Arrival (2016) – English
அரைவல் ஒரு ஏலியன் படம். அதன் டைட்டிலிலேயே சொல்லியிருப்பதுபோல், they arrive one fine day. ஏன் வந்தார்கள்? வந்ததால் என்ன நேர்கிறது? ஆகிய கேள்விகளுக்கான பதிலை விவாதிக்கும் படம்தான் அரைவல்.
ஆனால் படத்தைப் பார்க்குமுன்னர், இது ஒரு சிறுகதையை வைத்து எழுதப்பட்டுள்ளது என்பது ஒருசிலருக்குத் தெரிந்திருக்கலாம். அந்தக் கதையின் பெயர்: Story of Your Life. எழுதியவர் Ted Chiang. இவர் இதுவரை மிகச்சில சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். ஆனால் சைன்ஸ் ஃபிக்ஷனில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களில் ஒருவர். இந்தக் கதையை முழுக்கவும் விபரமாகப் படித்தேன். இது ஒரு 32 பக்கக் கதை. திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு மிகவும் ஏற்றது. நீங்களும் இந்தக் கதையைப் படிக்கலாம். திரைப்படத்தை விடவும் பல தகவல்கள் அடங்கிய கதை இது. ஆனால் it is less cinematic. இந்தக் கதையை எடுத்துக்கொண்டு, இதை சினிமாடிக்காக மாற்றுவது கட்டாயம் ஒரு கலை. அதை சரியாகச் செய்திருக்கின்றனர். இருந்தும், அதில் பிரச்னைகள் உண்டு. என்ன என்று இறுதியில் சொல்கிறேன்.
சிறுகதை சற்றே abstractஆனது. ஏலியன்களின் வருகை பற்றியும், அவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் மனிதர்கள் பற்றியுமானது. கூடவே, சிறுகதை முழுக்கவும், தனது மகளுடன் கதையின் நாயகி பேசும் தருணங்கள் உண்டு. இந்த இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பும் உண்டு.
திரைப்படத்தின் நாயகி டாக்டர் லுயீஸ் பேங்க்ஸ், ஒரு மொழி வல்லுநர். ஒரு நாள் திடீரென்று உலகெங்கும் மொத்தம் பனிரண்டு ஏலியன் விண்கலங்கள் இறங்கியிருப்பதை செய்தியில் காண்கிறார். விரைவிலேயே யுனைடட் ஸ்டேட்ஸின் ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் வெபர் லுயீஸைத் தொடர்பு கொள்கிறார். ஏலியன்கள் பேசும் கரகர பாஷையை மொழிபெயர்த்துத் தரச்சொல்கிறார். ஆனால் அதெல்லாம் சாத்தியமே இல்லை என்றும், அப்படிச் செய்யவேண்டும் என்றால் அந்த இடத்தில் தான் இருந்து ஏலியன்களுடன் பேசவேண்டும் என்றும் லுயீஸ் சொல்கிறார். அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மாண்டானாவில் ஏலியன் விண்கலம் தரையிறங்கியிருக்கும் இடத்துக்கு வெபர் லுயீஸைக் கூட்டிச்செல்கிறார். அதே பயணத்தில், இயன் டானல்லி என்ற தியரடிகல் பிஸிஸிஸ்ட்டையும் லுயீஸ் சந்திக்கிறார். இருவரும் சேர்ந்துதான் இந்தப் ப்ராஜக்டில் பணிபுரியப்போகிறார்கள்.
இருவரும் ஏலியன் விண்கலம் இருக்கும் இடத்துக்குச் சென்றபின்னர் என்ன ஆனது என்பதே பாக்கிப்படம்.
