Chinatown (1974) – English

by Karundhel Rajesh March 11, 2010   English films

ஒரு வாரமாக, பிழிந்தெடுக்கும் வேலை. மட்டுமல்லாது, வேறு சில விஷயங்களும் சேர்ந்துகொள்ள, நோ பதிவு. இதோ இப்பொழுதும் இரண்டு ரிப்போர்ட்டுகளை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், நண்பர் கனவுகளின் காதலரின் பதிவைக் கண்டபோது, சட்டென்று மனதில் ஒரு படத்தைப் பற்றிய நிழலாடியது. பொதுவாகவே, ஒரு படத்தை நினைவுபடுத்த, அதில் வரும் குறிப்பிட்ட ஒரு காட்சியே போதுமானது அல்லவா? அந்தக் காட்சி எத்தனை சிறியதாக இருப்பினும் சரி. அப்படி, அவரது பதிவில் ரோமன் போலான்ஸ்கியைப் பற்றிப் படிக்கையில், சட்டென்று, மூக்குடைந்து போய், ரத்தம் சொட்டிக்கொண்டு நிற்கும் ஜாக் நிகல்ஸனின் நினைவு பீறி எழுந்துவிடவே, ரிப்போர்ட்டுகளை ‘சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய்’ என்று அதட்டி விட்டு, இதோ அடுத்த பதிவுக்கு ரெடி.

ஒரு படம் எப்படி எடுக்கப்பட வேண்டும்? திரைக்கதையே ஒரு படத்தின் உயிர்நாடி என்பதை அனைத்து நாடுகளின் படங்களும் புரிந்துகொண்டுவிட்டன. ஆனால், 36 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்தத் திரைக்கதை அமைப்புக்கென்றே கச்சிதமாகப் பொருந்துவதாக ஒரு படம் எடுக்கப்பட்டது. இப்பொழுதும், பல திரைக்கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் தவறாமல் காண்பிக்கப்படும் ஒரு படமே இந்த ‘சைனாடௌன்’. ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு மாண்டேஜும், ஒவ்வொரு வசனமும் கச்சிதமாகப் பொருந்திவரும் ஒரு உதாரணப் படம் இது. எடுத்தவர் ரோமன் பொலான்ஸ்கி. ஆனால், இந்த உதாரணத் திரைக்கதையை செதுக்கியவர், இன்றும் மிகப் பிரபலமாக இருக்கும் ராபர்ட் டௌண். பொலான்ஸ்கியை விடப் பிரபலமான ஆள். நம்ம ஊரில் பாக்யராஜையும், ஹிந்தியில் சலீம் – ஜாவேதையும் போல, திரைக்கதைக்கென்றே தனது வாழ்வை செதுக்கிக்கொண்ட ஒரு மனிதர்.

அப்புடி என்னய்யா இந்தத் திரைக்கதைல இருக்கு? என்று கேட்டால் – வெல் – இந்தத் திரைக்கதை, இணையத்தில் பல இடங்களில் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்.

ஒரு படம் எப்படித் தொடங்க வேண்டும்? முதல் நொடியிலேயே ரசிகனின் கவனத்தைக் கவர வேண்டும். அதே சமயம், ஒரு திரைக்கதையில் அனாவசிய வார்த்தைகள், பத்திகள் இடம் பெறவும் கூடாது. ஒரு வரி, இரண்டு வரிகளுக்கு மேல் வசனங்கள் இருக்கக்கூடாது. பத்தி பத்தியாகப் பேசியே கொல்லக் கூடாது. காண்பிக்க வேண்டும். காட்சிகளில் ஒரு படம் நகர வேண்டும். ஒரு காட்சியை மிகவும் தாமதமாகத் தொடங்கி, மிக விரைவில் முடித்துவிட வேண்டும். ஹாலிவுட்டின் பிரபலமான ‘த்ரீ ஆக்ட்’ திரைக்கதை வடிவம் உபயோகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இந்த விதிகளுக்கெல்லாம் கனகச்சிதமாகப் பொருந்திய ஒருசில உதாரணப் படங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இவ்வளவு இருந்தாலும், போரே அடிக்காது.

