Avengers – 2 – The Three Monsters
சென்ற பாகத்தில், ஐம்பதுகளில் Fantastic Four காமிக்ஸ்கள் சக்கைப்போடு போட்டன என்று படித்தோம் அல்லவா? இதன்பின்னர், கும்பல் கும்பலாக சேர்ந்து சண்டையிடும் சூப்பர் ஹீரோக்களைப் பற்றிய craze காமிக்ஸ் ரசிகர்களிடையே பெருக ஆரம்பித்தது (ஆல்ரெடி DC காமிக்ஸ், ஜஸ்டிஸ் லீக்கினால் இந்த நெருப்பில் நெய் வார்த்திருந்தது). அதற்கு சரியான வகையில் தீனிபோடும் திறமையும் ஸ்டான் லீயிடம் அபரிமிதமாக இருந்தது. ஆகவே, இந்த சீரீஸை உருவாக்கியபின், சரமாரியாக புதுப்புது கதாபாத்திரங்களை உருவாக்க ஆரம்பித்தார் லீ. அவற்றில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இன்றளவும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருப்பதை கவனித்தால், அவரது புத்திசாலித்தனம் புரியும்.
1962. பனிப்போரின் உச்சகட்டம். ஒரு புதிய காமிக்ஸ் கதாபாத்திரத்தை ஸ்ருஷ்டிக்க விரும்பினார் லீ. எப்படிப்பட்ட கதாபாத்திரம்? அவரே சொல்கிறார் கேட்போம்.
“எப்போது வேண்டுமானாலும் ந்யூக்ளியர் குண்டுகள் வீசப்படலாம் என்ற சூழல். இந்தப் பயம் மட்டுமல்லாது, அணு ஆயுதங்களால் பல ஆபத்தான உயிரினங்கள் உருவாக்கப்படலாம் என்றும் மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலம். அந்த நேரத்தில் அப்படிப்பட்ட ஒரு மான்ஸ்டரை உருவாக்க விரும்பினேன். இந்த பூதத்தை உருவாக்குவதற்காக எனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது, Dr Jeykill & Mr. Hyde கதாபாத்திரம் (பள்ளி நாட்களில் ஆங்கிலத் துணைப்பாடமாக அமைந்த இந்தக் கதையைப் பலர் படித்திருக்கலாம். சுருக்கமாக: பகலில் மருத்துவர். இரவில் பூதம்). கூடவே, நாற்பதுகளில் அமெரிக்கத் திரைப்படங்களின் டார்லிங்காக விளங்கிய ஃப்ராங்கென்ஸ்டைன் கதாபாத்திரம். இந்த இரண்டு கதாபாத்திரங்களைக் கலந்தே நான் உருவாக்க விரும்பிய பூதத்தை உருவாக்கினேன். ஆனால், அந்த பூதம் கெட்ட பூதம் அல்ல. அது பாட்டுக்கு அதன் வேலையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கும். அதனைச் சுற்றியுள்ள மனிதர்கள் இந்தப் பூதத்தைப் பார்த்து பயந்து, இதனை ஆத்திரப்படுத்தும்போது அதன் சக்தி அதிகரித்து, பேரழிவை அப்பூதம் உருவாக்கும்”.
அப்படி மே மாதம் 1962ல் உருவாக்கப்பட்டு அறிமுகமான கதாபாத்திரம் தான் ‘The Incredible Hulk‘. முதன்முதலில் அறிமுகமான காமிக்ஸ் அட்டையைக் கவனித்தால், தத்ரூபமாக ஃப்ராங்கென்ஸ்டைன் போலவே ஹல்க்கின் முகம் இருப்பதைக் காண முடியும். மட்டுமல்லாது, ஹல்க்கின் நிறம், சாம்பல் நிறமாக இருக்கும். அதுதான் ஹல்க்கின் ஒரிஜினல் நிறம். பச்சை வண்ணம், பின்னர் வந்து ஒட்டிக்கொண்டதுதான்.
1963ல், ஹல்க் கதாபாத்திரம், Fantastic Four கதைகளில் கௌரவ வேடத்துடன் இடம்பெற்றது. அந்தக் காலகட்டத்தில், ஹல்க் கதைகளுக்குப் படம் வரைபவரான ஜாக் கிர்பிக்கு ஒரு கல்லூரியிலிருந்து கடிதம் ஒன்று வந்தது. தங்கள் கல்லூரியின் டார்மிட்டரிக்கு ஹல்க்கின் படத்தையே வைத்து ஒரு சின்னம் உருவாக்கியிருப்பதாக. அப்போதுதான், ஹல்க், கல்லூரி மாணவ மாணவியரிடையே பிரபலமாக இருந்தது ஸ்டான் லீக்குத் தெரியவந்தது.
