Casanova (2005) – English

by Karundhel Rajesh December 29, 2009   English films

இன்னிக்கி கொஞ்சம் ஜில்பான்ஸ் மேட்டர். வேறு ஒன்றுமில்லை. இதுவரை நம் வாழ்வில் எத்தனை பெண்கள் கடந்து போயிருப்பார்கள்? ஒன்று? இரண்டு? நான்கு? (அட.. பத்து பேர்ன்னுதான் வச்சிக்குவோமே). . .அத்தனை பெண்களின் மீதும் நமக்கு ஒரு ஈர்ப்பு இருந்திருக்கும். குறைந்தபட்சம் சிலநாட்களுக்காவது. நாம் ஒரு பெண்ணுடன் பழகிக்கொண்டிருக்கும் நேரத்தில், வேறு பெண்களுடன் அதே நோக்கத்தில் பழகி இருப்போமா என்பது சந்தேகம்தான் (யோவ் . .அதெல்லாம் ஒனக்கெதுக்கு? மேட்டருக்கு வாய்யா கசுமாலம்). . நாம் பார்க்கப்போகும் நபர், இந்த விஷயத்தில் தனித்திறமை வாய்ந்தவர். அவரிடம் வீழ்ந்த பெண்கள் ஏராளம். ஆனால், அத்தனை பெண்களிடமும் அவர் காதலுடன் தான் பழகியிருக்கிறார். யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருந்ததில்லை. பெண்களிடம் இவர் பழகும் விதமே அலாதியானது. காதலில் விழுந்து, காதலனால் துன்புறுத்தப்படும் ஒரு பெண்ணை அவர் கடக்க நேரிடும்; அந்தப்பெண்ணிடம் கனிவாகப் பழகி, அவளுக்குச் சிறுசிறு உதவிகள் செய்து, அவள் மனதில் இடம் பிடிப்பார்; கொஞ்ச நாட்களிலேயே, அப்பெண்ணைப் படுக்கையில் வீழ்த்துவார்; இந்த உறவு சலிக்க ஆரம்பித்தவுடன், அப்பெண்ணை அவளுக்குத் ‘தகுந்த’ ஒருவனுடன் சேர்த்துவைத்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை நாடிச் செல்வார். ஆனால், பழகும் பெண்களை உண்மையாகக் காதலிப்பார் வேறு. அவர் வேறு ஒரு பெண்ணை நாடிச் செல்லும்போதும், பெண்களுக்கு அவர் மேல் வெறுப்பு இருக்காது. மாறாக, அவருடன் பழக நேர்ந்ததை எண்ணி எண்ணி மகிழ்வார்கள் (கொடுத்து வெச்ச மகராசன்). .

(இல்லை. இவர் ஜெமினி கணேசன் அல்ல. . ) . . இவர்தான் காஸனோவா.

பதினெட்டாம் நூற்றாண்டில், வெனிஸில் பிறந்த ஒரு ‘காதல் மன்னன்’. இவரைப்பற்றி, 2005ல் Lasse Hallström எடுத்த ஒரு ஜாலியான படத்தைப் பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

படத்தின் ஆரம்பத்தில், காஸனோவாவின் தாய், அவரைத் தனது தாயிடம் விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார். பாட்டியிடம் வளரும் காஸனோவா, வளர்ந்ததும், வெனிஸில், தனது வழக்கமான ‘வேலைகளால்’, புகழோடு (??!!) வாழ்ந்து வருகிறார். வழக்கப்படி, வாடிகன் அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கிறது. வெனிஸின் மன்னர், காஸனோவாவின் நலன் விரும்பி. அவர், சர்ச்சை மீறித் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்றும், அவர் தப்பிக்க வேண்டுமென்றால், வெனிஸில் யாராவது ஒரு பெண்ணை மணந்துகொள்வதே ஒரே வழி என்றும் கூறிவிடுகிறார். நம்ம காஸனோவாவுக்கோ, திருமணம் என்பதுதான் இத்தாலிய மொழியில் பிடிக்காத ஒரே வார்த்தை. எனவே, தனது நம்பிக்கைக்குரிய பணியாளர் லூபோவோடு சேர்ந்து, ஒரு பெண்ணை (சும்மானாச்சுக்கும்) திருமணம் செய்வதற்காகத் தேடுகிறார் (சிவாஜியில் ரஜினியும் விவேக்கும் தேடுவது போல). கடைசியில் ஒரு பெண்ணைப் பார்த்து, முடிவும் செய்துவிடுகிறார். அந்தப்பெண்ணோ, கன்னிமாடத்திலேயே வாழ்நாள் முழுவதும் வளர்க்கப்பட்டு, ஆண் வாடையே தெரியாமல் வாழ்பவள் (என்று அவள் தந்தை எண்ணிக்கொண்டிருக்கிறார்). காஸனோவாவைப் பார்த்தவுடன் பயங்கர ஜொள்ளு.