சரி. படத்தைப் பற்றிப் பார்ப்போம்.

முதல் காட்சி. ஒரு பெரிய புகைப்படம். அதில், ஒரு ஆணும் பெண்ணும் கலவி செய்துகொண்டிருக்கிறார்கள். சட்டென்று படம் மாறுகிறது. இன்னொரு படம். அதிலும், வேறு கோணத்தில் அதே காட்சி. பின்னணியில் ஒரு மனிதன் இயலாமையில் அழும் குரல் கேட்கிறது.

‘ஓ நோ’ . .

அடுத்த காட்சியில், அந்த அழுகையின் முழு வீரியமும் தெரிகிறது. ஒரு மனிதன் அழுதுகொண்டிருக்கிறான். அதை, நல்ல முறையில் உடையணிந்த இன்னொரு மனிதன், எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு சிகரெட்டை, இயல்பாகப் பற்ற வைத்துக் கொள்கிறான்.

எந்த வசனமும் இல்லாமல், இக்காட்சி நமக்குப் புரிவிக்கப் படுகிறது. அழுபவன், தனது மனைவி தனக்குத் துரோகம் செய்வதை அந்தப் புகைப்படங்களில் பார்க்கிறான். அவன் அமர்த்திய துப்பறிவாளனே அவனது அருகில் நிற்பவன்.

அந்தத் துப்பறிவாளன், ஜேக் கிட்டீஸ் (நிகல்ஸன்). அந்த மனிதனுக்கு, பிராந்தியை ஊற்றிகொடுத்து, அங்கிருந்து அனுப்பி வைக்கிறான்.

தம்ப்பிங் என்று சொல்வார்களே – அப்படி ஒரு காட்சி இது. தமிழில், எனக்குத் தெரிந்து, நான் பார்த்தவரையில், காக்க காக்க மற்றும் அ..ஆ படத்தின் ஆரம்பக் காட்சிகளே என்னை மிகவும் கவர்ந்த காட்சிகள், இதுவரையில் (ஆய்த எழுத்து, அமோரெஸ் பெர்ரொஸின் ஈயடிச்சாங்காப்பி என்பதால், அதனை விட்டு விடுவோம்).

கதாநாயகனின் தொழில், இப்படியாக நமக்குப் புரிவிக்கப்படுகிறது. இதற்கு அடுத்த காட்சியிலேயே, ஒரு பெண் ஜேக்கைப் பார்க்க வருகிறாள். தனது கணவன், தனக்குத் துரோகம் செய்வதாக அவள் சந்தேகப்படுவதாகவும் ஜேக்கே உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் சொல்கிறாள். அவளது பெயர் , மிஸஸ் மல்ரே (எ) எவ்லின்.

அவளது கணவனான மல்ரேயோ, லாஸ் ஏஞ்சலீஸின் தண்ணீர் மற்றும் மின் துறையின் தலைவர். மிகப் பெரும் புள்ளி. அவரைப் பின்தொடர ஆரம்பிக்கிறான் ஜேக். அவர் ஒரு பொதுக்கூட்டத்துக்குச் செல்கிறார். பேசவும் செய்கிறார். ஒரு அணை கட்டுவதற்கு ஒப்புதல் தெரிவிக்கும் கூட்டம் அது. அணைக்கு எதிராகப் பேசும் மல்ரே, அணை வந்தால், அது ஆபத்தில் முடியும் என்று எச்சரிக்கை செய்கிறார். ஆனாலும் அந்தச் சட்டம் நிறைவேறுகிறது.

அவர் பின்னாலேயே செல்லும் ஜேக், அந்த அணை கட்டப்படும் இடத்துக்குச் செல்கிறான். லாஸ் ஏஞ்ஜலீஸில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருக்கும்போதிலும், ஆற்று நீர், கடலில் பாய்ச்சப்படுவதை அறிகிறான். அந்த இடத்தில், மல்ரே ஒரு இளம்பெண்ணைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பைப் பல புகைப்படங்களாக எடுக்கிறான் ஜேக்.

மறுநாள், அத்தனை நாளிதழ்களிலும் மல்ரே அந்தப் பெண்ணுடன் பேசும் படங்கள். பக்கத்திலேயே ஜேக்கின் பெயரோடு.

