ஆயிரத்தில் ஒருவன் – ஒடுக்கப்பட்ட மக்களின் குமுறல் !
டிஸ்கி – 17/11/2010 – இந்தப் பதிவு, நான் எவ்வளவு மொக்கையாகவும் முட்டாள்தனமாகவும் ஒருகாலத்தில் எழுதியிருக்கிறேன் என்று நானே நினைவுபடுத்திக் கொள்ள உதவுகிறது ?
இன்று காலையில் பார்க்க நேர்ந்த இப்படத்தைப் பற்றி, பார்த்துக்கொண்டிருக்கும்போதே சில எண்ணங்கள் தோன்றின. படம் முடிந்ததும், அவற்றைப் பற்றி எழுதிவிடலாம் என்று முடிவு செய்தேன். இது, இப்படத்தின் விமர்சனம் அல்ல. விமர்சனமும்தான். ஆனால், இப்படத்தில் சொல்லியுள்ள வேறு பல விஷயங்களையும் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்ல முயற்சி செய்கிறேன். நண்பர்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பற்றியும் நீங்கள் இங்கு சொல்லலாம்.
சரி. நீண்டகாலமாக செல்வராகவன் எடுத்துவந்த இந்த ஆயிரத்தில் ஒருவன் படம், எனக்குத் தெரிந்து, வெளியான தேதியில் இருந்து இன்று வரை, மக்களிடையே ஒரு எதிர்மறையான கருத்தையே பெற்றுள்ளது. அது என்ன? இப்படத்தில் செல்வராகவன் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை என்பது தான். முக்கியமாக, இரண்டாம் பகுதியில் வரும் வசனங்கள், அக்காட்சிகள் உணர்த்தும் உண்மைகள் நமது மக்கள் நிறையப் பேருக்குப் புரியவில்லை. இது, படம் பார்த்தவர்களுடன் பேசிய போதும், பார்த்துக்கொண்டிருக்கும்போதே மக்களின் கருத்துகளை அவதானித்த போதும் எனக்குத் தெரியவந்தது. குறிப்பாக, என்னுடன் படம் பார்த்த நண்பர்கள் எரிச்சலின் உச்சத்துக்கே சென்றதைக் காணமுடிந்தது.
இப்படத்தில் நாம் காண்பது என்ன? பண்டைய சோழர்களின் கடைசி இளவரசன், பாண்டியர்களுடன் ஏற்பட்ட போரில், சோழ மன்னனால் ஒரு இடத்துக்குத் தப்புவிக்கப்படுகிறான். அந்த இளவரசனுடன் பாண்டியர்களின் குலதெய்வத்தின் சிலையும் அனுப்பப்படுகிறது. அவன் சென்ற இடமும், அந்த சிலையின் இருப்பிடமும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அதனைக் கண்டுபிடிக்கச் சென்ற ஒரு ஆராய்ச்சியாளரும் (பிரதாப் போத்தன்) மாயமாக மறைந்துவிடுகிறார்.
இதனைப் பற்றி ஆராய, தொல்பொருள் துறையைச் சேர்ந்த ரீமா சென்னும், அவளுக்குப் பாதுகாப்பாக உடன் வரும் அழகம்பெருமாளும் , தொலைந்து போன ஆராய்ச்சியாளரின் புதல்வியான ஆண்ட்ரியாவை அழைத்துக்கொண்டு , தங்கள் சாமான்களைச் சுமந்துவரும் கார்த்திக்கின் ஆட்களுடன் மேற்கொள்ளும் பயணம் தான் இப்படம். முடிவில் என்ன ஆனது ? இளவரசன் சென்ற இடத்தைக் கண்டுபிடித்தார்களா? இதுதான் இப்படம்.
தமிழில் இத்தகைய முயற்சி மிகப்புதியது. ஏற்கெனவே இப்படிப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் ( மிஸ்டர் கார்த்திக் – ஒரு உதாரணம்), இவ்வளவு பெரிய பொருட்செலவில், தத்ரூபமாக எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். இதைப் போன்ற பல படங்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும். நான் அவதானித்த வரையில், இதன் கிராபிக்ஸ் காட்சிகள், எந்த ஆங்கிலப் படத்துக்கும் குறைந்தவை அல்ல. இப்படத்தின் பல இடங்களில் வரும் இந்த கிராபிக்ஸ் காட்சிகள், நல்ல முறையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு, நமது பாராட்டுக்கள்.
இப்படத்தின் ஒரே குறை என்று நான் கருதுவது, படத்தின் முதல் பாதியில் வரும் பாடல்கள். அவை, படத்தின் வேகத்தை முடிந்தவரை மட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக, காட்டில் பயணிக்கும்போது வரும் பாடலும், சிதைந்த நகரத்தைக் கண்டுபிடிக்கும்போது வரும் பாடலும்.
இன்னொரு விஷயம், இப்படத்தில் செல்வராகவனின் ட்ரேட்மார்க் காட்சிகள் எதுவும் இல்லை. இது ஒரு பாராட்டுதலுக்குரிய முயற்சி.
ஒக்கே. இப்பொழுது, இப்படத்தில் காட்டப்படும் சில விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம். பண்டைய காலத்தில், சோழர்கள் தங்கள் ஆட்சியின் உச்சத்தில் இருக்கும்போது, தமிழ்நாட்டின் வெளியே இருந்த நாடுகளைக் கைப்பற்றினார்கள் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். குறிப்பாக, சாவகம் கொண்டான், கடாரம் கொண்டான் என்ற பட்டங்களை அவர்கள் பெற்றிருந்தது இதற்கு ஒரு நிரூபணம். அதுவும், ராஜேந்திர சோழனின் கடற்படை, அக்காலத்தின் மிகச்சிறந்த படைகளில் ஒன்று. கடல் தாண்டிப் பல நாடுகளை அது வென்றது. இந்தியாவிற்குள்ளேயே, கங்கை வரை சென்ற அவனது சைனியம், யாரையும் விட்டுவைக்கவில்லை. அந்த மன்னர்கள் அத்தனை பேரின் தலையிலும் கங்கை நிரம்பிய குடங்களை அவன் எடுத்துவந்து, கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டியது வரலாறு. இந்தச் செய்திகளின் அடிப்படையிலேயே இப்படமும் எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்விஷயங்களோடு சேர்த்து, சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே நிலவிய விரோதத்தையும் இப்படம் கையாண்டிருக்கிறது.
