Carandiru (2003) – Portuguese

by Karundhel Rajesh February 18, 2010   world cinema

சிறைகளைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? பொதுவாகவே, சிறை என்றால் சட்டென்று ஒரு ஒதுக்கம் நமது மனதில் வருவது சகஜம். நாம் செல்லக்கூடாது என்று நினைக்கும் இடங்களில் முதலிடம் அனேகமாக சிறைக்குத் தான். குற்றவாளிகள் தமது குற்றத்துக்காக, தண்டனைகளை அனுபவிக்கும் ஒரு இடம் என்பது தான் சிறைகளைப் பற்றிய நமது புரிதலாக இருக்கிறது. ஆனால், இந்தச் சிறைகளுக்குள்ளும் ஒரு தனி உலகம் உண்டு. கோபக்காரர்கள், சாதுக்கள், கொடூர மனம் படைத்தவர்கள், படித்தவர்கள், காதலர்கள், வியாபாரிகள், தாதாக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும், தங்களுக்குள் ஒப்பந்தங்கள் செய்துகொண்டு, காலம் கழிக்கும் ஒரு உலகமே அது. இந்த உலகத்துக்குள் ஒரு பயணம் மேற்கொண்டால் அது எப்படி இருக்கும்? ஆங்கிலத்தில் சிறைகளைப் பற்றிய பல படங்கள் வந்துள்ளன. ஆனால், அவை எல்லாவற்றிலும் நாம் கண்ட சிறை சற்று மிகையான ஒரு உலகம். அந்தச் சிறைக்கும் நிஜமான சிறைக்கும் பல வேறுபாடுகள் உண்டு. உண்மையான சிறைச்சாலையை நமது கண்முன்னர் நிறுத்துவது, தரமான உலகப்படங்களால் தான் முடியும். அப்படிப்பட்ட ஒரு படமே இந்தக் ‘கரண்டிரு’.

செழியனால் விகடன் உலக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு படம். ட்ராஸியோ வரெல்லா என்ற ஒரு மருத்துவரால் எழுதப்பட்ட ‘கரண்டிரு ஸ்டேஷன்’ என்ற நாவலே பின்னர் படமாக எடுக்கப்பட்டது. சாவ் பாலோ, ப்ரஸிலில் உள்ள கரண்டிரு சிறைச்சாலைக்கு வரெல்லா சென்ற போது அவருக்கு நிகழ்ந்த அனுபவங்களே இப்படம்.

படம், ஒரு சண்டையில் துவங்குகிறது. டேக்கர் என்பவனும் லூலா என்பவனும் ஒருவரை ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொள்கின்றனர். அப்போதுதான் மருத்துவர் வரெல்லா அங்கு நுழைகிறார். சண்டையைத் தடுக்கும் ‘ப்ளாக் நிக்கர்’ என்பவன், வெளியாட்கள் வரும்போது சண்டையிடுவது, அவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்தும் என்று இருவரையும் கடிந்து கொள்கிறான். டேக்கர், லூலா அவனைப் பின்னாலிருந்து குத்த முயன்றதாகச் சொல்கிறான். லூலாவோ, டேக்கரே தனது தந்தையைக் கொன்றவன் என்றும், அதற்குப் பழிவாங்கவே டேக்கரைக் குத்த முயன்றதாகவும் சொல்கிறான். இதைக் கேட்டுச் சிரிக்கும் டேக்கர், லூலாவின் தந்தையைக் கொல்லச் சொன்னதே அவனது தாயார்தான் என்றும், அவன் தந்தையின் சித்ரவதை தாங்காமல் தான் லூலாவின் தாய் இந்த முடிவுக்கு வந்தாள் என்றும் சொல்கிறான். லூலா, உண்மை புரிந்து, சாந்தமடைகிறான்.

மருத்துவர் வரெல்லா, சிறையினுள் ஒரு சிறிய மருத்துவ முகாம் அமைக்கிறார். தனது பரிசோதனைகளை அவர் தொடங்கும்போதுதான், நான்காயிரம் ஆட்களைக் கொள்ளக்கூடிய அந்தச் சிறையினுள், மொத்தம் ஏழாயிரத்து ஐநூறு பேர் அடைக்கப்பட்டுள்ளதைத் தெரிந்து கொள்கிறார். அதிலும், சிறையினுள் முக்கால்வாசிப் பேருக்கு எய்ட்ஸ் இருப்பதையும் அறிகிறார்.

