Breath (2007) – South Korean

by Karundhel Rajesh September 15, 2010   world cinema

கடைசியாக ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுதியது, போன மாதம் என்று நினைக்கிறேன். மங்கோல். அதன்பின்பு, அடுத்த திரைப்படம் இது. இடைப்பட்ட காலத்தில், கமல்ஹாஸன், கொடைக்கானல் என்று பிஸியாக இருந்துவிட்டேன்.

சரி. இந்த ‘ப்ரெத்’ என்பது, கிம் கி டுக் இயக்கிய ஒரு திரைப்படம். நாம் பார்க்கும் ஐந்தாவது கிம் கி டுக் திரைப்படம் இது. இன்னும் மிகச்சில கிம் கி டுக் படங்களே இருக்கின்றன. அவற்றையும் மெதுவாகப் பார்த்து விடுவோம். அவ்வப்போது எழுதுகிறேன்.

ஏற்கெனவே நாம் பார்த்தபடி, கிம் கி டுக் படங்கள் என்பது ஒரு தனி அனுபவம். அவற்றில் இருந்து நாம் பெறும் செய்திகள் ஏராளம். நிகழ்கால உலகில், நம்மைச் சுற்றி நடமாடும் மாந்தர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள், அவர்களின் குணங்கள் என்னென்ன, சமுதாயத்துடன் அவர்கள் ஒத்திசைந்து வாழ்கிறார்களா அல்லது அவர்களுக்குள் இருக்கும் ஒரு தனி உலகில் வாழ்கிறார்களா, தனிமை, சோகம், வெறுப்பு, பொறாமை, காமம், ஆகிய குணங்களின் வெளிப்பாடு போன்ற பல விதமான கலவைகளை இவரது படங்களில் பார்க்க்கிறோம். அவரது பாணி என்னவெனில் – ‘என்னால் முடிந்த படத்தைக் கொடுத்தாயிற்று.. அதில் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீயே கண்டுபிடித்துக்கொள். நான் அடுத்த படம் இயக்கச் செல்கிறேன்’ என்பதே. பார்வையாளன், ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தை, பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே வந்து பார்த்துவிட்டுச் சென்றுவிடுவதில்லை. அவனும் படத்தின் கதைமாந்தர்களுடன் வாழ்கிறான். இறுதியில் என்ன நடக்கிறது என்பதில், அவனுக்கும் ஏராளமான ஊகங்கள் இருக்கின்றன. எப்படி நடந்தாலும், அவனால், தனது மனதில் எழும் முடிவுகளைக் கோர்த்துப் பார்க்க முடிகிறது.

எனவே, கிம் கி டுக்கின் படங்கள், பார்வையாளனைச் சிந்திக்க வைக்கின்றன. படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நமது மனதில் ஆயிரம் கேள்விகள் எழும். அந்தக் கேள்விகளில் பலவற்றுக்குப் பதிலே இருக்காது. நமது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களிலிருந்தே இக்கேள்விகளுக்குப் பதில் கிடைக்கப்பெறும். அந்த நேரத்தில், சடாரென்று நமது வாழ்வுக்கும் கிம் கி டுக் எடுக்கும் படங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையைப் புரிந்து கொள்ள முடியும். இருண்ட சாலையில் நடக்கையில், பளாரென்று இருட்டில் நமக்கு ஒரு அடி விழுந்தால் எப்படி இருக்கும்?

சிறை.. அதன் எண்ணற்ற அறைகளில் ஒன்று. டூத் ப்ரஷ்ஷின் மறுமுனையைச் சுவற்றில் தேய்த்துத் தேய்த்துக் கூராக்கி, அதன்மூலம் சுவற்றில் படம் வரைந்து கொண்டிருக்கிறான் ஒரு கைதி. அவனருகே, அவன் வரையும் படத்தையே உற்று நோக்கிக்கொண்டு மற்றொரு கைதி நின்றுகொண்டிருக்கிறான். திடீரென்று, பிரஷ்ஷைப் பிடுங்கி, தனது கழுத்தில் குத்திக் கொள்கிறான் அவன். கூட இருக்கும் கைதியின் முகத்தில் ரத்தம் தெறிக்கிறது. அவனது அலறல், சிறையெங்கும் எதிரொலிக்கிறது.

