Bridges of Madison County (1995) – English
நம்மில், இதுவரை காதலிக்காதவர்கள் எத்தனை பேர்? காதல் கைகூடியிருந்தாலும் சரி, அல்லது உடைந்து சிதறியிருந்தாலும் சரி, வாழ்வில் ஒருமுறையாவது, ஒருவரையாவது நாம் காதலித்திருக்கிறோம் அல்லவா? அந்த ஒருவர், இந்தக் கணத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற எண்ணமும் நமக்குப் பலமுறை வந்திருக்கும். காதலில் மூழ்கியிருந்த நாட்களில், நாம் எவ்வளவு களிப்புடன் இருந்தோம்! நாம் காதலித்தவரோடு எதிர்காலத்தில் வாழப்போவதை எண்ணி, எவ்வளவு முறை நமக்குள்ளே புன்னகைத்திருக்கிறோம்! பலர் கூடியுள்ள ஒரு இடத்தில் கூட, நமது காதலனோ அல்லது காதலியோ நம்மருகே இல்லாமல், ஒரு பெரும் தனிமையைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம். . . இரு ஒத்த மனங்களுக்குள் மலரும் காதல் என்பது, ஒரு பெரும் சூறாவளியைப் போல் நம்மை அடியோடு தூக்கிச்சென்றுவிடுகிறது. அவர்களுடன் நாம் சிலகாலமே இருந்தாலும், நமது வாழ்க்கை முழுமைக்குமே அது போதும் என்ற ஒரு நிம்மதியை அளிக்கக்கூடியதே காதல்.
அப்படிப்பட்ட ஒரு அழகான காதல் கதையே இந்த ‘Bridges of Madison County’.
எனது சிறுவயதில், விகடனின் குழுமத்தில் இருந்து வெளிவந்த ‘ஜூனியர் போஸ்ட்’ என்ற வாரப்பத்திரிக்கையில் (அக்காலத்திய முதல் தமிழ் Tabloid அது), மதன் ஒருமுறை, இப்படம் வெளிவந்த தருணத்தில், இப்படத்தை மிகவும் சிலாகித்து எழுதினார். அந்தக்கதை மிகவும் பிடித்துப்போய், நீண்ட நாட்கள் அப்பத்திரிக்கையை என்னுடன் வைத்திருந்தேன். பின்னர், சிலவருடங்களுக்கு முன், ஒரு நாள் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் படப்பட்டியலைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சட்டென்று இப்படத்தின் பெயர், பொறி தட்டியது. பின், கஷ்டப்பட்டு இப்படத்தை வாங்கிப் பார்த்ததில், பழைய சிறு வயது நினைவுகளை மறுபடி உணர்ந்தேன். எனக்கு மிகப்பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.
ராபர்ட் ஜேம்ஸ் வாலர் என்ற அமெரிக்காவின் மிகப்பிரபலமான எழுத்தாளர் எழுதி (இதுதான் அவரின் முதல் நாவல் – எழுதியபோது அவருக்கு 53 வயது. அதுவரை, ஒரு புரொபஸராக இருந்தவர்), 1992 வில் வெளிவந்த இந்த நாவல், கிட்டத்தட்ட ஐம்பது மில்லியன் பிரதிகள் உலகம் முழுக்க விற்று, இந்த நூற்றாண்டின் பெஸ்ட் செல்லர்களில் ஒன்றாக மாறியபோது, படமாக எடுக்கப்பட்டது.
இப்படத்தின் முதல் ஆச்சரியம் என்னவென்றால், இத்தகைய ஒரு முழுமையான ரொமாண்டிக் படத்தில், க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்ததுதான். அதுவரை ஒரு அதிரடி action hero வாக இருந்தவர், இப்படத்தின் கதை பிடித்துப்போய், இதனை இயக்கவும் செய்தார். படம் வெளிவந்த ஆண்டு 1995. இப்படத்தின் கதாநாயகியாக நடித்தவர், ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான மெரில் ஸ்ட்ரீப்.
