Batman: Arkham Asylum (2009) – The Game

by Karundhel Rajesh September 29, 2010   Game Reviews

கோதம் நகரின் இருண்ட தெருக்களினூடே, சரேலென்ற ஒளிவெள்ளம் பாய்ச்சியபடி, ஒரு பெரிய கருப்பு வண்டி பறந்துகொண்டிருந்தது. அது – பேட்மொபைல். பேட்மேனின் வாகனம். பலவகையான எண்ணங்களை மனதில் ஓடவிட்டுக்கொண்டே, பேட்மேன் அந்த வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தார். அவரது பின்னிருக்கையில், நெளிந்தபடியே ஒரு உருவம். கட்டுண்டு கிடந்தாலும், உற்சாகத்தோடும் கிண்டலோடும் பேட்மேனிடம் பேசியபடியே இருந்த அந்த உருவம் – ஜோக்கர் !

தூரத்தில், அர்க்ஹாம் அஸைலத்தின் கறுத்த சுவர்கள், இருண்ட வானத்தின் பின்னணியில் பயமுறுத்த, அதன் பெரிய கேட்டுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது பேட்மொபைல். பேட்மேனின் மனமெங்கும் படர்ந்திருந்த ஒரே கேள்வி – ‘ஜோக்கர், இவ்வளவு சுலபத்தில் தன்னிடம் அகப்பட்ட காரணம் என்ன’? எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து தாக்கலாம் என்ற நிலையில், படு உஷாராக நாற்புறமும் பார்த்தபடியே பேட்மொபைலைச் செலுத்திக்கொண்டிருந்தார் பேட்மேன்.

அர்க்ஹாம் அஸைலம். கோதம் நகரின் அத்தனை குற்றவாளிகளும் அங்கே தான் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பல பேரை அங்கு அனுப்பி வைத்த பெருமை பேட்மேனுக்கு உண்டு. எனவே, அங்கிருக்கும் அத்தனை கைதிகளுமே பேட்மேனின் மீது கொலைவெறியில் இருந்தனர். மட்டுமல்லாமல், கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு தீவிபத்தின் காரணமாக, நகரின் சிறையிலிருந்தும் பல குற்றவாளிகள் அங்கே மாற்றப்பட்டிருந்தனர்.

ஜோக்கரை பேட்மொபைலிலிருந்து இறக்கிய பேட்மேன், அங்கிருந்த காவலாளிகளிடம் அவனை ஒப்படைத்துவிட்டு, அவர்களுடனேயே தானும் உள்ளே நடக்க ஆரம்பிக்கிறார். நுழைவாயிலிலிருந்து, ஜோக்கரின் செல் வரை, ஒரு நீண்ட பாதை. இருபுறமும் பல கைதிகள். பேட்மேனைப் பார்த்ததும், கண்டபடி கத்தியபடியே, கம்பிகளை இடிக்கின்றனர். இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாத பேட்மேன், ஜோக்கரையே உற்றுப்பார்த்தபடி நடக்கிறார். ஜோக்கரின் நிலைகுத்திய விழிகள், பேட்மேனின் மீதே நிலைத்திருக்கின்றன. விகாரமான ஒரு இளிப்பு, அவனது வாயிலிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.

ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், பேட்மேன் உள்ளே செல்ல இயலாது என்று சொல்லும் காவலாளிகள், ஜோக்கரை உள்ளே கொண்டு செல்கின்றனர். அந்த இடத்தின் கதவு மூடிக்கொள்கிறது. கண்ணாடிகளின் வழியே, பேட்மேனும், அங்கே வந்து சேர்ந்த கமிஷனர் கோர்டனும், ஜோக்கர் உள்ளே கொண்டு செல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