இதன்பின்னர் பல ஹல்க் கதைகள் வெளிவந்துவிட்டன. இக்கதைகளை மையமாக வைத்து, 2003ல், The Hulk என்ற படமும், 2008ல் The Incredible Hulk என்ற படமும் வெளிவந்தும்விட்டன (இப்படங்களைப் பற்றி, அவெஞ்சர்ஸ் படத்தைப் பற்றிய இனிவரும் கட்டுரையில் விபரமாகப் பார்க்கலாம்).
ஹல்க் எப்படி உருவாகியது?
ஒரு விஞ்ஞானப் பரிசோதனையின்போது, ஒரு குறிப்பிட்ட கதிரியக்கத்திலிருந்து ஒரு குழந்தையைக் காப்பாற்றுகையில், அந்தக் கதிரியக்கத்துக்கு முழுமையாக ஆட்பட்டுவிடுகிறார் விஞ்ஞானி ப்ரூஸ் பேன்னர் (Bruce Banner). உடனடியாக மயக்கமும் அடைந்துவிடுகிறார். அன்று இரவு, ராணுவ முகாமிலிருந்து பிரம்மாண்டமான சாம்பல் நிற ஜந்து ஒன்று சுவரைத் தாண்டிக் குதித்து ஓடுகிறது. விஞ்ஞானி பேன்னர்ஸையும் காணவில்லை. அதன்பின்னர்தான் அதிகாரிகளுக்கு உண்மை புரிகிறது. ப்ரூஸ் தேடப்படுகிறார். இதனை மையமாக வைத்தே ஹல்க் கதைகள் உருவாக்கப்பட்டன.
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், அக்கதாபாத்திரத்தின் பிரதான எதிரி ஒருவன் இருப்பான். எதிரி என்று எடுத்துக்கொண்டால், பலபேர் பல காமிக்ஸ்களில் வருவார்கள். ஆனால், அவர்களுக்குள், பெரிய வில்லன் ஒருவன் இருந்தே தீருவான். அப்படிப்பட்ட மெயின் வில்லன், இந்த ஹீரோவுடன் எப்படியெல்லாம் மோதுகிறான் என்பதைவைத்து கதையின் சுவாரஸ்யம் அதிகரிக்கும் இல்லையா? அப்படி ஹல்க்கின் பிறவி எதிரி யாரென்றால், ஜெனரல் தாட்டியஸ் ‘தண்டர்போல்ட்’ ராஸ் (Thaddeus ‘Thunderbolt’ Ross) என்ற ராணுவ அதிகாரி. ‘The Incredible Hulk’ படத்தின் கடைசியில், அதிபயங்கர ஜந்துவாக மாறி ஹல்க்குடன் மோதுவாரே, அதே கதாபாத்திரம்தான் இந்த ராஸ். (திருத்தம்:23rd Apr 2012: உண்மையில், திரைப்படத்தில், எமில் ப்ளான்ஸ்கி என்ற ராணுவ வீரன் தான் க்ளைமாக்ஸில் அபாமிநேஷன் என்ற பெரிய உருவத்தில் ஹல்க்குடன் மோதுவான். திருத்தத்தை, பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டிய நண்பர் இரா.தீபக்குக்கு நன்றி). இவரைத்தவிர, பல்வேறு சைடு வில்லன்களும் ஹல்க்கின் கதைகளில் உண்டு.
ஹல்க்கின் கோபம் வளரவளர, அவனது பூதாகாரமான தோற்றம் வெளிப்படும். ஆரம்பகால காமிக்ஸ்களில், ப்ரூஸ் பேன்னரிடம் ஒரு கருவி இருந்தது. அக்கருவியின் மூலமாகத் தனது பூத உருவை அவர் எடுப்பார். பிந்நாட்களில் அக்கருவி மறைந்து, கோபத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறை அறிமுகமானது.
