புனைவின் நிழல்

by Karundhel Rajesh December 30, 2010   Book Reviews

சிறுகதைகள் மேல் எனக்கு ஒரு கண் உண்டு. சிறுகதைகள் எழுதத் தொடங்கலாம் என்றெல்லாம் எப்பொழுதாவது ஒரு விபரீத ஆசை என்னுள் எழும். ஆமாம். பின்னே? எப்படி சில நடிகர்கள், தேமேயென்று சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்துவிட்டு, பின்னர் திடீரென்று தனக்கு எழும் விசிறிகள் கூட்டத்தைக் கண்டு மதிமயங்கி (இதில் அடிவருடிகளின் பங்கும் கணிசமாக உண்டு என்று தோன்றுகிறது. மது மயக்கத்தில் நடிகர் இருக்கும் வேளையில், ‘அண்ணே.. சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. இண்ணிக்கி நம்ம ஊர் ரசிகர் மன்றத்துல, இன்னமும் ஏன் அண்ணன் அரசியலுக்கு வரல்லன்னு ஒரு சின்ன சலம்பலாண்ணே.. என்னிய கேட்டா, அரசியலுக்கு மட்டும் நீங்க வந்தீங்க.. மக்கா நேரே சியெம் தான். அவ்வளவு சப்போர்ட்டுண்ணே உங்களுக்கு’), அரசியலில் திடும்மென்று குதித்துவிட்டு, பின்னர் அதற்கு ஒரு சப்பைக்கட்டு வேறு கட்டுகிறார்களோ (’எனக்கு சின்ன வயசுல இருந்தே மக்களுக்குச் சேவை செய்யணும்னு ஆசை உண்டு. இஸ்கூலு படிக்கும்போதே நண்பர்களுக்குக் கம்மர்கட் நெறைய வாங்கிக் குடுத்துருக்கேன்’), அதே போல், வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்ததும், ’மக்கா அடுத்தது சிறுகதை தான்யா.. அதைப் படிச்சிட்டு அவனவன் சாவணும்’ என்று காதலிக்க நேரமில்லை நாகேஷ் போல யோசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால், எதை எழுதுவது? வழக்கப்படி ஒன்றிரண்டு காதல் தோல்விக் கதைகள், அதன்பின் ஒரு கொலைக்கதை. பின்னர் சாதிப் பிரச்னையைப் பற்றி இரண்டு கதைகள். அதன்பின், அனாதரவாக விடப்படும் சிறுவர்கள் பற்றி ஒன்று. இதற்குள் எப்படியும் ஒரு பல்ப் நாவல் எதாவது ஒரு மாத நாவலில் எழுதினால், பின்னர் நாமும் ஒரு எழுத்தாளர் தான்; இப்படி எனது சிந்தனை ஓடியது. ஆனால், நல்லவேளையாக அதனைச் செயல்படுத்துமுன், உலகத்தின் சிறந்த இலக்கியவாதிகளின் படைப்புகளைப் படிக்கத் தொடங்கலாம் என்று எண்ணி, அதனைச் செய்து கொண்டிருக்கிறேன். ஏனெனில், நாம் முயலும் ஒரு துறையில், பல ஜாம்பவான்கள் ஏற்கெனவே செய்த சாதனைகளைப் பற்றிய அறிவு கொஞ்சமாவது இருந்தால் மட்டுமே அந்தத் துறையில் நாமும் சோபிக்க முடியும் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

அப்படி இருக்கும்போது, இரண்டு மாதங்களுக்கு முன் பெங்களூரில் நடந்த புத்தகக் கண்காட்சியில், பல நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணியிருந்த ஒரு புத்தகத்தை, உயிர்மை அரங்கில் சென்று தேடினேன். ஆரம்பத்தில், புத்தகம் கிடைக்கவில்லை. பின்னர், உயிர்மையிலேயே ஒரு இடத்தில், இந்தப் புத்தகத்தின் இரண்டே இரண்டு பிரதிகள் மட்டும் ஒளிந்திருந்ததைக் கண்டு, பேருவகை அடைந்து, அதில் ஒரு பிரதியை வாங்கிக்கொண்டு ஓடி வந்துவிட்டேன்.

அந்தப் புத்தகம் தான் ‘புனைவின் நிழல்’.

