Audition (1999) – Japanese

by Karundhel Rajesh December 14, 2009   world cinema

நமது சாருவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு, சென்னை சென்று விட்டதால், போன பதிவுக்குப் பின்னூட்டங்களுக்குக் கூட பதில் அளிக்க இயலவில்லை. இன்றுதான் பதில் அளிக்க முடிந்தது. அந்த விழா, ஒரு டக்கரான விழாவாக அமைந்தது. அரங்கு நிறைந்த- அரங்கை விஞ்சிய- கூட்டம். பேசியவர்கள், மிக நேர்மையாக அவர்கள் கருத்தைப் பதிந்தார்கள். கடைசில் பேசிய சாருவின் உரை, வழக்கப்படி, அட்டகாசமாக அமைந்தது. அந்தக்கூட்டம் முடிந்தபின், ஒரு ‘சிறப்புக்’ கூட்டம், வேறு ஒரு இடத்தில் நடைபெற்றது. அதில், எஸ். ராமகிருஷ்னன், மனுஷ்யபுத்திரன், ஷாஜி ஆகியவர்கள், நண்பர்களுடனும் ரசிகர்களுடனும் வெகுநேரம் அளவளாவிக்கொண்டிருந்தனர். சாருவும். அப்போது, நம்முடைய கேபிள் சங்கர், நர்சிம், வெண்பூ ஆகிய நண்பர்களுடன் பேச முடிந்தது. முக்கியமாக, நமது பிச்சாவரம் Gang – அதில் பாதி, அப்படியே வந்திருந்தது. அது ஒரு சூப்பரான அனுபவமாக அமைந்தது. நம்முடைய பாஸ்கர், அருண், முரளி, நவீன், பிரபு, ராமச்சந்திரன் ஆகிய அனைவரையும் மீண்டும் சந்தித்தது மிகவும் சந்தோஷமான அனுபவம்! இந்த விழாவைப்பற்றி, சீக்கிரம் நம் சாருவே எழுதுவார்.

இப்பொழுது, படத்தைப்பற்றிப் பார்ப்போம்.

மூப்பு என்பது ஒரு கொடுமையான விஷயம் – நம்மில் சிலருக்கு. மூப்படைவதை விடுங்கள். வயதாகிக்கொண்டிருக்கிறது என்று உணர்ந்தாலே நாம் கவலைகொள்ள ஆரம்பித்துவிடுகிறோம். அப்படி இருக்கும்போது, நிஜமாகவே கவலைகொள்ள வேண்டிய வயதில், நம் வாழ்க்கைத்துணை என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஒருவர் நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டால், நமக்கு எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட தற்கொலைதான். அந்த சமயத்தில், நம் வாழ்வில் இன்னொருவர், நமது இழந்த நம்பிக்கையையும் அன்பையும் காதலையும் மீட்டெடுப்பதற்கென்றே உள்ளே நுழைந்தால் (அல்லது நமக்கு அப்படித் தோன்றினால்), திடீரென நமக்குக் கிடைத்த அந்தப் பரிசை, வாழ்நாள் முழுக்கத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று தானே நமக்குத் தோன்றும்?

அப்படி ஒரு நிலையில் தான், இந்த ‘ஆடிஷன்’ படம் தொடங்குகிறது. ஷிகெஹாரு அயோமா (இனிமேல், வெறும் அயோமா) என்பவர், தனது மனைவி இறந்துவிட்டதால், தனிமையால் பீடிக்கப்பட்டு, தனது இளம் வயது மகனுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். வாழ்வின் எந்த ஒரு மகிழ்ச்சியையும், அல்லது சோகத்தையும் பகிர்ந்துகொள்ள அவருக்கு இருக்கும் ஒரே துணை அந்த மகன் மட்டுமே. அப்படிப்பட்ட சில கணங்களையும் நாம் பார்க்கிறோம். ஒரு நாள் – அந்த மகனுக்குப் பதினேழு வயது – இரவு உணவின்போது, வெகு சாதாரணமாகக் கேட்கிறான் – ‘நீங்கள் ஒரு திருமணம் செய்துகொண்டால் என்ன?’ என்று. அந்த நொடியில் இருந்து, திருமணம் பற்றிய எண்ணங்கள், அயோமாவை அலைக்கழிக்கின்றன.