ஏலியன்கள் பூமிக்கு வருகின்றன என்று வைத்துக்கொள்வோம். இதுவரை வந்த படங்களில், அவை ஏன் வருகின்றன என்ற கேள்வி எப்படிக் கையாளப்பட்டிருக்கிறது? இண்டிபெண்டன்ஸ் டேவ் வார் ஆஃப் த வேர்ல்ட்ஸ், மார்ஸ் அட்டாக்ஸ், க்ளோஸ் என்கௌண்டர்ஸ் ஆஃப் த தேர்ட் கைண்ட், இண்டிபெண்டன்ஸ் டே 2 முதலிய பல ஏலியன் படங்களில், எடுத்த எடுப்பில் பூமியை அவை தாக்கும். இதனால் பிரச்னை நேரும். இதுதான் கதையாக இருக்கும். ஆனால், யோசித்துப் பாருங்கள் – மனித இனம், அதன் சரித்திரத்தில் பல புதிய இடங்களுக்குச் சென்றிருக்கிறது. நாகரிக மனிதன் கால்பதிக்காத பல கண்டங்கள் – தீவுகள் முதலிய இடங்கள். சென்று இறங்கியதும் நாம் என்ன அந்த இடத்தில் டமால் டுமீல் என்று யுத்தமா செய்கிறோம்? முதலில் அந்த இடத்தில் இருக்கும் ஆட்களுடன் பழக முயல்கிறோம். அதன்பின் தானே எதுவாக இருந்தாலும்?
அப்படி, மொழியின் அடிப்படையில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்வதைப் பற்றிய படம்தான் இது. மிக இயல்பான கதையோடு, எந்தவிதப் பரபரப்பும் இன்றி மிகவும் மெதுவாகவே நகர்கிறது. ஆனால், மெதுவாக நகர்ந்தால் அப்படம் சுவாரஸ்யமாக இருக்காது என்பது நமது நம்பிக்கை. அப்படியென்றால், Inglourious Basterds படத்தின் ஓப்பனிங் 20 நிமிடக் காட்சிகள் எத்தனை மெதுவாக நகர்ந்தன? ஆனால் அவை மிகவும் விறுவிறுப்பாகத்தானே இருந்தன? இப்படிப் பல உதாரணங்கள் உண்டு. எனவே, மெதுவாக நகர்தல் என்பது விறுவிறுப்பின்மையைக் குறிக்காது. அப்படித்தான் இந்தப் படத்திலும், காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், கதை என்பதில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் நாடுகளுக்கிடையே இருக்கும் இரும்புத்திரை இப்படத்தில் விவாதிக்கப்படுகிறது.
மொழியின் அடிப்படை என்ன? உலகின் அத்தனை மொழிகளும் sequentialஆனவை. அதாவது, ஒரு எழுத்துக்குப் பிறகு அடுத்த எழுத்து, ஒரு வார்த்தைக்குப் பின் அடுத்த வார்த்தை, ஒரு வாக்கியத்துக்குப் பின்னர் அடுத்த வாக்கியம், பத்தி, பக்கம், புத்தகம் என்று வரிசையாகவே நகர்தல்தான் உலக மொழிகள் அத்தனையுமே. இதனால் நமது எண்ணமுமே ஒருவித sequential வடிவையே பெறுகிறது. வரிசையாகவே சிந்திக்கிறோம். செயல்படுகிறோம். எனவே, மனிதனின் சிந்தனை, செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு அடிப்படையாக விளங்குவது மொழி என்று சொல்லமுடியும்.
இப்போது, இப்படி யோசித்துப் பாருங்கள். ஒவ்வொன்றாக வராமல், ஒரே நேரத்தில் ஒரு மிகப்பெரிய வாக்கியத்தை டக்கென்று உருவாக்கினால்? ஒரே நேரத்தில் ஒரு புத்தகம் உருவானால்? இந்தக் கட்டுரையை ஒவ்வொரு எழுத்தாக நான் டைப் செய்யாமல், அதற்கான பிரத்யேக ஏற்பாடுகளின் மூலம், டகால் என்று ஒரே முறையில் ஒரு கட்டுரையாக நான் அப்லோட் செய்துவிட்டால்? அதாவது, simultaneous processing. இப்படி ஒரு சமுதாயம் உருவாகியிருக்கும் என்றால், அவர்களின் எண்ணங்கள் எப்படி இருக்கும்? அவர்களின் சிந்தனைகளுமே simultaneousஆகவே இருக்கும். இதனால் அவர்களால் ஒரே சமயத்தில் பல்வேறு பக்கங்களிலும் சிந்திக்க முடியும். எழுத முடியும். பேச முடியும்.
