Batman: Gotham Knight (2008) – இருளின் இளவரசன்

by Karundhel Rajesh May 21, 2010   English films

பேட்மேனைப் பிடிக்காதவர்கள் நம்மில் யார்? பேட்மேன், ஆங்கில காமிக்ஸாகவும் திரைப்படமாகவும் வருவதற்கு முன்னரே (இந்தியாவில் என்று படித்துக் கொள்க), நமக்கு லயன் மற்றும் திகிலில் அறிமுகமாகி விட்டார். அவரது மெகா சாகசமான ‘பௌர்ணமி வேட்டை’ திகிலில் வந்தது எனக்கு இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. ’சிரித்துக் கொல்ல வேண்டும்’ (த கில்லிங் ஜோக்), ‘பேட்மேன் கிறுக்கனா?’ போன்ற மிகத்தரமான கதைகள் தொடர்ந்து லயன் மற்றும் திகிலில் வெளிவந்தன.

நிற்க. பேட்மேன் படங்களுக்கு, நோலன் சகோதரர்கள் புதுப்பொலிவு கொடுத்தது நமக்குத் தெரியும். ’பேட்மேன் பிகின்ஸ்’ மற்றும் ‘ த டார்க் நைட்’ படங்களுக்கு இடையே உருண்டோடிவிட்ட வருடங்களை நமக்கு நினைவுபடுத்துவதற்கென்றே வெளிவந்த ஒரு அனிமேஷன் தொகுப்பே இந்த ‘கோதம் நைட்’ . ரா’ஸ் அல் கௌலை ஒழித்து, கோதமின் பாதுகாவலனாக மாறிய பின்னர், ஜோக்கர் பேட்மேனின் வாழ்வில் குறுக்கிடுவதற்கு முன், பேட்மேனின் வாழ்வில் நடக்கும் சில நிகழ்ச்சிகளும், பேட்மேன் சந்திக்கும் சில வில்லன்களையும் பற்றிய இந்த அனிமேஷன் தொடர், இரு பேட்மேன் படங்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்புவதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆறு சிறிய அனிமேஷன் கதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில், ஆறு வெவ்வேறு ஆர்ட்டிஸ்ட்களின் கைவண்ணம் பளிச்சிடுகிறது.

ரைட். கதைகளுக்குச் செல்வோம்.

1. Have I got a story for you

பொதுவாக, ஒரு லெஜண்ட் என்றால், அதனைப்பற்றிய செவிவழிச் செய்திகள் பலவகையாகப் பரவுவது இயற்கை. அதுவும், பேட்மேனைப் போல ஒரு அதிரடி நாயகன் திடீரென்று முளைக்கும்போது பரவும் விதவிதமான வதந்திகளைப் பற்றிய ஒரு கதை இது. நான்கு சிறு குழந்தைகள் ஓரிடத்தில் சந்தித்துக்கொள்ளும்போது, தாங்கள் பார்த்த ஒரு வித்யாசமான விஷயத்தைப் பற்றி ஒவ்வொருவரும் அவர்களது கற்பனை கலந்த கதைகளைச் சொல்கிறார்கள். பேட்மேனும் இன்னொரு ஜந்துவும் சண்டையிட்டுக் கொள்வதை அனைவரும் வெவ்வேறு இடங்களில் பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் பேட்மேனின் உருவத்தை ஒவ்வொரு மாதிரி விவரிக்க, அனிமேஷன், அந்த வகையிலேயே நமக்கும் பேட்மேனை அறிமுகம் செய்கிறது. அந்த சண்டை என்னவானது என்பது, கடைசியில் வரும் ட்விஸ்ட்.

