Before Sunset (2004) – English
நமது வாழ்வில் பத்து ஆண்டுகளுக்கு முன்: அப்பொழுது நாம் எந்தக் கவலையும் இல்லாத, வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அள்ளிப் பருகக்கூடிய ஒரு உற்சாகமான நிலையில் இருந்திருப்போம். அந்தச் சமயத்தில், திடீரென்று ஒரு பெண்ணுடன் ஒரு முழு நாள் செலவிடக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் எப்படி இருக்கும்? இருவரும், மெதுவே ஒருவர் மேல் ஒருவர் ஈர்க்கப்படும் அந்தக் கணங்கள் . . . இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் காதல் வயப்படும் அந்த நிமிடங்கள். . சட்டென்று மின்சாரம் பாய்வதைப் போல் உணர்ந்த அந்த நொடிகள் . . சுருக்கமாய்ச் சொல்லப்போனால், பிஃபோர் சன்ரைஸ் படத்தைப் போல் இருக்கும்.
பத்து வருடங்கள் முன், பிஃபோர் சன்ரைஸ் படத்தில் நடந்த கதையின் தொடர்ச்சியே இந்த ‘பிஃபோர் சன்செட்’. ஆனால், சன்ரைஸ் படத்தைப் பற்றி எழுதாமல், அதன் இரண்டாம் பாகத்தைப் பற்றி எழுதுவதன் நோக்கம்? முதலில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, பின் முதல் பாகத்தைப் பார்த்தால், இரு படங்களின் தாக்கத்தையும் முழுதாய் உணரலாம். இப்படத்தின் ஆரம்ப நிமிடங்களில் நாம் உணரும் ஒரு அற்புதமான மனநிலை, முதல் படத்தைப் பார்க்காமல் இருந்தால் தான் கிடைக்கும்.
ஜெஸ்ஸி (ஈதன் ஹாக்) ஒரு எழுத்தாளன். பத்து வருடங்கள் முன்னால், வியன்னாவில் அவன் பார்த்த ஒரு பெண்ணைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அப்புத்தகத்தைப் பாரிஸில் பிரமோட் செய்வதற்காக, ஒரு நூலகத்தில் ஜெஸ்ஸி பேசுகிறான். அப்பொழுது, அங்கு வந்திருக்கும் பத்திரிக்கை நிருபர்கள், அப்புத்தகத்தைப் பற்றிப் பல கேள்விகளை எழுப்புகின்றனர். ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகப் பதிலளிக்கிறான் ஜெஸ்ஸி. அப்பொழுது, சாதாரணமாக நூலகத்தின் ஒரு பக்கத்தைப் பார்வையால் துழாவுகையில், ஒரு பெண், இவனையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அதிர்ச்சிக்குள்ளாகிறான். அதே பெண் தான், பத்து வருடங்கள் முன் அவன் சந்தித்த பெண்! பல வருடங்களாக இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அவசர அவசரமாகத் தனது பேச்சை முடித்துக் கொள்ளும் ஜெஸ்ஸி, தனக்கு இன்னமும் ஃப்ளைட்டைப் பிடிக்க மிகக் குறைந்த நேரமே இருக்கும்போதிலும், அந்தப் பெண் செலினிடம் (ஜூலி டெல்ஃபி) சென்று, தன்னுடன் காஃபி அருந்தும்படி அழைக்கிறான்.
பல வருடங்கள் கழித்து ஜெஸ்ஸியைப் பார்த்த மகிழ்ச்சி செலினுக்கு. அவளும் சம்மதிக்கிறாள். இருவரும் மெல்ல செலினுக்குப் பிடித்த காஃபி ஷாப்பை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றனர். அந்தக் கடை, சில தெருக்கள் தள்ளி இருக்கிறது. மெதுவாக இருவரும் பேசத் தொடங்குகின்றனர். பத்து வருடங்கள் முன், தாங்கள் பிரிந்த போது, ஆறு மாதம் கழித்து வியன்னாவில் சந்திப்பதாகப் போட்டிருந்த திட்டத்தைப் பற்றிப் பேச்சு திரும்புகிறது. தனது பாட்டி திடீரென இறந்து விட்டதால், தன்னால் வர முடியவில்லை என்று சொல்லும் செலின், ஜெஸ்ஸி வியன்னாவுக்கு வந்தானா என்று கேட்கிறாள். தானும் வரவில்லை என்று ஜெஸ்ஸி சொல்கிறான். தனக்கு ஒரு உறுதியான காரணம் இருந்தது என்றும், ஆனால், ஜெஸ்ஸி வராததற்கு ஏதேனும் காரணம் இருந்ததா என்று கேகும் செலின், அவன் வர மறந்து விட்டான் என்று எண்ணிக் கொள்கிறாள். ஆனால், ஜெஸ்ஸியின் கண்கள் அவனைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அவன் வியன்னாவுக்கு வந்து, செலினுக்காகக் காத்திருந்து, பின் திரும்பிவிட்டதை அறிந்து கொள்ளும் செலினால், கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஜெஸ்ஸி அவளை சமாதானம் செய்கிறான்.
