BIFFES 2013 – Day 1 – Harmony lessons (2013) – Kazakhstan
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
எங்கள் ஊரான பெங்களூரிலும் உலகப்படவிழா வந்துவிட்டது. 27ம் டிஸம்பர் முதல் 2ம் ஜனவரி வரை, 150க்கும் மேலான உலகப்படங்கள் வரப்போகின்றன. எனவே, அவற்றில் நான் பார்ப்பதை நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் கட்டுரைகளை எழுதப்போகிறேன். இதோ இன்றுதான் முதல் நாள். இரண்டு படங்கள் பார்த்தேன். ஒன்று இது. இன்னொன்று நாளை வரும்.
பட்டியலைப் பார்க்க விரும்பும் நண்பர்கள், இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.[divider]
செம்மறியாடு ஒன்றை ஒரு சிறுவன் துரத்தி விளையாடுகிறான். செம்மறியாடு அந்தச் சிறுவனிடம் சில நொடிகளிலேயே அகப்படுகிறது. இப்படி ஒரு romanticized காட்சியை, எத்தனை படங்களில் நாம் பார்த்திருப்போம்? இதன்பின் அந்தச் சிறுவன், ஆட்டைக் கட்டிக்கொண்டு ஏதேனும் ஒரு பாடலைப் பாடுவதைத்தான் பார்த்திருக்கிறோம்.
ஆனால், அந்த ஆட்டைப் பிடித்தவுடன், அதன் கால்களை அந்தச் சிறுவன் மிக இயல்பாகக் கட்டுகிறான். அதன்பின் அவனது பாட்டி, ஒரு பெரிய சட்டியைக் கொண்டுவந்து கொடுக்கும்போதுதான் அந்த ஆடு என்ன ஆகப்போகிறது என்பதை நாம் உணர்கிறோம். சட்டியை ஆட்டின் கழுத்துக்குக் கீழ் வைத்துவிட்டு, கரகரவென்று அந்த ஆட்டின் கழுத்தை அறுக்க ஆரம்பிக்கிறான் சிறுவன். ஆடு இறந்ததும், அதன் உடலை குறுக்குவாட்டில் வெட்டி, அதன் குடல், ஈரல் போன்ற அத்தனை உறுப்புகளையும் வெளியே எடுத்துப் போடுகிறான். தோலை முற்றிலுமாக உரிக்கிறான். அதன் விலா எலும்புகளை தனியே அகற்றுகிறான். அதன்பின் அதன் இதயத்தையும் படக்கென்று உள்ளே கைவிட்டுப் பிய்க்கிறான். அவனது பாட்டி, இந்த உறுப்புகளையெல்லாம் எடுத்துச் செல்கிறாள்.
சிறுவனுக்கு வயது 13.
இதுதான் ‘ஹார்மனி லெஸன்ஸ்’ திரைப்படத்தின் ஆரம்பக் காட்சி. இதைப் பார்த்ததுமே, நம் கிம் கி டுக், ஏதேனும் அவசரமாக கஸக்ஸ்தான் நாட்டுக்குத் தப்பிச்சென்று அங்கே படங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டாரோ என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். கிம் கி டுக் படங்களில் கூட இப்படியெல்லாம் தடாலடி ஆரம்பக் காட்சி வந்ததில்லை. படத்தை இயக்கியிருப்பவர், எமிர் பைகாஸின் (Emir Baigazin). வயது 29. இதுதான் அவரது முதல் படம். இதுவரை குறும்படங்கள் இயக்கிக்கொண்டிருந்தவர், இப்போதுதான் முழுநீளப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.[divider]
அஸ்லான், பள்ளியில் சேரும்போது, பிற மாணவர்களால் அசுத்தப்படுத்தப்பட்ட தண்ணீரை குடித்துவிடுவதன் மூலம் அவர்களால் கிண்டல் செய்யப்படுகிறான். அன்றிலிருந்தே அவனது ஒதுக்கம் அதிகரிக்கிறது. அவனுடன் பேசினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று சக மாணவன் போலாட் (Bolat) மிரட்டுவதால், யாருமே அஸ்லானுடன் பேசுவதில்லை. போலாட், பள்ளியில் தன்னுடன் ஒரு சிறிய கும்பலைச் சேர்த்துக்கொண்டு, மாணவர்களை மிரட்டி, அவர்களிடம் பணம் வசூலித்து, அதனை அந்தப் பள்ளியின் சீனியர் மாணவர்களுக்குக் கொடுத்துவருகிறான். அவர்களுக்கே தெரியாமல், இன்னொரு முன்னாள் மாணவனுக்கும் இந்தப் பணத்தில் ஒரு பகுதி செல்கிறது. அவனுடைய வேலை – சிறையில் இருக்கும் சில கிரிமினல்களுக்காக இந்தப் பணத்தை எடுத்துச் செல்வது.
