Avengers: Infinity War (2018) – English : Part 2

by Karundhel Rajesh May 2, 2018   English films

  1. For all the previous posts about the Avengers & Marvel, please check here –> Everything about Avengers from Karundhel.com
  2. இக்கட்டுரையின் முதல்பாகம்  – Avengers: Infinity War – part 1

சென்ற கட்டுரையில் இன்ஃபினிடி ஸ்டோன்கள் பற்றிப் பார்த்தோம். இனி, Infinity War படத்தின் முக்கியமான கதாபாத்திரமாகிய தானோஸ் பற்றிக் கவனிப்போம்.

தானோஸ் யார்? அவனுக்கு ஏன் இந்தக் கொலைவெறி?

சனிக்கிரகத்தின் நிலாக்களில் ஒன்று டைட்டன். இந்த டைட்டனில் வாழ்ந்த மக்கள், கடவுட்களைப் போன்று சாகாவரம் படைத்தவர்கள். அவர்களில் ஒருவர் அலார்ஸ் (Alars). அலார்ஸ், ஒரு விஞ்ஞானி. அவர்களின் இனத்தைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் நிகழ்த்தியவர். அவருக்குப் பிறந்த மகன் தான் தானோஸ். தானோஸ் பிறக்கையிலேயே, அவனது முகத்தில் இருந்த விகாரத்தைக் கண்டு அலார்ஸ் பயந்தார். சிறுகச்சிறுக தானோஸ் வளர்ந்தபோது பிற டைட்டன்களும் அவனை மெல்ல ஒதுக்க ஆரம்பித்தனர்.

டைட்டனில் மக்கள்தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. அங்கே இருக்கும் பொருட்களை அனைவரும் பங்குபோட்டுக்கொண்டே வாழும்படியான காலகட்டம் வந்தது. அப்போது, தன்னை யாரும் பெரிதாக மதிக்காவிட்டாலும், இந்தப் பிரச்னையைத் தோர்க்க ஒரு வழி சொல்கிறான் தானோஸ். இதைப்பற்றி அவனே Infinity War படத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் சொல்லும் காட்சி இருக்கிறது. அது – பாதி டைட்டன்களை அழித்துவிடுவது. அப்போதுதான் அங்கே இருக்கும் இயற்கையான வளங்கள் அனைவருக்கும் போதுமானதாக இருக்கும். ஆனால் இந்தத் திட்டத்தை டைட்டன்கள் செயல்படுத்தவில்லை. அது மிகவும் அபாயகரமான யோசனையாக இருந்ததே காரணம். ஆனால் சிறுகச்சிறுக வேறுவழியில்லாமல், வளர்ந்துவரும் மக்கள்தொகையால் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு அனைத்து டைட்டன்களும் இறந்துவிட்டனர். இதனால் தானோஸின் சொந்த பூமி அழிந்துபோனது.

இதன்பின்னர் தானோஸ் அண்டவெளியில் வேறு ஒரு பக்கம் சென்று, தனது திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பித்தான். அண்டவெளியின் மக்கள்தொகையில் பாதியாவது அழிந்தால்தான் மீதமிருப்பவர்களுக்கு அண்டவெளியின் பற்பல வளங்கள் முழுதாகக் கிடைக்கும் என்பது அவனது எண்ணம். இதனால் ஒவ்வொரு கிரகமாக, ஒவ்வொரு நிலாவாக, ஒவ்வொரு பால்வீதியாகச் சென்று படையெடுத்து, அவர்களில் பாதியையோ அல்லது முழுமையாகவோ அனைவரையும் அழிக்கத் துவங்கினான். அப்படிச் செல்கையில், அங்கே அவனுக்குப் பிடித்த குழந்தைகளை எடுத்துக்கொண்டு வந்து வளர்க்கவும் துவங்கினான். அவர்களுக்கு, Children of Thanos என்றும், Black Order என்றும் பெயர். கமோராவையும் நெபுலாவையும் இப்படியாக எடுத்து வளர்த்து, தனது மகள்களாக மாற்றிக்கொண்டான். இவர்களில் கமோராவைப் பார்த்து ஒட்டுமொத்த அண்டவெளியும் பயப்பட்டது. யாராலும் வெல்லமுடியாத வீராங்கனையாக அவளை வளர்த்தான். இதனாலேயே நெபுலாவுக்கும் கமோராவுக்கும் சண்டைகள் நிகழ்ந்தன. ஒரு சமயம், நெபுலாவின் உடலிலிருந்து அவளை கமோராவைத் தாண்டிய வீராங்கனையாக ஆக்கவேண்டிய ஒரு உறுப்பை தானோஸே அகற்றவேண்டி வந்தது. இதனால் நெபுலாவுக்கு தானோஸ் மீது கோபம். கமோராவோ, தன்னை ஈவு இரக்கம் இல்லாத ஒரு உயிராக தானோஸ் உருவாக்கியது கண்டு தானோஸ் மீது வெறுப்பு.