இவற்றோடு சேர்த்து இன்னொரு விஷயத்தையும் செல்வராகவன் காட்டியிருக்கிறார். ஆனால், அதுதான் நமது மக்களின் குழப்பத்துக்கும் காரணம் என்று எனக்குப் பட்டது. இப்பொழுது நான் சொல்லவிருக்கும் விஷயங்களை நீங்கள் அவதானித்தாலே, செல்வராகவன் இப்படத்தில் சொல்ல விரும்பியுள்ளது என்ன என்று புரிந்துகொண்டு விடலாம்.
தமிழகத்தில் ஒரு காலத்தில் செல்வாக்கோடு விளங்கிய தமிழர்கள், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் புலம் பெயர்ந்து வேறு ஒரு தீவுக்குச் செல்கிறார்கள். அங்கு பல காலமாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். திடீரென்று, அவர்கள் மேல் கோபம் கொண்ட சில மக்கள், அவர்கள் மீது போர் தொடுக்கின்றனர். இந்தத் தமிழர்களைச் சிறைப்படுத்தி, அவர்களை சித்ரவதை செய்கின்றனர். அவர்களது பெண்களைச் சூறையாடுகின்றனர். அவர்களது தலைவனையும் பிடித்துவிடுகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அனைவரையும் கொன்றுவிடுகின்றனர்.
இக்கதை நமக்கு நினைவுபடுத்துவது எதை என்று சிந்தித்தாலே, இப்படத்தில் செல்வராகவன் சொல்ல வந்திருக்கும் விஷயம் என்ன என்று நமக்கு விளங்கிவிடும்.
இப்படம், இலங்கைப் பிரச்னையின் மேல் ஒரு திரைக்கலைஞனின் கோபம் என்று எனக்குத் தோன்றுகிறது. இப்படத்தில், வேறு ஒரு தீவில் வாழும் தமிழர்களின் அவல வாழ்வு நமது கண்முன்னே விரிகிறது. பல ஆண்டு காலமாக பஞ்சத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தாயகம் திரும்பும் நாளை, ஆவலோடு எதிர்நோக்கி வாழ்கின்றனர். அந்த நாளும் வருகிறது. ஆனால், அப்போது, வஞ்சத்தால் அவர்கள் தாக்கப்படுகின்றனர். பதிலுக்கு அவர்கள் என்னதான் திருப்பித் தாக்கினாலும், ராணுவ உடை அணிந்த குரூரமான மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றனர். அழிந்தும் போகிறார்கள்.
இரண்டாம் பகுதியில் இதெல்லாம் காட்டப்படுகின்றது. ஒரு தாயின் மார்பில் , பாலுக்குப் பதில் ரத்தம் சுரக்கின்றது. அவள் வந்து தங்கள் தலைவனிடம் முறையிடுகிறாள். அதே போல், இப்படத்தில் சொல்லப்படும் இன்னொரு விஷயம், எப்போதோ நடந்த ஒரு கொடுமையினால், இன்னமும் விரோதம் பாராட்டிக்கொண்டிருக்கும் சில மனிதர்கள், தங்களது கோபத்தினால், ஒரு இனமே அழியக் காரணகர்த்தாக்கள் ஆகிவிடுகின்றனர். இந்த விஷயமும், பொட்டில் அடித்தாற்போல் இப்படத்தில்சொல்லப்படுகின்றது
இப்படம் சொல்ல விரும்பும் செய்தி இதுதான். ஒரு திரைக்கலைஞன், ஒரு சமூகப்பிரச்னையின் பேரில் தனக்கு இருக்கும் கோபத்தை, இப்படத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளான் என்றே எனக்குப் படுகிறது.
இரண்டாம் பகுதியில், வசனங்களே பெரும்பாலும் இல்லை. மொத்தமாக ஒரு பக்கம் வசனங்கள் இருந்தால் அதிகம். விஷுவல்களாலேயே படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் செல்வராகவன். அவருக்கு இது ஒரு வெற்றி. இப்படத்தின் செய்தியை வெளிப்படையாகச் சொல்வதை விட, இப்படிப் பூடகமாகச் சொல்வது தான் ஒரு திரைப்படத்துக்கு அழகு என்றே அவர் இப்படிச் சொல்லியுள்ளாரோ என்பது எனது அனுமானம்.
ஆயிரத்தில் ஒருவன் – ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் குமுறல். படத்தை நீங்களும் பாருங்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள்.
இப்படத்தின் டிரைலர் இங்கே.
நான் படத்தினை பார்க்கவில்லை. குறைகளை பற்றி பேசிய விமர்சனங்களுக்கு மத்தியில் நிறைகளையும் உள் அர்த்தத்தையும் உங்கள் விமர்சனம் பேசுகிறது.
நண்பரே,
ஒடுக்கப்படும் மக்களின் வலிகளை நேர்மையாக, நேரடியாகச் சொல்பவன் உண்மையான கலைஞன். அதற்கு மேனா மினுக்கித்தனம் செய்து தனது கோபத்தை வெளிப்படுத்துபவன் ஒரு தேர்ந்த வியாபாரி.