ஒவ்வொரு ஆசாமிக்கும் சிகிச்சையளிக்கும் வரெல்லா, அவர்களுடன் பேச்சுக் கொடுக்கிறார். அவர்களின் கதைகள் வாயிலாக, நம்முன் ஒரு புதிய உலகம் திறக்கிறது.

ப்ளாக் டேக்கர், தனது நண்பனான ஃபேட்ஸோவுடன் சேர்ந்து எப்படி ஒரு நகைக்கடையைக் கொள்ளையடித்தான் என்பதையும், எப்படி தங்களுடன் இருந்த இன்னொரு நபரைச் சுட்டுக் கொன்றுவிட்டு இருவரும் நகைகளைப் பிரித்துக்கொண்டனர் என்பதையும், இறந்தவனின் சகோதரனிடம் இந்த முட்டாள் ஃபேட்ஸோ எப்படி அனைத்தையும் உளறினான் என்பதையும், அதன்பின் எப்படி போலீஸ் இருவரையும் கைது செய்தது என்பதையும், ஃபேட்ஸோவும் இன்னும் சிலரும் ஒரு சுரங்கத்தின் வாயிலாக எப்படித் தப்பிக்க முயன்றனர் என்பதையும், பாதி வழியில் குண்டு ஃபேட்ஸோ சுரங்கத்தில் சிக்கிக்கொண்டதையும், பின்னால் இருந்த அவனது நண்பர்கள் அவனைப் ‘பின்னால்’ இருந்து எப்படி குத்திக் கொன்றுவிட்டுத் தப்பித்தனர் என்பதையும் விவரிக்கிறான்.

ஒவ்வொரு நாளும் வரெல்லா சந்திக்கும் பல கைதிகளின் கதைகள் நம் கண்முன்னர் விரிகின்றன. பல சுவாரஸ்யமான நபர்களை நாம் சந்திக்கிறோம். பதினெட்டுக் குழந்தைகள் பெற்ற சீக்கோ, ஹைனெஸ் என்ற கஞ்சா விற்கும் கறுப்பன் – இவன், வரெல்லாவிடம், எப்படி ஒரே நேரத்தில் ஒரு வெள்ளைக்காரியையும் ஒரு கறுப்பினப் பெண்ணையும் ‘கரெக்ட்’ செய்தான் என்பதைச் சந்தோஷமாக விவரிக்கிறான். இருவருடனும், ஒருவருக்கு ஒருவர் தெரியாது ரகசியமாகக் குடும்பம் நடத்தியபோது, இதைத் தெரிந்துகொண்ட அந்தக் கறுப்பினப் பெண், இவனும் வெள்ளைக்காரியும் இருக்கும் வீட்டைக் கொளுத்திவிடுகிறாள். பழியைத் தான் ஏற்றுக்கொண்டு, ஹைனஸ் சிறைக்கு வந்து விடுகிறான்.

இதன்பின் நாம் ஸீக்கோவையும் ட்யூஸ்டேட்டையும் சந்திக்கிறோம். இருவரும் சிறுவயது நண்பர்கள். தனது தங்கையைத் தாக்கிய இருவரைக் கொன்றுவிட்டு, ட்யூஸ்டேட் சிறைக்கு வந்துவிடுகிறான். இரண்டு பேங்க் கொள்ளையர்களையும் சந்திக்கிறோம்.

சிறையில் இருக்கும் திருநங்கையான ‘லேடி டி’ க்கும், ‘நோ வே’ என்பவனுக்கும் காதல் மலர்ந்து, அவர்கள் திருமணம் செய்துகொள்வதையும் நாம் பார்க்கிறோம். ப்ளாக் நிக்கர், வரெல்லாவிடம் அடிக்கடி வந்து, தனக்கு எப்பொழுதும் தூக்கமே வருவதில்லை என்றும், சிறையில் இருப்பவர்கள் எப்பொழுது பார்த்தாலும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதால், அவர்களுக்குத் தலைவன் என்ற முறையில், சமாதானம் செய்துவைப்பதிலேயே தனது பாதி உயிர் போய்விடுகிறது என்றும் அலுத்துக் கொள்கிறான். அவனுக்கு மருந்து கொடுக்கும் வரெல்லா, அவனுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று சொல்லி, ஓய்வெடுக்கச் சொல்கிறார். படிப்படியாக அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாகிறார்.

