Captain America: The Winter Soldier: 3D (2014) – English

by Karundhel Rajesh April 5, 2014   English films

அவெஞ்சர் கதாபாத்திரங்களைப் பற்றி முழுதாகத் தெரிந்துகொள்ள இந்த லிங்க்கைப் படிக்கலாம். இதிலேயே மற்ற அவெஞ்சர் படங்களின் விமர்சனங்களும் உள்ளன.

All the Avenger films at Karundhel.com

[divider]

அவெஞ்சர் கதாபாத்திரங்களிலேயே அலுப்பான பாத்திரம் கேப்டன் அமெரிக்காதான் என்று ஒரு பொதுவான கருத்து உண்டு. பிற பாத்திரங்கள் எல்லாம் புதிய கருவிகள் வைத்துக்கொண்டு அதிரடியைக் கிளப்புகையில், கேப்டன் அமெரிக்கா மட்டும் ஒரே ஒரு கேடயத்தை வைத்துக்கொண்டு ராபணா என்று எல்லாரையும் அடித்துக்கொண்டிருப்பார். கூடவே, யாரிடமும் இல்லாத தர்ம நியாயம் வேறு இவரிடம் எக்கச்சக்கம். இதனாலேயே இந்த வரிசைப் படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதாகப் பேசப்படவில்லை. சில வருடங்கள் முன்னர் வந்த ’Captain America: The First Avenger’ படம்தான் சமீபகாலத்தில் வந்த அவெஞ்சர் படங்களிலேயே மிகவும் கம்மி வசூல். இருந்தாலும் அடுத்த பாகத்தை எடுத்து வெளியிட்டுவிட்டார்கள் மார்வெல் நிறுவனத்தார். இது இந்த அவெஞ்சர் வரிசையில் ஒன்பதாவது படம் (மூன்று Iron Man படங்கள், இரண்டு Thor படங்கள், இரண்டு கேப்டன் அமெரிக்கா படங்கள், ஒரு ஹல்க் & ஒரு Avengers படம்). The Avengers படத்திலேயே கூட இவரால் பெரிதாக ஒன்றுமே சாதிக்க முடிந்திருக்காது.

ஆனால், உலகெங்கும் இன்று வெளியாகியிருக்கும் Captain America: The Winter Soldier படம் அந்தப் பொதுவான கருத்தை அடித்து நொறுக்கியிருக்கிறது. இந்தப் படத்திலிருந்து கேப்டன் அமெரிக்காவும் ஒரு முழுநீள சூப்பர்ஹீரோதான் என்பதைக் கட்டாயம் சொல்லமுடியும்.

