Clash of the Titans (2010) – English

by Karundhel Rajesh April 7, 2010   English films

இரண்டு கும்பல்களுக்கிடையே சண்டை வந்தால் என்ன ஆகும்? நம்ம ஊர் படமாக இருந்தால், ஹீரோவே அத்தனை பேரையும் சிங்கிள் ஆளாக அடித்துப் போட்டு விட்டு, ஜாலியாக ஹீரோயினுடன் டூயட் பாடச் சென்று, நம் காதில் பூ சுற்றுவார்கள். . அதுவே ஹாலிவுட்டாக இருந்தால், அடித்துப் போடுவதில் கொஞ்சம் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் கலந்து கொடுத்து, பூ சுற்றுவார்கள். அப்படி ஒரு படமே இந்த ‘க்ளாஷ் ஆஃப் த டைட்டன்ஸ்’.

படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், இதன் பல்வேறு கதாபாத்திரங்களையும், கதையின் ‘ப்ளாட்’டையும் கவனிப்போம்.

கிரேக்கத்தில், மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னரே இருந்தவர்கள், ‘டைட்டன்கள்’ எனப்படும் கடவுளர்கள். இவர்கள், ‘ஓத்ரிஸ் என்ற மலையில் தங்களது ‘பேஸ்’ அமைத்துக் கொண்டனர். இவர்களில் ஆறு ஆண்கள்; ஆறு பெண்கள். இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. இவர்களது பிள்ளைகள், ‘ஒலிம்பஸ்’ என்ற மலையில் தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டனர். ஒரு சமயம், இந்த இரண்டு வகையான கடவுளர்களுக்கு இடையே ஒரு பெரும் போர் மூண்டது. இந்தப் போரில், ஒலிம்பியன்கள், தங்களது வசம் இருந்த ஒரு பிரம்மாண்டமான கொடிய மிருகமான ‘க்ரேக்கன்’ என்பதன் மூலம் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற கடவுளர்களுக்கு, ‘ ஸீயஸ் (Zeus)’ தலைவரானார் (நம்ம இந்திரன் மாதிரி). அவரது சகோதரனான ‘பொஸைடன்’, சமுத்திரங்களுக்கு அரசனானார். இவர்களது இளைய சகோதரனான ’ஹேட்ஸ்’ ஸீயஸால் வஞ்சிக்கப்பட்டு, பாதாள உலகத்துக்கு அனுப்பப்பட்டு, அதன் தலைவரானார்.

இது தான் முன்கதை. இப்போது, படத்தைப் பார்ப்போம்.

பொதுவில், கிரேக்க நம்பிக்கை என்னவெனில், இந்தக் கடவுளர்களின் ஆதார சக்தியே, மக்களது பிரார்த்தனை தான். மக்களிடையே அன்பும் பக்தியும் பரவப்பரவ, கடவுளர்களின் சக்தியும் வலுக்கும். இதன் மூலம், மக்களுக்குக் கடமை புரிய கடவுளர்கள் தயாராவார்கள். எப்பொழுது பக்தி குறைகிறதோ, அப்பொழுது, தீய சக்திகள் வலுப்பெறும். கடவுளர்கள் வலு குன்றிவிடுவர். எனவே, மக்கள் பக்தியுடன் இருப்பதையே கடவுளர்கள் விரும்புவர்.

