Black Mass (2015) – English

by Karundhel Rajesh September 21, 2015   English films

ஜேம்ஸ் வைட்டி பல்ஜர் (James ‘Whitey’ Bulger) என்பவன் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தெற்கு பாஸ்டனைக் கலங்கடித்த கிரிமினல்களில் ஒருவன். ஏராளமான கொலைகள், கடத்தல், போதைப்பொருட்களை விநியோகித்தல், அடிதடி, சைக்கோத்தனமான தாக்குதல்கள் என்று இவன் செய்த கிரிமினல் வேலைகள் ஏராளம். ஆனால் அப்போதைய பிற கேங்ஸ்டர்களுக்கும் இவனுக்கும் இருந்த மிகப்பெரிய முதல் வித்தியாசம் – இவனது இளைய சகோதரரான வில்லியம் பில்லி பல்ஜர் என்பவர் பாஸ்டனைச் சேர்ந்த மிகப்பிரபலமான அரசியல்வாதி. மொத்தம் 35 வருடங்கள் அரசியலில் இருந்தவர் (1961 – 1996). இரண்டாவது வித்தியாசம் – FBIக்கு இவனது எதிரி கும்பலான ஆஞ்ஜூய்லோ சகோதரர்களின் பல்வேறு கிரிமினல் வேலைகளைப் பற்றி அவ்வப்போது தகவல்களை அளித்து வந்த இன்ஃபார்மராகவும் வைட்டி பல்ஜர் விளங்கினான். இதனால், இவனது கிரிமினல் வேலைகளைப் பற்றி எஃப்.பி.ஐ கண்டுகொள்லவில்லை. இதைவைத்தே, எதிரி கும்பலை அழித்தும், எஃப்.பி.ஐயின் நிழலில் தனது சாம்பாஜ்யத்தை மிகப்பெரிய அளவு வளர்த்தும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தான் வைட்டி பல்ஜர்.

இந்த ஜேம்ஸ் வைட்டி பல்ஜரின் கதையை மையமாக வைத்து Black Mass என்ற புத்தகம் 2001ல் எழுதப்பட்டது. புத்தகம் பிரபலமானதும் திரைக்கதை எழுதப்பட்டு இப்போது திரைப்படம் வெளிவந்துள்ளது.

உங்களுக்கு ‘குட்ஃபெலாஸ்’ (Goodfellas) படம் பிடிக்குமா? குட்ஃபெலாஸ் போலவே ஹாலிவுட்டில் வெளிவந்திருக்கும் பல திரைப்படங்கள் இன்னும் பிரபலம். Scarface, Once upon a time in America, Donnie Brasco, Casino, American Gangster, Bugsy, The Departed, Wolf of Wall Street (இவற்றில் பல படங்கள் ஸ்கார்ஸேஸி இயக்கியவை) போன்ற படங்கள் உதாரணங்கள். அந்த லிஸ்ட்டில் புதிய சேர்க்கைதான் ப்ளாக் மாஸ். கிட்டத்தட்ட டான்னி ப்ராஸ்கோவின் ரிவர்ஸல். படம் பார்ப்பவர்களுக்கு இது புரியும்.

ஜேம்ஸ் வைட்டி பல்ஜராக ஜான்னி டெப். அவனது அரசியல்வாதி சகோதரர் வில்லியம் பில்லி பல்ஜராக பெனடிக்ட் கம்பர்பேட்ச். இப்படி ஒரே படத்தில் இந்த இரண்டு ஹெவிவெய்ட்களும் சேர்ந்தால்? எதிர்பார்த்தது போலவே ஜான்னி டெப் நடிப்பு பிரமாதம். வைட்டி பல்ஜரின் இளவயது ஃபோட்டோக்களைப் பார்த்தால் ஜான்னி டெப் எந்த அளவு சிறப்பாக நடித்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதேபோல் பெனடிக்ட் கம்பர்பேட்ச்சின் நடிப்பும் சிறப்பு (இருப்பினும் ஒரு சின்ன பிரச்னை உண்டு. அதைப் பின்னால் பார்க்கலாம்). படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஜோயல் எட்ஜர்டன் (ரிட்லி ஸ்காட்டின் எக்ஸோடஸ் படத்தில் ராம்ஸீஸாக நடித்தவர். இவரது The Gift பார்த்துவிட்டீர்களா?) நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் ஜான் கானலி. இவர், ஜேம்ஸ் & வில்லியம் பல்ஜரின் இளவயதுத் தோழர். குறிப்பாக வில்லியமுடன் மிகவும் நெருங்கிய நண்பர். ஆனால் பின்னர் எஃப்.பி.ஐ அதிகாரியாக மாறி, சௌத் பாஸ்டனுக்கே வருகிறார். இதனால் இவரால் ஜேம்ஸ் பல்ஜரின் சாம்ராஜ்யம் சரியப்போகிறது என்ற நிலையில், மெல்ல மெல்ல ஜேம்ஸின் பக்கம் சாய்கிறார். அதேசமயம், இவனது கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் எதிரி கேங்கான ஆஞ்ஜூய்லோ சகோதரர்களால் கொல்லப்படுகிறான். அப்போது ஜேம்ஸிடம் ஜான் கானலி பேசுகிறார். இவரால்தான் ஜேம்ஸ் பல்ஜர், எஃப்.பி.ஐயின் இன்ஃபார்மராக மாறச் சம்மதிக்கிறான். அப்போதுதான் எதிரி கும்பலை முற்றிலும் அழிக்கமுடியும் என்பது ஒரு காரணம். எஃப்.பி.ஐயின் நிழலில் தனது சாம்ராஜ்யத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் வளர்த்தலாம் என்பது இன்னொரு காரணம்.