ஸ்டீவ் ரோஜர்ஸ், அவெஞ்சர்ஸ் கதை முடிந்ததும் S.H.I.E.L.D நிறுவனத்தின் சில அஸைன்மெண்ட்களைச் செய்துகொண்டிருக்கிறார். இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தைச் சேர்ந்த அவரால் 21ம் நூற்றாண்டின் வேகமான அசுர வளர்ச்சியுடன் ஒத்துப்போக முடிவதில்லை (கையில் ஒரு குறிப்பேட்டுடன், கேள்விப்படும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் அதில் குறித்துக்கொண்டு அவைகளைத் தேடிப்படித்து வருகிறார். அந்தக் குறிப்பேட்டில் Rocky, Nirvana, ஷான் கான்னரி, Sherlock, தாய் உணவு, Moon Landing, Star Wars, Star Trek, டிஸ்கோ, Ji Sung Park, Oldboy போன்ற பல விஷயங்களைக் குறித்து வைத்திருக்கிறார். இந்த லிஸ்ட்டை நாட்டுக்கு நாடு மாற்றியிருக்கிறது மார்வெல் என்பது ஒரு ஜாலியான விஷயம்). இண்டர்நெட் இருப்பதால் இவைகளைப் பற்றிக் கொஞ்சமாவது படிக்க முடிகிறது என்று அங்கலாய்த்துக்கொள்கிறார். இப்படி வாழ்ந்துவரும் ஸ்டீவ் ரோஜர்ஸ், நிக் ஃப்யூரியின் அஸைன்மெண்ட்டின்படி, S.H.I.E.L.Dடைச் சேர்ந்த ஒரு கப்பலை அல்ஜீரியத் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து காப்பாற்றச் செல்கிறார். அங்கே நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிமுகமான நடாஷா ரொமனாஃப் (Black Widow – Scarlett Johansson) அங்குள்ள கணினியில் இருந்து தகவல்களைப் பிரதியெடுப்பதைப் பார்க்கிறார். இதனால் இவரையே அறியாமல் அவளை அங்கு அனுப்பிய நிக் ஃப்யூரிக்கும் ஸ்டீவ் ரோஜர்ஸுக்கும் கருத்து வேறுபாடு எழுகிறது. அப்போது S.H.I.E.L.D நிறுவனத்தின் ஒரு மிகப்பெரிய திட்டத்தை நிக் ஃப்யூரி ஸ்டீவ் ரோஜர்ஸிடம் பகிர்கிறார். அது – எதிரிகளின் மரபணுக்களை அலசி, அவர்கள் பிந்நாட்களில் சமூக விரோத சக்திகளாக மாறுமுன்னரே துவக்கத்திலேயே அவர்களை அழிக்கும் திட்டம். இதற்கு ’ப்ராஜக்ட் இன்ஸைட்’ (Project Insight) என்று பெயர். இதைப்பற்றி நிக் ஃப்யூரியை எச்சரிக்கிறார் ரோஜர்ஸ். மக்களை 24 நான்கு மணி நேரங்களும் கண்காணித்து அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் விஷயம், 1940க்களைச் சேர்ந்த ஸ்டீவ் ரோஜர்ஸுக்குத் தர்மமாகவே தெரிவதில்லை.

இதன்பின்னர்தான் கதை துவங்குகிறது. யாரையும் நம்பாமல் இருப்பதற்கு நிக் ஃப்யூரி சொன்ன காரணங்கள் ஒவ்வொன்றாக ஸ்டீவ் ரோஜர்ஸுக்குப் புரிய ஆரம்பிக்கிறது. கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் நாவலைப்போலப் படம் வேறு அவதாரம் எடுக்கிறது. வழக்கமான சூப்பர்ஹீரோ படமாக இதன்பின் இந்தப்படம் இல்லை. மாறாக, கொஞ்சம் அரசியல் கலந்து, துரோகம், மர்மம், பழிவாங்குதல் போன்ற உணர்ச்சிகளின் மீது பயணிக்கிறது. அந்த வகையில் இதைப்போன்ற ஒரு கதையை வேறு எந்த அவெஞ்சர் படத்திலும் நான் பார்த்ததில்லை. ஏன்? வேறு சூப்பர்ஹீரோ படங்களில் இதற்கு முன்னர் இப்படி ஒரு கதையை (மிக லேசாக) The Dark Knight படத்தில்தான் பார்த்திருக்கிறேன். வெறுமனே சூப்பர்ஹீரோ எல்லாரையும் அடித்துப் பந்தாடிக்கொண்டே இருப்பதற்குப் பதில், கொஞ்சம் நவீன ஜேம்ஸ்பாண்ட்தனத்தோடு சாகஸம் புரிகிறார் ஸ்டீவ் ரோஜர்ஸ் (ஆனால் இப்படி எழுதியிருப்பதால் படுபயங்கரமாக எதையும் எதிர்பார்க்கவேண்டாம். தமிழ் ரசிகர்களுக்கு இந்தக் கதையெல்லாம் ஜுஜுபி. படத்தின் திருப்பங்களை எளிதில் தமிழ் ரசிகர்கள் யூகித்துவிடலாம்).

கதையில் பல்வேறு திருப்பங்கள் இருப்பதால் இதற்கு மேல் கதையைப் பற்றிச் சொல்ல இயலாது. படத்தைத்தான் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும். அதனால், படத்தின் சில சுவாரஸ்யமான அம்சங்களைப் பார்த்துவிடலாம்.