இப்பொழுது, ஒரு சிறிய தகவல். கிரேக்கத்தில் மட்டும் அல்ல, நம் இந்தியாவிலும் இது தான் நம்பிக்கை. வேதங்களிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் செய்யும் யாகத்தில் அளிக்கப்படும் உணவுகள், தேவர்களுக்குச் சென்று சேர்வதாக மக்கள் நம்பினர். தேவர்களால் நாம் உண்ணும் உணவினை அப்படியே உண்ண இயலாது. எனவே தான் வேள்வி. தேவர்கள், சாரத்தை மட்டுமே புசிக்க இயலும். அக்னியில் அளிக்கப்பட்ட உணவின் சாரம், புகை வழியே அவர்களுக்குச் செல்லும் என்பது மக்களது நம்பிக்கை. . இப்படி வேள்விகள் நடந்து, தேவர்களுக்கு உணவு கிடைத்துக்கொண்டிருக்கும்வரை, தேவர்களும் மக்களுக்கு உதவி புரிந்து கொண்டிருப்பர் என்பது பண்டைய கால நம்பிக்கை. இத்தகவல், நமது கீதையில் உள்ளது. அதில் ஒரு இடத்தில் க்ருஷ்ணர் அர்ஜுனனிடம், “இப்படி மனிதர்களும் தேவர்களும் உதவி செய்துகொண்டு, பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தேவைப்படுபவர்களாக இருங்கள் (பரஸ்பரம் பாவயந்த: என்பது அங்கு உபயோகிக்கப்படும் சமஸ்கிருத வார்த்தை) என்று கூறுகிறார். (எந்த இடத்தில் என்பதை மறந்து விட்டேன்).

இப்படித்தான் கிரேக்கத்திலும். அக்ரிஸியஸ் என்ற மன்னன், தனது பிள்ளையால் கொல்லப்படுவான் என்று அசரீரி கேட்க, அவன் தனது மனைவியை ஒரு மாளிகையில் சிறைவைத்து விடுகிறான். அங்கு தோன்றும் சீயஸ், அவனது மனைவிக்குக் குழந்தையை அளிக்க, அந்தக் குழந்தையைக் கொல்ல அக்ரிஸியஸ் முற்படும்போது, சீயஸின் ஆக்ரோஷத்தால் குரூபியாக மாறிவிடுகிறான். அப்பொழுதும் ராணியையும் குழந்தையையும் ஒரு பெட்டியில் வைத்து, கடலில் வீசிவிடுகிறான். அப்பெட்டி கரையில் ஒதுங்க, அந்தக் குழந்தையை ஒரு மீனவர் வளர்க்கிறார். அக்குழந்தையே ’பெர்ஸியஸ்’. இப்படத்தின் ஹீரோ (நம்ம மஹாபாரதம் நினைவுக்கு வரவில்லை?)

ஒருநாள், பெர்ஸியஸும் தந்தையும் கடலில் சென்றுகொண்டிருக்க, சீயஸின் சிலை ஒரு நாட்டில் தகர்க்கப்படுவதைப் பார்க்கின்றனர். இதனால் கோபம் கொள்ளும் பாதாள அரசனான ஹேட்ஸ், அம்மக்களைக் கொன்றுவிடுகிறார். இதில் பெர்ஸியஸின் குடும்பம் அழிந்து விடுகிறது. மிஞ்சிய வீரர்கள் அரசன்முன் கொண்டுசெல்லப்படுகிறார்கள். பெர்சியஸும். அப்பொழுது ராணி, தனது இளவரசியான ஆண்ட்ரோமீடாவின் அழகு, கடவுளர்களுக்கும் மேலானது என்று கொக்கரிக்க, அங்கு மறுபடியும் தோன்றும் ஹேட்ஸ், அடுத்த முழுநிலவுக்குள் அந்த நாட்டையே, தனது கொடிய மிருகமான ‘க்ராக்கன்’ மூலம் அழிக்கப்போவதாக சீறுகிறான். இதைத் தவிர்க்க, ஆண்ட்ரோமீடாவைப் பலி கொடுக்க வேண்டும் என்றும் சொல்லி, மிச்சமிருக்கும் வீரர்கள் அத்தனை பேரையும் கொன்று விடுகிறான். ஆனால், பெர்ஸியஸிடம் அவனது பாச்சா பலிக்கவில்லை. அப்பொழுதுதான் பெர்ஸியஸ் , தங்களது அரசரான ஸீயஸின் மகன் என்று ஹேட்ஸ் தெரிந்து கொள்கிறான். மறைந்தும் விடுகிறான்.

