கோவை, அதன் சினிமா தியேட்டர்கள் & ஒரு சிறுவன் (நானேதான்)
முன்குறிப்பு – 2013ல் ஒரு பிரபல பத்திரிகைக்காக எழுதிய கட்டுரை இது. கோவையில் நான் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்த அனுபவங்கள். ஆனால் அப்பத்திரிகையில் கட்டுரை வெளியாகாமல், சில வாரங்கள் முன்னர் ‘அம்ருதா’ இதழில் வெளியானது. எனவே, அதன்பின் இங்கே வெளியிடுகிறேன். மூன்று வருடங்கள் முன்னர் எழுதியிருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளில் இது ஒன்று. எழுதத் தூண்டிய உமா ஷக்திக்கு என் நன்றிகள்.
எனக்கு விபரம் தெரிந்து, கோவையின் சென்ட்ரல் தியேட்டரில்தான் எனது முதல் திரைப்பட அனுபவம். ஸ்பீல்பெர்க் எடுத்திருந்த ‘Jaws’ திரைப்படம் அது. படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே நான் வீறிட்டு அழுததால், என் தந்தை அவசர அவசரமாக முட்டை போண்டா தின்றுகொண்டு (யெஸ். செண்ட்ரலின் முட்டை போண்டா மிகவும் பிரபலம்) படத்தை ஜாலியாக பார்த்துக்கொண்டிருந்தவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டு, என்னை வெளியே அழைத்துவந்துவிட்டார்.
ஆனால், இதனாலெல்லாம் அவரது திரைப்பட ஆர்வம் – அதாவது, மகனுக்கு பல புதிய திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் ஆர்வம் என்று அறிக – குறைந்ததுபோல் தெரியவில்லை. காரணம், மிக விரைவிலேயே என்னையும், எனது தாய்மாமாவின் மகளையும் (என்னை விட நான்கைந்து மாதங்கள இளையவள்) கூட்டிக்கொண்டு தாய்மாமாவும் (நிர் 1) தந்தையும் மறுபடியும் ஒரு திரைப்படத்துக்கு என்னை அழைத்துச் சென்றனர். அந்தத் திரைப்படம் – ராஜபார்வை. எனக்கு அது சினிமா என்ற விஷயம் தெரிந்திருந்தது. மறுபடியும் ஒரு பெரிய வெள்ளை ’சுவற்றில்’ பிரம்மாண்டமான மிருகம் ஒன்று வரப்போகிறது என்று உறுதியாகவே முடிவுசெய்துவிட்டேன். காரணம் எனது ஜாஸ் அனுபவம். அது 1981. எனது இரண்டாவது வயது. அவளுக்கோ ஒண்ணே முக்காலோ என்னமோ. குழந்தைகள் பாஷையில் அவளை எச்சரித்திருந்திருப்பேன் என்று தோன்றுகிறது. அவள் கேட்கவில்லை. எனவே, இம்முறை திரையரங்கில் நான் சத்தமே போடாமல் அமர்ந்திருக்க, கமலின் க்ளோஸப்பை பார்த்ததும் பீதியடைந்து அவள் வீறிட்டதில் மறுபடியும் படம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே வெளியேறும் சாங்கியம் நடந்தது.
சில வாரங்களுக்குப் பின் – எனது தந்தையின் கடைசி சகோதரர் அப்போது பேச்சிலராக இருந்து, ஜாலியாக கோவையை சுற்றிவந்த காலம் அது – வீரபாண்டிய கட்டபொம்மன் மறுபடியும் சிறிய தியேட்டர் ஒன்றில் (டிலைட்) ஓடிக்கொண்டிருந்தது. வீட்டில் போரடித்ததால் அந்தப் படத்துக்குப் போகலாம் என்று அவர் முடிவுசெய்தார். ஆனால் சும்மா இருக்காமல், என் தந்தையிடம் அதை சொல்லியதால், மகனுக்கு எப்படியும் ஒரு முழுத்திரைப்படத்தையும் ஓட்டிக்காட்டிவிடுவது என்ற தனது லட்சிய முடிவில் இருந்து பின்வாங்காத அவர், என்னையும் சித்தப்பாவுடன் அனுப்பிவைத்துவிட்டார்.
இம்முறை எப்படியும் கதறக்கூடாது என்று கூர்த்த கவனத்துடன் திரையையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, சிவாஜியின் கர்ஜனை க்ளோஸப்பில் வந்ததுமே கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிய ஆரம்பித்தது. சந்தோஷத்தில் அல்ல. பயத்தில். பக்கத்தில் என் சித்தப்பா விசில் அடிப்பது கேட்டது. அந்த நொடியே நான் போட்ட காட்டுக்கூச்சல் ப்ரொஜெக்டர் ஆப்பரேட்டருக்கு கேட்டிருந்தால் அவசியம் படத்தை நிறுத்தியிருப்பார். ஆனால் அது நடக்கவில்லை. பதிலாக என் சித்தப்பா இம்முறை திரையரங்கில் இருந்து புறமுதுகு இடவேண்டி வந்தது. சித்தப்பா என்னைத் திட்டியது இன்றும் நினைவிருக்கிறது. அது எனது ஹேட்ரிக்.
