Salim Javed – Amitabh & Rajni

by Karundhel Rajesh October 7, 2014   Cinema articles

‘இந்திய அதிநாயகர்களின் பிரம்மா’ என்ற பெயரில் அக்டோபர் மாத காட்சிப்பிழையில் வெளிவந்த கட்டுரை இது. படித்துப் பாருங்கள். மறவாமல் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோக்களையும் பாருங்கள்.


 

இந்தியத் திரையுலகில் அறுபதுகளின் காலகட்டம் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தமிழில் ஸ்ரீதர் மிகவும் வித்தியாசமான வணிகப்படங்களைக் கொடுத்துவந்த காலம். சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும் தங்களுக்குரிய பாணியைக் கச்சிதமாகக் கண்டுகொண்டு அதன்படியே பல வெற்றிப்படங்களைக் கொடுத்த காலகட்டம். அதே நேரத்தில் ஹிந்தியில் ராஜ் கபூர், தேவ் ஆனந்த், ஷம்மி கபூர், சசி கபூர், ராஜ்குமார், ராஜேந்திர குமார் போன்ற கதா நாயகர்களின் வண்ணமயமான படங்களில் இனிமையான பாடல்களின் மூலம் எஸ்.டி. பர்மனும் ஆர்.டி பர்மனும் திரை ரசிகர்களைக் கிறங்கடித்துக்கொண்டிருந்தார்கள். தமிழில் வெற்றிகரமான திரைக்கதையாசிரியராக ஸ்ரீதர் விளங்கிவந்தார். எம்.எஸ்வி, கண்ணதாசன், வின்செண்ட், கங்கா ஆகியோர் இடம்பெற்ற ‘சித்ராலயா’ யூனிட் மூலம் ஸ்ரீதர் எழுதி இயக்கிய பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. அவை ஹிந்தியிலும் எடுக்கப்பட்டு நன்றாகவும் ஓடின. ஹிந்தியில் அறுபதுகளில் வெற்றிகரமாக இயங்கிய இயக்குநர்களில் ஸ்ரீதரும் ஒருவர்.

அறுபதுகளின் ஹிந்திப்படங்களில் பெரும்பாலானவை குணச்சித்திரப் படங்களே. அல்லது நகைச்சுவைப்படங்கள். Action என்பது குறைவாகத்தான் இருந்தது. அதேபோல் அப்போது பிரபலமாக விளங்கிய திரைக்கதையாசிரியர்களையும் அவர்களது படங்களையும் கவனித்தால், அவர்களில் பெரும்பாலானவர்கள் மென்மையான குணச்சித்திரப் படங்களைத்தான் எழுதினர் என்பது தெரியும். Action என்பது எழுபதுகளில்தான் இந்தியப் படவுலகில் பிரபலமாக ஆரம்பித்தது (எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர் போன்றோரின் படங்கள் இங்கே விதிவிலக்கு. பொதுவான தன்மையைத்தான் இங்கே பார்க்கிறோம்). வஜஹத் மிர்ஸா (மொகல் எ ஆஸம், கங்கா ஜமுனா), க்வாஜா அஹமத் அப்பாஸ் (சப்னோங்கா சௌதாகர், சாத் ஹிந்துஸ்தானி, மேரா நாம் ஜோக்கர்), பிரபல நாவலாசிரியர் குல்ஷன் நந்தா (கடீ பதங், ஷர்மிலீ), அந்தக் காலகட்டத்தின் மிகப்பெரும் புகழ் வாய்ந்த சச்சின் பௌமிக் (ப்ரம்சாரி, ஆராதனா, அந்தாஸ், ஸிந்தகி, ஹம் கிஸீ ஸே கம் நஹின்), குல்ஸார் (ஆனந்த், குட்டி (kutti அல்ல. Guddi), மேரே அப்னே) ஆகிய பல திரைக்கதையாசிரியர்களும், அறுபதுகளில் குணச்சித்திரப் படங்களையே எழுதினர். அவையும் மிகப்பிரபலமாகவும் ஓடின. இவர்களைச் சார்ந்த இயக்குநர்களுமே குணச்சித்திர ஆர்வலர்களே. ஆனால், எது எப்படி இருந்தாலும் தமிழுக்கும் இவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று உறுதியாகவே சொல்லமுடியும். இவர்களது படங்கள் ஹிந்தியில் ஓட, தமிழில் ஸ்ரீதர், பந்துலு, ஏ.பி நாகராஜன், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ப.நீலகண்டன் போன்ற இயக்குநர்கள் தமிழுக்கே உரிய வித்தியாசமான படங்களை எழுதி இயக்கினர். எனவே, ஹிந்திப்படங்கள் ஒரு பக்கமும் பிற மாநிலப் படங்கள் மற்றொரு பக்கமும் தனித்தனியாக, ஒருவரையொருவர் பாதிக்காமல் இருந்துகொண்டிருந்தன (அவ்வப்போது மற்ற மொழிகளில் எடுக்கப்படும் ரீமேக் படங்கள் தவிர்த்து).