சற்று நேரத்திலேயே, ஜேக்கின் அலுவலகத்தில் ஒரு பெண். ஜேக்கிடம், தன்னைத் தெரியுமா என்று கேட்கிறாள். ஜேக்குக்கோ அவள் யாரென்றே தெரிவதில்லை. தான் தான் மல்ரேயின் மனைவி என்று கூறும் அவள், ஜேக்கின் மேல் கேஸ் போடுவிட்டு, வக்கீல் நோட்டீஸ் கொடுக்கவே அங்கு வந்திருக்கிறாள்.

அதிர்ந்து போகும் ஜேக், தன்னை ஒரு பலிகடா ஆக்கியது யார் என்று யோசிக்கத் தொடங்குகிறான்.

உண்மையான மனைவியான (நிஜ) எவ்லினை மறுபடி சந்திக்கும் ஜேக், நடந்ததை அவளிடம் தெளிவுபடுத்துகிறான். அப்போது, தனது தந்தையான நோவா க்ராஸும் மல்ரேவும் முன்னாள் பிஸினஸ் பார்ட்னர்கள் என்பதை எவ்லின் சொல்கிறாள்.

ஜேக்குக்கோ, தன்னை இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்ட அந்தப் போலி எவ்லின் யாரென்று தெரிந்துகொண்டு, அவள் கழுத்தை நெறித்துவிட வேண்டும் போல் கோபம் வருகிறது. எனவே, இந்த விஷயத்தை மிகவும் பெர்சனலாக எடுத்துக் கொண்டு, துப்பறிய ஆரம்பிக்கிறான்.

மறுபடியும் அந்த அணைக்குச் செல்லும் ஜேக், அங்கு பல போலீஸ்காரர்களைப் பார்க்கிறான். மல்ரே தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டதைத் தெரிவிக்கிறார்கள் அவர்கள்.

சந்தேகத்திற்குள்ளாகும் ஜேக், அன்று இரவு, அந்த இடத்துக்குப் பதுங்கிப் பதுங்கி வருகிறான். லபக்கென்று அவனைப் பிடிக்கும் இரண்டுபேரில் ஒருவன், (பொலான்ஸ்கியே தான்) ஒரு பேனாக்கத்தியை எடுத்து, ஜேக்கின் மூக்கில் நுழைத்து, ஒரு பக்க மூக்கைக் கிழித்து விடுகிறான். அவனை எச்சரித்துத் துரத்தி விடுகிறார்கள்.

பிய்ந்துபோன மூக்கோடு விடப்பட்ட ஜேக், உண்மையைக் கண்டறிந்தானா என்பதே மீதிப்படம்.

ஃபில்ம் ந்வார் என்ற பிரிவைச் சேர்ந்த இப்படம் (அதே கண்கள் பாணி), விறுவிறுப்பாகச் செல்லக்கூடிய ஒரு படமாகும். ஜாக் நிகல்ஸன் வெகு இளமையாக, பின்னி எடுத்த படம்.

இப்படத்தைப் பற்றிய பல ரசமான தகவல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான், பொலான்ஸ்கிக்கும் ராபர்ட் டவுணுக்கும், திரைக்கதையைப் பற்றி எழுந்த பல விவாதங்களைப் பற்றிய கதை. எப்பொழுது பார்த்தாலும் திரைக்கதை மாற்றி எழுதச்சொல்லி பொலான்ஸ்கி நச்சிக்கொண்டே இருந்ததால், டவுண் மிகவும் ஆத்திரம் கொண்டு, பொலான்ஸ்கியைக் கன்னாபின்னாவென்று திட்டிவிடுவார்.. ஆனால், பொலான்ஸ்கி சொன்னபடியே திரைக்கதையை மாற்றி எழுதினார். அதனாலேயே படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

இப்படத்தின் திரைக்கதை இங்கே படித்துக் கொள்ளலாம்.

சைனாடௌன் படத்தின் டிரைலர் இங்கே.

