Birdcage Inn (1998) – South Korean

by Karundhel Rajesh May 7, 2012   world cinema

கிம் கி டுக் சீசன் 2 இன்றிலிருந்து ஆரம்பம். அவரது புகழ்பெற்ற படங்களை சீசன் ஒன்றில் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். இனி, அவரது அதிகம் புகழ்பெறாத – ஆனால் தரத்தில் பிற படங்களுக்குக் குறையாத படங்களைப் பார்க்கப்போகிறோம். ஒரு படத்தைக் கூட விடுவதில்லை. அட்லீஸ்ட் மாதம் ஒரு படம். அல்லது, இன்னமும் விரைவாகவே.

பொதுவாக, கிம் கி டுக் படங்களின் ஓரிரு காட்சியைப் பார்த்தாலே அது அவரது படம் என்பது கட்டாயம் தெரிந்துவிடும். ஏதாவது ஒரு மிருகம். மௌனம். அதீத வன்முறை. காதல். வழக்கமான காட்சிகளில் வித்தியாசமான, உணர்வுபூர்வமான செய்கைகள். இதுபோன்ற பல விஷயங்கள் அவரது படங்களை நமக்குத் தெளிவாக அடையாளம் காட்டிவிடும்.

சமுதாயம் என்பதில் முக்கிய பங்கு வகிப்பது, குடும்பம். American Beauty திரைப்படம், இக்குடும்பத்தின் சிதைவைக் காண்பிப்பதில் முக்கியமான படம். வெளிப்பார்வைக்கு அன்பானதொரு குடும்பமாக இருந்தாலும், உள்ளே குடும்பத்தின் அங்கத்தினர்கள் எப்படி ஒருவருக்கொருவர் மனதால் பிரிந்திருக்கிறார்கள் என்பதை அதிலிருந்து தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். அதைப் போலவே இந்த இடைவெளியைப் பற்றியும், மனித உறவுகளின் சிக்கல்களைப் பற்றியும் பேசும் படம்தான் Birdcage Inn.

கொரியாவின் கடலோரப் பகுதி (கடல் – கிம் கி டுக்கின் டெம்ப்ளேட்டின் இன்றியமையாத அம்சம்). ஒரு பெண்,  தனது சாமான்களை எடுத்துக்கொண்டு, ஒரு வீட்டிலிருந்து கிளம்பிக்கொண்டிருக்கிறாள். அவளது பக்கத்திலேயே இன்னொரு பெண். இந்தப் புதிய பெண், கிளம்பிக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்துக் கையசைத்து, வழியனுப்புகிறாள். ஆனால், கிளம்பும் பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

அந்தப் பெண் கிளம்பியபின், இந்தப் பெண், கடலுக்குச் செல்கிறாள். அங்கே ஒரு பாறையின் மேல் அமர்ந்துகொண்டு, வெகுநேரம் கடலையே பார்த்துக்கொண்டிருக்கிரார்ல். அவளது அருகில் ஒரு ஓவியம். ஆடைகள் இல்லாத ஒரு பெண்ணின் படம். கடலைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மெல்ல மெல்லக் கண்கள் சொருகுகின்றன. கடலிலேயே விழுந்துவிடுகிறாள் அவள். அங்கு அமர்ந்திருக்கும் ஒரு மனிதனால் காப்பாற்றப்படுகிறாள்.

தெருவில் நடந்துவரும் இப்பெண்ணின் முன்னர், மற்றொரு பெண் நடந்துகொண்டிருக்கிறாள். அந்தப் பெண், இவளைப் பார்த்ததும் அசூயை அடைந்தவளாக, முகத்தைச் சுளித்துக்கொண்டு வேகமாக நடக்கிறாள். இருவருமே ஒரு வீட்டின்முன் வந்து நிற்கிறார்கள். கதவைத்திறந்துகொண்டு உள்ளே நுழைகிறார்கள். அது ஒரு விடுதி. அந்த விடுதியின் பெயர்தான் Birdcage Inn. அந்த விடுதியின் முதலாளிக்கும் அவரது மனைவிக்கும், ஒரு மகன் – ஒரு மகள். மகனின் பெயர், ஹ்யூன்- வூ. மகளின் பெயர், ஹ்யே – மி. ஹ்யே- மி, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு காதலன் உண்டு. ஹ்யூன்-வூ பள்ளியில் படித்துக்கொண்டிருகிறான் என்பதையும் அறிகிறோம்.

கடலில் இருந்து வீட்டுக்கு வந்த பெண் தான் ஜின் – ஆ. அவளது வேலை, அந்த விடுதியில் தங்கிக்கொண்டு, விபசாரத்தில் ஈடுபட்டு, முதலாளிக்குப் பணத்தை சம்பாதித்துக்கொடுப்பது.