இதன்பின் பிறரை நம்பிப் பிரயோஜனமில்லை என்ற எண்ணம் என் தந்தைக்கு உறுதிப்பட்டது. எனவே, மறுபடியும் தானே களத்தில் இறங்க முடிவுசெய்தார். அப்போது தமிழ்நாடெங்கும் பட்டிதொட்டியிலெல்லாம் மிகப்பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த படம் ஒன்றுக்கு என்னை அழைத்துச்சென்றார். படம் – த ஷாவோலின் டெம்பிள். ஜெட்லியின் முதல் படம். தியேட்டர் – மாருதி. மாருதியின் ராசியோ என்னமோ, எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது. அதில் வரும் காட்சிகள் இப்போதுகூட மிகவும் நன்றாக நினைவில் இருக்கின்றன. படத்தின் வில்லன், தன்னை நோக்கி வரும் தோட்டாக்களை (அல்லது அம்புகளை) டக்கென்று கையில் பிடித்து மறுபடியும் வீசி எறிய, அவை அவற்றை செலுத்தியவர்கள் மீதே பாய்ந்து ஒரே நொடியில் அவர்கள் இறப்பதுபோன்ற ஒரு காட்சி. எனக்கு அப்போது விசிலடிக்கத் தெரிந்திருந்தால் ஆடியன்ஸின் காதுகளை பதம் பார்த்திருப்பேன். ஆனால் அது முடியவில்லை என்பதால் பேசாமல் இருந்தேன் (கீச்சென்று கத்தியிருந்தால், நான் பயந்துவிட்டேன் என்று எண்ணி உடனடியாக தியேட்டரை விட்டு வெளியே அழைத்துவந்திருப்பார் என் தந்தை).
என் திரைப்பட சரித்திரம் ஷாவோலின் டெம்பிள் படத்திலிருந்தே தொடங்கியது.
இதன்பின்னர் ரேம்போ 2 செண்ட்ரலில் வெளியானது. மறுநாள் அந்தப் படத்துக்குப் போகலாம் என்று எனக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார் தந்தை. அதனால், ஒரு துண்டுத்தாளில் ‘Rambo 2’ என்று கஷ்டப்பட்டு சரியாக எழுதி, அதை என் கையிலேயே வைத்துக்கொண்டு தூங்கினேன். காரணம், திரையரங்குகள் என்னை வசீகரிக்க ஆரம்பித்ததன் அடையாளம். அந்தப் படத்தை இப்போது வெளியிட்டிருந்தால் அது 18+ படம் என்று (வன்முறையால்தான்) சொல்லி, சிறுவர்களை உள்ளேயே விட்டிருக்க மாட்டார்கள். எண்பதுகளின் தொடக்கத்தில் அந்தப் பிரச்னை இல்லை (எண்பதுகளின் இறுதியிலும் அது இல்லை. அதைப்பற்றிப் பிறகு).
எண்பதுகளின் துவக்கத்தில் கோவையில் பல திரையரங்குகள் இருந்தன. ஆங்கிலப்படம் என்றால், அவசியம் செண்ட்ரலிலோ அல்லது மாருதியிலோதான் வெளிவரும். இதைத்தவிர அர்ச்சனா தர்சனா (பாபா காம்ப்ளெக்ஸ்), ராகம் தானம் (தாளம் அல்ல) பல்லவி அனுபல்லவி (KG காம்ப்ளக்ஸ்), கங்கா யமுனா காவேரி (கற்பகம் காம்ப்ளக்ஸ்) ஆகிய தியேட்டர்கள் மிகவும் பிரபலம். அப்ஸரா என்ற திரையரங்கும் பிரபலம் (தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அது மிகவும் பிரசித்தி அடைந்தது. காரணம்? தொடர்ந்து திரையிடப்பட்ட அடல்ட்ஸ் ஒன்லி படங்களே). இவர்களைத்தவிர, சாந்தி (ரயில்வே நிலையத்தின் எதிரில் இருக்கும்), கவிதா (காந்திபுரம் பஸ் நிலையத்தின் மிக அருகில் இருக்கும்), அம்பிகா அம்பாலிகா (ராம் நகர்), GP கீதம்+GP ப்ரீத்தம் (காந்திபுரம்) ஆகியவைகளும் பிரபலம்.
ஷாவோலின் டெம்பிள் படத்துக்குப்பிறகு ஓரிரு ஆண்டுகளில் கமல்ஹாஸனின் ‘விக்ரம்’ திரைப்படம் வெளிவந்தது. கையில் வால்த்தர் பிபிகே போன்ற ஒரு துப்பாக்கியை வைத்திருப்பதைப் போன்ற கமலின் பிரம்மாண்டமான ஒரு கட் அவுட். மத்தியப் பேருந்து நிலையத்தின் ஹைலைட்டான அப்ஸரா தியேட்டரின் முகப்பில் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பக்கம் போகும் எவராலும் அந்தக் கட் அவுட்டைப் பார்க்காமல் இருக்கவே முடியாது. அட்டகாசமான ஒரு கட் அவுட் அது.
அத்தகைய கட் அவுட்டின் கீழ், வி க் ர ம் என்று கம்ப்யூட்டர் எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கிறது. இத்தகைய ஒரு பிரம்மாண்டமான விஷயம், திரைப்படங்களை ரசிக்க ஆரம்பித்திருக்கும் ஒரு சிறுவனின் மனதில் எத்தகைய ஒரு பாதிப்பினை உருவாக்கியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
எனது தாய்மாமா (நிர் 2) அழைத்துச்சென்ற படம் அது. படத்துக்குப் போகும் வழியில் அப்போதைய 100 அடி ரோடு மேம்பாலம் கட்டப்பட்டுக்கொண்டிருந்ததால், வேறு வழியில் சுற்றிவளைத்துச்சென்ற பஸ், ரயில்வே கேட் இறங்கிக்கொண்டிருந்த அந்த கடைசி நிமிடத்தில் சரேலென்று உள்ளே புகுந்து சென்றது இன்னும் நினைவிருக்கிறது. அந்தப் படமும் அப்போது திரையரங்கில் பார்த்த காட்சிகளோடு பசுமையாக நினைவில் நிற்கிறது.