வகுப்பில் யாருமே அஸ்லானுடன் பேசாததால், அவனுடைய தனிமை உணர்வு அதிகரிக்கிறது. கூடவே, ஏற்கெனவே அசுத்தமான தண்ணீரை அருந்தியதால், தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற உணர்வும் அவனுள் வளர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் வழக்கத்தை விட அதிகமாக உடலை சுத்தப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறான் அஸ்லான். கூடவே, பள்ளியில் சேரும்போது அவன் செய்த ஒரு குறிப்பிட்ட பயிற்சியையும் செய்துகொண்டே இருக்கிறான் (கண்களை மூடிக்கொண்டு கைகளின் நுனியால் மூக்கைத் தொடுவது).
இந்த நேரங்களில்தான், கரப்பான்பூச்சியைப் பற்றி தொலைக்காட்சியில் பார்க்கிறான். அவற்றின்மூலம்தான் கொடிய வியாதியைப் பரப்பும் கிருமிகள் பரவுவதாக அந்தத் தொலைக்காட்சி செய்தி கூறுகிறது. இதன்பின் கரப்பான்பூச்சிகளை அசுத்தமான பொருட்களாகப் பார்க்கும் அஸ்லான், அவற்றை தனது சுத்தப்படுத்துதலோடு தொடர்புபடுத்தி சிந்திக்கிறான். இதனால், அந்தக் கரப்பான்பூச்சிகளுக்கு விதம்விதமான தண்டனைகளைக் கொடுக்க ஆரம்பிக்கிறான். அவன் வளர்க்கும் ஒரு ஓணானுக்கு அவைகளை இரையாக அளிக்கிறான்.
இந்த நேரத்தில், அவனது பள்ளியைச் சேர்ந்த இருவர் அவனுடன் பேச ஆரம்பிக்கிறார்கள். ஒருவன், மேட். இவன், பள்ளியின் ரவுடியான போலாட்டிடம் அடி வாங்கியவன். இன்னொருவன், மிர்ஸயன் (Mirsayan). நகரத்தில் இருந்து (அல்மடி – Almaty – கஸக்ஸ்தானின் பழைய தலைநகர்) இந்தப் பள்ளிக்குப் படிக்க வந்திருப்பவன். அவனுடைய பெற்றோர்கள், விவாகரத்து வழக்கு ஒன்றில் மும்முரமாக இருக்கிறார்கள். இதில் மிர்ஸயன், போலாட் கும்பலைப் பகைத்துக்கொள்கிறான். போலாட்டுடன் ஒற்றைக்கு ஒற்றை மோதி, தோல்வியும் அடைகிறான். பிறிதொரு சமயத்தில், உடல்நிலை சரியில்லாமல் வகுப்பறையில் வாந்தி எடுக்கும் அஸ்லானை கிண்டல் செய்யும் போலாட்டை அடித்துவிடுவதால், போலாட்டின் கும்பலால் கண்டபடி அடிக்கப்படுகிறான்.