யோன் என்பவள், தனது குழந்தை மற்றும் கணவனுடன் வாழ்ந்து வரும் ஒரு பெண். அற்புதமான களிமண் சிலைகளைச் செய்பவள். தனது கணவனின் மேல் அவளுக்கு ஆறாத கோபம் ஒன்று இருக்கிறது. கணவன், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, தன்னை ஏமாற்றி வருவதே அது. எப்பொழுதும் தனிமையிலேயே வாழ்ந்து வருகிறாள். தனது ரணத்தை, சிலைகள் செய்வது மூலம் போக்கிக்கொள்ள முயல்கிறாள்.

ஒரு நாள், தொலைக்காட்சியில், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்று, அந்தப் பிணங்களிடையே படுத்துக்கொண்டிருந்த ஜாங் ஜின் என்ற மரண தண்டனைக் கைதி, தன்னைத்தானே கழுத்தில் குத்திக்கொண்டு, அபாயமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி ஓடுகிறது. அவனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையின் மேல் இருந்த பயத்தின் காரணமாகவே அவன் இவ்வாறு செய்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.

அந்தச் செய்தியையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருக்கிறாள் யோன். அவளது கணவனுக்கு இது பிடிப்பதில்லை.

மறுநாள், கணவனின் காரில் ஒரு ஹேர் க்ளிப் இருப்பதைப் பார்க்கும் யோன், அந்தக் க்ளிப்பை எடுத்து வைத்துக் கொள்கிறாள். அதனை, தான் செய்துகொண்டிருக்கும் பெண் சிலையின் தலையில் சொருகிப் பார்க்கிறாள். கணவன் வருகையில், அவனது கண்ணில் படுமாறு அந்தக் க்ளிப்பைத் தனது தலையில் அணிந்து கொள்கிறாள். அங்கு வரும் கணவன், அதனைப் பிடுங்க முயல, கோபத்தின் எல்லையில், யோன் அவளது வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

வெளியே வந்து, டாக்ஸியைப் பிடிக்கும் யோன், எங்கு செல்வதென்றே தெரியாமல், எங்காவது போகச் சொல்கிறாள். உடனே மனம் மாறி, சிறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்கிறாள்.

இரவு முழுதும் சிறையின் முன்னே கழிக்கும் யோன், மறுநாள் காலையில், அவள் ஜாங் ஜின்னின் முன்னாள் காதலி என்றும், அவனைப் பார்க்க வேண்டும் என்றும் விண்ணப்பிக்கிறாள். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. மனமுடைந்து, செய்வதறியாது நின்றுகொண்டிருக்கும் யோனை, காமெரா மூலம் சிறையதிகாரி பார்க்கிறார். அவளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தன்னைப் பார்க்க ஒரு விஸிட்டர் வந்திருப்பதை அறியும் ஜாங் ஜின், அவளைப் பார்க்க வருகிறான். எந்த அறிமுகமும் இன்றி, யோன், அவனிடம் பேசத் துவங்குகிறாள். தனது சிறிய வயதில் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லிவிட்டு, அங்கிருந்து செல்கிறாள். ஜாங் ஜின்னுக்கோ, இத்தனை காலம் தனிமையில் அடைபட்டுக் கிடந்த துயரம், ஒரே நொடியில் மறைந்தது போல் ஒரு மகிழ்ச்சி. அவளது ஒரே ஒரு முடியை மட்டும் பிய்த்து எடுத்துக்கொள்ளும் ஜாங் ஜின், அதனை, சிறையினுள் சென்றதும் விழுங்கி விடுகிறான்.

மறுநாள், சந்தோஷமாகக் கடைக்குச் சென்று சில பொருட்கள் வாங்கும் யோன், நல்ல வெயில் காலத்தில் அணியும் உடைகளை அணிந்துகொண்டு (அந்தக் கொட்டும் பனியில்), சிறைக்குச் செல்கிறாள். ஜாங் ஜின்னுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், அவள் வாங்கிய பூச்செண்டுகளை வெளியே எடுக்கிறாள். அவளுடன் இருக்கும் காவலாளி அதனைத் தடுக்க முயல, காமெராவில் இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும் உயரதிகாரியிடம் இருந்து ஃபோன் வருகிறது, அவளை விட்டுவிடச் சொல்லி (இந்த அதிகாரியின் முகத்தை நாம் பார்ப்பதே இல்லை. தொலைக்காட்சியில் தெரியும் பிம்பத்தையே பார்க்கிறோம். அது, கிம் கி டுக்கே தான்)..