ஆகஸ்ட் 1962. ஏற்கெனவே ஹல்க்கை உருவாக்கிய லீ, இன்னொரு புதிய ஹீரோவை உருவாக்க நினைத்தார். இம்முறையும், லீயே இந்தப் புதிய கதாபாத்திரத்தைப் பற்றி விளக்குகிறார்:
”இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் உலகின் அதிபயங்கர பலசாலியை (ஹல்க்) உருவாக்கியிருந்தேன். இப்போது, இன்னொரு புதிய கதாபாத்திரத்தை உருவாக்கவேண்டும் என்று நினைத்தபோது, இந்தப் பலசாலியை விட பலமுள்ளவனாக எப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவது என்று யோசித்தேன். மிகவும் எளிய வழி தோன்றியது. அதாவது, மனிதனாக அக்கதாபாத்திரம் இருக்கக்கூடாது என்று முடிவுசெய்தேன். மனிதனாக இருக்கக்கூடாது என்றால், அவன் ஒரு கடவுளாக இருத்தல் மட்டுமே சரியானதொரு வழியாகத் தோன்றியது. கடவுள் என்றால், எந்தக் கடவுள்? கிரேக்க மற்றும் ரோமன் கடவுளர்களைப் பற்றி மக்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. ஆகையால், மக்களுக்கு அதிகம் தெரியாத நோர்ஸ் கடவுலர்களைப் பற்றி ஆராய்ந்தேன். நோர்ஸ் கடவுளர்கள், வைக்கிங்குகளைப் போல் இறக்கை வைத்த கிரீடம், பெரிய தாடி, ஆயுதமாக சுத்தியல் ஆகியவற்றை வைத்துக்கொண்டிருந்ததை அவதானித்தேன். இப்படி அவதரித்த கதாபாத்திரம் தான் தோர் (Thor)”.
தோர் என்ற இந்தக் கதாபாத்திரத்தின் ஒரிஜினல் இடம், ‘அஸ்கார்ட்’ (Asgard) என்ற கிரகம். அந்தக் கிரகத்தில், ‘ஓடின்’ (Odin) என்ற தலைவரின் மகனே தோர். தோருக்கு ஒரு அண்ணன் உண்டு. அவன் பெயர் ‘லோகி’ (Loki). தோர் மிகவும் கர்வமுள்ளவனாக இருந்ததால், அவனுக்குப் பணிவைக் கற்றுக்கொடுக்க விரும்பி, ஓடின், பூமியில் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனான ‘டொனால்ட் ப்ளேக்’ என்பவனின் உடலில் தோரின் நினைவுகளை அழித்து, புகுத்திவிடுகிறார். அப்போது எதேச்சையாகத் தன்னைத் துரத்தும் சில ஏலியன்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஓடும் ப்ளேக்கின் கையில் கிடைக்கிறது, தோரின் ஆயுதமான சுத்தியல். இந்த சுத்தியலின் பெயர், ‘மயோல்நிர்’ (Mjolnir). இந்த ஆயுதம் கிடைத்ததும், ப்ளேக்குக்கு சுயநினைவு வந்துவிடுகிறது. ஏலியன்களை அடி துவம்சம் செய்கிறார் தோர். அதன்பின், சூப்பர்மேன் போல, பல நேரங்களில் சாதுவான மனிதன் போலவும், பூமிக்கு ஆபத்து நேர்கையில் தோராகவும் அவதரித்துக்கொண்டிருக்கிறார் தோர்.
தோரின் பிரதான எதிரி, தோரின் அண்ணன் லோகி. இதைப்பற்றியும், சென்ற வருடம் வெளிவந்த Thor(2011) திரைப்படத்தைப் பற்றியும், இதோ என்னுடைய பழைய கட்டுரை.
அதிபயங்கர பலமே தோரின் ப்ளஸ் பாயிண்ட். கூடவே, அவனது சுத்தியல். அளவுக்குமீறி ஆத்திரப்படுத்திவிட்டால், தோர் வெறித்தனமாக எதிரில் இருப்பவர்களைக் கண்மூடித்தனமாக தாக்கத் துவங்கிவிடுவான். அப்போது அது நண்பர்களா எதிரிகளா என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது.
ஆண்டு 1963. ஹல்க் மற்றும் தோர் காமிஸ்கள் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரம். ஸ்டான் லீதான் ஒரே வேலையை திரும்பத்திரும்ப செக்குமாடு போல் செய்பவர் அல்லவே? எதிலுமே ஒரு வெரைட்டி தேவைப்படும் ஆளாயிற்றே? ஆகவே, புதியதாக ஒரு ஹீரோவை உருவாக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.
