Amadeus (1984) – English

by Karundhel Rajesh February 8, 2010   English films

வுல்ஃப்கேங் அமெடியுஸ் மோஸார்ட்.

உலக அளவில் இன்றும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். 250 வருடங்களாகக் கேட்கப்படும் இசை இவருடைய படைப்பு. இந்த உலகம் கண்ட ஜீனியஸ்களில் ஒருவர். மிகச்சிறிய வயதில் – 35 – இறந்த ஒரு மேதை. தனது ஐந்தாவது வயதில் இருந்து இசையமைக்க ஆரம்பித்தவர். இன்றும் பிரபலமான பல சிம்ஃபனிகளையும் ஓபராக்களையும் எழுதியவர். நமது டைட்டன் விளம்பரத்தில் வரும் இசை கூட இவருடையது தான். அப்படிப்பட்ட ஒரு ஜீனியஸின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு விறுவிறுப்பான படமே இந்த அமெடியுஸ்.

இசைத் துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர் ஸாலியேரி. வியன்னாவின் அரசவை இசையமைப்பாளர். தனது வாழ்வின் கடைசி வருடங்களில் இருப்பவர். ஒருநாள், அவர் தனது கழுத்தை அறுத்துக் கொள்வதிலிருந்து படம் தொடங்குகிறது. மருத்துவமனையில் அவரை ஒரு பாதிரியார் சந்திக்கிறார். கழுத்தை அறுத்துக் கொள்வதற்கு முன், தான் தான் மோஸார்ட்டைக் கொன்றதாக அவர் கூக்குரலிட்டதைப் பற்றி வினவும் பாதிரியார், தன்னிடம் அவரது பாவங்களைச் சொல்லி, பாவமன்னிப்பு வாங்கிக் கொண்டால் கடவுள் அவருக்கு அருள் புரிவார் என்று சொல்கிறார். இதைக் கேட்டு சிரிக்கும் ஸாலியேரி, அவருக்குத் தனது முக்கிய இசைக்கோர்ப்புகளிலிருந்து சில பகுதிகளை வாசித்துக் காட்டுகிறார். எதுவும் பாதிரியாருக்குத் தெரிவதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட இசையைக் கண்டுகொண்டு, அதனுடனே பாடவும் செய்கிறார். அது மோஸார்ட்டின் இசை என்று சொல்லும் ஸாலியேரி, பேச ஆரம்பிக்கிறார்.

ஸாலியேரி இறைவனின் ஆணைப்படி வாழும் ஒரு ஒழுக்கமான பிரஜை. தான் இசையமைப்பாளராக ஆனது கடவுளின் கிருபை என்றும், தனக்குக் கடவுளின் ஆசி எப்பொழுதும் உண்டு என்றும் எண்ணி வாழ்ந்துகொண்டிருப்பவர். அப்போது ஒருநாள், வியன்னாவுக்கு மோஸார்ட் வந்திருப்பதாக ஒரு பரபரப்பு கிளம்புகிறது. மோஸார்ட்டின் இசை, ஒரு புயல் போல ஜெர்மனியைக் கலக்கிக் கொண்டிருந்த ஒரு காலகட்டம். தனக்குப் போட்டியாக வந்துள்ள ஒரு இசையமைப்பாளர், எப்படி இருப்பார் என்று காண ஸாலியேரி செல்கிறார். அங்கு, அனைவரும் குழுமியிருக்க, மோஸார்ட்டைக் காணவில்லை. ஸாலியேரி இனிப்புப் பிரியராக இருப்பதால், உணவு மேஜை அருகில் சென்று இனிப்புகளை உண்டு கொண்டிருக்கையில், அங்கு திடீரென ஒரு பெண்ணைத் துரத்திக்கொண்டு ஒரு இளைஞன் வருகிறான். ஹாலில் இசை தொடங்குகிறது. தான் இல்லாமலேயே தனது இசை தொடங்கிவிட்டது என்று கூறிக்கொண்டே அவன் ஓடுகிறான். அப்பொழுதுதான், ஸாலியேரி, அதுதான் மோஸார்ட் என்று தெரிந்து கொள்கிறார். மோஸார்ட்டின் இசை, அங்குள்ள அனைவரின் இதயங்களிலும் நிரம்புகிறது. அதுவரை அப்படிப்பட்ட இசையை ஒருவரும் கேட்டதில்லை. ஸாலியேரி பிரமித்து நின்றுவிடுகிறார். கடவுளே வந்து வாசிப்பதுபோன்ற ஒரு தெய்வீக இசை அது.