இதன்பின், ஜேம்ஸ் பாண்ட் படமான ‘Man with the Golden Gun’ மறுபடியும் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் ’வேலைக்காரன்’ மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த காலம். அப்போது என் தந்தை, தாய்மாமாவிடம் (நிர் 3) பணம் கொடுத்து என்னை பாண்ட் படத்துக்கு அழைத்துச்செல்லச்சொன்னார். வீட்டை விட்டுக் கிளம்பிய உடனேயே (அவரது சைக்கிளில்), ‘இங்லீஷ் படம் உனக்கு என்னன்னே தெரியாது. பேசாம வேலைக்காரன் போலாம் வா’ என்று என்னை செல்லமாக அவர் மிரட்டினார். அவருக்கு வேலைக்காரன் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் போலும். ஆனால் உடனடியாக என் கண்களில் தளும்பிய கண்ணீரைப் பார்த்து பீதியடைந்து மறுபேச்சு பேசாமல் செண்ட்ரலுக்கு சைக்கிளை அவர் விரட்டினார். அப்போதே ஆங்கிலப் படங்களின் மீதான மோகம் என் மனம் முழுதும் நிரம்பியிருந்தது. படத்தில் வில்லன் ஸ்கேரமேங்கா என்பவனுக்கு மூன்று நிப்பிள்கள் இருக்கும். கையில் ஒரு தங்கத்துப்பாக்கியும் வைத்திருப்பான். ஹாலிவுட்டின் பிறவி ட்ராகுலா க்ரிஸ்டோஃபர் லீ நடித்த பாத்திரம் அது. படத்தில் நீச்சல் காட்சிகளும் உண்டு. திரையரங்கில் நான் பார்த்த முதல் கவர்ச்சிக்காட்சிகளாக அவை இருக்கக்கூடும்.
இதன்பின்னர் ’நாயகன்’. அர்ச்சனா. அந்தப் படத்தின் கதையினுள் என்னால் அந்தச் சமயத்தில் பயணிக்க முடிந்தது. காரணம், அதற்கு சில வருடங்கள் முன்னிருந்தே VCR எங்கள் வீட்டில் வந்திருந்ததே. இதைப்பற்றிப் பிறகு. நாயகன் படத்தில் ’தென்பாண்டி சீமையிலே’ பாடல் திரையரங்கில் பார்க்கையில், அந்தப் படத்தின் இசைத்தட்டில் எனது இரண்டாம் தாய்மாமாவின் கடையில் அந்தப் பாடல்களையெல்லாம் கேட்டது நினைவு வந்தது. இவரது இசைத்தட்டு நூலகத்தில்தான் என் பள்ளி நாட்கள் முழுதுமே கழிந்தன. தமிழ், ஹிந்தி, இங்லீஷ், தமிழின் அட்டகாசமான கிரிஸ்தவப் பாடல்கள் என்று எக்கச்சக்கமான பாடல்கள் எனக்குள் இறங்கின. திரைப்படங்கள் எனக்குப் பிடிக்க ஆரம்பித்ததற்கு இதுவும் காரணம்.
இதற்கு இடையே எங்க வீட்டுப் பிள்ளை (மறு ரிலீஸ் – கென்னடி), ஸ்ரீராகவேந்திரர், சிந்து பைரவி (KG காம்ப்ளக்ஸ்) போன்ற படங்களை எனது அம்மா, பாட்டி, சித்தி ஆகியவர்களோடு சென்று பார்த்த அனுபவங்களும் உண்டு.
இதன்பின் குரு சிஷ்யன். கற்பகம் காம்ப்ளக்ஸில். அந்தத் திரையரங்கின் மாடி, ஒரு பெரிய கோப்பையைப் போன்று இருக்கும். அந்த சமயத்தில் அது ஒரு புதுமையான அமைப்பு. பஸ்ஸில் அந்தப் பக்கம் செல்லும்போதெல்லாம் அந்த மாடியை கவனிப்பது எனது பொழுதுபோக்கு. குரு சிஷ்யன் படத்துக்கு எங்கள் வீட்டின் பொடியர்களை எல்லாம் கும்பலாக அழைத்துச்சென்றவர் எனது முதல் பெரியப்பா. அந்த வருடத்திலேயே ’உன்னால் முடியும் தம்பி’ படத்தையும் பார்த்தேன். என்னை ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு வேறு வழியே இல்லாமல் அழைத்துசென்ற தாய்மாமாதான் (நிர் 3) இந்தப் படத்துக்கும் என்னை அழைத்துச்சென்றார். காரணம், முந்தைய இரவில் எனது இரண்டாம் தாய்மாமாவும் எனது சித்தப்பாவும் இந்தப் படத்துக்கு சென்றிருந்ததே. நான் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததில் என் தந்தை மறுநாள் மாலை இந்தப் படத்துக்கு அழைத்துச்செல்லச்சொல்லி பணமும் தந்துவிட்டார். அந்தப் படத்துக்கும் எனது மாமாவின் சைக்கிளில் கேரியரில் அமர்ந்துசென்ற அனுபவம் இன்னமும் நினைவில் இருக்கிறது.
