அவன் பெயர் லீ . . . .

by Karundhel Rajesh August 6, 2016   Cinema articles

ஜூலை மாத அந்திமழையில் ப்ரூஸ் லீ பற்றி விபரமாக எழுதிய கட்டுரை இது. எழுதிக்கொடுத்ததைக் கிட்டத்தட்ட எடிட்டே செய்யாமல் ஏழு பக்கங்களுக்கு வெளியிட்ட அந்திமழைக்கு என் நன்றி.

அந்திமழை வலைத்தளத்திலேயே ப்ரூஸ் லீ கட்டுரையைப் பத்திரிக்கையில் வெளிவந்த ஃபார்மேட்டில் இங்கே படித்துக்கொள்ளலாம்.

ப்ரூஸ் லீ – மனம் முழுதும் ஆற்றல் நிரம்பிய வீரன்

கட்டுரையின் முழு வடிவத்தை, ஆங்காங்கே வீடியோ லிங்க்களோடு இங்கே கொடுக்கிறேன். படித்துப் பாருங்கள். உண்மையில் இது கொழந்த எழுதவேண்டியது. ஆனால் அவர் பிஸி என்பதால் நான் எழுதினேன். எனவே தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க.

கொழந்த எழுதிய ப்ரூஸ் லீ பற்றிய சுருக்கமான கட்டுரை இங்கே. கொழந்தையின் டைட்டில் எனக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அதை நான் plagiarize செய்துவிட்டேன்.

கட்டுரை மிகப் பெரியது என்பதால், நிதானமாகப் படித்துப் பாருங்கள். வீடியோக்களை அவசியம் பார்க்கவும். I think I am privileged to write about such a fantastic, dynamic personality. I feel grateful. நான் எழுதியதிலேயே இதுவரை இதுதான் எனக்கு மிகப்பிடித்த கட்டுரை.


 

Empty your mind, be formless. Shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle and it becomes the bottle. You put it in a teapot it becomes the teapot. Now, water can flow or it can crash ….. Be water my friend’ – Bruce Lee.

ப்ரூஸ் லீ என்றதுமே பலருக்கு, அவரது வேகமான மூவ்மெண்ட்கள் நினைவு வரலாம். சிலருக்கு அவர் அடிவயிற்றின் ஆழத்திலிருந்து கத்திக்கொண்டே சண்டையிடுவது நினைவு வரலாம். இன்னும் சிலரோ, பத்தோடு பதினொன்றாக இருந்த ஒரு மார்ஷல் (மார்ஷியல் அல்ல) ஆர்ட்ஸ் வீரர் என்ற அலட்சிய மனோபாவம் தோன்றலாம். எப்படி சே குவாராவின் பின்னணி தெரியாமல், அவரது உருவத்தை டி ஷர்ட்களில் போட்டுக்கொண்டு சுற்றுபவர்கள் அதிகமோ, அப்படி ப்ரூஸ் லீயைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவரது படம் போட்ட டிஷர்ட்களைப் போட்டுக்கொண்டு சுற்றுபவர்களும் அதிகமே. அதில் தவறில்லை என்றாலும்,  ப்ரூஸ் லீ என்ற மகத்தான, துடிப்பான, வசீகரமான, மிகவும் தெளிவான சிந்தனையை உடைய நபரை இந்த உலகம் அதிகமாகக் கண்டதில்லை. லீ ஜுன் ஃபான் என்ற இயற்பெயரோடு, சான் ஃப்ரான்ஸிஸ்கோவின் சைனாடௌனில் 1940 நவம்பர் 27ல் பிறந்த ப்ரூஸ் லீ, தனது 32ம் வயதில் ஜூலை 20, 1973யிலேயே மறைந்துவிட்டாலும், சைனாவிலும் பிற நாடுகளிலும் இன்னும் அவருக்கு இருக்கும் பிரம்மாண்டமான இளைஞர் கூட்டம் இதனாலேயே சாத்தியம். உள்ளது உள்ளபடி ப்ரூஸ் லீயைத் தெரிந்துகொள்பவர்கள் யாரானாலும் இந்த முடிவுக்கே வர இயலும்.

ஆரம்ப நாட்கள்

நடிகரான ப்ரூஸ் லீயின் தந்தை லீ ஹோய் சுவென், 1940ல் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக ஹாங்காங்கிலிருந்து யுனைடட் ஸ்டேட்ஸ் வந்திருந்த சமயம்தான் ப்ரூஸ் லீ பிறந்தார். மூன்று மாதங்களிலேயே ஹாங்காங் திரும்பச் சென்றுவிட்டனர் லீயின் பெற்றோர்கள். ஹாங்காங்கில் கௌலூன் பிராந்தியத்தில் லா சாலெ பள்ளியில் படித்தார் லீ. அப்போதே, சிறுவயதிலேயே தெருச் சண்டைகளில் அவருக்கு மிகுந்த சுவாரஸ்யம் இருந்தது. அவருடன் பள்ளியில் படித்த உள்ளூர் தாதா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை சண்டையில் லீ தோற்கடித்துவிட, அவனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் லீயைப் பிடித்து அடித்தாகவேண்டும் என்று தேடிய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. லீ படித்த பள்ளியில் அவருக்குப் பாடம் எடுத்த ஹென்றி என்ற ஆசிரியர், Life of Bruce Lee (1994) என்ற ஆவணப்படத்தில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்காலகட்டத்தில் ஹாங்காங்கில் பல உள்ளூர் மாஃபியா குடும்பங்கள் இருந்தன. இவர்கள் அனைவருமே மார்ஷல் ஆர்ட்ஸிலேயே கவனம் செலுத்தினர். எனவே தெருச்சண்டைகள் அங்கே அடிக்கடி நிகழ்வது சாதாரண நிகழ்வு.