2. CrossFire

பேட்மேன் காமிக்ஸ்கள் தொடர்ந்து படித்துவரும் நண்பர்களுக்கு, ஆர்க்காம் அஸைலம் பற்றியும், கமிஷனர் கோர்டான் பற்றியும் தெரிந்திருக்கும். ஹேவ் ஐ காட் எ ஸ்டோரி ஃபார் யூ கதையின்போது, இந்த ஆர்க்காம் அஸைலத்திலிருந்து தப்பித்த ஜேகப் ஃபீலி என்ற கிரிமினலை, கோதம் நகரத்தின் கிரிமினல்கள் அடைக்கப்பட்டுள்ள ஒரு தீவில் மறுபடி விட்டுவிட்டு வர, இரண்டு போலீஸ் ஆஃபீஸர்களை கோர்டான் நியமிக்கிறார் (இதில் ஒரு ஆஃபீஸர், டார்க் நைட் புகழ் ரோட்ரிகஸ்). அவனைக் கொண்டு செல்லும் வழியில், அவ்விருவரும், பேட்மேனின் நம்பகத்தன்மை பற்றி விவாதித்துக்கொண்டே செல்கின்றனர். அந்த நேரத்தில், இரண்டு லோக்கல் தாதாக்களான ‘ரஷ்யன்’ மற்றும் ‘ஸால் மரோனி’ (பேட்மேன் காமிக்ஸ்களில் அடிக்கடி அடிபடும் பெயர்கள்) கும்பல்களுக்கு இடையே நடக்கும் அடிதடியில் மாட்டிக்கொள்கின்றனர்.

அப்பொழுது, மரோனியின் ஆட்கள் கொல்லப்பட்டுவிட, இவர்கள் ஒளிந்திருக்கும் காரின் பின்புறம் மரோனியும் வந்து ஒளிந்து கொள்கிறான். அந்தக் கார் தகர்க்கப்பட, அங்கு நெருப்பினூடே நடந்து வரும் ஒரு நெடிய கரிய உருவம் (பேட்மேனின் இத்தகைய அட்டகாசமான அதிரடி அறிமுகத்தைத் திரைப்படங்களில் கூட நான் கண்டதில்லை !!), அவர்களைக் காப்பாற்றி, ரஷ்யன் மற்றும் மரோனியை வீழ்த்துகிறது. அங்கிருந்து மறைந்தும் விடுகிறது.

3. Field Test

இதில், கொஞ்சம் இளவயது பேட்மேனைப் பார்க்கலாம். அதே மரோனி மற்றும் ரஷ்யனின் கும்பல்களுக்கு இடையே ஒரு சண்டை. அப்போது நம்ம லுஷியஸ் ஃபாக்ஸ் கண்டுபிடித்த ஒரு கருவியின் மூலம், குண்டுகளைத் திசைதிருப்பும்போது, அது ஒரு அடியாளின்மேல் பட்டு, அவன் படுகாயமுற்று விடுகிறான். மிகவும் வருத்தமடையும் பேட்மேன், அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார். ஃபாக்ஸிடம் வந்து இதனைப்பற்றி ஆதுரத்துடன் பேசவும் செய்கிறார்.

4. In Darkness Dwells

ஒரு பாதிரியாரை, ஒரு ராட்சத பல்லி கடத்திக்கொண்டு சென்றுவிட்டது என்ற செய்தியை அறியும் பேட்மேனும் கோர்டனும், அந்தப் பல்லி சென்ற தடத்தைப் பின்பற்றிச் செல்கின்றனர். அப்பொழுது, இது ‘ஸ்கேர்க்ரோ’வின் வேலை (பார்க்க: பேட்மேன் பிகின்ஸ்) என்று இருவருக்கும் தெரியவருகிறது. பாதாள சாக்கடையினுள்ளே இருட்டில் செல்லும் பேட்மேனை, ஒரு ராட்சத உருவம் தாக்குகிறது. இதுதான் கில்லர் க்ரோக். பேட்மேனின் பல வில்லன்களில் ஒன்று. இதிலிருந்து பேட்மேன் விடுபட்டாரா? பாதிரியார் காப்பாற்றப்பட்டாரா என்பது மீதிக்கதை.