“1963ல், மக்கள் அதிகம் வெறுக்கக்கூடிய விஷயம் என்னவாக இருந்தது என்றால், அது ராணுவம்தான். பனிப்போரின் உச்சகட்டம். ஆகவே, என் வழக்கப்படி, மக்கள் அதிகமாக வெறுத்த ஒரு விஷயத்தையே அவர்களின் மீது அளவுக்கதிகமாகத் திணித்து, அவர்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தைப் பிடிக்கவைக்க விரும்பினேன். ஆகவே, ஒரு ஆயுத வியாபாரியாக எனது ஹீரோவை உருவாக்கினேன். எப்போது பார்த்தாலும் ஆயுதங்களையே சிந்தித்து ஆயுதங்களையே வாழ்ந்து வந்த நபராக என் ஹீரோ இருந்தான். கூடவே, அவன் ஒரு பெரும் பணக்காரனாகவும் இருந்தான். பெண்களுடனேயே காலம் கழிக்கும் மனிதன். பிறரின் கவலைகளைப் பற்றிக் கவலையில்லாத மனிதன். ஆயிரம் இருந்தும்…. வசதிகள் இருந்தும்…நிம்மதி இல்லாமல் அவனை அலைக்கழிப்பதற்கென்றே அவனது உள்மனதில் ஒரு ரகசியம் உண்டு. ஆம். அவனது இருதயம் அழிந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்து தன்னை அவன் எப்படிக் காத்துக்கொள்கிறான்?
இந்தப் பணக்கார கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது, ஹோவார்ட் ஹ்யூஸ் (Howard Hughes – The Aviator பட நாயகனாகக் காண்பிக்கப்பட்ட மனிதர்). மிகப்பெரும் பணக்காரர். கூடவே நட்டு கழண்ட கேஸ். ஆனால், என் கதாபாத்திரம், நட்டு கழண்டவன் அல்ல. அது ஒன்றுதான் இருவருக்கும் வித்தியாசம். அப்படி நான் உருவாக்கிய அந்தக் கதாபாத்திரம், அத்தனை பேருக்கும் மிகவும் பிடித்துப்போய்விட்டது”.
இப்படியாக, டோனி ஸ்டார்க் (Tony Stark) அலையாஸ் Iron Man உருவானான். முதல் காமிக்ஸில் இந்த அயர்ன் மேன் கதாபாத்திரம், நமது லயன் காமிக்ஸின் சட்டித்தலையன் ஆர்ச்சியைப் போலவே இருந்ததை, போஸ்டரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அதன்பின் சிறுகச்சிறுக அவனது உடை வியக்கத்தக்க மாறுதல்களை அடைந்தது.
இந்த மூன்று கதாபாத்திரங்களையும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இவர்களுக்கு உள்ள தொடர்பைப் பற்றியும், இவர்கள் சந்தித்த மற்றொரு கதாபாத்திரம் பற்றியும்………
தொடரும் . . .
//நமது லயன் காமிக்ஸின் சட்டித்தலையன் ஆர்ச்சியைப் போலவே இருந்ததை,//
மிகக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.
ஆர்ச்சி.. அமெரிக்க காமிக் இல்லையா கருந்தேள்? இங்க நாற்பது வருசமா காமிக்கை சேர்க்கும் நண்பர் இருக்கார். அவர் கூட அப்பப்ப காமிக் ஸ்டோர்ஸ்க்கு போவேன். அப்பல்லாம் ஆர்ச்சியை பத்தி கடையில் கேட்டும்.. யாருக்கும் இப்படியொரு கேரக்டர் இருக்கறது தெரியலை.
அதே மாதிரி டெக்ஸ் வில்லர் கேரக்டரையும் யாருக்கும் தெரியலை (அது இத்தாலிய கேரக்டர்ன்னு படிச்ச நியாபகம்).
படு சுவராசியமாக போய் கொண்டிருக்கிறது…அனைவரையும் avenger படம் பார்க்க வைத்து விடுவீர்கள் போலவே….
அவெஞ்சர்ஸ் படம் அட்டகாசமா இருக்குண்ணு ஏற்கனவே ப்ரிவியு ஷோ பார்த்தவங்களின் கருத்து. எப்படியும் படம் சூப்பரா இருக்கும்ங்கறது தெரிஞ்ச கதை தானே?