மறுநாள், தனது அலுவலகத்தில், தனது காரியதரிசியை சந்திக்கிறார். அவள், தனக்குத் திருமணம் ஆகப்போவதாகச் சொல்கிறாள். சொல்லும்போதே, அயோமாவின் முகத்தை நோக்கி, அவரின் ஒரு சிரிப்புக்காகக் காத்திருப்பதைப்போன்ற ஒரு ஏக்கத்தோடு நிற்கிறாள். ஆனால் அவரோ, ஒரு தலையசைப்போடு அந்தத் தகவலை ஏற்றுக்கொள்கிறார். தனது நண்பரும், வியாபாரத்தில் பங்குதாரருமான யோஷிகாவாவைப் பார்த்து, தனது மகன் சொன்ன விஷயத்தைச் சொல்கிறார்.

யோஷிகாவா, மிகுந்த சந்தோஷத்துடன், அயோமாவின் மனதில் யாரேனும் ஒரு பெண் இருக்கிறாளா என்று கேட்கிறார். அப்படி யாரும் இல்லை என்று தெரிந்துகொள்ளும் யோஷிகாவா, ஒரு யோசனை சொல்கிறார். அவர்கள் நிறுவனம், ஒரு திரைப்படம் எடுக்கும் நிறுவனம். எனவே, ஒரு திரைப்படம் எடுப்பதாக விளம்பரம் செய்யலாம் என்றும், அதற்கு நேர்முகத்தேர்வுக்கு வரும் பெண்களில், தனக்குப் பிடித்த ஒரு பெண்ணை அயோமா தேர்வு செய்து கொள்ளலாம் என்றும், அப்பெண்ணிடம், பிறகு உண்மையைச் சொல்லி விட்டு, அவளையே அவர் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் சொல்கிறார். இந்த யோசனை பிடித்துப்போய், அயோமா ஒத்துக்கொள்கிறார்.

மறுநாள், எல்லா முக்கிய ஊடகங்களிலும், இப்புதிய படத்தைப் பற்றிய விளம்பரம். மலைபோலக் குவியும் விண்ணப்பங்களிலிருந்து, முப்பதை அயோமா தேர்வு செய்கிறார். அதிலும், ஒரு விண்ணப்பம் அவருக்கு மிகவும் பிடித்துப்போய் விடுகிறது. தேர்வுக்கு வரும் பெண்களையெல்லாம், யோஷிகாவா பேட்டியெடுக்கிறார். இந்தக் குறிப்பிட்ட பெண் வரும்போது, காதல் உணர்வு மேலோங்கிய அயோமா, பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார். இவள் பெயர் ‘யமாசாகி’ (Yamazaki). யோஷிகாவாவுக்குப் புரிந்துபோய் விடுகிறது. அப்பெண், தான் பனிரண்டு ஆண்டுகள் ‘பாலே’ நடனத்தைப் பயின்றதாகவும், ஒரு விபத்தினால் நடனம் ஆட இயலாமல் போய்விட்டதையும் சொல்கிறாள். அவள் தன்னைப்பற்றிய பல விபரங்களை, சரியாகச் சொல்லாமல் இருந்தாலும், அயோமாவுக்கு அவளை மிகவும் பிடித்துப்போய் விடுகிறது.

மறுநாள், அயோமாவைத் தொலைபேசியில் அழைக்கும் யோஷிகாவா, அப்பெண் கொடுத்த எந்த விபரமும் சரிபார்க்கப்படவில்லை என்றும், அப்பெண்ணின் விண்ணப்பத்தில் உள்ள எந்தத் தகவலும் சரியாக இல்லை என்றும் சொல்லி, அயோமாவை எச்சரிக்கிறார். அப்பெண் கடைசியாக வேலைபார்த்த இசைத்தட்டுத் தயாரிப்பாளரை, கடந்த ஒரு வருடமாகக் காணவில்லை என்றும் சொல்கிறார். ஆனால், அயோமாவோ, இதையெல்லாம் சட்டை செய்வதே இல்லை.

