BIFFES 2013 – Day 2 – The good, the bad and the realistic . .

by Karundhel Rajesh December 30, 2013   BIFFES 2013

Day 1 பற்றிப் படிக்க இங்கே அமுக்கி முதல் படத்தைப் படித்துவிட்டு, இங்கே அமுக்கி இரண்டாவது படத்தைப் படிக்கலாம்.

Day 2: 28th Dec 2013

இரண்டாம் நாளில், The German Doctor படத்துக்குப் போகவேண்டும் என்பது திட்டம். ஆனால், கடைசி நிமிடத்தில் அது மாறியதால், முதலில் நாங்கள் சென்றது – The Eternal Return of Antonis Paraskevas. நாங்கள் உள்ளே நுழைவதற்கும் படம் ஆரம்பிப்பதற்கும் மிகச்சரியாக இருந்தது.

Movie 1: The Eternal Return of Antonis Paraskevas (2013) – Greece

க்ரீஸின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில், ஆன்ட்டனி பராஸ்கெவாஸ் என்பவர் இருபது வருடங்களாக பிரபல செய்தித் தொகுப்பாளர். அந்த நாட்டின் மக்கள் அனைவருக்குமே அவரைத் தெரியும். கிட்டத்தட்ட நம்மூர் நீயா நானா கோபிநாத் போல என்று வைத்துக்கொள்ளலாம். படத்தின் ஆரம்பத்தில், எங்கோ ஒரு பெரிய ஹோட்டலில், ஆண்ட்டனியை இன்னொரு மனிதர் கொண்டுவந்து விடுகிறார். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஆண்ட்டனி உள்ளே செல்கிறார். அவரது பொருட்கள் அனைத்தையும் அடுக்க ஆரம்பிக்கிறார். உணவைச் சமைக்கிறார். உலவுகிறார். இறுதியில் படுக்கிறார்.

இதேதான் தினமும் நடக்கிறது. அந்த ஹோட்டல், க்ரீஸில் பனிக்காலமாக இருப்பதால் யாருமற்று பூட்டப்பட்டிருக்கிறது. ஆண்ட்டனி பார்க்கும் தொலைக்காட்சி செய்திகள் மூலம் அவரைப் பற்றி அறிந்துகொள்கிறோம். செய்திகளில், ஆண்ட்டனி திடீரென காணாமல் போய்விட்டதாக அறிவிக்கிறார்கள். இதனால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இது யாரோ கடத்தல்காரர்களின் வேலையாகத்தான் இருக்கும் என்றும் அவர்களே ஒரு முடிவுக்கும் வந்துவிட்டிருக்கின்றனர். அந்தச் செய்திகளிலேயே, ஆண்ட்டனி பெரும் கடன் சுமையில் இருந்ததாகவும் தெரியவருகிறது. ஆண்ட்டனியின் வாழ்வில் சம்மந்தப்பட்ட நபர்கள் அனைவரும் அதில் பேசுகின்றனர். ஆண்ட்டனி இல்லாமல் அவரது தினசரி நிகழ்ச்சியை எப்படி நடத்தப்போகிறோம் என்றே தெரியவில்லை என்று அதன் உதவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சொல்கிறார்.

ஒவ்வொரு நாளாகக் கழிகிறது. அந்தப் பிரம்மாண்டமான ஹோட்டலில், ஆண்ட்டனி தினமும் ஒவ்வொரு இடத்துக்குச் சென்று தனிமையைக் கழிக்கிறார். சமையல் டிவிடிக்களைக் கவனித்து அதேபோல் சமைக்கக் கற்றுக்கொள்கிறார். அதனை வீடியோவும் எடுக்கிறார். தான் புழங்கும் எல்லா இடங்களிலும் ஒவ்வொரு டிவியை அமைத்துக்கொள்கிறார். செய்தியே கண்ணாக இருக்கிறார்.

அவர் எதிர்பார்த்தது போலவே, தினமும் அவரைப் பற்றிய செய்திகள் வருகின்றன. இதன்மூலம், மக்கள் மத்தியில் இன்னும் தான் பிரபலமாகவே இருக்கிறோம் என்று நிம்மதி அடைகிறார் ஆண்ட்டனி. அவரை அங்கு கொண்டுவந்து விட்டதே அவரது தொலைக்காட்சியின் நிறுவனர்தான் என்பதையும் அறிந்துகொள்கிறோம். தனது பிரபல்யத்தை இன்னும் அதிகரித்துக்கொள்ள ஆண்ட்டனி போட்ட திட்டம் இது என்று தெரிந்துகொள்கிறோம்.