இதன்பின், பெர்ஸியஸ் மற்றும் மிஞ்சியிருக்கும் வீரர்கள், அந்த க்ராக்கனைக் கொல்ல ஒரு பயணம் மேற்கொள்கின்றனர். பார்ப்பவர்களையெல்லாம் கல்லாக மாற்றும் சக்தி கொண்ட ‘மெடூஸா’ என்ற தேவதையைக் கொன்று, அதன் தலையை அந்த க்ராக்கனின் முன் காட்டினால் தான் அது கல்லாக மாறும் என்ற உண்மை இவர்களுக்குத் தெரிய வருகிறது.

இதன் பின் என்ன நடந்தது? க்ராக்கன் செத்ததா? அல்லது நகரம் அழிந்ததா? படத்தைத் த்ரீ டியில் பாருங்கள்.

பொதுவாகச் சொல்லப் போனால், படம் சராசரி தான். கடி என்று கூடச் சொல்லலாம். மக்களைக் கவரும் ஒரு விஷயம் கூடப் படத்தில் இல்லை. ஆரம்பம் முதல் கடைசி வரை, படு திராபையாகச் சென்று நமது பொறுமையைச் சோதிக்கிறது. இந்த கிரேக்கக் கடவுள்களின் வரலாறு தெரிந்தால், கொஞ்ச நேரம் படத்தை ஓட்டலாம். இல்லையெனில், ‘மான் கராத்தே’ தான். லயம் நீசன், அட்டர் வேஸ்ட். .

படத்தின் ஒரே நல்ல அம்சம், இசை.

எனவே, மக்களே . . தவறியும் இப்படத்தைப் பார்த்து விடாதீர்கள். எஸ்கேஏஏஏஏஏஏப் !!!!

.பி.கு – நேற்று பையா பார்த்தேன். படு மொக்கை. அய்யா சாமி. . இன்னிக்கி இந்தப் படம். . டோட்டலா நொந்து போய் உக்காந்துகினுகீறேன் . . என்ன கொடும சார் இது ? எனக்கு மட்டும் ஏன் இப்புடி ஆவுது?? ?

  Comments

16 Comments

  1. //இத்தகவல், நமது கீதையில் உள்ளது. அதில் ஒரு இடத்தில் க்ருஷ்ணர் அர்ஜுனனிடம்//

    யோவ் .. என்னய்யா இது ஏதோ கதாகாலட்சேபம் மாதிரி?? பின்னிப்புடுவோம் ஜாக்கிரதை . . (எப்படியும் இப்புடி ஒரு கமெண்ட்டு வரத்தான் போவுது.. அதான் இந்த ‘நமக்கு நாமே ‘ திட்டம் . . ஹீ ஹீ) . .

    Reply
  2. என்ன தேள் தூக்கமே கிடையாதா. இப்படில்லாம் விமர்சனம் போட்டு மக்கள காப்பாதலாம் இந்த மாதிரி படங்கள பாக்குறதுல இருந்து. அதுக்க்காக இப்படியா ?

    Reply
  3. //என்ன தேள் தூக்கமே கிடையாதா. ///

    இதெல்லாம்…. இப்போதைக்கு ஒரு கேள்வியா??? 😉 😉

    ===

    தேள்… திருமண வாழ்த்துக்கள். ரொம்ப ஸாரி….!! கரணம் தப்பினா வேலை காலிங்கற ரேஞ்சுக்கு.. ஒரு சர்வர் மாற்றம் வேலை போய்கிட்டு இருக்கு. அதான்.. உங்க மேரேஜ் டே-வுக்கு கால் பண்ண முடியலை. 🙁

    ====

    ///என்ன கொடும சார் இது ? எனக்கு மட்டும் ஏன் இப்புடி ஆவுது?? 🙁 ///

    உங்களுக்கு… தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கற கதை தெரியுமா??? 🙂 🙂 🙂

    Reply
  4. Anonymous

    // த்ரீ டியில் பாருங்கள். // காசுக்காக த்ரீ எண்டு சொல்லுறாங்கள்.. த்ரீ கண்ணாடி இல்லாமலே சில இடங்களில பாக்கலாம்.. ஆப்பு வைக்கிறாங்க நமக்கு..

