Avengers: Infinity War (2018) – English : Part 1

by Karundhel Rajesh May 1, 2018   English films

அவெஞ்சர்களைப் பற்றிய அறிமுகத்துக்கு, நம் தளத்தின் பழைய கட்டுரைகளைப் படித்துப் பார்க்கலாம் —> Everything about Avengers from Karundhel.com


கடந்த பத்து ஆண்டுகளாக நாம் நன்கு அறிந்த அவெஞ்சர்கள் அத்தனை பேரும் இணைந்து செயல்படும் ஒரு பிரம்மாண்டமான போர்க்களம். அந்தக் களத்தின் மையத்தில், அனைவரையும் இணைக்கும் புள்ளியாக, பல வருடங்களாக நாம் மார்வெல் படங்களில் ஆங்காங்கே கேட்டுக்கொண்டும், போஸ்ட் க்ரெடிட்கள் மற்றும் ஒரு சில காட்சிகளில் பார்த்துக்கொண்டும் இருந்த தானோஸ் (Thanos). கெவின் ஃபீய்ஜ் பத்து வருடங்கள் முன்னர் போட்ட அட்டகாசமான திட்டத்தின் முதற்கட்ட க்ளைமாக்ஸ் இது. இதற்குப் பின்னும் மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ் தொடரத்தான் போகிறது என்பது கெவின் ஃபீய்ஜ்ஜின் கருத்து. அதெல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.

முதலில், Infinity Stones.

Guardians of The Galaxy படத்தில் இந்த இன்ஃபினிடி ஸ்டோன்ஸ் பற்றிய விரிவான அறிமுகம் வருகிறது. அந்தப் படத்தில் Collector என்ற கதாபாத்திரம் இதை விளக்குகிறது. அதேபோன்ற விளக்கம் Infinity War படத்திலும் துவக்கத்தில் வரும். அண்டவெளி என்பது ஒன்று உருவாவதற்கு முன்னாலேயே ஆறு பிரம்மாண்ட சக்திகள் இருந்துவந்தன. Cosmic Entities என்ற பெயரில் இருக்கும் சக்திகளால் உருவாக்கப்பட்டவையே இந்த இன்ஃபினிடி ஸ்டோன்ஸ். Lord of the Rings படங்களில் வரும் மோதிரங்கள் போன்றவை இவை. ஒவ்வொரு கல்லுக்கும் ஒவ்வொரு சக்தி. இவைகளை வைத்துக்கொண்டு பல கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பலரும் அவற்றின் சக்தியைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். Entrophy, Infinity, Death & Eternity என்பதே இந்தக் கற்களை உருவாக்கிய சக்திகளின் பெயர். இந்தக் கற்களை சாதாரண நபர்களால் கட்டுப்படுத்த இயலாது. எனவே, அந்தக் கற்களைச் சுற்றி ஒரு கவசம் போன்ற ஒன்றை உருவாக்கி, அதன்பின் அவற்றைப் பயன்படுத்தியவர்கள் பலர்.

உதாரணமாக, முதன்முதலில் மார்வெல் படங்களில் நாம் பார்த்த இன்ஃபினிடி கல்லான Tesseract என்பதைச் சொல்லலாம். அதனுள் இருந்தது Space Stone. அந்தக் கல்லை நேரடியாக உபயோகிக்காமல், டெஸராக்டினுள் வைத்து உபயோகித்து வந்தனர். அதைத்தான் லோகி Avengers படத்தின் முதல் காட்சியில் S.H.I.E.L.D அமைப்பிடம் இருந்து திருடினான். இந்தக் கல்லை வைத்துக்கொண்டு பல portalகளை உருவாக்கி, வெவ்வேறு விண்வெளிகளுக்கு இடையே செல்லமுடியும்.