ஆனால் எழுபதுகளின் துவக்கத்தில் ஹிந்தியில் வீசிய சூறாவளி ஒன்று, இந்தியத் திரையுலகின் அஸ்திவாரத்தையே முற்றிலும் உடைத்தெறிந்து, இன்றுவரை தொடரக்கூடிய பாதிப்பு ஒன்றை ஏற்படுத்திச் சென்றது. அந்த மாற்றத்தின் பயனாகத்தான் ஏராளமான படங்கள் இன்றுவரை எடுக்கப்படுகின்றன. பல கதாநாயகர்களின் திரை வாழ்வு இன்றுவரை அந்தச் சூறாவளியால்தான் முடிவாகிக்கொண்டிருக்கிறது. இந்தப் புயல் அடித்திருக்கவில்லை என்றால் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துள்ள நடிகராக முற்றிலும் உருமாறியிருக்க முடிந்திராமல் போயிருக்கக்கூடும். இதனாலேயே அவரது படங்களின் பாதிப்போடு இன்றுள்ள நடிகர்கள் படம் எடுப்பதும் இல்லாமல் போயிருக்கக்கூடும். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கன்னடத்திலும் கூட சிரஞ்சீவி, விஷ்ணுவர்த்தன் போன்ற நடிகர்களின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து, இந்த விளைவினால் இப்போது இருக்கும் அளவில் இல்லாமல் போயிருக்கலாம்.

அந்தச் சூறாவளியின் பெயர்தான் சலீம்-ஜாவேத். ஹிந்தித் திரைக்கதைகளின் முடிசூடா மன்னர்கள்.