மூன்று வாரங்கள் கழிகின்றன. இதற்குள் ஆண்ட்டனியின் நிகழ்ச்சியை அவரது உதவியாளரே நடத்த ஆரம்பித்திருக்கிறார். நிகழ்ச்சி தினமும் வழக்கப்படி நடக்கிறது. எங்குமே ஆண்ட்டனியைப் பற்றிய பேச்சே இல்லை. மெல்ல மெல்ல மக்கள் தன்னை மறந்துவிட்டதை உணர்ந்துகொள்கிறார் ஆண்ட்டனி. இதையடுத்து, தொலைக்காட்சியின் உரிமையாளரிடம் பேசுகிறார். உடனேயே, கடத்தல்காரர்கள் ஆண்ட்டனிக்காக பணம் கேட்கிறார்கள் என்று உரிமையாளர் பேட்டி கொடுக்கிறார். மறுபடியும் ஆண்ட்டனியின் பெயர், மீடியாவில் பேசப்பட ஆரம்பிக்கிறது. ஆண்ட்டனி, இதைக் கண்டு நிம்மதி அடைகிறார்.

இன்னும் சில நாட்கள் கழிகின்றன. ஆண்ட்டனி வீடுதிரும்பும் நாள் வருகிறது. ஆனால், ஒரு சிறிய பிரச்னையின் காரணமாக, ஆண்ட்டனியின் ஃபோனை அவரது முதலாளி எடுப்பதில்லை. அந்த ஹோட்டல் மறுபடியும் திறக்கப்படும் நாளும் வருகிறது. இனிமேலும் அங்கே இருக்க இயலாத ஆண்ட்டனி, அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.

ஆனால், தனது பெயரை இன்னும் பலமாக மீடியாவில் அடிபடவைப்பதற்காக அவர் செய்யும் அடுத்த காரியம்தான் படத்தில் இத்தனை நேரம் நிலவிய தனிமை கலந்த நிமிடங்களை முடித்து வைத்து, மெல்லமெல்லப் படத்தை ஒரு இருண்ட தன்மையை நோக்கிக் கொண்டுசெல்கிறது.

அதன்பின் ஆண்ட்டனி என்ன ஆனார்?

க்ரீஸின் பெண் இயக்குநரான எலினா ஸைக்கோவ் (Elena Psykou) எடுத்திருக்கும் முதல் படம் இது. படம் சற்றே மெதுவாகச் சென்றாலும், அது கையாளும் கரு எங்களுக்குப் பிடித்தது. பிரபல்யத்துக்காக ஒரு மனிதன் என்னவெல்லாம் விலையாகக் கொடுக்கிறான் என்பது நன்றாகவே இந்தப் படத்தில் சொல்லப்படுகிறது. படத்தின் பெரும்பாலான நிமிடங்கள், தனிமை சூழ்ந்த அந்த ஹோட்டலில் ஆண்ட்டனியுடன் மட்டுமே கழிகின்றன. இந்தத் தனிமையான நிமிடங்களில், சற்றே நீண்ட ஷாட்கள் மூலம் ஆண்ட்டனியின் தனிமையை நம்மாலும் இயல்பாக உணரமுடிகிறது. படத்தின் 70 % முடிந்தபின்னர்தான் ஆண்ட்டனி வெளியே வருகிறார். ஆனால் அதுவுமே உணர்ச்சிபூர்வமாகவே கழிகிறது.

மொத்தத்தில், இது ஒரு அற்புதமான படமெல்லாம் இல்லை. ஆனால், அது கையாளும் கருவினால் சற்றே முக்கியத்துவம் வாய்ந்த படமாக ஆகிறது. இந்தப் படத்தை, இதுபோன்ற திரைப்பட விழாக்களில் மட்டுமே பார்க்கலாம்.

Movie 2: Barefoot to Goa (2014) – Hindi

Barefoot to Goa Still-Grandmother prepares sweets for her son

இந்தப் படத்தைப் பற்றிப் பார்க்குமுன்னர், நேற்றைய கட்டுரையில் நான் இப்படி எழுதியிருந்தது நினைவிருக்கிறதல்லவா?