    Reply
  5. கஷ்டம். ஒருவாறு எதிர்பார்த்தது தான்.

    Reply
  6. கிரேக்க ஆசாமிகளுக்கு வேற வேலையே இல்லையா? ஒரு மெடுஸாவை எத்தனை த்டவை கொல்லுவார்கள். எத்தனை பேர் கொல்வார்கள்?

    Reply
  7. // இத்தகவல், நமது கீதையில் உள்ளது. //

    //(நம்ம மஹாபாரதம் நினைவுக்கு வரவில்லை?)//

    கருந்தேள்,

    நம்முடைய ராமாயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த சம்பவங்கள் பல கிரேக்க இதிகாசங்களில் அப்படியே காணப்படும். பல வருடங்களுக்கு முன்பு (அப்போது நான் இன்னும் சின்னப்பைய்யன்) நண்பர்களுடன் பிராட் பிட் நடித்த ட்ராய் படத்தினை பார்த்தோம். நண்பர்கள் அனைவருக்கும் நான் “இது ராமாயணம், இது மகாபாரதம்” என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் நண்பர்கள் கடுபுற்று, இதுக்கு நாம டிவியில பாது இருக்கலாம், தியேட்டர்ல எதுக்கு என்று சண்டை போட்டனர்.

    இது மட்டுமல்ல, நம்முடைய ஐம்பெரும் காவியங்களிலும் கிரேக்க இதிகாச தழுவல் இருக்கும், குறிப்பாக மணிமேகலை.

    Reply
  8. மற்றபடி, ராம நாராயணனின் தமிழாக்க படத்தினை ஆங்கிலத்தில் பார்த்து தேச விரோத செயலில் ஈடுபட்ட கருந்தேள் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

    Reply
  9. தலை…இங்கயும் அதே கொடுமை தான்…
    FRIDAY NIGHT பையா பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகி,
    SATURDAY மார்னிங் ஷோ, இந்த படத்த பார்த்தேன்…ரெண்டு படமுமே வெறுத்துடுச்சு..!!!
    (நமக்கு கிரேக்க வரலாறு வேற தெரியாதா, ரொம்ப தெளிவா இருந்துச்சு..!!!!)

    Reply
  10. நண்பரே,

    பகவத் கீதை, ஆன்மீகம், கிரேக்க புராணம், திருமண வாழ்வில் இணைந்த சில நாட்களில் உங்கள் பதிவில்தான் எவ்வளவு மாற்றம். நேற்றுத்தான் இங்கு வெளியாகி இருக்கிறது. நண்பர் ஒருவர் ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பதால் இதனை தவிர்த்துவிட்டு வேறு ஒரு படத்திற்கு சென்றிருந்தேன் ஆனால் அந்தப் படம் செம ஆப்பு வைத்து விட்டது. நீங்கள் வாங்கியிருக்கும் கிரேக்க கடவுளர்களின் அறிமுகம் சிறப்பாக இருக்கிறது. நன்மை பயக்கும் பகிர்வு.

