Avengers: Age of Ultron (2015): 3D – English
முன்குறிப்பு
நமது தளத்தில் இதுவரை வெளிவந்த Avengers பற்றிய எல்லா கட்டுரைகளையும் இங்கே படித்துக்கொள்ளலாம். எல்லா கதாபாத்திரங்களின் முழுத்தக்கவல்களும் இவற்றில் உள்ளன.
இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்.
ச்சிடாரி (Chitauri) என்ற வேற்றுக்கிரக கும்பலை அடியோடு வேரறுத்த பின்னர், HYDRA என்ற எதிரி கும்பலைக் கண்டுபிடித்து அழித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், பூமியிலேயே அதிக சக்திவாய்ந்த சூப்பர்ஹீரோக்களைக் கொண்டிருக்கும் ஒரு கும்பலுக்கு எதிரிகள் எங்கிருந்து வரமுடியும்? பூமியில் எந்த இடத்திலும் இவர்களோடு சண்டைபோட ஆள் கிடையாது. வெளிகிரகங்களில் இருந்து வரும் எதிரிகளைக் கவனித்துக்கொள்ள Guardians of the Galaxy கும்பல் உள்ளது. மீறி அப்படியே வந்தாலும், அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தைப்போல்தான் அது இருக்கும். எனவே, அவெஞ்சர்களோடு யுத்தம் புரியும் அளவு சக்திவாய்ந்த எதிரி அவர்களுக்குள்ளிருந்து வந்தால்மட்டுமே உண்டு. இதுதான் Age of Ultron படத்தின் சிறப்பு.
இயக்குநர் ஜாஸ் வீடன் (Joss Whedon) ஒரு காமிக்ஸ் வெறியர். இன்னும் பல வெறிகளை வெற்றிகரமாக மெய்ண்டெய்ன் செய்துகொண்டிருப்பவர். அப்படிப்பட்ட ஒரு நபரை அழைத்து, ‘உனக்குப் பிடித்த வகையில் அவெஞ்சர்ஸ் படங்களை எடு; பணம் நாங்கள் தருகிறோம்’ என்று சொன்னால் சும்மா விடுவாரா? அவரது முழு வித்தையையும் இந்த இரண்டாம் பாகத்தில்தான் இறக்கியிருக்கிறார். பொதுவாக இரண்டாம் பாகமாக வரும் படம் ஒன்று முதல் பாகத்தை விடவும் லேசாகத் தரத்தில் குறைவாக இருப்பதே வழக்கம். Desolation of Smaug போன்ற விதிவிலக்குகள் குறைவாகத்தான் உண்டு. ஆனால் இம்முறை, அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தை விடவும் சுவாரஸ்யமாகவும் அட்டகாசமாகவும் ஒரு இரண்டாம் பாகத்தை எடுத்து, தனது திறமையைப் பறைசாற்றியிருக்கிறார் வீடன்.
சென்ற கட்டுரையில் பார்த்ததுபோல், அடுத்தமுறை ச்சிடாரிகளைப் போல் வேறு யாராவது படையெடுத்தால் பூமி அழிவது நிச்சயம் என்ற உண்மை டோனி ஸ்டார்க்கின் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது. Iron Man மூன்றாவது பாகத்திலேயே பல இரும்பு மனிதர்களை அவர் உருவாக்கியாகிவிட்டது. அவர்கள் மட்டும் போதாது என்றும், இன்னும் சிந்தனையிலும் ஆற்றலிலும் சக்திவாய்ந்த ஒரு இயந்திரத்தை உருவாக்கிவிட்டால், உலக அமைதியை அது பார்த்துக்கொள்ளும் என்ற உறுதியான நம்பிக்கையின்படி அல்ட்ரான் என்ற ப்ரோக்ராமை உருவாக்கி வைத்திருக்கிறார். ஆனால் இந்த அல்ட்ரானை எப்படி உயிர்ப்பிப்பது? என்னதான் முக்கினாலும் அது இன்னொரு இயந்திரமாக மட்டுமே இருக்கும். இயந்திரங்களை மனிதர்களைப்போல் சிந்திக்கவைப்பது மட்டுமே ஒரே வழி. ஆனால் அது இப்போதைக்கு இயலாது.
