Anegan (2015) – Tamil

by Karundhel Rajesh February 21, 2015   Tamil cinema

கே.வி. ஆனந்த் எடுத்த ‘அயன்’ படத்தைப் பார்த்தபோது, அதன் இரண்டாம் பாதி முழுதுமே ‘Maria Full of Grace’ படத்தின் அப்பட்டமான காப்பி என்பதைத் தெரிந்துகொண்டேன். மரியா ஃபுல் ஆஃப் க்ரேஸ் பற்றி விகடன் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய உலக சினிமா தொடரில் இப்படத்தைப் பற்றியும் எழுதியிருந்தார். எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. ஒரு அப்பாவிப் பெண், வறுமையால் போதை மருந்துகளை வயிற்றில் வைத்துக் கடத்த நேர்ந்து, இதனால் அவளது வாழ்க்கை எப்படியெல்லாம் சின்னாபின்னம் அடைந்தது என்பதை அழுத்தமாக விளக்கும் படம். இதனால், ஒரு பிரமாதமான, உணர்வுபூர்வமான படத்தை இவர் பாட்டுக்கு இஷ்டத்துக்குக் கைமா செய்து அயன் போன்ற ஒரு லோக்கல் மசாலா படத்தில் காப்பியடித்திருக்கிறாரே என்று கே.வி. ஆனந்தின் மீது கடுமையான வெறுப்பு எழுந்தது. கே.வி ஆனந்தின் படம் ஒன்றை வேறு மொழியில் உரிமை வாங்காமல் காப்பியடித்தால் சும்மா விட்டுவிடுவாரா? (ஆனால் அப்படி எடுத்தாலும், அப்படங்களின் மூலப்படங்களைக் காட்டி ‘நீங்க காப்பியடிச்ச இடத்துலதான் நானும் காப்பியடிச்சேன்’ என்று அவர்கள் அவசியம் சொல்லி அவரது வாயை அடைக்கலாம்).

கே.வி ஆனந்த் எடுத்த ‘கோ’ படம், அயனை மிஞ்சியது. அயனாவது ஒரே ஒரு படத்தின் காப்பிதான். ஆனால் கோ திரைப்படம் இரண்டு படங்களில் இருந்து சுட்டது. State of Play, No Man’s Land ஆகியவையே அவை. இதனாலேயே அவரது மாற்றான் படத்தைப் பார்க்காமலேயே தவிர்த்துவிட்டேன். ஏனெனில், அதையும் பார்த்து, அதுவும் வேறு படங்களில் இருந்து சுட்டது என்று தெரிந்தால் அனாவசியமாக பி.பி எகிறும் என்பதாலேயே.

கே.வி. ஆனந்தின் இத்தகைய காப்பி சரித்திரத்தால், அவரது ‘அனேகன்’ படத்தையும் முற்றாகத் தவிர்த்துவிடலாம் என்று எண்ணினேன். எப்படியும் எங்கிருந்தாவதுதான் சுட்டிருப்பார். ஒரிஜினல் சரக்கே இல்லாத இயக்குநர்களில் தமிழில் ஆனந்தே முதன்மையானவர் என்பது என் கருத்து. இருந்தாலும், இரண்டு நாட்களாக இப்படத்தைப் பற்றிய நம்பத்தகுந்த வட்டாரங்களின் செய்திகளால் இப்படத்தைப் பார்க்கலாமோ என்று என் மனம் லேசாக மாறியது. அதனால் இன்று இப்படத்தைப் பார்த்தேன்.

அனேகனுமே கே.வி ஆனந்தின் ‘உருவும்’ திறமையால் உருவாக்கப்பட்ட படம்தான். ஸ்ரீதர் எடுத்திருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தைப் பார்த்த யாராலுமே அனேகனைப் பார்த்து, அது ஒரிஜினல் படம்தான் என்று சொல்லவே இயலாது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் கதையை அப்படியே உருவி, கதாபாத்திரங்களை மட்டும் மாற்றி, ஒரு பூர்வஜென்ம கதைக்குப் பதில் பல பூர்வஜென்ம கதைகளைப் போட்டு ஆனந்த் கொடுத்திருக்கும் இன்னொரு படம் இது.