மெல்ல மெல்ல போலாட்டின் மீது அஸ்லானுக்குக் கோபம் அதிகரிக்கிறது. ஆனால் அவனை இவனால் எதுவுமே செய்யமுடியாது. அப்போதுதான், அந்தப் பள்ளியில் ஆரம்பத்தில் படித்த விஞ்ஞானம் அவனுக்கு நினைவு வருகிறது. துப்பாக்கிக் குண்டுகளைப் பற்றி ஒரு ஆசிரியர் இவர்களுக்கு விரிவாகவே பாடம் எடுத்திருக்கிறார். விஞ்ஞானத்தில் ஈடுபாடு கொண்ட அஸ்லான், வீட்டில் அமர்ந்துகொண்டே ஒரு சிறிய துப்பாக்கி போன்ற வஸ்துவை தயாரிக்கிறான். கூடவே, கரப்பான்பூச்சிகளை மின்சார அதிர்ச்சியால் கொல்லக்கூடிய ஒரு சிறிய மின்சார நாற்காலியையும் செய்திருக்கிறான். அதில் கரப்பான்பூச்சிகளை பொசுக்குகிறான்.
இதன்பின் என்ன நடக்கிறது என்பதை திரையில் காணவேண்டியதுதான்.[divider]
இந்தப் படத்தில் என்ன விசேஷம்? அது ஏன் எனக்குப் பிடித்தது?
முதலாவதாக, படத்தில் இசையே இல்லை. ஒரே ஒரு ஷாட்டில் மட்டுமே இந்த முழுப்படத்திலும் இசை வருகிறது. அதுவுமே ஒரு கனவுக்காட்சி. மிகச்சில நொடிகளே நீடித்திருக்கும் காட்சி அது. இசையே இல்லாததால், ரொமாண்டிஸைஸ் செய்யப்பட்ட காட்சிகள் எதுவுமே இதில் இல்லை. அதாவது, இசையை உபயோகித்து, ஆடியன்ஸின் மனதில் உணர்ச்சிகளை எழுப்புவது. அதில் தவறே இல்லைதான். ஆனாலும், படத்தின் காட்சிகளின் மூலமாக மட்டுமே இதில் உணர்ச்சிகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
இதன்பின், படத்தின் கதாபாத்திரங்களின் இயல்பான சித்தரிப்பு. முதல் காட்சி ஒரு உதாரணம். தன் பிழைப்புக்காக செம்மறியாட்டைக் கொல்பவன் அந்தச் சிறுவன் என்பது ஆரம்பத்திலேயே நிறுவப்பட்டுவிடுவதால், படம் முழுக்க அவனைப் புரிந்துகொள்ளமுடிகிறது. இதைப்போல்தான் எல்லாக் கதாபாத்திரங்களும் காண்பிக்கப்படுகின்றன.
அடுத்ததாக, கிம் கி டுக் படங்களில் வருவது போல, மிகச்சில இடங்களில் காட்சிகள், நமது கற்பனைக்கே விடப்பட்டுவிடுகின்றன. வரிசையாக ஒவ்வொன்றாக காட்சிகள் நமக்கு ஊட்டப்பட்டு, திரையரங்கில் வெறுமனே வந்து அமர்ந்தாலே போதும் – அதன்பின் திரையில் காட்சிகள் வரிசையாக ஓடி நம்மைக் குஷிப்படுத்தும் என்ற ஒருவித திணிப்பாலேயே வளர்ந்தவர்கள் நாம். நம்மிடம்போய், ‘யோசி. இதுக்க்கப்புறம் என்ன சீன் வரும்?’ என்றெல்லாம் கற்பனை செய்யச்சொல்வது அசாத்தியம்தான். ஆனால், கஸக்ஸ்தான் சினிமா ரசிகர்கள், பிற உலகநாடுகளின் சினிமா ரசிகர்கள் போலவே நல்ல ரசனை பெற்றவர்கள் என்று நினைக்கிறேன். அதனால், எதிர்பார்க்கும் காட்சிகள் வராமல் இருந்தால்கூட அவர்களுக்கு அதில் பிரச்னைகள் இருப்பதில்லை போன்று இருக்கிறது.