நான் இப்படத்தை இன்னமும் பார்க்கவில்லை. இருப்பினும் அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட இன மக்களின் மீதான உணர்ச்சிகள் நன்றாக வியாபாரப்படுத்துகின்றன என்பதை நான் உணர்கிறேன். இதுவும் அந்த வகைதான் எனில் இதனை வரவேற்பதில் எந்த ஒடுக்கப்பட்ட மகளின் வலிகளும் ஆறப்போவதில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களிற்கு தேவை விடுதலையே தவிர இயக்குனர்களின் குளிர்க் கண்ணாடி வழியே ஒழுகும் கோபமான கண்ணீர்த்துளிகள் அல்ல.
உங்கள் பார்வை வரவேற்ககதக்கது. ஆனால் நண்பரே அதனுடன் என்னால் உடன்படமுடியவில்லை. உங்கள் தளத்தில் கருத்துச் சுதந்திரம் கண்ணியமாகப் பேணப்படும் என்ற நம்பிக்கையிலேயே என் கருத்துக்களை முன் வைத்துள்ளேன்.
கருந்தேள்,
சமீபத்தில் நான் பார்த்த ஒரு மொக்கைப் படத்தில் (நான் பார்க்கும் படங்கள் எல்லாமே அப்படித்தான்) கதையில் நாயகனின் லீலைகளை காட்டி ஐந்து ஆறு பெண்களை அரை குறை ஆடைகளில் உலவ விட்டு படத்தின் எண்பது சதவீதத்தை ஒட்டி விட்டு பிறகு திடீரென்று இலங்கை பிரச்சினையை அந்த (இல்லாத) கதையில் புகுத்த முயன்றனர். சொல்லவும் வேண்டுமா? படம் படு தோல்வி. கமர்ஷியல் விஷயங்களில் பிரச்சினகளை புகுத்தவே கூடாது. அப்படி முயன்றாலும் நீங்கள் ஒரு கமர்ஷியல் இயக்குனராகவே கருதப்படுவீர்கள், ஷங்கரைப்போல.
ஆகையால், சொல்ல வந்த விஷயத்தை நேரிடையாகவே சொல்வதே ஒரு கலைஞனுக்கு அழகு. அப்படி நேரிடையாக சொல்ல இயலவில்லை எனினும் மறைமுகமாக சொல்லலா. அதை விட்டு விட்டு கதைக்குள் இதனை புகுத்த முயல்வது அழகல்ல. அதுவும் செல்வாவுக்கு இருக்கும் ரெபுடேஷனை நினைக்கையில் அந்த நோக்கமும் சந்தேகதிற்குரியதாகவே அமைகின்றது.
நண்பா வித்தியாசமான திரைப்பார்வையும் விமர்சனமும், படம் சீக்கிரம் பார்ப்பேன்.
மேலே சொன்னவர்கள் போல நான் சொல்ல போவதில்லை. ஆனால் எனக்கு வரவர மெசேஜ் ஆக மாட்டேங்குது. முழு ஃபேண்டஸி தேவைபடுகிறது. நல்ல படமாக இருந்தால் கண்டிப்பாக மேசேஜ் அவசியமில்லை, உணர்வுகள் இருந்தால் போதுமென நினைப்பு. நான் இந்தப் படம் கண்டிப்பாக பார்க்கத் தான் போகிறேன்.
நல்ல அலசல்….
அருமை..
பாருடா தமிழ்ப்பட விமர்சனம்..:)
அருமையான விமர்சனம்..
என்ன தான் இருந்தாலும் படத்தை மற்றவர்கள் குறை சொன்னாலும் எல்லாம் பார்க்க தான் போறாங்க பாஸ்..
நண்பா எங்கே நான் போட்ட கமெண்ட்?
சாரி நண்பா இருக்கு,ரெஃப்ரெஷ் பண்ணினேன்,ஓட்டுக்கள் போட்டாச்சி,ஜூட்
@ காதலரே – நம்முடைய வலைத்தளத்தில் கருத்துச்சுதந்திரத்துக்கு முழுச் சுதந்திரமும் வழங்கப்படும். எப்போதும். நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கலாம். மேனாமினுக்கித்தனம் செய்பவன் வியாபாரிதான். ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவை விடுதலை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இப்படத்தில் அந்த லட்சியத்தை அவமானமோ பகடியோ செய்யாமல், நேர்மையாகவே அவர் முன்வைத்துள்ளார் என்பதை நான் கண்டேன். இது எந்த விதத்திலும் படத்தின் வியாபாரத்துகாகக் கையாளப்பட்ட ஒரு யுக்தி போல எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், அவ்வாறு இருந்திருந்தால், இப்படம் மிகச் சுலபமான வெற்றியை அடைந்திருக்கும். நான் கண்ட வரையில், இரண்டாம் பகுதி, முழுக்க முழுக்க ஒரு தீவிரமான, கடுமையான ஒன்றாக இருப்பதால் தான் மக்களுக்கு அது பிடிக்கவில்லை. அதே போல், இவ்விஷயத்தைச் சொல்ல அவர் எந்த வித காம்ப்ரமைசும் செய்து கொள்ளவில்லை என்பதை நான் கண்டேன்.
எனவே, நீங்கள் இப்படத்தைப் பார்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்களும் இப்படத்தைப் பார்த்து விட்டால், அப்பொழுது இந்த விஷயத்துக்கு இன்னமும் ஒரு ஆரோக்கியமான மேடை அமையப்பெறும்.