வீட்டுக்குச் செல்லும் ஸாலியேரி, ஏசுவிடம் முறையிடுகிறார். இவ்வளவு காலம் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, கடவுள் அளித்த கொடையான இசையை வாசித்துக் கொண்டு இருக்கும் தனக்குக் கடவுளின் இந்த விசேஷக் கிருபை கிடைக்காமல், பெண்களைத் துரத்திக் கொண்டிருக்கும் ஒரு ஊதாரி இளைஞனுக்கு இந்த அருமையான இசைத் திறமை எப்படி அளிக்கப்பட்டது என்று இறைஞ்சுகிறார்.

மோஸார்ட்டின் இசையில் வியந்த ஜெர்மானிய அரசர் ஜோஸப் II, அவரைச் சந்திக்க விரும்புகிறார். அப்பொழுது, அரசவை இசையமைப்பாளரான ஸாலியேரி, ஒரு இசைக்கோர்வையை எழுதி, மோஸார்ட்டுக்கு வரவேற்பை அளிக்க விரும்பி, மன்னரிடம் செல்கிறார். மன்னரே அந்த இசையை, மோஸார்ட் வரும்போது பியானோவில் வாசிக்கிறார். மோஸார்ட் என்ற அந்த இளைஞன், குறும்புச் சிரிப்போடு அங்கு ஓடி வருகிறான். அவனிடம் மன்னர், ஒரு ஓபெராவை இசையமைக்கச் சொல்கிறார். அப்போது, ஸாலியேரியின் இசையைப் பற்றிச் சொல்லும் மோஸார்ட், அது தனது மூளையில் பதிவாகியிருப்பதாகக் கூறி, அதை வாசித்துக் காட்டி, அதில் ஓரிரு திருத்தங்கள் செய்து இன்னமும் மெருகேற்றி விடுகிறான். இது ஸாலியேரியின் பொறாமைத் தீயைக் கிளறி விடுகிறது.

வியன்னாவில் மோஸார்ட்டின் முதல் ஓபெரா. ‘Abduction from the Seraglio‘. பார்வையாளர்கள் மெய்மறந்து ரசிக்கும்படியான இசை. மன்னர் அசந்துபோய் விடுகிறார். அவரைச் சுற்றியுள்ள இத்தாலியன் இசையமைப்பாளர்களுக்கோ, ஒரு இளைஞன் திடீரென வந்து தங்களது பழமையான சங்கீதத்தை மாற்றி, புதுப்புது இசைக்குறிப்புகளை எழுதி, நிறைய புத்துணர்ச்சியோடு இசைப்பது பிடிக்கவில்லை. மன்னருமே இப்படிப்பட்ட ‘அரைத்த மாவு’ சங்கீதத்திலேயே ஊறித் திளைத்தவராதலால், அவராலும் இந்த இசைப்புயலைத் தாங்க முடிவதில்லை. இருந்தாலும், அவருக்கு மோஸார்ட்டின் இசை, மிகவும் பிடித்து விடுகிறது. எனவே, அவரது இசையில், மனிதக் காதுகளின் கேட்கும் வரம்புக்கும் மீறிய குறிப்புகள் பல இருப்பதாகவும், அவற்றை அகற்றினால் மோஸார்ட் ஒரு மேதையாகலாம் என்றும் சொல்லி விடுகிறார்.