பேச்சு, மெதுவாக அவர்களது வாழ்க்கையைப் பற்றித் திரும்புகிறது. ஜெஸ்ஸிக்குத் திருமணம் நடந்து, ஒரு பையன் இருப்பதை செலின் அறிந்து கொள்கிறாள். செலினுக்கும் ஒரு காதலன் இருக்கிறான். ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளத் தொடங்குகின்றனர். செலின் தனது உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் எண்ணங்களை மெல்ல வெளியிடத் தொடங்குகிறாள். தங்களது முதல் சந்திப்பிற்குப் பிறகு, தன்னால் எந்த ஆணுடனும் இயல்பாகப் பழக முடிவதில்லை என்றும், எந்த ஆணுடன் தான் இருக்கும்போதும், ஏதோ ஒரு தனிமையைத் தன்னைச் சுற்றி உணர்வதாகவும் சொல்லும் செலின், தன்னுடன் எவரும் இல்லாமல் இருக்கும்போது மட்டுமே இந்தத் தனிமை எண்ணத்திலிருந்து விடுபடுவதாகவும் சொல்கிறாள். அதனால் தான் அவளது காதலன் பல நாடுகளுக்கிடையில் சுற்றினாலும் அவள் அதனால் பாதிக்கப்படுவதில்லை என்று சொல்கிறாள்.
செலினின் மனதில், அவள் ஜெஸ்ஸியுடன் சேராமல், அவன் இல்லாமல் போன துயரம் ததும்பி அவள் கண்களினூடே வழிகிறது. இருவருக்குமே, அவர்களது முதல் சந்திப்பிற்குப் பின், தங்களது வாழ்வில் சந்தோஷமான தருணங்களே இல்லாமல் போன உண்மை தெரிந்திருக்கிறது. ஏதோ ஒரு வகையில், கடந்த பத்து வருடங்களில், அவர்களது வாழ்வில் நடந்த சம்பவங்கள் அனைத்தும், ஒருவருக்கு ஒருவரை நினைவுபடுத்திக் கொண்டே இருந்திருக்கின்றன.
இருவரும் காஃபி அருந்துகின்றனர். அங்கிருந்து, செலினை அவளது அபார்ட்மெண்ட்டில் விட்டுவிட்டு வருவதற்காக, ஜெஸ்ஸி அவளுடன் செல்கிறான். காரில், செல்லும் வழியில், ஜெஸ்ஸியின் நெருக்கத்தை உணரும் செலின், அழத்துவங்குகிறாள். அவர்களது முதல் சந்திப்பின் ஒவ்வொரு நொடியையும் நினைவுகூரும் செலின், அவளது மனதில் இருப்பவற்றையெல்லாம் அப்படியே தனது கண்ணீரின் வழியே கொட்டத் தொடங்குகிறாள். தனது மடியில் முகம் புதைத்து அழும் செலினின் தலையை ஆதுரத்துடன் வருடிக் கொடுக்க, ஜெஸ்ஸியின் கரம் எழுகிறது. ஆனால், அவளது தலையை நெருங்கும் கரத்தை, அவன் பின்னிழுத்துக் கொள்கிறான். அதன்பின், தனது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை, ஜெஸ்ஸி சொல்லத் துவங்குகிறான். தனது திருமணம், மனைவிக்கும் இவனுக்கும் இடையே எப்போதும் எழும் சண்டைகள், தனது மகனுக்காக மட்டுமே இந்தத் திருமண வாழ்க்கையை இன்னமும் முறிக்காமல் இருப்பது ஆகிய எல்லாவற்றையும் செலினிடம் மனம் திறக்கிறான்.
தங்களாலேயே, தங்கள் மனதில் எழும்பியுள்ள வெறுமையை இருவரும் உணர்கிறார்கள். அந்த வெறுமையைப் போக்கிக்கொள்ள, அவர்களால் மட்டுமே முடியும். ஆனால், அது இனிமேல் சாத்தியமே இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இனிமேல் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பது தெரிந்திருந்தாலும், இன்னுமிருக்கும் மிகக் குறைந்த நேரத்தில், இருவருமே ஒருவரையொருவர் பிரியக் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.