இத்தகைய சூழலில்தான் அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தில் லோகி விட்டுச்சென்ற அவனது சக்திவாய்ந்த மந்திரத்தடி எங்கோ ஒரு மூலையில் இருப்பது குறித்து அவெஞ்சர்களுக்குத் தெரியவருகிறது. உடனடியாக அதை ஆராய்ந்தால், வில்லன் பாரோன் வான் ஸ்ட்ரக்கரின் பரிசோதனைக்கூடத்தில் அது இருப்பது தெரியவருகிறது. அவன் HYDRAவின் அங்கம். எனவே அவனது சோதனைச்சாலையை உடனடியாக அவெஞ்சர்கள் தாக்குகின்றனர் (இந்த அட்டகாசமான ஓப்பனிங் காட்சியைத் தவறவிடவேண்டாம். முதல் நொடியிலேயே இது துவங்கிவிடுகிறது). அந்தத் தாக்குதலின்போது அந்தப் பரிசோதனைச்சாலையில் இருக்கும் மாக்ஸிமாஃப் இரட்டையர்கள் (பியேட்ரோ மற்றும் வாண்டா) அவெஞ்சர்களுக்குத் தலைவேதனையை அளித்து அவர்களைத் தாக்குகின்றனர். வாண்டாவின் ஸ்பெஷாலிடி, பிறரின் மனதைக் கட்டுப்படுத்துவது. அப்படி டோனி ஸ்டார்க்கின் மனதை அவள் தாக்க, அத்தனை அவெஞ்சர்களும் இறந்துகிடப்பது போன்ற ஒரு காட்சி அவருக்குத் தெரிகிறது. இதனால் இன்னும் அவரது மனம் தீவிரமாக சிந்திக்கத் துவங்குகிறது. ஆனால் இந்தக் காட்சியின் இறுதியில் அவெஞ்சர்களால் லோகியின் தடியைக் கைப்பற்ற முடிகிறது. அதனுள் இருப்பது infinity stone என்று அழைக்கப்படும் அண்டவெளியின் மிகச்சக்திவாய்ந்த ஆறு கற்களில் ஒன்று. அதை வைத்து என்னவேண்டுமானாலும் செய்ய இயலும்.
இந்த வெற்றியை அவர்கள் கொண்டாடும்போதுதான், இந்தக் கல்லில் இருக்கும் சக்தி வழியாகத் தனது அல்ட்ரான் ப்ரோக்ராமுக்கு உயிர் கொடுக்கிறார் டோனி. அந்த அல்ட்ரானோ, இவர் உருவாக்கியதற்கு நேர் எதிரான சிந்தனையோடு, உலகில் இருந்தே மனிதர்களை அழிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு உயிர்பெறுகிறது. அப்போது இதன் தவறான உருவாக்கத்தைக் கண்டுபிடிக்கும் ஜார்விஸை (டோனியின் இயந்திரக் குரலோன்) அழித்துவிடுகிறது (அல்லது அப்படி நம்மை நம்ப வைக்கிறது). இதுதான் அண்ட்ரானின் உருவாக்கம். இதன்பின், சுயமாக சிந்திக்கத் தெரிந்த அல்ட்ரான், நொடிகளில் எல்லா விஷயங்களையும் இணையத்தின் வழியாக அறிந்துகொண்டு, அவெஞ்சர்களோடு நேரடியாக மோதுகிறது. ஆனால் சுலபத்தில் அழிகிறது. அப்படி அழியும்போது இணையம் வழியாக நொடிகளில் பழைய ஸ்ட்ரக்கரின் பரிசோதனைக்கூடத்துக்குச் சென்றுவிடுகிறது. அங்கே இருக்கும் மாக்ஸிமாஃப் இரட்டையர்கள் அல்ட்ரானுக்கு உதவுகின்றனர். அல்ட்ரானிடம் இருக்கும் லோகியின் தடியின் உதவியால் உதவிக்குச் சில ரோபோக்களை உருவாக்க அதனால் முடிகிறது.
