Captain America: Civil War (2016) – English
முன்குறிப்பு
நமது தளத்தில் இதுவரை வெளிவந்த Avengers பற்றிய எல்லா கட்டுரைகளையும் இங்கே படித்துக்கொள்ளலாம். எல்லா கதாபாத்திரங்களின் முழுத்தக்கவல்களும் இவற்றில் உள்ளன.
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படம், இனி வரும் மார்வெல் யூனிவர்ஸின் படங்களோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் பிரதான, முக்கியமான விஷயம் இதுதான். இத்தோடு சேர்த்து, இனி வரும் மார்வெல் யூனிவர்ஸின் படங்களைக் கவனித்தால், இந்தப் படத்தின் முக்கியத்துவம் புரிந்துவிடும்.
The Three Phases of the Marvel Cinematic Universe
அதற்கு முன்னர், அவெஞ்சர் சீரீஸின் மூன்று முக்கியமான கட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம். முதல் கட்டமான Phase 1ல், அவஞ்சர்ஸ் படத்தில் இடம்பெறும் அத்தனை கதாபாத்திரங்களும் தனித்தனியான படங்களில் அறிமுகப்படுத்தப்பட்டனர். அந்தப் படங்கள்: Iron Man (2008), The Incredible Hulk (2008), Iron Man 2 (2010), Thor (2011), Captain America: The First Avenger (2011). இவர்கள் அனைவரும், 2012ல் வெளியான The Avengers படத்தில் ஒன்றிணைந்தனர்.
இதன்பின்னர், மார்வெலின் Phase 2 துவங்கியது. இதில் Iron Man 3 (2013), Thor: The Dark World (2013), Captain America: The Winter Soldier (2014), Guardians of the Galaxy (2014), Avengers: Age of Ultron (2015), Ant-Man (2015) ஆகியவை இடம்பெற்றன. பிந்நாட்களில் அவெஞ்சர்களுடன் சேர்ந்து சாகசம் செய்யப்போகும் ஆண்ட் மேன், கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி போன்றவர்களை Phase 2 உருவாக்கியது. ஆனால் இதில் என்ன குறிப்பிடத்தகுந்த விஷயம் என்றால், கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி படத்தில் அறிமுகமான ஹீரோக்கள் அனைவரும் இதுவரை இன்னும் எந்த மார்வெல் படத்திலும் அவெஞ்சர்களுடன் சேர்ந்து அதிரடியில் இறங்கவில்லை. இவர்கள் அவெஞ்சர்களுடன் சேரப்போவது 2018ல்தான். இரண்டு படங்களாக எடுக்கப்படப்போகும் Avengers: Infinity Wars (2018 & 2019) படங்களில்தான் இது நடக்கப்போகிறது. ஆனாலும் கதாபாத்திரங்கள் மற்றும் மார்வெல் யூனிவர்ஸின் தொடர்புகள் கருதி இவர்கள் 2014லேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டனர்.
இதெல்லாம் Phase 2 பற்றிய செய்திகள். மூன்றாவதான Phase 3 தான் எல்லாவற்றிலும் முக்கியமான கட்டம். இதில்தான் இதுவரை மார்வெல் யூனிவர்ஸில் வந்த அத்தனை ஹீரோக்களும் சேரப்போகின்றனர். கூடவே, இந்த மூன்றாவது கட்டத்திலும் சில புதிய ஹீரோக்கள் உண்டு. அவர்களில் டாக்டர் ஸ்ட்ரேஞ், ப்ளாக் பாந்த்தர், தி வாஸ்ப், கேப்டன் மார்வெல் ஆகியவர்கள் முக்கியமானவர்கள். இவர்களை இந்த மூன்றாவது கட்டம் அறிமுகப்படுத்தப்போகிறது. இந்த மூன்றாவது கட்டம், கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்துடன் இனிதே துவங்கியது. ராக்கெட்களையும் ஸாடலைட்களையும் ஒவ்வொன்றாக அரசு வானில் ஏவுவதுபோல் இதுவரை 13 படங்களை மார்வெல் ஆடியன்ஸ் மீது ஏவியாயிற்று. இந்தப் பதிமூன்று படங்களுமே வித்தியாசமானவை. பதிமூன்றுமே சூப்பர்ஹிட்கள் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.