5. Working Through Pain

சென்ற கதையின்போது, காயம் பட்டுவிட்ட பேட்மேன், அந்தக் காயத்தின் வலியினூடே, தான் பெற்ற வலிகளை மறக்கவைக்கும் பயிற்சிகளை நினைவுகூர்வதே இந்தக் கதை. இந்த ஃப்ளாஷ்பேக் முழுவதும் இந்தியாவில் நடப்பது, இக்கதையின் ஸ்பெஷாலிடி. கஸாண்ட்ரா என்ற ஒரு பெண், தனது சமூகத்தை வெறுத்து ஒதுக்கி, தனியே வாழ்ந்து வருபவள். அவள் ப்ரூஸ் வேய்னுக்கு, வலியைப் பொறுக்கும் அத்தனை முறைகளையும் கற்றுத் தருகிறாள். அப்பொழுது அவளைத் தாக்க வரும் ஒரு கும்பலை அடி துவம்சம் செய்து அவளைக் காக்கிறார் வேய்ன். அவரது பயிற்சி முழுமையடந்துவிட்டதாகக் கூறி அவரை அங்கிருந்து போகச்சொல்லிவிடுகிறாள் கஸாண்ட்ரா. அதே நேரத்தில், நிகழ்காலத்தில், ஒரு சாக்கடைக்குழியில் கிடக்கும் பேட்மேனை, நமது அன்புக்குரிய ஆல்ஃப்ரெட் காப்பாற்றுகிறார். அங்கு கிடக்கும் ஒரு மூட்டை நிறைய துப்பாக்கிகளைப் பார்த்துக்கொண்டே பேட்மேன் பன்ச் டயலாக் அடிப்பதோடு இக்கதை முடிகிறது.

6. DeadShot

மிகத்தொலைதூரத்தில் இருந்து, நகர மேயரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான் ஒருவன். துல்லியமாகக் குறி வைக்கும் அவன், ரஷ்யனின் ஒரு அஸைன்மெண்ட்டை ஏற்று, கோர்டானைக் கொல்லப்போகிறான் என்பது பேட்மேனுக்குத் தெரிகிறது. கதை எண் 3ல் தான் சேகரித்த தடயங்களை வைத்து பேட்மேன் இதைக் கண்டுபிடிக்கிறார்.

கோர்டானை நிழல் போலத் தொடர்கிறார் பேட்மேன். அதே சமயம், டெட்ஷாட் என்று அழைக்கப்படும் அந்த நபர், தனது துப்பாக்கியை அசெம்பிள் செய்துகொண்டிருக்கிறான். கோர்டானின் காரைக் கச்சிதமாகக் குறியும் வைத்துவிடுகிறான்.

அவன் எங்கிருந்து குறி பார்க்கிறான் என்பதைக் கடைசி நொடியில் கண்டுபிடிக்கிறார் பேட்மேன். அதற்குள் துப்பாக்கியின் ட்ரிக்கர் அழுத்தப்பட்டு விடுகிறது.

இதன்பின் என்னவாயிற்று என்பது மீதிக்கதை.

இக்கதையோடு ஆறு கதைகளும் முடிகின்றன.

ஒவ்வொரு கதையும் மற்ற கதைகளிலிருந்து வெகுவாக மாறுபட்டிருக்கிறது. ஒவ்வொரு கதையிலும் பேட்மேனின் ஒவ்வொரு குணாதிசயம் வெளிப்படுகிறது. அதே சமயம், முற்றிலும் ஒரு சூப்பர் ஹீரோவாக பேட்மேனை சித்தரிக்காமல், அவருக்குள்ளிருக்கும் மனித நேயத்தையும், வலியையும், வேதனையையும் இக்கதைகள் நமக்குப் புரிய வைக்கின்றன.

