Cobra Verde (1987) – German

by Karundhel Rajesh May 9, 2010   world cinema

இந்த உலகின் தலைசிறந்த இயக்குநர்கள், ஹாலிவுட்டில் இருப்பதாக ஒரு பொதுவான கருத்து உண்டு. கேட்டால், ஸ்பீல்பெர்க், ஃபார்ஸ்டர், ஸ்கார்ஸஸி, ஸெமகிஸ் என்ற ஒரு பெரிய பட்டியல் வரும். இவர்கள் அனைவரும் நல்ல இயக்குநர்களாக இருப்பினும், உலகின் தலைசிறந்த இயக்குநர்கள் அல்லர். உலக சினிமாக்களுடன் ஒப்பிடும்போது, ஹாலிவுட் இயக்குநர்கள் இயக்கிய தரமான படங்கள், விரல் விட்டு எண்ணும்படிதான் இருக்கும்.

அப்படிப்பட்ட தலைசிறந்த உலக இயக்குநர் ஒருவரைப்பற்றியும், அவருக்கும் அவரது படங்களில் இடம்பெற்ற அட்டகாசமான நடிகர் ஒருவருக்கும் இடையே இருந்த உறவு பற்றித்தான் இன்றைய பதிவு. அப்படியே, இந்த ஜோடியின் கடைசிப்படமான ‘கோப்ரா வெர்டி’ என்ற படத்தைப் பற்றியும் பார்த்து விடலாம்.

வெர்னர் ஹெர்ஸாக்

இந்தப் பெயர், உலக சினிமா ரசிகர்கள் காதில் தேனாகப் பாயும் ஒரு பெயர். இவரது ராணுவ ஒழுங்கும், கொண்டாட்டமான மனநிலையும் உலகப்பிரசித்தம்.

வெர்னர் ஹெர்ஸாக்கை நமக்கு அறிமுகப்படுத்தியது , நமது சாரு. அவரது ‘சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்’ புத்தகத்தில் இடம்பெறும் சில கட்டுரைகளில், ஹெர்ஸாக்கைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். மட்டுமல்லாது, திரைப்படங்கள் குறித்த அவரது பல கட்டுரைகளில் தவறாமல் இடம்பெறும் ஒரு பெயர், ஹெர்ஸாக்.

எந்த செயற்கைத் தன்மையும் இல்லாது, உள்ளதை உள்ளபடி படம்பிடிக்கும் திறமை கைவரப்பெற்ற ஒரு இயக்குநர் இவர். ஜெர்மனியில் பிறந்தவர். இன்றும் சுறுசுறுப்பாகப் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். நமது ஹாலிவுட் பாலா, தனது வலைப்பூவைத் தொடங்கி, எழுதிய முதல் பதிவே, ஹெர்ஸாகின் ‘ரெஸ்க்யூ டான்’ என்ற படத்தைப் பற்றித்தான் ? .

ஹெர்ஸாக் ஒருமுறை கூறினார் – ‘திரைப்படங்கள், பண்டிதர்களுடைய கலை அல்லவே அல்ல; மாறாக, அவை, படிப்பறிவில்லாத எளியவர்களின் கலையாகும்’.

படங்கள் எடுக்கையில், இவரது செய்நேர்த்தி உலகப்பிரசித்தம். அதுபோலவே, வாழ்க்கையை, உணர்ச்சிகளின் கலவையாக வாழும் ஒரு மனிதர். ஒரு உதாரணம் (அலைந்து திரிபவனின் அழகியலிலிருந்து): எரால் மாரிஸ், ஒரு புகழ்பெற்ற இயக்குநர். ஒரு முறை, அவரது ஒரு படம் தள்ளிக்கொண்டே போனதால், ‘மாரிஸ் திட்டமிட்டபடி இப்படத்தை எடுத்துவிட்டால், எனது ஷூவை சமைத்துத் தின்கிறேன்’ என்று சவால் விட்டார் ஹெர்ஸாக். இதனால் உத்வேகமடைந்த மாரிஸ், படத்தை எடுத்து முடித்து விட்டார் (கேட்ஸ் ஆஃப் ஹெவன்). அந்த நேரத்தில்,ஹெர்ஸாக், தனது ஷூவை சமைத்து, பலர் முன்னிலையில் சாப்பிட்டார். இது ஒரு டாக்குமெண்டரியாகவும் வந்துள்ளது (Verner Herzog eats his own shoes).