இது மோஸார்ட்டுக்குப் பிடிப்பதில்லை. ஐரோப்பாவிலேயே தனக்கு நிகரான ஒரு இசையமைப்பாளர் இல்லை என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அது உண்மையும் கூட. எனவே, இந்த இத்தாலியர்கள் தனக்கெதிராகப் பறிக்கும் குழியை எண்ணி எண்ணி வெறுப்படைகிறார். தனது இசையை ரசித்த ஸாலியேரி, தன்னுடைய அனுதாபி என்று எண்ணிக்கொண்டு, தனது மனக்குமுறலை ஸாலியேரியிடம் கொட்டுகிறார். ஸாலியேரியும் அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே, இன்னொருபுறம் மன்னரிடம் சென்று மோஸார்ட்டைப் பற்றிக் கோள் மூட்டுகிறார்.

மன்னரின் உறவுக்கார இளவரசிக்கு இசை ஆசிரியரை நியமிக்க, மன்னர் முடிவு செய்கிறார். ஸாலியேரியிடம், மோஸார்ட் தான் இதற்கு சரியான ஆள் என்றும் சொல்கிறார். பொறாமைத்தீயில் வெந்துகொண்டிருக்கும் ஸாலியேரி, மன்னரின் மனதை மாற்றி, அனைத்து இசையமைப்பாளர்களின் இசைக்குறிப்புகளையும் வாங்கி, அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கச் சொல்லிவிடுகிறார். மோஸார்ட்டுக்கு மறுபடியும் கோபம் வருகிறது. தனது குறிப்புகளைத் தரமுடியாது என்று முடிவெடுத்து விடுகிறார். மோஸார்ட்டின் மனைவியான கான்ஸ்டேன்ஸ், மொஸார்ட்டுக்குத் தெரியாமல் ஸாலியேரியிடம் சென்று, மோஸார்ட்டின் இசைக்குறிப்புகளை அவரிடம் அளித்து, மோஸார்ட்டைத் தேர்ந்தெடுக்குமாறு மன்றாடுகிறாள். இந்த வாய்ப்பு கிடைக்காவிடில், வியன்னாவில் தங்கள் குடும்பம் வாழ வழியில்லாமல் போய்விடும் என்று கெஞ்சுகிறாள். இந்த இசைக்குறிப்புகள், மோஸார்ட்டே தன் கைப்பட எழுதியவை. ஒரிஜினல் பிரதிகள். அவற்றைக் கையில் வாங்கிப் பார்க்கும் ஸாலியேரியின் மனதில் அந்த இசை பெருகி வழிகிறது. உணர்ச்சிப் பெருக்கால் அவரது கண்களில் கண்ணீர் ததும்புகிறது. அந்த இசைக்குறிப்புகள் எதிலும் ஒரு சிறிய அடித்தல் திருத்தல் கூட இல்லை. அத்தனையும் மோஸார்ட்டின் மூளையில் உதித்தவை. அவற்றை மோஸார்ட் கடகடவென்று எழுதிச் செல்வதை உணர்கிறார்.

கான்ஸ்டேன்ஸிடம், மோஸார்ட் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால், அன்று இரவு அவள் மட்டும் தனியாக வரவேண்டும் என்று சொல்கிறார். அதிர்ந்து போகும் கான்ஸ்டேன்ஸ், தங்களது குடும்பத்தின் வறுமை காரணமாக, அன்று இரவு தனித்து வருகிறாள். தனது உடைகளை அவிழ்க்கும் அவளது நிர்வாணத்தை, வேலையாள் பார்க்க வைக்கும் ஸாலியேரி, அவளைக் கிளம்பிச் செல்லச் சொல்லிவிடுகிறார். வாய்ப்பும் இன்னொரு இசையமைப்பாளருக்குப் போகிறது. கான்ஸ்டேன்ஸ் மனது வெறுத்துப் போய் விடுகிறாள்.