அப்போது ….. திடீரென கட்டுகளை விடுவித்துக்கொண்டு, காவலாளிகளின் மீது பாயும் ஜோக்கர், அவர்களைக் கொன்று விடுகிறான். அதே நேரத்தில், அர்க்ஹாம் அஸைலத்தின் அலாரம் ஒலிக்கத் துவங்குகிறது. ஜோக்கரின் காதலி ஹார்லி க்வின், அந்த அஸைலத்தைக் கைப்பற்றி விடுகிறாள். கோர்டனும், பேட்மேனும், இன்னும் சில காவலாளிகளும், நூற்றுக்கணக்கான கொடூரமான குற்றவாளிகளுக்கு இடையே தனித்து விடப்படுகின்றனர். பெரிய டிவியில் ஜோக்கர் தோன்றுகிறான். தான் போட்ட திட்டத்தில் வலிய வந்து மாட்டிக்கொண்ட பேட்மேனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, கோதம் நகரை, இந்தக் குற்றவாளிகளின் துணையோடு கைப்பற்றப் போவதாகவும், முடிந்தால் தன்னைத் தடுக்குமாறும் பேட்மேனுக்குச் சவால் விடுகிறான்.

அதே நேரத்தில், பேட்மேனைச் சுற்றிக் கதவுகள் மூடிக்கொள்ள, தனித்து விடப்படும் பேட்மேனை நோக்கி, பல கைதிகள் ஆங்காரமாகக் கத்தியபடியே ஓடிவருகின்றனர்…

இங்கேயிருந்து ஆரம்பிக்கிறது அதிரடி சரவெடி !

மேலே நான் கொடுத்துள்ளது, Batman :Arkham Asylum என்ற கேமின் இண்ட்ரோ. நான் கேம் விளையாட ஆரம்பித்ததிலிருந்து, இவ்வளவு அட்டகாசமான கேமை ஆடியதேயில்லை. இதுவரை நூற்றுக்கணக்கான கேம்களை ஆடியிருக்கிறேன் (உடனே, நண்பர்கள், பின்னூட்டத்தில், இந்த கேம் ஆடியாயிற்றா? அந்த கேம் ஆடியாயிற்றா என்று கேம் லிஸ்ட் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்). ஆனால், இப்படிப்பட்ட ஒரு அதிரடியான கேம், இதுவரை பார்த்ததில்லை. ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எனது மிக மிக ஃபேவரைட்டான கேமாக மாறிவிட்டது இது.

தனித்து விடப்படும் பேட்மேன், அடுத்து என்ன செய்கிறார் என்பதே கேமின் முக்கியக் கேள்வி. படிப்படியாக பேட்மேனின் முன் விரியும் புதிர்கள் எப்படி அவரால் அவிழ்க்கப்படுகின்றன என்பதிலேயே, இந்தக் கேம் செயல்படுகிறது.

பேட்மேன் முதலில் எதிர்கொள்வது, ஸாஸ் என்ற ஸைக்கோ. அவனது பிடியில் ஒரு போலீஸ்காரர். இவனுக்கு எதிரில் பேட்மேன் தோன்றினால், போலீஸ்காரரை ஷாக் வைத்துக் கொல்லுவதாகக் கொக்கரிக்கிறான். இவனுக்குப் பின்புறம் போய், இவனை அடி பின்னியெடுத்து, மடக்க வேண்டும். இது, பேட்மேனின் முதல் சவால்.

அங்கிருந்து வெளியே செல்கையில், ஜோக்கர் பேட்மேனின் முன் மறுபடி தோன்றுகிறான். ஒரு விசையை அவன் இழுக்க, பிரம்மாண்டமான ஒரு ஜந்து, பேட்மேனின் மேல் பாய்கிறது. அதனை வீழ்த்த வேண்டும். இது இரண்டாவது சவால்.

அதன்பின், வரிசையாகப் பல சவால்கள். ஒவ்வொன்றாக முடித்துவிட்டு வெளியேற வேண்டும். இதன்பின், கமிஷனர் கோர்டன், ஜோக்கரால் கடத்தப்பட, அவரையும் மீட்க வேண்டும். மிகமிகப் பெரிய ஒரு கேம் இது. படு ஜாலியாக விளையாடிக்கொண்டே இருக்கலாம். இடையிடையே ரிட்லரின் புதிர்கள் வேறு.