ப்ரூஸ் லீயும் யிப் மேனும்

சில தெருச்சண்டைகளில் வெற்றி; சிலவற்றில் தோல்வி என்ற நிலையில், தனது பதிநாலாவது வயதில் ஒரு பள்ளிச் சண்டையில் தோற்கிறார் ப்ரூஸ் லீ. அந்தத் தோல்வி அவரை பாதிக்கிறது. எப்படித் தோற்றோம் என்று தன்னைத்தானே ஆழமாகக் கேட்டுக்கொள்கிறார். உடல், தனது மனம் சொன்னபடிக் கேட்கவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. இஷ்டப்படி உடலை ஆட்டுவிப்பதில் பயிற்சி வேண்டும் என்று முடிவு செய்கிறார். மார்ஷல் ஆர்ட்ஸில் அவருக்கு இருந்த ஈடுபாட்டினால், லீயின் தந்தை, அந்தப் பிராந்தியத்தில் இருந்த புகழ்பெற்ற மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர் ஒருவரிடம், லீயின் பதினாறாவது வயதில் அவரைச் சேர்க்கிறார். அவர்தான் இன்றும் புகழோடு விளங்கும் யிப் மேன் (Ip Man). விங் சுன் (Wing Chun) என்பது சீனாவின் பழமையான மார்ஷல் ஆர்ட்ஸ்களில் ஒன்று. ஆயுதங்கள் இன்றி, அருகாமையில் நின்றுகொண்டு இருவர் சண்டையிடும்போது, கைகளையும் கால்களையும் உடலையும் பயன்படுத்தி எப்படி அந்தச் சண்டையில் வெல்வது என்பதே விங் சுன்னின் அடிப்படை. மூங்கில் எப்படி வளைந்து கொடுத்துக்கொண்டே மிகவும் சக்திவாய்ந்ததாக விளங்குகிறதோ அப்படி விங் சுன் பயின்ற நபரும் எதிராளியின் தாக்குதலை வளைந்து கொடுக்கும் உடலால் சமாளித்துக்கொண்டே, பலம் வாய்ந்த தாக்குதல்களால் எதிராளியை நிலைகுலையவைப்பார் (இந்தத் தத்துவத்தை ப்ரூஸ் லீ இயக்கிய அவரது இறுதிப் படமான Game of Death படத்தில் வசனமாகவே பேசுவார். இப்படம் முடிக்கப்படுவதற்குள்ளாகவே லீ இறந்துவிட்டார்).

இந்த விங் சுன்னில் யிப் மேன் அசைக்கமுடியாத மாஸ்டராக இருந்தவர். லீயை விங் சுன்னில் முறைப்படி பயிற்றுவித்தார். பிற மார்ஷல் ஆர்ட்ஸ் கலைகளைவிடவும் ப்ரூஸ் லீக்கு விங் சுன்னே பிடித்திருந்தது. ஏனெனில், பிற சண்டை முறைகளில், ஏராளமான, படிப்படியான பல ஸ்டெப்கள் இருந்தன. எதிராளியோடு பொருதும்போதும் இவற்றை ஒவ்வொன்றாக முறைப்படி செய்தே மோதவேண்டும். நிஜத்தில் இப்படி பரதநாட்டியம் ஆடிக்கொண்டு இருந்தால், எதிராளி நமது தலையை மிக எளிதாகக் கொய்துவிடுவான் என்பதால், நேரடியாக எதிராளியைக் குறைந்த ஸ்டெப்களில் நிலைகுலையவைக்கும் விங் சுன்னே ப்ரூஸ் லீயின் விருப்பத்திற்குறிய பாடமாக இருந்தது. இந்தக் கருத்தில் இறுதிவரை ப்ரூஸ் லீ உறுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றிக் கட்டுரையில் அந்தந்த இடங்கள் வரும்போது பார்க்கலாம்.

முதல் அமெரிக்கப் பயணம்

முறையாகப் பயிற்சி ப்எறும்போது ப்ரூஸ் லீயின் சண்டையிடும் திறமை நன்றாக வளர்ந்தது. இதனால், அவரது சண்டைகளில் வன்முறை இன்னும் அதிகமானது. பள்ளியில் இது ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக வளர்ந்து, இன்னொருமுறை சண்டையில் ப்ரூஸ் லீ ஈடுபட்டால், அவர் கைதாகவேண்டிவரும் என்று போலீஸ் அவரை எச்சரிக்கும் அளவு சென்றுவிட்டது. இதனால், அவரது தந்தை, ப்ரூஸ் லீக்கு அவரது சுற்றுப்புறத்தில் ஒரு சிறிய மாறுதலை அறிமுகப்படுத்தும் பொருட்டு, யுனைடட் ஸ்டேட்ஸுக்கு லீயை அனுப்புகிறார். அது ஏப்ரல் 1959. ப்ரூஸ் லியின் பதினெட்டாவது வயது. அந்தக் கப்பல் பயணத்தில் தந்தை வெறும் 100 டாலர்கள் மட்டும் கொடுத்திருந்ததால், ஹாங்காங்கில் இருக்கும்போதே கற்றுக்கொண்ட நடனத்தைக் கப்பலில் முதல் வகுப்புப் பிரயாணிகளுக்குக் கற்றுக்கொடுத்துக் கொஞ்சம் பணம் சம்பாதித்தார் லீ. நடனத்திலும் ப்ரூஸ் லீக்குப் பெரிய ஈடுபாடு இருந்தது.

சியாட்டிலில் தனது பள்ளி மேற்படிப்பைப் படித்தார் லீ. பின்னர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நாடகங்கள் பற்றிய படிப்பில் படித்துத் தேர்ந்தார். அப்போதே தத்துவங்கள் பற்றியும் அங்கேயே படித்தார். பிந்நாட்களில் ஒரு குறிப்பிட்ட சமயம் வரும்போது கிட்டத்தட்ட ஆறு மாதங்கள், வேறு எந்தச் செயலிலும் ஈடுபடாமல் தத்துவங்களையே இன்னும் ஆழமாக ப்ரூஸ் லீ படிக்கப்போவதற்கு ஆரம்பப் புள்ளி இது எனலாம். அந்தச் சம்பவம் வருகையில் அதனைக் கட்டுரையில் கவனிக்கலாம்.