கதை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. அந்த விடுதிக்கு ஒரு கஸ்டமர் வருகிறான். அவனுடன் இரவைக் கழிக்கிறாள் ஜின் – ஆ. அங்கே, அவள்மேல் வெறித்தனமாக இயங்குகிறான் அவன். தனக்கு அருகில் இருக்கும் ஒரு பீர் பாட்டிலை கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறாள் ஜின் – ஆ. இவளது உடலுடன் சேர்ந்து அதுவும் அதிர்ந்துகொண்டே இருக்கிறது (இதுதான் கிம் கி டுக்கின் மற்றொரு டெம்ப்ளேட். சாதாரண காரியங்களில் அசாதாரண செய்கைகளை புகுத்துவது. இது அவரது அத்தனை படங்களிலும் நெடுக இருக்கும்). மறுநாள் காலையில், ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் ஜின்- ஆவை எழுப்பி, உறவில் வலுக்கட்டாயமாக ஈடுபடுகிறான் அவன். அதன்பின் அங்கே வரும் விடுதியின் உரிமையாளரின் மனைவி, ‘பகலில் விபசாரத்தில் ஈடுபடாதே என்று எத்தனை தடவை உன்னிடம் சொல்வது?’ என்று அவளைத் திட்டுகிறாள். ‘அவன்தான் அழைத்தான். நான் என்ன செய்வது?’ என்று முனகிவிட்டு அங்கிருந்து செல்கிறாள் ஜின் -ஆ. அறையில் பீர்பாட்டில்கள் இறைந்து கிடக்கின்றன. கூடுதல் பீர்பாட்டில்களுக்கான பணத்தை வீசிவிட்டு அங்கிருந்து செல்கிறான் கஸ்டமர்.

ஒரு நாள் ஆர்ட் கண்காட்சிக்குச் செல்கிறாள் ஜின் – ஆ. அங்கிருந்து திரும்பியவள், சில மீன்களை வாங்கி வந்திருக்கிறாள். அதில் ஒரு தங்க மீனும் இருக்கிறது. தனது அறைக்குள் சென்ற ஜின் – ஆவைப் பின்தொடரும் விடுதி உரிமையாளர், ஆவலுடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்கிறாள். ஜின் – ஆ எவ்வளவு முயன்றும், அவளால் தடுக்க முடிவதில்லை. வெறியுடன் அவள்மேல் உரிமையாளர் இயங்கும் நேரத்தில், தான் கொண்டுவந்த தங்கமீன் அடங்கிய பாலிதீன் கவரை அழுந்தப் பிடிக்கிறாள் ஜின் – ஆ (மீன் நசுங்கி இறக்கும் காட்சி வரப்போகிறது என்று நினைத்தேன்). உரிமையாளர் அங்கிருந்து சென்ற பின், கவரைப் பிரித்து, அந்த மீனை தொட்டிக்குள் விடுகிறாள் அவள்.

விடுதி உரிமையாளரின் மகன் ஹ்யூன் – வு, அவ்வப்போது ஏதாவது புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறான். அப்படி ஒரு நாள் ஜின் – ஆவையும்  படம் எடுக்கிறான். எடுத்த படத்தை அவளிடம் காட்டுவதற்காக, அவளது அறையினுள் நுழைகிறான். அப்போது, நிர்வாண மாடலாக சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க முடியுமா என்று அவளைக் கேட்கிறான். அவனை அங்கிருந்து துரத்திவிடுகிறாள் ஜின் – ஆ.

இதன்பின் என்ன நடக்கிறது என்பது, படம் பார்க்கப்போகும் நண்பர்களுக்கு இடையூறாக இருக்கலாம் என்பதால், இத்தோடு கதையை நிறுத்திவிடுகிறேன்.
தன்னுடன் இருக்கும் ஓவியத்தையே ஜின்-ஆ பார்த்துக்கொண்டே இருக்கும் காரணம் என்ன? நல்லதொரு ஓவியத்திறமை இருந்தும், அவள் ஏன் செக்ஸ் வொர்க்கராக இருக்கிறாள்?

படத்தில் சில எதிர்பாராத விஷயங்கள் இதன்பின் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள், இதுவரை சொல்லப்பட்ட கதாபாத்திரங்களின் வாழ்வில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்துகின்றன?

இந்தப் படம் கிம் கி டுக்கின் ஆரம்பகால முயற்சிகளில் ஒன்று. ஒருவேளை இப்படத்தின் இரண்டாம் பாதியில் நாம் பார்க்கும் சில சம்பவங்கள், வேறு படங்களில் பார்த்திருப்பதுபோலவும், அல்லது இந்தச் சம்பவங்களைப் பற்றி நாமே யூகிக்க முடிவதும் இதனால்தானோ?