இந்தச் சமயத்தில் பார்த்த இரண்டு குறிப்பிடத்தகுந்த படங்கள்: டிம் பர்ட்டன் எடுத்த Batman மற்றும் He-Man and the masters of the universe. இரண்டு படங்களையும் செண்ட்ரலில்தான் பார்த்தேன். ஹி மேன் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, சில வரிசைகள் முன்னர் எனது பள்ளித்தோழி சாய்ரா பானுவை அவளது தந்தையுடன் பார்த்தேன். பத்து வயதில் நான் அவளை பார்த்த சம்பவம் இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. மறுநாள் பள்ளியில் இருவரும் ஹி-மேன் பற்றி எங்களுக்கு தெரிந்ததை பேசிக்கொண்டோம். நான்காவது படித்த காலகட்டம். அப்போதெல்லாம் ஒரு பையன் – ஒரு பெண் என்று எங்களை அமர வைப்பார்கள். பக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் வளவள என்று பேசிக்கொண்டே இருப்பேன். எனக்கு முந்தைய வரிசையில் சாய்ரா பானு. அவளிடம் அப்படித்தான் பேச ஆரம்பித்தேன். அதன்பின் ஓரிரு ஆண்டுகளில் வேறு பள்ளிக்கு சென்றுவிட்ட அவளிடம் இன்றுவரை தொடர்பு இல்லை. நேரில் பார்த்தால் ஹி-மேன் பற்றி நினைவிருக்கிறதா என்று கேட்கவேண்டும்.
இதன்பின்னர் அபூர்வ சகோதரர்கள். இந்தச் சமயத்திலெல்லாம் பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது (என் வயது 10). உடன் படித்துக்கொண்டிருந்த (ஆண்) நண்பர்களிடம் திரைப்படங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தது அபூர்வ சகோதரர்கள் படத்தில் இருந்துதான்.
எனது பெரியப்பா பையன் இந்தக் காலகட்டத்தில் டீன் ஏஜில் இருந்தான். அவனது கையாள் நான் தான். ஒருநாள் ராம் நகரின் அம்பிகா –அம்பாலிகாவில் ஒரு திரைப்படத்துக்கு என்னை திடீரென்று அழைத்துச்சென்றான். அந்தப்படம் – T. ராஜேந்தரின் ’சம்சார சங்கீதம்’. அந்தக்காலத்திலேயே அந்தப் படத்தில் அமர முடியவில்லை என்றெல்லாம் பூ சுற்றமாட்டேன். அப்போது அந்தப்படம் பிடித்தே இருந்தது. மேலே சொன்ன படங்கள் எல்லாமே 1989ல் வெளிவந்தன. இதெல்லாம் அப்போதுதான் நடந்தது.
இந்தச் சமயத்தில்தான் ஒரு நகைச்சுவை நடந்தது. Exterminator என்று ஒரு படம். ஆக்ஷன் படம் என்று நினைத்து அந்தப் படத்துக்கு என்னை அழைத்துச்சென்றார் தந்தை. அது ஆக்ஷன் படம்தான். ஆனால் அடல்ட் ஆக்ஷன். டபிள் எக்ஸ் என்று மரியாதையாக தற்போது அழைக்கப்படும் வகையைச் சேர்ந்த படம். உடனேயே ‘தாவணிக்கனவுகள்’ படத்தில் பாக்யராஜ் ஐந்து பைசாவை தரையில் வீசிவிட்டு அதனை அவரது தங்களைகளிடம் கண்டுபிடித்துத் தரச்சொல்வதுபோல் எந்த உபாயமும் அவருக்குத் தோன்றவில்லை. என்னை இழுத்துக்கொண்டு திரையரங்கை விட்டே வெளியேறிவிட்டார். அதுதான் எனது முதல் அடல்ட் பட அனுபவம். முதல் அடல்ட் படத்தையே அப்பாவுடன் சென்று பார்த்த பரம்பரை என்னுடையது. படம் ஓடிய திரையரங்கு – மாருதி. நான் முன்னே அடைப்புக்குறிக்குள் 18+ வயது பற்றிக் குறிப்பிட்டேன் அல்லவா? அது இந்த சம்பவம்தான்.
இந்த சமயத்திலேயே Phantom படம் வெளியாகியிருந்தது. ஆனால் என் அப்பாவும் நானும் சென்றது ஒரு வெள்ளிக்கிழமை. படம் மாறிவிட்டது. நாங்கள் பார்த்த படம் – Romancing the Stone. அதன் க்ளைமேக்ஸில் வரும் முதலைகள் நிரம்பிய ஆறு என் மனதில் பசுமையாக நினைவிருந்தது. இதில் ஒரு அழுத்தமான கிஸ்ஸிங் ஸீனும் உண்டு. கூடவே, ஒரு கில்மா காட்சியும். ஆனால் இந்த சமயத்திலெல்லாம், ஹாலிவுட் முத்தங்கள் எனது திரைப்பட வரலாற்றில் சாதாரண சம்பவங்களாக மாறிப்போயிருந்தன. அப்போது பார்த்த இன்னொரு படம் – King Kong Lives. இதிலும் ஒரு ‘அஜபுஜாக்ஸ்’ காட்சி உண்டு. இதன்பின்னர் வரிசையாக பல படங்கள். Jurassic Park, கமாண்டோ (மறு ரிலீஸ்), True Lies, Cliff Hanger போன்ற அதிரடி ஆக்ஷன் படங்கள். எல்லாமே என் தந்தையுடன்.