அப்போதுதான், காஸனோவா, ஃப்ரான்செஸ்காவைப் பார்க்கிறார். எடுத்தவுடன் (நிஜமான) மோதல். அவளோ, தான் மணக்கவிருக்கும் மாமிசமலை பேப்ரீட்சியோவை நினைத்து விசனத்தில் இருக்கிறாள். புரட்சிகரமான பெண்ணிய சிந்தனைகளைப் புனைப்பெயரில் (நிஜப்பெயரில் எழுதினால், எரித்துவிடுவார்கள்) எழுதிக்கொண்டிருக்கிறாள். இத்தகைய ஒரு பெண்ணை விட்டுவிட காஸனோவாவுக்கு எப்படி மனம் வரும்?

இதற்கிடையில், அவரைப் பிடித்துத் தூக்கில் போட நினைக்கும் சர்ச்சின் ஆட்கள் வேறு துரத்த, கடைசியில் தலைவர் என்ன ஆனார்? அவருக்கு, ஃப்ரான்செஸ்கா கிடைத்தாளா? என்பதில் சுபம்.

காஸனோவாவாக, நம்ம ஜோக்கர் புகழ் (மறைந்த) ஹீத் லெட்ஜர். மனிதரின் ஆக்ஸெண்ட் தான் படுத்துகிறதே தவிர, ஆள் நன்றாக விளையாடியிருக்கிறார். நம்ம கார்த்திக் மாதிரியே நடித்து, சிரிக்க வைக்கிறார். அவரது வேலையாளாக, மம்மியில் ப்ரெண்டன் ஃப்ரேசர் சிறையில் இருக்கும்போது, சிறைக்காப்பாளராக வரும் ஓமிட் ஜாலிலி. காஸனோவாவை அவ்வப்போது இக்கட்டிலிருந்து காப்பாற்றும் பொறுப்பு இவருக்கு. மனிதர் பேசியே சிரிக்க வைக்கிறார். மாமிசமலை மாப்பிள்ளையாக ஆலிவர் ப்ளாட்.

இப்படத்தின் ஒரு குறிப்பிடத்தகுந்த அம்சம், இதன் இசை. அத்தனையும், பழைய கால சிம்ஃபனிகள். குறிப்பாக, தொமாஸோ அல்பினோனியின் இசைக்குறிப்புகள் (பதினேழாம் நூற்றாண்டு இசை மேதையாம்) மற்றும் ழான்-பிலிப் ரமூவ் (இவரும் ஒரு இசை மேதை). படத்தின் முடிவு டைட்டில்களில், மிக அருமையான, துள்ளலான, உற்சாகமான இசை, நாம் வெனிஸுக்கே சென்றுவிட்டதுபோன்ற பிரமையை ஏற்படுத்தியது. அதே போல், வெனிஸை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்கள். இசையும், ஒளிப்பதிவும் சேர்ந்து, ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

இது காஸனோவாவின் உண்மைக்கதை அல்ல. அவரைபபற்றிய ஒரு ரொமேண்டிக் காமெடி எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வியின் பதிலே இப்படம்.

இயக்குநர் Lasse Hallström, பல நல்ல படங்களை எடுத்தவர். ‘ ஸைடர் ஹௌஸ் ரூல்ஸ்’, ‘ சாக்லட்’ போன்ற படங்களின் இயக்குநர். அடிப்படையில், ஒரு இசை வீடியோ இயக்குநராக வாழ்க்கையை ஆரம்பித்தவர். அதனால்தானோ என்னவோ இதிலும் இசையை அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

இப்படம் ஒரு அருமையான படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால், ஒரு ஜாலியான படம். காமெடி மூடில் இருக்கும்போது, ஜாலியான படம் பார்த்தால் தேவலையே என்று தோன்றினால், பார்க்கலாம். ஒருமுறை.

காஸனோவா டிரைலர் இங்கே.

  Comments

8 Comments

  1. என் லிஸ்டில் பல காலமாக இருக்கு!

    Reply
  2. @ kolipaiyan – 🙂 உங்க அன்புக்கு நன்றி . . .

    @ பப்பு – அப்போ பார்த்துருங்க . . உங்களுக்குப் புடிக்கும்னு நெனைக்குறேன் . . பார்த்துட்டுச் செப்புங்க . . . ஒரு தடவ தாராளமா பாக்கலாம். .

    Reply
  3. ////யோவ் . .அதெல்லாம் ஒனக்கெதுக்கு? மேட்டருக்கு வாய்யா கசுமாலம்////

    இப்படித்தான்.. முன்னாடி நானும்… இண்ட்ரோவெல்லாம் கொடுத்துகிட்டு இருந்தேன். அப்புறம் நானும் இதே கேள்வியை கேட்டுகிட்டு.. நேரா மேட்டருக்கு போய்ட்டேன்! 🙂 🙂

    வெல்கம்.. வெல்கம்..!! படத்தை… இன்னும் பார்க்கலை..!!! லிஸ்ட்டில் போட்டுடுறேன்.

    Reply
  4. அண்ணா முருகேசண்ணா . . . காமசூத்ரா தானே . .போட்டுரலாங்ணா . . . ஆனா, நம்ம கைல அந்த டி வி டி இல்லீங்கோ . . உங்க கிட்டே இருந்தா அனுப்புங்க.. பார்த்துட்டு, எழுதிரலாம் . . 🙂

    Reply
  5. ennkku download panna padam kidaichachu….

    Reply

Join the conversation