Captain America: The First Avenger திரைப்படத்தில், ரெட் ஸ்கல் என்ற வில்லனிடம் இருந்தது இந்த டெஸராக்ட்தான். இதைவைத்துக்கொண்டுதான் HYDRA அமைப்பினால் பல ஆயுதங்களை உருவாக்க முடிந்தது. இதைத்தான் கேப்டன் அமெரிக்கா அந்தப் படத்தின் இறுதியில் விமானம் மூலம் அழித்தார். அதைத்தான் S.H.I.E.L.D அமைப்பினர் கண்டுபிடித்து, தங்களிடம் வைத்துக்கொண்டனர் (THOR படத்தின் End Credits). அதைத்தான் அவெஞ்சர்ஸ் படத்தின் துவக்கத்தில் லோகி திருடினான். அந்தப் படத்தின் இறுதியில் தோர் லோகியைக் கைதுசெய்து, ஆஸ்கார்ட் கிரகத்துக்குக் கொண்டுசென்றுவிடுவார். அவருடன் அந்த டெஸராக்டும் பயணப்படும். Thor: Ragnarok படத்தில், அந்த டெஸராக்ட் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் லோகி செல்வது காட்டப்பட்டிருக்கும். எனவே, அந்தக் கல் லோகியிடம் சென்றுவிட்டது. அந்தப் படத்தின் இறுதியில், ஆஸ்கார்ட் அழிந்தபின் அனைவரும் ஒரு விண்கலத்தில் பயணப்படும்போது, ராட்சத விண்கலம் ஒன்று இவர்களின் கப்பலை வழிமறிக்கும். Infinity Wars பார்த்தவர்களுக்கு, அது தானோஸின் விண்கலம் என்று புரிந்திருக்கும். இதனால், இன்ஃபினிடி வார்ஸ் படத்தின் முதல் காட்சியிலேயே தானோஸிடம், லோகி வைத்திருந்த Space Stone சென்றுவிட்டது.

அடுத்து, Mind Stone.

Avengers படத்தில், லோகியின் கையில் இருக்கும் ஆயுதத்தில் ஒரு கல் பதிக்கப்பட்டிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். அந்தக் கல்தான் மைண்ட் ஸ்டோன். இதை வைத்துக்கொண்டு பிறரின் மனங்களை எளிதில் கட்டுப்படுத்த இயலும். அந்த ஆயுதத்தை எல்லாரின் நெற்றியிலும் லோகி வைத்து அவர்களைக் கட்டுப்படுத்துவதை அப்படத்தில் காணமுடியும். இந்தக் கல்லை லோகியிடம் கொடுத்தது யார் தெரியுமா? தானோஸே தான். லோகியால் பூமியைக் கைப்பற்ற முடியும் என்று நம்பியே தானோஸ் அக்கல்லை லோகியிடம் கொடுத்தான். இந்தக் கல், Age of Ultron திரைப்படத்தில் டோனி ஸ்டார்க்கின் வசம் வருகிறது. இந்தக் கல்லின் அபரிமிதமான சக்தியால்தான் அப்படத்தில் Ultron என்ற சுயமாகச் சிந்திக்கக்கூடிய ப்ரோக்ராமை டோனி ஸ்டார்க் உருவாக்குகிறார். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் அந்தப்படம். அப்படத்தின் இறுதியில், Vision என்ற சூப்பர்ஹீரோவாக அந்தப் ப்ரோக்ராம் உருமாறுகிறது. அதன் தலையில் Mind Stone பதிக்கப்படுகிறது.

Reality Stone

இந்தக் கல்லால், எந்தப் பொருளையும் கட்டுப்படுத்த முடியும். Malekith என்ற கொடூரமான வில்லன், இந்தக் கல்லை வைத்துக்கொண்டுதான் ஆதிகாலத்தில் ஆஸ்கார்டின் மீது படையெடுத்தான். Dark Elves என்ற அவனது இனம், ஈதர் (Aether) என்ற சக்திவாய்ந்த ஆயுதம் ஒன்றை வைத்துக்கொண்டு ஒன்பது உலகங்களையும் தாக்கி வெல்லப்பார்க்கிறது. இந்த ஈதர் என்பது ஆயுதம் என்று நான் சொன்னது சரியல்ல. அது ஒரு சக்தி. ஆனால், அஸ்கார்டில் இருந்து, தோரின் தாத்தா போர் (Bor) பாய்ந்து வந்து, இந்த இருண்ட தேவதைகளை தடுக்கிறார். அந்த நேரத்தில், அவர்களின் தலைவன் மாலெகித் (Malekith) அங்கிருந்து தப்பித்து, எங்கோ அண்டவெளியில் தனது சில சகாக்களோடு சென்று ஒளிந்துகொள்கிறான். அப்படியே அந்த விண்கலம் பிறரது பார்வையில் இருந்து மறைந்துவிடுகிறது. அந்த ஈதர் என்ற சக்தி, போரினால் எங்கோ ஒளித்து வைக்கப்படுகிறது. அவன் பின்னர் Thor: The Dark World படத்தில் திரும்புவான். அதே ஈதரை உபயோகிக்க நினைப்பான். இந்த ஈதர் என்பது ரியாலிடி ஸ்டோனால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது.