இந்த இருவரைத் தவிர, தன் மீது அளவுகடந்த விசுவாசம் உடைய நால்வரையும் தானோஸ் உருவாக்கினான். அவன் என்ன சொன்னாலும் இவர்கள் செய்து முடிப்பார்கள். அவர்கள்தான் Corvus Glaive, Ebony Maw, Cull Obsidian மற்றும் Proxima Midnight. இவர்கள் நால்வருமே Infinity War படத்தில் தானோஸின் குழந்தைகளாக அறிமுகம் ஆவார்கள். இவர்களில் எபொனி மா என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். டாக்டர் ஸ்ட்ரேஞ்சை சிறைப்பிடிக்கும் கொடூர முகம் கொண்டவர்தான் எபோனி மா. கல் அப்ஸிடியன் என்பவன் அப்படத்தில் மாவுடன் பூமிக்கு வரும் ராட்சதன்.  கார்வஸ் க்ளேவ் மற்றும் ப்ராக்ஸிமா மிட்நைட் ஆகியவர்கள், விஷனுடனும் ஸ்கார்லெட் விட்ச்சுடனும் சண்டை இடுபவர்கள். கேப்டன் அமெரிக்கா மற்றும் அவருடன் இருக்கும் பிற அவெஞ்சர்களால் வெல்லப்பட்டு மறைபவர்கள். 

அவெஞ்சர்ஸ் சீரீஸில் தானோஸின் பாகம் என்ன?

எல்லாவற்றுக்கும் முதலில், அண்டவெளியின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தானே எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துக்கு தானோஸ் வந்ததுமே, அவனுக்கு நினைவு வந்தது இன்ஃபினிடி கற்கள்தான். அவைகள் தன் வசம் இருந்தால் யாரும் தன்னை எதிர்க்க இயலாது என்பதை தானோஸ் உணர்ந்துகொண்டான். எனவே, முதன்முதலில் அவன் கைப்பற்றிய கல் – Mind Stone. இதை ஒரு ஈட்டி போன்ற ஆயுதத்தில் பதித்துவைத்துக்கொண்டான். அந்த ஆயுதம் அவனுக்கு வலிமையைக் கொடுக்கும் ஆயுதமாக மாறியது.

இதன்பின் அடுத்த கல்லைத் தேடிய தானோஸ், அது ஒரு டெஸராக்டினுள் வைக்கப்பட்டு, அது பூமியில் இருக்கிறது என்று புரிந்துகொண்டான்.  அந்தக் கல்தான் Space Stone. தன்னுடன் இருக்கும் மாபெரும் படையாகிய சிடாரி (Chitauri) என்ற ராட்சதப் படையை, பூமியைக் கைப்பற்றவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த லோகியை அழைத்து, அவன் வசம் ஒப்படைத்தான். அவன் லோகியிடம் போட்ட ஒப்பந்தம் – பூமியைக் கைப்பற்றிய பின்னர், டெஸராக்டைத் தன்னிடம் கொடுத்துவிடவேண்டும் என்பது. லோகி ஒப்புக்கொண்டபின்னர், மைண்ட் ஸ்டோன் பதிக்கப்பட்ட ஈட்டியை லோகியின் வசம் ஒப்படைத்தான் தானோஸ். பிரம்மாண்டமான சிடாரி படையைத் தலைமைதாங்கி, பூமியின் மீது லோகி படையெடுத்த கதைதான் The Avengers.

ஆனால் பூமியில் இருக்கும் வீரர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; அவர்கள் லோகியை முறியடித்துவிட்டனர் என்பதைத் தானோஸ் உணர்ந்துகொள்கிறான். இப்போது டெஸராக்ட் தோர் வசம் இருக்கிறது. எனவே முழுபலம் வாயந்த ஆஸ்கார்டைத் தாக்குவது கடினம் என்று புரிந்துகொண்டும், அதன்பின்னும் சும்மா இருக்காமல், அடுத்த கல்லைத் தேட ஆரம்பித்தான். இந்த அடுத்த கல்தான் Power Stone. அது, ஒரு கோளத்தினுள் வைக்கப்பட்டு, எங்கோ இருக்கிறது என்று தெரிந்துகொள்கிறான். முதலில் தன்னுடைய மகள்களாகிய கமோராவையும் நெபுலாவையும் அதனைக் கண்டுபிடிக்கச்சொல்லி அனுப்ப, அது Cloud Tombs of Praxius என்ற பறக்கும் பிரமிடுகள் அடங்கிய பிராந்தியத்தில் இருக்கிறது என்று அவர்கள் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் கமோராவால் அதைக் கைப்பற்ற முடியாமல், நெபுலாவும் அங்கே சிக்கிக்கொண்டு அவளது கையை நெபுலா இழக்க நேர்கிறது.

