BIFFES 2013 – Day 1 – Like Father Like Son (2013) – Japanese
நேற்று (27ம் டிஸம்பர்) மதியம் Harmony Lessons என்ற அருமையான கஸக்ஸ்தான் படத்தைப் பார்த்ததும், அரக்கப்பரக்க ஓடி, பக்கத்து ஸ்க்ரீனில் இன்னும் பத்து நிமிடங்களில் ஆரம்பிக்க இருந்த இந்தப் படத்துக்குள் நுழைந்தேன். ஏற்கெனவே அங்கு வந்திருந்த ஷ்ரீ இடம் பிடித்து வைத்ததனால், கிட்டத்தட்ட ஹௌஸ்ஃபுல் நிலையில் இருந்த ஃபன் சினிமாஸில், பின் வரிசையில் சுகமாக ஒரு இடம் கிடைத்தது. உள்ளே ஓடிவந்த அவசரத்தில் நம்பர் ஒன் நஹி. ஏற்கெனவே ’ஹார்மனி லெஸன்ஸ்’ படத்திலேயே அது பெண்டிங். இருந்தாலும், ’லைக் ஃபாதர் லைக் சன்’ படம் முடியும்வரை பொறுத்திருந்து, அதன்பின்தான் அந்த வேலை முடிந்தது.
படத்தைப் பற்றி எழுதுமுன் – ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். பொதுவாக, திரைப்பட விழாக்களில் திரையிடும் உலக சினிமாக்கள் எல்லாமே அற்புதமானவை என்பதே எல்லாருடைய கருத்தும். ஆனால், அது நிதர்சனம் இல்லை. சினிமா விழாக்களில் திரையிடப்படும் படங்களில் சில அரத திராபைகளும் இருக்கின்றன. அதேபோல், இத்தகைய உலக சினிமாக்களில் பல வகைகளும் உண்டு. வழக்கமான மசாலா பாணியில் எடுக்கப்படும் சில ‘நெஞ்சு நக்கி’ படங்கள், படம் பூராவும் எதுவுமே நடக்காமல் ஆடியன்ஸின் உயிரை வாங்கக்கூடிய உலக எனிமா படங்கள் போன்றவை அவற்றில் சில வகை. இதை ஏன் இங்கு பகிர்ந்தேன் என்றால், அப்படிப்பட்ட ஒரு நெஞ்சு நக்கி + ஒரு உலக எனிமா ஆகிய இரண்டும் சேர்ந்த கலவையான படம் ஒன்றை இன்று (28த் டிஸம்பர்) பார்க்க நேர்ந்தது. அது என்ன படம் என்பதை நாளை சொல்கிறேன்.[divider]
தமிழ்ப்படங்கள் பலவற்றில் நாம் பார்த்திருக்கக்கூடிய ஒரு கதைதான் இது. சில படங்களிலும் இந்தக் கருவைக் கண்டிருக்கிறோம். ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ போன்ற படங்களில் கையாளப்படும் தாய்மை கலந்த possessivenessதான் இந்தப் படத்தின் கரு. அதேசமயம், அந்தக் கருவைக் கையாளும் முறையில்தான் இந்தப் படம், இதைப்போன்ற பிற படங்களில் இருந்து தனித்து விளங்குகிறது. இதே கரு இருக்கும் பல படங்கள், ஆக்ஷன் அல்லது நகைச்சுவைப் படங்களாகவே இருக்கும்.
இயக்குநர் ஹிரோகாஸு கொரீதாவின் இதற்கு முந்தைய ஒரே ஒரு படம்தான் நான் பார்த்திருக்கிறேன். அது – Nobody Knows. அதன் காட்சிகள், riveting என்று சொல்லக்கூடிய அளவு இருந்தன. குழந்தைகளை வைத்தே எடுக்கப்பட்டிருந்தாலும், அது சந்தோஷமான படம் இல்லை. தனியே அனாதரவாக விடப்பட்ட குழந்தைகளின் நிலையை சொல்லும் படம் அது. படம் முடிகையில் மனம் கனத்துப்போகும் வகையைச் சேர்ந்த படம்.