இப்படிப்பட்ட ஹெர்ஸாக், தன்னை அப்படியே உரித்துவைத்த ஒரு மனிதரைச் சந்தித்தால் என்ன ஆகும்? அடிதடி தான் ! 1972ல், தனது படத்தில் நடிக்க, க்ளாஸ் கின்ஸ்கி என்ற ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்தார் ஹெர்ஸாக்.

க்ளாஸ் கின்ஸ்கி
எப்படி ஹாலிவுட் இயக்குநர்களைப் பற்றி, உலகின் சிறந்த இயக்குநர்கள் என்ற கூற்று உள்ளதோ, அப்படியே ஹாலிவுட் நடிகர்களைப் பற்றியும் ஒரு கூற்று உண்டு. உலகின் தலைசிறந்த நடிகர்களும் ஹாலிவுட்டில் தான் இருப்பதாக. ஆனால், க்ளாஸ் கின்ஸ்கியின் நடிப்பை ஒரு முறை பார்த்துவிட்டால், அந்தக் கூற்று முற்றிலும் அழிந்து போகும். அப்படிப்பட்ட ஒரு மிகச்சிறந்த நடிகர் இந்தக் க்ளாஸ் கின்ஸ்கி.

இவரும் ஒரு ஜெர்மானிய நடிகர். பின்னாட்களில் ஹாலிவுட்டிலும் நடித்தார் (டாக்டர் ஸிவாகோ, ஃபார் அ ஃப்யூ டாலர்ஸ் மோர் – படத்தில் வில்லன் கும்பலைச் சேர்ந்த ஒரு கூனனாக வருவார்). நடிப்பை வாழ்ந்து காட்டிய நடிகர்களில், க்ளாஸ் கின்ஸ்கிக்குத் தான் முதலிடம் என்றே சொல்லலாம். நடிப்பின் உச்சபட்சத் திறமை கொண்டவர். அதே சமயம், யாராலும் கட்டுப்படுத்த முடியாத வெறித்தனமும் உடையவர்.

‘நான் ஒரு காட்டு மிருகத்தைப் போன்றவன் – ஆனால் கூண்டில் பிறந்த ஒரு மிருகத்தை ஒத்திருக்கிறேன்’ – இது, க்ளாஸ் கின்ஸ்கியின் கூற்று. அவருடன் வேலைசெய்த அனைவருமே, இவர் ஒரு ஜீனியஸ் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினர். ஆனால், அதே சமயம், இவர், வெறிபிடித்தவரும் ஆவார் என்றும் சொல்லியிருக்கின்றனர்.

ஒருமுறை, கௌண்ட் ட்ராகுலா (1969) படத்தில் நடிக்கையில், உண்மையான ஜெயிலில் அல்லாது, செட் போட்டுப் படம் பிடித்தமைக்காக இயக்குநரின் மேல் பாய்ந்தார் கின்ஸ்கி. அதற்கு அந்த இயக்குநர் (ஜெஸ் ஃப்ராங்கோ) – ‘உண்மையில் ஜெயிலில் தான் படம் பிடிப்பதாக இருந்தேன்’ ஆனால், உன்னை அங்கிருந்து வெளியே விடமாட்டார்கள் என்பதால் தான் இந்த செட்’ என்று பதில் அளித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் தான், வெர்னர் ஹெர்ஸாக் என்ற இயக்குநர், க்ளாஸ் கின்ஸ்கியை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்தார்.

ஹெர்ஸாக் மற்றும் கின்ஸ்கி – இருவர் !