இதன்பின்னர் Guardians Of Galaxy படத்தில் வரும் இன்னொரு வில்லனான Ronan The Accuser என்பவனைக் கூட்டு சேர்த்துக்கொண்டு, பவர் ஸ்டோனை அவன் கைப்பற்றிக் கொடுத்தால், அவனது லட்சியமான அவனது எதிரி கிரகமான நோவாவையும், அதன் மக்களான ஸாண்டாரியன்களையும் ஒட்டுமொத்தமாக அழித்துக்கொடுப்பதாக ஒரு ஒப்பந்தம் போடுகிறான். ஆனால் அந்தக் கல் இருக்கும் கோயிலான மோராக்கில் ஸ்டார் லார்ட் என்பவன் கையில் அது சிக்கிவிட, இந்த முயற்சியும் தோல்வி. ஆனால் கொஞ்ச காலத்திலேயே ரோனானிடம் அக்கல் சிக்கிவிடுகிறது. ஆனால் அதை தானோஸீடம் கொடுப்பதற்குப் பதில் அவனே அதைப் பயன்படுத்திக்கொண்டு அதன் சக்தியை கிரகித்துக்கொள்ள, தானோஸ் அவனுடன் அத்தனை தொடர்புகளையும் அறுத்துக்கொள்கிறான். பின்னர் கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸி அணியினரிடம் ரோனான் மாட்டிக்கொண்டு இறக்கிறான். அந்தக் கல், ஸாண்டார் கிரகத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்களான நோவா கார்ப்ஸிடம் பத்திரமாக சேர்ப்பிக்கப்படுகிறது. இம்முறையும் தானோஸுக்குத் தோல்வி.

இனி யாரை நம்பியும் பயனில்லை என்று புரிந்துகொள்கிறான் தானோஸ். தானே செயலில் இறங்குகிறான். முதலில் Infinity War படத்தில் வரும் Dwarf ( Eitri என்பதே அவனது பெயர்) மூலமாக, ஆரம்பத்திலேயே ஒரு கையுறையைத் தயார்செய்துகொண்டு, பின்னர் அவர்களின் கிரகமான Nidavellirஇல் இருக்கும் அத்தனை பேரையும் அழித்துவிடுகிறான் தானோஸ். அழித்தல் அவனது இயல்பு. அழித்தலின் மூலம்தான் அண்டவெளியின் balance காப்பாற்றப்படும் என்பது அவன் கருத்து. ஆனால் இந்த எய்த்ரி மட்டும் அழிக்கப்படாமல் தானோஸினால் விடப்பட்டுவிடுகிறான். இந்தக் கையுறையை வைத்துக்கொண்டே ஒவ்வொரு கல்லாக தானே சென்று எடுக்கிறான். இந்தக் கையுறைக்கு Infinity Gauntlet என்று பெயர்.

இடையில், கமோராவை அழைத்து, Soul Stone என்ற கல் பற்றிய தகவல்களை சேகரிக்கச் சொல்கிறான் தானோஸ். அவள் அவனிடமிருந்து பிரிந்து, அவனைப் பிடிக்காமல், கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி அணியினரோடு சேர்ந்துவிடுகிறாள். ஆனால் அவளது சகோதரியான நெபுலாவைப் பிடிக்கும் தானோஸ், Soul Stoneஇன் இருப்பிடம் பற்றிக் கமோரா தனக்குத் தெரியும் என்று சொன்னதை அறிந்துகொள்கிறான். இதனால் Infinity War படத்தில் கமோராவைப் பிடித்துக்கொண்டு அவளிடமிருந்து அதன் இருப்பிடத்தை அறிந்துகொள்கிறான்.

இப்படியாகத்தான் தானோஸ் இன்ஃபினிடி கற்களை சேகரிக்க ஆரம்பித்தான். அந்தக் கதைதான் Infinity War படத்தில் விரிவாகச் சொல்லப்படுகிறது. எனவே இப்படம் தானோஸைப் பற்றிய படம் என்றே சொல்லிவிடமுடியும். தானோஸுக்கு இருக்கும் பின்னணிக் கதையைப் படத்தில் காட்டவேண்டும் என்று விரும்பியதாகவும், பின்னர் கடைசி நிமிடத்தில் அது வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதையும், அதற்குப் பதில் வசனங்களில் ஆங்காங்கே அவற்றை சொருகிவிட்டதாகவும் இயக்குநர்கள் ருஸ்ஸோ சகோதரர்கள் சொல்லியிருக்கின்றனர்.

இதோ இந்த வீடியோவைப் பார்த்தால், இந்தக் கட்டுரையில் நான் சொன்னதையெல்லாம் கச்சிதமாக ஆங்காங்கே மார்வெல் அவர்களின் படங்களில் எப்படி நுழைத்திருக்கிறது என்று புரிந்துகொள்ளமுடியும்.

அடுத்த கட்டுரையில் இன்னும் சில விஷயங்களைக் கவனிக்கலாம்.

(தொடரும்)

  Comments

1 Comment;

  1. Subash

    அடுத்த கட்டுரையில் இன்னும் சில விஷயங்களைக் கவனிக்கலாம் என்று சொல்லி இருந்தீர்கள்.
    தயவு செய்து அடுத்த MCU பற்றிய கட்டுரைகளை வெளியிடுங்கள்.

    Reply

Join the conversation