில் செல்லும் அவர், இந்த ஐவரின் ரிபப்ளிக் கட்சித் தொடர்பைக் கண்டுபிடிக்கிறார். அதுமட்டுமல்லாது, இந்த ஐவரிடமும், ஒட்டுக்கேட்கும் கருவிகள் இருந்ததையும் அறிந்துகொள்கிறார். அந்த ஐவரில் ஒரு நபர், சி.ஐ.ஏவில் ஒருகாலத்தில் பணிபுரிந்து வந்ததையும் கண்டுபிடிக்கிறார். அவருக்குள் ஒரு பொறி தட்டுகிறது. உடனே தனது அலுவலகத்துக்குத் திரும்பும் அவர், இதனைப் பற்றிய ஒரு ரிப்போர்ட்டை அடித்து, பத்திரிக்கையில் வெளியிடக் கொடுக்க, சில நிமிடங்களிலேயே, மற்றொரு நபர், இந்த ரிப்போர்ட்டுகளை எடுத்து, அதனைத் திருத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். கோபமடையும் வுட்வோர்ட், அந்த நபரிடம் சென்று கத்த, படு கூலாக அந்த நபர், அவரது ரிப்போர்ட்டை இவரிடம் காட்டுகிறார். வுட்வோர்டின் ரிப்போர்ட்டே, இந்த நபரால் இன்னும் சிறப்பாகச் செப்பனிடப்பட்டு இருக்கிறது. மறுபேச்சே பேசாமல், தன்னிடம் உள்ள அத்தனை ஆதாரங்களையும் அந்த நபரிடமே ஒப்படைக்கும் வுட்வோர்ட், அவரையே ரிப்போர்ட் எழுதச் சொல்கிறார். அந்த நபரின் பெயர், கார்ல் பெர்ன்ஸ்டீன்.

பாப் வுட்வோர்டுக்கும் கார்ல் பெர்ன்ஸ்டீனுக்கும் (Bob Woodward & Carl Bernstein) உள்ள நட்பு, இப்படித்தான் தொடங்குகிறது. இந்தக் கேஸில் இருவரும் சேர்ந்து பணிபுரிய ஆரம்பிக்கிறார்கள்.

வுட்வோர்டுக்கு, அமரிக்க அரசு எந்திரத்தில், ஒரு சக்திவாய்ந்த தொடர்பு உண்டு. அவ்வப்போது இந்தத் தொடர்பு மூலமாக சில ஸ்கூப் செய்திகள் பெற்றுக்கொள்வது வுட்வோர்டின் வழக்கம். ஆனால், அது ஒரு படுரகசியமான தொடர்பு. அமெரிக்க அரசில் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய ஒரு தொடர்பு அது. இந்தத் தொடர்புக்கு வுட்வோர்ட் வைத்திருக்கும் ரகசியப் பெயரானது, ‘Deep Throat’ என்பதாகும். இந்த டீப் த்ரோட், அவ்வப்போது வுட்வோர்டை, ஒரு ரகசிய இடத்தில் – அது ஒரு பார்க்கிங் லாட் – சந்திப்பது வழக்கம். ஒவ்வொரு முறையும், ஆளரவமற்ற அந்த இடத்தில், நள்ளிரவு இரண்டு மணிக்குத்தான் இந்தச் சந்திப்பு நடைபெறும். அந்தச் சந்திப்பில், வுட்வோர்ட் அதுவரை சேகரித்துள்ள தகவலை அறிந்துகொள்ளும் இந்த மர்ம நபர், அவற்றில் எது சரி, எது தவறு என்று மட்டும் சொல்லி, சரியான பாதையில் வுட்வோர்டைச் செலுத்துவதும் வழக்கம். இந்தக் கேஸ் முடிந்து ஏறத்தாழ 25 – 30 வருடங்கள் வரை, டீப் த்ரோட் யாரென்றே தெரியாமல் இருந்தது. வுட்வோர்ட் அந்த ரகசியத்தைச் சொல்லாமலே இருந்துவந்தார். அதன்பின்பு, திடீரென்று ஒரு நாள், 2005ம் ஆண்டில், தொண்ணூற்றோரு வயதான ஒரு நபர் – மார்க் ஃபெல்ட் (Mark Felt) என்ற முன்னாள் FBI டெபுடி டைரக்டர் – தானாக முன்வந்து, தான் தான் டீப் த்ரோட் என்று சொல்லி, அந்த மர்மத்தை முடித்து வைத்தார்.