இதுதான் அரைவல் படத்தின் அடிப்படை.
Story of your Life சிறுகதை இதுபோன்ற பல தியரிக்களை முன்வைக்கிறது. படத்தில் இல்லாத பல விஷயங்கள் இந்தக் கதையில் உண்டு. உண்மையில் இந்தக் கதை அப்படியே படமாக எடுக்கப்படவில்லை. கதையில் அப்ஸ்ட்ராக்ட்டாக இருக்கும் பல விஷயங்கள் படத்தில் இறுதியான முடிவோடு மாற்றப்பட்டுவிட்டன. கூடவே, கதையின் அப்ஸ்ட்ராக்ட் தன்மைக்கு எதிராக, படத்தில் ஆடியன்ஸுக்குப் புரியவேண்டும் என்றே சில புதிய விஷயங்களையும் கொண்டுவந்துள்ளனர். இதுதான் படத்தின் மிகப்பெரிய பிரச்னை.
ஏனென்றால், படம் பார்க்கையில், ஒன்றிரண்டு இடங்கள் மிகவும் மொக்கையாக இருந்தன. உதாரணத்துக்கு, இப்படத்தில் ஏலியன்கள் பூமிக்கு வரவேண்டிய காரணம் என்ன என்று விளக்கும் இடம்தான் படத்தின் மிகவும் மொக்கையான இடம். ஏனெனில், இந்தக் காரணத்துக்காக ஏலியன்கள் பூமிக்கு வரவேண்டிய தேவையே இல்லை. அதற்குப் பதிலாக ஒன்றிரண்டு கருவிகளே போதும். அதேபோல், அந்தக் காரணம் மிக மிக மேலோட்டமாகவும் சொல்லப்பட்டுள்ளது. பூமிக்கும் ஏலியன்களுக்கும் இனிவரும் காலத்தில் ஒரு தொடர்பு ஏற்படப்போகிறது என்றும் புதிய காரணம் சொல்லப்படுகிறது. அதற்கு எந்தவித ஜஸ்டிஃபிகேஷனும் இல்லை. சும்மா ஜஸ்ட் லைக் தட் போகிறபோக்கில் அடித்துவிடுகிறார்கள். இந்தக் காட்சிகளிலெல்லாம் எரிச்சலே மிஞ்சியது. இன்று காலை சிறுகதையைப் படிக்கும்போதுதான், இது எதுவும் கதையில் இல்லை என்று புரிந்தது. சிறுகதையில் உள்ளவற்றை அப்படியப்படியே படத்தில் காட்டிய இடங்கள் எல்லாம் மிகவும் நன்றாக இருந்தன. சிறுகதையில் இல்லாமல் இவர்களாகப் புகுத்திய அத்தனை அம்சங்களும் மொக்கை. இது படம்பார்க்கும்போதே நிரடியது. இன்று சிறுகதை படித்ததும் தெளிவானது.