இவர்கள் எழுதிய திரைக்கதைகளில் பெரும்பாலானவை வெள்ளிவிழாப் படங்களாக மாறின. இந்திய சினிமாவில் முதன்முறையாக, திரைக்கதையாசிரியர்களின் பெயர்கள் போஸ்டர்களை அலங்கரித்தன. திரைப்படத்தின் லாபத்தில் கணிசமான பங்கு, திரைக்கதையாசிரியர்களுக்குச் சென்றது. சலீம்-ஜாவேதின் பெயர்கள் இருந்தாலே அந்தப் படங்கள் வியாபரம் ஆகும் என்ற நிலை ஏற்பட்டது. வட இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்த நடிகர்களைவிடவும் பிரபலம் ஆனார்கள் இந்த இருவரும். இவர்களுக்கு முன்னும் பின்னும் பல திரைக்கதையாசிரியர்கள் இருந்திருந்தாலும், இவர்கள் அடைந்த புகழை இன்றுவரை யாரும் அடைந்ததில்லை. எழுபதுகளில் முதல் நான்கு சூப்பர்ஹிட்களை அளித்தபின்னர் இந்த இருவரின் சம்பளம் இரண்டு லட்சமாக இருந்தது. இப்போதைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட அரைக்கோடிக்கு சமம் அது. அப்போதைய காலகட்டத்தில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களாக இருந்தவர்களே ஐம்பதில் இருந்து எழுபது ஆயிரம்தான் வாங்கிக்கொண்டிருந்தனர். இதனால் நான்கு சூப்பர்ஹிட்களை அளித்தபின்னரும் ஒன்பது மாதங்களுக்கு இந்த இருவருக்கும் எந்தப் படமும் அமையவில்லை. இருந்தாலும் எடுத்த முடிவில் பின்வாங்காமல், சம்பளத்தைக் குறைக்காமல் உறுதியுடன் இருந்தவர்கள் இந்த இருவரும். இதன்பின்னர் வந்த படங்களுக்கு, ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று ஒரேயடியாக இவர்களின் சம்பளம் எகிறியது. போலவே திரைப்படங்களில் திரைக்கதை எழுத்தாளர்களின் முடிவே இறுதியாக இருந்தது இவர்கள் விஷயத்தில்தான். இவர்கள் ’முடியாது’ என்று சொன்னால் எந்த இயக்குநராக இருந்தாலும் அது ‘முடியாது’தான். இவர்களின் திரைக்கதையில் யாருமே எந்தக் காட்சியையும் மாற்றிவிடமுடியாது. இருவருமே ’ஆணவம் பிடித்தவர்கள்’ என்றே பிறரால் விமர்சிக்கப்பட்டவர்கள். இருந்தாலும் ஒட்டுமொத்த ஹிந்தித் திரையுலகமும் இவர்களின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருந்தது.

salim-javed

சிறுசிறு திரைப்பட வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சலீம் கானையும், சில படங்களில் வசனங்களை எழுதிக்கொண்டிருந்த ஜாவேத் அக்தரையும் சலீம்-ஜாவேத் என்ற பிரம்மாண்டமான கூட்டணியாக உருவாக்கியது, இருவருக்குமிடையேயான தற்செயலான ஒரு சந்திப்புதான். பிரபல வசனகர்த்தா அப்ரார் அல்வீயிடம் (சாஹிப், பீவீ ஔர் குலாம்) வேலைசெய்துகொண்டிருந்தார் சலீம். அவரது பக்கத்துவீட்டில் தங்கியிருந்த பிரபல உர்தூக்கவிஞர் கைஃபி ஆஸ்மியிடம் ஜாவேத் அக்தர் வேலைசெய்துகொண்டிருந்த சமயம் அது. சலீமும் ஜாவேதும் இப்படியாக சந்தித்துக்கொள்ள, இருவருக்குமிடையேயான உறவு துவங்கியது.

