Carbon (2018) – Malayalam

by Karundhel Rajesh January 23, 2018   Malayalam

நம் வாழ்க்கையில், நிலையான வேலை இல்லாமல், தெளிவான மாதச் சம்பளம் இல்லாமல், அங்கே இங்கே அலைந்து திரிந்து, ஏதோ ஒரு வேலையைச் செய்து, இந்திந்த வேலையில் இந்திந்தப் பலன்கள் உள்ளன என்றெல்லாம் தானாகவே மனக்கணக்கு போட்டுக்கொண்டு திரியும் எத்தனை பேரை நாம் சந்தித்திருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். நம்மில் பலரும் நிலையான மாதச்சம்பளம் வாங்கிக்கொண்டு வாழ்ந்தவர்கள் அல்லது வாழ்பவர்கள் (நான் 12 வருடங்கள் ITயில் அப்படி இருந்து, தற்போது இரண்டரை வருடங்களாக சினிமாவில் இருப்பதால் நானுமே அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளலாம்). இவர்களில் பலரிடம் உள்ள ஒரே ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், செய்துகொண்டிருப்பதை மலை போல் நம்புவார்கள். அதில் இருந்து அவசியம் பெரும் பணம் ஒரு காலத்தில் வரப்போகிறது என்று உறுதியாக இருப்பார்கள். உண்மையில் எனது அனுபவத்தில் அப்படி ஒரு மிகப்பெரிய கூட்டத்தையே கோவையில் சந்தித்திருக்கிறேன். வைரம், வைடூரியம், மரகதக்கல் என்று என்னென்னமோ சொல்லிக்கொண்டு, கும்பல் கும்பலாக பேக்கரிகளில் டீ குடித்துக்கொண்டிருப்பார்கள். என் வீட்டின் அருகிலேயே. ஒரு பத்து வருடங்களாக இதே கும்பல் தினந்தோறும் அங்கே சந்தித்துக்கொண்டிருந்தது. இதே காரணங்கள். எல்லாருமே பத்து வருடங்களாக ஒரே நம்பிக்கை. ஒரே புன்சிரிப்பு. வாழ்க்கை விரைவில் மாறப்போகிறது என்ற உறுதியான எண்ணம். ஒரு நாள் அதில் தலைவர் வயதாகி இயற்கை மரணமே அடைந்துவிட்டார். உடனே அதில் இன்னொருவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இதுபோல ஒருவன் தான் சிபி செபாஸ்டியன். தனது வீட்டுக்கே வாரக்கணக்கில் வராமல் இருப்பவன். கையில் கிடைத்த வியாபாரங்களைச் செய்பவன். ஒரு காலகட்டத்தில் வைரக்கல் விற்கவேண்டும் என்பான். ஆனால் வைரம் அவனிடம் இருக்காது. வேறு ஒருவன் இவனிடம் அப்படிச் சொல்லியிருப்பான். ஆனால் அதை வைத்துக்கொண்டு ஒரு டீலரைப் பிடித்துவிடுவான். அங்கிருந்து ஓரளவு பணமும் கிடைக்கும். இப்படியே நிலையற்ற வாழ்க்கையை எப்படியும் பெரும் பணம் ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே ஓட்டிக்கொண்டு இருப்பவன்தான் சிபி. இவனைப் பார்த்த மாத்திரத்தில் எனக்கு என் சிறுவயதில் பார்த்த பல நிஜமான மனிதர்கள் நினைவு வந்தனர். எப்போதோ பணம் வரப்போகிறது என்ற நம்பிக்கையில் தினம்தோறும் ஓட்டாண்டியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். தங்கள் குடும்பங்களிடமும் இதே காரணங்களைச் சொல்லி, அவர்களுக்கும் இலக்கில்லாத ஒரு நம்பிக்கையைக் கொடுத்து வாழவைத்துக்கொண்டிருப்பவர்கள். பணம் வரப்போகுதுங்க.. இப்போ கடன் கொடுங்க. பின்னால மொத்தமா திருப்பிர்ரேன்.. என்று சொல்லிப் பணம் வாங்கியிருப்பவர்கள். சிபியும் அப்படி வாங்குகிறான். ஆனால் பணம் கொடுக்க முடிவதில்லை.

இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு, மிகப்பெரும் பணம் பற்றிய ஒரு செய்தி கிடைத்தால் என்னாகும்? அந்தச் செய்தி உண்மையா பொய்யா என்று நிரூபிக்கக்கூடியவர்கள் யாருமே இல்லை. ஒருவேளை அந்தப் பணம் இல்லை என்றால் உயிரே போய்விடும் என்ற சூழல். அதற்காக மனிதத் தடமே பதியாத பல பகுதிகளில் அலையவேண்டும் என்ற பிரச்னை. அதெல்லாம் சிபிக்குத் தடைகளாகவே இல்லை. மாறாக, பணம் கிடைக்கும் என்ற ஒரே நம்பிக்கைதான் அவனை எங்கெல்லாமோ செலுத்துகிறது. அந்த நம்பிக்கை இறுதியில் அவனை என்ன செய்தது என்பதே படம்.