ஜெஸ்ஸி, செலினின் அபார்ட்மெண்டுக்குள் வருகிறான். செலின், கிதார் பயின்று கொண்டிருப்பதால், அவளை ஒரு பாடல் பாடச் சொல்கிறான். தயக்கமே இல்லாமல், அவர்களது முதல் சந்திப்பினைப் பற்றி செலின் எழுதிய பாடல் ஒன்றை அவள் பாடத் துவங்குகிறாள்.
மிக உருக்கமான வரிகளை, மிகவும் சந்தோஷமான ஒரு மெட்டில் அவள் பாடப்பாட, நம் மனதில் ஒரு அற்புதமான உணர்வு எழும்புகிறது. அந்தப் பாடலை இதோ இங்கு காணுங்கள்.
பாடல் முடிந்ததும், நினா சிமோனின் பாடல்களை ஜெஸ்ஸி அங்கிருக்கும் சிடி ப்ளேயரில் போடுகிறான். செலின், மிக நளினமாக, நினா சிமோனை நினைவுபடுத்தும் முறையில் ஆடுகிறாள். ஜெஸ்ஸியின் ஃப்ளைட்டின் நேரம் நெருங்கி விடுகிறது.
இதன் பின் என்ன நடந்தது? காதலர்கள் இருவரும் இணைந்தார்களா? படத்தில் காணுங்கள்.
நினைத்துப் பாருங்கள்: பல வருடங்கள் முன் நாம் காதலித்த ஒரு ஆணோ பெண்ணோ, திடீரென நம் முன் தோன்றினால், எப்படி இருக்கும்? அவர்களுடன் வாழவும் முடியாது; ஆனால், அவர்களைப் பிரியவும் இயலாது. இந்த இருதலைக்கொள்ளி சூழ்நிலையில், நாம் எப்படி நடந்து கொள்வோம்? இதை, அருமையான முறையில் படமாக்கியிருக்கிறார் ரிச்சர்ட் லிங்க்லேட்டர். பல வருடங்களாக நாம் மறக்க நினைக்கும் சில நினைவுகளை, இப்படம் தூண்டிவிட்டு எழுப்புகிறது. ஆனால், அந்த நினைவுகள், நம்மை வருந்த வைப்பதற்குப் பதில், ஏதோ ஒரு வகையில் சந்தோஷப்பட வைக்கின்றன. ஒரு அமைதியான மாலை வேளையில், ரம்மியமான மழை நம் மனதில் என்ன உணர்வை ஏற்படுத்துமோ, அதை இப்படம் ஏற்படுத்துகிறது.
இப்படத்தின் திரைக்கதை, ஈதன் ஹாக் மற்றும் ஜூலி டெல்ஃபி இருவராலும் கட்டமைக்கப்பட்டது. முன்பே எழுதப்படாமல், கேமரா முன் நடிக்கும் அந்த நிமிடத்தில், இயற்கையாக அவர்கள் பேசிக்கொள்வதிலேயே இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டது. அதனாலேயே மிகவும் இயற்கையான வசனங்கள் இதன் ஸ்பெஷாலிட்டி. இப்படத்தில் ஈதன் ஹாக்கின் கேரக்டரான ஜெஸ்ஸி, தனது குழந்தையின் காரணத்தாலேயே தன்னுடைய திருமணத்தை முறிக்காமல் தொடர்வதாகக் காட்டப்பட்டிருக்கும். இப்படம் வெளியானவுடனே, ஈதன் ஹாக், தனது மனைவியான உமா தர்மேனை விவாகரத்து செய்தார். திருமணத்துக்கு முன்னரே உருவான குழந்தையின் காரணத்தாலேயே தான் இருவரும் மணந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், பிஃபோர் சன்ரைஸ் படத்துக்கும் இப்படத்தும், சரியாக பத்து ஆண்டுகள் இடைவெளி.
மொத்தத்தில், வாழ்க்கையில் இழந்த தருணங்களின் வலியை நினைவுபடுத்தும் ஒரு படமே இந்த ‘பிஃபோர் சன்செட்’. ஆனால், முற்றிலும் சந்தோஷமான ஒரு முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. எனக்கு மிகப்பிடித்த காதல் கதைகளில் ஒன்றான இப்படம், நமது மனதில் ஏற்படுத்தும் தாக்கம், விவரிக்க இயலாதது.