ஆண்டு 1972. ஹெர்ஸாக், தனது ‘Aguirre: The Wrath of God’ படத்தில் நடிக்க, க்ளாஸ் கின்ஸ்கியைத் தேர்வு செய்தார். இப்படம், அமேஸான் காட்டுக்குள், எல் டொராடோ என்ற தங்க நகரத்தைத் தேடிச் சென்று, அங்கேயே மாயமாய் மறைந்து விட்ட ஒரு மனிதனைப் பற்றிய கதை. இப்படத்தில் ஆரம்பித்த ஹெர்ஸாக் – கின்ஸ்கி கூட்டணி, மொத்தம் ஐந்து படங்களில் நீடித்தது. இச்சமயத்தில், க்ளாஸ் கின்ஸ்கியைப் பற்றிய ஹெர்ஸாக்கின் கருத்தைக் கேளுங்கள்.

’மார்லன் ப்ராண்டோவைப் போன்ற நடிகர்கள், க்ளாஸ் கின்ஸ்கியுடன் ஒப்பிடும்போது குழந்தைகள். முழுக்க முழுக்க வெறியுடன், கொஞ்சம்கூட நம்பவே முடியாத ஒரு நடிப்புத்திறன் அவருக்குள் உள்ளது. இந்த மனிதனுக்குள் ஏதோ ஒன்று கோபத்துடன் துடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நேசித்தாலும், ஒருவரையொருவர் அதே அளவு வெறுத்தோம்; மரியாதை செலுத்தினோம்; ஒருவரையொருவர் கொல்வதற்காகப் பல திட்டங்களை வகுத்தோம்’

க்ளாஸ் கின்ஸ்கி ஹெர்ஸாக்கைப் பற்றிச் சொன்னதோ – ‘இந்தக் கொலைகார ஹெர்ஸாக்கை நான் முழுமனதோடு வெறுக்கிறேன். பெரிய சிவப்பு எறும்புகள், ஹெர்ஸாகின் பொய்மையான கண்களில் சிறுநீர் கழிக்கட்டும்; அவரது விரைகளைத் தின்னட்டும்; அவரது ஆசனவாயைத் துளைக்கட்டும்; அவரது குடல்களை விழுங்கட்டும்’.

இப்படிப்பட்ட இரண்டு மனிதர்கள், ஐந்து படங்களில் பணியாற்றியது, அவர்களது தொழில்நேர்த்தியையே காட்டுகிறது.

உலகின் தலைசிறந்த நடிகரான க்ளாஸ் கின்ஸ்கி, தனது 65ம் வயதில், 1991ல் தூக்கத்திலேயே மரணமடைந்தார்.

கோப்ரா வெர்டி: ஹெர்ஸாக் – கின்ஸ்கி கூட்டணியின் இறுதிப்படம்

இந்த இருவர் கூட்டணி, கடைசியாக நடித்த படமே கோப்ரா வெர்டி. 1987ல் வெளிவந்த படம்.

கோப்ரா வெர்டி என்பவன், ஒரு ரௌடி. மக்களை பயமுறுத்தி வைத்திருப்பவன். அவன், ஒரு கரும்புத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகிறான். அந்த முதலாளியின் மூன்று பெண்களையும் அவன் கர்ப்பமாகி விடுவதால், அதற்குத் தண்டனையாக, வஞ்சகமாக, அடிமை வியாபாரத்தை மறுபடியும் ஆஃப்ரிக்காவுடன் தொடங்குவதற்காக, மேற்கு ஆஃப்ரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அந்த இடத்தின் மன்னனோ, இப்படி வந்தவர்களை உயிருடன் விட்டுவைப்பதே இல்லை. இது தெரிந்தும், அங்கே செல்லச் சம்மதிக்கிறான் கோப்ரா வெர்டி.

டஹோமி என்ற அந்த நாட்டில், எப்படியோ அந்த மன்னனைச் சம்மதிக்க வைக்க முடிகிறது கோப்ரா வெர்டியால். துப்பாக்கிகளுக்குப் பதில் அடிமைகள். ஆஃப்ரிக்காவுக்கும் ப்ரசிலுக்கும் அடிமை வியாபாரம் மறுபடி தொடங்குகிறது.