இந்தக் கேமின் மிகப்பெரிய பலம், இதன் க்ராஃபிக்ஸ். துல்லியமான, படு சூப்பரான விஷுவல்கள். அருமையான கண்ட்ரோல்கள். இதில், பேட்மேனின் சிக்னேச்சர் மூவ்கள் பல உள்ளன. எதிராளிகளை அடி பின்னியெடுக்கும் கண்ட்ரோல்கள், மிகவும் அருமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒருவனை அடித்துவிட்டு, பின் அடுத்தவன் மேல் காற்றில் பாய்ந்து கொடுக்கும் உதைகள், டக்கரான ஸ்லோ மோஷனில் உள்ளதால், அப்படியே ஒரு காமிக்ஸ் படிக்கும் எஃபக்ட் கிடைக்கிறது. அதேபோல், உயரத்தில் இருந்து குதிக்கையில், நாம் காமிக்ஸ்களில் பார்ப்பது போலவே, தனது அங்கியை விரித்துக்கொண்டு பேட்மேன் பறந்து போய் எதிராளியை உதைப்பது அருமை.

இதில் வரும் வில்லன்கள் பல பேர். ஸ்கேர்க்ரோ வரும் எபிஸோட், உண்மையிலேயே சற்று பயத்தைக் கொடுக்கும். ஸ்கேர்க்ரோவின் விஷவாயுவைச் சுவாசிக்க நேரும் பேட்மேன், தனக்கு முன் இருக்கும் அத்தனையும் படு பயங்கரமான முறையில் ஹலூஸினேஷன்களாக மாற, அங்கே இருக்கும் ஸ்கேர்க்ரோவை எப்படி மடக்குகிறார் என்பதைக் கவனியுங்கள்.

அதே போல், பேன் என்ற மாமிசமலையை வீழ்த்துவது, மிகவும் கடினமான எபிஸோட். அவனைத் தாக்கிக்கொண்டு இருக்கையிலேயே, பல தடியர்கள் பேட்மேன் முன் குதிப்பார்கள். ஒரே சமயத்தில், அத்தனை பேரையும் சமாளிக்க வேண்டும். இதனிடையே, பேன் எறியும் பெரிய பெரிய கற்கள் பேட்மேனின் மீது பட்டால், பேட்மேன் காலி. அதையும் சமாளிக்க வேண்டும். இதற்கிடையில், ஜோக்கரின் காதலி ஹார்லி க்வின் வேறு !

சில இடங்களில், டிடக்டிவ் மோட் என்ற விஷயத்தை உபயோகித்து, சுற்றுப்புறங்களில் உள்ள தடயங்களையும், சுவர்களுக்கு அப்பால் நிற்கும் தடியர்களின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். துப்பாக்கி ஏந்தியவர்களைச் சமாளிப்பது கொஞ்சம் கடினம். அவர்களின் பின்னால் ரகசியமாகச் சென்று மடக்க வேண்டும். அல்லது, பறந்து போய் அவர்களை உதைத்தும் தள்ளலாம்.

இப்படிச் செல்லும் கேம், இறுதியில் எப்படி முடிகிறது என்பது சஸ்பென்ஸ். விளையாடிப் பாருங்கள். இந்தக் கேமை எழுதியவர், நமக்கெல்லாம் தெரிந்த பால் டினி (Paul Dini).

இந்த கேம், எனக்கு, பெங்களூரின் சப்னா புக் ஹௌஸில் (80 feet road, near Indira nagar) கிடைத்தது. விலை – ரூ. 700 /-. அங்கே நூற்றுக்கணக்கான கேம்கள் உள்ளன.