இப்படம், 1965இல் தொடங்குகிறது. ஃப்ரான்செஸ்கா, தனது கணவருடனும், இரு குழந்தைகளுடனும் வாழ்ந்துவருகிறாள். அவளது கணவரும் குழந்தைகளும் ஒரு சந்தைக்கு சென்றிருப்பதனால், வீட்டில் தனியாக இருக்கிறாள். அப்பொழுது, வாசலில் ஒரு காரின் ஒலி கேட்டு, வெளியே வருகிறாள். அங்கு, ஒரு புகைப்படக் கலைஞனான ராபர்ட் கிங்காய்ட் நின்றுகொண்டிருக்கிறான். நேஷனல் ஜியாக்ரஃபிக் இதழில் வேலைசெய்வதாகச் சொல்லும் அவன், அங்குள்ள ஒரு பாலத்தைப் புகைப்படம் எடுக்கப்போவதாகவும், அப்பாலத்திற்கு வழிசொல்ல முடியுமா என்றும் கேட்கிறான். அவனது நட்பான அணுகுமுறை ஃப்ரான்செஸ்காவுக்குப் பிடித்திருப்பதனால், அவனுடன் காரில் செல்கிறாள்.
செல்லும் வழியெல்லாம், மிகவும் இயல்பான ஒரு பேச்சு அவர்களுக்கிடையில் நிகழ்கிறது. பேச்சினிடையே, ராபர்ட் விவாகரத்தானவன் என்பதும், அவன் தொழில்நிமித்தமாக ஊரெங்கும் சுற்றுவது அவன் மனைவிக்குப் பிடிக்காததனால் தான் இருவரும் பிரிந்தனர் என்றும் அவள் அறிகிறாள். ராபர்ட், ஃப்ரான்செஸ்காவின் சொந்த ஊரைப்பற்றிக் கேட்க, அந்த ஊர் யாருக்கும் தெரியாது என்று சொல்லும் அவள், தான் இத்தாலியில் ஒரு கிராமமான பாரியில் பிறந்ததாகச் சொல்கிறாள். ராபர்ட், அந்த ஊர் அவனுக்குத் தெரியும் என்றும், அந்த வழியாகச் செல்லும்போது, அந்த ஊரின் அழகைப் பார்த்து, அங்கேயே சில நாட்கள் கழித்ததாகவும் சொல்கிறான்.
ஒரு ஊரின் அழகை ரசிப்பதற்கு, எந்தக் காரணமும் இல்லாமல் அங்கு தங்கியதாகச் சொல்லும் ஒருவனை அவள் அன்று தான் முதன்முதலில் பார்க்கிறாள். அந்த நிமிடத்தில், அவளுக்கு ராபர்ட் மேல் அன்பு சுரக்கிறது. அந்த நிகழ்ச்சியைப் பற்றி, தனது நாட்குறிப்பில் அவள் இவ்வாறு எழுதுகிறாள் – ‘அந்த நொடியில், அதுவரை என்னைப்பற்றி நான் என்னவெல்லாம் எண்ணியிருந்தேனோ, அது அத்தனையும் அப்படியே அழிந்துவிட்டது. அந்த நொடியில், நானும் இன்னொரு சாதாரணப் பெண்ணைப்போல்தான் உணர்ந்தேன்; ஆனாலும் – வேறு எந்தத் தருணத்தைவிடவும் – நான் நானாகவே முற்றிலும் முழுமையாக இருந்தேன்’.
பாலத்தை அடைந்து, ராபர்ட் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்குகிறான். ஃப்ரான்செஸ்கா மெதுவாக அங்குமிங்கும் நடந்தபடியே அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். பின்னர், ஃப்ரான்செஸ்காவின் வீட்டை அடையும் அந்த இருவரும், தங்களது வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள். மெதுவாக, மிக மெதுவாக, எப்பொழுது அது நடந்தது என்றே தெரியாமல், அவர்களுக்குள் காதல் முகிழ்க்கிறது. அந்த இருவரும், தாங்கள் இவ்வளவு நாட்கள் வாழ்ந்தது, இந்த நொடியில் சந்தித்துக்கொள்வதற்காகவே என்பதை உணர்கிறார்கள்.