புத்தகம், ஒரு சிறுகதைத் தொகுப்பு. எழுதியவர், மனோஜ். மனோஜைப் பற்றி நமது நண்பர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும், தெரியாத நண்பர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தின் பல முன்னணிப் பத்திரிகைகளில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மனோஜ், பல்வேறு சந்தர்ப்பங்களில் பல பத்திரிக்கைகளில் எழுதிய சிறுகதைத் தொகுப்பே புத்தகமாக வெளிவந்துள்ளது. தொகுப்பு என்றதும், ஆயிரம் பக்கம் கொண்ட ஒரு தலையாணியோ என்று சந்தேகப்பட்டு ஓடிவிடாதீர்கள். மொத்தமே நூற்றியிருபது பக்கங்கள்தாம். பதினைந்தே சிறுகதைகள். ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறது என்றால், மனோஜிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. “திருமூலர், பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளிவந்து, ஒரே ஒரு நாலடிச் செய்யுள் சொல்லிவிட்டு, மறுபடியும் பொந்தினுள் சென்றுவிடுவாராம். அதேபோல்தான் மனோஜ். வருடத்துக்கு ஒரு சிறுகதை மட்டுமே எழுதுவது என்ற ஒரு கொள்கை வைத்திருக்கிறார். அவரிடம் கேட்டால், ‘ஏன்? மௌனி அப்படித்தானே எழுதினார்?” என்று நம்மையே திருப்பிக் கேட்பார்” – அடைப்புக்குறிக்குள் இருப்பது, நமது சாரு சொன்னது. மதுரையில் சென்ற ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில். எனவேதான் சிறுகதைகள் குறைவாக இருக்கின்றன.

சிறுகதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால், அவற்றின் வீச்சில்?

புத்தகத்தின் முதல் சிறுகதை, ‘அட்சர ஆழி’. ஒரு அருமையான உலகப் படமாக எடுக்கப்படக்கூடியது (என்ன.. கொஞ்சம் செலவு பிடிக்கும்). இக்கதையில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களும் வர்ணனைகளும், அப்படியே நமது கண்முன் விரிகின்றன. தனக்கு நடப்பவைகளை ஒரு நபர் நமக்கு விவரிக்கும் பாணியில் எழுதப்பட்ட இந்தக் கதை, சந்தேகமில்லாமல் என் மனதில் இப்பொழுதும் சுற்றியவண்ணமே இருக்கிறது. கதையைப் படித்துமுடிக்கையில் என் மனதில் எழுந்த எண்ணமானது: ‘அடடா.. இதைத் திரையில் பார்த்தால் எப்படி இருக்கும்?’ என்ற எண்ணமே. இதைப் படித்தால் நீங்களும் புரிந்துகொள்வீர்கள்.

அடுத்த கதை, ‘றெக்கை’. இக்கதை முழுக்கவும் ஊடோடும் ஒரு மர்மம் இதில் இருக்கிறது. படிக்கும் நம்மையும் கதைக்குள் இழுத்து, முடிவையும் சம்பவங்களையும் பற்றிய விதவிதமான புரிதல்களை நமக்குள் எழுப்பும் திறமை இக்கதைக்கு உண்டு. மேலே நாம் பார்த்த அட்சர ஆழியிலும் இந்த Post Modernistic கூறுகள் இருக்கின்றன.

இதன்பின் வருவது, ‘பால்’. மீண்டும் ஒரு பின்நவீனத்துவ சிறுகதை. இதிலும், கதை கனவா, நனவா, யதார்த்தமா அல்லது மாயையா என்று நம்மை யோசிக்க வைக்கும் சங்கதி இருக்கிறது.

‘பின்னிருந்து சில குரல்கள்’ என்ற அடுத்த கதை, இயல்பு வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒரு அபத்த நொடியைப் பற்றியது. இந்தக் கதையை நமக்குச் சொல்லும் நபர் (அவரது பெயர், கதையில் இல்லை. உமாவின் கணவர் என்றவகையில் மட்டுமே அவரை நாம் அடையாளம் காண்கிறோம்) சந்திக்கும் இந்த அபத்தமான சூழ்நிலை – நம்மையே நமது பொதுப்புத்தியின்மீது கோபம் கொள்ள வைக்கும் இந்தச் சூழ்நிலையானது – நம் அனைவருக்கும் பல முறைகள் வாழ்வில் நடந்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில் இது எனக்குப் பிடித்திருந்தது.

அடுத்தது, ‘ஏவாளின் விலா எலும்பு’. நிகழ்காலத்திலிருந்து ஒரே தாவாகத் தாவி, ஆதியாகமத்தில் நிற்கிறோம். ஏவாளையும் ஆதாமையும் சந்திக்கிறோம்.

பின், ‘குளியல்’. மிகச்சிறிய கதை.

அதன்பின், ‘திரை’. இந்த முழுத் தொகுப்பிலும், சற்றே நாடகத்தனம் கலந்த ஒரு கதையாக எனக்குத் தோன்றியது இந்த ஒரு கதை மட்டுமே.

அடுத்த கதை, ‘857’. நாம் கொஞ்சம் கூட யூகிக்கவே முடியாத ஒரு கதைக்களன். கதை, மொத்தம் ஒன்றரைப் பக்கங்கள் மட்டுமே. இருப்பினும், என்னை மிகவும் வசீகரித்தது இக்கதை. இந்தக் கோணத்தில் கூட யோசிக்கிறாரே மனிதர் என்று எண்ணினேன்.