இத்தகைய ஒரு சூழ்நிலையில், உலகுக்கே ஆபத்து என்ற நிலையில் அவெஞ்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே படம்.
அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தில் ஆரம்பப் பத்து நிமிடங்கள் அறுவைதான். அல்லது, மிகச்சாதாரணமாக இருக்கும் என்றும் சொல்லலாம். ஆனால் இந்தப் பாகமோ, ஆடியன்ஸின் பலத்த கரகோஷத்தை சர்வசாதாரணமாக வாங்குகிறது. முதல் நொடியிலேயே அதிரடி ஆரம்பம். அப்படி ஆரம்பிக்கும் படம், வரிசையாகப் பல சீக்வென்ஸ்களைக் கொண்டிருக்கிறது. இந்த சீக்வென்ஸ்களை ஒன்றாக இணைத்தால் திரைப்படம் ரெடி. டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மெண்ட் டே படம் நினைவிருக்கலாம். ஆறு அட்டகாசமான சீக்வென்ஸ்களால் ஆனது அந்தப்படம். அதில் முதல் இரண்டு அதிரடி சீக்வென்ஸ்கள் முடிந்ததுமே (சிறுவன் ஜான் கான்னரை டெர்மினேட்டர் காப்பது; ஜான் கான்னரின் தாய் சாராவை டெர்மினேட்டர் விடுதலை செய்வது), பாலைவனத்தில் நடைபெறும் ஒரு அமைதியான சீக்வென்ஸ் இடம்பெறும். இது ஏன் என்று ஜேம்ஸ் கேமரூன் சொல்லியிருக்கிறார். முப்பது நிமிடங்கள் வரிசையான அதிரடி காட்சிகளால் மலைத்துப்போயிருக்கும் ஆடியன்ஸை மறுபடி ஒரு நிலைக்குக் கொண்டுவந்து, பின்னர் திரும்பவும் அதிரடிகளை ஆரம்பிப்பதே நோக்கம் என்பது அவர் கருத்து. கூடவே, வெறும் ஆக்ஷன் காட்சிகளால் பயன் இல்லை. கதாபாத்திரங்களின் இயல்பான மனிதத்தன்மையும் அவசியம். அதைத்தான் அந்தப் பாலைவனக் காட்சி உணர்த்தும். இதேபோல்தான் இந்தப் படத்திலும் இரண்டு அதிரடி ஆக்ஷன் சீக்வென்ஸ்கள் முடிந்ததும், கிட்டத்தட்டப் படத்தின் பாதியில் மிக அமைதியான சில காட்சிகள் வருகின்றன. அவற்றின் நோக்கமும் எளிதாகவே புரிகிறது. ஆடியன்ஸை அமைதிப்படுத்துவதுதான் அது. இந்தக் காட்சியின் வாயிலாகச் சில உணர்ச்சிகளையும் ஜாஸ் வீடன் ஆடியன்ஸுக்குத் தெரியப்படுத்துகிறார். இந்தக் காட்சி நன்றாகவும் எழுதப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
வெறும் ஆக்ஷன் குவியலாக இல்லாமல், இந்தக் கதைக்கேற்றவகையில் எல்லாக் கதாபாத்திரங்களுக்குமே இப்படிப்பட்ட உணர்வுகள் இந்தப் படத்தில் வெளிப்படுகின்றன. உலகைக் காக்கவேண்டும் என்ற டோனி ஸ்டார்க்கின் கரிசனம்; தனது அஸ்கார்ட் கிரகமே அழியப்போவதைத் தடுக்கவேண்டிய நிலையில் இருக்கும் தோர்; ஹல்க்குக்கும் ப்ரூஸ் பேனருக்கும் இடையே நிலவும் பிரச்னை; தன்னை விரும்பும் நபருடனேயே இருந்துவிடவேண்டும் என்ற நடாஷா ரோமனாஃபின் கவலை; பழைய கதையை நினைத்துப்பார்க்கும் கேப்டன் அமெரிக்காவின் எண்ணங்கள்; தனக்கென்று இருக்கும் குடும்பத்தையும், கருவுற்றிருக்கும் தன் மனைவியையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஹாக் ஐயின் விருப்பம் என்று ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நன்றாக விவரித்தே எழுதியிருக்கிறார் ஜாஸ் வீடன். அது பலனும் அளிக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தனிப்பட்ட விருப்பங்களை இப்படித் தெரிந்துகொண்டபின், அவர்கள் இன்னும் ஆடியன்ஸின் மனதுக்கு அருகே நெருங்குவதை இப்படத்தில் காணலாம்.