@ விஷ்வா – இப்படம் ஒரு கமர்ஷியல் படமல்ல. அப்படிப்பட்ட ஒரு மாயை இப்படத்தைச் சூழ்ந்திருக்கிறது. முதல் பகுதி, அந்த மாயையை நோக்கி நம்மைக் கொண்டுசென்றாலும், இரண்டாம் பகுதி, பெரும்பாலும் மிகவும் தீவிரமாக, கனமாகவே கொண்டுசெல்லப்படுகிறது. இது, ஒரு தற்செயல் அல்ல என்பது எனது அனுமானம். நான் ஏற்கெனவே சொல்லியுள்ளது போல், செல்வராகவன் தன்னுடைய வழக்கமான எந்த முத்திரையையும் இப்படத்தில் பதிக்கவில்லை. இது முற்றிலும் வேறான ஒரு களம். அதனை அவர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல் அணுகியுள்ளார் என்பதே நான் கண்ட உண்மை. நீங்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டுகோள் விடுக்கிறேன்.
@ கார்த்திகேயன் – உங்கள் கருத்துக்கும் வோட்டுக்கும் நன்றி. கண்டிப்பாகப் பார்த்துவிட்டு, நீங்களும் எழுதுங்கள்.
@ பப்பு – இது ஒரு முழு பாண்டஸி இல்லை. இரண்டாம் பகுதி மிகவும் சீரியஸ். இருந்தாலும், பாருங்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
@ ஜெட்லி – நன்றி . . 🙂 . . அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க . .
@ வெற்றி – நன்றி. நீங்களும் அடிக்கடி வரவும்.
@ வினோத்கெளதம் – ஹீ ஹீ . . இனிமே தமிழ்ப்படங்களும் இங்கு இடம்பெறும். உங்க தலைவிதி இதப் படிக்கணும்னு இருக்கு . . 🙂 நீங்க பார்த்துட்டு உங்க கருத்த சொல்லுங்க பாஸு . .
@ ஜீவன்பென்னி – எந்தப் படத்தில் தான் குறைகள் இல்லை? இப்படம், எனக்குப் பிடித்ததற்குக் காரணம், அது சொல்லவந்த செய்தி தான். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. அடிக்கடி இந்தப் பக்கம் வாருங்கள். .
நேற்று தான் பார்த்தேன்…, நிறைய வெட்டி விட்டார்கள் .., படம் நன்றாக தான் இருந்தது…, இப்படி ஒரு முயற்சி எடுததற்க்காகவே பாராட்ட வேண்டும்.., காம்ப்ரமைஸ் பண்ணாமல் தூய தமிழை பயன் படுத்தியது அவற்றுள் ஒன்று…, கிரேக்க வரலாற்று நாயகர்கள் இன்றைய ஆங்கிலத்தை தானே பேசுகிறார்கள்…, நிறைய ஆங்கில படத்தில் பார்த்த காட்சிகள் இருந்தன இருந்தாலும் செல்வாவை திட்டமுடியவில்லை…
@ பேநா மூடி – அமாம். நல்ல முயற்சி. அதுவும், உத்தரவு என்ற வார்த்தைக்குப் பதில், உய்த்தவு என்று சொல்கிறார்கள். அந்த அளவு நன்றாக ரிசர்ச் செய்திருக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல், இம்முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. கிராபிக்ஸ் காட்சிகளும் நல்ல தரத்தில் இருக்கின்றன.
அட! வித்தியாசமான கோனம்.
படம் முதல் பாதி நன்றாக போனாலும் (சில ஆங்கில படங்களின் துணையோடு), 2ம் பாகத்தில் சில குறைகள்.
மிக அதீதமான வன்முறை காட்சிகள் எதற்கு என்று தெரியவில்லை. மறுமுறை பார்க்க தோன்றுவதை கூட தடுக்கிறது, அந்த காட்சிகள். இது எப்படி படத்தை வெற்றிபெற வைக்கும் என்று தெரியவில்லை .தலைகள் நசுக்கப்படுவது போன்ற காட்சிகள் தேவையா? இதே பிழை தான் அவருடைய புதுப்பேட்டை படத்திலும் பார்க்க முடிகிறது.
சோழர்களை ஏதோ நாகரீகமற்றவர்களை போல் காட்டியிருப்பதும் உறுத்தக்கூடியது. சோழர்களின் அறிமுக காட்சி, அவர்கள் ஏதோ களப்பிறர்கள் போல, நாகரிகமற்றவர்கள் போல காட்டியிருப்பது எனக்கு பிடிக்கவில்லை.
இவற்றை தவிர்த்து பார்த்தால், படம் அருமையான டெக்னிகல் அம்சங்களுடன் தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் சிறந்த படம் தான்.
ஆனால், ஏனோ அதீத வன்முறை படத்துடன் ஒட்ட மறுக்கின்றது.
நண்பா பாடல்களை கேட்ட போதே எனக்கு இந்த படத்தின் கரு இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணம் வந்தது. மிக சரியான கோணத்தில் படத்தை அணுகி இருக்கிறீர்கள். தமிழன் என்ற முறையில் நல்ல முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தை கொண்டவன் நான். நான் இன்னும் படம் பார்க்க வில்லை. பார்த்து விட்டு என் கருத்துகளை முழுமையாக பதிவு செய்கிறேன்.
@ சீனு – உங்கள் கருத்துக்கு நன்றி.
சோழர்களை நாகரீகமற்றவர்கள் போலக் காட்டியிருப்பது ஏனென்று எனக்குத் தோன்றுகிறது என்றால், இவர்கள் எல்லாருமே பல நூற்றாண்டுகளாக அந்த மலைக்குகையினுள் வசித்து வருபவர்கள். அவர்களைப் பொறுத்த வரை, அதுதான் அவர்களது சாம்ராஜ்யம். வெளியுலகத்தில் நடந்திருக்கக்கூடிய மாற்றங்கள் எதுவும் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை (மனோஜ் நைட் ஷியாமளனின் ‘த விலேஜ் ‘ படம் போல) . அவர்களது நம்பிக்கை என்னவெனில், ஒரு காலத்தில், தங்களது சோழ நாட்டிற்குத் தங்களை மீண்டும் அழைத்துச்செல்ல ஒரு தூதுவன் வருவான்; அந்தச்சமயத்தில் மாரி (மழை) பொழியும் என்பது தான். மன்னரிடம் மக்கள் முறையிடும் காட்சிகளில் இது விளங்கும். பஞ்சத்தையும் பட்டினியையும் அவர்களால் தாங்க இயலாவிடினும், இங்கு இருந்து தான் ஆகவேண்டும் என்பது அவர்களது முடிவு.