பாருங்கள்.
பிஃபோர் சன்செட்டின் டிரைலர் இங்கே.
டவுன்லோட் போட்டாச்சு…|:-)
மீ த பர்ஸ்ட்?
நான் இல்லையா? ஓகே…
ஆன் தி ஸ்பாட் திரைக்கதை எல்லாம் எப்படி சாத்தியமாகுது?
@ பிரதீப் பாண்டியன் – சூப்பர் ! 🙂
@ பப்பு – ஹாலிவுட்ல, இந்த ‘ஆன தி ஸ்பாட் ஸ்க்ரீன்ப்ளே’ சாத்தியம். டைரக்டர், நடிகர்கள் எல்லாரும் சேர்ந்து, ஒரு ஷாட்ல என்ன கன்வே பண்ணனும், அதுல எக்ஸ்பிரஷன் எப்புடி இருக்கணும்னு நல்லா ரிஹர்ஸ் பண்ணி, ரெடி பண்ணிக்குவாங்க . .அப்பறம், அதா தத்ரூபமா பேசி நடிச்சிக்குவாங்க . . தமிழ்ல இதுக்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா, நம்ம பி சி ஸ்ரீராம் எடுத்த ‘மீரா’ படத்த சொல்லலாம். இதுல டைலாக் எழுதவே இல்ல. ஆன தி ஸ்பாட் டெலிவரி தான் . .
படத்தில் டயலாக்குகள் மிக அருமையாய், இயல்பாய் அமைந்திருக்கும் இப்படத்தின் முதல் சில நிமிசங்களை ஒரு ஹிந்தி சினிமாவில் சாயிப் அலிகான் நடித்திருப்பார்..
அவர்கள் நடந்து போய் கொண்டே பேசிக் கொள்ளும் சிங்கிள் ஷாட் கான்செப்ட் மிக இயல்பு..
வாங்க சங்கர். . ஆமாம் . . அந்த ஹிந்திப்படம், ‘ஹம் தும்’ . .இந்தப் படத்துல இருந்து சில சீன்கள அப்பட்டமா சுட்டுருப்பாங்க . . 🙂 எனக்கும் அந்த சிங்கிள் ஷாட்டுகள் ரொம்ப புடிச்சது . . பயங்கர நேச்சுரலா இருக்கும் . .:-)
டெம்ப்ளேட் மாற்றியதற்கு மிக்க நன்றி கருந்தேள் ஸார்..!
உண்மைத்தமிழன் – நீங்களும், நம்ம நாஞ்சில் சம்பத்தும் சொன்னதுக்காகத் தான் மாத்தினேன் . .உங்க மெயில் ஐடி தேடிப்பார்த்தேன் . .ஆனால் கிடைக்கல. . பின்னூட்டம் மூலம் இத சொன்னா நல்லா இருக்காதுன்னுதான் சொல்லல. . இனிமே அடிக்கடி வருவீங்க தானே . . 🙂
தல நான் இதன் முதல் பாகத்தை எழுதிவிட்டு, இரண்டாம் பாகத்திற்கு மூவரை எழுதசொல்லி கேட்டிருந்தேன். நீங்க அருமையா எழுதியிருக்கிங்க தல, தேங்க்ஸ்
http://eniyoruvithiseivom.blogspot.com/2009/10/blog-post_30.html
நல்ல படத்துக்கு நல்ல அழகான எழுதியிருக்கீங்க… வாழ்த்துக்கள்…
நண்பா என்ன அருமையான படம்.
ஈதன் ஹாக்கும் ஜூலியும் பிரமாதப்படுத்தியிருப்பர்.இரண்டு பாகமுமே மிகவும் அருமையாயிருக்கும்.காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு இந்த படம் அவர்களின் காதலித்த தருணத்தை நினைவூட்டும்.கடைசி கிடார் வாசித்து பாடும் பாடலும்,காரில் வருகையில் இவன் சொல்ல கேட்காமல் அழுது ஆத்திரப்பட்டு,இறங்கப்பார்க்கும் காட்சியும்,அன்றொரு நாள் நாம் உறவே கொள்ளவில்லை என அடித்து சொல்லும் நெஞ்சழுத்தமும் அருமை.
===========
பிஃபோர் சன்ரைஸ் எழுதிவிட்டு இதை எழுதியிருக்கலாமே?
அதையும் விரைவில் எழுதுங்கள்.
