Batman: Arkham Origins (2013) – PS3 Game Review

by Karundhel Rajesh December 17, 2013   Game Reviews

அக்டோபர் 25ம் தேதி, இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம்களில் ஒன்றான Batman: Arkham Origins உலகெங்கும் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னர் இரண்டு வருடங்கள் முன்னால், இதன் இரண்டாம் பாகமான Batman: Arkham City வெளிவந்திருந்தது. அதற்கும் இரண்டு வருடங்கள் முன்னால், இந்த சீரீஸின் முதல் கேமான Batman: Arkham Asylum வெளிவந்தது. ஏற்கெனவே வந்த இரண்டு கேம்களுமே மிக நன்றாக விற்பனை ஆகியிருந்தன. எனவே இந்த கேமுக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கம் (அவற்றின் பெயர்களின் மீது க்ளிக் செய்து எனது விமர்சனங்களைப் படிக்கலாம்).

[divider]

ஃப்ளிப்கார்ட்டில்தான் எப்போதும் நான் PS3 கேம்கள் ஆர்டர் செய்வது வழக்கம். கேம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்னர் (அக்டோபர் 24 – 2013), Batman: Arkham Origins கேமை வாங்கலாம் என்று அவர்கள் தளத்துக்குச் சென்றேன். அதில், கேம் Pre-order செய்யலாம் என்று போட்டிருந்தது. அதாவது, ரிசர்வ் செய்து கொள்வது. அடுத்த நாள் (25th) ரிலீஸ். முதலிலேயே ப்ரீ-ஆர்டர் செய்தால் ஒருசில இலவச லொட்டு லொசுக்குகளும் உண்டு (இவற்றை கேம் பாஷையில் DLC – Downloadable content என்று அழைப்பர்). உடனே கஸ்டமர் கேருக்கு ஃபோன் செய்தேன்.

PS3 கேம் இப்போது ப்ரீ -ஆர்டர் செய்தால், நாளை டெலிவரி செய்து விடுவீர்களா? இதுதான் எனது சிம்பிள் கேள்வி.

இதற்கு வந்த பதில் – கேம் மார்க்கெட்டில் வர இன்னும் ஒரு மாதம் ஆகும்.

நான்: ஹலோ – என்னங்க சொல்றிங்க? உலகம் பூராவும் 25த் அக்டோபர்தான் ரிலீஸ். நீங்க ஒரு மாசம்னு சொல்றீங்க..? ஒருவாட்டி வெரிஃபை பண்ணிட்டு வந்து பேசுங்க..

கஸ்டமர் கேர் – உலகம் பூரா ரிலீஸ் இருக்கலாம். ஆனா எங்ககிட்ட இன்னும் ஒரு மாதம் ஆகும்.

புரியாமல் உளறுகிறார்கள் என்பது புரிந்தது. ஆனால் பயனில்லை என்பதால், வெளியே கடைகளில் வாங்கிக்கொள்லலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், கேம் ரிலீஸ் தேதியான 25ல் ஃப்ளிப்கார்ட்டில் பார்த்தால், ஜம்மென்று கேம் விற்பனைக்கு வந்திருந்தது – இலவச லொசுக்குகள் இல்லாமல். மறுபடியும் கஸ்டமர் கேருக்கு ஃபோன் போட்டேன்.

’இந்த மாதிரி, நான் நேற்றே கூப்பிட்டேன். உங்கள் மரமண்டை கஸ்டமர் கேர் ஆள் என்னை மிஸ்கைட் செய்ததால், ப்ரீ ஆர்டர் செய்யவில்லை. செய்திருந்தால் இப்போது என் கையில் கேம் இருந்திருக்கும். அந்த இலவச DLCக்களையும் நான் பெற்றிருப்பேன். ஆகவே, உங்கள் தவறை நீங்கள்தான் சரி செய்யவேண்டும். இப்போது வாங்கினாலும் அந்த இலவச மேட்டர்கள் எனக்கு வேண்டும்’ – இதுதான் நான் பேசிய சாராம்சம்.