மோஸார்ட், மதுபானம் அருந்திக்கொண்டும், வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டும் இருப்பதால், அவர்களது குடும்பம் வறுமையில் வாடுகிறது. குடிகாரரான மோஸார்ட்டை, எவரும் தங்களது பிள்ளைகளூக்கு இசை கற்றுக்கொடுக்க அழைப்பதில்லை. ஆனால் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் எழுதிக்குவிக்கும் மோஸார்ட், ஏராளமான தரமான இசைக்குறிப்புகளை உருவாக்குகிறார். மோஸார்ட்டின் தந்தை, இந்தக் காலகட்டத்தில் இறந்து விடுகிறார். தந்தை மீது பேரன்பை வைத்திருக்கும் மோஸார்ட்டுக்கு இது ஒரு அதிர்ச்சி. தந்தையின் நினைவை மறக்க முடியாமல், அவரது நினைவாக ‘Don Giovanni‘ என்ற இன்னொரு அற்புத ஓபெராவை எழுதி உருவாக்குகிறார்.

மோஸார்ட்டின் அத்தனை ஓபெராக்களையும், சில நாட்களிலேயே தனது செல்வாக்கை வைத்து இழுத்து மூடி விடுகிறார் ஸாலியேரி. ஆனால், இச்சமயங்களில் கூட மோஸார்ட்டின் கூடவே இருந்து, அவரை ஆதரிப்பது போன்ற ஒரு நடிப்பை நடிக்கிறார். மட்டுமல்லாது, மோஸார்ட்டைக் கொலை செய்யவும் ஒரு திட்டம் தீட்டி விடுகிறார். அத்தனையும், மோஸார்ட்டின் இசை மேதமையைக் குறித்த அவரது போறாமையின் விளைவே. இது எதையும் அறியாத மோஸார்ட், பல இடங்களில் சென்று, பணத்துக்காக இறைஞ்சுகிறார். எந்தப் பலனும் இல்லை.

ஸாலியேரி, மோஸார்ட்டின் தந்தையைக் குறிக்கும் ஒரு மாறுவேடமிட்டு, மோஸார்ட்டிடம் சென்று, ஒரு பெரிய மனிதர் இறந்துவிட்டதாகவும், அவருக்காக ஒரு இரங்கல் இசை (Requiem) எழுத வேண்டும் என்றும் கூறி, பணத்தை அளிக்கிறார். ஆனால், இது மிகவும் சீக்கிரம் நடக்க வேண்டும் என்றும் சொல்கிறார். தனது தந்தையின் ஆவிதான் தன்னிடம் திரும்ப வந்திருப்பதாக எண்ணும் மோஸார்ட்டுக்கு, உடல்நலம் குன்றுகிறது. ஸாலியேரி மீண்டும் மீண்டும் வந்து மோஸார்ட்டைப் பயமுறுத்தத் தொடங்குகிறார். ஒரு சமயத்தில், இரண்டே நாட்களில் இந்த இரங்கல் இசை வேண்டுமென்றும், அதற்காக நூறு வெள்ளிப்பணம் அளிக்கப்படும் என்றும் மோஸார்ட்டுக்குத் தெரியப்படுத்துகிறார்.