1971ல் வெளியான ‘அந்தாஸ்’ திரைப்படத்தை ஹிந்தி ரசிகர்கள் மறக்கமுடியாது. ராஜேஷ் கன்னா மிகச்சிறிய வேடத்தில் (கிட்டத்தட்ட மௌன ராகம் கார்த்திக் போல) நடித்த படம். 1969ல் ஆராதனா வெளியாகி, ராஜேஷ் கன்னா கடவுளைப்போல் ரசிகர்களால் வழிபடப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம். இந்தப் படத்துக்கு சலீம்-ஜாவேத் தான் திரைக்கதை. இருவரும் இணைந்தபின்னர் அவர்களுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. இந்தப் படப்பிடிப்பின்போது ராஜேஷ் கன்னா, சலீமிடம் வந்தார். ‘தமிழ்த் தயாரிப்பாளர் தேவர், மிகப்பெரிய அளவில் எனக்குப் பணம் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். எனது பங்களாவான ஆஷிர்வாத்தை முழுதாக வாங்குவதற்காக அந்தப் பணம் எனக்கு அவசியம் தேவைப்படுகிறது. இருந்தாலும், அந்த ரீமேக் படத்தின் கதை சரியில்லை. அதனை நீங்கள் செப்பனிட்டுத் தந்தால் உங்களுக்குப் பணம் கொடுக்கிறேன். திரையிலும் ’திரைக்கதை’ என்ற டைட்டிலுடன் உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்’ என்று சொல்கிறார். அந்தப் படத்துக்கான விவாதத்தில் அமர்ந்து, இருபது நாட்களில் இந்தக் கூட்டணி எழுதிமுடித்துக்கொடுத்த படம்தான் ‘ஹாத்தி மேரா சாத்தி’. 1971ல் இந்தியா முழுதும் வசூலைக் குவித்த பிரம்மாண்ட வெற்றிப்படம் (தமிழில் அறுபதுகளின் இறுதியில் மேஜர் சுந்தர்ராஜன் நடித்து வெளிவந்த ‘தெய்வச்செயல்’ படம்தான் ஹிந்தியில் எடுக்கப்பட இருந்தது. ராஜேஷ் கன்னாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப தெய்வச்செயலின் கதையை நன்றாகச் செப்பனிட்டு சலீம்-ஜாவேத் கூட்டணியினர் எழுதிய படம்தான் ஹிந்தியில் ஹாத்தி மேரா சாத்தி’யாக பெருவெற்றி அடைந்தது. இதனால் அதனைத் தமிழில் மறுபடியும் எம்.ஜி.ஆரை வைத்து தேவர் ‘நல்ல நேரம்’ என்ற பெயரில் வெளியிட, அதுவும் தமிழில் நன்றாக ஓடியது. இப்படி, ஒரே தமிழ்ப்படத்தை இரண்டுமுறை மிகச்சில வருடங்களில் புத்திசாலித்தனமாக எடுத்து வெளியிட்டார் தேவர்).

இந்தப் படம் முடிந்ததும், அந்தாஸ் படத்தை இயக்கிய ரமேஷ் சிப்பிக்காக ‘சீதா ஔர் கீதா’ படத்தை சலீமும் ஜாவேதும் எழுதுகின்றனர் (தமிழில் ‘வாணி-ராணி’ என்று வாணிஸ்ரீயை வைத்து வெளிவந்த இந்தப் படத்தைப் பலரும் மறந்திருக்கமாட்டார்கள்). அதுவும் நன்றாக ஓட, இதன்பின்னர் சலீம்-ஜாவேத் எழுதி 1973ல் வெளியாகி, தென்னிந்திய மொழிகள் அத்தனைகளிலும் எடுக்கப்பட்டு அங்கும் பிரமாதமாக வெற்றியடைந்த படம்தான் ‘யாதோன் கி பாராத்’. தமிழில் எம்.ஜி.ஆர் நடித்து ’நாளை நமதே’வாக வெளியானது. அக்காலத்தில் வெளியான ஹிந்திப்படங்களில் இன்றும் மறக்கமுடியாத படமாக விளங்குகிறது இந்தத் திரைப்படம்.