படத்தின் ஒரே பிரச்னையாக எனக்குத் தோன்றியது அல்ட்ரான் மட்டுமே. ட்ரெய்லர்களில் அவனை மிகச்சக்திவாய்ந்தவன் என்று நிறுவியுள்ளனர். ஆனால் படத்திலோ அவனிடம் எந்தப் பயமும் உருவாகாமல், வெறூம் இயந்திரம் ஒன்று அங்குமிங்கும் நடப்பதுபோலத்தான் தோன்றியது. அந்தக் கதாபாத்திரத்தின் நோக்கங்கள் உறுதியாக இல்லாததுதான் காரணம்.
மாக்ஸிமாஃப் இரட்டையர்கள், இந்தப் படத்தின் புதிய அவெஞ்சர்கள். இவர்களுடன் War Machine என்று அழைக்கப்படும் ரோட்ஸ், ஏற்கெனவே Captain America: Winter Soldier படத்தில் வந்த ஃபால்கன் என்ற ஸாம் வில்ஸன் ஆகியவர்களும் அணி சேர்கின்றனர். கூடவே, The Vision என்ற புதிய அவெஞ்சர் இதில் இடம்பெறுகிறார். அவரது கதையைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்க.
படத்தின் சில ரகசியங்களை முந்தைய கட்டுரையிலேயே சொல்லியாயிற்று. அதைத்தவிரப் புதிதாகவும் படத்தில் சில தகவல்கள் உள்ளன. ஆனால் அவை எளிதில் புரியக்கூடியவையே. இனிமேல் வரும் அவெஞ்சர் படங்கள் எப்படி இருக்கப்போகின்றன என்பதற்கு இப்படம் ஒரு முன்னுதாரணம். படத்தில் ஒரு மரணம் உண்டு. ஒரு ரிடையர்மெண்ட் உண்டு. ஒரு காணாமல் போதலும் உண்டு.
படத்தில் ஒரே ஒரு போஸ்ட் க்ரெடிட் காட்சிதான். அதைத்தவிர, படத்தில் உருவாக்கப்பட்டுப் பின்னர் அழிக்கப்பட்ட ஒரு போஸ்ட் க்ரெடிட் காட்சியை இங்கே பார்க்கலாம். பல பிரச்னைகளால் இது இறுதியில் வெட்டப்பட்டுவிட்டது என்பது தெரிகிறது. அவெஞ்சர்கள் படத்தின் மூன்றாம் பாகமான Infinity wars படத்தில் ஸ்பைடர்மேன் இடம்பெறக்கூடும் என்ற செய்தி இப்போது உலவிக்கொண்டிருக்கிறது.
அவசியம் எனக்கு முதல் பாகத்தைவிடவும் இதுதான் பிடித்தது. அதனைவிடவும் இது நன்றாகப் பெயர் வாங்கும் என்று எதிர்பார்க்கிறேன்.இனிமேல் வரப்போகும் அவெஞ்சர் படங்கள் பற்றிய கட்டுரையில் விரைவில் அவெஞ்சர்களைத் தொடரலாம்.