இதன்பின்னே வருவது, ‘கச்சை’. முன்னெல்லாம் விகடனில், ‘சற்றே பெரிய சிறுகதை’ என்று போடுவார்கள். குறுநாவலுக்கும் சிறுகதைக்கும் இடையே உள்ள ஒரு வடிவம். இக்கதை, அந்த வடிவத்தை விடவும் சற்றே சிறியது. பல அருமையான, நிஜ வாழ்வில் நாம் காணும் வர்ணனைகள் நிரம்பிய கதை. ஒரு சமூகப் பிரச்னையாக இருந்த ஒரு விஷயத்தை சற்றே தொட்டுக்கொண்டு, கொஞ்சம் பயத்தையும், கொஞ்சம் காமத்தையும் நமக்குள் எழுப்புகிறது கதை (உண்மையில், முதலில் காமம். பின் பயம்).

இதன்பின் வருவது தான் ‘புனைவின் நிழல்’. ஒரு பத்திரிக்கையாளன் தனது வாழ்வில் எதிர்கொள்ளும் கணங்களைப் பற்றிய கதை. மிகவும் சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் கதை, பின்னர் சீரியஸ் தோற்றம் கொள்கிறது (இக்கதை எனக்குப் பிடித்ததைப் பற்றி யோசிக்கையில், எந்தக் கதையாக இருந்தாலும் சரி. அதில் வரும் கதாபாத்திரங்கள், நாம் நிஜ வாழ்வில் காணும் பிரபலங்களை ஒத்திருந்தால், அவர்களை அடையாளம் கண்டுபிடிக்கும் தேடல் காரணமாகவே சுவாரஸ்யம் அதிகரிக்கிறது என்று தோன்றியது).

அதற்கு அடுத்த கதை, ‘சர்ப்ப வாசனை’. இக்கதையின் ஆரம்பத்தைப் படித்ததுமே, Arthur Conan Doyle எழுதிய Sherlock Holmes கதையான ‘Adventure of the Speckled Band’ (க்ளிக்கிப் படிக்கவும்) கதை என் மனதில் வெட்டிச் சென்றது. ஆர்தர் கானன் டாயல் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸின் 56 சிறுகதைகளிலும் எனக்கு மிகமிகப் பிடித்த கதை இக்கதைதான் (நாவல்களில், The Hound of Baskervilles ( – இது பைகோ க்ளாஸிக்ஸில் வெளிவந்த எனது குழந்தைப் பருவம் நன்றாக நினைவிருக்கிறது) மற்றும் The Sign of the Four ). கதையின் ஆரம்பத்தில் இருந்தே, நம்மைப் பயத்தில் கட்டிப் போட்டுவிடுவார் டாயல். கதையின் கடைசி வரிகளில்தான் மர்மம் கட்டவிழ்க்கப்படும். சர்ப்ப வாசனையின் ஆரம்ப வரிகளிலும் இதே மனநிலையை அடைந்தேன். பின்னர் கதை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறது.

இதன்பின் வருவது, ‘அச்சாவோட சிச்சாமணி’. அச்சா யார்? சிச்சாமணி என்பது, ஜாம்பவான் வைத்திருந்த சியமந்தக மணியைப் போல் இந்த அச்சா வைத்திருந்த ஒரு விசித்திர மணியோ? என்றெல்லாம் குழம்பாதீர்கள். சிச்சாமணி என்பது, குஞ்சு என்று ‘தூய’ தமிழிலும், ‘லிங்கம்’ என்று கொச்சைத் தமிழிலும் அழைக்கப்பெறும் அதே ’மணி’ தான். வெடிச்சிரிப்பில் நம்மை ஆழ்த்தக் கூடிய கதை இது.

அடுத்த கதை, ‘சாமி’. இதுவும் நம்மிடையே இன்றும் நிலவும் ஒரு அசிங்கமான சமூக வழக்கத்தைப் பற்றி, அதனால் பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவர் கூறுவதைப் போன்ற கதை. ஒரு சிறிய துளி: இதில், மொ. மோ. செல்வராசு என்ற கதாபாத்திரம் வருகிறது. மொல மோந்த செல்வராசு என்ற பெயரின் சுருக்கமே அது.

‘சூன்யவெளி’ என்பது அடுத்த கதை. நமது வாழ்வில் தவறாமல் சில வருடங்களுக்கு முன் இடம்பெற்று வந்த ஒரு சூன்யவெளியைப் பற்றிய ஒரு கதை (ஆனால் மனோஜிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இதே சூன்யவெளியால் தான், என் வாழ்வில் ஒரு மிக சந்தோஷமான விஷயம் நடந்தேறியது. அதன் பெயர்: ஷ்ரீ).