ஜாங் ஜின், இம்முறை வெகு சந்தோஷத்துடன் வருகிறான். விஸிட்டர் அறையினுள் நுழையும் அவன், ஒரு கணம் திகைத்துப் போகிறான். அவனைச் சுற்றிலும், எல்லாச் சுவர்களிலும், குளுமையான கடலின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. குழந்தையைப் போல் ஒரு சிறு உடையை அணிந்திருக்கும் யோன், அவனுக்காக ஒரு பாடலைப் பாடத் துவங்குகிறாள். வெயில்காலத்தில் காதலிக்கும் இருவரைப் பற்றிய பாடல் அது. குதூகலமாக அப்பாடலைப் பாடியவாறே, ஆடவும் தொடங்குகிறாள் யோன். ஜாங் ஜின்னுக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது.

பாடலைப் பாடி முடித்தவுடன், தனது புகைப்படம் ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு, அவனை முத்தமிட யோன் நெருங்குகையில், மணி ஒலிக்கிறது. காமெராவில் பார்த்துக்கொண்டிருக்கும் அதிகாரி மூலமாக. ஜாங் ஜின் மறுபடி சிறையில் அடைக்கப்படுகிறான்.

யோன், இப்படி ஒரு உடையைக் குளிர்காலத்தில் அணிந்திருப்பதைப் பார்க்கும் அவளது கணவன், அவளை விசாரிக்கிறான். ஆனால், பதிலேதும் சொல்லாத யோன், தூங்கிவிடுகிறாள்.

மறுநாள். இலையுதிர் காலத்தில் அணியும் உடைகளை எடுத்துக்கொண்டு, இலையுதிர் காலத்தின் போஸ்டர்களை விஸிட்டர் அறையெங்கும் ஒட்டுகிறாள் யோன். இம்முறையும் ஜாங் ஜின்னுக்காக ஒரு பாடல். இலையுதிர்காலத்துக் காதலைப் பற்றி. முடிந்தவுடன், ஒரு புகைப்படம்.

இம்முறை வீட்டுக்குச் செல்லும் யோனை, அவளது கணவன் சந்தேகிக்கிறான். அதனாலேயே, குற்றவுணர்வில், தனது ரகசியக் காதலியை மறுதளித்து விடுகிறான். மறுநாள், இளவேனில் கால உடைகள். போஸ்டர்கள். இம்முறை, தனது நிர்வாணப் புகைப்படம் ஒன்றை ஜாங் ஜின்னுக்கு அளிக்கிறாள் யோன்.

ஒவ்வொரு நாள் இரவிலும், ஜாங் ஜின் தூங்குகையில், அவனுடனேயே இருக்கும் கைதி ஒருவன், இந்தப் புகைப்படங்களையெல்லாம் கிழித்துத் தின்று விடுகிறான். அவனுக்கு ஜாங் ஜின் மேல் உள்ள ஈர்ப்பே காரணம். எப்போதும் ஜாங் ஜின்னுடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்தக் கைதியால், யோன், ஜாங் ஜின்னுக்கு அளிக்கும் மகிழ்ச்சியைத் தாங்க முடிவதில்லை.

ஜாங் ஜின்னின் மரண தண்டனை நெருங்குகிறது. மறுநாள் அவனுக்குத் தண்டனை. இப்படி இருக்கையில், அவனைத் தேடி ஒரு விஸிட்டர் வந்திருப்பதாகக் காவலாளி சொல்ல, ஆவலோடு வரும் ஜாங் ஜின்னுக்கு அதிர்ச்சி. அங்கு அமர்ந்திருப்பது, யோனின் கணவன்.

இதன் பின் என்ன நடந்தது? ஜாங் ஜின்னுக்கு மரண தண்டனை கிடைத்ததா? யோன் என்னவானாள்? அவளது கணவனுடன் அவளால் வாழ முடிந்ததா? ஜாங் ஜின்னுக்கும் யோனுக்கும் அவர்களது காதல் திரும்பக் கிடைத்ததா?

படத்தைப் பாருங்கள்.