அவர்களோ, முந்தைய நாள் நான் பேசிய ரெகார்டிங்கை கேட்டுவிட்டு சாவகாசமாக 24 மணி நேரம் கழித்து (இதற்கு கஸ்டமர் கேர் அகராதியில் 2313233242433 மணி நேரங்கள் என்று பொருள்) கால் செய்வோம் என்று சொன்னனர். எனது ஹிஸ்டரியை பாருங்கள் – நான் ஒரு ரெகுலர் ஃப்ளிப்கார்ட் ஆதரவாளர் என்று சொல்லியும் பயன் இல்லை.

உடனடியாக நெட்டில் தேடினேன். நேற்றே ஆர்டர் செய்தாலும், இலவச DLCக்கள் கிடைக்கவேண்டும். இதுதான் நோக்கம். அப்படி ஒரு தளம் கிடைத்தது. பெயர் – www.nextworld.in. இதில், ஐம்பது ரூபாய் தள்ளுபடி+ இலவச பொருட்களும் கிடைக்கும் என்று போட்டிருந்தனர். உடனே அழைத்து, உறுதி செய்து கொண்டேன்.

கேமின் விலை – 3000/-. எனக்கு 2950/-வுக்கு கிடைத்தது. ஆர்டர் செய்தது – 25ம் தேதி மாலை 6 மணி. மறுநாள் மதியம் 12க்கு வந்து சேர்ந்துவிட்டது. எல்லா இலவச DLCக்களோடு. டெல்லியிலிருந்து வந்திருக்கிறது. ப்ளூடார்ட் மூலம்.

ஃப்ளிப்கார்ட்டை விடவும் மிகவும் நம்பகமான சேவை. கூடவே, ஒவ்வொருமுறை வாங்கும்போதும் ரிவார்ட் பாயிண்ட்ஸ் உண்டு. ஃப்ளிப்கார்ட்டில் எனக்கு இதுவரை அப்படி ரிவார்ட் பாயிண்ட்ஸ் இருந்திருந்தால், நான் இந்த கேமை அங்கே இலவசமாகவே வாங்கியிருப்பேன்.

எனவே, இனி ஃப்ளிப்கார்ட்டுக்கு குட்பை. இந்த நெக்ஸ்ட்வேர்ல்டில்தான் வாங்கப்போகிறேன். இதை விபரமாக ஃப்ளிப்கார்ட்டுக்கும் மின்னஞ்சல் செய்தேன். ஆனால், தடங்கலுக்கு வருந்துகிறோம் ரேஞ்சில் ஒரே வரியில் பதில் வந்தது.

ஒரு மரமண்டை லூசுக்கூமுட்டை கஸ்டமர் கேர் ஆளால் அவர்களுக்கு மூன்று வருடங்கள் அதிகப் பொருட்களை வாங்கிய ரெகுலர் கஸ்டமர் நஷ்டம். ஆனால் எனக்கோ ஒரு அட்டகாசமான புதிய இணையதளம் லாபம்.

 

Batman: Arkham Origins கேமின் கதை

இதுதான் உண்மையில் இதற்கு முந்தைய இரண்டு கேம்களுக்கும் முன்னால் நடக்கும் முதல் கதை. பேட்மேன் உருவான காலத்தில் நடக்கிறது. கதைப்படி ப்ரூஸ் வேய்ன் பேட்மேனாகி இரண்டே வருடங்கள்தான் ஆகியிருக்கின்றன. The Long Halloween என்ற காமிக்ஸில், பனிக்காலத்தில் நடக்கும் விறுவிறுப்பான கதை போலவே, இந்த சூழலில், க்ரிஸ்த்மஸ் நாளில் தொடங்குகிறது கதை.

Black Mask என்று ஒரு வில்லன், பேட்மேனின் தலைக்கு 50 மில்லியன் டாலர் விலை வைக்கிறான். இந்த வேலையை செய்துமுடிக்க அவன் அணுகும் ஆட்கள் – மொத்தம் எட்டு பேர்.

Killer Croc, Deathstroke, Electrocutioner, Copperhead, Firefly, Deadshot, Shiva & BANE.

இந்தத் தகவலைத் தெரிந்துகொள்ளும் பேட்மேன், பிரதான வில்லன் ப்ளாக் மாஸ்க்கை தேடிச்செல்கிறார். ஒவ்வொரு வில்லனாக எதிர்கொண்டு, அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில், ப்ளாக் மாஸ்க் என்பவனின் பெயரை உபயோகப்படுத்தி தன் தலைக்கு விலை வைத்தது, ஒரு புதிய கொடியவன் என்பதை பேட்மேன் தெரிந்துகொள்கிறார்.