தொண்ணூறுகள் துவங்கின. என் திரைப்பட ஆர்வமும் அதன் ஒவ்வொரு வருடங்களிலும் அதிகரித்தது. கலைவாணன் கண்ணதாசன் இயக்கிய ‘வா அருகில் வா’ படத்தை கீதாலயா தியேட்டரில் (காந்திபுரம் பஸ் ஸ்டேண்ட் அருகே) பார்த்தோம். இந்தத் திரையரங்கில் ’13ம் நம்பர் வீடு’ போன்ற சில படங்களையும் பார்த்திருக்கிறேன். நான் தனியாகச் சென்று திரைப்படங்கள் பார்க்கத் துவங்கிய காலம் அது. அப்படிப் பார்த்த முதல் படம் – டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மெண்ட் டே. அட்டகாசமான ஆக்ஷன். அர்ச்சனா தியேட்டரில். இது இன்னும் நினைவிருப்பதன் காரணம், படம் முடிந்து வீடு சென்றதும் யாரையும் காணவில்லை. ஏனெனில் என் சித்தப்பா திருவாரூரில் காலமாகியிருந்தார். அனைவரும் அங்கே சென்றுவிட்டிருந்தனர். இதன்பின்னர் மாருதியில் அதன் முதல் பாகம் வெளியானது. தந்தையுடன் பார்த்தேன். இதற்குப்பின்னர் எந்த ஆங்கிலப்படம் வந்தாலும் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ்ப்படங்களின் மீது ஆர்வம் குறைந்தது. (இப்போதும் அது தொடர்கிறது).
இந்தச் சமயத்தில் திரையரங்குகளில் பார்க்காத முக்கியமான படங்களில் ஒன்று – தளபதி. அந்தச் சமயத்தில் ரஜினி மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. எனக்குப் பன்னிரண்டு வயது. ஏன் அந்தப் படத்துக்குப் போக முடியவில்லை என்று இப்போது யோசித்தால், காரணம் தெரியவில்லை. தமிழ்ப்படங்களை திரையரங்கில் பார்ப்பது மிக அபூர்வம். வெறும் ஆங்கிலப்படங்களாகப் பார்த்துத் தள்ளிக்கொண்டிருந்த காலம். எனக்கு தோதாக, எந்த ஆங்கிலப்படம் வெளிவந்தாலும் அழைத்துச் செல்லும் தந்தையும் இருந்தால் கேட்க வேண்டுமா? வருடத்துக்கு ஓரிரண்டு தமிழ்ப்படங்கள் திரையரங்கில் பார்த்தால் அதிகம். தளபதியை வீசீஆரில் பார்த்தேன்.
அப்போது எங்கள் பெரியப்பா, கோவை ராஜ வீதியில் இருந்த உமா டூல்ஸ் என்ற கடையில் இருந்து வீசீஆர் என்று அழைக்கப்பட்ட வீடியோ ப்ளேயரை வாடகைக்கு எடுத்து வருவார். அனேகமாக வாரம் ஒருமுறை. கூடவே மூன்று படங்களையும் வீடியோ காஸெட்களாக எடுத்துவருவார். தற்போது இருக்கும் திருட்டு டிவிடிக்களுக்கு இணையாக தொண்ணூறுகளில் இருந்த சாதனம் அது. இதன்மூலம்தான் அப்போது வந்திருந்த அத்தனை தமிழ்ப்படங்களையும் சூட்டோடு சூடாக பார்த்தேன். எந்தப்படம் வந்தாலும் அதன்மூலம் அவர் பார்த்துவிடுவார். கூட, வீட்டின் பொடியர்களான நானும், எனது சித்தப்பா பையன்கள் இருவரும், அத்தையின் பெண்கள் இருவரும். கிட்டத்தட்ட ‘இந்தியன்’ படம் வரை அப்படித்தான் தமிழ்ப்படங்களை பார்த்தோம்.
அவ்வப்போது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் திரையரங்குகளில் பார்த்த படங்களில் மைக்கேல் மதன காம ராஜன், கலைஞன், ஜுராஸிக் பார்க் போன்றவை அடங்கும். மைக்கேல் மதன காம ராஜனை ரத்தின சபாபதி புரம் என்ற RS புரத்தில் (கோவையின் MG ரோடாக்கும் இது) இருக்கும் பண்டையகால தியேட்டரான கென்னடியில் பார்த்தேன். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்துவிடும் என்ற நிலையில் இருந்த தியேட்டர் அது. அறுபதுகளில் பிரபல தியேட்டர். இன்றும் அந்த இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம், ‘கென்னடி தியேட்டர்’ என்ற பெயரில் உள்ளது. அந்தத் திரையரங்கில் அதன்பின்னர் வெகு காலம் டபிள் எக்ஸ் படங்கள் ஓடின. ராஜேஷ்குமாரின் வீடு அதை ஒட்டிய லைட் ஹௌஸ் சாலையில் இருந்தது (பின்னர் மருதமலை சாலையில் முல்லை நகர் பக்கம் மாறிவிட்டார்). அந்த வீட்டைத்தேடி அந்தச் சாலையில் பள்ளி நாட்களில் நடந்தது நினைவு வருகிறது.
இதன்பின்னர் ஜெண்டில்மேன். ஷங்கரின் வருகையை ஆரவாரமாக அறிவித்த படம். இதை நான் பார்த்தது – அர்ச்சனா தியேட்டரில். அந்தப் படத்தை இரண்டு முறை பார்த்தேன். இரு முறைகளிலும் எனது தாய்மாமா(நிர். இரண்டு)வுடன். என் தந்தைக்கு அடுத்தபடியாக என்னுடன் திரையரங்குகளுக்கு வந்தவர் இவர்தான். பிரபலமான ஒரு இசைத்தட்டு நூலகத்தை வைத்திருந்தார் என்று முன்னர் பார்த்தோமே அவர். தெலுங்கு வீதியில். இவரால்தான் இசையிலும் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது.
ஜெண்டில்மேனை தொடர்ந்து காதலன். தந்தையுடன். அதன்பின் அவ்வை ஷண்முகி. இந்த மூன்றுமே அதே அதே அர்ச்சனா.