சிறிதுநாட்கள் கழித்து, அப்பெண் யமாசாகியைத் தொலைபேசியில் அழைக்கும் அயோமா, அவளை ஒரு உணவகத்தில் சந்திக்கிறார். உண்மையையும் சொல்லிவிடுகிறார். அந்தப்பெண்ணோ, திருமணத்துக்கு ஒத்துக்கொண்டுவிடுகிறாள்.

ஒரு நாள், அவர்கள் ஒரு விடுதிக்குச் செல்கிறார்கள். அங்கு, தனது ஆடைகளைக் களையும் யமாசாகி, தனது உடலில் உள்ள தழும்புகளை அயோமாவுக்குக் காட்டுகிறாள். தான் சிறுவதில் கொடுமைப்படுத்தப்பட்டதாகச் சொல்லும் அவள், இனி அயோமா, அவளை மட்டுமே விரும்ப வேண்டும் என்றும், அவள்மேல் மட்டுமே அன்பு செலுத்த வேண்டும் என்றும் சொல்லி, தன்னைப்பற்றிய முழு உண்மைகளையும் அவர் அறிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறாள்.

மறுநாள் படுக்கையிலிருந்து எழும் அயோமா, அப்பெண்ணைக் காணாமல், திகைத்துப்போகிறார். அன்றிலிருந்து, அப்பெண் அவர் வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக மறைகிறாள்.

அவளைத் தேடத்துவங்கும் அயோமா, முதலில் அவள் சிறுவயதில் நடனம் கற்றுக்கொண்ட இடத்துக்குச் செல்கிறார். அப்பாழடைந்த இடத்தில், ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு கிழவன், இவரைப் பார்த்துச் சிரிக்கிறான். அப்பெண்ணின் உடலில் உள்ள தழும்புகளுக்குத் தானே காரணம் என்று சொல்லும் அவன், அப்பெண்ணை இனிமேல் தேடாமல், அயோமாவை வீட்டுக்குப் போகச் சொல்கிறான்.

குழம்பிப்போன அயோமா, அந்தப்பெண் கடைசியாக வேலைசெய்த இடத்திற்குச் செல்கிறார். அங்கு வரும் ஒருவன், அந்த இடத்தின் மேலாளர், ஒரு வருடத்திற்கு முன்னால், படுகொலை செய்யப்பட்டதைச் சொல்லி, அவர் உடல் எவ்வாறு துண்டுகளாய் வெட்டப்பட்டிருந்தது என்று சொல்கிறான். மேலும், அந்த உடலின் பாகங்களை, காவல்துறையினர் ஒன்றுசேர்த்துப் பார்த்தபோது, மூன்று விரல்களும், ஒரு காதும், ஒரு நாக்கும் அதிகப்படியாக இருந்தது என்றும் சொல்கிறான். இந்த உலகம் எவ்வாறு ஒரு கொடுமையான இடமாக மாறிவிட்டது என்று சொல்லி, வாழ்க்கையைச் சலித்துக்கோண்டே அங்கிருந்து செல்கிறான்.

இந்த இடத்தில் இருந்து, இப்படம் டாப் கியரில் செல்கிறது. ஒவ்வொரு நிமிடமும் வரும் காட்சிகள், ‘அடுத்தது என்ன’ என்று நம்மை ஒவ்வொரு நொடியும் கேட்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. இப்படத்தின் கடைசி இருபது – இருபத்தைந்து நிமிடங்கள், தவறவே விடக்கூடாத தருணங்கள் என்று சொல்லலாம். பல கேள்விகளை நமக்குள் எழுப்பும் இந்தக் கடைசி சில நிமிடங்கள், அவற்றுக்குப் பதில்களை, நம்மையே யோசித்துத் தெரிந்துகொள்ளவும் வைக்கின்றன. இப்படத்தை ஒரே முறை பார்த்துப் புரிந்துகொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. நான் இதை மூன்று முறை பார்த்தேன் (அதுவும், கடைசி அரைமணிநேரத்தை மட்டும்). ஒருவேளை, இதைப் படிக்கும் வாசகர்கள் இதனை, ஒரே முறை பார்த்துக்கூட புரிந்துகொள்ள இயலலாம்.