[quote]பொதுவாக, திரைப்பட விழாக்களில் திரையிடும் உலக சினிமாக்கள் எல்லாமே அற்புதமானவை என்பதே எல்லாருடைய கருத்தும். ஆனால், அது நிதர்சனம் இல்லை. சினிமா விழாக்களில் திரையிடப்படும் படங்களில் சில அரத திராபைகளும் இருக்கின்றன. அதேபோல், இத்தகைய உலக சினிமாக்களில் பல வகைகளும் உண்டு. வழக்கமான மசாலா பாணியில் எடுக்கப்படும் சில ‘நெஞ்சு நக்கி’ படங்கள், படம் பூராவும் எதுவுமே நடக்காமல் ஆடியன்ஸின் உயிரை வாங்கக்கூடிய உலக எனிமா படங்கள் போன்றவை அவற்றில் சில வகை. இதை ஏன் இங்கு பகிர்ந்தேன் என்றால், அப்படிப்பட்ட ஒரு நெஞ்சு நக்கி + ஒரு உலக எனிமா ஆகிய இரண்டும் சேர்ந்த கலவையான படம் ஒன்றை இன்று (28த் டிஸம்பர்) பார்க்க நேர்ந்தது. அது என்ன படம் என்பதை நாளை சொல்கிறேன்[/quote]

அது இந்தப் படம்தான். காரணம், ஒரு ஊரில் வாழும் கட்டுப்பெட்டி கணவன், அவனது கொடுமைக்கார மனைவி, அந்தக் கணவனின் வயதான தாய், கோவாவில் கேன்ஸரில் கஷ்டப்படுவது, இதை வைத்து மகனுக்குக் கடிதம் எழுதுவது, அந்தக் கடிதத்தை, மகனின் கொடுமைக்கார மனைவி ஒளித்துவைப்பது, இதை அவர்களின் பள்ளி பயிலும் மகனும் மகளும் படிப்பது, அதன்பின்னர் பாட்டியை கோவா சென்று அழைத்துவர முடிவுசெய்வது (காரணம், அப்பா சைனா சென்றுவிடுகிறார்), பின்னர் பயணம் செல்வது (Title- Barefoot to Goa என்பது இதுதான்) என்பதுதான் படத்தின் கதை.

இந்தப் படத்துக்கு நெஞ்சை நக்கித்தள்ளும் முதல் காட்சி இருக்கிறது. படம் பார்க்கும் ஆடியன்ஸ், அந்தக் காட்சியைக் கண்டு நெக்குருகப்போவது உறுதி.  இதன்பிறகு ஓரளவு நன்றாகவே செல்லும் இந்தப் படம், ஆங்காங்கே படுத்துக் கொண்டுவிடுகிறது.  குறிப்பாக க்ளைமேக்ஸ். படத்தில் வரும் வயசாளிகளை போட்டுத்தள்ளுவதுதான் உலகப்படம் என்று இதன் இயக்குநர் ப்ரவீன் மோர்ச்சலே (Praveen Morchhale)விடம் யாரோ சொல்லியிருப்பார்கள் போல் இருக்கிறது. முற்றிலும் ஒப்புக்கொள்ளவே முடியாத ஒரு க்ளைமேக்ஸை படத்தில் திணித்து, ‘நானும் உலக சினிமா எடுத்துவிட்டேன்’ என்று வண்டியில் ஏறிக்கொண்டிருக்கிறார். இந்த க்ளைமேக்ஸுக்காகவே இவரை கட்டி வைத்து அடிக்கலாம்.

இந்தப் படத்துக்கு நாங்கள் ஏன் சென்றோம்? உண்மையில் இந்தப் படத்துக்கு முன்னர் Mirror without Reflections என்ற அருமையான தஜ்க்ஸ்தான் படம்தான் தொடங்குவதாக இருந்தது. ஆனால், திடீரென நம் வீட்டு நாற்சந்தியில் யாராவது மைக்கில் வந்து ‘உங்கள் அனைவருக்கும் தலா 2000 ரூ தருகிறோம்’ என்று அறிவித்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட கும்பல் அந்தப் படத்துக்கு சேர்ந்துவிட்டது. அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஸ்க்ரீன் வாசலை நோக்கி வெறிகொண்டு ஏறியதால் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை. ஆகவே, வேறு வழியே இல்லாமல் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டியதாகிவிட்டது.