பணத்திற்காக மிகவும் ஏங்கும் மோஸார்ட், தான் மிகவும் உடல்நலம் குன்றியிருப்பதால், ஸாலியேரியின் உதவியை நாடுகிறார். மோஸார்ட் படுத்துக்கொண்டே இசைக்குறிப்புகளைச் சொல்ல, ஸாலியேரி அவற்றை எழுதத் தொடங்குகிறார். மோஸார்ட் சொல்லிச் செல்லும் வேகத்துக்கு அவரால் எழுத முடிவதில்லை. இருந்தாலும், அந்த இரங்கல் இசையை ஓரளவுக்கு முடிக்கிறார்கள் இருவரும். அப்போது அங்கு வரும் கான்ஸ்டேன்ஸ், ஸாலியேரியைக் கண்டு அதிர்ந்து அவரை வெளியே போகச் சொல்கிறாள். மறுக்கும் ஸாலியேரியை வெளியே அனுப்பச் சொல்லி மோஸார்ட்டிடம் முறையிடுகிறாள். மோஸார்ட் இறந்து வெகுநேரம் ஆனது, அப்பொழுதுதான் அவளுக்குத் தெரிகிறது. ஸாலியேரியின் திட்டம் பலிக்கிறது.

மோஸார்ட்டின் உடல், அக்காலத்திய வழக்கப்படி, மற்ற பிணங்களோடு சேர்ந்து புதைக்கப்படுகிறது.

இக்கதையைச் சொல்லி முடிக்கும் ஸாலியேரி, ஒரு மனநிலை நோயாளிகளின் கூடத்தில் இருக்கிறார். ஏதேதோ உளறிக்கொண்டே, சக்கர நாற்காலியில் தள்ளிச் செல்லப்படுகிறார். படம் முடிகிறது.

உண்மையைச் சொல்லி விடுகிறேன். சமீப காலத்தில், நான் இந்த அளவு engross ஆகிப் பார்த்த படம் வேறு ஒன்றுமில்லை. இதன் இயக்குநர் மிலோஸ் ஃபோர்மேன். One Flew Over a Cuckoo’s Nest’ படத்திற்காக ஆஸ்கர் வென்ற அதே இயக்குநர். இப்படத்துக்கும் ஆஸ்கர் வென்றார். எட்டு ஆஸ்கர்களை வென்ற இப்படத்தில் நான் கண்ட சிறப்பம்சங்களைப் பற்றி நாளை தனியாக ஒரு பதிவிடுகிறேன். இப்பொழுதே பதிவு வெகு நீஈஈஈஈஈளமாக ஆகிவிட்டது. நாளை வரும் பதிவில், மோஸார்ட்டைப் பற்றிய நிறைய சுவாரஸ்யமான தகவல்களோடு, அவரது இசையைப் பற்றியும் நிறைய தகவல்களைப் பார்க்கப் போகிறோம். இந்தப் படத்தைப் பற்றிய என்னுடைய அலசலையும் நாளை படிக்கலாம். எனவே, நாளை சந்திப்போம்.

Amedeus படத்தின் ட்ரெய்லர் இங்கே.

டிஸ்கி – இந்த விமர்சனத்தில் வரும் மோஸார்ட்டைப் பற்றிய குறிப்பும் ஸாலியேரியைப் பற்றிய குறிப்பும் வேறு இசையமைப்பாளர்களைக் குறிப்பதாக இதைப் படிப்பவர்கள் கருதினால், அதற்கு www.karundhel.com எந்தவிதப் பொறுப்பும் ஏற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  Comments

29 Comments

  1. Super cool… 🙂

    Reply
  2. நல்ல அறிமுகம் தோழா.

    நாளை மொஸார்ட்டைப் பத்தியா

    சொல்லுங்க, எழுதுங்க எவ்ளோ வேணும்னாலும் கேட்டுகிட்டே இருக்க தயார்.

    Reply
  3. @ ஷ்ரீ – நன்றி :–) .. . நீங்கள் எனது போன பதிவில் சொன்ன விமரிசனம் இது தானே. . நாளை இதன் அடுத்த பகுதி வெளிவரும் . . நாளையும் வந்து படித்து, பின்னூட்டம் போடுங்கள். . :–)

    @ சுப.தமிழினியன் – வாங்க. . என்னால முடிஞ்சவரைக்கும் சுவாரஸ்யமா எழுதப் பாக்குரேன் நாளை . . மிக்க நன்றி . .