இப்படி இருக்கையில், நேற்று இந்தப் படத்துக்கு ஓடிச்சென்று சேர்ந்தபோது, திரையரங்கு ஹௌஸ்ஃபுல். கொரீதாவின் புகழ் எல்லாப்பக்கங்களிலும் எட்டியிருப்பதன் விளைவு அது.[divider]
’கெய்தா’ (Keita), ஆறு வயதுச் சிறுவன். அவனது தந்தை – ரயோட்டா. தாய், மிடோரி. ரயோட்டா, ஒரு புகழ்வாய்ந்த கட்டுமான நிறுவனத்தில் கடும் பணிச்சுமை உடைய நபர். தனது மனைவியையும் மகனையும் மிகவும் விரும்பும் நபர். பணத்துக்கு அவர்களிடம் எந்தக் குறையும் இல்லை. ஆனால், கெய்தாவுக்கு, தனது தந்தை தன்னுடன் அதிக நேரம் செலவிடுவதில்லை என்ற சிறிய குறை உள்ளுக்குள் உண்டு.
ஒரு நாள், மிடோரி, அவளது மகன் கெய்தாவைப் பெற்றெடுத்த மருத்துவமனையில் இருந்து அவளுக்கு ஒரு செய்தி வருகிறது. அன்று பிறந்த இரண்டு குழந்தைகள் மாற்றப்பட்டுவிட்டன என்பதே அந்த செய்தி. ஆறு வருடங்கள் அன்புடன் வளர்த்த கெய்தா, அவர்களின் மகன் இல்லை என்பது ரயோட்டாவுக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. மருத்துவமனை அதிகாரிகளுடன் பேசும் ரயோட்டாவுக்கு, முழு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபின்னர்தான் கெய்தாவின் நிஜ பெற்றோர்களைப் பற்றித் தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.
இந்த விஷயம், ரயோட்டாவின் மனதில் நிம்மதியைக் குலைக்கிறது. வேலையில் அவனது மேலாளர் அவனுக்கு ஒருசில யோசனைகள் சொல்கிறார். ரயோட்டாவும் மிடோரியும், மருத்துவமனை அதிகாரிகளை சந்திக்கிறார்கள். அவர்கள், இவர்களின் குழந்தை இடம் மாற்றப்பட்ட இன்னொரு தம்பதியினரைப் பற்றிச் சொல்கிறார்கள். அவர்களுடன் இவர்களது முதல் சந்திப்பு நடக்கிறது. அந்தச் சந்திப்பில், அந்த இன்னொரு குடும்பம் நடுத்தர வசதிகள் உடைய குடும்பம்தான் என்பது ரயோட்டாவுக்கும் மிடோரிக்கும் தெரிகிறது. சாதாரண கடை ஒன்றை வைத்திருக்கும் ’யுடாய்’ என்பவரும், அவரது மனைவியான ’யுகாரி’ என்பவரும்தான் அவர்கள். யுடாய், கிட்டத்தட்ட ஒரு குழந்தை போலவே பொறுப்புகளற்று இருக்கிறான். அவனது மனைவியான யுடாய்தான் குடும்பத்தின் இயல்பான நபர். அவர்களுக்கு (மாற்றப்பட்ட குழந்தையையும் சேர்த்து) மொத்தம் மூன்று குழந்தைகள். அவர்களின் ஆறு வயது மகன் ‘ருயீஸி’ (Ryusei) தான் ரயோட்டா & மிடோரியின் உண்மையான மகன்.
திரைப்படத்தின் ஆரம்பத்தில் இருந்தே, தங்களது ’மகன்’ கெய்தா தன்னைப்போல் சுறுசுறுப்பான புத்திசாலியாக இல்லாமல், மிடோரியைப் போன்று நிதானமாக செயலாற்றக்கூடியவனாக இருக்கிறான் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான் ரயோட்டா. அதன் காரணம் இப்போது அவனுக்குப் புரிகிறது. வேறொருவனின் மகனாக அவன் இருப்பதால்தான் அப்படி இருக்கிறான் என்று ஒரு கோபமான சந்தர்ப்பத்தில் தனது மனைவியிடம் சொல்கிறான் ரயோட்டா. இது, மிடோரியின் மனதை உடைக்கிறது.