அங்கேயே, அவர்கள் நான்கு நாட்களைக் கழிக்கிறார்கள். அந்த நான்கு நாட்களும், அந்த இருவரின் வாழ்விலேயே மறக்க முடியாத நாட்கள் ஆகின்றன. ஃப்ரான்செஸ்கா அவ்வளவு சந்தோஷமாக அதுவரை இருந்ததில்லை. ஒவ்வொரு நொடியையும் ரசித்து, இவ்வொரு நொடியிலும், அவள் அவளாகவே வாழ்கிறாள். அதுவரை, ஓர் சாதாரணமான பெண்ணாக இருத்தி வைக்கப்பட்ட அவள், முதல்முறையாக, தன்னை முழுமையாக உணர்ந்த ஒருவனுடன் இருக்கிறாள். அவன் அவளை எந்தத் தளையிலும் சிறைப்படுத்த விரும்பவில்லை என்றும், அவள் ஒரு சுதந்திரமான பறவையாக வாழ்வதையே விரும்புகிறான் என்றும் உணர்கிறாள்.
ராபர்ட் கிளம்பும் நேரமும் வருகிறது. தன்னுடனேயே அவளை வந்துவிடும்படி அவன் கேட்கிறான். ஒரு கணம் சிந்திக்கும் ஃப்ரான்செஸ்கா, அந்த நான்கு நாட்கள் அவள் வாழ்ந்த வாழ்க்கையை அவள் தனது வாழ்நாள் முழுவதும் தனது உள்ளத்திலேயே வைத்து மகிழ்வாள் என்றும், இந்தப் புதிய வாழ்க்கைக்காக, இவ்வளவு வருடங்கள் அவள் வாழ்ந்த வாழ்க்கையை உதறிவிட்டு அவளால் வர இயலாது என்றும் சொல்லி, தனது உள்ளத்தில் இருப்பதை ராபர்ட்டுக்குப் புரியவைத்துவிடுகிறாள்.
அவளைப் புரிந்துகொண்ட ராபர்ட், அங்கிருந்து சென்றுவிடுகிறான். மறுநாள், ஃப்ரான்செஸ்காவின் கணவனும் குழந்தைகளும் வருகிறார்கள். அவர்களுக்காக, இதுவரை அவர்களுக்குத் தெரிந்த தனது சுயம் இல்லாத முகமூடியை அணிந்துகொண்டு, மீண்டும் ஒரு சராசரிப் பெண்ணாக மாறுகிறாள் ஃப்ரான்செஸ்கா. அன்று, அவளும் அவள் கணவனும் ஷாப்பிங் சென்று திரும்புகையில், ஒரு சிக்னலில் அவர்கள் கார் நிற்கும்போது, கொட்டும் மழையில் ராபர்ட் அந்தக்காரை நோக்கி நடந்துவருவதைக் காண்கிறாள். அவனது நோக்கம் அவளுக்குப் புரிகிறது. அவளைத் தன்னோடு அழைத்துச் செல்லவே அவன் வருகிறான். ஒரு சிறையில் இருப்பதைப்போல் உணரும் ஃப்ரான்செஸ்கா, உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், காரின் கைப்பிடியைத் தன்னிச்சையாகத் திருகுகிறாள். ஆனால், சட்டென்று ராபர்ட், எதையோ உணர்ந்தவன்போல் திரும்பி நடந்து, அவன் காரைக் கிளப்புகிறான்.