இந்த டீப் த்ரோட், CReeP அமைப்பில் சேர்ந்த ஆபரிமிதமான பணத்தைப் பற்றிய (தேர்தல் நிதி) விசாரணையை முதலில் மேற்கொள்ளுமாறு வுட்வோர்டிடம் சொல்ல, அதனைப் பற்றிய விசாரணை ஆரம்பமாகிறது. அந்த விசாரணையில், இந்த CReeP அமைப்பின் பெயரில் வழங்கப்பட்ட செக் ஒன்று, பிடிபட்ட ஐவரில் ஒரு ஆசாமியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட விஷயம் வெளிவருகிறது. இதெல்லாம் தமிழ்நாட்டில் சகஜமாக இருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் இது குற்றம். எனவே, இதனைப்பற்றிய விசாரணையைத் தொடருகின்றனர் இருவரும்.

அந்த விசாரனையின் முடிவில், இந்த CReeP அமைப்பினிடத்தில் இருந்த பல மில்லியன் டாலர்கள் பணத்தை வைத்துக்கொண்டு, ரிபப்ளிக் கட்சியினர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த டெமாக்ராட்டுகளின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதாகவும், அவர்களை ரகசியமாக உளவறிந்ததாகவும், அவர்களின் பெயரை வேண்டுமென்றே ரிப்பேர் செய்ததாகவும் தெரியவருகிறது. இந்த உளவறியும் விஷயத்தைச் செய்ய ஆணை பிறப்பித்தவர் யார்? என்ற கேள்வி அடுத்து எழுகிறது.

வெள்ளை மாளிகையைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தர் மட்டுமே இதனைச் செய்திருக்க முடியும் என்ற உண்மையையும் இருவரும் கண்டுபிடிக்கின்றனர். ஜனாதிபதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஹால்டெமேன் (Haldeman) என்ற நபரைப் பற்றிய செய்தி கிடைக்கிறது. அதேபோல், CReeP அமைப்பின் தலைவரான ஜான் மிட்சல் (John N Mitchell) என்பவரும் இதற்கு முக்கியக் காரணம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் இவர்களுக்குக் கிடைக்கிறது. பேப்பரில் மறுநாள் இந்தச் செய்தி வெளிவர, கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிறது பத்திரிகை அலுவலகம். அரசுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் என்ற அவப்பெயரும் கிடைக்கிறது. இருந்தாலும் தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத இந்த இரு துடிப்பான பத்திரிகையாளர்கள் வெளிக்கொணர்ந்த தகவல்களின் கனம் தாளாது, ஜனாதிபதி நிக்ஸன் ராஜினாமா செய்ய வேண்டி வருகிறது. பதவிக்காலத்திலேயே ராஜிநாமா செய்த அமெரிக்க அரசின் ஒரே கறைபடிந்த ஜனாதிபதி என்ற புகழும் நிக்சனுக்குக் கிடைக்கிறது (க்ளிண்டன் விவகாரம் வேறு மாதிரியானது. அவரது சாகசங்களை மக்கள் ரசிக்கவே செய்தனர்).

இதுதான் இப்படத்தின் கதை. வாட்டர்கேட் விவகாரம் உலகப்பொதுமறை என்பதால் கதையைச் சொல்லிவிட்டேன். ஆனால், அது படத்தின் விறுவிறுப்பைப் பாதிக்கவே செய்யாது.

இனி, இப்படத்தின் சில சுவாரஸ்யங்களைப் பற்றிப் பார்ப்போம்.

இப்படமானது, பாப் வுட்வோர்டும் கார்ல் பெர்ன்ஸ்டீனும் எழுதிய ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன விசேஷம் என்றால், அவர்கள் இப்புத்தகத்தை எழுதத் துவங்கும் முன்னரே, வுட்வோர்டைத் தொடர்பு கொண்ட இளம் ராபர்ட் ரெட்ஃபோர்ட், புத்தகத்தை, இந்த இருவரும் தங்களது பார்வையில் சொல்வது போன்று எழுதச் சொல்ல, இருவரும் அப்படியே எழுதினர். அதனைத் தொடர்ந்து, அப்புத்தகத்தின் உரிமையை வாங்கிய ராபர்ட் ரெட்ஃபோர்ட், அதனைப் படமாகத் தயாரித்தார். தொடக்கத்தில் இரண்டு புதுமுகங்களை வைத்து எடுக்கப்படுவதாக இருந்த இப்படத்தில், வார்னர் பிரதர்ஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ராபர்ட் ரெட்ஃபோர்டே நடித்தார். தன்னைப் போன்ற ஒரு ஸ்டார் முக்கிய வேடத்தில் நடித்து, மற்றொருவர் புதுமுகமாக இருந்தால் படத்தின் நோக்கம் பாதிக்கப்படும் என்பதால், தன்னைவிடத் திறமையான நடிகரான டஸ்டின் ஹாஃப்மேனை இன்னொரு வேடத்தில் நடிக்க வைத்தார்.