2019 வரை இந்த மூன்றாவது கட்டத்தில் இனி ஒவ்வொன்றாக ரிலீஸாகும் படங்கள் இவைதான்: கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), Doctor Strange (2016), Guardians of the Galaxy: Vol 2 (2017), Spider-Man: Homecoming (2017), THor: Ragnarok (2017), Black Panther (2018), Avengers: Infinity War-Part 1 (2018), And-Man and the Wasp (2018), Captain Marvel (2019) & Avengers: Infinity War-Part 2 (2019).
மார்வெலின் மூன்றாவது கட்டத்தில் மட்டும் பத்து படங்கள் உள்ளன. நான்கே வருடங்களில் இந்தப் பத்து படங்களும் வெளியாகப்போகின்றன என்பதும் முக்கியம்.
இந்த மூன்றாவது கட்டத்துடன், மார்வெல் திட்டமிட்ட பதினோரு வருட யூனிவர்ஸ் முடிவடைகிறது. இந்தப் பதினோரு வருடங்களில் 22 படங்கள் வெளியாகியிருக்கும். இந்த 22 படங்களில் எக்கச்சக்க ஹீரோக்கள், வில்லன்கள், துணைக்கதாபாத்திரங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். இவர்களை வைத்துக்கொண்டு 2019க்குப் பின்னரும் கிட்டத்தட்ட 20 வருடங்கள் வரிசையாகப் படங்கள் எடுக்கப்படும் அளவு மார்வெலிடம் சரக்கு இருக்கிறது. உண்மையில், 2018ல் வெளியாகும் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார் படத்தின் முதல் பாகம் வரை மொத்தம் 63 பிரதான கதாபாத்திரங்கள் வரிசையாக லிஸ்ட் போடப்பட்டு உள்ளன என்றும், அவைகளில் மிகப் பெரும்பாலானவர்கள் அப்படங்களில் இடம்பெறுவர் என்பதையும் அறிகிறோம்.
2008ல் Iron Man வெளியானதே இந்தப் பதினோரு வருடங்களின் முடிவில் வெளியாகப்போகும் Avengers: Infinity War படத்தின் இரண்டாம் பாகத்தை முன்வைத்துதான் என்பதை மார்வெல் ஸ்டூடியோஸின் தலைவர் கெவின் ஃபீஜ் (Kevin Fiege) ஏற்கெனவே சொல்லியிருக்கிறார் என்பதை உணர்ந்தால், மார்வெலின் துல்லியமான திட்டமிடுதலை அறிந்துகொண்டு வியக்க முடியும். இந்தப் பதினோரு வருடங்களின் 22 படங்களின் கதைகளும் ஏற்கனவே ஒன்றோடொன்று தொடர்புடையவையாக உருவாக்கப்பட்டவையே. அதுதான் இந்த சீரீஸின் பிரம்மாண்ட வெற்றிக்குக் காரணம்.
Captain America: Civil War & Avengers: Infinity War
எனவே, இந்த கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் திரைப்படம், அவஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார் படத்துக்கான ஒரு முன்னோட்டமே. இந்தப் படத்தில் வந்த அவெஞ்சர்கள் போக இன்னும் ஒரு பட்டாளம் அவ்வப்போது இனி வரும் இரண்டு வருடங்களில் தொடர்ந்து படங்களில் இடம்பெற்றுக்கொண்டே இருக்கும். முத்தாய்ப்பாக, இன்ஃபினிடி வார் திரைப்படங்கள் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும். இதுவரை வந்த அவெஞ்சர்கள் படங்களை விடவும் இன்ஃபினிடி வார் படமே மிகவும் பிரம்மாண்டமானது. காரணம், அவஞ்சர்கள் படங்களில் இதுவரை காட்டப்பட்ட ஒரு பொருளே. கேப்டன் அமெரிக்காவின் முதல் பாகத்தில் முதன்முறையாகக் காட்டப்பட்ட டெஸராக்ட் நினைவிருக்கிறதா? அது அவெஞ்சர்ஸ் முதல் பாகத்திலும் முக்கியமான பங்கு வகிக்கிறது. அப்படத்தில், தோர் அஸ்கார்டுக்கு அந்த டெஸராக்டை எடுத்துச் செல்வான். அதே அவெஞ்சர்ஸ் படத்தில் லோகியின் கையில் இருக்கும் கோலில் பதிக்கப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த கல்லும் காட்டப்பட்டிருக்கும். இது தானோஸினால் லோகிக்குக் கொடுக்கப்பட்டது. தானோஸ் என்பவன் கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸியில் ஏற்கெனவே வந்தவன். அவெஞ்சர்ஸ் கதைகளில் மிகவும் சக்திவாய்ந்த வில்லன் இவன். இந்தக் கல்லின் பெயர் Mind Stone. இதைவைத்துத்தான் டோனி ஸ்டார்க், Avengers: Age of Ultron படத்தில் அல்ட்ரானுக்கு உயிர் கொடுப்பார். இந்தக் கல் இப்போது எங்கே இருக்கிறது? ஜார்விஸின் மூலமாக உருவாக்கப்பட்ட சூப்பர்ஹீரோ விஷனின் மண்டையில் பதிக்கப்பட்டிருக்கிறது.