அவர்கள் காரின் முன் நிற்கும் அவனது காரை ஃப்ரான்செஸ்கா பார்க்கிறாள், அவள் ராபர்ட்டுக்குப் பரிசாகத் தந்த அவளது லாக்கெட்டை, காரின் கண்ணாடியில் மாட்டும் ராபர்ட், அவளையே கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இருக்கிறான். சிக்னலில் பச்சை விழுந்தும்கூட, அவன் கார் நகர மறுக்கிறது. ஃப்ரான்செஸ்கா அழத் தொடங்குகிறாள். அவள் கணவனிடம் தலைவலி என்று சொல்லிவிட்டு, தனது கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறாள். பல முறை ஃப்ரான்செஸ்காவின் கணவன் ஹாரனை அடிக்க, ராபர்ட்டின் வண்டி மெதுவாக நகர்கிறது. திடீரென்று, வேகமெடுத்து, அவள் கண்களில் இருந்து மறைகிறது. ராபர்ட்டைக் கடைசியாகப் பார்ப்பதை ஃப்ரான்செஸ்கா உணர்கிறாள்.
பல வருடங்கள் கழித்து, ஃப்ரான்செஸ்காவுக்கு ஒரு தபால் வருகிறது. அதில், ராபர்ட் அன்று எடுத்த புகைப்படங்கள் உள்ளன. ஒரு குறிப்பு, அவன் இறந்துவிட்டதாகச் சொல்கிறது. அவளும் சில வருடங்கள் கழித்து இறக்கிறாள். ஃப்ரான்செஸ்கா, அன்று நடந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் நாட்குறிப்பில் எழுதிவைத்திருப்பதால், அவள் மகனும் மகளும் அதனைப் படிக்கிறார்கள். ஃப்ரான்செஸ்காவின் விருப்பப்படியே, எந்த இடத்தில் அவளது அழகான, துடிப்பான, உண்மையான பக்கத்தை முதலும் கடைசியுமாக உணர்ந்தாளோ, அந்த மேடிசன் கௌண்டியின் பாலத்தில் இருந்து அவளது சாம்பல் தூவப்படுகிறது.
அத்துடன் படம் முடிகிறது.
இப்படத்தில், நான் சொல்லாத பல அருமையான காட்சிகள் உள்ளன. படம் முழுக்கவே, ஃப்ரான்செஸ்காவின் மனநிலையில் இருந்தே படம் பயணிக்கிறது. அவள் அடையும் ஆனந்தம், அவளது சோகம், அவளது காதல், சிறுகுழந்தையைப் போன்ற அவளது சந்தோஷம் ஆகியன மிகவும் அருமையான முறையில் வெளிப்படுகின்றன. அவளது ஒரே தோழியான ஒரு பெண், அவளுக்கு எப்படித் தோழியானாள் என்ற நிகழ்வில் கூட, ஒரு சிறுகதை உள்ளது.
மொத்தத்தில், எனது மனதை ஒரு கலக்கு கலக்கிய படம். இந்த விமரிசனத்தை எழுதும் இந்த நொடியில், இப்படத்தை எனக்குப் பல்லாண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய மதனை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
இப்படத்தின் டிரைலர் இங்கே.
நண்பரே,
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. உங்கள் நடையில் மிக அழகாக வந்திருக்கிறது.
மெரில் ஸ்டீரிப் தன் வீட்டு வாசலில் வந்து தன் உடல் முழுதும் காற்றை தழுவவிடும் அந்தக்காட்சி இன்னமும் மனதில் நிற்கிறது. அருமையான ஒளிப்பதிவு என்பது இன்னொரு சிறப்பம்சம். மழைபெய்யும் க்ளைமாக்ஸ் காட்சி கலங்க வைக்கும், க்ளிண்ட் எப்படித்தான் இவ்வளவு அமைதியாக நடித்தார் என்பது வியப்பு. அவர்களிருவரும் முத்தமிடும் சமயம் என்னை நிறுத்துவதானால் இப்போதே நிறுத்து எனக் க்ளிண்ட் கூறும் அவ்வரி மிகுந்த மரியாதைக்குரியதாக எனக்குத் தெரிகிறது. சிறப்பான விமர்சனம். பாராட்டுக்கள்.
நீங்கள் சொல்லாத காட்சிகளுக்காகவே படம் பார்க்கிறேன்.
touchy 🙂
@ காதலரே – சரியாகச் சொன்னீர்கள்! ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் மரியாதையின் வெளிப்பாடு, இப்படத்தில் நம்மை நெகிழ வைக்கும் ஒரு அம்சம். . உங்களுக்கும் இப்படம் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. .