மொத்தத்தில், ‘ஆடிஷன்’ ஒரு வெகு வித்தியாசமான படம். பிரபல இயக்குநர் தகாஷி மீகேவினால் இயக்கப்பட்டு, 1999ல் வெளியிடப்பட்ட இந்த ஜப்பானியப்படம், நமது கிம் கி டுக்கின் ‘Isle (seom)’ திரைப்படத்தைப் போலவே, சில Raw ஆன காட்சிகள் உள்ள படம். திரையிடப்பட்டபோது, பல பேர் வாந்தியெடுத்தனர் என்றும், பலர் வெளியேறிவிட்டனர் என்றும் இப்படத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தைப்பற்றி, இது தாங்க முடியாத அளவு வன்முறையான காட்சிகள் அடங்கியது என்று பலர் வேறு குறைகூறியுள்ளனர்.

ஆனால், இப்படத்தைப் பார்த்த போது, மேற்கூறிய குற்றச்சாட்டுகள் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.

இப்படத்தைப் பார்க்கும்போது, இதில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றி, மிகச்சில நொடிகளில் – ஏன் – ஒரே நொடியில் கூட – காண்பிக்கப்படும் காட்சிகள், நிறையத் தகவல்களைச் சொல்கின்றன. அக்காட்சிகளைக் கவனித்தால், அவர்களைப் பற்றி நம் கணிப்பு, முற்றிலும் தவறாகக் கூடப்போய் விடுகிறது.

இந்தப் படத்தின் ட்ரைலரை, வேண்டுமென்றே தான் கொடுக்கவில்லை. படத்தின் ஒரு சஸ்பென்ஸை, டிரைலரில் சற்று உடைத்துவிடுகிறார்கள். எனவே, படத்தைப்பார்க்க விரும்புபவர்கள், டிரைலரப் பார்க்காமல், படத்தையே நேராகச் சென்று பார்க்கவும்.

டிஸ்கி:- இப்படம், சில பேருக்குப் பிடிக்காமல் போகலாம். அப்படிப் பிடிக்காமல் போனால், பொறுத்தருள்க.

  Comments

20 Comments

  1. இந்த படத்தின் கதை உண்மையிலேயே சுவராஸ்யமாக உள்ளது. தேடிப்பிடித்து பார்க்கிறேன். நன்றி

    Reply
  2. வர வர உங்க way of writing, style சூப்பராகிட்டே போகுது… ஹ்ம்ம்ம் கலக்குங்க

    Reply
  3. ஆமாங்க சுப.த!!! இப்பல்லாம்.. கருந்தேள்.. செமையா கொட்டுறார்! 🙂 🙂

    —-

    தல…., 18+ எழுதும் போது.. இந்தப் படத்தைப் பத்தியும் படிச்சேன். இவரோட.. Ichi the Killer படத்தையும் I-க்கு வச்சிருந்தேன். அப்புறம் எழுதலை.

    நல்லவேளை.. Ichi எழுதியிருந்தீங்கன்னா.. மயக்கமே போட்டிருப்பேன். ஏன்னா அதுவும்… ட்ராஃப்டில் இருக்கு! 🙂 🙂 🙂

    Reply
  4. நம்முடைய கேபிள் சங்கர், நர்சிம், வெண்பூ ஆகிய நண்பர்களுடன் பேச முடிந்தது///////////அடடா.. உங்களை பார்க்க வில்லையே..? இரவு 12 மணி வரை இருந்தேனே..??

    Reply
  5. 🙂

    இன்னிக்கு இந்தப் படம் டவுன்லோடு செஞ்சுடறேன் தல..

    Reply
  6. @ அண்ணாமலையான் – மிக்க நன்றி. பார்த்துவிட்டு உங்கள் கருத்தைப் பதியுங்கள்.

    @ சு. ப – 🙂 என்னங்க இப்புடி ஓட்டிப்புட்டீங்க . . 🙂 எல்லாம் நம்ம தல பாலாவால தான் . . 🙂 உங்க வாழ்த்துக்கு நன்றி . .

    @ பாலா – இட்சி த கில்லர் இன்னும் நானு பார்க்கல.. நம்ம லப்டப் பதி நல்லவேள கொஞ்சம் பக்கத்துல வந்து உரசிட்டு போயிருச்சி 🙂 . . சீக்கிரமே அதா எழுதுங்க.. தேடிப்புடிச்சி பாக்குறேன் . .