ப்ரூஸ் லீயின் முதல் கங்ஃபூ பள்ளி

இதே காலகட்டத்தில், கையில் பணம் மிகக் குறைவாக இருந்த ப்ரூஸ் லீயிடம், அவரது நண்பர்கள், அவர் கற்றிருந்த கலையைப் பிறருக்குச் சொல்லிக்கொடுத்து ஏன் கொஞ்சம் பணம் சம்பாதிக்கக்கூடாது என்று கேட்க, சுயமாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்த ப்ரூஸ் லீ, யுனைடட் ஸ்டேட்ஸில் தனது முதல் பயிற்சிப் பள்ளியைத் துவங்குகிறார். தரைத்தளத்தில் ஒரே அறை. மாடியிலும் ஒரே அறை என்று மிகச்சிறிய அமைப்பில் உருவான பயிற்சிப் பள்ளி அது. ’ஜுன் ஃபான் கங்ஃபூ இன்ஸ்டிட்யூட்’ என்ற பெயரில் சியாட்டிலில், 1959ல் இந்தப் பள்ளி உருவானது. ப்ரூஸ் லீயின் பதினெட்டாவது வயது அது.

இதன்பின்னர், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்தார் லீ. அச்சமயத்தில், அந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகத்திலேயே இன்னொரு மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சிக் கூடத்தையும் துவங்கினார். அச்சமயத்தில், சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு லீ சென்று, அவரது கலையை  டெமான்ஸ்ட்ரேட் செய்து காட்டுவது வழக்கம். அப்படி ஒரு நாளில்தான் லிண்டா எமெரி என்ற பதினேழு வயதுப் பெண்ணைப் பார்க்கிறார். உடனடியாகக் காதல். இந்த லிண்டாதான் பின்னர் ப்ரூஸ் லீயின் மனைவியாக ஆனார். இவர்களுக்கு ப்ராண்டன் லீ & ஷான்னன் லீ ஆகிய குழந்தைகள் பிறந்தன.

பயிற்சிகளில் ப்ரூஸ் லீ, பலமுறை ஒரு பெரிய பொம்மையை வைத்துக்கொண்டே சண்டை சொல்லிக்கொடுப்பது வழக்கம். மரத்தால் ஆன தலை மற்றும் உடல், இரும்புக் குழாய்களால் ஆன கால் பகுதி, இன்னொரு இரும்புக் குழாய் மற்றும் ஸ்ப்ரிங்குகளால் இணைக்கப்பட்ட முதுகுப்புறம் என்று மிகவும் வலுவான பொம்மை இது. இதன் தலை, உடல் மற்றும் கால் பகுதிகளில் பலமுறை தனது வலுவான கைகள் மற்றும் கால்களால் தாக்கியே, விங் சுன் கலையை மாணவர்களுக்கு லீ சொல்லிக்கொடுத்தார்.

லாங் பீச்- கலிஃபோர்னியாவில் மார்ஷல் ஆர்ட்ஸ் போட்டிகள் அடிக்கடி நடக்கும். அப்படிப்பட்ட போட்டிகளில் இந்தச் சமயங்களில்தான் ப்ரூஸ் லீ விருந்தினராகச் சென்று, பல மார்ஷல் ஆர்ட் சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார் (இந்த வீடியோக்கள் இன்றும் இணையத்தில் உள்ளன). இரண்டே விரல்களை வைத்துக்கொண்டு தண்டால் எடுப்பது, அவரது மிகப்பிரபலமான ‘One Inch Punch’ ஆகியவை அப்போதுதான் பிரபலமாயின (ஒன் இன்ச் பஞ்ச் என்பதன் மாறுபட்ட வடிவத்தை இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ, தனது ‘கில் பில்’ படத்தில் காட்டியிருப்பார்). எதிராளியின் மார்புக்கு ஒரே ஒரு இன்ச் முன்னர் தனது கையை வைத்துக்கொண்டு, வேறு எந்த பாகத்தையும் அசைக்காமல், இந்த முஷ்டியை வைத்துக்கொண்டே ஒரு ‘பஞ்ச்’ மூலம் எதிராளியை நிலைகுலையவைப்பதே அவரது ஒன் இஞ்ச் பஞ்ச். இதை அவர் செய்யும்போதெல்லாம், எதிராளிகள் அந்தத் தாக்குதலின் தாக்கத்தைத் தாங்க இயலாமல் பின்னால் நிலைகுலைந்து விழுவது வழக்கம். அந்த வலி, பல நாட்கள் இருந்துகொண்டே இருக்கும் என்பது அவர்களின் கூற்று.

ப்ரூஸ் லீ அவரது பயிற்சிப் பள்ளிகளில் பலதரப்பட்ட மாணவர்களையும் சேர்த்துக்கொண்டு சைனாவின் பாரம்பரியம் மிக்க மார்ஷல் ஆர்ட்ஸ்களில் ஒன்றான விங் சுன்னை சொல்லிக்கொடுப்பது சைனாவைச் சேர்ந்த பிற மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. முன்னரேயே, யிப் மேனிடம் ப்ரூஸ் லீ பயின்றபோதே, அவரது தாய் பாரம்பரியமான சீன வம்சாவளியைச் சேர்ந்தவராக இல்லாததால் அவருடன் பயின்ற பிற மாணவர்கள் ப்ரூஸ் லீயைத் தீண்டத்தகாதவரைப் போல் நடத்தியிருந்தது வரலாறு. இப்போதும் அவர் விங் சுன் பயிற்றுவிப்பதற்கு யுனைடட் ஸ்டேட்ஸில் இருந்த பிற சீனப் பயிற்சியாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