இங்கே ஒரு கேள்வி. பூர்வஜென்மக் கதைகள் என்பது ஒரு கான்செப்ட் மட்டும்தானே? உதாரணமாக, நான் ஈ படமும் இதே கருத்தில் எடுக்கப்பட்டதுதான். அப்படியென்றால் நெஞ்சம் மறப்பதில்லையின் உருவல்தான் நான் ஈ என்று சொல்வது அபத்தம்தானே? மகதீராவும் அப்படியே. இவையெல்லாம் இருக்க, அனேகனை மட்டும் எப்படி உருவல் என்று சொல்லலாம்?

யெஸ். மகதீரா, நான் ஈ போன்ற பூர்வஜென்மப் படங்கள் ஏற்கெனவே வந்திருந்தாலும், அவைகளின் கதைகளில் எப்படிப்பட்ட வித்தியாசம் காட்டப்பட்டது? மகதீராவின் கதாபாத்திரங்களையும் மீறி, அந்தக் கதை நடக்கும் களன் அவசியம் வித்தியாசமானதாகவும், புதியதாகவும் இருந்தது. நான் ஈயிலும் அதேதான். ‘பூர்வஜென்மக் கதை’ என்ற ஒரு theme இருந்தாலும், அதை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட இரண்டு முற்றிலும் வித்தியாசமான படங்கள் இவை. ஆனால், தமிழில் ஏற்கெனவே வந்திருக்கும் ஒரு படத்தை எடுத்துக்கொண்டு, அதே கதையை அப்படியே வைத்துக்கொண்டு கதாபாத்திரங்களை மட்டும் மாற்றியிருக்கும் அனேகனை எப்படி ‘உருவல்’ என்று சொல்லாமல் இருப்பது? ஒருமுறையாவது இதைப்படிப்பவர்கள் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பார்க்கவும். பார்த்தால் உங்களுக்கே புரியும்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை எப்படி எடுத்தார் என்பதை ஸ்ரீதர் தனது ‘திரும்பிப் பார்க்கிறேன்’ புத்தகத்தில் விபரமாகச் சொல்லியிருக்கிறார். ஒரு பூர்வஜென்மக் கதையை செய்தித்தாளில் படித்ததுதான் அதன் அடிப்படை. இதை மக்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று ஸ்ரீதர் அஞ்சியதால், படம் துவங்குமுன்னர் அவரே திரையில் தோன்றி இப்படத்தைப் பற்றிப் பேசியும் இருக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீதர் எடுக்கக் காரணமாக இருந்த பெண்ணைப் பற்றி இங்கே.

இப்போது அனேகன் பற்றிப் பார்க்கலாம். As usual, spoiler alert.

ஹிந்தியில் 1995ல் வெளிவந்த ’கரன் அர்ஜுன்’ பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதுவும் ஒரு முன்ஜென்மக் கதைதான். பிய்த்துக்கொண்டு ஓடியது. சல்மான் கானும் ஷா ருக் கானும் சேர்ந்து நடித்த படம். இதில் ஒரு காட்சியில், ஷா ருக் கானின் கதாபாத்திரம் (விஜய்), சல்மான் கானிடம் நேராகச் சென்று (அஜய்), ’நாம் இருவரும் போன ஜென்மத்தில் சகோதரர்கள்; அப்போது நம்மைக் கொன்ற வில்லனை இனிமேல் எதிர்த்துப் போராடிக் கொல்லவேண்டும்.. வா’ என்பார். உடனடியாக சல்மான் கான் சம்மதித்து ஷா ருக் கானுடன் சேர்ந்துவிடுவார். கொஞ்சம் கூட நம்பகத் தன்மையே இல்லாத காட்சி இது. என்னமோ பூர்வஜென்மம் என்பது இந்த இருவருக்கும் படு இயல்பான சங்கதி என்பதுபோல. இதேதான் அனேகனிலும் மிகப்பெரிய பிரச்னை. கதாநாயகி மதுமிதாவுக்கு ஹிப்னடைஸ் செய்யப்பட்ட ஒரு கணத்தில் சடாரென்று போன ஜென்ம நினைவுகள் வரிசையாக வருகின்றன. அட்லீஸ்ட் ஒரு கதையாக இருந்தாலும் பரவாயில்லை. இவருக்குக் குறைந்தபட்சம் மூன்று கதைகள் நினைவு வருகின்றன. இம்மி பிசகாமல் எல்லா சம்பவங்களும் இவருக்கு நினைவும் இருக்கின்றன. இதுதான் படத்தின் முக்கியமான விஷயம் என்று நினைத்திருக்கிறார் கே.வி. ஆனந்த். ஆனால் இது எப்படி இத்தனை சுலபமாக நடக்கிறது? மதுமிதா பாத்திரத்துக்கு எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல் வழக்கமான அதே மெண்டல் தமிழ் சினிமா ஹீரோயின் வேடத்தையே மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு மெண்டலுக்கு எப்படி இப்படியெல்லாம் முன்ஜென்ம நினைவுகள் பீறிக்கொண்டு அடிக்கின்றன? ஒரு துளிக்கூட எந்தவிதமான யோசிப்பும் இல்லாமல், ‘இப்படித்தான் வைப்பேன்’ என்றே வைக்கப்பட்டிருக்கிறது என்றுதான் தோன்றும். யாராவது ரோட்டில் காரை பைத்தியம் போல ஓட்டி, ‘நீ என்னைக் கிஸ் செய்தால்தான் வேகத்தை மட்டுப்படுத்துவேன்’ என்று சொல்வார்களா? இதில் கொடுமை என்னவென்றால், இந்த சீன்தான் போன ஜென்மங்களில் ஒன்றிலும் அப்படியே நடந்திருக்கிறது என்று சொல்லி, இரண்டு பைத்தியங்களை லிங்க் செய்கிறார்கள் (இந்தப் பைத்தியம்தான் பர்மாவில் ஆங் சான் சூகியின் பள்ளித்தோழி என்றும் ஒரு பீலா. அறுபதுகளில் பர்மாவில் கதை நடப்பதால்மட்டுமே இதை வைத்துவிடலாம் என்று நினைத்துவிட்டனர் போல).