இதன்பின் தோர்: த டார்க் வேர்ல்ட் படத்தில் வில்லன் மேலகித் உபயோகிக்க நினைக்கும் கல் ஒன்று உண்டு. இந்தக் கல், collector என்று அழைக்கப்படும் நபரிடம் இப்போது இருக்கிறது. இவர் கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸியிலும் வருவார். இந்தக் கல்லின் பெயர் Reality Stone.
கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸியின் ஹீரோ ஸ்டார் லார்ட், படத்தின் துவக்கத்தில் கண்டுபிடிக்கும் கல்லின் பெயர் Power Stone. இது அப்படத்திலேயே, அதில் வரும் Nova Corps என்ற படைவீரர்களிடம் இவர்களால் கொடுக்கப்படுவதைப் பார்த்தோம்.
எனவே, டெஸராக்ட், Mind Stone, Reality Stone, Power Stone ஆகிய நான்கு பொருட்கள் இதுவரை காட்டப்பட்டிருக்கின்றன. இவைபோக, Soul Stone & Time Stone என்று இன்னும் இரண்டு கற்கள் உள்ளன. இவற்றில் ஒரு கல், டாக்டர் ஸ்ட்ரேஞ் படத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இந்த ஆறு கற்களுக்கும் உள்ள சக்திகளையெல்லாம் ஒன்றுதிரட்டி, Infinity Gauntlet என்ற ஆயுதத்தை உருவாக்கத் தானோஸ் திட்டம் இட்டுக்கொண்டிருக்கிறான் (Right at this minute). இந்த ஆயுதம் வஜ்ராயுதம் போன்றது. இது மட்டும் உருவாகிவிட்டால்…Yeah.. You guessed it right. ஏற்கெனவே மிகவும் சக்திவாய்ந்தவனாக இருக்கும் தானோஸ், அண்டவெளியின் நாயகன் ஆகிவிடுவான். இப்படிப்பட்ட மிகப் பிரம்மாண்டமான சக்தியை வெறும் ஐந்து ஆறு அவெஞ்சர்கள் மட்டுமே தடுக்க இயலாது. இதனால்தான் அவெஞ்சர்கள் ஒரு பெரிய படையையே உருவாக்குகிறார்கள் (அவர்களுக்கே தெரியாமல்). அப்படி உருவாகும் பெரும்படைதான் தானோஸை இன்ஃபினிடி வார் படங்களில் எதிர்கொள்ளப்போகிறது. இதற்குக் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் திரைப்படம் ஒரு முன்னோட்டம். ஏற்கெனவே பாதிப் படை இப்படத்தில் உருவாகிவிட்டது. மீதிப் படை அங்கத்தினர்களும் இன்னும் இரண்டு வருடங்களில் வரும் படங்களில் வந்துவிடுவார்கள்.
இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இந்தப் படத்தைப் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யம் அதிகரிக்கும். இந்தப் படத்துக்கும் Batman Vs Superman: The Dawn of Justice படத்தின் கதைக்கும் ஒற்றுமை உண்டு. இரண்டிலுமே, சூப்பர்ஹீரோக்களின் அபரிமிதமான சக்திய்யால் எழும் அழிவுகளை அரசு எப்படி எதிர்கொள்கிறது என்பதே மையமான கதை. அதை ஓரளவு நன்றாகவும், பெரும்பகுதி சொதப்பியும் பேட்மேன் வெர்ஸஸ் சூப்பர்மேன் படத்தில் ஸாக் ஸ்னைடர் சொதப்பி வைத்திருந்தார். அதே கதையை இந்தப் படத்தில் முடிந்தவரை ஜாலியாக எடுத்து ஒரு நல்ல entertainerஐக் கொடுத்திருக்கிறார்கள் ரூஸோ சகோதரர்கள். இவர்கள்தான் கேப்டன் அமெரிக்காவின் இரண்டாம் பாகமான Winter Soldier படத்தையும் எடுத்தவர்கள். அதைப்போலவே இதையும் நன்றாக எடுத்திருக்கின்றனர்.