கிம் கி டுக் படம் என்றாலே, காமெரா மாயாஜாலம் செய்யும். ஆனால், அந்தக் காமெரா அற்புதங்கள், கதையின் போக்கைத் தடுக்காது. கதையின் ஒரு பங்காகவே கேமரா செயல்படும். இப்படத்திலும் அப்படித்தான். படத்தின் ஆரம்பத்தில், யோன் வாழும் வீட்டைக் காண்பிக்கும் ஒரே ஷாட்டில், அவளது சோகத்தைக் காண்பித்து விடுகிறார் கிம் கி டுக்.

அதே போல், இப்படத்திலும், வழக்கப்படி வசனங்கள் கம்மி. ஆனால், கிம் கி டுக்கின் மற்ற படங்களை ஒப்பிடும்போது, வசன மழை பொழிந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். வழக்கப்படி இல்லாமல், இதில் கதாநாயகி, பாடல்களே பாடிவிடுகிறாள். ஆனால், ஹீரோ ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. படம் நெடுகிலும்.

இப்படமும், மனித உணர்ச்சிகளில் ஒளிந்துள்ள புதிர்களை அவிழ்க்கும் கிம் கி டுக்கின் மற்றொரு நல்ல முயற்சியாக விளங்குகிறது. ஆனால், கிம்மின் மற்ற படங்களை ஒப்பிட்டால், இதில் காரம் கம்மி என்றுதான் சொல்லவேண்டும். பின்னே? தவளையை உயிரோடு பிய்ப்பதில்லை. கழுத்தைக் கிழித்துக்கொள்வதில்லை. மொத்தத்தில், எந்த விதமான வன்முறையும் இல்லையே.. Too bad.

இப்படம், வழக்கப்படியே, பல உலகத் திரைப்பட விழாக்களுக்குத் தேர்வு செய்யப்பட்டது.

Breath படத்தின் டிரெய்லர் இங்கே

பி.கு – ஈரோட்டிலும் மதுரையிலும் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளைப் பற்றிச் சில ரசமான தகவல்கள், நமது நண்பர் திரு. ஹாலிவுட் பாஸ்கரன் உபயத்தில் வந்துள்ளன. அவைகளைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும். எழுதிவிடுகிறேன்

  Comments

29 Comments

  1. மகிழ்ச்சி தேள்…. நீங்க இப்படி எழுதி அத வாசிக்கிறது உண்மையிலேயே மகிழ்ச்சியா இருக்கு.. நிறைவான விமர்சனம்….

    Reply
  2. இது ஏதோ பெரியவங்க பார்க்குற படம் போல இருக்கு. என்ன மாதிரி சின்ன பசங்களுக்கு இங்கிட்டு எடம் இல்லை.

    Reply
  3. //அடப்பாவி … நீங்க சின்னப்பையன்னா, நானு பச்சப்புள்ளைய்யா //

    அண்ணாச்சி, நீங்க எந்த கலருன்னு எனக்கு தெரியாது அண்ணாச்சி, ஆனா நானு கண்டிப்பாக சின்னப்பைய்யன்தானுங்கோவ். (போட்டோவில பாக்க நல்ல செவப்பா தானே கீறாரு நம்ம தேளு, ஆனா பச்ச புள்ளன்னு சொல்றாரே, என்ன மேட்டரு?)

    Reply
  4. ராஜேஷ்,,, இந்த படத்தை சென்னை உலக படவிழாவில் பார்த்தேன்… அந்த பொண்ணு காதலனை சந்தோஷபடுத்த அந்த சிறைச்சாலை இன்டீரியர். கலர் கலர்ரா வால் பேப்பர் மாற்றுவது எல்லாம் கவிதையான காட்சிகள்..
    நான் எப்பயோ வாங்கி வச்சி எழுத சோம்பேறிதனம்பட்ட படம்..ரொம்ப நல்லா எழுதி இருக்கேன்..

    Reply
  5. நண்பரே,

    கோபத்தை தணித்துக் கொண்டு அழகான பதிவொன்றை வழங்கியிருக்கிறீர்கள் 🙂 சிறப்பான பதிவு.

    Reply
  6. இன்னும் கிம்-கி-டுக் அவர்களின் படங்களை பார்கக் ஆரம்பிக்கவில்லை கருந்தேள்.. சீக்கிரம் ஆரம்பிக்கணும்.. படங்களின் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது..