இத்தொகுப்பின் கடைசிக் கதை, ‘மஹல்’. ஒரு சரித்திர சம்பவத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட இக்கதையில், அந்த சரித்திர சம்பவத்தின் சோகமான மறுபக்கம் நமக்குப் படிக்கக் கிடைக்கிறது. நல்ல கதை.

அவ்வளவே. இப்புத்தகத்தைப் படித்துமுடித்த கணம் முதல், எனது சிறுகதை ஆசையை மொத்தமாக ஒத்தி வைத்து விடலாம் என்றே எண்ணத் துவங்கி விட்டேன். அவ்வளவு versatile கதைகள். அவ்வளவு வேறுபட்ட கதைக்களன்கள். எனது மனதைக் கொள்ளை கொண்டுவிட்டது இத்தொகுப்பு. மனோஜைப் பாராட்ட நான் யார்? எனக்கு எந்தத் தகுதியும் இல்லாத போதும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

பி.கு – இத்தொகுப்பைப் படித்து, மனோஜ் ஒரு சீரியஸான மனிதர் என்ற முடிவுக்கு மட்டும் வந்தே விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மிகமிக ஜாலியான ஒரு மனிதர் அவர். ஃபேஸ்புக்கிலும் இருக்கிறார். படு ஜாலியான கமெண்டுகளை அவரது Status updatesல் பார்க்கலாம். அவரை இங்கே பிடிக்கலாம்.

  Comments

14 Comments

  1. இன்னொரு புத்தகத்த வாங்கி வெச்சுருங்க… அப்புறம் வந்து வாங்கிக்கறேன்

    Reply
  2. \எனக்கு எந்தத் தகுதியும் இல்லாத போதும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.\ என்ன தன்னடக்கம்பா சாமி!?
    @சு.மோகம்-வழிமொழிகிறேன்

    Reply
  3. புத்தக விமர்சனம் டாப்பு. அடுத்த விடுமுறையில் தேடிபுடிக்கனும்.

    //இப்புத்தகத்தைப் படித்துமுடித்த கணம் முதல், எனது சிறுகதை ஆசையை மொத்தமாக ஒத்தி வைத்து விடலாம் என்றே எண்ணத் துவங்கி விட்டேன்//

    hahaha same pinch என்னோட நேற்றயை FB ஸ்டேட்டஸ் மெசேஜ் கூட இதுதான்…. நான் படித்தது பிரமீளின் கவிதைகள்.:)))

    Reply
  4. நிழலின் வெளிச்சத்துக்கு 🙂

    Reply
  5. என்னதான் கம்ப்யூட்டரில் நிறைய விஷயங்கள் மேய்ந்தாலும் ,புத்தகம் படிக்கும் சுகமே அலாதியானதுதான்.

    Reply
  6. நண்பரே,

    இம்மாத உயிர்மையில் மனோஜ் அவர்கள் எழுதிய அருகில் ஒருவன் எனும் சிறுகதை வெளியாகியிருக்கிறது. வித்தியாசமாக ஆரம்பித்து பயங்கரமாக முடியும் 🙂 அவரின் சிறுகதை தொகுப்பிற்கு நீங்கள் வழங்கியிருக்கும் மதிப்புரை சிறப்பான ஒன்றாக இருக்கிறது. நீங்கள் எழுதும் காதல் திரைப்பட பதிவுகள் சிறுகதைதான் 🙂

    Reply
  7. உங்களுக்கும் மற்றும்

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
    .

    Reply
  8. அட்சர ஆழி…மரத்தை வெட்டுற கதைதானே….ஒரு கடற்கரையில் முடியும்னு நெனைக்கறேன்…மனோஜ் தன்னோட வாரிசு என்று சாரு சொன்ன போது இந்த தொகுப்பை வாங்கி படித்தேன்…ரொம்ப நல்ல வித்தியாசமான தொகுப்பு…உலகப் படம் பார்க்கும் நேரத்தில் புத்தகம் படிக்கவும் நேரம் இருக்கா பாஸ்…கலக்குங்க…

    Reply
  9. @ கருந்தேள் கண்ணாயிரம்
    //அட்சர ஆழி, மரம் இல்ல.. ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன் பற்றியது.. ஆனா, அங்க வந்து கமெண்ட் போடாம இங்க போட்ருக்கீங்களே.. உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா.. //

    அடச்சே….இதுக்குதான் நாலு எழுத்து படிக்கோனும்கிறது… எங்கடா நான் போட்ட கமெண்டை தேளு தூகிட்டாறு போலிருக்கேன்னு காண்டாயி உட்கார்ந்திருந்தேன்…ஹி ஹி ஹி கமென்ட் போட்டுட்டேன்….

    Reply
  10. சுகுணாவின் மதியப் பொழுது படித்துவிட்டீர்களா கருந்தேள்?

    Reply

Join the conversation