சிறிது நாட்களில், கொலைகார மன்னனால் சிறைப்படுத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்படுகிறான் கோப்ரா வெர்டி. ஆனால், ஆட்சியமைக்க விரும்பும் மன்னனின் மருமகனால் தப்புவிக்கப்பட்டு, அவனுக்கு உதவி, அவனை ஆட்சியில் அமர்த்துகிறான் கோப்ரா வெர்டி. மன்னன் இறக்கிறான்.

ஆனால், இந்த இடைவெளியில், போர்ச்சுக்கீசியர்கள் அடிமை வியாபாரத்தைத் தடைசெய்து, அவனது சொத்துக்களைப் பறிமுதல் செய்துவிடுகிறார்கள். ஆங்கில அரசும் அவனது தலைக்கு ஒரு விலை வைக்கிறது. இருந்தாலும், தன்னால் ஒரு மாற்றம் நிகழ்ந்ததை எண்ணி அமைதியுறும் கோப்ரா வெர்டி, கடைசி முயற்சியாக, தப்பிக்க எண்ணி, ஒரு பெரும் படகைத் தனியொருவனாகக் கடலுக்கு இழுத்துச் செல்ல முயல்கிறான். அந்த முயற்சி பலிக்காமல், கடலிலேயே சோர்ந்து விழுகிறான். ஒரு காலில்லாத சிறுவன் நண்டைப் போல் ஓடும் காட்சியுடன், படம் முடிகிறது.

இப்படத்தின் பல காட்சிகளில், க்ளாஸ் கின்ஸ்கியின் நடிப்பின் வீச்சைப் பார்க்க முடியும். குறிப்பாக, இப்படம் முழுவதுமே வெளிப்படும் அவரது கம்பீரமான நடை. இறுதிக் காட்சிகளில், அவரது வெறித்தனமான நடிப்பையும் நாம் பார்க்க இயலும்.

க்ளாஸ் கின்ஸ்கியின் இறப்போடு, உலக சினிமாவின் ஒரு மாபெரும் கூட்டணி முடிவுக்கு வந்தது. ஹெர்ஸாக், தனது மதிப்பிற்குரிய எதிரியை இழந்தார்.

கோப்ரா வெர்டியின் ட்ரெய்லர் இங்கே.

பி.கு – இப்படம் ஒரு சீரியஸ் சினிமா. பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இதில் இருக்காது. எனவே, இந்த அனுபவத்துக்குத் தயாராக இருந்தால் மட்டுமே இப்படத்தைப் பாருங்கள்.

  Comments

30 Comments

  1. ஹா ஹா ஹா, மீ த பஸ்ட். எப்புடி?

    Reply
  2. இந்த படத்தை நானும் பயங்கரவாதியும் சென்று டிவிடி வேட்டையாடும்போது சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு வாங்கினேன். ஆனால் இன்னமும் பார்க்கவில்லை (குவாலிடி எப்படி என்று செக் செய்ததோடு சரி). இனிமேல்தான் பார்க்கவேண்டும்.

    Reply
  3. இந்த இயக்குனரை பற்றி என்னுடைய இயக்குனர்-நண்பர் ஒருவர் கூறிய தகவல் இது: இவர் முதன் முதலில் கேமராவை திருடியே படமெடுக்க ஆரம்பித்தவர்.

    Reply
  4. அண்டவெளியில் எங்காவது சென்று பதிவு போட்டாலும் , பின்னூட்டப்புலி வந்து பின்னூட்டம் போடும் என்பது தெரிந்ததே . . 🙂

    சூப்பர் என்று சொல்ல முடியாது. . இருந்தாலும், இந்த இருவரின் உழைப்புக்காகவே பார்க்கலாம் . . 🙂

    Reply
  5. //இவர் முதன் முதலில் கேமராவை திருடியே படமெடுக்க ஆரம்பித்தவர்//

    மிகவும் உண்மை. அதுபற்றி இவர் சொல்கையில், ‘என்னைப்பொறுத்தவரையில், இது திருட்டு அல்ல. ஒரு கேமராவை வைத்துக்கொள்வதை, எனது பிறப்புரிமையாகவே கருதினேன். அதனால் தான் அப்படி நடந்தது’ என்று சொல்லியுள்ளார். . அது தான் ஹெர்ஸாக் !