மேலும், முதல் காட்சியில், சோழர்களைக் காட்டும்போது (இளவரசன் தப்பிக்கும் காட்சி) , அவர்களை நன்றாக நாகரிகத்தில் முன்னேறியவர்களாகத்தான் காட்டியுள்ளனர்.
அதீத வன்முறைக்காட்சிகள் பற்றி: புதுப்பெட்டையிலும் சரி, இதிலும் சரி, அந்த வன்முறை நடக்கும் இடத்தில் நாம் இருந்தால் நமக்கு என்ன தெரியுமோ அதைத்தான் காட்டியுள்ளனர் என்பது என் கருத்து. நீங்களே யோசித்துப்பாருங்கள்: மன்னர்கள் காலத்தில் இந்தத் தலை நசுக்கும் தண்டனை மிகச்சாதாரணமல்லவா ? அதனை நம் கண் முன் காண நேர்ந்தால் நமக்கு எப்படி இருக்கும்? இதனைத் தான் காட்டியுள்ளனர் என்று நினைக்கிறேன். ஆனாலும், நினைத்திருந்தால், இவற்றைக் காண்பிக்காமலேயே படத்தை எடுத்திருக்க முடியும் . பல உலகப்படங்களிலும் சரி, ஆங்கிலப்படங்களிலும் சரி.. இப்படி அப்பட்டமாகக் காட்டுவது பல காலமாகவே இருக்கிறது (கிம் கி டுக், குரசவா படங்கள் ஒரு உதாரணம்) . .
உங்களது கருத்தை வரவேற்கிறேன். மீண்டும் வருக. . நன்றி.
@ ராசா – உங்கள் கருத்துக்கு நன்றி. நானுமே, பாடல்களிலிருந்து கதையை யூகித்துக்கொண்டு, இப்படத்துக்காகக் காத்திருந்தவன் தான். இரண்டு பாடல்கள் படத்தில் இல்லை. ஒருவேளை படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்டிருக்கலாம். படத்தைப் பார்த்துவிர்று, இங்கு உங்கள் கருத்தைப் பதியுங்கள். . . நன்றி.
படம் இன்னும் பார்க்கலை(கொச்சின்ல ரிலீஸ் ஆகலை)… பார்த்திட்டு திரும்ப வர்றேன்… 🙂
@ சிவன் – கண்டிப்பா. . பார்த்தவுடனே இங்க வந்து கருத்து சொல்லணும் . . 🙂
படம் அருமை. எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு.
அஹோரி- – ரொம்ப நன்றி . . உங்க ஆசிகள் நம்ம சைட்டுப் பக்கம் கிடைச்சது சந்தோஷம் 🙂 . . அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க . .
அடக்கப்பட்ட மக்களின் குமுறல் நிச்சயம் பதிவுகளாக்கப் பட வேண்டும், தணிக்கைகளை மீறி என்ற நோக்கத்துக்காக படம் எடுக்கப் பட்டிருக்கிறது, வியாபாரத்துக்காக இல்லை. படம் எடுக்க பணம் வேணும், உங்கள் எல்லாரிடமும் பணம் இருந்தால் கூட இப்படி படம் எடுக்கவோ, விடுதலை வாங்க போராடவோ முடியும் என்றில்லை. சும்மா படம் பாக்காமலே, மாற்றான் கருத்துக்கு மறுப்புரை சொல்லும் இந்த கருத்துசுதந்திரம் பதிவுலகில் தடை செய்யப்பட்ட வேண்டும் முதலில்.
வித்தியாசமாய்,சரியாய் சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள்.
நிறைய பேர் படங்களைப் பத்தி அலசி ஆராயுறேன் பேர்வழின்னுக் கொல்றாங்கெ.எனக்கென்னவோ அவிங்கள நெனச்சா ‘நெனப்பு பொழப்பைக் கெடுதுச்சான்..நேர்மானம் பொச்சக் கெடுத்துச்சான்’ பழமொழிதேன் ஞாபகம் வருது சாமி…
வணக்கம் அனானி – கோபம் அடையாதீங்க . . இந்த வலைப்பூவில் யாருமே அவங்க கருத்த சொல்லலாம். ஒவ்வொருத்தரும் அவங்க கருத்த சொல்லட்டுமே. . அடுக்கு அப்புறம், நம்ம கருத்த நாம பதியலாம். எல்லாருமே அவங்க கருத்த சொன்னாதானே எல்லாரோட பார்வையும் நமக்குத் தெரியும். . . இல்லையா?