அடுத்ததாக, பல முன்ஜென்ம கதாபாத்திரங்கள் இந்த மதுமிதாவுடன் இப்போதும் சம்மந்தப்பட்டிருக்கின்றன. ஒரு பாத்திரமாக இருந்தால்கூட, தொலைகிறது என்று நம்ப முயற்சிக்கலாம். ஆனால் இதிலோ ஒரு பெரும் படையே அப்படி அவரைச் சுற்றிலும் இருக்கிறது. ஒவ்வொரு ஜென்மத்திலும் அப்படியேதான் பிறக்கிறார்கள். இவர்கள் குடும்பம் மட்டும் பிரம்மாவிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கிக்கொண்டுவிட்டார்களா? அல்லது இதெல்லாம் பிரம்மாவின் ப்ரோக்ராமிங்கில் அமைந்த அனாமலிகளா? இதையெல்லாம் எப்படி நம்புவது? சல்மான்கானிடம் ஷா ருக் கதாபாத்திரம் சென்று ஜாலியாக சொல்வதுபோல், தனுஷிடம் மதுமிதா, ‘நீ தான் என் (பல) போனஜென்மக் காதலன்’ என்று டிக்ளேர் செய்கிறார். தனுஷோ இதை வைத்துக் காமெடி செய்துகொண்டிருக்கிறார்.

வில்லன் பாத்திரம் (அதில் நடித்த நடிகரால்) கொஞ்சம் சுவாரஸ்யமானதுதான். ஆனால் அந்த வில்லனுக்கும் பின்னணிக்கதையெல்லாம் எதுவும் இல்லை. படுமொக்கையான ஒரு கடத்தல் – அதைக் கண்டுபிடிக்கும் மொக்கை கஸ்டம்ஸ் ஆஃபீஸர் – அவரைக் கொல்கிறார் வில்லன் – பாஸ். இதையெல்லாம் எத்தனைமுறைதான் பார்ப்பது? எழுபதுகளில் வரவேண்டிய மேட்டர்கள் இவை. தனது கல்யாணத்தின் முந்தைய நாள் இரவில் மணப்பெண்ணும் ஒரு பேட்டை ரவுடியும் காதலிப்பது தெரியவந்து, அவர்களை சேர்த்து வைப்பதாகக் கூறிக் கூட்டிச்செல்கிறார் வில்லன். அடுத்து என்ன நடக்கும் என்று மூன்றாவது படிக்கும் பையனே சொல்லிவிடுவான். சரி ஓகே. அப்படியே நடக்கட்டும். அதில் என்ன பிரச்னை என்றால், இந்தக் காட்சி மனதில் தங்க மறுக்கிறது. ’நான் ஈ’ படத்தில் வில்லன் ஹீரோவைக் கொல்லும் காட்சி எப்படி இருந்தது? அவசியம் மனதில் பதிந்த காட்சி அது. அதைப்போல் இப்படிப்பட்ட இறக்கும் காட்சிகள் இருந்தால்தான் அந்த வில்லனின் மீது ஒரு கோபமும், மறுபடி பிறக்கும் கதாபாத்திரங்கள் மீது அட்லீஸ்ட் கொஞ்சம் நம்பிக்கையும் வரும். இதிலோ அது எதுவுமே காணோம்.