அந்த வில்லனின் பெயர் – The Joker.

அவனைப் பற்றிய செய்திகளை விரைவாக சேகரிக்கிறார் பேட்மேன். அப்போது கோதம் நகரின் போலீஸ் படையைச் சேர்ந்த கேப்டன் ஜேம்ஸ் கோர்டன் என்பவரை பேட்மேன் எதிர்கொள்ள நேரிடுகிறது. பேட்மேனை கைதுசெய்ய முயற்சிக்கிறார் கோர்டன். அங்கிருந்து தப்பிக்கிறார் பேட்மேன். ப்ளாக் மாஸ்க்கின் வேடத்தில் திரியும் ஜோக்கர் ஒரு வங்கியை கொள்ளையடிக்க முயலும்போது அதனைத் தடுக்கிறார். அப்போது ஜோக்கரை துரத்திச்செல்கையில் ப்ளாக் மாஸ்க்கைக் கண்டுபிடித்து விடுதலை செய்கிறார். நகரின் பெரிய ஹோட்டல்களில் ஒன்றான ராயல் ஹோட்டல் என்ற கட்டிடத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் ஜோக்கரை, பல சாகஸங்கள் செய்து பேட்மேன் ஜோக்கரை பிடிக்க நெருங்கும்போது, அங்கே பேட்மேனை தாக்க ஆரம்பிப்பது – BANE.

Batman-Arkham-Origins-2

சண்டையில் Bane தப்பிக்கிறான். ஜோக்கர் பிடிபடுகிறான். கோதம் நகரின் ஆர்க்ஹாம் அஸைலம் என்ற மனநல விடுதியில் அடைக்கப்படுகிறான். அப்போது அவனுக்கு சிகிச்சை அளிக்க வரும் மனநல மருத்துவரின் பெயர் – ஹார்லீன் க்வின்ஸெல் (Harleen Quinzel). இது யார் என்று இதற்கு முன்னால் வெளிவந்த இரண்டு கேம்களை விளையாடியவர்களுக்குத் தெரியும்.

இதன்பின் Firefly என்ற வில்லனுடன் பேட்மேன் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது, ப்ரூஸ் வேய்னின் Batcave என்று அழைக்கப்படும் குகைக்குள் நுழையும் BANE, பேட்மேனின் நம்பிக்கைக்குகந்த வேலைக்காரர் ஆல்பர்ட்டை கொடூரமாக தாக்கிவிட்டு, அந்தக் குகையையே அழித்திருக்கிறான். ப்ரூஸ் வேய்ன் தான் பேட்மேன் என்பது BANEக்குத் தெரியும் என்று பேட்மேன் அறிகிறார்.

இதற்கிடையே மனநல விடுதியில் இருந்து ஜோக்கர் தப்பிவிடுகிறான். Blackgate Prison என்ற சிறையை தாக்கி, தன்வசம் கொண்டுவந்திருக்கிறான். அங்கே செல்கிறார் பேட்மேன். உள்ளே, உடலில் ஒரு மருந்தைச் செலுத்திக்கொண்டு பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் BANEஉடன் சண்டையிட்டு அவனை வெல்கிறார். இதன்பின் இறுதியாக ஜோக்கரை காட்டடி அடித்து அவனை மறுபடியும் மனநல விடுதியில் சேர்ப்பதோடு கேம் முடிகிறது.

கேமின் சிறப்பம்சங்கள்

கேமில் வழக்கப்படி ’உலகின் சிறந்த துப்பறிவாளன்’ என்று அழைக்கப்படும் பேட்மேனின் துப்பறியும் திறமைகளுக்கு தீனி இருக்கிறது. அப்படி பேட்மேன் ஒவ்வொருமுறை துப்பறியும்போதும், அங்கு நடந்திருக்கும் சம்பவங்கள் ஒவ்வொரு க்ளூ கிடைக்கும்போதும் மெல்ல உருவாகி, மொத்த க்ளூக்களையும் கண்டுபிடித்தபின், சினிமா போல ஓடுகின்றன. இதன்மூலம் அந்த சம்பவம் நமக்குத் தெரிகிறது.