சிறையில், ‘விஸிட்டர்களின் தினம்’ வருகிறது. சீக்கோவின் பதினெட்டுக் குழந்தைகள், ஹைனஸின் இரு மனைவிகள், ப்ளாக் நிக்கரின் குடும்பம், ட்யூஸ்டேட்டின் தங்கை.. இப்படிப் பலரையும் பார்க்கிறோம். அன்றைய தினம், அனைவரும் அவர்களது குடும்பத்தினரோடு சிறைக்குள் வளைய வருகின்றனர். ஹைனஸ், தனது வெள்ளை மனைவியோடு ஆவேசமாகக் ‘காதல் புரிவதையும்’ நாம் பார்க்கிறோம்.

ட்யூஸ்டேட்டின் நண்பனான ஸீக்கோ, படிப்படியாக போதை மருந்துகளை உட்கொள்ளத் துவங்கி, ட்யூஸ்டேட்டின் மீதே வெந்நீர் ஊற்றி அவனைக் கொன்று விடுகிறான். இதனால் ஆவேசமடையும் சக கைதிகள், ஓர் இரவில், வரிசையாக ஸீக்கோவைக் கத்தியால் குத்திக் கொல்கின்றனர். பழியை, ஒரு எய்ட்ஸ் நோயாளியான இஸக்கியேல் ஏற்றுக் கொள்கிறான்.

இப்படி இருக்கையில், அந்தச் சிறையில் வருடா வருடம் நடக்கும் கால்பந்துப் பந்தயம் வருகிறது. போட்டியை, பந்தை உதைத்துத் துவக்கி வைக்கும் வரெல்லா, கைதிகளிடமிருந்து விடைபெறுகிறார்.

மீண்டும் இரண்டு வாரங்கள் கழித்து, வெரெல்லா சிறையினுள் கால் வைக்கும் போது . . . . .

என்ன நடந்தது என்று படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இங்கிருந்து படத்தின் இறுதி அரைமணி நேரம் தொடங்குகிறது.

‘கரண்டிரு’, ஒரு போர்த்துக்கீஸியப் படம். இதன் இயக்குநர் ஹெக்டார் பேபென்கோ, இப்படம் முழுவதும், கரண்டிரு சிறையினுள்ளேயே படமாக்கினார். இச்சிறையை 2002டில் முழுதுமாக இடித்துத் தள்ளிவிட்டனர் (நமது சென்னை மத்திய சிறைச்சாலையைப் போன்று). இடிப்பதற்கு முன்னர் அங்கு நடந்த ஒரே சம்பவம், இப்படத்தை எடுத்தது. படத்தில் நடித்தவர்கள், நடிகர்கள் அல்ல. அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த சாதாரண மக்கள். ஒரு சில முன்னாள் கைதிகளும் நடித்தனர்.

மிக மிக யதார்த்தமான இப்படம், பல குணங்களோடு வாழும் மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சீக்கோ தினமும் சிறைக்கு வெளியே வந்து, பல வண்ணப் பலூன்களைப் பறக்க விடுவது வழக்கம். தனது குழந்தைகள் இல்லாத வெறுமையை அவர் இப்படிப் போக்கிக் கொள்ள முயல்கிறார். எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கும் ஹைனஸ், பரபரப்பாகச் சிறைக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் தலைவன் ப்ளாக் நிக்கர், எப்பொழுதும் போதையிலேயே இருக்கும் ஸீக்கோ, சிறைக்குள் வந்ததும் தனக்கு ஒரு இடத்தைப் பிடிக்கும் ட்யூஸ்டேட். . இப்படிப் பலர்.

2003யின் அதிக வசூலைப் பெற்ற ப்ரஸிலியன் படமாக, கரண்டிரு அமைந்தது. பல நாட்டுத் திரைப்பட விழாகளில் கலந்து கொண்ட இப்படம், பல்வேறு விருதுகளையும் குவித்தது.

கரண்டிரு பாருங்கள். நம்மைப் போலவே ரத்தமும் சதையுமாக சிறைக்குள் வாழும் பல மனிதர்களையும், அவர்கள் என்றோ ஒரு நொடியில் கோபத்தில் செய்த ஒரு குற்றத்திற்காக, வாழ்நாள் முழுவதும் வருந்துவதையும் பார்க்கும் நமக்கு, இதயத்தின் நரம்புகள் கட்டாயம் அசையும்.

கரண்டிரு படத்தின் டிரைலர் இங்கே.

  Comments

17 Comments

  1. சு. ப. தமிழினியன் – மொசார்ட் பத்திய பதிவு சீக்கிரமே போடுறேன் . . திட்டிப்புடாதீங்க . . 🙂

    Reply
  2. அட, நல்லாருக்கே!