இதன்பின்னர் 1995 தீபாவளிக்கு ‘முத்து’ மற்றும் ‘குருதிப்புனல்’ ஆகியவை ஒரே நாளில் வெளிவந்தன. அப்போது பதினொன்றாவது சேர்ந்திருந்த காலம். நண்பர்கள் பட்டாளத்துடன் எல்லாரும் கிளம்பியது – பாபா காம்ப்ளக்ஸுக்கு. அர்ச்சனா தர்சனா. அங்கே அர்ச்சனாவில் முத்து. தர்சனாவில் குருதிப்புனல். முத்துவை பார்த்தே தீருவது என்று வெறியுடன் இருந்த அத்தனை பேரையும் நான் ஒருவனே மல்லுக்கட்டி கஷ்டப்பட்டு குருதிப்புனலுக்கு சம்மதிக்க வைத்திருந்தேன். திரையரங்கு வரை சும்மா இருந்தனர். ஆனால், டிக்கட் கௌண்ட்டரில் குருதிப்புனல் ஈயாடிக்கொண்டிருந்தது. அத்தனை கூட்டமும் முத்துவுக்கு அம்மியதால், அனைவரும் அங்கே ஓடிவிட்டனர். தனியாக (’தியேட்டருக்குள் யாரும் இல்லாமல்’ என்று பொருள் கொள்க) குருதிப்புனல் பார்க்க நான் தயாராக இல்லை. எனவே ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி, முத்துவை திரைக்குக்கீழே முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தோம். அந்தப் படத்தின் ஒரே நன்மை என்னவென்றால், வெளியே வருவதற்குள் காது பிய்ந்து தொங்கும் அளவு உய்ய்ய்ய்ய்யென்று விரலால் விசில் அடிக்க கற்றுக்கொண்டதுதான். எனது குரு – என் பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பன் டேஞ்சர் பாபு. இதன்பின்னர் அடுத்த வாரம் குருதிப்புனலை தனியாக இரண்டு தடவைகள் பார்த்து, கண்டபடி விசில் அடித்து மனதை சமாதானப்படுத்திக்கொண்டேன் (இந்தச் சமயத்திலெல்லாம் படத்துக்கு கூட்டம் வந்துவிட ஆரம்பித்திருந்தது).
இதே வருடத்தில்தான் பியர்ஸ் ப்ராஸ்னன் புதிய பாண்டாக நடித்து கோல்டன் ஐ வந்திருந்தது. வழக்கப்படி அர்ச்சனாவில் அதனை தந்தையுடன் பார்த்தேன் (இதன்பின்னர் கல்லூரி முதல் வருடத்தில் (1997) Tomorrow Never dies. பின்னர் மூன்றாவது வருடத்தில் (1999) The World is Not Enough, அதன்பின்னர் எம்மெஸ்ஸி இரண்டாவது வருடத்தில் பியர்ஸ் ப்ராஸ்னனின் கடைசி பாண்ட் படமான Die Another Day). இவைகளை மாருதியில் பார்த்தேன்.
அதன்பின்னர் மின்சார கனவு. இது கற்பகம் காம்ப்ளெக்ஸ். இந்தச் சமயத்தில் நான் பனிரண்டாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ரசனைகளும் மாறின. ரஹ்மானின் இசை பிடிக்க ஆரம்பித்தது. இளையராஜாவின் புதிய பாடல்களில் ஈர்ப்பு குறைய ஆரம்பித்தது. தேவாவின் குத்துப்பாடல்கள் பிடித்தன.
கல்லூரி தொடங்கியது. அப்போது வெளிவந்த படம் ‘ நேருக்கு நேர்’. இந்தச் சமயத்தில் (1997) பல திரையரங்குகள் புதுப்பிக்கப்பட்டுவிட்டன. ’சேது’ திரைப்படம் என் கல்லூரி நாட்களில்தான் வெளிவந்தது. படம் பார்த்துவிட்டு வந்த நண்பர்கள் புலம்பியது இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. ஒரு அற்புதம் போல, திடீரென்று மக்களுக்குப் பிடித்துப்போய் ஓடிய படம் அது. ’வாலி’ படத்தை பார்த்ததும் அப்போதுதான். துள்ளாத மனமும் துள்ளும், ஜீன்ஸ், முதல்வன், Never Say Never Again என்ற திராபை ஜேம்ஸ்பாண்ட் படம் (இது unofficialஆக எடுக்கப்பட்ட பாண்ட் படம். ரிடையர் ஆகியிருந்த ஷான் கானரி இதில் தொண்டு கிழ பாண்டாக நடித்திருப்பார். நண்பர்களை, இதில் பிகினி காட்சிகள் இருக்கின்றன என்று சொல்லித்தான் அழைத்துச்சென்றிருந்தேன். அதன்பின்னர் சில நாகள் என்னை எங்கு பார்த்தாலும் துரத்தி அடித்தனர்), Man in the Iron Mask, Gladiator, Mask of Zorro, Entrapment, Godzilla, Mummy போன்ற படங்களை பெரும்பாலும் அர்ச்சனாவிலும் மாருதியிலும் பார்த்தேன். முக்காலேமூணு வீசம் தனியாகத்தான் அல்லது தந்தையுடன் (காரணம், நெவர் ஸே நெவர் அகைன் அனுபவம்). ‘சேது’ ஓடிய தியேட்டர் – KG காம்ப்ளக்ஸ் என்று அழைக்கப்பட்ட ராகம், தானம், பல்லவி & அனுபல்லவி காம்ப்ளக்ஸில், தக்குனூண்டு சைஸில் ஒரு பஸ் அளவே இருந்த அனுபல்லவியில். இந்தத் தியேட்டரில்தான் பள்ளி நாட்களில் டூயட் பார்த்தேன். அதற்கு வெகுகாலம் பின்னர் ‘பாரதி’ பார்த்ததும் அதே திரையரங்குதான். இந்த காம்ப்ளக்ஸில் ‘ராகம்’ திரையரங்கு, 70MM. இங்கு பல படங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் கல்லூரிக்காலத்தில்தான். அதற்கு முன்பு இங்கு பார்த்த படங்கள் மிகக்குறைவு.
