திரைப்படங்களைப் பேசும் புத்தகங்கள்

by Karundhel Rajesh October 19, 2016   Book Reviews

செப்டம்பர் 2016- திரைப்படங்கள் & புத்தகங்கள் சிறப்பிதழ்-படச்சுருளுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது.


திரைத்துறையில் கால்பதிக்கவேண்டும் என்று யாரேனும் நினைத்தாலும் சரி, அல்லது திரைத்துறை பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்/திரை ஆளுமைகளின் படைப்புகளின் வாயிலாக அவர்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் சொல்லிய அரசியலைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றாலும் சரி, உடனடியாக நமக்கு உதவுபவை புத்தகங்களே. உலகின் அத்தனை மொழிகளிலும், உலகின் அத்தனை திரை ஆளுமைகளையும் பற்றிப் பல புத்தகங்கள் உண்டு. இவற்றில், என் பார்வையில், ஒருசில முக்கியமான புத்தகங்கள் பற்றிச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்தப் புத்தகங்கள் அவசியம் படிப்பவர்களுக்குப் பல தகவல்கள் சொல்லக்கூடியவையே.

முதலில், தமிழிலிருந்தே துவங்கலாம். தமிழ் சினிமா பற்றி இப்போது இருக்கும் இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தால், அதற்குத் தேவையான புத்தகம் என்ன?

தமிழ் சினிமா வரலாறு பற்றிப் பல புத்தகங்கள் உண்டு. ஆனால் அவைகளில் கிட்டத்தட்ட எல்லாமே, தமிழ் சினிமாவை ஆச்சரியமாகப் பார்க்கும் ஒரு எழுத்தாளனின் பார்வையிலிருந்தே எழுதப்பட்டவை. இந்தப் புத்தகங்களில் இருந்து பல தகவல்கள் தெரிந்துகொள்ளமுடியும் என்றாலும், அவைகளில் எல்லாமே தமிழ் சினிமாவைப் புகழும் புத்தகங்கள். ஒரு தெளிவான விமர்சனப் பார்வை அவற்றில் இருக்காது. தியடோர் பாஸ்கரன் இதில் விதிவிலக்கு. இவரது புத்தகங்கள் அனைத்துமே தெளிவான விமர்சனப் பார்வையை முன்வைக்கும் தன்மையுடையவை. எனவே, தியடோர் பாஸ்கரன் எழுதிய பாம்பின் கண், எம் தமிழர் செய்த படம், சித்திரம் பேசுதடி, சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே முதலிய புத்தகங்களை அவசியம் நாம் படிக்கலாம். இவைகளில் தமிழ் சினிமா பற்றிப் பல தகவல்களை நாம் அறிந்துகொள்ளமுடியும். அரிய தகவல்களைத் திரட்டிக் கொடுக்கும் புத்தகங்கள் இவை.

ஆனால் இவைகளுக்கும் மேலாக, ஒரே புத்தகத்தில் ஆரம்பம் முதல் 80கள் வரையிலான தமிழ் சினிமாவின் வளர்ச்சி பற்றிய ஒரு மிகவும் சுவாரஸ்யமான புத்தகம் உண்டு. அதுதான் ‘தமிழ் சினிமாவின் கதை’. எழுதியவர் அறந்தை நாராயணன். இது நியூ செஞ்சுரி புத்தக வெளியீடு. இதன் விலை ரூ.350\-. இந்தப் புத்தகத்தின் விசேடம் என்ன?

இதோ அறந்தையே பேசுகிறார்.

‘நான் ஆராய்ச்சியாளனல்ல; ஆனால் தமிழ் சினிமாவின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராயப்போகிற ஓராயிரம் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவப்போகிற, தமிழ் சினிமா குறித்த பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையானதும் முதலாவதுமான ஒரு நூலை நான் தமிழுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறேன் என்று கருதுகிறேன்.

பல்லாண்டுகாலம் ஜீவித்து வாழப்போகிற இந்தப் புத்தகத்தில் ’மயக்கும் மாயாலோகத்தில்’ வாழும் சமகால சினிமாக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் குறித்து எழுதும்போது, அந்த ‘மயக்கும் மாயாலோகத்தின்’ எந்தவிதக் கவர்ச்சிக்கும் மயங்கிவிடாமல், சமரசம் செய்துகொள்ளாமல், பாட்டாளிவர்க்க ஒழுக்க நெறியில் பிறழாது எழுதியிருக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன்’.