இதன்பின்னர் 1973ல் துவங்கி 1982 வரை சலீம்-ஜாவேத் எழுதிய திரைக்கதைகள் அப்போதுதான் திரைப்படங்களில் பிரபலமாகிக்கொண்டிருந்த அமிதாப் பச்சனை ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்த்தின. அமிதாப்பின் முதல் பனிரண்டு படங்கள் சுமாரானவையே. பதிமூன்றாவதாக வெளிவந்து அவரது முதல் வெற்றிப்படமாக அமைந்த ‘ஸஞ்சீர்’ படம் சலீம்-ஜாவேதால் எழுதப்பட்டு 1973ல் வெளியானது. இந்தப் படத்தில்தான் அமிதாப பச்சனின் ‘பெருங்கோபமுடைய இளைஞன்’ (Angry young man) கதாபாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது (மூன்று முகத்தின் அலெக்ஸ் பாண்டியனுக்கும் ஸஞ்சீரின் இன்ஸ்பெக்டர் விஜய்க்கும் தொடர்பு உண்டு). இந்தப் படத்தின் இயக்குநர் ப்ரகாஷ் மெஹ்ரா, அமிதாப்பின் வளர்ச்சிக்குக் காரணமான இரண்டு முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் (மற்றொருவர் மன்மோஹன் தேஸாய்). ஸஞ்சீரைத் தொடர்ந்து ’மஜ்பூர்’ 1974ல் சலீம்-ஜாவேதால் எழுதப்பட்டு வெளியாகிறது. இதுவும் ஒரு வெற்றிப்படம்தான். தமிழில் ‘நான் வாழவைப்பேன்’ என்று ரஜினிகாந்த்-சிவாஜி கணேசன் நடித்து 1979ல் வெளியான படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக சிவாஜி அமிதாப்பின் வேடத்தை ஏற்றார். ஹிந்தியில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த ப்ரானின் வேடம் ரஜினிக்குச் சென்றது.

மஜ்பூருக்குப் பின்னர் 1975ல் சலீம்-ஜாவேதின் இரண்டு பிரம்மாண்டமான திரைக்கதைகள் வெளியாகின்றன. அந்தத் திரைக்கதைகளால் அமிதாப் பச்சன் புகழின் உச்சத்துக்குச் செல்கிறார். முதலில் 1975 ஜனவரியில் யாஷ் சோப்ராவின் இயக்கத்தில் வெளிவந்த படம் – ‘தீவார்’. காலத்தால் பந்தாடப்பட்ட இரண்டு சகோதரர்களின் கதை. ஹிந்தியில் சசி கபூரும் அமிதாப் பச்சனும் நடித்திருக்க, தமிழில் ரஜினியும் சுமனும் நடித்து ‘தீ’ என்ற பெயரில் 1981ல் வெளியானது. இதிலும் அமிதாப்பின் பெயர் விஜய். ஹிந்தித் திரைப்படங்களில் இன்றும் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் படம். இந்தப் படத்தை மையமாக வைத்துத்தான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சில காட்சிகள் அமைக்கப்பட்டன (இரண்டு சகோதரர்கள். அவர்களில் ஒருவன் கெட்டவன் – இன்னொருவன் நல்லவன்).

1975ல் வெளியான சலீம்-ஜாவேதின் இரண்டாவது வெற்றிகரமான திரைக்கதைதான் ’ஷோலே’. இன்றுவரை இந்தப் படத்துக்கு இணையாக இந்தியில் வேறு படம் வெளியானது இல்லை என்று கருதப்படுகிறது. ஒரு காலகட்டம் வரை இந்தியாவில் இந்தப்படம்தான் அதிக வசூல் சாதனையில் முதலிடத்தில் இருந்தது.

1978ல் ஏப்ரலில் ‘டான்’ திரைப்படம் அமிதாப்பைக் கதாநாயகனாகக் கொண்டு சலீம்-ஜாவேதின் திரைக்கதையில் வெளியாகிறது. அந்த ஆண்டின் பெருவெற்றிப்படங்களில் ஒன்றாக மாறுகிறது. மறுபடியும் சலீம்-ஜாவேதுக்குப் பழக்கமான விஷயமாக, தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் ரஜினி நடித்து ‘பில்லா’வாக 1980ல் வெளியாகிறது. ரஜினிக்கு மறக்கமுடியாத படங்களில் ஒன்றாக அமைகிறது.