படத்தின் நல்ல விஷயம், இரண்டு சிறுவர்களின் நடிப்பு. கூடவே, பாட்டியின் நடிப்பும். அதைத்தவிர படத்தில் எதுவுமே இல்லை.

பின்குறிப்பாக, முதல் நாளன்று நான் எழுதியிருந்த Harmony Lessons படத்தின் இயக்குநரான எமிர் பைகாஸினுக்கு அதுதான் முதல் படம். கூடவே, இந்தக் கட்டுரையில் முதல் படமாக நாம் பார்த்த ‘Eternal Return of Antonis Paraskevas’ படத்தின் பெண் இயக்குநரான எலினா ஸைக்கோவ்வுக்கும் அதுதான் முதல் படம். அந்த இரண்டு ‘முதல்’ படங்களுக்கும்,  இந்திய இயக்குநர் ப்ரவீன் மோர்ச்சலேவின் முதல் படமான Barefoot to Goaவுக்கும் எக்கச்சக்கமான வித்தியாசங்கள் இருக்கின்றன. படம் பார்க்கும் ஆடியன்ஸின் உணர்வுகளை தூண்டிவிட்டு அதன்மூலம் படத்தை நல்ல படமாக்க மோர்ச்சலே முயன்றிருக்கிறார். அதில் படுதோல்வி அடைகிறார் என்று சொல்லவும் தேவையில்லை.

Movie 3: Gloria (2013) – Chile/Spanish

Paulina García talks about making the Chilean drama Gloria

இதன்பிறகு நாங்கள் பார்த்த மூன்றாவது படம்தான் க்ளோரியா.

யோசித்துப் பாருங்கள். நமது வாழ்க்கையில் எத்தனையோ உறவுகளை சந்திக்கிறோம். அவற்றில் ‘மனைவி’ & ‘கணவன்’ என்பது இந்தியர்களாகிய நமக்கு மிக முக்கியமான உறவுகள். இந்தியாவில் விவாகரத்துகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும் அளவு அத்தனை அதிகமாக இல்லை. ஆனால், இதில் என்ன பிரச்னை என்றால், ஒருவேளை பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது என்றால்கூட கடைசிவரை இருவரும் அதை செய்யாமல், தங்களின் வாழ்க்கையை வாழும் நரகமாக மாற்றிக்கொண்டே இருப்பதைக் காணமுடியும்.

க்ளோரியா, ஒரு 58 வயதுப் பெண். பனிரண்டு வருடங்களுக்கு முன்பே தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு வாழ்ந்துகொண்டிருப்பவள். அவளுக்கு ஒரு மகன் மற்றும் மகள். இருவருமே தங்களின் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்க, க்ளோரியாவுடன் இருப்பது அவளது தனிமை மட்டுமே. இருந்தாலும், தனது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்பவள் அவள்.

அப்படிப்பட்ட க்ளோரியா, ஒரு நாள் ஒரு பப்புக்கு சென்றிருக்கையில் ரொடால்ஃபோ (Rodolfo) என்ற அறுபத்தைந்து வயது நபரை சந்திக்க நேர்கிறது. முதல் சந்திப்பிலேயே இருவரும் காதல்வயப்பட்டுவிடுகிறார்கள். இருவரும் உறவும் கொள்கிறார்கள். க்ளோரியாவுக்கு, ரொடால்ஃபோ ஒரு நல்ல பார்ட்னராக இருப்பார் என்று தோன்றுகிறது. ஆகவே இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்கிறார்கள். ரொடால்ஃபோவுக்கு இரண்டு மகள்கள். மனைவியை விவாகரத்து செய்து ஒரே வருடம்தான் ஆகிறது. ஆனால், அவரிடம் க்ளோரியா காணும் பிரச்னை என்னவெனில், அவரது மகள்கள் அவரை அடிக்கடி ஃபோனில் அழைத்து, மிகச்சிறிய விஷயங்களுக்கெல்லாம் அவரை நேரில் வரச்சொல்வதுதான். அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தச் சொல்கிறாள் க்ளோரியா. ஆனால் அவர் அதனை பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார்.

இந்தச் சூழ்நிலையில் தனது மகனின் பிறந்தநாள் விழாவுக்கு ரொடால்ஃபோவை அழைத்துச் செல்கிறாள் க்ளோரியா. அங்கே அவளது முன்னாள் கணவனும் வந்திருக்கிறான். க்ளோரியாவின் மகளும் வருகிறாள். ஆகவே அது அவர்களின் குடும்பச் சந்திப்பாக மாறுகிறது. அந்த சூழ்நிலை ரொடால்ஃபோவுக்கு ஒத்துவருவதில்லை. எனவே திடீரென்று அங்கிருந்து மறைந்துவிடுகிறார்.