    @ நாஞ்சில் பிரதாப் – பீத்தோவன் பத்தியும் படம் இருக்கு.. ஆனா அதே பேருல ஒரு நாயப் பத்தியும் இருக்கு. . இதுல உங்களுக்கு எந்த பீத்தோவன் வேணும் பாஸு . . :–) . .

    @ காதலரே – மிக்க நன்றி . .:–)

    Reply
  4. //சென்ஷி said…

    🙂 //

    ரிப்பிட்டேய்ய்…

    Reply
  5. இந்தப் படத்தை.. போன வருடம் ‘தமிழ் மசாலா’ பிரேம்ஜி எழுதியிருந்தார். அப்ப பார்த்தேன்.

    வேற என்ன சொல்லயிருக்கு..!! அதான் நீங்களே எல்லாத்தையும் எழுதி முடிச்சிட்டீங்களே! 🙂 🙂
    ==

    இந்தப் படத்தை… ஒரு மாதிரி லைட்டா சுட்டுதான்.. ‘சிகரம்’ படத்தை எடுத்திருப்பாங்க.

    Reply
  6. நேத்து தான் உங்களோட One flew over the cuckoos nest விமர்சனம் பார்த்தேன்..ரொம்ப நாளா அந்த படம் கலைக்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்து பார்காமலே இருந்தேன்..நீங்கள் எழுதி இருந்த விதத்தால் பார்த்தேன்..நல்லா தான் இருந்துச்சு..

    Reply
  7. @ சென்ஷி – வாங்கோ வாங்கோ . .ரொம்ப நாளு கழிச்சி வந்துருக்கேள் . . :–)

    @ கண்ணா – ஹீ ஹீ ஹீ . . :–) [வேற எப்புடி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல பாஸு . . :–)]

    @ அண்ணாமலையான் – உங்கள விடவா . .நானெல்லாம் தூசு . . நீங்கதான் பாஸு . .

    @ பாலா – இதுவா சிகரம்? சிகரம் பார்த்து ரொம்ப நாளு ஆச்சுதே . . எனிவே, அதையும் இன்னொரு தபா பாத்துர வேண்டியதுதான் . .

    @ வினோத் கெளதம் – அது ஒரு அருமையான படம்ங்க . .ஆனா அதைவிடவும் எனக்கு இதுதான் புடிச்சது . .கம்பேரிட்டிவா . .அதே டைரடக்கரு தான் இதுக்கும் . .சும்மா பின்னிட்டாரு . .

    @ kailash – நன்றி .. நன்றி . . :–)

    Reply
  8. நண்பர் ராஜேஷ்,
    போன மாதம் தான் இந்த படம் பார்த்தேன்.மிகவும் லயித்தேன்,மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.மீண்டும் பார்க்க தூண்டும் எழுத்து.ஓட்டுக்கள் போட்டாச்சு

    Reply
  9. இந்தப் படம் இன்னும் பாக்கல. ஆனால் இனிமையான இசை போன்றே எழுதியிருக்கிறீர்கள். பிப்ரவரி-18 பார்ட்டிக்கு எங்கே வரணும்?

    Reply
  10. @ கார்த்திகேயன் – நண்பா . .நீங்க இத பார்த்தத குறிச்சி மகிழ்ச்சி . .உங்களுக்கு இதபத்தி சொல்லனும்னு நெனைச்சேன் . .சூப்பர். . !!

    @ மயில் – பார்ட்டி கோவைல தான் . . 🙂 ஒரு மெகா வி ஐ பி வரப்போறாரு . .:-) சீக்கிரமே விவரங்கள் சொல்றேன் . .கட்டாயம் வாங்க. . .சரக்கு மழைல மிதக்கலாம் . . 🙂

    Reply
  11. I saw the movie a few years ago.. you have written such a good review that I am able to replay the movie in my mind. an excellent, must see movie.

    there is a scene where Salieri talks about the brilliance of one of Mozart’s compositions. how the composition starts with a single instrument, and with the addition of each instrument and notes, it takes on a bigger shape. And as Salieri speaks about it, the composition plays in the background, and that is when I understood how great Mozart was.