டஸ்டின் ஹாஃப்மேனின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது? உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர். கமலின் ஆதர்ச நாயகன். இப்படத்தில், துடிப்பான, கோபமான, சற்றே நட்டு கழன்ற ஒரு வேடம். பிய்த்து உதறியிருக்கிறார். ராபர்ட் ரெட்ஃபோர்டும் டஸ்டின் ஹாஃப்மேனும், கணேஷ் வஸந்த் போன்றவர்கள். நிஜவாழ்விலும். அதே குணாதிசயங்களை இந்தப் படத்திலும் காட்டி நடித்திருப்பதால், இவர்களைப் பார்க்கவே அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. குறிப்பாக, இப்படத்தின் வசனங்களில், ராபர்ட் ரெட்ஃபோர்ட், டஸ்டின் ஹாஃப்மேனுக்குக் கூறிய யோசனை என்னவெனில், இருவருமே இருவரின் வசனங்களையும் மனப்பாடம் செய்துவிடுவது. இதன்மூலம், இருவருக்கும் அட்டகாசமான ஒரு கெமிஸ்ட்ரி உருவாகும் என்பது நோக்கம். அதேபோல், இப்படத்தின் பல காட்சிகளில், இந்த இருவரும் ஒரே சமயத்தில் ஒரே வசனத்தைப் பேசுவது போல பல இடங்களில் வரும். அந்தக் காட்சியில் இருக்கும் மற்றவர்கள் இதனால் திகைத்துப் போவதும் நன்றாகத் தெரியும். ஆனால், அவர்கள் அப்படித் திகைப்பது, மிக இயல்பாகப் படத்துடன் ஒத்துப் போய் விடும். நீங்களே பாருங்கள்.

அதேபோல், படத்தின் ஒளிப்பதிவு ஒரு அற்புதம். மிகப்பெரிய ஒரு அரசியல் ஊழலைத் துப்பறியும் கற்றுக்குட்டிகளான இந்த இரு ரிப்போர்ட்டர்களும், வாஷிங்டனாகிய வைக்கோல்போரில் சிறிய ஊசியைத் தேடுபவர்கள் என்று நமக்கு நினைவுறுத்தும் இரண்டு அட்டகாசமான காட்சிகள் இதில் உண்டு. ஒன்று – பல கார்டுகளைக் கைகளில் வைத்துக்கொண்டு, அவற்றில் உள்ள தகவல்களை இருவரும் படிக்கையில், மெதுவாகப் pan ஆகும் காமெரா, ஒரு டாப் ஆங்கிள் ஷாட்டாக மாறும்போது, அவர்களைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான மாந்தர்களின் கும்பலில் இருவரும் காணாமலே போய் விடுகிறார்கள். அதேபோல், மற்றொரு தருணத்தில், இருவரும் காரில் செல்கையில், ஹெலிகாப்டர் ஷாட்டாக மாறும் ஒரு ஷாட்டில், மொத்த நகரத்திலும் இவர்கள் மறைந்துபோய் விடுவது அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாமல், டீப் த்ரோட்டை வுட்வோர்ட் சந்திக்கும் காட்சிகளில் உள்ள திகிலை கவனியுங்கள்.

இந்தப் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நிகழ்காலத் தமிழகத்தில் இதே போன்று நடக்கும் சில அரசியல் ஊழல்கலைப் பற்றிய நினைவு வந்தது. இங்கும், ஆட்சி செய்பவருடைய நம்பிக்கைக்குரிய அமைச்சர் ஒருவர் தான் ஊழல்வாதி. அது, ஆட்சிப்பொறுப்பில் உள்ளவருக்கும் தெரியும். இதிலும் பல கோடிகள் கைமாறியிருக்கின்றன. இதிலும், உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கின்றன. இதிலும், அரசு இயந்திரம் இந்த ஊழலில் பெருமளவு சம்மந்தப்பட்டிருக்கிறது. இவ்வளவு ஒற்றுமைகள் அடங்கிய நிகழ்கால அரசியல் ஊழலில், இப்படத்தில் வருவது போலவே, ஆட்சியில் இருப்பவர் ராஜினாமா செய்வாரா? அது மட்டும் தமிழ்நாட்டில் நடக்காது என்று தோன்றுகிறது.