அந்தப் படம் முடிந்ததும் ஆஸ்கார்டில் இருந்து இருவர், கலெக்டரிடம் சென்று இந்த ரியாலிடி ஸ்டோனைக் கொடுப்பார்கள். இப்படித்தான் இந்தக் கல், கலெக்டரிடம் வந்து சேர்ந்தது. அந்தக் கல்லைத்தான் தானோஸ், Infinity War படத்தில் கலெக்டரை எளிதில் அடித்துப்போட்டுவிட்டு எடுத்துக்கொண்டு செல்வான். கூடவே கமோராவையும் கவர்ந்துசென்றுவிடுவான்.

The Power Stone

இந்தக் கல்லின் சிறப்பம்சம், இதை வைத்துக்கொண்டு மாபெரும் சக்தியை உருவாக்கி, ஒரு கிரகத்தையே அழிக்க முடியும். Guardians of the Galaxy திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில், ஸ்டார் லார்ட், ஒரு இருண்ட இடத்துக்கு வந்து, The Orb என்ற உருண்டையான வஸ்துவைத் திருடுவான் அல்லவா? அதற்குள் இருந்ததே இந்தப் பவர் ஸ்டோன். அந்த இடம் சாதாரணமான இடம் அல்ல. Infinity Stones உருவாக்கப்பட்டபோது, இந்த இடத்தில்தான் Entrophy, Infinity, Death & Eternity ஆகிய நான்கு மாபெரும் சக்திகள் அவற்றை உருவாக்கின. அந்தப் படத்தில், அந்தக் காட்சியிலேயே பின்னணியில் வரும் சுவற்றில் இவர்களின் உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும். அந்த இடத்தின் பெயர் மோராக் (Morag). அது ஒரு கோயில்.

இந்தக் கல்லை, ஸ்டார் லார்டிடம் இருந்து Ronan The Accuser என்பவன் பறித்துக்கொள்கிறான். அவன் வேலை, அக்கல்லை தானோஸிடம் அளிப்பது. மாறாக, அதைத் தானே வைத்துக்கொண்டு, அப்படத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழிக்கப்போவதாக தானோஸிடமே சவால் விடுவான்.

அந்தப் படத்தின் இறுதியில், இக்கல்லை கார்டியன்ஸ் கைப்பற்றி, Nova Corps என்ற விண்வெளி போலீஸிடம் அளிப்பார்கள் (படத்தின் துவக்கத்தில் ஸ்டார் லார்ட் கைதுசெய்யப்படுவான் அல்லவா? அவனைக் கைது செய்பவர்களே நோவா கார்ப்ஸ்).

ஆனால் இந்த நோவா கார்ப்ஸை மிக எளிதாக அழித்துவிட்டு, அக்கல்லை தானோஸ் கைப்பற்றிவிடுகிறான். Infinity Wars படத்தின் துவக்கத்திலேயே தானோஸின் மூலம் இதை நாம் அறிந்துகொள்கிறோம். படத்தில் அக்காட்சிகள் காட்டப்படவில்லை. ஒருவேளை அடுத்த படத்தில் அக்காட்சி ஒரு ஃப்ளாஷ்பேக்காக வரக்கூடும்.