    @ சூர்யா – அய்யய்யோ . .உங்களையும் நானு மிஸ் பண்ணிட்டேனே . .நீங்க சாரு பார்ட்டிக்கி வந்தீங்களா . .அங்கே, சாரு பக்கத்துல, நீல கலர் சட்ட போட்டுட்டு, ஒசரமா ஒருத்தன் இருந்தானே.. அது நான் தான். . உங்கள நானு டோட்டலா தவற உட்டுட்டேனே 🙁 🙁

    @ சென்ஷி – உங்களுக்கு கண்டிப்பா இது புடிக்கும்னு தோணுது.. பார்த்துட்டு சொல்லுங்க. . .

    Reply
  7. ஆனால், இப்படத்தைப் பார்த்த போது, மேற்கூறிய குற்றச்சாட்டுகள் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.
    /////

    பாத்து பாத்து மரத்து போச்சு போல!

    Reply
  8. @ பப்பு – ஹீ ஹீ .. ஆமா. . . 🙂 இந்த மாதிரி ரத்தம், வன்முறையெல்லாம் பார்த்துப் பார்த்து மரத்தே போச்சு . . 🙂

    Reply
  9. @ காதலரே – மிக்க நன்றி. . உங்கள் கருத்துகள் என்னை மென்மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள உதவும். . .

    Reply
  10. நேத்து இந்தப் படம் பார்த்தேங்க. ஒன்னும் ஃபீல் பண்ணலை. ‘சிக்’-ன்னு எல்லோரும் தியேட்டரில் கத்தினது எல்லாம்… ஸ்டண்ட்-ஆ இருக்கலாம்.

    இட்சியும் ஒன்னும் சொல்லிக்கற மாதிரிப் படமெல்லாம் இல்லை. ஆடிஷனை விட அது கோர் & எண்டர்டெய்னிங்.

    மத்தபடிக்கு.. இந்தப் படம் அதைவிட பெட்டர்.

    Reply
  11. வணக்கம் பாலா – எனக்கும் ஒண்ணும் பீல் ஆகல 🙂 . அதுக்குக் காரணம் என்னன்னு எனக்குத் தோணுதுன்னா, நாமெல்லாம் அந்த இடத்தைத் தாண்டிட்டோம்னு தான் (இது ஈகோ இல்லன்னு உங்களுக்கே தெரியும்) . .நீங்க கிம் கி டுக்கோட ‘ஐல்’ படம் பார்த்தீங்கன்னாலும், உங்களுக்கு ஒண்ணும் ஆகாது.. அதுவும் மக்களால கோரம்னு சொல்லப்பட்ட படம்தான்.. நமக்கெல்லாம் அந்த மாதிரி தோணினா தான் அதிசயம்னு தோணுது.. 🙂 நீங்க இச்சி படத்தோட விமர்சனத்த எழுதுங்க.. அத சீக்கிரம் நாங்கபாக்குறோம் . .

    Reply
  12. டவுன்லோடு செஞ்சு பார்த்தாச்சு நண்பா :)) பாலா சொன்னது போல எனக்கும் பெருசா அதிர்வு ஏற்படலை. இந்தப் படத்திலிருந்து கடைசி சில காட்சிகள் போலவே 1408 படத்திலும் வரும்.

    ஆனாலும் அந்த முடிவும், அந்தப் பெண்ணின் காதலும் (!) எனக்கு மிகப் பிடித்திருந்தது.

    Reply
  13. 🙂 பாலாக்கு சொன்ன பதிலே தான் உங்களுக்கும் 😉 … நாம இதுபோல நிறைய பார்த்தாச்சு இல்லையா 😉 .. ஆனா உங்க கடைசி வரி எனக்குப் பிடித்திருந்தது 😉

    Reply
  14. காலை அறுப்பதற்கு உபயோகப்படுத்தும் அந்த கம்பி அறுக்கும் சப்தமும் அந்தப் பெண்ணின் முகபாவமும் லைட்டாய் உதற வைத்ததை இங்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

    Reply
  15. இந்த படம் ஜப்பானிய படமான gold fish ஐ விடவா வன்முறையாக இருக்கும் .

    Reply
  16. சரவண ராராஜா

    எனக்கு கிளைமேக்ஸ் புரியலை.
    கொஞ்சம் விளங்க வையுங்கேளன்.
    ராஜா

    Reply

Join the conversation