2000ல் ‘ஹே ராம்’ சென்றது நினைவு வருகிறது. திரையரங்கில் இரண்டு முறைகள் நான் படங்கள் பார்த்தது மிகக்குறைவு. அதில் ஹேராம் ஒன்று. அப்போது நான் இரண்டு மாதங்களுக்கு ஒரு சிறிய பார்ட் டைம் வேலையில் இருந்தேன். என் மிகச்சிறிய வயதில் இருந்து என்னை பல்வேறு திரைப்படங்களுக்கு அழைத்துச்சென்ற தந்தையை, எனது சொந்தக் காசில் முதன்முறையாக அழைத்துச்சென்ற படம் ஹே ராம். சம்பளம் அன்று மாலைதான் என் கையில் வந்து சேர்ந்தது. உடனேயே தந்தைக்கு தொலைபேசி மூலமாக ராகம் திரையரங்குக்கு வரச்சொல்லி தகவல் அளித்துவிட்டு, அடித்துப்பிடித்து அங்கே ஓடினேன். கச்சிதமான நேரத்துக்கு அவர் வந்தார். அவரது கையில் படத்தின் டிக்கெட்டை வைத்தபோது அவரது முகத்தில் தெரிந்த அந்த நிம்மதியை என்னால் மறக்கவே முடியாது.
நான் கல்லூரியில் படித்தது BSc & MSc கணினி தொழில்நுட்பம் (Computer Technology). இதில் பிஎஸ்ஸி படிக்கையில் கட் அடித்துவிட்டு அந்த அளவெல்லாம் சுற்றவில்லை. ஆனால் எம்மெஸ்ஸி சேர்ந்ததும் அது அடியோடு மாறியது. அந்த இரண்டு வருடங்களிலுமே எனக்கு கல்லூரியில் இருந்த அட்டெண்டன்ஸ் சதவிகிதம் – வெறும் 15% மட்டுமே. ஆனால் இரவு முழுக்க படித்து எல்லா தேர்வுகளிலும் தேறிவிடுவோம். நான் வெறித்தனமாக திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்தது, எம்மெஸ்ஸி படித்த 2001-2003 காலகட்டத்தில்தான். எந்தப் படம் வந்தாலும் அங்கே நாங்கள் இருப்போம். எங்கள் வெறி எப்படி இருந்தது என்றால், படமே கிடைக்காமல் விஜயகாந்த்தின் ‘தவசி’ திரைப்படத்துக்குக்கூட கிளம்பும் அளவு. இந்தக் காலகட்டத்தில் பார்த்த படங்கள் – 12பி, நந்தா, ஆளவந்தான், பாபா, அஜீத்தின் ராஜா, தமிழன், தமிழ் (இந்த இரண்டும் ஒரே நாளில் வந்தன), Men in Black 2 என்று நீளும். இவைகளை கோவையில் நான் முன்னர் குறிப்பிட்ட அத்தனை திரையரங்குகளிலும் பார்த்தோம்.
2003யில் எம்மெஸ்ஸி இறுதியாண்டு ப்ராஜக்ட், நான்கு மாதங்கள் சென்னையில். கேட்கவா வேண்டும்? ஏற்கனவே வெறித்தனமாக நடனமாடிக்கொண்டிருப்பவனிடம் பணத்தையும் கொடுத்து சலங்கையையும் கட்டினால் எப்படி இருக்கும்? சென்னை வந்ததும் ஒரு அபார்ட்மெண்ட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். உடனடியாக நான் செய்தது – ஒரு சிறிய டிவியை வாங்கியதே. 2003ல்தான் இந்தியா இறுதிப்போட்டியில் நுழைந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்தது. அதற்குத்தான் டிவி.
சென்னையில் ஒவ்வொரு திரையரங்காக படையெடுத்தோம். குறிப்பாக சத்யம். அந்தத் திரையரங்கின் தொழில்நேர்த்தியும் துல்லியமும் அப்போது என்னைக் கவர்ந்தது. தூள், அன்பே சிவம் ஆகிய இரண்டு படங்களையும் அங்கே பார்த்தோம். அதன்பின்னர் தேவியில் மறுபடியும் தூள். அதன் பெரிய திரை அமர்க்களமாக இருக்கும். அதன்பின்னர் வசீகரா, மௌனம் பேசியதே ஆகியவை எங்கள் அபார்ட்மெண்ட்டின் அருகில் கோடம்பாக்கத்தில் ஒரு லோக்கல் திரையரங்கு. ரமணாவும் அங்கேதான்.
இப்படியாக இருந்த ஒரு சில அரியர்களை அவ்வப்போதே க்ளியர் செய்து முதல் வகுப்பில் இரண்டு டிகிரிக்களையும் முடித்தேன்.