    Reply
  6. // இருந்தாலும், இந்த இருவரின் உழைப்புக்காகவே பார்க்கலாம் .//

    நாளைக்காலை மறுபடியும் ஒரு பயணம் – ஒரு வாரம் எஸ்கேப். வந்தவுடன் பார்த்து விட முயல்கிறேன். (அதுவரை டாடா போட்டன் பிளஸ் துணை)

    Reply
  7. //என்னைப்பொறுத்தவரையில், இது திருட்டு அல்ல. ஒரு கேமராவை வைத்துக்கொள்வதை, எனது பிறப்புரிமையாகவே கருதினேன். அதனால் தான் அப்படி நடந்தது’ என்று சொல்லியுள்ளார். . அது தான் ஹெர்ஸாக்//

    என்ன கொடுமை சார் அது? இப்படியே எல்லாரும் சொல்ல ஆரம்பித்தால்?

    Reply
  8. நல்ல அறிமுகம்.. தொடருங்கள்..

    Reply
  9. //என்னைப்பொறுத்தவரையில், இது திருட்டு அல்ல. ஒரு கேமராவை வைத்துக்கொள்வதை, எனது பிறப்புரிமையாகவே கருதினேன். அதனால் தான் அப்படி நடந்தது’ என்று சொல்லியுள்ளார். . அது தான் ஹெர்ஸாக்//

    //என்ன கொடுமை சார் அது? இப்படியே எல்லாரும் சொல்ல ஆரம்பித்தால்?//

    ஹாஹ்ஹா . . எல்லாரும் சொல்லக்கூடாது.. ஹெர்ஸாக் மட்டும் தான் சொல்லலாம் . . 🙂

    @ பேநா மூடி – நன்றி . .

    @ ஜெய் – தொடருவோம் . . 🙂

    Reply
  10. இவரை போல உள்ளதை உள்ளப்படி படம் எடுக்கும் இயக்குனார்கள் எத்தனை பேர்.. எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவர்.
    பதிவுக்கு நன்றி..

    Reply
  11. நண்பரே,

    ஹெர்ஸாக், கின்ஸ்கி இருவர் பற்றிய அருமையான தகவல்களுடன் வந்திருக்கிறது உங்கள் பதிவு. உங்கள் வழியாகவே இவர்களை நான் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. நன்றி.

    ஆனால் கின்ஸ்கி பரமபதம் அடைந்தாலும், தமிழ் நாட்டு ஜார்ஜ் க்ளுனி திரு சுறா அவர்களை வைத்து ஹெர்ஸாக் ஒரு திரைபடத்தை இயக்க வேண்டுமென்பது என் விருப்பமாக உள்ளது.

    எவ்வளவு தொழில் கண்ணியம் இருந்தால், ஒருவர் மீது ஒருவர் வசை பாடிக் கொண்டே ஒரு படைப்பை இணைந்து உருவாக்க முடியும் என்பதற்கு இருவரும் நல்லதொரு சான்று. அருமையான பதிவு.

    Reply
  12. //தமிழ் நாட்டு ஜார்ஜ் க்ளுனி திரு சுறா அவர்களை வைத்து ஹெர்ஸாக் ஒரு திரைபடத்தை இயக்க வேண்டுமென்பது என் விருப்பமாக உள்ளது. //

    என்ன ஒரு கொலைவெறி? அப்போ, சுறா, பார்ட் டூ வருமோ?

    Reply
  13. மிக நல்ல பதிவு… பார்க்கணும் …நேரம் இல்லை …பார்த்துவிட்டு சொல்லுறேன் :))

    //என்ன ஒரு கொலைவெறி? அப்போ, சுறா, பார்ட் டூ வருமோ? //

    அதுக்கான அடுத்தகட்ட trailer தான் காவல்காரன் 😀

    Reply
  14. நண்பரே,

    நிக்கோலாஸ் கேஜ் நடித்த Bad Lieutnant: Port of Call New Orleans படத்தை இயக்கியவர் கூட இதே இயக்குனர்தான் என்பதை மறந்தே போய்விட்டேன் 🙂 இப்போது புரிகிறது நண்பரே ஏன் அந்தப் படம் அவ்வளவு வித்தியாசமாக இருந்தது என.