யுடாய் மற்றும் யுகாரிக்கும் இந்த மாற்றப்பட்ட தகவல் சொல்லப்பட்டுவிட்டதால், தங்களின் நிஜ மகனான கெய்தாவைப் பார்க்க அவர்களுக்கும் ஆவல். எனவே, வாரம் ஒரே ஒரு நாள் மட்டும் இரண்டு சிறுவர்களும் தங்கள் வீடுகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. அதன்படி கெய்தா, யுடாயின் வீட்டுக்குச் செல்ல, அவர்கள் வீட்டில் இருக்கும் ருயீஸி, ரயோட்டாவின் வீட்டுக்கு வருகிறான். என்னதான் தங்களது ரத்தம் என்றாலும், அவன் முற்றிலும் புதியவனாக இருப்பதால் இருவராலும் அவன் மேல் முழுப்பாசத்தையும் ஒரே நாளில் செலுத்த முடிவதில்லை.
அதே நேரத்தில், இடம் மாற்றப்பட்ட இரண்டு சிறுவர்களுமே மிகவும் அந்நியமான இடங்களில் இருப்பதாக உணர்கிறார்கள். இருவரின் நிஜமான வீடுகளில் இப்போது வசித்தாலும், இருவரின் நிஜமான தாய்தந்தையரிடம் அவர்களுக்கு முழுதான அன்பும் அரவணைப்பும் கிடைப்பதில்லை. ஏனெனில், ஆறு வருடங்கள் தங்களிடம் வளர்ந்த நிஜமில்லாத மகன்களின்மேல்தான் பெற்றோர்களுக்கு இன்னமும் பாசம் இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், ஒரு நாள் ரயோட்டா ஒரு முடிவு எடுக்கிறான். தன்னிடம் வசதி இருப்பதால், இரண்டு சிறுவர்களையும் தானே வைத்துக்கொண்டு படிக்கவைப்பதே அந்த முடிவு. ஆனால், யுடாயும் யுகாரியும் இதை கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்களால் இதை நினைத்துக்கூடப் பார்க்கமுடிவதில்லை. பிரச்னை இன்னும் தீவிரம் ஆகிறது. மாதங்கள் ஒவ்வொன்றாகக் கழிகின்றன.
இரண்டு சிறுவர்களும் இனிமேல் தங்களது நிஜமான பெற்றோர்களிடம்தான் வாழ வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பின்படி, ரயோட்டாவும் மிடோரியும், தங்களிடம் வளர்ந்த கெய்தாவை யிடாம் மற்றும் யுகாரியின் வீட்டில் விட்டுவிட்டு, அவர்களிடம் வளர்ந்த தங்கள் மகனான ருயீஸியை தங்களுடன் அழைத்துவந்துவிடுகிறார்கள்.
இதன்பின் என்ன ஆகிறது? திரைப்படத்தில்தான் பார்க்க வேண்டும்.[divider]
இந்தப்படம் வெகுசுலபமாக ஒரு கண்ணீர்க்காவியம் ஆகியிருக்கமுடியும். ஆனால் அப்படி இந்தப் படத்தை உருவாக்காமல், இயல்பான உணர்ச்சிகளுடன் எடுத்திருப்பதே இயக்குநர் கொரீதாவின் திறமை. ஒவ்வொரு காட்சியிலுமே என்னால் பல விஷயங்களை எண்ணிப்பார்க்கமுடிந்தது. அதேபோல், இந்தப் படத்தின் இரண்டு தாய்களான மிடோரி மற்றும் யுகாரி ஆகியவர்களின் நடிப்பில், ஒவ்வொரு சின்னச்சின்ன உணர்ச்சிகளும் பளிச்சிடுவதைப் பார்க்க முடிந்தது. பல காட்சிகளில் இவர்கள் இருவரும் அந்தச் சிறுவர்களின் நிஜமான தாய்கள் என்றே எண்ணும்படி இருக்கிறது நடிப்பு.
இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியில், சிறுவன் கெய்தா, தனது பள்ளியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பொய்யான பதில்கள் சொல்வான். அந்தப் பதில்கள் மூலம், பெற்றோர் எத்தனை நெருக்கமாக இருக்கிறார்கள் என்பது கணக்கிடப்படும். உண்மையில் தன்னுடன் அதிக நேரம் செலவழிக்காத ரயோட்டாவைப் பற்றி, அவன் எப்போதும் தன்னை நன்றாகக் கவனித்துக்கொள்வதாகவே பொய் சொல்லியிருப்பான் கெய்தா. தனது தந்தை தன்னுடன் அதிக நேரம் செலவிடவேண்டும் என்ற அவனது ஏக்கத்தின் வெளிப்பாடு அது. மகனின் இந்த உனர்ச்சி, படத்தின் கடைசியில்தான் ரயோட்டாவுக்கு உறைக்கும். அதுவும், தங்களிடம் வளர்ந்த கெய்தா, எடுத்துச்செல்லாமல் விட்டுவிட்டுப் போன கேமராவை எடுத்துப் பார்த்ததும்தான். அவனது மனது மாறத்துவங்கும். போலவே, யுடாயின் வீட்டில் ஒரு நாள் இருந்துவிட்டு வரும் கெய்தா, உடைந்துபோன பொம்மைகளை அவன் அழகாகச் சரிசெய்துதருவதைச் சொல்லிவிட்டு, தன்னுடைய உடைந்த பொம்மையை ரயோட்டாவிடம் கொண்டுவந்து கொடுப்பான். ஆனால் ரயோட்டா அதை சரிசெய்யாமல், வேறு பொம்மையை வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பிப்பான். அப்போது, அடுத்தமுறை யுடாய் வீட்டுக்குச் செல்லும்போது அவனிடமே கொடுத்து அந்தப் பொம்மையை சரிசெய்துகொள்வதாக சிறுவன் கெய்தா சொன்னவுடன், உடனடியாக பொம்மையை வாங்கி சரிசெய்து கொடுப்பான் ரடோட்டா.
வயதான தனது பெற்றோர்களை சென்று சந்தித்துவிட்டு ரயோட்டா திரும்பும் காட்சியும் எனக்குப் பிடித்தது. இதுபோன்ற சிறிய – ஆனால் நுணுக்கமான காட்சிகள் பல உண்டு இந்தப்படத்தில்.
இரண்டு சிறுவர்களின் மனநிலையை அருமையாக விவரித்திருப்பதன்மூலமே இந்தப் படம் விசேஷமான ஒன்றாக ஆகிறது. அதிலும், குறிப்பாக சிறுவன் கெய்தா. அதேபோல் படத்தில், கணவன் மனைவி உறவுமுறையும் நன்றாகவே அலசப்பட்டிருக்கிறது. ஒரு காட்சியில், ‘மகன் என்பவன் ரத்தத்தின் மூலமே மகனாகிறான்’ என்று ரயோட்டா சொல்வான். அதற்கு பதிலாக, ‘மகன் என்பவன் வளர்ப்பினாலும்கூடத்தான் மகனாகிறான்’ என்று மிடோரி சொல்லும் வசனம் வருகிறது. அந்தக் காட்சி அவசியம் படம் பார்ப்பவர்களின் மனதை விட்டு அகலாது. படத்தின் வசனங்கள் அனைத்துமே மிகக் கூர்மையாக இருக்கின்றன. இந்தப் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த அம்சம்- இதன் வசனங்கள்தான். மிகுந்த யோசனைக்குப் பிறகுதான் இப்படிப்பட்ட வசனங்கள் எழுதப்படலாம். இந்த வசனங்களைப் பேசி நடிக்கும் நடிகர்கள், இவை அளிக்கும் உள்ளுறை அர்த்தத்தையுமே புரிந்துதான் நடித்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகவே புரிந்தது. இரண்டு குழந்தைகளும் ஏன் இடம்மாற்றப்பட்டார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியும் காட்சியையும் கவனியுங்கள். அதிலுமே, மனித உறவுகளைப் பற்றியே பேசப்படும்.
படம் அனைவருக்கும் பிடித்தது என்பதற்கு, படம் முடிந்ததும் எழுந்த நீண்ட கைதட்டல் ஒலியே சான்று.
பி.கு – இந்தப் படம் வெகு வெகு வெகு விரைவில் தமிழில் சுடப்படும் வாய்ப்புகள் மிக மிக மிக அதிகம்.
இந்த படத்த பத்தி நம்ப கீத்த ப்ரியன் எழுதன மாறி ஞாபகம் ….
already a tamil film is there with same story. I think released before 10 years. Actor Karthik.
Nice review sir..!!!
i don know this movie name..
“Slum peoples living around the Olympic stadium, the government occupy the slums area. the slums are struggling their life against government”…?
pls tell ur suggestions…????