பி.கு – இப்படத்தின் இரண்டாம் பாகம், 16 வருடங்கள் கழித்து, ஜாக் நிகல்ஸனே இயக்கி வெளிவந்தது. பெயர் – ‘த டூ ஜேக்ஸ்’ (The two Jakes).

  Comments

26 Comments

  1. அப்ப நம்ம அக்ஷய் குமார் நடிச்ச படம் இது இல்லையா?

    Reply
  2. காமெடிக்கு மன்னிக்கவும், நண்பருடன் உரையாடிக்கொண்டே அந்த கமெண்ட்டை இட்டேன்.

    என்னுடைய பேவரிட் படங்களை மட்டுமே பதிவிடுவது என்ற உங்கள் கொள்கையை பாராட்டுகிறேன்.

    Reply
  3. //இப்படத்தின் இரண்டாம் பாகம், 16 வருடங்கள் கழித்து, ஜாக் நிகல்ஸனே இயக்கி வெளிவந்தது. பெயர் – ‘த டூ ஜேக்ஸ்’ (The two Jakes). //

    அடடே, நான் இன்னும் பார்க்கவில்லை. தகவலுக்கு நன்றி.

    Reply
  4. தல தேளு இது நம்ம பாக்யராஜ் படத்தைவிட சூப்பரா இருக்கே…. எங்கே கிடைக்கும்???

    Reply
  5. தெய்வமே…
    இப்போ தாங்க டவுன்லோடு போட்டேன்.கிள்ளி பாக்குறேன்.அடடா,என்ன அழகா எழுதியிருக்கீங்க,த்ரீ ஆக்ட் பற்றி சொல்லி இன்னும் அதைப்பற்றிய ஆவலை படித்து தெரிந்துகொள்ள வச்சுட்டீங்க,
    இப்படி டெக்னிகலான விஷயம் சொல்லுங்க.ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.
    ===========
    ஜாக் நிக்கல்சன் என்ன மனிதர்,என்ன ஆட்டிட்யூட்.கடவுளே.என்ன ஆஜானுபாகு,இவர் ஒரு ஃபைர் மேனாம்,ஷைனிங் படத்தில் நிஜ கதவை மூனே போடில் உடைப்பார்.ஆஸ் குட் ஆஸ் இட் கெட்ஸ் ல் ஹோமோபோபியா,ரேஸிஸ்ட்,அப்சஸிவ் கம்பல்சிவிஸ்டா ஒரு சேர கலக்கியவர். படம் டவுன் லோடு போய்க்கிட்டே இருக்கு பாஸு,ஃபார்மாலிட்டி டன்:)

    Reply
  6. இப்போ தான் ராபர்ட் டினீரோவின் “எவ்ரிபடி இஸ் ஃபைன்”
    பார்த்தேன்.மனதை நகர்த்திய படம்.தவமாய் தவமிருந்துவின் அமெரிக்க வெர்ஷன் தல.சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.இன்னிக்கு பூரா வியந்து கொண்டே இருப்பேன். தல நம்ம தமிழ்ல எப்போ ஹீரோக்கு கதை பண்ணுவதை நிறுத்துறோமோ அப்போதான் ஃபீல்டு உருப்படும்.
    டயம் கிடைக்கும் போது பாருங்க

    Reply
  7. @ விஸ்வா – அடப்பாவிகளா . . இன்னும் எத்தன பேரு இப்புடி கெளம்பிருக்கீங்க ? என்னாது அக்‌ஷய் குமாரா . . அது சரி 🙂
    உங்களுக்கும் பிடிக்கும்னு அறிஞ்சதுல சந்தோஷம்.. எல்லாம் நம்ம காதலரால வந்துச்சி .. அவரு எழுதப்போய் தானே இத எழுதற எண்ணமே வந்துச்சி . .

    @ நாஞ்சில் – அப்புடிக்கேளுங்க . .என்ன கொடும இது . . அதாகப்பட்டது என்னன்னா, நெட்டுல ரொம்ப ஈசியா கிடைச்சிரும் . .பாருங்கோள். .