அதன்படியே எல்லாமே நடக்கிறது. ஜேம்ஸ் பல்ஜர் மூலமாக எஃப்.பி.ஐக்கு சில முக்கியமான தகவல்கள் செல்கின்றன. இனிமேல் கொலைகள் செய்யக்கூடாது என்பதை மட்டும் ஜேம்ஸூக்கு ஒரே ஒரு நிபந்தனையாக எஃப்.பி.ஐ சொல்கின்றனர். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல், பல கொலைகளை வரிசையாக அரங்கேற்றுகிறான் ஜேம்ஸ் பல்ஜர். கூடவே, யாரேனும் எஃப்.பி.ஐக்கு ஜேம்ஸ் பல்ஜரைப் பற்றிய தகவல்களைக் கொண்டுசென்றால், அங்கே இருக்கும் ஜான் கானலி மூலமாக அதை உடனடியாகத் தெரிந்துகொண்டு அவர்களையும் போட்டுத்தள்ளுகிறான் ஜேம்ஸ்.

இது எல்லாமே ஜான் கானலியின் மேலதிகாரி சார்ல்ஸ் மெகையருக்குத் தெரிகிறது. ஆனால் அவர் ஜான் கானலியை நிர்ப்பந்தப்படுத்தும்போதெல்லாம் எதிரி கும்பலைப் பற்றிய முக்கியமான தகவல்கள் ஜேம்ஸ் மூலம் எஃப்.பி.ஐக்கு வருகின்றன. எனவே அவரது வாய் அடைக்கப்படுகிறது.

ஜேம்ஸ் பல்ஜருக்கு ஒரு மனைவி. பெயர் லிண்ட்ஸே ஸிர். ஒரு இளவயது மகன். இந்த மகன், சிறு வயதிலேயே ஒருவிதக் கொடூரமான காய்ச்சலால் (Reye Syndrome) பாதிக்கப்பட்டு, கோமாவுக்குப் போய், லிண்ட்ஸேவின் விருப்பப்படி இறந்துவிடுகிறான். இதனால் லிண்ட்ஸேவுடன் ஜேம்ஸ் பல்ஜரின் உறவு முறிகிறது. இதன்பின் ஜேம்ஸ் பல்ஜர் இன்னும் வெறித்தனமாக செயல்பட ஆரம்பிக்கிறான். சிறுகச்சிறுகத் தெற்கு பாஸ்டனின் மிகப்பெரிய தாதாவாக மாறுகிறான். கொஞ்சம் கொஞ்சமாக, தன்னைச் சேர்ந்திருப்பவர்களிடமே தனது வன்முறையைக் காட்ட ஆரம்பிக்கிறான்.

இதன்பின்னர் ஜேம்ஸ் பல்ஜருக்கு என்ன ஆயிற்று? எப்படி எஃப்.பி.ஐ அவனை வளைத்தது என்பதெல்லாம்தான் இந்தப் படம்.