The Time Stone

காலத்தை மிக எளிதாக முன்னும் பின்னும் கட்டுப்படுத்துவதே இக்கல்லின் வேலை. Doctor Strange படத்தில், ஸ்டீஃபன் ஸ்ட்ரேஞ் இக்கல்லை, Library of Kamar-Taj கட்டிடத்தில் கண்டுபிடிப்பார். படத்தின் இறுதியில் வில்லன் டோர்மாம்முவை டைம் லூப்பில் சிக்கவைத்து கடுப்பேற்றி விரட்டுவாரே – அது இந்தக் கல்லின் உதவியால்தான். இக்கல்லை, Eye of Agamotto என்ற ஒரு பெண்டண்ட்டினுள் வைத்து, டாக்டர் ஸ்ட்ரேஞ்சே தன்னுடன் வைத்துப் பாதுகாத்து வருகிறார். இக்கல்லைத்தான் அவரே முன்வந்து தானோஸிடம் அளித்துவிடுவார், இன்ஃபினிடி வார் படத்தில். அதற்கான காரணம் எளிது. அவரால் இக்கல்லின் உதவியால் காலத்தில் முன்னும் பின்னும் சென்று பார்க்க இயலும். எனவே தானோஸை எப்படி வெல்வது என்பதை எதிர்காலத்துக்குள் சென்று பார்த்து, அதனாலேயேதான் அக்கல்லை அவனிடம் கொடுப்பார். அப்படித் தானோஸிடம் அக்கல் கிடைத்தால்தான் அவெஞ்சர்கள் அவனை வெல்ல முடியும் என்பதே காரணம். அதனால்தான் தானோஸினால் மரண அடி வாங்கிய டோனி ஸ்டார்க்கையும் விட்டுவிடச்சொல்லி, தானோஸிடம் சொல்வார். இதன் விளைவை அடுத்த படத்தில் காணமுடியும்.

Soul Stone

Infinity War படத்தின் மிக முக்கியமான கல் இது. அடுத்த படத்தில் இது இன்னும் நன்றாக உபயோகிக்கப்படப்போகிறது. இக்கல்லினால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும். அதேபோல், உயிரோடு இருப்பவர்களை மறையவைத்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர்களின் உயிரை அடைத்துவைக்கவும் முடியும். இந்தக் குறிப்பிட்ட இடம், Infinity War படத்தில் வருகிறது. அதில் தானோஸ், குட்டிப்பெண்ணாக இருக்கும் கமோராவைப் படத்தின் இறுதியில் ஒரு இடத்தில் சந்திப்பான். அந்த இடம்தான் இது. காலம், வெளி ஆகிய எதுவும் அற்ற இடம். இந்தக் கல்லுக்கேயான பிரத்யேகமான உலகம் அது.

ஓகே. இப்போது எல்லாக் கற்களையும் பார்த்தாயிற்று. இந்தக் கற்களையெல்லாம் யாருமே தங்களின் கைகளில் வைத்திருக்கவே முடியாது. அவற்றின் சக்தி அவர்களை அழித்துவிடும். எனவே, Infinity War படத்தில் வரும் Dwarf ( Eitri என்பதே அவனது பெயர்) மூலமாக, ஆரம்பத்திலேயே ஒரு கையுறையைத் தயார்செய்துகொண்டு, பின்னர் அவர்களின் கிரகமான Nidavellirஇல் இருக்கும் அத்தனை பேரையும் அழித்துவிடுகிறான் தானோஸ். அழித்தல் அவனது இயல்பு. அழித்தலின் மூலம்தான் அண்டவெளியின் balance காப்பாற்றப்படும் என்பது அவன் கருத்து. ஆனால் இந்த எய்த்ரி மட்டும் அழிக்கப்படாமல் தானோஸினால் விடப்பட்டுவிடுகிறான். அவன் ஒரு தேவதச்சன் போன்றவன். ஆயுதங்களை உருவாக்குவதில் கில்லாடி. இறந்துகொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தின் சக்தியால் தோருக்கு, Stormbreaker என்ற ஆயுதத்தை உருவாக்கிக் கொடுக்கிறான் எய்த்ரி. இந்த ஆயுதத்தால் தானோஸின் இதயத்தைக் கிழிக்க தோரால் முடிகிறது. ஆனால் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் தானோஸ், Soul Stone இன் உதவியால் அவெஞ்சர்களில் சரிபாதியை அந்தக் கல்லின் உலகத்துக்குள் சிறைப்பிடித்துவிடுகிறான்.

இவைதான் கற்களைப் பற்றிய விவரங்கள். அடுத்த கட்டுரையில் இன்னும் பல விஷயங்களைப் பார்க்கலாம்.

(தொடரும்)..

  Comments

Join the conversation