    @ கார்த்திகேயன் – அங்க தான் லப்டப் பதி வொர்க் ஆகுது . . 🙂 . ஷைனிங் பார்த்து அசந்து போயிட்டேன் . .என்னோட ஃபேவரைட் நடிகரு அவுரு தான் பாஸு . . ஆஸ் குட் பத்தி பாதி எழுதி வெச்சிருக்கேன் . .சீக்கிரமே போடுவேன் . .

    எவரிபடி ஈஸ் ஃபைன் நானு பார்த்ததில்ல. . கண்டிப்பா பாக்கறேன் . .நீங்க சொன்ன பாயிண்ட்டு கரிகிட்டு . . ஈரோக்கு படம் பண்ணுறத நிறுத்துனா நல்லா தான் இருக்கும் . . ஹூம் . . பார்ப்போம் . .

    Reply
  8. நண்பரே,

    அருமையான பதிவு. வேகமாக எழுதினாலும் அழகில் குறைவில்லை. நிக்கல்சனின் ஷைனிங் செம படம். பேட்மேனில் கூட ஜோக்கராக நடித்து வில்லத்தனம் பண்ணியிருப்பார், அதுவும் எனக்கு பிடித்திருந்தது. ரொமான் பொலான்ஸ்கி நல்ல ஒரு இயக்குனர். இப்படத்தை அறிமுகம் செய்து வைத்ததிற்கு நன்றி நண்பரே.

    Reply
  9. ரெண்டு பாகமும் இன்னும் பார்க்கலைங்க கருந்தேள். சிலமுறை வாய்ப்பு கிடைத்தும்.. மூட் இல்லாம விட்டுட்டேன்.

    netflix-ல் போட்டாச்சி!

    Reply
  10. சூப்பர் விமர்சனம் பாஸ்….அன்னைக்கு தீர்த்தம் சாப்டீகளே ஹாலி பாலா மாதிரி நல்ல 18+ படமாப் பார்த்து எழுதுவீங்கன்னு நெனச்சுக்கிட்டுருந்தேன். இதுவும் ஓகே தான். இருந்தாலும் உங்ககிட்டயிருந்து நெறையா எதிர்பாக்குறேன். நன்றி. ஃபார்மாலிடி டன் டன்.

    Reply
  11. @ காதலரே – உங்கள் பதிவு தான் இதை நான் எழுதக் காரணமே . . 🙂 மிக்க நன்றி . .

    @ பாலா – ரெண்டாவது பாகம் அந்த அளவு இருக்காது . . முதல் பாகமே பெஸ்ட். . முதல் பாகத்த பாத்துட்டு, தோணினா ரெண்டாவத பாருங்க. . ஆனா அது அவ்வளவா ஓடல. .

    @ மயிலு – கண்டிப்பா 18+ எழுதிருவோம் . . சீக்கிரமே . . 🙂

    Reply
  12. இங்கிலீஷ் சாமியார் கத இருந்தா பார்த்துட்டு எழுதுங்க. நம்ப சாமியார் ரேஞ்சுக்கு இருக்கா பாப்போம்

    Reply
  13. @ மைதீன் – நம்ம சாமியார் ரேஞ்சுக்கு வேற எந்த சாமியாரும் வர முடியாது . . இங்கிலீஷ் என்ன. . அண்டார்டிக்கா மொழி பேசுற சாமியார் வந்தாக்கூட டரியலாயி ஓடிருவாரு . . 🙂

    @ அண்ணாமலையான் – மிக்க நன்றி தல. .

    Reply
  14. பாலாவின் அறிமுகத்துக்கு நன்றி. வாழ்த்துகள் கருந்தேள். இதென்னன புதுப்பெயர். ஏதாவது இதற்கு பின்னால் காரணம் உண்டா?