1964ல், ஓக்லாண்டில், வோங் ஜாக் மேன் என்ற மார்ஷல் ஆர்ட்ஸை நன்கு படித்த நபருடன் ப்ரூஸ் லீ பொருதினார். இந்தப் போட்டியில் ப்ரூஸ் லீ தோற்றால் அவர் இனிமேல் சைனாவைச் சேராத பிற நாட்டவருக்கு விங் சுன் சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதே ஒரே நிபந்தனை. இந்தப் போட்டியின்போது உடனிருந்தவர் ப்ரூஸ் லீயின் மனைவி லிண்டா. The Life of Bruce Lee (1994) என்ற ஆவணப் படத்தில் அவர் இந்தப் போட்டியைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். ‘போட்டி நடந்தது வெறும் முன்றே நிமிடங்கள்தான். அந்த இடத்தைச் சுற்றிச்சுற்றி ஜாக் மேன் பயத்தில் ஓட, அவர் மீது பாய்ந்து, அவரைத் தரையில் வீழ்த்தி, ‘தோல்வியை ஒப்புக்கொள்கிறாயா இல்லையா?’ என்று ப்ரூஸ் லீ உறுமினார். உடனடியாகத் தனது தோல்வியை ஜாக் மேன் ஒத்துக்கொண்டார்’ என்பது அவரது கூற்று. இதனால் பிற சீனப் போட்டியாளர்களின் அதிருப்தி (ப்ரூஸ் லீ மீது இருந்த பயத்தால்) முடிவுக்கு வந்தது.

Jeet Kune Do – The Way of the Intercepting Fist

கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் உள்ளும் புறமும் விங் சுன்னைக் கற்றுத் தேர்ந்திருந்ததால், ப்ரூஸ் லீ அந்தக் கலையில் விற்பன்னராக இருந்தது ஆச்சரியம் அல்ல. ஆனால் அக்கலையைத் தனது வாழ்க்கையில் பெற்றிருந்த அனுபவங்களால் செப்பனிட்டு மேலும் உறுதியாகவும் வேகமானதாகவும் மாற்றினார் ப்ரூஸ் லீ. அதுதான் அவரது சிறப்பியல்பு. எதிராளியின் மீது தாக்குதலை உடனடியாக நிகழ்த்த முடியுமா முடியாதா என்ற ஒரே விஷயமே அவரது தேடுதலுக்கு மூலகாரணமாக இருந்தது. அப்படி விரைவில் பலவிதமான தாக்குதல்களை எதிராளியின் மீது தொடுத்தலே அவர் சொல்லிக்கொடுத்த விங் சுன்னில் பிரதான அம்சமாகவும் இருந்தது.

இதுதான் ஜீத் கூன் டோ (Jeet Kune Do) – ப்ரூஸ் லீ பிரத்யேகமாக உருவாக்கிய மார்ஷல் ஆர்ட்ஸ் முறை. விங் சுன் போன்ற பிற கலைகளை ஆழமாகப் படித்து, அவற்றில் இருக்கும் பிரதான அம்சங்களை எடுத்துக்கொண்டு, தனது புரிதலையும் அனுபவங்களையும் கலந்து ப்ரூஸ் லீ உருவாக்கிய மிக வேகமான, ஆபத்தான, சக்திவாய்ந்த மார்ஷல் ஆர்ட்ஸ் வடிவம். ஜீத் கூன் டோ என்ற பதத்துக்கு, ’இடைமறிக்கும் கையின் வழி (The way of the intercepting fist)’ என்பது பொருள். கைகளை வைத்துக்கொண்டு விரைவாகப் பலவிதமான சக்திவாய்ந்த தாக்குதல்களைத் தொடுக்கும் முறையாக இதனை ப்ரூஸ் லீ பிரபலப்படுத்தினார்.

ஜீத் கூன் டோவை மிகச்சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், சண்டையிடும் முன்னரே எதிராளியைத் தோற்கடிக்கமுடிந்தால் எப்படி இருக்கும்? இதுதான் ஜீத் கூன் டோ. ‘You can call my style as the art of fighting without fighting’ என்பது அவரது மிகப்பிரபலமான மேற்கோள்களில் ஒன்று. ஆனால் இதை உள்ளது உள்ளபடி புரிந்துகொண்டவர்கள் மிகச்சொற்பமே. இதனால் ஒரு காலகட்டத்தில் தனது வகுப்புகளையே ப்ரூஸ் லீ இழுத்து மூடவேண்டி வந்தது. அதைப் பிறகு பார்க்கலாம்.

பயிற்சி கொடுக்கும்போது, குத்துச்சண்டை க்ளௌஸ்களையும் ஹெல்மெட்களையும் தனது மாணவர்களை அணியச்சொல்வார் ப்ரூஸ் லீ. யுனைடட் ஸ்டேட்ஸில் எந்த மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளியும் கண்டிராத வினோதம் இது. காரணம் பிற பள்ளிகளில், நாம் முன்னரே பார்த்ததுபோல, வரிசையான ஸ்டெப்களையே சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தனர். இதனால் எதிராளி ஒரு ஸ்டெப் போடும்போது அதற்கு எசப்பாட்டாக இன்னொரு ஸ்டெப்பை நாம் போடவேண்டும். இப்படிப்பட்ட ஸ்டெப்களில் உள்ள நேர்த்தியை வைத்தே மதிப்பெண்கள் அளித்து, வெற்றியும் தோல்வியும் போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ப்ரூஸ் லீயோ, எந்த ஸ்டெப்பும் நிரந்தரம் இல்லை; எதிராளி மயங்கி விழுவதே நிரந்தரம்; எனவே எதிராளி தோற்கும் வரை கை, கால், வாய் (ஆம்.. எதிராளி நம்மை உடும்புப் பிடி போட்டுப் பிடித்துவிட்டால், சமயத்தில் அவனைக் கடித்தும் கூட அவனை நாம் வெல்லலாம் என்று அடிக்கடி சொல்வார் லீ) முதலிய உறுப்புகளை வைத்துக்கொண்டு, இயல்பான, எந்தத் தூண்டுதலும் இல்லாத spontaneous மூவ்களால் எதிராளியை முறியடிக்கவேண்டும் என்பதையே தனது தாரக மந்திரமாக வைத்திருந்தார். இதனால்தான் குத்துச்சண்டை க்ளௌஸ்களும் ஹெல்மெட்களும் அவரால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. சுருக்கமாக, எதிராளியை மனதளவில் பயமுறுத்துவது.