பிரதிபலன் இல்லாமல் கோதம் நகரைக் காவல் புரியும் அந்தக் கருப்பு வீரனின் கதையைக் கம்பீரமாகச் சொல்லும் இந்தத் தொகுப்பு, பேட்மேன் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இப்படத்தை, டார்க் நைட் வெளிவந்தவுடன் பார்த்தேன். அப்போதிலிருந்து எழுதவேண்டும் என்று முயன்றது இப்பொழுதுதான் சாத்தியமாகியுள்ளது.

பேட்மேன் – கோதம் நைட்டின் ட்ரைலர் இங்கே.

  Comments

22 Comments

  1. மீ தி பர்ஸ்ட். Oh No, மீ தி தேர்ட் ஒன்லி.

    Reply
  2. Have I got a story for யு

    கருந்தேள், இந்த கதை பேட் மேன் 1983 அன்னுவலில் வந்த கதையாகும். இது கூட தமிழில் திகில் காமிக்ஸில் வந்துள்ளது. தலையில்லா ராஜா புத்தகத்தில் “யாருமறியா பேட்மேன்” என்ற பெயரில் வந்தது.

    Reply
  3. என்னய்யா கொடுமை… இங்க என்ன ரன்னிஸ் ரேசா நடக்குது… ஆளுக்காளு நான்தான் பர்ஸ்ட்டு, செக்ண்ட்டுன்னுட்டு… அப்ப நான்தான் முணாவது…

    இத நான் ராணி காமிஸ்ல வரும்போது படிச்சுக்கறேன்… :))

    Reply
  4. பேட் மேன் பற்றிய ஒரு பதிவு நெடுநாட்களாக முக்கால்வாசி தயார் ஆனா நிலையில் என்னுடைய ட்ராப்டில் உள்ளது. Thanks to your post, அதனை தூடி தட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.

    Reply
  5. //நான் ராணி காமிஸ்ல வரும்போது படிச்சுக்கறேன்.//

    நாஞ்சிலார் அயலூரில் இருப்பதால் மேட்டர் தெரியாதோ? ராணி காமிக்ஸ் ஊத்தி மூடி ரொம்ப வருஷமாச்சு.

    Reply
  6. @ இராமசாமி கண்ணன் – வாவ் !! விஸ்வாவ நீங்க முந்திக்கினீங்க . . உங்களுக்குப் பின்னூட்டம் கொண்டான் அப்படிங்குற பட்டம் நம்ம பதிவர் சங்கம் சார்புல கொடுக்கப்படுது 🙂 (என்னாது பதிவர் சங்கமா . அடிங் – அப்புடீன்னு எனக்கு யாராவது மிரட்டல் மெயில் அனுப்பிராதீங்க)

    @ விஸ்வா – ஓ இந்த ந்யூஸ் எனக்கு சுத்தமா தெரியாது .. அந்தக் கதை இந்த தொகுப்புக்காக புதுசா எழுதுனதுன்னு நினைச்சிகினு இருந்துட்டேன் . . தகவலுக்கு மிக்க நன்றி . .

    பேட்மேன் பற்றிய உங்கள் பதிவு, ஜோஸப் ச்சேண்ட்ரா பத்தி எஸ் ஏ சி எழுதுற மாதிரி . . சீக்கிரம் போடுங்ணா . . . 🙂

    @ நாஞ்சில் பிரதாப் – அடப்பாவி !! பேட்மேனப் புடிச்சி இப்புடி ஓட்டிப்புட்டியளே . . இங்க ரன்னிங் ரேஸ் நடக்கல. . நாங்கெல்லாம் இப்புடி பின்னூட்டப்போட்டி வெச்சி அதுல ஜெயிச்சவங்களுக்கு பட்டம் குடுத்து வெளாடிக்குவோம்.. ஆமா !! 🙂

    Reply
  7. //அந்தக் கதை இந்த தொகுப்புக்காக புதுசா எழுதுனதுன்னு நினைச்சிகினு இருந்துட்டேன் //

    கதையின் போக்கை பார்த்தால் லேசாக மாடிபை செய்யப்பட்ட பழைய கதையே என்று தோன்றுகிறது.