    Reply
  15. @ நாஞ்சில் – அப்புடிக்கேளுங்க . .என்ன கொடும இது . . அதாகப்பட்டது என்னன்னா, நெட்டுல ரொம்ப ஈசியா கிடைச்சிரும் . .பாருங்கோள். . //

    ரைட்டு..:) பார்த்திடறேன்..:)

    Reply
  16. வணக்கம் ஜோதிஜி. . இதுக்குப்பின்னால ஒரு மொக்க காரணம் உண்டு . . ஆங்கிலத்துல ஸ்கார்ப் அப்புடீன்னு எழுதிக்கினு இருந்தேன். . தமிழ்ல எழுதலாம்னு நினைச்சப்ப, தேள் வர்ற மாதிரி ஒரு பேர் வேணும்னு தேடினப்ப அகப்பட்ட பெயர் தான் இது . .அப்புடியே கொஞ்சம் கெத்தா இருந்த மேரி ஒரு பீலிங்கி . .அதேன் . .:-)

    @ ஷங்கர் – மிக்க நன்றி . . நானு உங்க வளைத்தளத்த ரீசண்டா பாக்கல. . தல போற வேலை இங்க. . இதோ கொஞ்ச நேரத்துல பார்த்துடறேன் . .:-)

    Reply
  17. நண்பா படம் பாத்துட்டேன்
    என்ன படம்ல?
    ஜாக் சான்ஸே இல்லை,என்ன ஆக்‌ஷன்?
    அதுவும் அந்த பாண்டேஜ் மூக்கோட இதில் சுவாசிப்பதை நான் விரும்புகிறேன்னு ஒரு டையலாக் வேற,செம சுவாரஸ்யம்,படம் முழுக்க ட்விஸ்டு தான். அந்த காலத்திலேயே அப்பா மகளுக்குள் கேவலமான உறவைப்பற்றி சிந்தித்திருக்கிறார்.பொலன்ஸ்கி.

    டெஸ் பார்தீங்களா?
    இந்த ஆளின் மாஸ்டர்பீஸ்னா பியனிஸ்ட் தான் இல்லையா?

    Reply
  18. ஓ பார்த்துட்டீங்களா !! சூப்பரு !! உங்களுக்குப் புடிச்சது குறிச்சி சந்தோஷம் நண்பா !! அதே தான். . அந்தக் காலத்துலயே அந்த மாதிரி உறவ சொல்ல தைரியம் வேணும்ல (ஆனா பொலான்ஸ்கியே ஒரு சிறு பெண்ணை ரேப் செய்த குற்றத்துக்காக அமெரிக்காவில் தேடப்படுபவர்ன்னு நினைக்குறேன்). .

    மாஸ்டர்பீஸ்னா பியானிஸ்ட் தான் . . டெஸ் இன்னும் பார்க்கல. . பார்த்துர்ரேன் . . நன்றி நண்பா . .

    Reply
  19. படிச்சேன் நண்பா . .எனக்கென்னமோ அந்தப் பொண்ணு பொலான்ஸ்கிய பந்தாடுதுன்னு நெனைக்குறேன் . . அங்கெல்லாம் இது காமன் தானே . . மொதல்ல மேட்டர் பண்றது, அப்பறம் அந்த வி ஐ பி கிட்ட முடிஞ்ச அளவு கறக்குறது . . மாட்டிட்டாரு மனுஷன் . . .:-)

    Reply
  20. இது என்னோட முதல் ப்ளாக். சினிமா பற்றி. டைம் இருக்கப்போ படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

    http://worldmoviesintamil.blogspot.com

    Reply
  21. viki

    மேலும் ஒரு தகவல்.இத்திரைப்படத்தை Godfather போன்று மூன்று பாகமாக எடுக்க எண்ணியிருந்தனர்.ஆனால் பல பிரச்சனைகள எழவே ஒரு பாகத்தோடு போலன்ஸ்கி நிறுத்தி கொண்டார்.இரண்டாம் பாகம் ஜாக் எடுத்தது.
    ஜாக்கின் underplay இந்த படத்தில் குறிப்பிட தகுந்த ஒன்று.நன்றி

    Reply
  22. ஏன்னு தெரியல. எழுபதுகள்ல, அதுக்கு முன்ன வந்த படங்கள் ஏனோ ஓட்ட மாட்டேங்குது. நல்ல படம் பாருன்னு சொல்லி பாத்த படங்கள் தான் இது. இந்த வரிசைல Network, The Good, The Bad and The Ugly, One Flew Over Cuckoos Nest, The Godfather, Apocalypse Now…. இதனாலேயே நான் பழைய படங்கள் இப்ப பாக்கறதே இல்ல

    Reply

Join the conversation