’கதை’ என்று கவனித்தால் இப்படத்தில் ஒரு துரும்பு கூட இல்லை. வெறும் காட்சிகளை வைத்துக்கொண்டே – அதுவும் பின்னணியோ முக்கியத்துவமோ அழுத்தமோ லாஜிக்கோ இல்லாத சாதாரணக் காட்சிகள் – முழுப்படமும் ஓடுகிறது. இதில் அடுத்த கொடுமை – இஷ்டத்துக்குப் பாடல்கள் வருவதே. அப்பாடல்கள் சுவாரஸ்யமாகவும் இல்லை. எனக்குப் பிடித்த ஒரே பாடல் ‘டங்காமாரி ஊதாரி’ மட்டுமே. பிற பாடல்கள் வரும்போதெல்லாம், ‘செத்தோம்’ என்ற உணர்வே மிஞ்சியது.

கொஞ்சம் கூட அழுத்தமோ நம்பகத்தன்மையோ சுவாரஸ்யமோ இல்லாமல், ‘நாம் என்ன எடுத்தாலும் மக்கள் பார்ப்பார்கள்’ என்ற உணர்வோடுதான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது என் கருத்து. எடுத்தது கே.வி.ஆனந்த் என்பதால் எனக்கு அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவரது அடுத்த ஏராளமான படங்களுமே இப்படியேதான் இருக்கப்போகின்றன என்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. கே.வி. ஆனந்திடம் நான் கேட்க விரும்புவது ஒன்றுதான். ஒரிஜினலாகப் படம் எடுத்தால்கூட நிலைக்க முடியாத காலகட்டம் இது. அந்த ஒரிஜினலும் நம்பும்படி சுவாரஸ்யமாக இருந்தால்தான் ஓடும். வெறும் ஸ்டார் வேல்யூவுக்கெல்லாம் படங்கள் ஓடும் காலம் இது இல்லை. அப்படி இருக்க, கொஞ்சமாவது மூளையைக் கசக்கி, ஒரிஜினலாக ஒரு நல்ல கதையைச் சிந்தித்து எடுக்கலாம் என்று எப்போதாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா ஆனந்த்? அதுதான் அடுத்தவர்கள் எடுத்து வைத்திருக்கிறார்களே? அதையே உருவுவோம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் சீக்கிரமே உங்கள் சாயம் வெளுத்துவிடும். இனியாவது கொஞ்சம் உழைப்பைப் பயன்படுத்தி ஒரே ஒரு ஒரிஜினல் படம் எடுக்கலாமே?

உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்தால்தான் எந்தப் படமும் நம்மை பாதிக்கும். மனதில் நிற்கும். வெறுமனே வரிசையான காட்சிகளை அடுக்கிக்கொண்டிருந்தால்மட்டுமே அது நல்ல படமாக ஆகிவிடாது. எந்தப் படத்துக்கும் திரைக்கதை முக்கியம். கொஞ்சமாவது திரைக்கதையில் மெனக்கெட்டால் மட்டுமே அப்படம் ஆடியன்ஸின் மனதில் நிற்கும். ‘அனேகன்’, தனுஷ் நடித்தால் ஓடிவிடும் என்ற நம்பிக்கையில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது. தனுஷை சூப்பர்ஸ்டார் ஆக்க நினைக்கும் படங்களில் இது ஜஸ்ட் இன்னொன்று. இதைத்தவிர இப்படத்தைப் பற்றிச் சொல்ல எதுவுமே இல்லை (லொகேஷன் – கதையில் புதுமை இல்லாமல் லொகேஷனில் மட்டும் புதுமையான இடங்களைக் காட்டினால் தூக்கம்தான் அதிகமாக வரும்).