    Reply
  3. நண்பரே,

    நல்லதொரு அறிமுகம், சிறப்பான எழுத்தாக்கம் . வெளியே கூட ஒரு சிறை வாழ்க்கை இருக்கிறது!!

    Reply
  4. திட்டல திட்டல ஆனா சீக்கிரம் போட்டுடுங்க.

    எனக்கு செழியனோட உலகசினிமா தொடர்தான் ஒரு வாசலைத் திறந்துவிட்டுச்சுன்னே சொல்லலாம், நான் இருந்த கிராமத்துக்கு இன்டெர்நெட் எல்லாம் எட்டிப்பாக்காத போது பல நல்ல படங்களை அறிமுகப்படுத்தினது இந்த தொடர்தான்.

    Reply
  5. அந்த தொடருக்கு பிறகு நீங்க அத சிறப்பா தொடர்ரீங்க, வாழ்த்துக்கள்…

    Reply
  6. @ பப்பு – ஆமாம் . . ஜாலியா போவும் . .திடீர்ன்னு சீரியசாவும் . . 🙂

    @ காதலரே – அதேதான் . .வெளியே உள்ள சிறை, உள்ளிருக்கும் சிறையை விட மோசமானது அல்லவா . . 🙂 நன்றி . .

    @ சுப. தமிழினியன் – சூப்பர் !! எனக்கும் அதே!! அதுவரைக்கும் நானு ஆங்கிலப்படம் மட்டுமே பார்த்துகினு இருந்தேன் . .அதுக்கப்புறம் தான் உலகப் படங்கள் பார்க்க ஆரம்பிச்சது . .

    @ அண்ணாமலையான் – ஆஹா . .செழியன் எங்க நானு எங்க . . அவரு மல . . நானு தறுதல . . 🙂

    Reply
  7. //சு. ப. தமிழினியன் – மொசார்ட் பத்திய பதிவு சீக்கிரமே போடுறேன் . . திட்டிப்புடாதீங்க//

    அப்ப திட்டுனா நாங்க சொல்ற பதிவுளை போட்றீவீங்களோ??? அட நல்லாருக்கே…:)

    படத்தோட விமர்சனம் மற்றும் ட்டிரய்லர் நல்லாருக்கு தல… பார்க்க முயற்சி செய்கிறேன்…

    Reply
  8. Anonymous

    Dear Black Scorpion,

    Your critic is wonderful. Have u seen Redcliff I & II. Wonderful movie by John Woo. Pls publish your critic about this movie to reach all.

    -Rajasekaran

    Reply
  9. படிச்சவுடன் அப்படியே ஜெயிலுக்கு போயிட்டு வந்த பீலிங் .
    :)))))

    Reply
  10. இந்த படத்தை அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி கருந்தேள்… 🙂 சீக்கிரம் பாக்குறேன்… 🙂 🙂

    கதையை படிக்கவில்லை.. விமர்சனம் அருமை 🙂 🙂

    Reply
  11. @ நாஞ்சில் பிரதாப் – அடப்பாவிகளா . . 🙂 இப்புடி வேற அத எடுத்துக்கலாமா . .:-) . . நிச்சயம் பாருங்க . .

    @ ராஜசேகரன் – கட்டாயம் அந்தப் படங்கள பார்க்க முயற்சி செய்யுறேன் . .மிக்க நன்றி . .

    @ இல்யுமிநாட்டி – வழக்கப்படி வீக் என்ட் எஸ்கேப் . . 🙂 இப்பதான் வந்தேன் .. .இதோ பார்த்துர்றேன் . .

    @ அஷ்வின் – இப்பதான் வந்தேன் பாஸு . . இதோ உங்க மைல படிச்சிர்றேன் . .

    @ கைலாஷ் – படத்த பாருங்க . .ஜெயில்ல வாழ்ந்த பீலிங்கி வரும் . . 🙂

    @ கார்த்திகேயன் – நண்பா .. ஆமாம் . .பிரேசிலிய படங்களே தனி . . என்னாது படம் பார்க்கவே நேரம் சரியா இருக்கா . .நமக்கெல்லாம் அதுதானே வேலையே . . 🙂 ஹீ ஹீ . . நீங்க இப்புடி சொல்லலாமா . .:-)

    @ கனகு – மிக்க நன்றி . சமயம் கிடைத்தால் கட்டாயம் பாருங்கள் . .

    Reply

Join the conversation