இதற்கு முந்தைய இரண்டு கேம்களை ஆடியிருப்பவர்களுக்கு இந்த கேமின் கண்ட்ரோல்கள் எளிதாகவே புரியும். அதே கண்ட்ரோல்கள்தான். வழக்கப்படி அதே மிகப்பெரிய நகரம். அதில் எங்கு வேண்டுமானாலும் செல்லக்கூடிய Open world கேம் இது. ஆங்காங்கே புதிர்கள். அவற்றை கண்டுபிடித்தால் கேமின் Concept Art போன்ற சில விஷயங்கள் unlock ஆகும். இதைத்தவிர, இந்த கேமில் வேகமாக நகரின் பல மூலைகளுக்கும் செல்லக்கூடிய Fast Travel அறிமுகம் ஆகியிருக்கிறது. இதற்கு முந்தைய கேம்களில், ஒரு மூலையில் இருந்து இன்னொரு பக்கம் செல்ல நிறைய நேரம் எடுக்கும். இந்த ஃபாஸ்ட் ட்ராவலினால் அது சுலபமாகியிருக்கிறது.

இந்த கேமில், பேட்மேனின் வழக்கமான எதிரிகளான அடியாட்களில் இரண்டு புது வகைகள் இருக்கின்றன. Armed Enforcer மற்றும் Martial Artist. இவர்களை வழக்கப்படி அடித்தெல்லாம் பணிய வைக்கமுடியாது. இருவருக்குமே தனித்தனியான மூவ்கள் இருக்கின்றன. அவற்றினால் மட்டுமே அவர்கள் பணிவார்கள். நகரம் முழுக்க இப்படிப்பட்ட பல அடியாட்கள் ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருப்பார்கள். அவர்களை பேட்மேன் அடி பிரித்தெடுப்பது வழக்கப்படி நன்றாகவே இருக்கிறது.

இந்த கேமில், பிரதான கதையை ஃபாலோ செய்துகொண்டே ஆடலாம். கூடவே, கதையை ஃபாலோ செய்வதை விட்டுவிட்டு, இருக்கும் இடத்தில் உள்ள புதிர்களை அவிழ்ப்பது, அடியாட்களை உதைப்பது, ஆங்காங்கே ஸ்க்ரீனில் வரும் விசேட Missionகளை முடிப்பது என்று நமது இஷ்டம் போல விளையாடலாம். இந்த விசேட மிஷன்கள் (Side missions) ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், போகப்போக ஒரே போன்றேதான் இருக்கின்றன. குறிப்பாக, Crime in Progress என்ற மிஷன். பேட்மேன் ஆங்காங்கே பயணிக்கும்போது எதாவது குற்றம் நடக்கும். அங்கே சென்று அடியாட்களை நையப்புடைத்து (மிகவும் பழைய வார்த்தை – ஆனால் கச்சிதமாக பொருந்தவும் செய்கிறது), அந்த குற்றத்தை தடுக்கவேண்டும்.

பேட்மேனின் ஆயுதங்கள்

Arkham Origins Joker

இதற்கு முந்தைய கேம்களில் இருக்கும் பல ஆயுதங்கள் இதிலும் தொடர்கின்றன. குறிப்பாக, பூமராங் போன்ற Batarang (இதிலேயே ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் பேடராங்கும் உண்டு – முந்தைய கேம்களைப் போலவே), பேட்மேனின் விசேட ஆயுதமான Batclaw, நகரின் பாதுகாப்பு மிகுந்த இடங்களின் பாஸ்வேஎர்டை உடைக்க உபயோகிக்கப்படும் Cryptographic Sequencer, அடியாட்கள் சூழ்ந்துகொள்ளும்போது தப்பிக்க உபயோகப்படும் புகைக்குண்டு, சுவர்களையும் கண்ணாடிகளையும் உடைக்க உபயோகப்படுத்தப்படும் Explosive gel, தொலைவில் இருக்கும் துப்பாக்கிகளையும் குண்டுகளையும் செயலிழக்க வைக்கும் Disruptor, ஒரே சமயத்தில் இரண்டு எதிரிகளின் உடல்களை ஒருவர்மேல் ஒருவராக மோதிக்கொள்ளவைத்து அதிர்ச்சி கொடுக்கும் Remote Claw போன்ற பல ஆயுதங்கள் உண்டு.