அரசின் தலையீட்டை கேப்டன் அமெரிக்கா விரும்புவதில்லை. ஆனால் டோனி ஸ்டார்க்கோ அதை ஆதரிக்கிறார். இதனால் இருவருக்கும் பிரச்னை எழுகிறது. கேப்டன் அமெரிக்காவின் உற்ற நண்பனாக நாம் அறிந்த Bucky (Winter Soldier), இருவருக்கும் இடையே பிரச்னை உருவாவதில் பெரும்பங்கு வகிக்கிறான். கூடுதலாக, ப்ளாக் பாந்த்தர் என்ற சூப்பர்ஹீரோவாக அவதாரம் எடுக்கும் வகாண்டா நாட்டின் தலைவனும் பக்கியை தேடுகிறான் (ப்ளாக் பாந்த்தரின் ஹிஸ்டரியை அறிய இந்தப் பதிவைப் படிக்கவும்). அதற்கும் ஒரு வலுவான காரணம் உண்டு. இத்தனை சிக்கல்களில் மாட்டியிருக்கும் இவனைக் காப்பாற்ற கேப்டன் அமெரிக்கா நினைக்கிறார். இவனை அழிக்க ப்ளாக் பாந்த்தர் நினைக்கிறார். இதனால் கேப்டன் அமெரிக்காவை ஆதரிக்கும் அவெஞ்சர்கள் ஒருபுறம்; கேப்டன் அமெரிக்காவையும் பக்கியையும் பிடிக்க நினைக்கும் அவெஞ்சர்கள் ஒருபுறம். இவர்களுக்குத் தலைவர் டோனி ஸ்டார்க். இரண்டு கும்பல்களும் தங்களுக்குத் தேவையான வீரர்களை ரெக்ரூட் செய்கிறார்கள். இருவரும் மோதுகிறார்கள். ஸ்டீவ் ரோஜர்ஸுக்கும் டோனி ஸ்டார்க்குக்கும் கொள்கை ரீதியில் உருவான இந்த மோதல் இறுதிவரை தொடர்கிறதா இல்லையா என்பதே இப்படம்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அவெஞ்சர்கள் அனைவருமே இடம்பெறும் படம், 2018ன் இன்ஃபினிடி வார் தான். எனவே, அக்கதை துவங்குவதற்கான அட்டகாசமான களம் இப்படத்தின் இறுதியில் உருவாகிவிடுகிறது.
இரண்டு சூப்பர்ஹீரோக்களுக்கும் இடையே மோதல் என்ற இதே களம்தான் பேட்மேன் வெர்ஸஸ் சூப்பர்மேன் படத்திலும். ஆனால் அதற்கான காரணம் அதில் படுமொக்கையாக எழுதப்பட்டிருந்தது. கூடவே இரண்டு மாபெரும் சூப்பர்ஹீரோக்கள் மோதப்போகும் படத்தில் அந்த மோதலேஎ வராமல், வஜனங்களை வைத்தே படம் முழுக்க ஆடியன்ஸை ரம்பம் போட்டு அறுத்தனர். இங்குதான் DCயை Marvel ஜாலியாக ஓவர்டேக் செய்து, காமிக்ஸ் கதாபாத்திரங்களில் யார் கில்லி என்று அட்டகாசமாக நிரூபித்திருக்கிறது. சிவில் வாரில் வரும் நகைச்சுவையான வசனங்கள், வலுவான தார்மீகக் காரணங்கள், அனைத்துத் தரப்பினரையும் கவரும் சண்டைக்காட்சிகள் என்று எல்லாவற்றையும் கச்சிதமாக உபயோகித்தே இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, ட்ரெய்லரில் நாம் அனைவருமே பார்த்து ரசித்த பீட்டர் பார்க்கர் (ஸ்பைடர்மேன்). இதுவரை ஐந்து படங்களில் காட்டப்பட்ட ஸ்பைடர்மேன் கதாபாத்திரங்களிலேயே (3 – டோபி மெகையர்; 2 – ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்) சிவில் வாரில் வரும் ஸ்பைடர்மேனைத்தான் எனக்குப் பிடித்தது. படம் பார்க்கையில் அதற்கான காரணங்கள் உங்களுக்குப் புரியும். இதுவரை SONYயிடம் இருந்த ஸ்பைடர்மேன் உரிமை, இப்படத்தின்மூலம் மார்வெலுக்கும் வந்திருக்கிறது. கடந்த இரண்டு ஸ்பைடர்மேன் படங்கள் நினைத்த அளவு போகாததால், மூன்றாவது ஸ்பைடர்மேன் படத்தைக் கேன்ஸல் செய்துவிட்டு SONY எடுத்த முடிவு இது. இதனால் இனி அவெஞ்சர்ஸ் படத்தில் ஸ்பைடர்மேன் தாராலமாக இடம்பெறும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அடுத்து மார்வெலின் தயாரிப்பில் வரப்போகும் Spider-man: Homecoming படத்திலும் டோனி ஸ்டார்க்குடன் சேர்ந்தே ஸ்பைடர்மேன் இடம்பெறப்போகிறார்.