நல்ல படஙகளை தேடிதேடி பார்த்து அறிமுகம் செய்யும் பாங்கு அருமை.
ஃபார்மாலிட்டி டன்
@ முரளிகுமார் – உங்க போஸ்ட்ட படிச்சேன் . .ரொம்ப புடிச்சது . . actuala மொதல்ல நானு அத படிக்கல. . . நீங்க இப்ப சொன்னப்புறம் தான் படிச்சேன் . .நல்லா இருந்திச்சு . . 🙂
@ அண்ணாமலையான் – மிக்க நன்றி . .
@ கார்த்திகேயன் – ஆஹா . .நீங்க சொன்ன அத்தனை கருத்துக்களும் இன்னொரு முறை அந்த நினைவுகளை மனதில் எழுப்புகின்றன. .
பிஃபோர் சன்ரைஸ் விரைவில் எழுதப்படும் . .நன்றி நண்பா . .
நிறைய பேரோட வாழ்க்கை இப்படிதான் போகிறது… குழந்தைக்காக அவர்களது எதிர்காலத்திற்காக… நன்றாக பதிவுசெய்துள்ளீர், சிறப்பு 🙂
நண்பரே,
காதல் கதைகள் என்றவுடன் உங்கள் எழுத்துக்களில் அந்த வசீகரிக்கும் மந்திரம் எப்படித்தான் வந்து ஓட்டிக் கொள்கிறதோ. அருமையான கதை சொல்லல்.
சிறப்பான விமர்சனம். எங்கள் வாழ்க்கையைப் பொறுத்தவரை முன்னைய காதலர்களின் சந்திப்புக்கள் பெருமளவு பேசாமல் கடந்து செல்வதுடனேயே முடிந்து விடுகிறது என்று எண்ணுகிறேன். இது தவறாகவும் இருக்கலாம்.
மென்மையான உணர்வுகளை ஏற்படுத்தும் நல்ல விமர்சனம். பாத்துடுவோம்.
நல்ல விமர்சனம். நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.
thanks for the movie… one of the fav movie all time
@ அசோக் – நீங்கள் சொல்வது சரி . .பல பேர், தங்களின் குழந்தைகளுக்காக தங்களது சந்தோஷங்களை மென்று விழுங்கிக்கொண்டு வாழ்கின்றனர். வாழ்வின் கசப்பான உண்மை . .
@ காதலரே – அந்த மந்திரத்தின் காரணம், நானே ஒரு காதலனாக இருப்பதாகக் கூட இருக்கலாம் . .:-) பெரும்பாலான முன்னைய காதலர்களின் சந்திப்புகள்,மௌனத்தில் கடந்து செல்கின்றன. .ஆனால், என்னைப் பொறுத்த வரையில், உணர்ஹ்ச்சிகள் பொங்கி வரும் சில நேரங்களில், மௌனம் போதுவதில்லை . .அப்போது இப்படத்தில் நடப்பது போன்ற நிகழ்வுகளே நடக்கின்றன. .
@ கைலாஷ் – பார்த்தவுடன், மிகவும் அன்பாகவும் அழகாகவும் உணர்வீர்கள் . .கட்டாயம் பாருங்கள். . .
@ இராமசாமி – மிக்க நன்றி . .அடிக்கடி வாருங்கள் . .
@ அஷ்வின் – மிக்க நன்றி . .எனக்கும் மிகப்பிடித்த படம் இது 🙂
இப்போது தான் கேள்வி படுகிறேன் இந்த படம் பற்றி. வமர்சனம் படிக்கும்போதே ஏதேதோ நினைவுகள் எழுகின்றன. கட்டாயம் / விரைவில் பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்டில் சேர்த்துவிட்டேன். இதுபோன்ற காதல் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதை நீங்கள் விளக்கிய விதம் மிகவும் அரமை நண்பரே..!
@ அறிவு GV – இது, எனக்குப் புடிச்ச காதல் கதைகள்ல ஒண்ணு . . ப்ராக்டிகல் காதல கரெக்டா சொல்லிருப்பாங்க . . இத நீங்க கட்டாயம் பாருங்க. . பார்த்துபுட்டு சொல்லுங்க. .
ஒரு சின்ன time frame ல out and out conversation movie வரிசைல இந்த படமும் ஒன்று. இந்த வரிசைல Phone Booth , The Man from Earth போன்ற படங்கள் … இதுல எனக்கு மிகவும் பிடித்த படம் The Man from Earth. இந்த படம் பாத்திருதிங்கன்னா எப்படி இருக்குன்னு சொல்லுங்க.