Avengers – 4 – Nick Fury

by Karundhel Rajesh April 24, 2012   English films

இதுவரை வெளிவந்துள்ள அவெஞ்சர் ஹீரோக்களின் படங்களான ‘Iron Man’, ‘The Incredible Hulk’, ‘Iron Man 2’, ‘Thor’ மற்றும் ‘Captain America: The First Avenger’ படங்களிலெல்லாம் ஒரு பொதுவான இழை உண்டு. அந்த இழையைப்பற்றித்தான் இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரையை எழுதாமல் Avengersதிரைப்படத்தைப் பற்றி எழுத இயலாது.

அதற்குமுன், இந்தக் காட்சியைப் பார்த்துவிடுங்கள். இதுவரை வந்திருக்கும் இந்தப் படங்களில், டைட்டில்கள் முடிந்தபின்னர் வரும் சிறிய ஸீன்களின் தொகுப்பு இது.

இந்த அத்தனை காட்சிகளிலும் வரும் அந்த ஒற்றைக்கண்ணன் யார்? அந்த நபரின் வேலை என்ன?

அதைத்தான் இன்றைய கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.


மே 1963ல் ஸ்டான் லீயும் ஓவியர் ஜாக் கிர்பியும் உருவாக்கிய S.H.I.E.L.D. என்ற ஏஜென்ஸியின் தலையாய துப்பறிவாளனே இந்த நிக் ஃப்யூரி. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் வாழ்ந்துமே, வயது ஏறாத ஒரு கதாபாத்திரம். Infinity ஃபார்முலா என்ற மருந்தை அவ்வப்போது குடித்துவருவதால் சாகாவரம் பெற்றவராக இருக்கிறார் இவர். முதல் உலகப்போரின் சாகஸவீரரான ஜாக் ஃப்யூரியின் மூத்த மகனாக, 1917லிருந்து 1923க்குள் பிறந்த நிக் ஃப்யூரி, தந்தையைப் போலவே ஒரு சாகஸ விரும்பியாகவே திகழ்ந்தார். இரண்டாம் உலகப்போரின்போது ஹவாயில் அமெரிக்க ராணுவத்தின் வீரராக அமர்த்தப்பட்ட நிக் ஃப்யூரியின் நெருங்கிய நண்பன் ரெட், பேர்ல் ஹார்பர் தாக்குதலில் உயிரிழந்துவிட, அன்றிலிருந்து நாஜிக்களும் ஜப்பானும் நிக் ஃப்யூரியின் எதிரிகளாக மாறுகின்றனர். இதன்பின், ஒரு அதிரடிப்படையின் தலைமைப்பொறுப்பை ஏற்கும் நிக் ஃப்யூரி, போலந்தை ஜெர்மனி தாக்கிக்கொண்டிருந்த பல்வேறு பகுதிகளில், பல அஸைன்மென்ட்களில் ஈடுபடுகிறார்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த தருணங்களில், ஃப்ரான்ஸில், ஒரு குண்டுவெடிப்பில் மரண காயம் அடைகிறார் நிக் ஃப்யூரி. அப்போது, ஸ்டெர்ன்பெர்க் என்றவரால் காப்பாற்றப்பட்டு, அவர் கண்டுபிடித்து வைத்திருந்த Infinity ஃபார்முலாவைப் பரிசோதிக்கக்கூடிய சோதனை எலியாக மாறி, அந்த ஃபார்முலா ஃப்யூரியின் உடலில் செலுத்தப்படுகிறது. அதுதான் ஃப்யூரியின் சாகாவரத்துக்குக் காரணம். ஆனால், அந்த மருந்து அவரது உடலில் சீரான இடைவெளிகளில் செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால், வெகுவிரைவில் மரணம் சம்பவிக்கும்.

இதன்பின், CIAவில் சேர்கிறார் ஃப்யூரி. கொரியாவில் பல சாகஸங்களில் ஈடுபடும் ப்யூரியைத் தேடிவருகிறது கர்னல் பதவி. இந்தச் சமயத்தில்தான் ரிச்சர்ட் பார்க்கர் மற்றும் அவரது மனைவி மேரி பார்க்கர் ஆகிய இரண்டுபேரை CIAவில் சேர்த்துக்கொள்கிறார் ஃப்யூரி (இந்த இருவரின் மகன், பிந்நாட்களில் உலகப்பிரசித்தி அடையப்போகிறான். அவன் பெயர் – பீட்டர் பார்க்கர்). இதன்பின், மெல்ல மெல்ல CIAவின் தொடர்பாளராக அந்தச் சமயத்தில் உருவாகியிருந்த பல சூப்பர்ஹீரோ கும்பல்களோடு பேச்சுவார்த்தையும் நடத்திவந்தார் ஃப்யூரி (குறிப்பாக Fantastic Four).