    விஸ்வா, சுறா Triology க்கு தயாராகுங்கள் :))

    Reply
  15. @ அஷ்வின் – மிக்க மகிழ்ச்சி . . 🙂 நன்றி

    @ காதலரே – காவல்காரன் படத்தை நினைத்து, உலகத்தின் அத்தனை மிருகங்களும் பாக்டீரியாக்களும் வைரஸ்களும் கூட நடுநடுங்கிக்கொண்டிருப்பதாகப் பேச்சு . .:-) அந்தப் படம் எப்பொழுது வருமோ . . 🙁

    சுறா ட்ரையாலஜி வந்தது என்றால், நாட்டை விட்டு நாம் ஓடவேண்டியது தான் 🙂 . .

    @ mahee – உங்கள் கருத்துக்கு நன்றி . . நைஸாகக் காவல்காரனை அறிமுகம் வேறு செய்துவிட்டீர்கள் . . அப்படத்துக்கு முதல் ஷோ போய், கதையையும் எழுதக் கடவது . .

    Reply
  16. Anonymous

    அகிரா குரோசேவ என்று ஒருவர் உண்டு அவரை வேட இவர் மேலானவர் என்று கூற முடியாது

    Reply
  17. // அப்படத்துக்கு முதல் ஷோ போய், கதையையும் எழுதக் கடவது . //

    எதாவது கோபம்/பகை இருந்தா பேசி தீத்திடலாம் … அதுக்காக என்னைய கொல்லவேண்டும் என்று என்னப்பிடாது…

    Reply
  18. @ அனானி – குரஸவா வேறு விதம். இவர் வேறு விதம். உலக சினிமாவில் இருவைன் பங்கும் குறிப்பிடத்தக்கது. . ஆனால், குரஸவா, சற்று மசாலா அயிட்டங்களைப் படங்களில் நுழைப்பார். . இவர் மிக இயற்கையான இயக்குநர். . இது தான் என்னுடைய கருத்து. . நன்றி அனானி . .

    @ Mahee – பாவங்க விஜய் . . ஏன் காவல்காரன் நல்லா இருக்கக் கூடாதா? நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் . . காவல்காரன் தேசிய விருதும், தங்கச்சிங்கம், தங்கக்கரடி ஆகிய சர்வதேச விருதுகளையும் வாங்கிக் குவிக்கப் போகின்றது . . 🙂

    Reply
  19. //காவல்காரன் தேசிய விருதும், தங்கச்சிங்கம், தங்கக்கரடி//

    நம்பிக்கை இருக்கலாம் … இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியல…!!
    என்னைக்குமே நம்ம நண்பர்களுக்கு ஒரு நல்ல பழக்கம் … தான் செத்தாலும் … கூடவான்னு கூட்டிக்கிடே போவணுக… இதில சுறா VIP show ல பாக்கணும் எண்டு ஒத்தக்கலுல நிண்டு …சாதா ticket விட 3 மடங்கு காசுகுடுத்து பாக்குராணுக…

    Reply
  20. நண்பா
    இதே இயக்குனர் எடுத்த ரெஸ்க்யூடான் பார்த்திருக்கிறேன்,அது என்னை ஏனோ கவரவில்லை.அதே வகைப்படங்களான டீர்ஹண்டர்,ப்ளாட்டூன்,ராம்போ-4 வகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்துள்ளேன்.இவர் ஏன் க்ரிஸ்டியன் பேலை வேலை வாங்கவில்லை?
    இது என் கருத்து தான்.தவிர நடிப்பில் ஆகச்சிறந்தது என ஒன்றை எதை அளவுகோலாக வைத்து தீர்மானைப்பது?என்னை பொறுத்தவரை அந்த கதாபாத்திரமாகவே மாறுவது என்றே நினைத்து வந்திருக்கிறேன்.
    ஜெர்மானியர்களின் படங்களை தேடி பார்க்க வேண்டும் நண்பா.