    Reply
  12. @ அனானி – அந்தக் குறிப்பிட்ட சீன், எனது மிகப்பிடித்தமான சீனும் தான் . .மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் . . அந்த சீனைப் பார்க்கும்போது, மொசார்ட்டின் மேதமை குறித்து நன்றாக அறிந்தேன் .. மிக்க நன்றி . .சீக்கிரமே இதன் அடுத்த பகுதி வெளியாக உள்ளது. . ஓரிரு நாட்களில் வெளியிட்டு விடுவேன் . . 🙂 கட்டாயம் படித்துப் பாருங்கள் . .

    Reply
  13. தோழா சீக்கிரம் மொஸார்ட் பத்தி பதிவு போடுங்க. வெயிட்டிங் வெயிட்டிங்.

    Reply
  14. @ ஜீவன்பென்னி – மிக்க நன்றி . . 🙂

    @ தமிழினியன் – இதோ வந்தாச்சு .. இன்று இரவு பப்ளிஷ் செய்யப்படும் . . 🙂

    Reply
  15. இன்னைக்கு இரவே படிக்கிறேன். நானும் இந்த படத்தைப் பத்தி இன்னைக்குத்தான் எழுதினேன்.

    Reply
  16. how i find next part of reiview?

    Reply
  17. பிரிச்சி மேயரிங்கலே தலைவா !

    Reply
  18. //மோஸார்ட்டின் அத்தனை ஓபெராக்களையும், சில நாட்களிலேயே தனது செல்வாக்கை வைத்து இழுத்து மூடி விடுகிறார் ஸாலியேரி.//

    ஸல்லேரி மூட வைக்கிறாரா?

    //தனது தந்தையின் ஆவிதான் தன்னிடம் திரும்ப வந்திருப்பதாக எண்ணும் மோஸார்ட்டுக்//

    அவர் பயப்படுவது என்னவோ உண்மை. ஆனால், அது தன் தந்தையின் ஆவி என்று நினைக்கவில்லை (என்றே நினைக்கிறேன்).

    அந்த இரங்கல் இசை தான் அவரை கொல்கிறது. ஆனால், அது வேலை பளுவினாலும், குடியினாலும். மொஸார்ட் இறந்ததற்கு காரணம் சிறுநீரக கோளாரு.

    ஸ்ல்லேரி அவரை கொல்ல திட்டமிட்டாலும், அவர் மொஸார்ட்டின் admirer. ஆனால், கடைசியில் அந்த நிலையிலும் ஏன் வேலை வாங்க நினைக்கிறார் என்று தான் தெரியவில்லை. மொசார்ட் இறக்கும் தருவாயில் இருக்கிறார் என்று ஸல்லேரி நம்புவதாலா?

    அவர் கொடுத்த வேலை(ப்பளுவின்) காரணமாகத்தான் மொசார்ட் இறக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.

    Reply
  19. //டிஸ்கி – இந்த விமர்சனத்தில் வரும் மோஸார்ட்டைப் பற்றிய குறிப்பும் ஸாலியேரியைப் பற்றிய குறிப்பும் வேறு இசையமைப்பாளர்களைக் குறிப்பதாக இதைப் படிப்பவர்கள் கருதினால், அதற்கு http://www.karundhel.com எந்தவிதப் பொறுப்பும் ஏற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.//

    மொசார்ட் ஏ.ஆர்.ஆர்.னும், ஸல்லேரி ராஜா-வும்ங்கறீங்களா? எனக்கென்னவோ ராஜா தான் மொசார்ட்னு தோனுது.

    Reply

Join the conversation