எவ்ளோ வேகமாக செயல்படுறீங்க… Really super fast, இங்க நேற்றே படம் வந்து விட்டது, ஆனால் உங்க விமர்ச்சனத்திற்காகத்தான் காத்திருந்தேன் நன்று கருந்தேள்.. உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விசயங்களில் அவெஞ்சர்ஸ்ம் ஒன்று என்பதை இந்த விமர்ச்சனம் காட்டி கொடுத்துள்ளது… ஆனால் உங்களுக்கு பிடிச்ச அவெஞ்சர் யாரு…?
செம தல. வழக்கம் போல மார்வல், டிசி கேரக்டர் திரைப்படமா வந்தா அந்த படத்த விட உங்க விமர்சனத்துக்காக தான் காத்துக்கிட்டிருப்பேன். நீங்களே இந்த படம் சூப்பர்ன்னு சொன்னபிறகு நாளைக்கு கிளம்பிடவேண்டியது தான். ஆனா, //பொதுவாக இரண்டாம் பாகமாக வரும் படம் ஒன்று முதல் பாகத்தை விடவும் லேசாகத் தரத்தில் குறைவாக இருப்பதே வழக்கம்.// இன்னா தல இப்படி சொல்லிட்டீங்க… டார்க் நைட் பார்ட் 2 தானே எவர் டாப். அதே போல LOTR, God Father என நிறைய படங்களில் செகண்ட் பார்ட் கலக்கலா இருக்குமே…
நீங்க சொன்ன டெலிட் செய்யப்பட்ட போஸ்ட் கிரெடிட் ஸீன் Fake னு டைரக்டர் சொன்னதா கேள்விபட்டனே.
Usually I used to watch the avengers movie after reading your article so that it will make me understand the movie & new characters clearly.
But I saw this movie before reading your article. The movie is super and as you said it clearly explains the new characters also.
And now I read your article and explains me more. Thanks as always.
What happened to the past story of Captain America? The red skull and everything are half completed no? Is there any sequel for that?
Hi Rajesh. I am a regular follower of your blog since last 2 years. i feel you are great fan of Marvel comics. You often say you review movies objectively not without any bias. Based on my interpretation of your various reviews, you seem to biased to certain directors like Quentin,Martin Scorcesse etc or Marvel series. Because i feel avengers part 1 is far better than age of ultron(not to mention that Captain America:Winter solider is the best marvel film post Avenger) bcoz it seemed age of ultron rushed without any strong character development or emotinal connect. I can’t remeber any memorable scenes except hulkbuster scene. But you have rated this movie higher than avenger part 1. I have seen your reviews for Interstellar(agreed it is not a great movie) where you have dissected each and every scene of the movie and tried to find plot holes,seeking explanation etc. Not to mention Man of Steel where you have completely rubbished the movie where atleast the first half is good. I am fan of your page ever since i came to know about your blog but this inconsistency bugs me.
வணக்கம் அண்ணா,
நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். எனக்கு படம் பிடித்து இருக்கிறது.
ஆனால்,
தியேட்டர் வந்து இருந்த ஆடியன்ஸ் அவ்வளவு என்ஜாய் பண்ண போல தெரில, ஹல்க்கு மட்டும் கைதட்டல் பலமாக இருந்தது.
படத்தில் quicksilver சக்தி நன்றாக விவரிக்கப்பட்டு சண்டை காட்சிகள் அமையும் என எதிர்பார்த்தேன். ஆனால்,…..
கடைசியா அப்படி முடிச்சிட்டாங்க.
தோர் கடைசியில் infinite stone பத்தி சொல்லும் போது நான்கு ஸ்டோன் என சொல்லுறது என்ன கணக்கு?
லோகி கையில் இருந்த கம்பு
பேரடாக்ஸ் பெட்டி
அப்பறம்? வேற என்ன? இருக்கு…
120 ரூபாய்க்கு 2hr 21min entertainment confront 😀