பி.கு

’ஐ’ போலவே இதிலும் ஒரு பாத்திரம் வருகிறது. இரண்டே காட்சிகளில் வந்தால்கூட, பழைய படங்களில் சின்னி ஜெயந்த் ‘ஹாங்ங்ங்ங்ங்’ என்று அசிங்கமாக ஒலியெழுப்புவாரே அப்படிப்பட்ட உடல்மொழியைக் கொண்டிருக்கிறது. இந்தப் பாத்திரத்தைப் பார்த்து ஜெகனின் பாத்திரம் ‘இவன் என்னை நைட்டு சும்மா உடமாட்டான் போல இருக்கே’ என்று பேசுவதாக ஒரு வசனம் உள்ளது. சமுதாய அக்கறை என்பது ஒரே ஒரு சதவிகிதம் இருந்தால்கூட யாரும் இப்படியெல்லாம் காட்சிகளை வைக்கமாட்டார்கள். இந்தக் காட்சியால் கதைக்கு என்ன பிரயோஜனம்? (கதையே இல்லை என்பது வேறு விஷயம்). இதேபோல் படத்தில் ஆரம்பத்தில் ஹீரோயினின் வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண் கதாபாத்திரம், ஹீரோயின் தன்னை அழைத்ததும் பல்லிளித்துக்கொண்டு வந்து ஹீரோயினைக் கட்டிப்பிடித்துக்கொள்கிறது. ‘அவளா நீயி’ என்றும் சொல்கிறது. பின்னர் ‘அப்புறம் வரேன்’ என்று சொல்லிச்செல்கிறது. சுரணையே இல்லாதவர்களால்தான் இப்படியெல்லாம் காட்சிகள் யோசிக்கவோ எழுதவோ முடியும்.

  Comments

18 Comments

  1. Siraj

    KV Anand and SUresh Bala for screenplay…
    How come 3 experienced people did this “sodapals”.
    Also what you said is right…
    It is not just filling the scenes.. It is the connection of those scenes to the audiences.
    Also always full of action is a shallow screenplay.

    Reply
  2. இதில் சுபாவுக்கு கொஞ்சம் கூட பங்கு கிடையாதா? மொத்த கிரடிட்ஸ்ஸையும் ஆனந்துக்கே கொடுத்துட்டீங்க?

    Reply
  3. Arnie’s ‘Total Recall’ also resembles here. 🙂 Anyway Anand was giving series flops. Just recovered on this movie I guess.
    nice review as usual 🙂

    Reply
  4. படத்தில் கிராபிக்ஸ் கார்டை ஸ்க்ரு டிரைவர் வைத்து சரி செய்வார் அப்பாடி

    Reply
    • Ahmed

      MR. Sankarrrrrrrrrrrrrrrrrrr go and watch again

      Reply
  5. Ahmed

    இப்படி சொதப்பி எழுதி இருக்கீங்களே.
    பூர்வ ஜென்ம ஞாபகம் யாருக்கும் வராது. பர்மா,இளவரசன்,எல்லாம் அதே மாதிரி உள்ள வீடியோ கேமின் பாதிப்புகள். உபயம்-போதை மாத்திரைகள்.
    காளி கதையை மூர்த்தி தான் சொல்லியிருப்பார் + ஒவிய விளக்கத்துடன்.
    காளி-கல்யாணியும் அதே முக அமைப்புடன் பிறந்தது ஒன்று தான் விசயம்.
    அது சாத்தியமா என்றால் சினிமாவில் சாத்தியமே.
    காளி கதையை சொல்லுமிடமும்,இன்ஸ்பெக்டர் ஒரு எவிடென்ஸ்ஸை மறைப்பதும் கதானாயகியோட மாமன் ஏதோ ஒரு திருடன் போல சித்தரிக்கப்பட்டது இவைகள் தான் நெருடல். அதுவும் ஒரு திரில்லர் பட லாஜிக் மீறல் மட்டுமே.
    நெஞ்சம் மறப்பதில்லை காப்பியெல்லாம் இல்லை.வேற ஏதாவது ஹாலிவுட் பட பெயர் சொல்லுங்க.

    Reply
    • jameel

      well said. i cant believe how he can describe a movie like this

      Reply
    • Saravanan

      Ahmed. அப்போ மதுமித கொலை?

      Reply
  6. Ahmed

    Seems you have NOT understand the Movie, Try to link the Physiatrist / Narcotic Drugs / thinking capacity to make Games (dialogue by Jagan) to get the Linear line of the story to understand it better. Good Work by KV and Subha

    Reply
  7. ராஜா

    நண்பர் கருந்தேள் அற்புதமான தமிழில் பதிவு எழுதுகிறார்.ஆனால் அதற்கு வரும் எதிர்வினைகள் ஆங்கிலத்தில்..ஏம்பா தம்பிங்களா உங்களிடம் யாரேனும் ஆங்கிலத்தில் பேசினால் நீங்கள் தமிழில் பதில் அளிப்பீர்களா?தமிழ் எழுத தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள்.