அவெஞ்சர் சீரீஸிலேயே முதன்முறையாக நிக் ஃப்யூரி தன்னைப்பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் விபரமாகப் பேசும் காட்சி இந்தப் படத்தில் வருகிறது. தனது தாத்தா எப்படி யாரையும் நம்பாமல், அதேசமயம் சமுதாயத்தோடு சேர்ந்து வாழ்ந்தாரோ அப்படித்தான் தானும் என்று நிக் ஃப்யூரி சொல்கிறார். கூடவே, தனது கண்ணை இழந்த கதையையும் ஒரே வரியில் சொல்லிச்செல்கிறார் (’ஒரு காலத்தில் ஒருவனை நம்பினேன். அதனால் என் கண்ணை இழந்தேன்’ – எனக்குத் தெரிந்து அவரது கண் பறிபோனதற்குப் பல கதைகள் இருக்கின்றன. அதில் ஒன்று – X men கதையில் வரும் வுல்வரீனுடன் ஒருநாள் சண்டையிடும்போது, ஒரு கண் நிக் ஃப்யூரிக்குப் பறிபோகிறது. அதைத்தான் சொல்கிறார் என்று தோன்றுகிறது).

கேப்டன் அமெரிக்கா உருவான இடத்துக்கு ஒரு காட்சியில் கதை நம்மைக் கொண்டுசெல்கிறது. அங்கு இருப்பது – கேப்டன் அமெரிக்காவின் பழைய எதிரிகளில் ஒருவர். அவர் சொல்லித்தான் படத்தின் பெரிய முடிச்சு ஒன்று அவிழ்கிறது. கூடவே, இதில் சென்ற படத்திலிருந்து இன்னொரு கதாபாத்திரமும் வருகிறது.

இந்தப் படத்தில் ஒரு புதிய கதாபாத்திரம் அறிமுகமாகிறது. ‘டபக்கா டபக்கா’ என்று பறந்துவரும் அந்தக் கதாபாத்திரம் – The Falcon. ஸ்டீவ் ரோஜர்ஸின் நண்பனாக, இனிவரும் அவெஞ்சர்ஸ் இரண்டாம் பாகத்தில் சாகசம் புரிய வந்திருக்கும் மார்வெலின் இன்னொரு ஹீரோ.

பழைய கால அரசியல் திருப்பங்கள் உடைய படங்களின் ஈரோ ராபர்ட் ரெட்ஃபோர்ட் இதில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நமது தளத்திலேயே அப்படிப்பட்ட ஒரு படமான ‘All the President’s Men‘ படத்தைப் பார்த்திருக்கிறோம் (நான் பார்த்திருக்கும் (ஆனால் எழுதாத) இன்னொரு சுவாரஸ்யமான படம் – Three Days of the Condor. இதைப்பற்றி ஸிட் ஃபீல்ட் தனது புத்தகத்தில் மிகவும் நன்றாகப் பாராட்டி எழுதியிருக்கிறார்). இப்படிப்பட்ட அவரது படங்களின் சாயல் இந்தப் படத்திலும் அவசியம் இருக்கிறது. இந்தப் படங்களைப் பார்த்தவர்களுக்கு நான் சொல்லவரும் விஷயங்கள் புரியலாம்.

எனக்கு இந்தப் படத்தில் எழுந்த ஒரே கேள்வி – ’இத்தனை முக்கியமான சம்பவங்கள் நடக்கையில் பிற அவெஞ்சர்கள் எங்கே சென்றார்கள்?’ என்பதே. படத்தில் அதற்குப் பதிலே இல்லை. படம் பார்த்து முடிக்கையில் இந்தக் கேள்வி உங்களுக்கும் தோன்றலாம்.

பி.கு

1. இந்தப் படத்திலும் ஸ்டான் லீயின் ஓரிரு நொடி cameo உண்டு. எங்கே என்பது தெரிகிறதா? (எளிதில் தெரிந்துவிடும் காட்சி இது).