இது க்ளோரியாவுக்குப் பிடிப்பதில்லை. எனவே ரொடால்ஃபோவுடன் தொடர்பை முறித்துக்கொள்கிறாள். ஆனால், ரொடால்ஃபோ மீண்டும் மீண்டும் க்ளோரியாவை கெஞ்சிக்கொண்டே இருப்பதால், ஒரு கட்டத்தில் க்ளோரிய அவரிடம் மீண்டும் விழுந்துவிடுகிறாள். இருவரும் ஒரு மிகப்பெரிய ஹோட்டலில் தங்குகிறார்கள்.

அன்று இரவு, மகள்களிடம் இருந்து மீண்டும் ரொடால்ஃபோவுக்கு அழைப்பு வருகிறது. உணவு அருந்திக்கொண்டிருக்கும் க்ளோரியாவை விட்டுவிட்டு அவர் மறைந்துவிடுகிறார். க்ளோரியா இதனை அறிந்து, நன்றாகக் குடித்துவிட்டு கடற்கரையில் விழுந்துவிடுகிறாள். மறுநாள், தனது வேலைக்காரியிடம் சொல்லி, பணம் எடுத்துவரச்சொல்லி, அங்கிருந்து செல்கிறாள்.

இதன்பின்னர், க்ளைமேக்ஸ்.

இந்தப் படத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் – ஒரு 58 வயதுப் பெண்ணை மையமாக வைத்து, அவளது உணர்ச்சிகள், எண்ணங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றையே பிரதானமாக வைக்கப்பட்ட விதம்தான். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை க்ளோரியாவை நமக்குப் பிடிக்காமல் இருக்காது. அவளது வீட்டுக்கு மேல்வீட்டில் இருக்கும் குடிகார போதை அடிமை, அவன் தினமும் இரவு புலம்பும் சத்தம், அவனது பூனை அடிக்கடி க்ளோரியாவின் வீட்டுக்கு வந்துவிடுவது என்று தினசரி அவளது வாழ்க்கை சுவாரஸ்யமாகவே கழிகிறது.

கிட்டத்தட்ட அறுபது வருடங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்ணாக இருந்தாலும், அவளுக்கென்று ஆசைகள் இருக்கும் அல்லவா?  எனவே, பனிரண்டு வருடங்களாகவே தனிமையில் வாழ்ந்துகொண்டிருப்பதால், அவள் மேல் கரிசனம் காட்டும் ரொடால்ஃபோவை அவளுக்கு உடனடியாகவே பிடித்துப்போய்விடுகிறது. அவர்கள் இருவரும், இளைஞர்கள் போன்று பேசிக்கொள்வது அழகாக இருந்தது. அந்தப் பேச்சில், தங்களுக்கு நிகழ்ந்த அறுவை சிகிச்சைகள், தற்போது சாப்பிடும் மாத்திரைகள் போன்றவைகளை அவர்கள் பகிர்ந்துகொள்வதுதான் புன்னகை வரவழைக்கும் விஷயம்.

செபாஸ்டியன் லேலியோ (Sebastián Lelio) எடுத்திருக்கும் இந்தப்படம், பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக் கரடிக்காக பரிந்துரைக்கப்பட்ட படம். அங்கே, க்ளோரியாவாக நடித்த பாலீனா கார்ஸியா (Paulina García), சிறந்த நடிப்புக்கான வெள்ளிக்கரடி விருதைப் பெற்றிருக்கிறார்.  இரண்டாவது நாளின் இறுதியில், ஒரு பெண்ணின் தரப்பிலிருந்து அவளது வாழ்க்கையை அலசும் இந்தப்படம் எங்களுக்குப் பிடித்தது.

இந்த மூன்று படங்களோடு பெங்களூர் திரைப்பட விழாவில் எங்களது இரண்டாம் நாள் இனிதே நிறைவடைந்தது. மூன்றாம் நாளிலும் (29th Dec 2013) நாங்கள் மூன்று படங்களைப் பார்த்தோம். அவற்றைப் பற்றி ஓரிரு நாட்களில் விரிவாக எழுத முயல்கிறேன்.

  Comments

Join the conversation