@ அண்ணாமலையான் – கண்டிப்பாகப் பாருங்கள். பார்த்துவிட்டு, உங்கள் கருத்தையும் பதியுங்கள்.
@ பப்பு – 🙂 🙂 touchy தான். . 🙂
படம் நெஞ்ச நக்கும் போல…,
@ பேநா மூடி – கபகபன்னு நக்கிரும் . . . 🙂 பாருங்க . .
Beautiful movie revue ended with tears.
When we see a movie that portrays a woman’s lost love we feel grieved, but in the day-to-day life when we know that our girl friend or wife had a lost love it haunts us and takes all happiness to hell. May be this is why Francesca too does not reveal her story to any one until her death.
@ On my way – அப்சல்யூட்லி ! பெண்கள் காதலிச்சிருந்தாலும், ஆண்கள் அந்தக் கதைய தெரிஞ்சிக்க விரும்பமாட்டாங்க . .தெரிஞ்சிருச்சுன்னா, அவங்க நிம்மதி போய், பொண்டாட்டிய சந்தேகப்பட்டு, டோட்டலா ரெண்டு பேரோட வாழ்வும் காலி. . ஆண்கள், எப்போ தங்களோட மனைவிகளுக்கும் ஒரு உலகம் இருக்கு; அதுக்கு நாம மதிப்பு குடுக்கனும்னு நினைக்குறாங்களோ, அப்போ தான் அந்த மனைவிகள் மதிக்கப்படுவாங்கன்னு தோணுது..
பை தி வே, நீங்கள் எனக்குத் தெரிஞ்சவங்களா இருப்பீங்களோன்னு எனக்கு தோண ஆரம்பிச்சிருச்சு . . உண்மை தானே?
Kann munnadi vandhu ninna… elloraiyum theriyume.
Strangers are just friends waiting to happen.
Hi.
@ on my way – உண்மைதான். உங்கள சந்திச்சதுல சந்தோஷம். பிலிப்பைன்ஸ் எப்படி இருக்கு..
கலக்கலா எழுதியிருக்கீங்கண்ணே.. படிக்கும்போதே படம் மனசுக்குள்ள ஓட வைச்சுட்டீங்க. நிச்சயம் பாத்துடறேன்.
@ சென்ஷி – வணக்கம். . 🙂 பாருங்க பாருங்க. . பார்த்துபுட்டு சொல்லுங்க 🙂
ஈஸ்ட்வுட்டின் பழைய காலப் படங்களை எல்லாம் பார்த்து முடிச்சிட்டேன். இந்த வாரம் இதை பார்க்கிறேன் கருந்தேள்.
ரெண்டு பேரும் என் ஃபேவரிட்ன்னாலும்.. இப்பல்லாம் காதல் படங்கள்னா கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு.
நீங்க சொல்லிட்டீங்க. பார்த்துட வேண்டியதுதான்.
@ பாலா – உங்களுக்கு, தரமான ரொமான்ஸ் படங்கள் பிடிக்கும்னா, இதுவும் பிடிக்கும். கவலைப்படாதீங்க. . இப்போ வர்ற காதல் படங்க மாதிரி இருக்காது.. ஒரு மெச்சூர்ட் லவ்இது. .
neenga sonna vithame superaa irukku….paarthutu solren……
@ pradeep – கண்டிப்பா. .. உங்களுக்கு இந்தப்படம் புடிக்கும்.. ரசிச்சிட்டு, ஒரு பின்னூட்டம் போடுங்க 🙂
Thanks Rajesh, i am one of your Big fan and follower of this site.. everyday im reading atleast 5 reviews and trying to complete most of the movies as much i can, really your writting style is simply superb.. extraordinary.
After reading the above review, i feel some kind of love and melted internally for some time. going to watch this movie right now.
THANKS A LOT 🙂
Regards,
Jeyakanth
Dear Jeyakanth,
Good to see the same feel which I experienced, to be reciprocated 🙂