    Reply
  11. அஹா… தலைவரே இன்று காலை தான் நாளை மறு நாள் காலை இந்தப் படத்தைப் பார்க்க புக் செய்தேன். போச்சா…? பெர்ஸீ ஜாக்சன்லயும் இதையே தான சொல்லி வெறுப்பேத்துனானுவ… ம் ம் ம் என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே…

    Reply
  12. நல்லவேளை தல ஆன்லைன்ல ரிலிஸ்ஆயிடுச்சு…பார்க்க முன்னாடி இதைபடிக்கலாம்னு நினைச்சேன்… நல்லவேளை தல க்ரேட் எஸ்கேப்பு…

    Reply
  13. @ இராமசாமி கண்ணன் – அட எல்லாம் ஒரு பொதுநலம் தான் பாஸு . . ஹீ ஹீ . . நைட்டு கண்ணுமுழிக்குறது எல்லாம் படு சாதாரணம் . . இல்லேன்னா படங்கள் பாக்குறது எப்போ ? 🙂

    @ பாலா – ஆஹா . . கல்யாணம் பண்னாலும் பண்ணேன் . . ஓட்டுறதுக்கு நான் போணியாயிட்டேன் . 🙂 அந்த வெலகி நின்னு வேடிக்க பாக்குறத இனி மேல் ஃபுல் ஸ்விங்ல பண்ணப்போறேன் . . 🙂 நீங்க ப்ராஜெக்ட கவனிங்க மொதல்ல. . ஃப்ரீயானதும் பேசலாம் தல . .

    @ அனானி – 3டி ல ஒண்ணும் தெரியல பாஸு . . ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் ட்ரைலர் பார்த்தது தான் மிச்சம் . . அது பட்டைய கிளப்பிருச்சு . .!!

    @ பப்பு – அப்புடிப் புடிச்சீங்க பாயிண்ட்ட . .மெடுஸா பாவம் . .அளுதுரும் 🙂

    @ விஸ்வா – அட !! நானும் இதே போல் பசங்களிடம் அதே ட்ராயின்போது விவாதித்ததுண்டு. . (ஆனால் இதில் ஆச்சரியம் எதுவுமில்லை . . நாம் தான் க்ளோன் காப்பிகள் போலவே சிந்திக்கிறோமே . . ) . . அதே மிகச்சிறிய வயதில் தான் 🙂 . . தெரியாம இந்தப் படத்துக்குப் போயிட்டேன் . . 🙁

    @ கார்த்திகேயன் – நண்பா . . லைஃப் நல்லா போவுது . . இன்னும் லீவ்ல தான் இருக்கேன் . . ஆனா மண்டே ஆபீஸ் போகணும்னு நினைச்சாலே ஆயிரம் தடவ க்ளாஷ் ஆஃப் த டைட்டன்ஸ் பார்த்த மாதிரி ஒரு எஃபக்ட் வருது 🙁

    @ சிவன் – ஐய்யா ஜாலி !! நமக்கு ஒரு கம்பெனி கிடைச்சாச்சி . . !!! 🙂 சேம் பின்ச் !!

    @ காதலரே – இதெல்லாம் நான் மெல்ல மெல்ல சாமியார் ஆவதன் அடையாளங்கள் . . சீக்கிரமே உங்களுக்குப் போட்டி ஆசிரமம் தயார் . . குஜிலிகளும் தான் . . 🙂

    @ அண்ணாமலையான் – கலக்கிருவோம் தல.. உங்க ஆசிகளுடன் 🙂

    @ ஆளவந்தான் (பின்ன. . கடவுள் பாதி மிருகம் பாதி அவரு தானே) – அடப்பாவிகளா . . நாந்தேன் உங்க கினி பிக்கா? எல்லாம் என் நேரக்கொடும 🙁

    @ பேபி ஆனந்தன் – ஐய்யா . . நமக்கு ரெண்டாவது கம்பெனியும் ரெடி !! பாருங்க பாருங்க பார்த்துக்கினே இருங்க !! 🙂

    @ நாஞ்சில் பிரதாப் – ஆன்லைன்ல ஓட்டி ஓட்டி பாருங்க பாஸு . . இல்லேன்னா நொந்துருவீங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க !! -)

    Reply

Join the conversation