இதுதான் அறந்தை நாராயணனின் முன்னுரையில் ஒரு பகுதி. இதுதான் அவரது விசேடம். எந்தவித சமரசமும் இல்லாமல், கூரிய விமர்சனப் பார்வையில், கறாராக எழுதப்பட்டிருக்கும் புத்தகம் இது.

இந்தியாவுக்கு வந்த முதல் சினிமாப்படமான ‘யேசுவின் வாழ்க்கை’ (1896)ல் ஆரம்பித்து, அப்படத்தை சாமிக்கண்ணு வின்செண்ட் எப்படி ஊர் ஊராகப் போட்டுக்காட்டினார் என்பதில் இருந்து, ஊமைப்படங்கள், கிருஷ்ணசாமிப் பாவலர், நாடக சபாக்கள், அவற்றில் ஒன்றில் இருந்து ஆசிரியர் திட்டி அடித்தார் என்பதற்காக அங்கிருந்து ஓடிய சிறுவன் பிந்நாட்களில் சூப்பர்ஸ்டாராக வளர்ந்த கதை (பி.யூ.சின்னப்பா), சுதந்திர தாகத்தை நாடகங்களில் போற்றி வளர்த்த விஸ்வநாத தாஸ், டி.கே சகோதரர்கள், சங்கரதாஸ் சுவாமிகள், ’சினிமா ராணி’ டி.பி ராஜலட்சுமி, சுதந்திரப் போராட்டம் தமிழ் சினிமாவை பாதித்த கதை, சென்னையின் முதல் டாக்கி ஸ்டுடியோ (சவுண்ட் சிடி/சீனிவாச சினிடோன் – உருவாக்கியவர் ஏ.நாராயணன்) என்று போய், எம்.கே.தியாகராஜ பாகவதர், சின்னப்பா, கிட்டப்பா, சுந்தராம்பாள் என்று விவரித்து, எம்.ஜி.ஆர், அண்ணாதுரை, கலைவாணர், நடிகவேள், கருணாநிதி என்று விரிவாகப் பேசி, ரஜினி, கமல் காலகட்டம் வரை மொத்தம்750 பக்கங்களில் இவ்வளவு விரிவாகவும் சுவையாகவும் தமிழ் சினிமா பற்றிப் பேசும் ஒரு புத்தகத்தை இதுவரை நான் படித்ததில்லை. இடையிடையே பிரபலங்களைப் பற்றிய நக்கல் தெறிக்கும் வாசகங்களும் உண்டு. இங்கெல்லாம் கறாரான விமர்சகராக எப்படியெல்லாம் அறந்தை நாராயணன் அக்காலகட்டத்தில் கட்டுரைகள் எழுதிப் பிரபலங்களை நிலைகுலையவைத்திருப்பார் என்று நம்மால் அறியமுடிகிறது.

இந்தப் புத்தகம் தமிழ் சினிமா ஆர்வலர்களின் கையில் கட்டாயம் இருக்கவேண்டிய புத்தகம் என்பதில் சந்தேகமே இல்லை.

அடுத்து, உலகைக் கலக்கிய ஒரு புத்தகம் பற்றிப் பார்க்கலாம்.

ஐம்பதுகளில், அகிரா குரோஸவா போன்ற திரைப்பட மேதைகள் படங்கள் எடுக்கத்துவங்கியிருந்த காலம். ஃப்ரான்ஸ்வா ட்ரூஃபோ (François Truffaut) என்ற இருபத்தேழு வயது இளைஞன் எடுத்த ‘400 Blows’என்ற ஃப்ரெஞ்ச் திரைப்படம், குழந்தைகள் சிறுவயதில் சந்திக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றிய துல்லியமான பதிவாக உலகெங்கும் புகழ்பெற்றது. ஃட்ரூபோ ஒரு விமர்சகராக அவரது திரைவாழ்வைத் துவங்கியவர். ஆண்டோய்ன் டாய்னல் என்ற பனிரண்டு வயது சிறுவனைப் பற்றிய படம் அது. இப்படம் பலருக்கும் நினைவிருக்கக்கூடும்.

இப்படிப்பட்ட த்ரூஃபோ, அக்காலகட்டத்தின் மற்றொரு புகழ்பெற்ற இயக்குநராகிய ஹிட்ச்காக்கை விரிவாக ஒரு பேட்டி எடுத்தார். இந்தப் பேட்டிகள், புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டன. அந்தப் புத்தகம் தான் ‘Hitchcock by François Truffaut’.

ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ ஒரு மிகக்கறாரான திரைவிமர்சகர் என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். அவர் சார்ந்த Cahiers du Cinéma என்ற பத்திரிக்கையில் ஃப்ரெஞ்ச் நியூ வேவ் என்ற பதத்தையும் த்ரூஃபோவை அறிந்தவர்கள் நினைவுகூர்வார்கள். பழைய, க்ளாஸிக் கதைகளை அப்படியே திரைப்படமாக எடுப்பது என்ற முறையை அடியோடு ஒழித்ததுதான் ஃப்ரெஞ்ச் ந்யூ வேவ். அதில் முக்கியமானவர்கள் த்ரூஃபோ, கொதார் (Godard), க்ளாட் சாப்ரோல் Claude Chabrol  ஆகியோர். இவர்களின் ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் அனைவருமே விமர்சகர்களாக இருந்தவர்கள். இந்த சமயத்தில்தான் இவர்கள் மூலமும், இவர்கள் சார்ந்திருந்த பத்திரிக்கை மூலமும் (Cahiers du Cinema), உருவாக்கப்பட்ட சில கருதுகோள்களே நியூ வேவ் சினிமாவின் துவக்கம். இப்பத்திரிக்கையில் இவரும் பிறரும் எழுதிய சூடான விமர்சனங்கள் மிகப் புகழ்பெற்றவை.

ஃப்ரெஞ்ச் பழம் படங்களை விளாசித் தள்ளிய த்ரூஃபோ, எப்படி ஹாலிவுட்டைச் சேர்ந்த ஒரு மசாலா இயக்குநரை வானளாவப் புகழ்கிறார் என்ற சந்தேகம் பல அமெரிக்கப் பத்திரிக்கையாளர்களுக்கு இருந்தது. ஹிட்ச்காக்கின் ரியர் விண்டோ படத்துக்கு த்ரூஃபோ எழுதிய விமர்சனத்தைப் படித்த பத்திரிக்கையாளர்கள், ரியர் விண்டோவில் நியூ யார்க் நகரமே தவறாகக் காட்டப்பட்டுள்ளது என்று இவரை மடக்க எண்ணிக் கேள்வி கேட்டனர். இவர்களுக்கு த்ரூஃபோ சொன்ன பதில் உலகப்பிரசித்தம். “Rear Window is not about Greenwich Village,New York or anything. It is a film about cinema, and I do know cinema” என்பதே அந்தப் பதில்.

இந்தக் கேள்விபதில்களால் த்ரூஃபோ பாதிக்கப்பட்டார். ஒரு மகாகலைஞனை ஏன் பத்திரிக்கை உலகம் இப்படிச் சாதாரணமாக நினைக்கிறது என்பது அவருக்குள் எழுந்த கவலை. இதன் காரணமாக, தான் அறிந்த உண்மைகளை உலகுக்கு உரக்கச் சொல்லவேண்டியே த்ரூஃபோ எழுதிய புத்தகம் இது. 1962வில் ஹிட்ச்காக் அவரது புகழ்பெற்ற படமான The Birds படத்தின் எடிட்டிங்கை முடிக்கவிருந்த காலகட்டத்தில், மிக விரிவாக ஹிட்ச்காக்கோடு பேசி, அந்தப் பேச்சை ஒலிப்பதிவு செய்கிறார் த்ரூஃபோ. ஆனால் அந்த ஒலிப்பதிவை முழுதாக எழுதி முடிக்க அவரது டீமுக்கு நான்கு வருடங்கள் ஆகின்றன. இடையில் எப்போதெல்லாம் ஹிட்ச்காக்கை அவர் சந்திக்கிறாரோ, அப்போதெல்லாம் பல கேள்விகள் மேலும் மேலும் கேட்டுப் புத்தகத்தை மேம்படுத்துகிறார் த்ரூஃபோ.

அதன் பலனாக நம்மிடம் உள்ளதே இந்தப் புத்தகம். திரைப்படங்கள் குறித்து ஆழமான அறிவு கொண்டிருந்த இரண்டு மாபெரும் கலைஞர்கள் மனம்விட்டுப் பேசிக்கொள்வதை இந்தப் புத்தகம் போல வேறெந்தப் புத்தகமும் விளக்கிச் சொன்னதில்லை என்ற முறையில், இது ஒரு மிக முக்கியமான புத்தகம். இந்தப் புத்தகத்தை உள்ளது உள்ளபடி படித்தாலேயே, திரைக்கலையைப் பயிலும் நண்பர்களுக்கு அற்புதமான திரைஞானம் கிட்டும்.