@ மயில்ராவணன் – உங்க பழமொழில ரெண்டாவது வரி புரியலையே . . நேர்மானம் அப்படின்னா என்ன? . . . அருஞ்சொற்பொருள் தேவை . . 🙂
ungaludaya vaadham vithyaasamaanathu nanba.. naan indha padathai oru fantasy aagave paarthen.. pidithum irundhadu…
andha padathil ipadi oru karuthu iruppin naan athai varaverkiren… 🙂
nalla alasal.. 🙂
@ கனகு – நன்றி நண்பா . .எனக்கும் இது பாண்டஸியா தான் தோணிச்சு . . ஆனா படம் போக போக, ஒரு வேற மாதிரியான கருத்து படத்துல இருக்கிறது தெரிஞ்சிது.. அதான் இப்புடி எழுதினேன் . .:-)
கருந்தேள், ஆரம்பத்தில் படம் தொடங்கிய போது, இது நல்ல ஒரு சரித்திர நிகழ்வை வைத்து பான்டசியாக உருவாக்கி இருக்கிறார்களே என்று ஆச்சர்யத்துடன் பார்த்தேன். ஆனால் போக போக இது ஒரு பக்கா கமர்ஷியல் பொட்டலம் என்று உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஏதோ ஒடுக்கபட்டவர்களின் குமுறல்களை கொட்டி, பரிதாபத்தை உண்டு பண்ண முயன்றது போல செய்து விட்டு, லிங்கம், கூடல், என்று சகிக்க முடியாத வார்த்தைகளை அள்ளி விட்டு, இரண்டு பெண்களை குடி, குத்தாட்டம், என்று அலைய விட்டு, படத்தை எப்படி முடிக்க தெரியாமல் முடித்தது போன்று இருந்தது.
நன்றாக படம் எடுத்து கொண்டிருந்த இயக்குனர்கள் எல்லாம் இப்படி பிரம்மாண்டத்தை நம்பி கோட்டை விடுகிறார்களே என்று ஆதங்கம் தான் பட முடிகிறது.
படத்தில் இரண்டே ப்ளஸ் பாயின்ட், கிராபிக்ஸ் காட்சிகள் (தமிழில் மிகவும் புதிய பாணி), மற்றும் இரண்டாம் கட்டத்தில் பேசப்படும் தூய தமிழ் (எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்று கேள்விதான், சத்தியமாக எனக்கு சிலவற்றே புத்திக்கு எட்டியது)
மொத்தத்தில் செல்வராகனின் எண்ணங்கள் மக்களுக்கு சென்றடைந்திருக்குமோ இல்லையோ, ஆனால் அவரின் அதே அளவு வீரியத்துடன், படத்தில் நடித்திருக்கும் ஒரே ஆசாமி, பார்த்திபன் தான். அவர் எண்ணங்களில் உதித்த வக்கிரத்தை இவர் நடிப்பில் காட்டியிருக்கிறார்.
இது என் தனிபட்ட கருத்து, அடுத்தவர் படத்தை எப்படி மெச்சினாலும்.
ரபீக் – உங்க கருத்த இன்னும் சில பேரு சொல்லிக் கேட்டேன் ..நம்ம காதலரும், விஷ்வாவும் அதே தான் சொல்றாங்க . . ஒரு கோணத்துல பார்த்தா, நீங்க சொல்றது சரி. முதல் பாதி பக்கா கமர்ஷியல். ரீமா சென்ன உரிக்க வெச்சி காட்டிருப்பாங்க. . இரண்டாவது பாதி, பக்கா சீரியஸ்.. ஆனா நான் இந்தப்படத்துல பார்த்தது, தமிழர் பிரச்சனையை அவங்க இதுல குடுத்த விதம் தான் . .அதுனால தான் எனக்கு இந்தப்படம் புடிச்சது. . ஆனா, நீங்க சொல்ற பாயிண்டுகளும் வேலிட் தான் . .இன்னிக்கி விகடன் விமரிசனம் பாருங்க . . கிழிச்சித் தொங்க உட்டுருக்காங்க . . 🙂
padathula ellam super. i love this movie. but enaku oru chinna uruthal ennana or rather a doubt, why did they use Indian army in the movie? or is it something els n i misunderstood?
நடுநிலையான விமர்சனம்.
@ jothi – நீங்க சொல்றது சரிதான் . . ராணுவமெல்லாம் வர்றது ரொம்பவே ஓவர்தான் . . 🙂 கரெகிடாத்தான் பார்த்துருக்கீங்க . . அதுல எந்த லாஜிக்கும் இல்ல. . அரசியல்வாதி சொன்னவுடனே ராணுவம் வந்துருச்சுன்னு கொஞ்சம் பூ சுத்துவாங்க . .ஆனாலும் பரவாஇல்ல.. உட்ட்ருங்க.. 🙂
@ துபாய் ராஜா – நன்றி. அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க பாஸு . .
This comment has been removed by the author.
அய்யா கருந்தேள் அவர்களே… படம் பார்த்தது முதல் இந்த ‘உய்த்தவு’ என்கிற வார்த்தையை பற்றிதான் தேடிக்கொண்டிருக்கிறேன். எந்த மொழியில் ‘உத்தரவு’ க்கு ‘உய்த்தவு’ என்று தயவு செய்து சொல்லுங்களேன். என்னை பொறுத்த வரை தமிழாக தெரியவில்லை. நிறைய பேரிடம் கேட்டு பார்த்தேன். ஒன்றும் பதிலில்லை. கூகுளில் தேடிய போது உங்கள் பக்கம் மட்டுமே கிடைத்தது!
இந்த படத்தில் இவர்கள் உபயோகப்படுத்தியது தமிழே இல்லை. தமிழும் வேறு ஏதோ ஒரு மொழியும் கலந்த கலவை. விசாரித்து பார்த்த போது யாரோ ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் உதவினாராம் இந்த வசனங்களுக்கு. அதை வைத்து பார்க்கும் பொழுது தேவநாகிரி வார்த்தைகளையோ, அல்லது பேச்சு மொழியில் இல்லாத வார்த்தைகளையோ தேடிப்பிடித்து பயன்படுத்தினார்களோ என்னவோ. இப்படி அதிமேதாவித்தனமாக பழந்தமிழ் உபயோக்கிறேன் பேர்வழி என்று மக்களை குழப்பி எடுத்ததற்கு பதிலாக பழைய புராண படங்களில் வருவது போல சுத்த தமிழில் பேசி இருக்கலாம். அனைவருக்கும் எளிதில் விளங்கியிருக்கும். இப்பொழுது திரையரங்குகளில் சப்டைட்டில் போடுகிறார்களாம்! தேவையா இது! இதில் “தமிழ் மக்களுக்கு தமிழ் விளங்கவில்லையா? என்ன கொடுமை” என்று விதண்டாவாதம் வேறு!