ஆனாலும் இந்த மூவரில் எனக்கென்னவோ மிகவும் பிடித்தது Iron Man தான். ஸ்பெஷல் சூப்பர் பவர் ஒன்றும் இல்லாமல் வெறும் டெக்னாலஜி based சூப்பர்ஹீரோ (ஃபேவரைட் பேட்மேன்) என்பதாலோ என்னவோ?
ஒரு சின்ன திருத்தம் Incredible Hulk இல் கடைசியில் ஹல்குடன் சண்டை போடுவது அபாமினேசன். புளான்ஸ்கி எனும் ரானுவ வீரன். ஜெனரல் ராஸ் இல்லை.பெட்டியின் அப்பா தான் ஜெனரல் ராஸ்.
Very super. Captain america pathi sikiram eluthunga enaku romba pidikum nabar.
இந்த தொடர் ரொம்ப புடிச்சிருக்கு (மறுபடியும் ஒரு தொடரான்னு, ட்ரெயின் சத்தத்த கேக்கும் போதெல்லாம் பயப்படும் கோப்பால் மாதிரி ஒரு பீதி கிளம்பினாலும்.
எப்படி இத்தன வேலைக்கு இடையே, கொஞ்சம் கூட அலுப்பு தெரியாம – கடனுக்கேன்னு எழுதாம, ஒரு ஸ்டாண்டர்ட் மெயின்டன் பண்றீங்களோ…….சல்யூட்…..
பல படங்களை பார்த்து ரசிக்கும் போது அதுக்கு பின்னாடி உள்ள விஷயத்தை எல்லாம் யோசிக்க தோணவே இல்ல …..உங்க லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் சீரியஸ் படிச்சுட்டு படத்த பாத்தா டோட்டலா வேற மாதிரி இருக்கு….[எனக்கு ரொம்ப பிடித்த தொடர் அது ]…..avengers பாக்க கோவை கிளம்பிற வேண்டியதுதான்…..
@ ஆள்தோட்ட பூபதி – ஆர்ச்சி, அமேரிக்கா இல்ல. இங்கிலாந்து. அங்கயும் லயன்ற பேர்ல இருந்த மாகசின்ல வந்ததே ஆர்ச்சி.
அதேபோல, டெக்ஸ் வில்லர், இடாலியன் காமிக்ஸ். ஆங்கிலத்துல மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியானது. ஐரோப்பால தான் இந்த ரெண்டும் ஒருகாலத்துல ஃபேமஸ்
@ லக்கி – கட்டாயம் 🙂 .. அவேஞ்சர்ஸ் பிராண்ட் அம்பாசிடர் நாந்தான்னு ஆந்தை சொல்லிருக்கு 🙂
@ ஹாலிவுட் ரசிகன் – அமாம். ப்ரிவியூ நல்லாருக்குன்னுதான் சொல்றாங்க. ஆனா அவங்க மார்வெல் ஆளுங்களோன்னு எனக்கு டவுட் இருக்கு. படம் வந்தாத்தான் நம்புவேன். ஐயர்ன் மேன் – பயங்கர ஈகோ புடிச்ச ஆள். அப்புடி இருக்குறவங்களுக்கு அந்த கேரக்டர் புடிக்கும் (எனக்கு) 🙂
@ இரா. தீபக் – திரைப்படத்தைப் பொறுத்த வரையில், அபாமிநேஷன் – ப்ளான்ஸ்கி என்பது சரி. ஆனால், காமிக்ஸ் பொறுத்தவரைக்கும், ஜெனரல் ராஸ் தானே ரெட் ஹல்க்கா மாறுறாரு? என்னோட இந்த reference எரரை சரி பண்ணிட்டேன். உங்கள் திருத்தத்துக்கு மிக்க நன்றி.
@ கொழந்த – ஏனோதானோன்னு என்னிக்குமே நான் எழுத மாட்டேன். காரணம், நம்மால முடிஞ்சவரைக்கும் எதாவது உருப்படியா தகவல்களை சொல்லணும்ன்ற நோக்கம்தான். இந்த நோக்கத்துலயே ஒரு ஈகோ இருக்கலாம். இருந்தாலும், let ‘s c . . .
@ Elamparithi – மிக்க நன்றி. தவறாம இந்தப் படத்தை கோவைல எதுனா ஒரு நல்ல தியேட்டர்ல பாருங்க