இதனால் அவரது மாணவர்கள் மிக விரைவில் திறமைசாலிகளாக மாறினர். கூடவே, கராத்தே மற்றும் கங் ஃபூவில் பிரபலமாக விளங்கிய பலரையும் ஜீத் கூன் டோ ஈர்த்தது. யுனைடட் ஸ்டேட்ஸில் நடந்த பல மார்ஷல் ஆர்ட்ஸ் போட்டிகளில் ப்ரூஸ் லீயின் மாணவர்களே இதன்பின் பல வருடங்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

ஜனவரி 1970. புகழின் உச்சத்தில் இருந்தபோது, தனது மூன்று மிக வெற்றிகரமான மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளிகளையும் ப்ரூஸ் லீ திடீரென்று மூடிவிடுகிறார். மிகக்குறைந்த மாணவர்களையே அதன்பின் தனிப்பட்ட முறையில் பயிற்றுவிக்க ஆரம்பிக்கிறார். காரணம், மார்ஷல் ஆர்ட்ஸ் என்பவைகளைக் கற்றுக்கொண்டு, தனிப்பட்ட மனிதனாகத் தன்னை உயர்த்திக்கொள்ளும் நோக்கில் மாணவர்கள் இல்லாமல் இருந்ததே. கொஞ்சம் கூடத் தயங்காமல் இந்த முடிவை லீ எடுத்தார்.

வாழ்க்கையை முடக்கிய மரண அடி

சில மாதங்களுக்குப் பின்னர், ப்ரூஸ் லீயின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனை ஒன்று நிகழ்ந்தது. ஜிம்மில் சரியாக வார்ம் அப் செய்யாமல் எடைகளைத் தூக்கியதால், முதுகின் மிக முக்கியமான ஒரு நரம்பில் ப்ரூஸ் லீக்கு அடிபடுகிறது (4th sacral nerve in the lower back). உடனடியாகவே படுத்த படுக்கையாகிவிடுகிறார் லீ. இனிமேல் லீயால் மார்ஷல் ஆர்ட்ஸ் பயிற்சிகள் எதையும் செய்ய இயலாது என்று மருத்துவர்கள் கைவிரித்துவிடுகின்றனர். வாழ்க்கை முழுதும் முதுகுவலியோடுதான் கழிக்க நேரும் என்றும் சொல்லிவிடுகின்றனர்.

இந்தச் சமயத்தில்தான், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் படுக்கையை விட்டு எழ இயலாத சூழலில், இயல்பாகவே கல்லூரியில் படித்த தத்துவம் ப்ரூஸ் லீயின் உதவிக்கு வருகிறது. இதுவரை எதைச் செய்தாலும் துடிப்போடும் ஈடுபாட்டோடும் செய்துவந்த லீ, வெறித்தனமாகத் தத்துவம் சார்ந்த புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்கிறார். உலகின் அத்தனை முக்கியமான தத்துவங்களையும் முழுமையாகப் படித்துத் தேர்கிறார். தத்துவம் மட்டுமன்றி, உளவியலும் படிக்கிறார். அவரது அத்தனை சக்தியையும் படிப்பதிலேயே செலவிடுகிறார்.

இதனால், ஆறு மாதங்களின் முடிவில் வாழ்க்கை பற்றிய மிகத்தெளிவான புரிதலுக்கு வந்திருந்தார் லீ. இந்த ஆறு மாதங்களில் அவர் படித்த தத்துவஞானிகளிலேயே, இந்தியாவைச் சேர்ந்த ஜே.கிருஷ்ணமூர்த்தியை அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது. ’நீயே உனக்கான ஒளியாக இருக்கவேண்டும்; உன்னைப்பற்றிய உண்மையை அறிய, உனக்குள்ளேயே ஆழமாகப் பார்’ என்ற கிருஷ்ணமூர்த்தியின் எளிய – ஆனால் சக்திவாய்ந்த கூற்றுகளில் முழுமையாக ஈடுபடுகிறார் லீ. இந்தக் காலகட்டத்தில் தனது அனுபவங்கள் பற்றி ப்ரூஸ் லீ கைப்பட எழுதிய தொகுதிகள் மொத்தம் ஏழு என்று அவரது மனைவி குறிப்பிட்டிருக்கிறார்.

மிகவும் தெளிந்த மனநிலையை ப்ரூஸ் லீ அடைந்திருந்ததால், ஆறு மாதங்களின் முடிவில் மெல்லப் படுக்கையில் இருந்து எழுந்து, பயிற்சிகள் செய்ய ஆரம்பித்து, ஒரு சில மாதங்களிலேயே முந்தைய நிலையை விடச் சிறந்த, மேம்பட்ட மார்ஷல் ஆர்ட்ஸ் வீரராக மாறினார் லீ.

இந்தக் காலகட்டத்தில்தான், வெற்றி என்பது பலதரப்பட்ட ஸ்டைல்களில் இல்லை; மாறாக, அது ஒவ்வொருவரின் உள்ளேயும் தனிப்பட்ட முறையில் விளங்கும் உண்மையை வெளிக்கொணர்வதில்தான் இருக்கிறது என்று அனுபவபூர்வமாக உணர்ந்தார். இதை அப்போதில் இருந்து பேட்டிகள், புத்தகங்கள் வாலியாக எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தார் லீ.

அப்போது அவர் உருவாக்கிய மிகப் பிரபலமான சொற்றொடர்தான் ‘Using no way as way, and having no limitation as Limitation’ என்பது. இதைத் தனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த பதக்கத்தின் பின்புறம் பொறித்தே வைத்தார் லீ. இதற்கு என்ன பொருள் என்றால், எந்தச் சூழலிலும், உள்ளுக்குள் முடங்கிப் போய்விடக்கூடாது; மாறாக, அங்கே என்ன இருக்கிறதோ அதனைப் பயன்படுத்தி வெற்றிகாணவேண்டும் என்பதே. Adapt என்பதே இதன் சுருக்கம்.