ஹிட்ச்காக் மொத்தம் ஐம்பத்து மூன்று படங்கள் எடுத்திருக்கிறார். அந்த எல்லாப் படங்கள் பற்றிய ஹிட்ச்காக்கின் விரிவான கருத்துகள் இதில் உள்ளன. இடையிடையே ஹிட்ச்காக் சந்தித்த பல பிரச்னைகள், அவர் படமெடுக்கும் முறை, ஹிட்ச்காக் திரைக்கதைகளை செம்மைப்படுத்திய விதம், பல லோகேஷன்களில் படமெடுப்பதில் ஹிட்ச்காக் சந்தித்த சிக்கல்கள், உலகப்போருக்குத் தன் பங்காக ஹிட்ச்காக் அளித்த திரைப்படங்கள், சால்வதோர் டாலியுடன் ஹிட்ச்காக்கின் அனுபவங்கள், ஹிட்ச்காக்கை FBI கண்காணித்த தருணங்கள், திரைப்படங்களில் சஸ்பென்ஸ் வைப்பது குறித்த அட்டகாசமான ஹிட்ச்காக்கின் கருத்துகள்,  ஹிட்ச்காக் எடுத்த ஒரே ஒரு 3டி படம் (கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்), ஹிட்ச்காக் எடுக்காமல் விட்ட இரண்டு படங்கள், சைக்கோ படம் பற்றிய ஹிட்ச்காக்கின் கருத்துகள், அவரது கடைசி நாட்கள் என்று ஹிட்ச்காக் பற்றிய ஒரு விரிவான புதையலே இந்தப் புத்தகம். ஒரு தேர்ந்த இயக்குநரிடம் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கலாம் என்பதற்கும் இந்தப் புத்தகமே ஒரு சிறந்த உதாரணம். த்ரூஃபோவும் ஒரு இயக்குநர் என்பதால் தயக்கமே இல்லாமல் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே செல்கிறார்.

இந்தப் புத்தகம் ஒன்றே, உலகில் உள்ள அத்தனை ‘எப்படி’ புத்தகங்களையும் விட உங்களுக்கு சினிமாவைக் கற்றுக்கொடுக்கும்.

இந்த இரண்டு புத்தகங்கள் தவிர, இன்னும் ஏராளமான புத்தகங்கள் சினிமா பற்றி உண்டு. என்னிடம் திரைக்கதை பயிலும் மாணவர்களுக்கு நான் எப்போதும் பரிந்துரைக்கும் சில புத்தகங்களின் பட்டியல் இதோ. படித்துப் பாருங்கள்.

  1. Shot by Shot – Steven Katz (விரைவில் இது தமிழ்ஸ்டுடியோ சார்பில் புத்தகமாகத் தமிழில் வரும்)
  2. Rebel Without a Crew – Robert Rodriguez
  3. On directing Film – David Mamet
  4. Directing: Film Techniques & Aesthetics by Michael Rabinger and Mick Hurbis-Cherrier
  5. Sculpting in Time – Andrei Tarkovsky
  6. Herzog on Herzog – Edited by Paul Cronin
  7. Hitchcock – revised edition – By Francois Trauffaut
  8. Scorsese on Scorsese (revised edition)- David Thompson
  9. Save the Cat – Blake Snyder (விரைவில் தமிழில் வெளிவர இருக்கிறது)
  10. Syd Field Screenplay – Syd Field (தமிழில் திரைக்கதை எழுதலாம் வாங்க)
  11. Story – Robert Mckee
  Comments

5 Comments

  1. நரேந்திரன்

    ராஜேஷ், என் குழந்தைக்கு தற்போது வயது 4, அவளுக்கான சில சிறந்த திரைப்படங்கள் பட்டியலை அளிக்கமுடியுமா? குழந்தைகள் முதல் பதின் வயதுடையவருக்கான சிறந்த படங்கள் பற்றிய கட்டுரை ஒன்று அளித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

    Reply
    • Oh Sure. I will send it to you soon and will post here too. Cheers.

      Reply
      • narendran

        thank you

        Reply
  2. goverthan

    THANK U sir….

    Reply

Join the conversation