2. படத்தில் இரண்டு Post Credit சீன்கள் இருக்கின்றன. படத்தின் பிரதான டைட்டில்கள் முடிந்தவுடன் ஒரு காட்சி மற்றும் கட்டக்கடைசியில் இன்னொரு காட்சி. கடைசிக் காட்சி இந்தப் படத்தோடு நேரடி சம்மந்தப்பட்டது. அவசியம் இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்தில் வரும். முதலில் வரும் காட்சியில் ஒரு பெரிய கதையே இருக்கிறது. அந்தக் காட்சியில் வருவது – Baron Strucker என்ற வில்லன். இந்தப் படத்தில் வரும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவன் (அது என்ன நிறுவனம் என்று படம் பார்த்துத் தெரிந்துகொள்க). அவன்வசம் ஒரு மிகப்பெரிய ஆயுதம் சிக்கியிருக்கிறது (அது என்ன ஆயுதம் என்பதைப் படம் பார்க்கும்போது நீங்களே தெரிந்துகொள்வீர்கள்). அந்த ஆயுதத்தின் சக்தியால் அவன் சில அதிசயங்களை நிகழ்த்தத் துவங்கியிருக்கிறான். அப்போது அவன் பேசும் வசனம் முக்கியமானது. ‘It’s not a world of spies anymore. Not even a world of heroes. This is the Age of Miracles, doctor. There is nothing more horrifying, than a miracle’. இந்தக் காட்சியில் அவன் யாரைப் பார்த்து அப்படிச் சொல்கிறான் என்பதே முக்கியம். அவர்கள் இருவர். இரட்டையர்கள். ஒரு ஆண் – ஒரு பெண். Scarlett Witch மற்றும் Quicksilver. இவர்கள் இருவரின் தந்தை, உலகப் பிரசித்தி பெற்ற வில்லன்களில் ஒருவர். மிகவும் கிழப்பருவம் எய்தியும் இன்னும் படுபயங்கர வில்லத்தனம் செய்துகொண்டிருக்கும் அந்த வில்லன் – M A G N E T O! X men படங்களில் எல்லாம் நாம் பார்த்துவந்த அதே மேக்னீடோதான். இதுதான் அந்தக் காட்சியின் பயங்கரமான விஷயம் (ஆனால் இருவரும் அவெஞ்சர்களுடன் சேருவதுதான் காமிக்ஸ் கதை).

அதேபோல், அந்த வில்லன் Baron Strucker மற்றும் இந்த இரட்டையர்கள் இருவருமே அவெஞ்சர்ஸ் 2 வில் வருகிறார்கள். எப்படி என்பது போகப்போகத் தெரியலாம்.

3. இரண்டாவது போஸ்ட் க்ரெடிட் ஸீன் – கட்டக்கடைசியில் வருவது – அதற்கும் இந்தப் படத்துக்கும் சம்மந்தம் உண்டு என்று பார்த்தோம். அதேபோல், அதற்கும் காமிக்ஸுக்குமே சம்மந்தம் உண்டு. அந்தக் காட்சியில் நாம் பார்க்கும் நபர், கேப்டன் அமெரிக்காவுக்கு ஈடான சக்தி படைத்த ஆள். இவன் காமிக்ஸ் கதையின்படி கேப்டன் அமெரிக்காவாகவே மாறப்போகும் காலம் வரப்போகிறது. கேப்டன் அமெரிக்காவின் மூன்றாவது பாகத்தில் இந்தக் கதை சொல்லப்படலாம். எப்படி பேட்மேனின் குகைக்குள் ராபின் சென்றதை The Dark Knight Rises படத்தில் பார்த்தோமோ, அப்படி ஸ்டீவ் ரோஜர்ஸுக்குப் பிறகு இந்தக் கதாபாத்திரம் கேப்டன் அமெரிக்காவாக மாறலாம். அல்லது அட்லீஸ்ட் கொஞ்ச காலம் ஸ்டீவ் ரோஜர்ஸ் தலைமறைவாக இருக்கையில் இந்தப் பாத்திரம் தற்காலிக கேப்டன் அமெரிக்காவாக ஆகலாம். பொறுத்துப் பார்ப்போம்.