நான் பார்த்த அரசியல் படங்களில், இதுவரை என்னை மிகவும் கவர்ந்த படம் என்று ‘Lives of Others’ (க்ளிக்கிப் படிக்கலாம்) என்ற ஜெர்மானியப் படத்தைத் தான் சொல்வேன். ஆனால் இன்று, இப்படம் அந்த முதல் இடத்தைப் பிடித்துவிட்டது (மூன்றாம் இடத்தில் JFK).

All the president’s Men படத்தின் ட்ரெய்லர் இங்கே காணலாம்.

  Comments

19 Comments

  1. //டஸ்டின் ஹாஃப்மேனின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது? உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர். கமலின் ஆதர்ச நாயகன்.//

    இவரை விடவே மாட்டீங்களா
    “நீஈஈஈஈஈஈஈல வானம் ” படமாக்கப்பட்ட உத்தியை எங்கிருந்து லவட்டினார் எனப் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதோ இந்த இல் பாருங்கள்

    http://www.youtube.com/watch?v=eowaEExwNMc

    Reply
  2. என்னது 3G வந்ததுக்கப்புறம் அதே வேகத்துல பதிவுகளும் வர ஆரம்பிச்சிருச்சு?

    ஆனா 3G ஆஸ்தான விளம்பரதாரர் இன்னும் தூங்கிக்கிட்டே இருக்காரே!

    Reply
  3. Watergate விவகாரம் அமெரிக்காவில் இன்றும் பேசப்படும் ஒரு பரபரப்பான விவகாரம்.தமிழ்நாட்டில் இருக்கும் நாம் இது போன்ற விசயங்களை படத்திலோ புத்தகத்திலோ படித்து விட்டு,’ஹும்,இது மாதிரி இங்க நடத்தா எவ்ளோ நல்லா இருக்கும்!’ என்று தாடையை சொரிந்து கொள்ளும் அவல நிலையில் இருக்கிறோம்.ஆனா,இதுல ஒரே நம்பிக்கையான விஷயம் என்னன்னா,நம்ம பயபுள்ளைக தேர்தல் அப்ப உஷாரா விட்டத பிடிச்சுடுவாணுக(அப்டின்னு நம்பிக்குறாணுக). 😉

    Reply
  4. பொதுவாக அரசியல் படங்கள் என்றாலே ஒரு ஆர்வம் அதிகம்தான் ஏனென்றால் அவை கற்பனையில்லை. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவானவைதானே!:-)

    Reply
  5. நண்பரே,

    மிகவும் சிறப்பாக விவரித்து எழுதியிருக்கிறீர்கள். அட்டகாசமான பதிவு.

    Reply
  6. எப்படி தல…. இப்படி தொடர்ந்து பதிவா போடுறிங்க……. என்னால படிக்க கூட முடியல.அதாவது படிக்க நேரம் இல்ல……நட்ச்சத்திர பதிவர்னா சும்மாவா……

    Reply
  7. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக பார்க்க… இந்தப் படம் (Frost/Nixon) உதவலாம்.

    http://hollywoodbalas.blogspot.com/2009/01/frostnixon-2008.html

    [ஐடி மாத்தி.. மாத்தி கமெண்ட் போடுறதுக்குள்ள தாவு தீருதுங்க. உங்க ப்லாகில் கடைசி கமெண்ட் போட்டேன்னு நினைச்சேன். திரும்ப உங்க ப்லாகிலேயே முதல் கமெண்டா ஆரம்பிக்கிறேன். :)]

    Reply
  8. @ தர்ஷன் – அந்த வீடியோ பார்த்தேன் 🙂 .. அதுக்கு ஃபேஸ்புக்ல பதில் போட்டாச்சி 🙂

    @ சு.மோகன் – 🙂 3G நல்லா இருக்கு… ஆஸ்தான விளம்பரதாரர், ஒக்காந்து பதிவுகளை ரெடி பண்ணிகினு இருக்குறதா கேள்வி… கபால்னு ஒரு மணி நேரத்துக்கு ஒரு பதிவு வீதம் சீக்கிரமே வரப்போவுது பாருங்க 🙂