சிறுகதையில், பூமியெங்கும் 112 விண்கலங்கள் இறங்கியிருக்கும். ஆனால் படத்தில் வெறும் 9. எண்ணிக்கை ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும், இத்தனை விண்கலங்கள் இறங்கியிருப்பது ஏன் என்று நம்மை யோசிக்க வைக்கும். அதேபோல் சிறுகதையில், கதாநாயகி லுயீஸின் வாழ்க்கையின் சில சம்பவங்கள் மிகவும் உயிர்ப்புடன் சொல்லப்பட்டிருக்கும். படத்தில் அந்த சம்பவங்கள் மிகவும் குறைக்கப்படுவிட்டன. சுருக்கமாகச் சொல்லப்போனால், சிறுகதை படித்தபின் நம் மனதில் எழும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவை திரைப்படம் பார்த்தபின் எழுவதில்லை. இத்தனைக்கும் நான் படத்தைத்தான் முதலில் பார்த்தேன். ஏற்கெனவே சொன்னபடி, படத்தின் சில இடங்கள் உச்சபட்ச மொக்கையாக இருந்தன. எனவே கதையைப் படித்தேன். அதன்பின் தான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் எளிதில் புரிந்தன. இப்படம் ஒரு மோசமான அடாப்டேஷன். அதையும் மீறிப் படத்தில் கதையில் உள்ள உணர்வுகளை ஓரளவு கொண்டுவந்துள்ளனர். அதுவே, பலரையும் இப்படத்தைப் பாராட்ட வைக்கிறது என்று புரிகிறது. படத்தைப்பற்றிய பல விமர்சனங்கள் பாஸிடிவாக உள்ளன. ஆனால் என்னை இப்படம் அந்த அளவு கவரவில்லை. கதைதான் மிகவும் கவர்ந்தது.
அப்படியென்றால் படம் மொக்கையா? பார்க்கத் தேவையில்லையா? இல்லை. படத்தை அவசியம் பாருங்கள். வித்தியாசமான ஒரு உணர்வைப் படம் கண்டிப்பாகக் கொடுக்கும். படத்தில் ஒரு ட்விஸ்ட் உண்டு. அதைப்பற்றி எக்கச்சக்கமாக எழுதமுடியும். நான் மேலே சொன்ன, மொழியின் sequential & simultaneous இயல்புகளுக்கும் இந்த ட்விஸ்ட்டுக்கும் சம்மந்தம் உண்டு. ஆனால், படம் பார்ப்பதோடு நிறுத்தாமல், இந்தச் சிறுகதையையும் முழுதாகப் படியுங்கள். அப்போதுதான் இதன் கதையின் பிரம்மாண்டம் நமக்கு முழுதாகப் புரியும்.
எழுத்தாளர் டெட் சியாங் அவரது கதையைப் படிக்கும் ஒரு reading session இங்கே. இதிலேயே கேள்வி பதில்களும் உண்டு.
இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் எரிக் ஹெய்ஸரர். இதுவரை திகில் படங்களையே எழுதியிருக்கிறார் (Lights Out, The Thing, Nightmare on Elm Street etc..). இப்படிப்பட்ட ஒரு அருமையான கதையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொத்துக்கறி போட்டிருக்கிறார். இருந்தும், அதையும் மீறிப் படம் நமக்குப் பிடிப்பது கட்டாயம் சிறுகதையின் ஆழத்தால்தான்.
இயக்குநர் – டெனிஸ் வில்லென்யூ. சற்றே வித்தியாசமான இயக்குநர். இவரது முந்தைய படங்களான Sicario, Enemy, Prisoners, Maelström முதலியவற்றை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.
ஒரு நல்ல கதையை மோசமாக, டெம்ப்ளேட்டாக எழுதி எடுத்திருக்கும் படம். ஆனால் அதையும் மீறி, கதையின் depth உங்களைக் கவரும். மறக்காமல் சிறுகதையைப் படித்துவிடுங்கள்.
Just found this article, says the producers wanted the story to be tweaked every time, may be the reason why the movie isn’t as thought-provoking as the short-story! Excerpts from the article below:
Screenwriter Eric Heisserer estimates he received 100 rejections when pitching Arrival to producers.
“We will make it if you change the lead to a man,” he remembers executives saying. “Or, if you get rid of all the flashbacks. Which right there, I’m like — you have no understanding of the story. Or make it just a classic … ‘alien invasion story’ where the hero punches an alien in the face at the end.”
Source: http://www.npr.org/2016/11/11/501202681/arrival-authors-approach-to-science-fiction-slow-steady-and-successful?utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=npr&utm_term=nprnews&utm_content=2039