1978ன் டான் வெளியீட்டுக்கு அடுத்த மாதமே வெளியான இன்னொரு படம் – த்ரிஷூல். சஞ்சீவ் குமார், அமிதாப் பச்சன் மற்றூம் சசி கபூரின் அழுத்தமான நடிப்பில் யாஷ் சோப்ராவின் இயக்கத்தில் வெளியான உணர்ச்சிபூர்வமான படம். பணக்காரர் ஒருவர் இளவயதில் ஒரு பெண்ணுடன் உறவுகொண்டுவிட, அப்போது பிறக்கும் குழந்தை பிந்நாட்களில் வளர்ந்து, தந்தையுடன் மோதும் கதை. இதிலும் அமிதாபின் பெயர் விஜய். தமிழில் ரஜினி, சத்யராஜ் மற்றும் எஸ்.வி.சேகர் நடித்து ‘மிஸ்டர் பாரத்’ என்று 1986ல் வெளியானது. ஹிந்தித் திரைக்கதையில் சலீம்-ஜாவேதால் எழுதப்பட்ட உணர்ச்சிகள் தமிழில் இருக்காது. சசிகபூரின் கதாபாத்திரம் தமிழில் எஸ்.வி.சேகரால் நகைச்சுவைக்கு உள்ளாக்கப்பட்டு, ஒரு சராசரியான action படமாக மட்டுமே எடுக்கப்பட்ட படம்.

இதன்பின்னரும் வரிசையாக தோஸ்தானா, ஷான், ஷக்தி என்று அமிதாபின் முக்கியமான படங்களை சலீம்-ஜாவேத் ஜோடிதான் எழுதியது. 1982ல் வெளிவந்த ஷக்திதான் அவர்களின் கடைசிப்படம் (’தெய்வச்செயல்’ படத்தைத் தமிழில் இருந்து ஹிந்தியில் எழுதியதைப் போல், இதுவும் தமிழ் ‘தங்கப்பதக்கத்தின்’ ஹிந்தி ரீமேக்தான். சலீம்-ஜாவேதின் பிரத்யேகமான திரைக்கதையில் அதேபோன்ற உணர்ச்சிமயமான உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்ட படம்). இதன்பின்னர் இந்த ஜோடிகளில் ஒருவராகிய ஜாவேத் கவிதைகள் எழுத விரும்ப, சலீமுக்கு அது ஏற்புடையதாக இல்லாமல் போக, கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். இந்தியாவின் மிக வெற்றிகரமான திரைக்கதை ஜோடியை திரையுலகம் இழந்தது. பிரிவுக்குப் பின்னர் ஜாவேத் அக்தர் கவிதைகளில் மிகவும் பிரபலம் அடைந்தார். சலீம் கான் மெல்லத் திரையுலகில் இருந்து பின்வாங்கிக்கொண்டார்.

இருந்தாலும், சேர்ந்து இருந்தபோது எழுதி வைத்திருந்த சில திரைக்கதைகள் பிரிவுக்குப் பின்னர் படமாக்கப்பட, அவையும் பிரம்மாண்ட வெற்றி அடைந்தன. 1987ல் ‘மிஸ்டர் இந்தியா’ என்று அனில்கபூர், ஸ்ரீதேவி நடிப்பில் ஷேகர் கபூர் இயக்கிய படம் ஒரு உதாரணம். தமிழில் பாக்யராஜால் ‘என் ரத்தத்தின் ரத்தமே’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. ஹிந்தியின் வெற்றியைத் தமிழ் வடிவம் பெறவில்லை.

யோசித்துப் பார்த்தால், எப்படி ஹிந்தியில் அமிதாப் பச்சனின் வளர்ச்சிக்கு சலீம்-ஜாவேத் ஜோடியினர் முக்கியமான காரணமாக அமைந்தனரோ, தமிழிலும் அப்படியே ரஜினிகாந்த்தின் வளர்ச்சிக்கும் மறைமுகமான காரணமாக இருந்திருக்கின்றனர் என்பது புரிகிறது. பெருவாரியான ரஜினி படங்கள் அமிதாபின் படங்களின் ரீமேக் படங்களே. சலீம்-ஜாவேத் மட்டும் இல்லாமல் இன்னும் மன்மோகன் தேசாய், ப்ரகாஷ் மெஹ்ரா போன்ற இயக்குநர்களுமே ரஜினியின் வளர்ச்சிக்கு மறைமுகமான காரணம்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