டிவி மற்றும் திரை அறிமுகங்கள்

இந்தச் சமயத்தில்தான், Green Hornet என்ற தொலைக்காட்சி சீரீஸ் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ப்ரூஸ் லீயைப் பற்றிக் கேள்விப்பட்டு, அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் ப்ரூஸ் லீயை அணுக, ப்ரூஸ் லீயின் நெடுநாளைய கனவு நிகழும் தருணம் அவரை நெருங்கியது. இந்த டிவி சீரீஸில் கதாநாயகனாக இல்லாமல், நாயகனின் side kickஆக ப்ரூஸ் லீ நடித்தார். ஒரே ஒரு சீஸனோடு இந்தத் தொடர் நிராகரிக்கப்பட்டாலும், ப்ரூஸ் லீயின் நடிப்பு சார்ந்த முயற்சிகளுக்கு இதுவே துவக்கமாக அமைந்தது. இதன்பின் க்ரீன் ஹார்னெட்டில் அவரது கதாபாத்திரமான ‘காடோ’ வேடத்திலேயே அப்போதைய பிரபலமான டிவி சீரீஸான பேட்மேனிலும் மூன்று எபிஸோட்கள் நடித்தார் லீ. இதன்பின் இன்னும் மூன்று தொடர்களில் சிறிய வேடங்களில் நடிக்க வாய்ப்புக் கிட்டியது.

ஆனால், என்னதான் முயன்றாலும், ப்ரூஸ் லீ ஹாலிவுட் படங்களில் நடிக்க இயலவில்லை. காரணம், சீன நபர் ஒருவர் ஹாலிவுட் படங்களில் பிரதான வேடங்களில் நடிப்பது அப்போது இருந்த தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்கவில்லை. இவரால் படம் ஓடுமா? வசூல் கிடைக்குமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. டிவி சீரீஸ்களில் நடிக்கும்போதுதான் ‘Silent Flute’ என்று மார்ஷல் ஆர்ட்ஸ் படம் ஒன்றை எழுதுகிறார் லீ. ஆனால் இப்படம் தயாரிக்கப்படவில்லை. இதன்பின் ‘கங் ஃபூ’ என்ற பெயரில் ஒரு டிவி சீரீஸையும் உருவாக்குகிறார் லீ. ஆனால் அதன் தயாரிப்பாளர்கள், ப்ரூஸ் லீ மீது இருந்த தயக்கத்தால் ப்ரூஸ் லீயை நிராகரித்துவிட்டு, இன்னொரு நடிகரை ஹீரோவாகப் போட (அவர்தான் டேவிட் காரடீன். யுனைடட் ஸ்டேட்ஸின் மற்றொரு பிரபல மார்ஷல் ஆர்ட்ஸ் நடிகர். கில் பில் படத்தில் வில்லன் பில்லாக நடித்தவர்), இனியும் ஹாலிவுட்டில் இருக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறார் லீ. அவரது தாய்நாடான ஹாங்காங் பயணிக்கிறார்.

ஹாங்காங்கில் ப்ரூஸ் லீ

ஹாங்காங்கில் அப்போது எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த மார்ஷல் ஆர்ட்ஸ் படங்கள், பெரும்பாலும் சரித்திரப் பின்னணியையே கொண்டிருந்தன. கூடவே, நியாயமே கற்பிக்கமுடியாத அளவுகடந்த வன்முறையும் அவற்றில் இருந்தது. இதனை ப்ரூஸ் லீ மாற்ற முடிவு செய்கிறார். தன்னை இங்கே யாருக்கும் தெரியாது என்று லீ நினைக்க, க்ரீன் ஹார்னெட் டிவி சீரீஸ் ஹாங்காங்கில் சூப்பர் ஹிட் என்பதை அப்போதுதான் உணர்கிறார். இதனால் திரைப்பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கின்றன. இருந்தாலும் மிகக் குறைந்த சம்பளமே கிடைக்கிறது. அதைப் பொருட்படுத்தாமல் ப்ரூஸ் லீ நாயகனாக நடித்த முதல் சைனீஸ் படம் வெளியாகிறது. அதுதான் ‘The Big Boss’ (1971). தனது படங்களில், கதாநாயகன் வன்முறையில் ஈடுபடுகிறான் என்றால் அதற்கேற்ற வலுவான காரணம் அவசியம் இருக்கும் என்பதை இப்படம் மட்டுமல்லாமல், தனது எல்லாப் படங்களிலும் காட்டினார் லீ. தேவையில்லாத வன்முறை என்பது போய், தேவைப்பட்டதால்தான் வன்முறை என்று அவரது படங்கள் நிலைநாட்டின.

அதுவரை சைனீஸ் மார்ஷல் ஆர்ட்ஸ் படங்கள் பெற்றிராத பிரம்மாண்டமான வெற்றியை பிக் பாஸ் பெறுகிறது. ஆசியா முழுக்க சூப்பர்ஹிட்டாக ஓடுகிறது. இந்தியாவிலும் இப்படம் பிரபலம் என்பது ப்ரூஸ் லீ ரசிகர்களுக்குத் தெரியும். ஹாங்காங்கின் சூப்பர்ஸ்டார் ஆகிறார் லீ. இதன்பின் அவர் நடித்த அவரது இரண்டாவது படமான ‘Fist of Fury’ (1972), பிக் பாஸ் அடைந்த வெற்றியை அடித்து நொறுக்கி, அதைவிடப் பிரம்மாண்டமான பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியாக ஆசியாவெங்கும் மாறுகிறது. ப்ரூஸ் லீயின் திரைலட்சியம் இவ்வாறாக அட்டகாசமாக வெற்றியடைந்தது.

இதன்பின் அவரது மூன்றாவது படம் – ‘Way of the Dragon (1972)’ வெளியாகிறது. இம்முறை, இப்படத்தின் சகல அம்சங்களும் ப்ரூஸ் லீயாலேயே முடிவு செய்யப்படுகின்றன. திரைக்கதை மற்றும் இயக்கமும் ப்ரூஸ் லீயே. இப்படமும் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது.