    Reply
  7. ஆகா…என்ன ஒரு பதிவு!!கிம்டுக் படங்களென்றாலே..உங்கள் பதிவில் ஒரு துள்ளல் இருக்கும்

    Reply
  8. தேளு வந்திட்டீர்களா நல்லது, இந்த மாதிரி உங்கள் சிறந்த விமர்சனம் படித்து எவ்வளவு நாளாகிறது.

    இத விட்டுட்டு சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா …. இந்தியாவுக்கு ‘சுதந்திரம்’ வாங்கி தரேன் பாரு,
    தமிழ் நாட்ட சிங்கப்பூரா மாத்தி காட்டுறேன் பாரு என்று முயற்சி எல்லாம்

    நமக்கு வேண்டாம் தேளு:)

    Reply
  9. //இதில் காரம் கம்மி என்றுதான் சொல்லவேண்டும். பின்னே? தவளையை உயிரோடு பிய்ப்பதில்லை. கழுத்தைக் கிழித்துக்கொள்வதில்லை. மொத்தத்தில், எந்த விதமான வன்முறையும் இல்லையே.. Too bad. //

    ஹாஹா, இந்த படம் நானு இன்னும் பார்க்கலை. சீக்கிரமே பார்க்கிறேன். 🙂

    Reply
  10. முதுகுல அரிப்பெடுத்தா இப்படியா சொறியுறது…ஒரு சீப்ப வெச்சு சொறியத்தெரியாது..

    ணா..உங்களுக்கு சொந்தமா பேர் வெச்சுக்க தெரியாதா? ஏதுக்கு படத்துப் பேர எல்லாம் வெச்சுக்கிறீங்க? (அப்பா..வந்ததுக்கு ஒரு பிட்ட போட்டாச்சு)

    Reply
  11. பரிந்துரைக்கு நன்றி! பார்க்கிறேன்.

    Reply
  12. @ ஜாக்கி – ஓ இதை இந்தியாவுல திரையெல்லாம் இடுறாங்களா? இது நல்லா இருக்கே.. இன்னும் ஒரு ஃபிலிம் ஃபெஸ்டிவல் கூட அட்டெண்ட் பண்ணதில்ல.. பெங்களூர்ல அட்டெண்ட் பண்ணலாம்னு இருக்கேன்.. நீங்களும் எழுதுங்க உங்க ஸ்டைல்ல, இந்தப் படத்தைப் பத்தி .. நன்றி..

    @ கனவுகளின் காதலன் – என்னாது கோவமா? அப்புடீன்னா என்ன ? 🙂 மிக்க நன்றி

    @ கனகு – அட ஏன் பாஸ்.. கிம் கி டுக் படங்களைப் பார்த்தால், நூறு உலக சினிமா பார்த்ததுக்கு சமம் ! சீக்கிரம் அக்கௌண்ட்ட ஆரம்பிங்ணா 😉

    @ உலக சினிமா ரசிகரே – துள்ளல் இருக்கத்தான் செய்யும்..பின்னே? அவரும் என்னைப்போல் சாடிஸ்ட் அல்லவா 😉 நன்றி 😉

    @ சரவணகுமார் – நான் திரும்ப வந்ததே, நீங்கள் எனது வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு கதறிக் கதறி அழுவேன் என்று சொன்னதால் தான் :-). அந்தக் காட்சியை என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை அய்யா.. 😉

    @ இலுமி – 😉 ரைட்டு… பாருங்கோள் .. ஐ தின்க், அடுத்தது கூட ஒரு கொரியப் படந்தான் போல.. 😉

    @ கொழந்த – ஹாஹ்ஹா 😉 .. நானு, இந்த சைட்டுக்கு ஒரு படத்தோட பேரு வெச்சது, இன்ஸ்பிரேஷன் பாஸ்.. அது காப்பி இல்லை ;-).. உங்க கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்க சொன்னது, தஞ்சாவூர்க் கோயில் கல்வெட்டுக்குப் பக்கத்துல உக்காந்துகினு இருக்கும் ஒரு ஆள் தானே? 🙂 எனக்குத் தெரியுமாக்கும் 😉 அவரு என்னோட போன பதிவில் வந்து இந்த மாதிரி சொசைட்டிக்குப் பயன்படும் நல்ல பின்னூட்டங்கள் எல்லாம் போட்டு வெக்கும்போதே நானு டவுடு ஆனேன்யா.. 😉

    @ எஸ்.கே – ரைட்டு. நன்றி 😉

    Reply
  13. மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்கையா …….