அது ‘உய்த்தவு’ இல்லை ‘உய்த்தது’. இதன் பொருள் விதிக்கப்பட்டது, கட்டளையிடப்பட்டது.
உய்த்தவு மட்டும் இல்லை. ஓவியம் என்ற வார்த்தைக்கு பதிலாக ஓம் என்று வேறு சொல்கிறார்கள்.
வாங்க விஜயசக்கரவர்த்தி . . நீங்க சொல்வது உண்மையாகவே இருக்கலாம் . .யாரோ ஒரு ஆராய்ச்சியாளர் ஏதோ சொல்லிக்கொடுத்து, அதனை இங்கு உபயோகப்படுத்தி, முற்றிலும் நம்மைக் குழப்பிக்கூட இருக்கலாம் . .ஆனால், என்னைப்பொறுத்தவரை, இப்படத்தின் இரண்டாம் பகுதியின் அடிநாதமான தமிழர் பிரச்னை என்னைக் கவர்ந்தது. இதில் உள்ள குறைகளைப் பட்டியல் போட்டால் அது கண்டிப்பாக நீண்டு கொண்டே செல்லும் என்பதில் சந்தேகமில்லை. செல்வராகவன் முதன்முதலில் தனது களத்தை விட்டு வெளியே வந்து எடுத்திருக்கும் ஒரு படம் இது. சரியாக ஆராய்ச்சி செய்யாமல் அவர் இதில் காட்டியுள்ள விஷயங்கள் எவ்வளவு சரியில்லை என்பதை நான் அறிவேன். இதில் உள்ள தமிழ், ஒருவேளை தஞ்சையை சரபோஜிகள் ஆண்டபோது இருந்த தெலுங்குக் கலவையாகக் கூட இருக்கலாம் . . இன்னமும் அவர் கொஞ்சம் ஆராய்ந்து, சரியான விஷயங்களை உபயோகப்படுத்தி இருக்கலாம் தான் . .ஆனால், படத்தின் வாயிலாகச் சொல்லப்பட்ட தமிழர் பிரச்னை காரணமாகத் தான் எனக்கு அது பிடித்தது. அதை முக்கியமாக வைத்துத் தான் இந்தப் பதிவே. .
எனவே, செல்வராகவனை விட்டு விடுவோம் . .:-) . . இன்னும் நாம் பார்ப்பதற்கு நிறையப் படங்கள் உள்ளன பாஸ் .. . ப்ரீயா உடுங்க . . உங்க கருத்துக்கு நன்றி . .அடிக்கடி வாங்க . .இந்த மாதிரி பொறி பறக்குற எதிர்வினைகள் நம்ம தளத்துக்குத் தேவை . .:-)
செல்வராகவன் குழப்பவில்லை. தமிழை சரியாகவே பயன்படுத்தியுள்ளார். இந்த தமிழ் புரியாதவர்கள்தான் தலை குனியவேண்டும். செல்வராகவன் இல்லை
“செல்வராகவன் முதன்முதலில் தனது களத்தை விட்டு வெளியே வந்து எடுத்திருக்கும் ஒரு படம் இது”
களத்தை விட்டு வேண்டுமானால் வெளியி வந்திருக்கலாம் ஆனால் பழைய களத்தின் எச்சங்கள் இங்கும் இருக்கின்றன.
உதாரணம்: 1) கார்த்தி ஜொள்ளு 2) ரீமா உச்சா போகும் காட்சி 3) லிங்க தரிசனம் போன்ற வசனங்கள் 4) ரீமா ஆண்டிரியா பச்சை பச்சையான திட்டுகள் 5) பேய் பிடித்து ஆடைகளை அவிழ்க்கும்காட்சி
படத்தில் இரண்டாம் பகுதி தமிழ் எந்த காலத்து தமிழ் என்று அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
அப்படி இருக்க தமிழே தமிழர்க்கு புரியவில்லை என்பது தவறு.
சொல்ல வந்ததை தைரியமாக சொல்லி இருக்கலாம்.
ஆனால் தயாரிப்பாளர் சொன்னது போல் ஈழ இறுதிப் போருக்கு முன்னரே அந்த பகுதிகளை(இரண்டாம் பாகம்) எடுத்திருப்பார்கள் என்றால் நம்முடைய கோணம் முற்றிலும் தவறானது.
ஆனால் இறுதிப்போரின் போது தான் வன்கொடுமைகள் நடந்தது என்று சொல்லிவிட முடியாது. ஆண்டாண்டு காலமாக அங்கு நடைபெறும் குற்றங்கள் தான் இவை.
தமிழ் திரைப்படங்களின் எனக்கு (நமக்கு) வன்முறை மிகவும் பழகி விட்டது.
படத்தில் பல லாகிக் ஓட்டைகள் இருக்கவே செய்கின்றன.
என்னதான் சொன்னாலும் இப்படி ஒரு புதிய முயற்சி செய்ததற்கு செல்வாவை பாராட்ட வேண்டும்.
தயாரிப்பாளரை நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கிறது..
படம் மிக அருமை ……………தமிழில் அரிய முயற்சி
இதை படிக்கவும்
http://www.vinavu.com/2010/02/03/1k1/
நண்பரே! இப்படம் தொடர்பான உங்கள் பார்வை அருமை. இப்படத்தை விளங்கிக்கொண்டுள்ள பலரும் தநம் விளங்கிக்கொண்டதாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் விளங்கிக்கொண்டதாகக் காட்டினால் பல உண்மைகளை எழுதவேண்டி வரும் என்பதால். இன்னமும் அவர்கள் வஞமசம்தீர்க்கும் மனநிலையிலேயே இருக்கின்றார்கள்.