    Reply
  21. super !! rajesh !!

    Reply
  22. வணக்கம்
    நண்பர்களே
    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்
    http://www.thalaivan.com

    Reply
  23. @ Mahee – என்ன கொடும இது !! போங்க போங்க போயி பாருங்க . . 🙂

    @ கார்த்திகேயன் – ஹெர்ஸாக், இப்ப எடுக்குற படங்கள்ல அந்த பழைய ‘ஸ்டிங்’ இருக்குறதில்ல. . அவரு அவுட் ஆஃப் ஃபார்ம் ஆயிட்டாரு . . பழைய படங்கள் தான் சூப்பர் . .

    ஆமாம். நடிப்பில் ஆகச்சிறந்தது, அந்தக் கதாபாத்திரமாகவே மாறுவது தான் . . ஆனால், அந்த நேரத்தில் ஓவர் ஆக்டிங் பண்ணாமல், இயற்கையான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். . வேண்டுமென்றே , நமது நடிகர்கள் போல் மிகை நடிப்பை வெளிப்படுத்தினால், அது ஃப்ளாப் தான் . . 🙂

    @ பூபா – நன்றி . . 🙂 எப்புடி போவுது பொளப்பு?

    @ தலைவன் – போட்ரலாங்ணா . .

    Reply
  24. போன வாரம் தான் ஜெர்மன் இயக்குனரான “விம் வாண்டர்சின் ” “பாரிஸ், டெக்சஸ்” பார்த்தேன். இன்னும் பிரமிப்பே அகலவில்லை. ஒளிப்பதிவும் இசையும் மற்றும் அமெரிக்காவை காட்டிய விதமும் அற்புதம். ஹெர்சாக் பற்றி சாரு ஆனந்த விகடனில் எழுதிய காலத்திலேயே குறிப்பிடிருந்தார். ஏனோ இன்னும் ஒரு படம் கூட பார்கவில்லை, விரைவில் இந்த படத்தை பார்க்கவேண்டும்.

    Reply
  25. Anonymous

    very nice flim…

    Reply
  26. expecting more !!!!!! good job

    Reply
  27. நண்பரே நீங்கள் குறிப்பிட்டுள்ள கிளாஸ் கின்ஸ்கி நடிகரை என்ற VAMPIRE IN VENICE திரைப்படத்தில் பார்த்ததாக ஞாபகம் அதுவும் 1990 ஆம் வருடம் நன்றாக என் நினைவில் உள்ளது அந்த படத்தில் இவரை பார்த்தாலே எனக்கு குலை நடுங்கும் .அந்த படத்தின் ஹீரோஇன் அவ்வளவு அழகு முடிந்தால் உறுதிபடுத்தவும்.நன்றி

    Reply
  28. @ மீனாட்சி சுந்தரம், அனானி மற்றும் ஷிவம் – உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி . .தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும். .

    @ அரன் – பாயிண்ட்டைப் பிடித்து விட்டீர்கள்!! அது க்ளாஸ் கின்ஸ்கியே தான் !! சூப்பர்..

    அப்படியே, முடிந்தால், ‘Nosferatu the Vampyre’ என்ற படத்தையும் பாருங்கள். அது, கின்ஸ்கி – ஹெர்ஸாக் காம்பினேஷனின் மற்றொரு க்ளாஸிக் . . உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. .

    Reply
  29. Friend, I didn’t find your email on your website, So I’m leaving this message, Only Very few, in Tamil blog(sphere) wrote in detail about World Cinema. I am great fan of your way — ( of writing ), So By default I am a great fan of Werner Herzog, did you wrote anything of his movie named ‘Rescue Dawn’, If so, I’m desperately eager to read your opinion on that movie. If you already wrote one, Please post the link or Please write down one if you don’t only If you have had some time to spare & it’s an friendly request. 🙂 🙂 🙂

    Reply

Join the conversation