    இது எங்க போயி முடியுமோன்னு தெரியலையே ???

    ஐ தின்க், அடுத்தது கூட ஒரு கொரியப் படந்தான் போல.. 😉

    அடுத்ததுமா!!!!!! :))

    .

    Reply
  14. ரொம்ப கரெக்ட்டான தலைப்பு

    இப்புடி அழுத்தி புடிச்சு பிரண்டுனா

    அதுக்குத்தான் ஏங்குவாங்க
    அட BREATHத சொன்னேங்க :))
    .

    Reply
  15. // பி.கு – ஈரோட்டிலும் மதுரையிலும் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளைப் பற்றிச் சில ரசமான தகவல்கள், நமது நண்பர் திரு. ஹாலிவுட் பாஸ்கரன் உபயத்தில் வந்துள்ளன. அவைகளைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும். எழுதிவிடுகிறேன் //

    கண்டிப்பாக எழுதுங்கள்
    காத்திருக்கிறோம் 🙂
    .

    Reply
  16. @ author

    regularly i used to browse ur site..i used to watch all those movies.. ur reviews are xcellent.. gr8 wrk cntnue… i want to know frm wer ur dwnloading al dese movies.. im nt able to get tis movie..

    reply to me @ arunreal1@gmail.com
    Thanx in advnce 🙂

    Reply
  17. @ சிபி – ஹாஹ்ஹா 😉 .. இதோ வந்துக்கினே இருக்கு கொரியப்படம் அடுத்தது 😉 … நல்லா மாட்டுனீங்க 😉

    புத்தக விழாவைப் பற்றிய பதிவு – அதுக்கு அடுத்து 😉

    @ Arunv – உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே.. நான் படங்கள் பார்ப்பதெல்லாம், Bigflixல் வாடகைக்கு எடுத்துதான். அது எல்லாப் பெரிய நகரங்களிலும் உண்டு. அதன் சைட்டை செக் செய்து பாருங்கள். நல்ல பல படங்கள் அதில் உண்டு.

    Reply
  18. @ உண்மைத் தமிழன் – முழுக்கதையையும் சொன்னா, சஸ்பென்ஸ் போயிரும்னுதான் சொல்லல 😉 .. இது, 2007ல வந்திச்சு..

    Reply
  19. கிம் டு கிக் , ஜாம் டு ஜக் எல்லாம் பாராட்டி எழுதுங்க..நம்ம ஆளுங்க எடுத்த மட்டும் ஒரே நக்கல்ஸ் , நய்யாண்டி..:)

    Reply
  20. நண்பா
    உண்மையிலேயே ஒர்த்தான படம்,சிறப்பான விமர்சனம்,விரைவில் ஸ்ப்ரிங் சம்மர் ஃபால் விண்டர் சம்மர் எழுதவும்,அதுவே கிம் டு கிக்கை அனுகும் சாவி.

    Reply
  21. நல்ல அழகான விமர்சனம் அவர் படம் போலவே. கிம் கி டுக் மேல் மதிப்பு கூடிக்கொண்டே போகுது. சீக்கிரம் ஆராச்சும் இத டமில்ல எடுத்தா நல்லா இருக்கும்.. ஐ மீன் எடுத்தாளுனா 🙂

    Reply
  22. சிறப்பான விமர்சனம். கதையை நீங்கள் விவரித்த விதம் அருமை. (தவளையை பிய்ப்பதில் அவ்வளவு ஆசையா 🙂 கிம் இது போன்ற காட்சிகளுக்காக பொதுவாக விமர்சனம் செய்யப்படுகிறார். )
    எனது ப்ளாகிலும் சில நாட்கள் முன்னால் இந்த படம் பற்றி எழுதினேன். நேரம் இருந்தால் படிக்கவும்.
    http://neydhal.blogspot.com/2010/08/breath.html

    Reply
  23. கிம் கி டுக் படம் பார்ததில்லை. படத்த பார்த்திருவோம்…

    Reply
  24. Hi கருந்தேள், சிறப்பான விமர்சனம். Also I’m a Kim-ki-Duk fan.
    Here my favorites of his movies
    I consider his masterpiece is
    Spring, Summer, Fall, Winter… and Spring
    3-Iron
    The Isle
    Samaritan Girl
    Birdcage Inn – It’s like Sad poetry

    Reply

Join the conversation