அப்போதுதான் தனது இடது கண்ணில் கறுப்புத்திரை அணிய ஆரம்பித்தார் ஃப்யூரி. ஒரு குண்டின் துகள் அவரது கண்ணில் புகுந்து, கண்பார்வையை 95% பறித்துவிட்டதால் இந்த கறுப்புத்திரை. எந்தவித ஆபரேஷனும் செய்துகொண்டு கண்பார்வையை மீட்க மறுத்துவிடுகிறார் ஃப்யூரி.

இந்தச் சமயத்தில்தான் அவரை அணுகுகிறான் டோனி ஸ்டார்க் என்ற மனிதன். Iron Man என்ற அவதாரமும் இவனுக்கு உண்டு. S.H.I.E.L.D. என்ற அமைப்பு ஒன்று இருப்பதாகவும், அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரியாக செயல்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறான். அதனை ஏற்று, அந்த அமைப்பின் தலைமைப்பொறுப்பில் அமர்கிறார் ஃப்யூரி.

S.H.I.E.L.D. என்றால், Supreme Headquarters, International Espionage, Law-Enforcement Division என்று அர்த்தம். இது ஆரம்ப நாட்களில். இதன்பின் Strategic Hazard Intervention Espionage Logistics Directorate. என்று மாற்றப்பட்டு, அதன்பின், திரைப்படங்களில் Strategic Homeland Intervention, Enforcement and Logistics Division  என்று பெயர்சூட்டப்பட்ட அமைப்பு இது. இதன் வேலை? தீயவர்களை வேட்டையாடி, நாட்டில் அமைதி நிலவச் செய்வதே.

ஃப்யூரியின் நிர்வாகத்தில், இந்த அமைப்பு, உலகின் மிகசக்திவாய்ந்த சுதந்திரமான அமைப்பாக உருவெடுத்தது. இதன்பின், அரசுத்தரப்பில் சூப்பர் ஹீரோக்களைத் தொடர்பு கொள்வது, ஃப்யூரியின் மூலமாகவே நிறைவேறியது. பல வருடங்கள் இப்படிக் கழிந்தபின், ஒரு தீய அமைப்பு, ஷீல்டின் பல ஏஜென்ட்களை விலைக்கு வாங்கி, ஃப்யூரியையே வேட்டையாடத் தூண்டுகிறது. மனமொடிந்த ஃப்யூரி தலைமறைவாகிறார். இதன்பின் மறுபடி வெளிவரும் ஃப்யூரி, இம்முறை இன்னமும் பலமாக ஷீல்டைக் கட்டமைக்கிறார். இதன்பின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன (ப்யூரி மறுபடி தலைமறைவாவது, டோனி ஸ்டார்க் ஷீல்டின் தலைவராவது, அதன்பின் டோனியின் உதவியோடு மறுபடி ஃப்யூரி வெளிவருவது).

இப்படியாக, உலகின் அதிசக்திவாய்ந்த ஒரு அமைப்பின் தலைவராக எப்பொழுதும் இருந்துகொண்டு, தீயவர்களை வேட்டையாடுவதே ஃப்யூரியின் வேலை.

ஃப்யூரியால் செய்யமுடியாது எதுவுமே இல்லை. கைகலப்பில் எக்ஸ்பர்ட். மூன்று பெரும்போர்களில் பங்காற்றியவர் (இரண்டாம் உலகப்போர், கொரியப்போர், வியட்நாம் போர்). அதிபுத்திசாலி. பல்வேறு ராணுவ மூவ்களில் சாணக்கியர். குண்டுகளைக் கையாள்வதில் கில்லாடி. பல்வேறு வாகனங்களைக் கையாள்வதில் வல்லவர். விமான வீரர். எப்பொழுதும் குண்டுதுளைக்காத உடுப்பு போட்டுக்கொண்டு நடமாடுபவர். துப்பாக்கி சுடுவதில் நம்பர் ஒன். ஷீல்டில், ஃப்யூரிக்கு மட்டுமே தெரிந்த பல்வேறு ரகசிய மறைவிடங்களும், ஆயுதத்தளவாடங்களும் எக்கச்சக்கம். அவரால் மட்டுமே இந்த இடங்களுக்குச் செல்ல முடியும்.