  Comments

12 Comments

  1. chinnamalai

    ஆனா எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் இவர் தான்!!!

    Reply
    • Rajesh Da Scorp

      ஆமா… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கேரக்டர் புடிக்கும். நம்ம நேச்சரைப் பொறுத்து

      Reply
  2. Nice Review Scorpion!!!!

    Just watched the movie & it seems to be best of Marvel movies only next to ‘Avengers’. Complete Action Entertainer with amazing Soundtrack & Fight Sequence. Now it has slightly better chance to compete with Batman-Superman movie. Who would’ve thought a Captain America Movie bettering other Marvel Movies. It would be awesome if X-men comes to marvel movie universe, too bad ‘Fox’ s.h.i.e.l.d.s it.

    Reply
    • Rajesh Da Scorp

      //too bad ‘Fox’ s.h.i.e.l.d.s it// – That was the highlight of the comment 🙂

      Reply
  3. Suganya

    I felt kind of boring at some point of time.. Because I could easily predict what would be the next scene and also the climax.. Other than that I enjoyed the movie..

    Reply
    • Rajesh Da Scorp

      It’s actually cool that you were able to guess things. As I have said here, we – the tamil fans – have seen these kinda twists at least 100 times in our films, isn’t it 🙂 . Good that you enjoyed some scenes as well. My suggestion would be to see the other Avenger films as well (I do not know if you had seen them. If yes, ignore the suggestion).. Cheers

      Reply
  4. Accust Here

    A different Marvel film but a typical tamil film, especially in the climax when he put that chip at last second. Can we claim copyright or we copied that from them too.

    Reply
    • Rajesh Da Scorp

      Haa haa haa :-).. Yes. Typical film in some sequences.

      Reply
  5. Saravanan

    HI rajesh,
    Watched the movie at Satyam , waited for your post … but anyway, i enjoyed it … The same question lurked in my mind where are the avengers , Can understand that thor is in other world , bruce banner is in perpetual hiding , But Stark is in town isn’t when black widow is there what happened to the Arrow man ( forgot his name) sad that Cobie is not getting much role as agent hill …. is Agent Paulson is really killed ? Dr. Selvig is too busy ? when i saw the Smithsonian library , i thought whether they will mix Night at the museum ! !

    Reply
    • Rajesh Da Scorp

      Night at the museum??? ROFL. that was a good comment Saravanan 🙂 But anyway if any one of the avengers would have turned up, it would be like stealing the fame from Mr. America, and may be that’s why there were none :-). Cobie – hmmm.. my fav. I would have rooted for her if she had been in some stunts.. let’s see if Avengers 2 would make her to shake a leg 😛

      Reply
  6. ” எனக்கு இந்தப் படத்தில் எழுந்த ஒரே கேள்வி – ’இத்தனை முக்கியமான சம்பவங்கள் நடக்கையில் பிற அவெஞ்சர்கள் எங்கே சென்றார்கள்?’ என்பதே. படத்தில் அதற்குப் பதிலே இல்லை. படம் பார்த்து முடிக்கையில் இந்தக் கேள்வி உங்களுக்கும் தோன்றலாம்.”
    — எனக்கும் இதே கேள்வி தோன்றியது
    Thor 2 ல S.H.I.E.L.D எங்க போச்சு? Iron Man3 ல S.H.I.E.L.D avengers யாரும் வரல.. இதுல மட்டும் எப்படி வருவாங்க…
    Captain America னு title வச்சுட்டு இன்னொரு ஹிரோ ஹெல்ப் பண்ண வந்தா படத்துக்கு Avengers னு தான் பேரு வைக்கணும்,,,

    Reply
  7. Annamalai

    What happened to Nick Fury.. he died or not?

    Reply

Join the conversation