இதன்பின் தனது நான்காவது படமான ‘Game of Death’ பட வேலைகளில் 1972 முடிவில் ப்ரூஸ் லீ ஈடுபடுகிறார். படத்தின் பல காட்சிகளை எடுத்தார். படத்தில் ஒரு பௌத்த மடாலயம் வரும். அதன் ஒவ்வொரு தளத்திலும் ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் வீரன் இருப்பான். அவனை முறியடித்தே அடுத்த தளத்துக்குச் செல்லமுடியும். இப்படிப்பட்ட வேடங்களுக்குத் தன்னிடம் மார்ஷல் ஆர்ட்ஸ் படித்த வீரர்களைப் பொறுக்கிப் போட்டுப் படமாக்கினார் லீ. மிகக்கடுமையான உழைப்பை இப்படத்துக்கு நல்கினார்.

இரண்டாம் அமெரிக்க விஜயம் – எண்டர் த ட்ராகன்

இந்த நேரத்தில்தான், எந்த ஹாலிவுட் ப்ரூஸ் லீயை வெறுத்து ஒதுக்கியதோ, அதே ஹாலிவுட் ப்ரூஸ் லீயின் காலடியில் பணிந்து கெஞ்சிய தருணம் நிகழ்ந்தது. வார்னர் ப்ரதர்ஸ், ப்ரூஸ் லீயை வைத்து ஒரு பெரிய பட்ஜெட் ஹாலிவுட் மார்ஷல் ஆர்ட்ஸ் படம் ஒன்றை இயக்க முன்வந்தனர்.

ப்ரூஸ் லீ, அவர்கள் செய்த வேலையை அவர்களுக்கே திருப்பிச் செய்யாமல், பெருந்தன்மையுடன் அவர்கள் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். இதனால் கேம் ஆஃப் டெத் படத்தின் வேலைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு, வார்னர் ப்ரதர்ஸின் படத்தில் நடித்தார். அந்தப் படம்தான் Enter the Dragon (1973). இந்தப் படம்தான் முதன்முதலில் ஹாலிவுட் ஸ்டுடியோ ஒன்றினால் தயாரிக்கப்பட்ட சீன மார்ஷல் ஆர்ட்ஸ் படம். இந்தப் படத்தில், வழக்கப்படி நடிப்பு மட்டுமில்லாமல் படத்தின் ஒட்டுமொத்த உருவாக்கத்திலும் பெரும்பங்கு வகித்தார் லீ. படத்தின் அத்தனை ஸ்டண்ட் காட்சிகளையும் லீயே அமைத்தார். ப்ரூஸ் லீயின் அசைவுகள் மிகவும் வேகமாக இருந்ததால், அவற்றை வேகமாகப் படமெடுத்துப் பின்னர் ரிலீஸின்போது ஃப்ரேம்ரேட்டைக் குறைத்துக் காட்டியதும் நிகழ்ந்தது.

பொதுவாகவே, திரைப்படங்களில் மார்ஷல் ஆர்ட்ஸைக் காட்டுவதில் ப்ரூஸ் லீக்கு ஒரு தனிப்பட்ட கொள்கை இருந்தது. மார்ஷல் ஆர்ட்ஸின் நோக்கம் என்ன? அவை மூலம் தனிப்பட்ட மனிதன் எப்படி மாறுகிறான்? என்பதெல்லாம் அவசியம் திரைப்படங்களால் பதிவு செய்யப்படவேண்டும் என்பதே ப்ரூஸ் லீயின் எண்ணம். அதன்படித்தான் அவரது அனைத்துப் படங்களும் இருக்கும். எண்டர் த ட்ராகனும் அப்படியே.

உலகம் முழுக்க வெறித்தனமாக ஓடிய மார்ஷல் ஆர்ட்ஸ் படமாக எண்டர் த ட்ராகன் மாறியது. பலரையும் மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ளத் தூண்டிய படமாகவும் இருந்தது. தமிழகத்தில் பல மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளிகள் திறக்கப்பட்ட காலகட்டம் இது.

இந்தப் படத்தை முடித்ததும், நின்றுபோயிருந்த கேம் ஆஃப் டெத் படத்தை மறுபடியும் ப்ரூஸ் லீ துவக்குகிறார். கேம் ஆஃப் டெத் பட வேலைகளை மறுபடியும் ஆரம்பித்தபின்னர், எண்டர் த ட்ராகன் வெளியாவதற்கு ஆறு நாட்கள் முன்னர், ஜூலை 20, 1973ல், ஹாங்காங்கில் மரணமடைகிறார். மரணத்துக்குக் காரணம், அன்று அவர் சாப்பிட்ட ஒரு மாத்திரை. அவர் அன்று தலைவலிக்காக எடுத்துக்கொண்ட ஒரு மாத்திரையில் (Equagesic) இருந்த பொருட்களை அவரது உடல் ஏற்காததால் ஏற்பட்ட அலர்ஜி எதிர்வினை புரிந்ததால், தூக்கத்திலேயே மரணத்தைத் தழுவினார் லீ. ஆனால், இந்த மரணத்துக்கு இரண்டு மாதங்கள் முன்னர், இதே போன்ற ஒரு தலைவலி ஏற்பட்டு, மூளையில் நீர் கோத்துக்கொண்டு, அது வலிப்பில் கொண்டு விட, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணாமானார். அதேபோன்ற எதிர்வினைகளையே அவரது உடல் தூக்கத்தில் அந்த மாத்திரை உட்கொண்டதும் புரிய, அதுவே அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்தது.

இறக்கையில் ப்ரூஸ் லீயின் வயது 32.