இந்தப் படத்தில் முக்கியமான இரண்டு அவெஞ்சர்கள் இல்லை. தோரும் ஹல்க்கும். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட யாருக்கும் தெரிவதில்லை. காரணம் என்ன தெரியுமா? இருவரும் இருப்பது தோரின் பூமியான அஸ்கார்டில். இருவரும் அங்கே ஏன் சென்றார்கள் என்பது Thor: Ragnarok படத்தில் தெரியும். இதில் தோரும் ஹல்க்கும் buddyகளாக வருகிறார்கள் என்று ஏற்கெனவே மார்வெல் அறிவித்திருக்கிறது என்பதால் அப்படம் எப்படி இருக்கப்போகிறது என்பது இப்போதே தெரிகிறது. தோர் படங்களில் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகமே இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. அதேபோல, கேப்டன் அமெரிக்கா சீரீஸிலும் இதுவரை வந்த படங்களில் இதுவே சிறந்தது.
இந்தப் படத்தில் இரண்டு post credit சீன்கள் உள்ளன. Mid credit Scene End credit Sceneகளாக அவை வைக்கப்பட்டுள்ளன. இரண்டும் நல்ல சீன்கள்தான். குறிப்பாக இதில் வரும் மிட் க்ரெடிட் சீன் தான் அவெஞ்சர்ஸின் அடுத்த பாகமான இன்ஃபினிடி வார் படத்துக்கான துவக்கமாக இருக்கிறது. இரண்டையும் தவறவிடவேண்டாம். இரண்டாவது போஸ்ட் க்ரெடிட் சீனுக்கும் ஸ்பைடர்மேன் காமிக்ஸ்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. கூடவே ஸ்பைடர்மேனின் அடுத்த படமான ஹோம்கமிங்குகும் இதற்குமே ஒரு தொடர்பு உண்டு.
மொத்தத்தில் இது ஒரு ஜாலியான படம். பார்த்து மகிழலாம்.
Please Marathi film sairaat patthi virivaaga vimarasanam eluthavum
“24” review illaya?
இந்த X Men ஸீரீஸின் அடுத்த பாகத்தின் பெயர் – X Men: Apocalypse. 2016ல் வருகிறது. போஸ்ட் க்ரெடிட் ஸீனில் நாம் பார்த்த பண்டைய கால நபர்தான் Apocalypse. உலகின் முதல் ம்யூட்டண்ட். ஐந்தாயிரம் வயது உடையவன். இந்த அபோகலிப்ஸ், எக்ஸ் மென் காமிக்ஸ்களில் மிகவும் பிரபலம். இவன் தான் அடுத்த பாகத்தின் வில்லன். பண்டைய காலத்திலிருந்து இப்போது வரை சாகாமல் எங்கோ மறைந்திருப்பவன். இதுவரை மிகப் பலமான + பயங்கரமான வில்லனாக இருந்துவந்த மேக்னீடோவைவிடப் பாயங்கர சக்திவாய்ந்தவன். இவனை எப்படி X Men எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே 2016ல் நாம் காணப்போகும் கதை.
பொறுத்துப் பார்ப்போம். படம் 2016ல் வந்தவுடன் இங்கே விமர்சனம் நிச்சயம் 🙂