இந்தப் படத்தின் குறிப்பிடத்தக்க விஷயம், படத்தில் ஒரே வயதில் இருக்கும் இரண்டு பெண் கதாபாத்திரங்களே. இந்த இரண்டு கதாபாதிரங்களுக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதை, கிம் கி டுக்கின் திறமை என்றுதான் சொல்லவேண்டும். இந்த வேறுபாட்டை விளக்கும் காட்சிகள் அமைத்திருப்பதன்மூலம், நம்மை சற்றேனும் யோசிக்கவைப்பதும் அவரது முத்திரையே. ஆனால், அதே சமயத்தில், அவரது பிற்காலப் படங்கள் போல் ஆடியன்ஸின் நேரடிப் பங்கேற்பு இப்படத்தில் இல்லை.

வழக்கமான கிம் கி டுக்கின் திரைப்படங்களின்படி, இப்படத்திலும், எந்தக் கதாபாத்திரம் நல்லது அல்லது கெட்டது என்பதைப்பற்றி நம்மால் யூகிக்க முடிவதில்லை. காரணம், கெட்ட செயல்களைப் புரியும் கதாபாத்திரமே வில்லன் என்ற சினிமாவின் விதி, அவரால் பலமுறை உடைக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களின் வாழ்வில் நல்லதும் கெட்டதும் மாறிமாறியே வருகின்றன என்பதைப்போல், இந்த மனிதர்களும் அதற்கேற்றவாறு எதிர்வினை புரிகின்றனர்.
படத்தைப் பாருங்கள். இது கிம் கி டுக்கின் சிறந்த திரைப்படம் அல்ல. ஆனால், இது அவரது மோசமான திரைப்படமும் அல்ல (அப்படி ஒரு மோசமான படம் இன்னமும் அவர் எடுத்திருக்கவில்லை).

பி.கு – இதுவரை கருந்தேளில் வெளிவந்திருக்கும் கிம் கி டுக்கின் படங்களைப்பற்றிய விமர்சனங்களை இங்கே க்ளிக்கிப் படிக்கலாம் —> Kim Ki Duk Reviews

Birdcage Inn திரைப்படத்தின் trailer இங்கே.(Trailer is PG Rated).

  Comments

10 Comments

  1. After a long time, nice to see a KIM’s movie review. I have watched this flim many times.
    As you have mentioned, in Kim’s movie, there is no Hero or Villan in his movies. Every Character in the movie is shown with its true character which we can can’t term has hero or villan.

    Reply
  2. விமர்சனம் வழக்கம் போல அருமைங்க சார்..ரசித்து எழுதிருக்கீங்க..ஆனால், நான் இன்னும் கிம் கி டுக் இயக்கிய ஒரு படத்தை கூட பார்த்தது இல்லை என்று நினைக்கும் போது வருத்தம் அளிக்கிறது.கண்டிப்பாக விரைவில் சிலதை டவுன்லோடு போடுகிறேன்..உங்களது மற்ற விமர்சனங்களையும் விரைவில் படிக்கிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்.மிக்க நன்றி.

    Reply
  3. இந்த மாதிரி உலகசினிமா பாக்குற அளவுக்கெல்லாம் நாம இன்னும் பக்குவப்படல பாஸ். ஆனால் நீங்க சொன்னதுக்கப்புறம் இவரோட படம் ஒன்று பார்க்கணும்னு தோணுது.

    உங்க ரெகமெண்டேஷன்ல கிம் கி டுக் பெஸ்ட்டுன்னு எதைச் சொல்வீங்க? அதை டவுன்லோட் போடுறேன்.

    Reply
  4. thala come back again with combo kim-ki-duk, tala valzka,
    thala thondaradi podialwar. ganesh.

    Reply
  5. பாத்துருவோம் இந்த வாரம் 🙂

    ஹாலிவுட் ரசிகன் : Spring, Summer, Fall, Winter and Spring தான் என்னோட favorite 🙂 பாருங்க செமையான படம் 🙂

    Reply
  6. @kamal kanth : ரொம்ப நன்றி பாஸ். சீக்கிரமே டவுன்லோட் போட்டு பாத்துடுறேன்.

    Reply
  7. //ஆனால் நீங்க சொன்னதுக்கப்புறம் இவரோட படம் ஒன்று பார்க்கணும்னு தோணுது. //

    பாவமய்யா நீர்!!!! பிழைத்துப் போய்விடும்!!!

    Reply
  8. குருவே சரணம்… கலக்கிடிங்க போங்க..கொஞ்சம் கொஞ்சமா எல்லா படத்தையும் எழுதிடுங்க… நான் அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும்… உங்க blog படிச்சுதான் நான் உலக கிளாசிக் திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்தேன்.. நன்றி தலைவா..

    Reply
  9. சூப்பர் விமர்சனம்

    Reply

Join the conversation