    Reply
  8. பல பேட்மேன் படங்கள் வந்தாலும் Batman Begins மற்றும் The Dark Knight படங்கள் தான் பேட்மேன் காமிக்ஸ் கதைகளை கண் முன் காட்டியது போல் இருந்தது. இந்த அனிமேசன் படங்களை டவுன்லோட் பண்ணியதொடு சரி பார்க்கவில்லை. பாத்துர வேண்டியது தான்.

    Reply
  9. // அவருக்குள்ளிருக்கும் மனித நேயத்தையும், வலியையும், வேதனையையும் இக்கதைகள் நமக்குப் புரிய வைக்கின்றன //

    இதனால் தான் Batman Begins மற்றும் The Dark Knight எனக்கு மிகவும் பிடித்தது.

    Reply
  10. இந்த தகவல்கள் எல்லாம் முற்றிலும் புதுசு எனக்கு தல. நல்லாதான் கீது.

    Reply
  11. boss… this is a really good post!!
    .me also ranicomics fan those days.i dont intrest watch superheros movies in animation movies.but after i read this blog watchd This animation movie..its realyy intresting..after long time, make me feel my comic wrold those days..hehe..thanks for sharing this post..keep it up..!!

    Reply
  12. பேட்மேன்.எனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோக்கள்ள ஒருத்தர்.அவரோட பெஸ்ட்,காமிக்ஸ்ல Killing joke உம்,படத்துல Dark knight உம் தான்.

    ஆனா இன்னும் சில நல்ல காமிக்ஸ் இருக்குது. Tower of babel,Year One,Batman:Dark knight returns, JLA: New World Order……

    இதுல எல்லாம் பேட்மேன் சும்மா பூந்து அடிப்பாரு.

    ஹீ ஹீ…. இப்போதான் கொஞ்ச நாளைக்கு முன்ன justice league animation புல்லா(12 gb) டவுன்லோட் பண்ணினேன்.இப்போ இதுவும் டவுன்லோட் போட்டாச்சு.

    Reply
  13. thanks for this post, will watch it this weekend. i didn’t knew about this DVD earlier.

    Reply
  14. @ விஸ்வா – அப்படித்தான் இருக்கும் . . பழைய கதைய நெட்ல தேடிப் பாக்குறேன் . .

    @ லக்கி – கண்டிப்பா . . பேட்மேன் படங்கள நாம பாக்கும்போது, மனசுல ஏதோ ஒண்ணு மூவ் ஆகுறது கண்டிப்பா நடக்கும். அந்த உணர்வு தான் நம்மை பேட்மேனுடன் பிணைக்கிறதுன்னு நினைக்குறேன்

    @ Romeo – நன்றி . . உங்களுக்கு அனிமேஷன் புடிக்கும்னா இந்தப் படத்தைப் பார்க்கலாம் . .

    @ bharathy – மிக்க நன்றி . . காமிக்ஸ்களை உட்டுராதீங்க . . அது ஒரு புது உலகத்த நமக்குக் காமிக்கும் . . உங்களுக்குப் படம் புடிச்சது சந்தோஷம் . . 🙂

    @ Illuminati – அந்த நல்ல காமிக்ஸ் லிஸ்டுல Long Halloween இல்லாமயா . . ? அத நானு லாண்ட்மார்க்ல போயி 800 ரூவா குடுத்து வாங்குனேன் . . எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு பேட்மேன் காமிக் அது. . அதப் பத்தி என்னோட ஆங்கில ப்ளாக்ல பல காலம் முன்னாடி ஒரு போஸ்ட் போட்ருக்கேன் . . அதே மாதிரி, அதே சீரீஸ்ல வந்த Dark Victoryயும் எனக்குப் புடிக்கும். அதையும் அங்கதான் வாங்குனேன் . . இன்னமும் நெறைய வாங்கணும்னு நினைச்சிக்கினு இருக்கேன் . . பார்ப்போம்..