    Reply
    • Ahmed

      ஸ்டான்லி க்யுப்ரிக்
      ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க்
      ஜேம்ஸ் கேமரான்
      ஜார்ஜ் லூகாஸ்
      ரிட்லி ஸ்காட்
      ஃப்ரிட்ஸ் லாங்
      மெட்ரோபோலிஸ்
      ஆர்ஸன் ஸ்காட் கார்ட்
      ஆஃப் த்ரோன்ஸ்
      ப்ரொஃபஸர்
      ஏம்பா தம்பி முடியும் என்றால் வாசித்து பாருங்கள் இதுவும் உங்கள் பதிவாளர் அற்புதமான தமிழில் பதிவு செய்து ஆங்கிலத்தை கொலை செய்ததுதான் …..
      சில நேரங்களில் அது அது அப்படி இருப்பதே சால சிறந்தது …..

      Reply
  8. Kumar

    புர்வ ஜென்மத்திற்கும் இந்த படத்திற்கும் கிட்டத்தட்ட சம்மந்தமே இல்லை. இந்த படம் உங்களுக்கு பிடிக்காமல் (புரியாமல்) போனதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம், ஆனா நெஞ்சம் மறப்பதில்லை படத்தோட காப்பின்னு சொல்லி காமெடி பண்னாதீங்க. கருந்தேளுக்கு அடி சறுக்கும் போல 😉 வீரனா இன்னொருதடவை ( பிடிக்காவிட்டாலும் பார்த்து தான் ஆகனும்) படத்தை பார்த்து விமர்சனம் பண்ணுங்க. நெஞ்சம் மறப்பதில்லை படத்தை விட்டிட்டு எதாச்சும் ஹாலிவுட் இல்லை கொரியன் படத்தை புடிச்சு போடுங்க.

    படத்தின் பெயர் நினைவில்லை. தங்கர் பச்சான் ஓளிப்பதிவு நிறைய இடங்களில் அவுட் ஆஃப் ஃபோக்கஸ் என்று விகடன் விமர்சனத்தில் எழுதியிருந்தார்கள். அதை படித்தது தங்கர்பச்சான் விகடன் அலுவலகத்திற்கு சென்று சண்டையிட்டு, அவர்களை வேறு ஒரு திரையரங்கிற்கு சென்று பார்க்கும் படி கூறினார். அவர்களும் வேறு திரையரங்கில் சென்று படத்தை பார்த்துவிட்டு, குறை ஒளிப்பதிவில் இல்லை திரையரங்கில் என்று உணர்ந்து அடுத்த இதழில் மன்னிப்பு கேட்டார்கள்.

    நீங்களும் இன்னொரு தடவை இந்த படத்தை பார்த்தால், வேறு மாதிரியான விமர்சனம் உங்களிடம் இருந்து வரும் என்றே நினைக்கிறேன். படம் மொக்கை தான். ஆனால் நீங்கள் கூறும் காரணத்தில் நியாயம் இல்லை.

    Reply
  9. Ravi

    I don’t know what happened to my earlier comment, it has disappeared. I had mentioned that this story sounds on the lines of “Cloud Atlas” and was expecting a response from Rajesh. Did anyone else watch both the movies?

    Reply
    • root

      Dear Ravi.. no comment had been deleted by me. I will never do it. I think it got mixed up with some other post. Lemme search the comment. Thanks.

      Reply
      • Ravi

        Dear Rajesh,

        I’m sorry if I sounded like it has been deleted. I didn’t mean that. What I thought was, with the recent layout changes it is probably not visible any more. Thank you for respecting my comment and responding.

        Reply
  10. கருந்தேள், ஏன் கரன் அர்ஜுனுக்கு போயிடீங்க? ஓம் ஷாந்தி ஓம் இருக்கே. புது விஷயத்த தொட்டும் தொடாத மாதிரி ஒரு கதைக்களம் கொட்டாவி வரவைக்கும் பாடல்கள் என அனேகமா சராசரிகளுக்கு கீழான சினிமா ரசிகர்களுக்கு விருந்து.

    Reply
  11. jameel

    hello rajesh i never expected this kind of biased review from you . i can clearly see this movie is not a rip off even though it has some scene impacts from some movies but you cant say tht this is a rip off of nenjam marapathillai . why you left kana kandaen alone ? please mention some of hollywood or korean for that too so that we can get educated. and please sir i respect your reviews so pls make it in well educated manner .

    Reply

Join the conversation