இதோ பேட்மேன்: அர்க்ஹாம் அஸைலம் டிரைலர்

பி.கு – இதன் இரண்டாம் பாகம், 2011ல் வெளிவருகிறது. அதன் டிரெய்லர் இங்கே

  Comments

16 Comments

  1. இருங்க..கடைக்கு கிளம்பிட்டேன்..வந்து படிச்சிட்டு அப்பறம் கமெண்ட் போடுறேன். முதல்ல கமெண்ட் போடுற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பெருமை கையருகே இருக்கும் போது அத நழுவ விடக்கூடாது என்று வைரக்கியத்தினாலயே அந்த கமெண்ட்ஸ்…

    Reply
  2. சூப்பரா இருக்கு படிக்குறப்பவே………… படம் பார்க்கவே நேரமில்ல இதுல எங்க கேம் விளையாடுறது………

    Reply
  3. இந்த கேம் விளையாண்டிருக்கேன். நல்லா இருக்கும். ஆனா முழுசா முடிக்கலை கொஞ்சம் கஷ்டமாக இருந்தது பாதியில் விட்டுட்டேன். அப்புறம் நேரம் கிடைக்கிலை. இதைப் படிச்சவுடன் மீண்டும் விளையாட ஆசை வந்துவிட்டது. ஆரம்பிக்கிறேன்!

    Reply
  4. உங்கள் விமர்சனம் ஆடத் தூண்டுகிற்து

    Reply
  5. //உடனே, நண்பர்கள், பின்னூட்டத்தில், இந்த கேம் ஆடியாயிற்றா? அந்த கேம் ஆடியாயிற்றா என்று கேம் லிஸ்ட் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்//

    நீங்க tetris ஆடியிருக்கீங்களா…அதான் எனக்கு ஈசியா வரும். மத்தபடி என் சிஸ்டத்தில கேம்ஸ் ஆடுனா உக்காந்திரும்.
    ஆமா…கேம்ஸ் தனியா விளையாடுவீங்களா..இல்ல கூட்டாளிகளோட விளையாடுவீங்களா…

    //விலை – ரூ. 700 // என்னாது….700 ??????? நா எப்ப PS, Xboxலாம் வாங்கி….

    Reply
  6. |கீதப்ப்ரியன்|Geethappriyan| said…

    உங்கள் விமர்சனம் மயிலை அடிக்கவும் தூண்டுகிற்து:))

    ஏங்க இவ்வளவ்வு காண்டு உங்களுக்கு ஒரு பச்ச குழந்த மேல 🙂

    Reply
  7. ராஜேஷ்,

    மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். இன்னும் விளையாடாத கேம்கள் நிறைய இருக்கின்றன என்பதால் இதை வாங்கும் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன், உங்கள் பதிவைப் படித்ததும் மீண்டும் ஆசையாக இருக்கிறது. பார்க்கலாம். Tataவின் Hyper Books-ல் (Star Bazaar, Koramangala) எல்லா (PC) கேம்களும் 10-20% குறைத்துக் கிடைக்கின்றன. But variety கம்மி.

    Reply
  8. நண்பரே,

    வழமைபோலவே உங்கள் சிறப்பான பதிவை படித்து மகிழ்வதுடன் என் கடமை முடிவடைந்து விடும் 🙂

    Reply
  9. @ இராமசாமி கண்ணன்
    // |கீதப்ப்ரியன்|Geethappriyan| said…

    உங்கள் விமர்சனம் மயிலை அடிக்கவும் தூண்டுகிற்து:))

    ஏங்க இவ்வளவ்வு காண்டு உங்களுக்கு ஒரு பச்ச குழந்த மேல 🙂
    //
    அதானே..சரி விடுங்க. என்கிட்ட ஒரண்ட இழுக்குறதே இந்த கார்த்துக்கு வேலையாப் போச்சு.கட்டம் சரியில்லை கார்த்துக்கு 🙂 நாங்கெல்லாம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்னுன் தெரிலை போல 🙂

    Reply
  10. செம கடுப்பு பாஸ்,, dvd இருக்கு ஆனா systamla, install ஆகல..

    Reply
  11. your review about thz game is super and try to play the game in 3D ,Its really superb ,thz game is 3d ready one

    Reply

Join the conversation