    @ Kamal – நன்றி . . உங்களுக்கு இந்தப்படம் கட்டாயம் புடிச்சே ஆகணும் . . 🙂 பார்த்துட்டு சொல்லுங்க . .

    Reply
  15. நண்பரே,

    அட்டகாசமான பதிவு.

    வவ்வால் மாமாவிடம் சிறப்பு சக்திகள் ஏதுமில்லை இருப்பினும் தான் உருவாக்கும் கத்தி கபடாக்களையும் அட்டகாசமான குங்ஃபூ குத்துக்களையும் மட்டுமே வைத்து வவ்வால் மாமா புகுந்து கலந்து கட்டி அடிப்பார். அதேபோல் சென்டிமென்ட் என்று வந்து விட்டால் வவ்வால் மாமாவை அடிக்கவே முடியாது. தன் எதிரிகளையும்கூட கொஞ்சம் மனித நேயத்துடனேயே கவனிப்பார். வவ்வால் மாமாதான் என் மனதிற்குப் பிடித்த முகமூடி நாயகன்.

    பதிவில் ஒவ்வொரு அத்தியாயத்தின் கதைச் சுருக்கமும் நச். கூடவே நீங்கள் வழங்கியிருக்கும் படங்கள் மூலம். வவ்வால் மாமாவினை வித்தியாசமாக கலைஞர்கள் உருவாக்கியிருப்பதை கண்டு கொள்ள முடிகிறது.

    வவ்வால் மாமாவை ரசிக்க, நேசிக்க மட்டுமல்ல திட்டவும் முடியும் விரும்பினால் பின்வரும் கதையைப் படிக்கவும். Batman and Dracula; Red Drain

    ஐ லவ் சுறா கிளப்- ஆயுள் மெம்பர்

    Reply
  16. சூப்பர்.

    இப்போதுதான் பார்க்கிறேன், என்னுடைய டிவிடி கலெக்ஷனில் இதுவும்கூட இருக்கிறது. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் அளித்த அன்பு பரிசு அது. எப்போதோ ஓரிரு வருடங்களுக்கு முன்பு வாங்கியது. இன்றைக்கு நைட் பார்த்துவிடவேண்டியதுதான் – மறுபடியும்.

    ஐ லவ் சுறா கிளப்- ஆயுள் மெம்பர் + ஐ லவ் காவல்காரன் – க்ளப் தலைவர்.

    Reply
  17. @ காதலரே – உங்களுக்கும் நம்ம வவ்வால் மாமா பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி . . 🙂 எனது மிகப்பிடித்த நாயகனும் வவ்வால் மாமாவே தான் !! அவரது குரங்குப்பூ குத்துகளை மறக்கவே முடியாது . . ஸ்டார் வேர்ல்டில் வந்த பேட்மேன் சீரீஸில், ’கும்’, ‘பளார்’, டமால்’ என்றெல்லாம் அவரது கும்மாங்குத்துக்களுக்கு எழுத்து வரும் . . பார்க்கவே சூப்பராக இருக்கும் 🙂 உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே . .

    @ விஸ்வா – அடடே !! ஆனா, நீங்க அடிக்கடி பேரே சொல்லாம கிசுகிசு பாணில இயக்குநர்களைப் பற்றி சொல்வது தான் மண்டையைப் பிய்க்க வைக்குது . . அது யாருன்னும் சொல்லிடுங்க பாஸ் . . 🙂

    இன்னாது ஐ லவ் காவல்காரன் க்ளப் தலைவரா? எஸ் ஏ சி பின்னியெடுத்துரப்போறாரு . . எனிவே, மீ இன் த க்ளப் ஆல்ஸோ !! 🙂 காதலரும் தான். . 🙂

    Reply

Join the conversation