கேம் ஆஃப் டெத் படத்துக்காக ப்ரூஸ் லீ தனது கைப்பட எழுதி வரைந்த திரைக்கதை, வசனங்கள், வரைபடங்கள் ஆகியன அதன்பின்னர் பல வருடங்கள் கழித்தே கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டுடியோவுக்குள் கண்டெடுக்கப்பட்டன. இவை இணையத்தில் இன்றும் கிடைக்கின்றன. கேம் ஆஃப் டெத் படத்துக்காக ப்ரூஸ் லீ எடுத்த பல காட்சிகளும் 22 வருடங்கள் கழித்தே கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டுடியோவில் கண்டெடுக்கப்பட்டன. அவை இப்போது பரவலாகக் கிடைக்கின்றன.

ப்ரூஸ் லீயின் முக்கியத்துவம்

நாலரைப் படங்கள். ஒருசில டிவி சீரீஸ்களில் குட்டியான வேடங்கள். இவற்றில் நடித்திருக்கும் ஒரு நடிகரை உலகமே எப்படி இன்றுவரை – அவர் இறந்து 43 வருடங்கள் கழித்தும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது? எப்படி இன்றுவரை உலகின் முக்கியமான நபர்களில் ப்ரூஸ் லீயும் ஒருவராக இருந்துகொண்டிருக்கிறார்?

அவர் வெறுமனே மார்ஷல் ஆர்ட்ஸ் மட்டும் கற்றுக்கொண்டு திரைப்படங்களில் நடித்த நடிகராக இருந்திருந்தால் இப்படி நினைவுகொள்ளப்பட்டிருக்கமாட்டார். ஒரு முழுமையான ஆளுமையாக, தன் வாழ்க்கையே பிறருக்கு உதாரணமாக வாழ்ந்த நபராகவே ப்ரூஸ் லீ இருந்ததால்தான் இன்றும் அவரை உலகம் நினைவு வைத்திருக்கிறது. முழுமையான ஆளுமை என்றால், தான் கற்றுக்கொண்ட விஷயங்களை முழுமையாகப் பின்பற்றியவர். அவைகளை மேலும் செப்பனிட்டு உலகுக்கு வழங்கியவர். தனிப்பட்ட பெர்ஸனாலிடி உள்ளவர். யாரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றவேண்டாம் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தவர். இதனாலேயே மாணவர்களை அவரை விட்டுவிட்டுப் போகச்சொன்னவர்.

ப்ரூஸ் லீயின் முக்கியமான கோட்பாடு – எப்போதுமே, உடல் பலத்தை மட்டுமே நம்பிக்கொண்டு எதிலுமே இறங்கக்கூடாது என்பதே. மாறாக, ஒரு மனிதனின் உண்மையான பலம் அவனது உள்ளத்தில் உள்ளது என்பதை அனுபவபூர்வமாக வாழ்ந்து காட்டியவர் லீ. மனம் முழுதும் ஆற்றல் நிரம்பிய வீரன், தன்னை எப்போதுமே வெளிக்காட்டிக்கொள்வதில்லை. அரைகுறைகளே தங்களை வெளிக்காட்டுவதில் முழுவீச்சாக இறங்கிக்கொண்டே இருக்கின்றனர். துளிக்கூட பலம் இல்லாமல் இப்படிப்பட்டவர்களே எப்போதும் கத்திக்கொண்டே இருக்கின்றனர். ப்ரூஸ் லீயின் பல பேட்டிகளிலும் அவரது உறுதியான உடல்மொழியையும், ஒரு ஜென் குருவைப் போல விளங்கும் அவரது மனதையும் யாருமே எளிதில் படித்தறிந்துவிட முடியும். ப்ரூஸ் லீ, goal setting என்ற முறைமையை ஆழமாக நம்பியவர். ஒரு மனிதன், உள்ளப்பூர்வமாக ஒரு முடிவை எடுத்துவிட்டால், கடவுளே வந்து தடுத்தாலும் அது நடக்காமல் போகாது என்பதை வாழ்ந்தே காட்டியவர்.

ப்ரூஸ் லீயின் மேற்கோள்கள் அடங்கிய பல புத்தகங்கள் தற்போது கிடைக்கின்றன. அவரைப்பற்றிய டாக்குமெண்ட்ரிகளும் ஏராளம். நேரம் கிடைக்கும்போது இவைகளைப் படித்தால்/பார்த்தால், ஒரு இரும்பு மனிதனைப் பரிச்சயம் செய்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். அதன்மூலம் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அவசியம் அடையமுடியும். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான மனிதர்களில் ப்ரூஸ் லீயும் ஒருவர் என்பதில் துளிக்கூட சந்தேகம் இல்லை. அவரைப்பற்றிய இந்தக் கட்டுரை உண்மையில் மிகவும் சுருக்கமானதே. இன்னும் எழுதவேண்டியது ஏராளம் உண்டு.

பி.கு

  1. ப்ரூஸ் லீயைப் பற்றிய காமிக்ஸ்கள் தமிழில் உண்டு. ராணி காமிக்ஸில், எண்பதுகளில் வைரச்சுரங்கம், திசை மாறிய கப்பல், கார் பந்தயம் ஆகிய காமிக்ஸ்களில் ப்ரூஸ் லீயின் சாகஸங்களைப் படித்திருக்கிறேன். அவைகள் இன்றும் நினைவு இருக்கின்றன.
  2. ப்ரூஸ் லீயைப் பற்றிய டாக்குமெண்ட்ரிகளில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், Dragon – the Bruce Lee story, The Life of Bruce Lee, Bruce Lee – A Warrior’s journey, How Bruce Lee Changed the World ஆகியவைகளைப் பரிந்துரைக்கிறேன். ப்ரூஸ் லீயே எழுதிய ‘Wisdom for the Way’ என்ற புத்தகமும் அவசியம் நீங்கள் படித்துப் பார்க்கலாம்.

 

  Comments

3 Comments

  1. vignesh

    Thanks Rajesh for the detailed post, i do already have hell lot of respect for Bruce lee now its reached new level.
    Thank you once again and keep up your good work…

    Reply
  2. Arunkumar

    Bruce lee murder la nerya marmangal irukunu solrangala bro, atha pathi ethum solala???

    Reply
  3. Ganesh

    Thanks na for the detailed information about my favourite Bruce Lee.

    Reply

Join the conversation