நன்றி.
நாதன்
ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு
நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
1.
“தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே.. அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே.. அழாதே
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே.. அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே.. அழாதே”
சோழ பரம்பரை காத்திருக்கின்றனர்… தாங்கமுடியா துயர்களை தாங்கி விடிவு ஒன்றுக்காய் மட்டுமே ஒரு சிறு நிலமதில் உயிர் சுமக்கின்றனர். அந்த நிலத்தின் சட்டங்கள் வேறு, நியாயாதிக்கங்கள் வேறு, பண்பாடு வேறு. ஆனால் அனைத்தும் மீண்டும் தம் சுதந்திர வாழ்வு பற்றிய ஒற்றைப் புள்ளியில் சுழல்கின்றன.
ஆயிரத்தில் ஒருவன் உங்களுக்கு பிடித்த்தற்கு நீங்கள் சொல்லும் காரணம் தான் எனக்கு அந்த பட்த்தின் வலுவை குறைத்து விட்ட்து. என்று தோன்றுகிறது பிடிக்கும் பிடிக்காது என்ற நிலையை தாண்டி ஒரு ரசிகனின் பார்வையில் இருந்து அந்த பட்த்தைப் பார்க்கும் பொழுது, இதை ஒரு திரைப்படம் என்றே சொல்வதற்கு தகுதியில்லாத ஒரு வடிவம் என்றே எனக்கு தோன்றுகிறது.
சும்மா கிராபிஸ் என்று சொல்லாதீர்கள்.சில இடங்களைத் தவிர இந்த பட்த்திற்கு அது வீண் செலவு. திரைக்கதை சரியில்லாத ஒரு திரைப்பட்த்தை
மக்கள் எப்படி விரும்புவார்கள். மனதை பாதிக்கும் ஒரு (இலங்கை சம்பவம்)
நிகழ்வை பதிவு செய்ய நினைக்கும் ஒரு கலைஞன் முதலில் அதற்கான கலத்தை சரியாக உருவாக்க வேண்டும்.
செல்வராகவனின் களமே சரியில்லையே! (இலங்கை சம்பவம்). இந்த நிகழ்வை சொல்லுவதற்கான களம் சரியாக நிர்ணயிக்கப் படவில்லை.
“ஏனோ தானோ என்று இறுதி நாளில் தேர்வுக்கு படித்து விட்டு, ஒரிரு
முக்கியமான வார்த்தைகளை மட்டும் தாளில் கிறுக்கிவிட்டு அது மட்டும்
திருத்துபவர் கண்ணில் படுமாறு பல சாயங்கள் பூசிவிட்டால் போதுமா?
மீதி வரிகளிலும் அர்த்தங்கள் வேண்டாமா?
திருத்துபவர்கள் அர்த்தங்களை எதிர்பார்ப்பதில் தவறு சொல்லும் மாணவனாகத் தான் செல்வா இருக்கிறார்.
கணிதப் பாட்த்திற்கான தேர்வில் பாதி பக்கம் கணக்கு எழுதிவிட்டு, மீதி பாதியில் சரித்திரம் எழுதினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ?
அதேப் போல் தான் இந்த படமும்.”
இதை எந்த வகையிலும் நல்ல முயற்சி என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
வள்ளுவன் காலத்திலேயே ” சொல்” என்று பயன்படுத்தி இருக்கும் வடிவம்
புகல் என்று எப்படி வந்த்து. தமிழ் நாட்டில் பிறந்து சில சொற்களின் பயன்பாடு கூடஅறியாமல் ப்டம் எடுத்த செல்வாவை என்ன் சொலவ்து. போன பட்த்தின் ”புதுபேட்டை” வசன கர்த்தாவையே இந்த பட்த்திற்கும் வசனம் எழுத வைத்திருந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும், தமிழர்களுக்கு… இன்னும் நிறைய சொல்ல்லாம் (இலங்கை சம்பவம்)
அதற்க்காக இந்த படம் உங்களால் விரும்ப்ப் படுமேயானால் நல்ல
சினிமா இப்படிதான் இருக்கும். கலப்படமாய் நேர்மையின்றி இந்த
சினிமா எடுப்பதற்கு செல்வா எதற்கு யார் வேண்டுமானாலும் நாலு
தொழில் நுட்ப கலைஞர்களை அருகில் வைத்துக் கொண்டு எடுக்கலாமே
”சிறைசாலை” என்ற திரைப்படம் உங்களுக்கு ஒரு புது முயற்சியாகத் தெரியவில்லையா? செல்வா செலவு
இன்னொரு நாட்டின் புராணங்களை ஆராய்ந்து மிக பெரிய படமாக
கொடுத்த ஜெம்ஸ் காம்ரூனின் “அவதாரை” எந்த வகையில் சேர்ப்பது
good one man..
நல்ல ஒரு பாண்டஸி அட்வென்சர் படத்த இன்னும் நல்ல எடுத்துருக்கலாம். இருந்தாலும் கரு நல்ல இருந்தது.. இப்படிதான் நான் படம் பார்த்தப்ப எனக்கு தோனுச்சு. நீங்க சொன்ன மாதிரி எனக்கு படல. ஆனா அவரு அப்படிதான் எடுத்தாரோ இல்லையோ. நீங்க சொன்ன விஷயம் உண்மைதானே. பிரமாதமான பார்வையுங்க உங்களுக்கு…
second off fula irutave varathu konjam bore padam patha odane therinjathu elangai tamilar parachannannu so my guess correct.