    @ இலுமி – தாடைய சொறிஞ்சிக்கினு தான் இருந்தேன்.. தாடி.. அரிக்கிது 🙂

    தேர்தல் வரட்டும் பயபுள்ளைங்க என்ன பண்றானுங்கன்னு பார்ப்பமே 🙂 .. இவனுங்களுக்கு ரிவிட்டு அடிக்கணும்.. பார்ப்போம் 🙂

    @ எஸ்.கே – இதே காரணத்துக்காகத்தான் எனக்கும் அரசியல் படங்கள் பிடிக்கும் 🙂

    @ காதலரே – மிக்க நன்றி 🙂 ..

    @ டெனிம் – என்னாது நட்சத்திர பதிவரா? 🙂 அதெல்லாம் பழைய கதை நைனா 🙂 . . ஒரே ஒரு நாளுக்கு இண்டர்வெல் உட்ருக்கேன்.. ஆசுவாசப்படுத்திக்கங்க.. இனி பதிவு நாளை தான் 🙂

    Reply
  9. @ பாலா – உங்க கமெண்டைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு 🙂 .. செகண்ட் இன்னிங்ஸை இங்கருந்தே ஆரம்பிங்க.. 🙂

    சீக்கிரமே பழைய ப்ளாக்கை தூசி தட்டுங்க.. இந்த நேரம் பார்த்து நம்ம கீதப்ரியன் ஷார்ஜா போய்க்கினு இருக்காரு.. நாளை தான் வருவாரு போல.. 🙂

    Reply
  10. செகண்ட் இன்னிங்ஸா…. உங்களுக்கு என்ன பாவம் பண்ணினேன்? 🙂

    Reply
  11. //ஹாலிவுட் பாலா said…

    செகண்ட் இன்னிங்ஸா…. உங்களுக்கு என்ன பாவம் பண்ணினேன்? :)//

    பாலா நீங்கதானா? எப்படி இருக்கீங்க?

    Reply
  12. நண்பா
    அட்டகாசமான அறிமுகம் விரைவில பார்க்கிறேன்
    ஹாலி பாலி வணக்கம்
    சீக்கிரம் எழுத வாங்க தல

    Reply
  13. Its nice to read and nice to watch …thanks

    Reply
  14. தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய இடியட் நாவலின் மொழிபெயர்ப்பு.முன்பதிவு செய்து படித்து பயன்பெறுங்கள்.இது விளம்பரமல்ல .நல்ல எழுத்து முயற்சிக்கு ஆதரவளிப்போம்.கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்.
    .
    .
    http://www.masusila.com/2010/12/blog-post_11.html

    Reply
  15. மக்கள், நம்பிக்கையுடன் வோட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தும் மக்கள் பிரதிநிதிகள், பதவி கிடைத்தவுடன், இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அடிக்கும் கொள்ளைகளைப் பற்றி நாம் தொடர்ந்து படித்து வந்திருக்கிறோம்.////
    .
    .
    அட இதெல்லாம் பேசிகினு இருந்தா இவனுங்க திருந்துற மாதிரி தெரியல.Saw படம் மாதிரி இவனுங்க கூட கேம் வெளையாடனும் (I want to play a game.Tobin Bell இன் குரலை மறக்க முடியாது).இந்த படம் பார்த்துவிட்டு சொல்கிறேன்.

    Reply
  16. படத்தை பற்றி அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சி மேய்சிட்டிங்க .நன்றி .வாழ்த்துக்கள் .

    Reply
  17. ரெண்டு நல்ல நடிகர்கள் சேர்ந்து நடித்த ஒரு நல்ல படம். எனக்கு நீங்க சொன்ன மாதிரி WATERGATE பத்தி எதுவும் தெரியாம பார்த்த படம்தான். இருப்பினும் படம் விறுவிறுப்பாகவே இருந்தது. ROBERT REDFORD நடித்ததில் பிடித்த படங்களுள் ஒன்று (மற்ற இரண்டு படங்கள் BRUBAKER மற்றும் SPY GAME). DUSTIN HOFFMAN நல்ல நடிகர். இவருடைய படங்கள் TOOTSIE , KRAMER vs KRAMER வரிசைல இந்த படமும் பிடிக்கும்

    Reply
  18. Arun Prasath

    God Damn! Excellent Post. Dustin Hoffman…. **tha chanceless 🙂

    Reply

Join the conversation