ஜான்னி டெப்பின் நடிப்புதான் இந்தப் படத்தின் பிரதான அம்சம் (ஆனாலும் சில காட்சிகளில் அவரது மேக்கப் ஒட்டவில்லை). இருந்தாலும், குட்ஃபெலாஸ் படத்துக்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. அதேசமயம் குட்ஃபெலாஸின் raw உணர்வு இதில் இல்லை. காரணம் இதைப்போன்ற படங்களின் மிகவும் predictable கதைதான். இரண்டே மணி நேரத்துக்குள் எல்லாவற்றையும் சொல்லியாகவேண்டும் என்பதால் பல கதாபாத்திரங்களின் பின்னணி மிகவும் மேலோட்டமாகவே சொல்லப்படுகிறது. குட்ஃபெலாஸ் போல ஆழமான பின்னணி இதில் பெரும்பாலும் பல கதாபாத்திரங்களுக்கு இல்லை. அதேபோல் பெனடிக்ட் கம்பர்பேட்ச், கெவின் பேகன் போன்ற நடிகர்கள் இதில் தேவையில்லை என்றே தோன்றியது. ஜேம்ஸ் வைட்டி பல்ஜரின் சகோதரர் வில்லியம் பில்லி பல்ஜராகக் கம்பர்பேட்ச் நடித்திருந்தாலும், அவருக்கான கதை இதில் ஆழமாக இல்லை. அந்த வேடத்தில் யார் வேண்டுமானாலும் நடித்திருக்கமுடியும். அதேபோல் ஓரிரண்டு வித்தியாசமான அம்சங்களைத் தவிர, இந்த ஜேம்ஸ் வைட்டி பல்ஜர் என்பவன் பெரும்பாலும் நாம் ஹாலிவுட் படங்களில் (மேலே உள்ள லிஸ்ட்) பார்த்திருக்கும் அதே தாதாதான். இவனுக்கும் குட்ஃபெலாஸின் டாம்மி டெவீடோவுக்கும் (ஜோ பெஸ்ஸி immortalize செய்த கதாபாத்திரம்) பல ஒற்றுமைகள். அதில் வரும் ஒரு காட்சியைப் போலவே (How the fuck am I funny to you?) இதிலும் ஒரு காட்சி உண்டு. கீழே உள்ள ட்ரைலரில் பார்க்கலாம்.

எனவே, ஜானி டெப்பின் நல்ல நடிப்புக்காகவும், இயல்பான, வன்முறை கலந்த திரைக்கதைக்காகவும் அவசியம் ப்ளாக் மாஸைப் பார்க்கலாம். அதேசமயம் புதிதாக இதில் ஒன்றும் இல்லை. குறிப்பாக, மேலே சொல்லியிருக்கும் படங்களை நீங்கள் பார்த்திருந்தால், இந்தப் படம் அவசியம் எப்போதோ பார்க்கப்பட்ட உணர்வையே கொடுக்கும். மார்ட்டின் ஸ்கார்ஸேஸியிடம் இப்படத்தை ஒப்படைத்திருந்தால் அவசியம் இதை மிகச்சிறப்பாக எடுத்திருப்பார் (ஆனால் ஒத்துக்கொண்டிருக்க மாட்டார். ஒரே போன்று எத்தனை படங்களைத்தான் எடுப்பது என்று சொல்லி இப்படத்தை நிராகரித்திருப்பார்). ஸ்காட் கூப்பர் போன்ற ஒரு சராசரி இயக்குநரிடம் இப்படத்தைக் கொடுத்ததுதான் இந்தப் படம் ஒருவேளை வருங்காலத்தில் விருதுகள் வாங்காமல் போகக்கூடும் என்பதன் காரணமாக இருக்கும்.

பி.கு:

1. ஜேம்ஸ் வைட்டி பல்ஜர் கிட்டத்தட்ட பனிரண்டு வருடங்கள் தலைமறைவாக இருந்து, 2011ல்தான் கைது செய்யப்பட்டான். தற்போது இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறான். வயது 86.

2. இது ஒரு ‘ஹாலிவுட்’ படம். எனவே நிஜவாழ்க்கையில் ஜேம்ஸ் வைட்டி பல்ஜருக்கும் படத்தில் வரும் கதாபாத்திரத்துக்கும் பல சினிமாத்தனமான வேறுபாடுகள் உண்டு. அதுதான் படத்தின் பலவீனங்களில் ஒன்று. அங்கேதான் ஸ்கார்ஸேஸி போன்ற ஒரு இயக்குநர் இல்லாத பிரச்னை தெரிகிறது.

3. Poster taken from – http://wallpaperspal.com/wp-content/uploads/Black-Mass-Movie-Poster-4K-Wallpapers.jpg

  Comments

3 Comments

  1. Varatharajan

    I am waiting for antman review please sir

    Reply
  2. AKSAYAN Sri Lanka

    AKSAYAN
    Sri lanka
    உங்க விமர்சனத்திற்காக காத்திருந்தேன்
    Super
    இன்னும் தொடருங்கள்

    Reply
  3. நீண்ட நாளுக்கு பிறகு மிகச்சிறிய கட்டுரை. நான்காவது பாரா கடைசி வரி ‘’வளர்க்கலாம்” திருத்தம்.

    Reply

Join the conversation