ஃப்யூரியின் நிறம் வெளுப்பு

இவர்தான் ஒரிஜினல் வெள்ளை நிக் ஃப்யூரி

இவர்தான் ஒரிஜினல் வெள்ளை நிக் ஃப்யூரி

இப்போது, அவெஞ்சர்ஸ் படம் வெளிவரும்போது, உலகெங்கும் காமிக்ஸ் ரசிகர்களுடைய நம்பர் ஒன் பிரச்னையாக இருப்பது என்னவெனில், ஒரிஜினல் காமிக்ஸின்படி, ஃப்யூரி ஒரு வெள்ளையர். ஆனால், இப்படங்களில் நிக் ஃப்யூரியாக நடிப்பவரோ கறுப்பின நடிகரான ஸாமுவேல் ஜாக்ஸன். இதுதான் ரசிகர்களின் எதிர்ப்புக்கு பிரதான காரணம். இதை நம்மூர் பாஷையில் சொல்லவேண்டும் என்றால், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்கும்போது, வந்தியத்தேவனாக வில் ஸ்மித் நடித்தால் நம்மால் ஒத்துக்கொள்ளமுடியுமா?

ஃப்யூரி கதாபாத்திரம் உருவாக்கப்படும்போதே, தங்க நிறத்தில் முடியுடன்,  எப்போது பார்த்தாலும் சுருட்டை வாயில் வைத்துக்கொண்டு, ஸ்டைலான ஒரு கதாநாயகனாகத்தான் உருவாக்கப்பட்டது. இப்படிப்பட்ட உருவத்துடனேதான் பல ஆண்டு காலம் இக்காமிக்ஸ் வெளியிடப்பட்டது. அப்படியிருக்கும்போது, இடையில் கொஞ்ச காலம் அமுங்கியிருந்துவிட்டு, இந்த நிக் ஃப்யூரி கதாபாத்திரத்தை மறுபடியும் வெளிக்கொணரும்போது, தடாலென்று ஒரு கறுப்பின கதாபாத்திரமாக வெளியிட்டனர் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தார். அப்போதுகூட இந்தக் கதாபாத்திரம் யாரையும் ஒத்திருக்கவில்லை. ஆனால், 2002ல் வெளிவந்த ’The Ultimates’ காமிக்ஸில், ஃப்யூரி, அப்படியே ஸாமுவேல் ஜாக்ஸனை உரித்துவைத்திருந்தார். ஜாக்ஸனிடம் இந்த விஷயம் கூறப்பட்டு, அவரது அனுமதி பெறப்பட்டே இந்த மாற்றம் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர்தான் மார்வெல் காமிக்ஸின் கதாபாத்திரங்கள் திரையில் உருவெடுத்தபோது, ஜாக்ஸனே மார்வெலிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இக்கதாபாத்திரத்தை ஏற்றார்.

இந்தப் புதிய கறுப்பின நிக் ஃப்யூரியின் கதாபாத்திரத்தின் பெயர் – அல்டிமேட் நிக் ஃப்யூரி’. இக்கதாபாத்திரம், கல்லூரியை இந்தியாவில் படித்ததாக ஒரு புதிய துணுக்குச்செய்தியும் உண்டு.

மேலே நாம் பார்த்த வீடியோவில், ஒவ்வொரு ஹீரோவிடமும் சென்று இந்த மொட்டை ஒற்றைக்கண் நிக் ஃப்யூரி பேசுவதைக் கேட்டாலே, இவர் என்னமோ செய்ய முனைகிறார் என்பது தெரிந்துவிடும். ஐயர்ன் மேன் வெளிவந்ததிலிருந்து, இந்த post-credit ஸீன்களை நான் தவறவே விட்டதில்லை. படத்தில் என்ன வருகிறது என்பதைவிட, இந்த சில செகண்ட் காட்சிகளில் என்ன வருகிறது என்பதில்தான் என் ஆர்வம் முழுக்க இருக்கும். குறிப்பாக, ஐயர்ன் மேன் இரண்டில், கடைசியில், பள்ளத்தாக்கில் ஒரு சுத்தியலைக் காண்பிக்கும் அந்த கடைசி ஷாட்டைப் பார்த்ததும் தோர் படத்தின் மீது ஒரு ஆர்வம் வந்துவிட்டது.

பி.கு:
டேவிட் ஹேஸல்ஹாஃப் (Baywatch புகழ்) நடித்து, Nick Fury: Agent of S.H.I.E.L.D. என்று ஒரு தொலைக்காட்சிப் படம் உண்டு.

அடுத்த கட்டுரையில், திரைப்படம் !

தொடரும் . . .

  Comments

6 Comments

  1. இங்கயும் இந்த வெள்ளிதான் ரிலீஸ் (27th). அன்னிக்கே பார்த்துருவேன்

    Reply
  2. இத விட அவஞ்சர்ஸ்க்கு . ஒரு சூப்பர் இண்ட்ரோ இருக்க முடியாது!!அசத்தல்.. கட்டுரைகள்!!

    Reply

Join the conversation