சலீம்-ஜாவேதின் திரைக்கதைகள் பலவற்றில் ஒரு குறிப்பிட்ட அம்சம் தவறாமல் இடம்பெறும். படத்தின் துவக்கத்தில் நாயகன் சிறுவனாகக் காண்பிக்கப்படுவான். அவன் சில பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். அப்போது சில தொடர்காட்சிகளால் (மாண்டேஜ்கள்) அவனது வாழ்க்கை காண்பிக்கப்பட்டு, அவற்றில் ஒரு காட்சியில் சட்டென்று பெரியவன் ஆகும் கதாநாயகனை சந்திக்கமுடியும். ஹாத்தி மேரா சாத்தியில் துவங்கிய இந்த விஷயம் அவர்களின் பல படங்களில் வரும் (நல்ல நேரத்தில் யானைகளுடன் கால்பந்து விளையாடும் சிறுவன் எம்.ஜி.ஆர், அதில் ஒரு காட்சியில் பந்து மேலே போய்க் கீழே வரும்போது பெரியவன் ஆகிவிடுவார். இது ஒரு உதாரணம்). அதேபோல் அவர்களின் திரைக்கதைகளில் வரும் எதிர்நாயகர்கள் அனைவருமே பெண்களை அவமானப்படுத்தாதவர்களாக, மானபங்கம் செய்யாதவர்களாகவே இருப்பார்கள். காரணம், எதிர்நாயகர்களை உருவாக்குவதில் அவர்களுக்கு இருந்த ஒத்த சிந்தனை. குடும்பமாகத் திரைப்படம் பார்க்க வருபவர்கள் முகம் சுளிக்கக்கூடாது என்பதையே முக்கியமான கொள்கையாக அவர்கள் வைத்திருந்தனர்.

தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் சில பிரபல கதாநாயகர்களின் திரைவாழ்க்கையில் மறைமுகமாக உதவிய சலீம்-ஜாவேத் ஜோடி, இன்றுவரை இந்தியாவின் மிக முக்கியமான திரைக்கதையாசிரியர்களில் தலையாய இடத்தை வகிக்கிறது. இவர்கள் செய்த சாதனைகளை இன்றுவரை யாரும் முறியடித்ததில்லை. பெட்டிச்செய்தியாக, சலீம் கானின் மகனின் பெயர் சல்மான் கான் என்பதையும், ஜாவேத் அக்தர் இன்றுவரை மிகப்பிரபலமான கவிஞர் என்பதையும், ஜாவேத் அக்தரின் மகன் ஃபர்ஹான் அக்தரும் மகள் ஸோயா அக்தரும் பிரபல இயக்குநர்கள் என்பதையும் சொல்லவேண்டியதில்லை என்று எண்ணுகிறேன்.

  Comments

5 Comments

  1. நண்பர்களுக்கு குறிப்பாக திரைத்துறை நண்பர்களுக்கு ஏற்ற முக்கிய செய்திகள்.

    Reply
    • இந்த கூட்டணியை முறியடிக்க தமிழில் திரைக்கதை ஆசிரியர்கள் வருவார்கள் என்பது என் நம்பிக்கை.

      Reply
  2. அருமையா போயிட்டு இருந்துது .. திடுதிப்புன்னு முடிஞ்சது மாதிரி இருக்கு இந்த கட்டுரை ..!

    Reply
  3. Raj

    Awesome Rajesh. Excellent article and wonderful writing style.

    Reply
  4. Stephen raj

    Dear Rajesh,
    Very nice article. Nowadays here only one successful commercial director here, Mr.a.r. murugadoss.
    What people want?
    Do you know what is the elements make a good commercial film,?
    Because I love commercial films. But in Tamil ,Hindi , Hollywood ….total bullshit.

    Reply

Join the conversation