கூடவே, சில காட்சிகளில் ஒருவித metaphysical நிலையை வர்ணிக்கின்றன. கிம் கி டுக் போல சில உருவகங்களும் (allegories) இருக்கின்றன. ஆனால் இவையெல்லாமே, கடைசி ஒரு மணி நேரத்தில்தான்.
படத்தின் ஆரம்ப அரைமணி நேரத்தில், சிறுவன் அஸ்லானின் தனிமை, இயல்பாக உள்ளது உள்ளபடி சித்தரிக்கப்பட்டதை கவனிக்க முடிந்தது. யாருமற்ற பரந்த பனிவெளி, யாருமே இல்லாத வகுப்பறைகள், தனிமை நிரம்பிய கேண்டீன் போன்றவை அடிக்கடி வருகின்றன. அவனது வீடு கூட தனிமையாகத்தான் இருக்கிறது.
எந்த உணர்ச்சியையும் ஆடியன்ஸுக்கு அளிக்காமல், நடப்பதை நடந்த முறையிலேயே சொல்லும் படங்கள் எனக்குப் பிடிக்கும். படம் பார்க்கும் நாம்தான் படத்தைப் பற்றி முடிவுசெய்யவேண்டும். படம், நம்மீது சில முடிவுகளைத் திணிக்கக்கூடாது என்ற வகையைச் சேர்ந்த படம் இது. அதாவது ஆடியன்ஸின் பங்களிப்பு இதில் தேவை.
’கரப்பான்பூச்சிகளை அஸ்லாம் சித்ரவதை செய்யும் காட்சிகளை எப்படி யோசித்தீர்கள்?’ என்று இயக்குநர் எமிர் பைகாஸினிடம் கேட்கப்பட்டபோது, ‘அதெல்லாம் முதலில் முடிவுசெய்யவில்லை. ஆனால், வேலை செய்ய ஆரம்பித்ததற்குப் பிறகு, கடுமையாக வேலை செய்ததாலேயே இப்படிப்பட்ட காட்சிகள் தோன்றின. குறிப்பாக, நம் எல்லாரின் எண்ணங்களுக்குள்ளும் கிருமிகள் இருக்கின்றன. ஆனால் இதெல்லாம் முதலில் தோன்றவில்லை. படத்தில் வருவது போல, அஸ்லான் எப்போதும் கிருமிகளை எதிர்த்தே போராடிக்கொண்டிருக்கிறான் என்பதைக் காட்டவே அப்படிக் காட்சிகள் வைத்தேன். அஸ்லானின் வாழ்க்கையில், இருப்பதிலேயெ பெரிய கிருமி – போலாட்தான்’ என்று முடிக்கிறார்.
உலக அரங்கில் அட்டகாசமான ஒரு அறிமுகமாக எமிர் பைகாஸினை இந்தப்படம் ஒரு தூக்கு தூக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு இயக்குநர் இயக்கப்போகும் இரண்டாம் படம் எப்படி இருக்கிறது என்று அவசியம் கவனிக்கவே வேண்டும். என்னைப்பொறுத்தவரை, இந்த உலக சினிமா விழாவுக்கு ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது இந்தப்படம்.
நாளை – இன்று நாங்கள் பார்த்த ஜப்பானியப் படம் ஒன்று.
Harmony Lessons படத்தின் இங்லீஷ் ட்ரெய்லர் கிடைக்காததால், இதோ ஒரு சிறிய காட்சி.
இது, படத்தின் ஒரிஜினல் ட்ரெய்லர்.