இவற்றையெல்லாம் விட, இருளில் தூண்களின் மேலே அமர்ந்துகொண்டு, அந்த அறையில் இருக்கும் எதிரிகளை ஒவ்வொருவராக வீழ்த்துவதுதான் எனக்குப் பிடித்திருந்தது. குறிப்பாக ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் வீழ்த்தினால் போனஸ் பாயிண்ட்கள் உண்டு. இப்படிச் சேரும் பாயிண்ட்களை வைத்துக்கொண்டு பேட்மேனிடம் இருக்கும் மேற்படி ஆயுதங்களையும் அவனது உடல் கவசத்தையும் பலப்படுத்தலாம்.

Batman: Arkham Origins கேமுக்காக இரண்டு வருடங்கள் காத்திருந்தேன். ஆனால், விளையாட ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே கேம் எப்படி செல்கிறது என்பது புரிந்துவிட்டது. கூடவே, இதற்கு முந்தைய கேமான Arkham Cityயை விளையாடுவது போலவே தோன்றிக்கொண்டிருந்தது. Boss Battles என்று அழைக்கப்படும் பிரதான சண்டைகளும் சுலபமாகவே முடிந்துவிட்டன. இந்த இடத்தில், Arkham Cityயில், Mr. Freezeஐ பெட்மேன் வீழ்த்தும் சண்டைக்காட்சி நினைவுக்கு வருகிறது. என் கேம் சரித்திரத்திலேயே, கொஞ்சம் நேரம் எடுத்த சண்டை அது. காரணம், ஒரே யுக்தியை இரண்டு தடவைக்கு மேல் பயன்படுத்த முடியாது. ஆகவே பல உத்திகளை உபயோகப்படுத்தி மிஸ்டர் ஃப்ரீஸை வெல்லவேண்டும். ஆனால் அப்படிப்பட்ட கஷ்டமான சண்டைகள் எதுவுமே இதில் இல்லை. எல்லா சண்டைகளையும் விரைவில் முடித்துவிட்டேன்.

அதேபோல், இந்த ஒட்டுமொத்த கேமே சிறியதாகவே இருக்கிறது. மிக விரைவில் கேமையும் முடித்துவிட்டேன். ஆனால், ஒரு முழுமையான கேம் விளையாடிய திருப்தி இதில் இல்லை. எனக்கு இந்த சீரிஸிலேயே மிகவும் பிடித்தது, முதல் கேமான Batman: Arkham Asylumதான். அதன்பின் Arkham City. கடைசியாக இது.

நான் பல முறை பல கேம்களுக்கு சொன்னதேதான் இதற்கும் பொருந்தும். இத்தோடு இந்த சீரீஸை முடித்துவிடுவது நல்லது. இல்லையேல், அடுத்த கேமை வாங்க ஆள் இருக்காது. எனக்குத் தெரிந்து, பல வருடங்களாக (17 வருடங்கள்) கலக்கி வருவது, டூம்ப் ரெய்டர் (Tomb Raider) மட்டுமே. காரணம், அதுதான் பல விஷயங்களில் பல கேம்களுக்கு முன்னோடி. ஆனால் அதைப்போல் வேறு எந்த சீரீஸும் (ஓரளவு God of War சீரீஸை சொல்லலாம். இதன் முதல் மூன்று கேம்கள் அட்டகாசம். நான்காவதாக வந்த God Of War: Ascension மட்டுமே மொக்கை) இல்லை. இந்த மூன்று பேட்மேன் கேம்களிலும், இதுதான் குறைவாக விற்பனை ஆன கேம் என்பதை இணையத்தில் படித்தேன். எல்லாருமே என்போன்ற கருத்தில்தான் இருக்கிறார்கள் என்று புரிந்தது.

Batman: Arkham Origins கேமுக்கு எனது ரேட்டிங்- 3/5. வேறு கேமே இல்லை என்றால் இதை வாங்கி ஆடலாம்.

  Comments

1 Comment;

  1. Grade A stuff. I’m unuesqtionably in your debt.

    Reply

Join the conversation