‘கார்பன்’ படத்தின் மிகப்பெரிய பலமே, வாழ்க்கை நிம்மதி ஆகிவிடும் என்ற உறுதியான குருட்டு நம்பிக்கைதான். அத்தகைய நம்பிக்கையை நான் பலரிடமும் பார்த்திருக்கிறேன். அதனாலேயே யாரும் செய்யத் துணியாதவற்றை தடால் என்று செய்துவிடுவார்கள். அது நல்லதாக முடியுமா கெட்டதாக முடியுமா என்பதெல்லாம் secondary. ஆனால் அந்த நம்பிக்கை அவர்களை என்னவெல்லாமோ செய்ய வைத்துவிடுகிறது என்பதுதான் இங்கே விஷயம். கூடவே, சிபி கெட்டவன் இல்லை. அவனும் நம்மைப்போலவே ஒரு சராசரி மனிதன்தான். அவனுக்கும் வாழ்க்கையில் முன்னேறவேண்டும்தான். படத்தில் ஒரு இடத்தில், நாயகி அவனிடம், இந்த வேலைக்கு முன்னர் என்ன செய்தாய் என்று கேட்கும்போது பதில் பேச மாட்டான். இறுதியில், அதை அவளிடம் சொல்லி, இனிமேல் அப்படி வெறுமனே survive மட்டுமே செய்யவேண்டும் என்ற நோக்கம் இல்லை என்றும், நன்றாக வாழவேண்டும் என்ற தாபம் இருப்பதாகவும் சொல்லி, ஒரு முடிவை எடுக்கிறான். அவனது கதாபாத்திரம் இந்த எண்ணத்தை வெளிப்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்தது.

அது மட்டும் இல்லாமல், ஆரம்பத்தில் இருந்தே அவனது கதாபாத்திரம் செய்யும் எல்லா வேலைகளிலும் அந்தப் பதற்றம் உண்டு. ஒருவிதப் பதைபதைப்புடன், எதையாவது செய்து வாழ்க்கையில் நிம்மதியாக இருந்துவிடவேண்டும் என்று பல வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறான் சிபி. அவனைப் பார்த்தால் உங்களுக்கும் அப்படிச் செயல்படும் பலரும் நினைவுக்கு வரலாம்.

படத்தில் வரும் பல கதாபாத்திரங்களுமே இயல்பாகவே இருக்கின்றன. நாயகி சமீரா இன்னொரு உதாரணம். அவளது நோக்கம் என்று படத்தில் எதுவுமே இல்லை. She is just another ‘mountain Junkee’. ஆனால் அந்தக் கதாபாத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கவனித்துப் பாருங்கள். அதேபோல்தான் படம் நெடுக வரும் பாலன் பிள்ளை. மிக அட்டகாசமான நடிப்பு. பாலன் பிள்ளையாக கொச்சு ப்ரேமன் பிறிகட்டி அடித்திருக்கிறார். ஸ்டாலின், கண்ணன் ஆகிய பாத்திரங்களும் அருமையானவை. இவர்களையெல்லாம் மீறி, சிபி என்ற நிலையற்ற தன்மை கொண்டு வாழ்க்கை முழுதும் பதைபதைப்புடன் ஓடிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாஸில். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்தில் ஒன்றாக இது மாறிப்போனது. சிபி, தனது வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இடங்களிலும், இனி என்ன செய்யப்போகிறான் என்று முடிவெடுக்கும் இடங்களிலும் அந்தக் கதாபாத்திரம் உதிர்க்கும் சிரிப்பை கவனித்துப் பாருங்கள். அது ஒன்றே அதன் இயல்புத்தன்மையைப் பிரதிபலித்துவிடும். அதன் உடல்மொழியும் அபாரம். நான் மிகவும் ரசித்தேன்.

இதுதான் படம். சிபியின் பயணம். படம் பார்க்கும் சிலருக்கு, அது பிடிக்காமல் போகலாம். காரணம் படம் ‘மெதுவாக’ச் செல்கிறது என்று நீங்கள் எண்ணக்கூடிய எல்லாக் காரணங்களும் படத்தில் உண்டு. படத்தில் ட்விஸ்ட்கள் இல்லை. ஜகஜக பாடல்களோ காட்சிகளோ இல்லை. வாவ் சீன்ஸ் இல்லை. மிக இயல்பாக வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் படம் இது. ஆகவே எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம். படத்தின் துவக்கத்தில் இருந்து, முடிவு வரை எனக்கு எல்லாக் காட்சிகளுமே பிடித்தன. குறிப்பாக முடிவு.

இப்படி ஒரு கதாபாத்திரத்தைக் கண்டுபிடித்து, அதைச் சுற்றியும் ஒரு கதையை அமைத்த வேணுவை அவசியம் நான் பாராட்டுகிறேன். குறிப்பாக, படத்தில் சில காட்சிகளுக்கு முன்கூட்டியே அமைக்கப்படும் foreshadowing கூட இல்லை. இயல்பாக அப்படியப்படியே அமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இதன் திரைக்கதையையும் பாராட்டுகிறேன். எந்த ஒரு கட்டமைப்புக்குள்ளும் மாட்டாமல், சிபி என்ற கதாபாத்திரத்தின் பயணத்தை அழகாகப் படம்பிடித்துக்காட்டியிருக்கிறார் வேணு.

படத்தில் விஷால் பார்த்வாஜ் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பிஜிபால் பின்னணி இசை.

பி.கு
1. இந்தப் படம், ஏனோ எனக்கு வெர்னர் ஹெர்ஸாக்கின் சில படங்களை நினைவுபடுத்தியது.
2. சென்ற ஆண்டு, கிட்டத்தட்ட இதே போன்றதொரு கருவோடு, இலங்கையைச் சேர்ந்த ‘Red butterfly dream / Rathu Samanala Heenayak’ என்ற படத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதைவிடவும் இதுதான் பிரமாதம். ஒருவேளை இயக்குநர் வேணு அந்தப் படம் பார்த்திருக்கக்கூடும். இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

  Comments

Join the conversation