இதன்பின் வேலையில் சேர்ந்து, விருமாண்டி, ஆய்த எழுத்து போன்ற படங்களைப் பார்த்தேன். இதில் ஒரு சுவாரஸ்யம், பதினொன்றாவதில் எனக்கு உயிர் நண்பனாக இருந்து, அதன்பின் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் துளிக்கூட தொடர்பில் இல்லவே இல்லாமல், கல்லூரி முடிந்ததும் ஒரு நேர்முகத்தேர்வுக்கு நான் சென்றிருந்தபோது அங்கே அமர்ந்திருந்த என் நண்பன் பாலுவை பார்த்ததுதான். அச்சில் வார்த்ததுபோல் அப்படியே என்னைப்போன்ற அதே திரைப்பட ரசனை இருக்கும் நபர். அவனைப் பார்த்ததும், அப்போதே நேர்முகத்தேர்வுக்கு குட்பை சொல்லிவிட்டு நாங்கள் சென்ற படம் – விருமாண்டி. அந்த நட்பு இன்றுவரை தொடர்கிறது. திரைப்படங்கள், இப்படியாக எங்கள் நட்பை புதுப்பித்திருக்கின்றன. இதன்பின்னர் இருவரும் சேர்ந்து குறைந்த பட்சம் நூறு படங்களை பார்த்திருப்போம். கோவையில் கர்நாடிக் புதுப்பிக்கப்பட்டு அங்கே அட்டகாசமான ஒலி/ஒளியமைப்பு நிறுவப்பட்டது இந்த சமயத்தில்தான். இந்தக் காலகட்டத்தில் செண்ட்ரல் மூடப்பட்டு வழக்கு நடந்துகொண்டிருந்தது. செண்ட்ரல் விட்ட இடத்தை கர்நாடிக் பிடித்துக்கொண்டுவிட்டது.
எனது திரைப்பட அனுபவங்களை நினைத்துப் பார்த்தால், ஒவ்வொரு திரையரங்குக்கும் இருந்த தனித்தன்மை நினைவு வருகிறது. எண்பதுகளின் ஆரம்பத்தில் செண்ட்ரலில், கேண்டீனின் எதிரே மிகப்பெரிய கரும்பலகை இருக்கும். அதில், அங்கே ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் முழுக்கதையும் தமிழில் எழுதப்பட்டிருக்கும். இறுதியில், ‘கதாநாயகனுக்கு அவன் நினைத்தது நடந்ததா? திரையில் பாருங்கள்’ என்று இருக்கும். அந்தச் சமயத்தில் பலருக்கும் இந்தக் கதைச்சுருக்கம் உதவியது. படமே பார்க்காமல் கேண்டீனில் ஜாலியாக ஒரு முட்டை போண்டாவை அமுக்கிவிட்டு வெளியேபோய் கதையைப் பற்றி பீலா விடுவதற்கு அவசியம் இது உபயோகப்பட்டிருக்கும்.
அர்ச்சனா& தர்சனாவை நினைத்துப்பார்த்தால், அர்ச்சனாவின் 70MM திரையை மறக்கமுடியாது. தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு மெல்ல இந்தத் திரையரங்குகளின் உள்ளே நுழையும்போது மூக்கைத் தாக்கும் ஏஸியின் மணம் இன்றும் நினைவிருக்கிறது. அதிலேயே சிகரெட் புகையும் லேசாகக் கலந்திருக்கும். இப்போதைய மல்ட்டிப்ளெக்ஸ்களின் மணம் வேறு வகையைச் சேர்ந்தது. பாப்கார்ன், ஏர் ஃப்ரெஷ்னர் போன்றவை. ஒவ்வொரு முறை எந்தத் திரையரங்கில் நுழைந்தாலும், என் சிறிய வயதில் நான் அனுபவித்து அறிந்த அந்த மணம் மனதில் எழும். உடனடியாக அவற்றோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளும். இந்த ஒவ்வொரு திரையரங்குகளின் ஸீட் வரிசை உட்பட பல விஷயங்கள் இன்னும் நினைவிருக்கின்றன. எனது சிறுவயது ஃபாண்டஸிக்களில் திரையரங்குகள் இன்றியமையாதவை. செண்ட்ரலை மறுபடியும் நினைத்துப்பார்த்தால், இடையில் சில வருடங்கள் அந்த திரையரங்கு படங்கள் எதுவும் இல்லாமல் நீதிமன்ற வழக்குகளில் சிக்கியிருந்தது. அதன்பின் வெளிவந்த முதல் படம் – போக்கிரி.
யோசித்துப் பார்த்தால், தமிழ் சினிமாவின் முக்கியமான காலகட்டத்தில்தான் நான் திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் என்பது தெரிகிறது. கமலின் நூறாவது படம், ரஜினியின் நூறாவது படம், மணிரத்னத்தின் மிகவும் முக்கியமான படம், கமல் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்ட படம், பாலசந்தரின் மறக்கமுடியாத படம், தமிழில் முதன்முறையாக DTS அறிமுகப்படுத்தப்பட்ட படம் (ஆபாவாணனின் கறுப்பு ரோஜா), தமிழில் Dolby Digital ஒலி அறிமுகப்படுத்தப்பட்ட படம் (குருதிப்புனல்), தமிழின் முதல் 3டி படம் (மைடியர் குட்டிச்சாத்தான்), தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் (ராஜராஜசோழன்), முதல் 70 MM படம் (ரஜினியின் மாவீரன்) ஆகியவை சில உதாரணங்கள். மேலே நான் கொடுத்திருக்கும் திரைப்படங்களின் பெயர்களைப் படித்தாலே அடைப்புக்குறிகளுக்குள் பெயர்கள் கொடுக்காத படங்கள் எவை எவை என்பது புரிந்துவிடும்.
தற்போது பெங்களூரின் IMAX உட்பட பல பெரிய மல்ட்டிப்ளெக்ஸ்களில் வாரம் இரண்டு படங்களாவது பார்க்கிறேன். எனது 11 மாத மகனை எந்தப் படத்துக்கு முதன்முதலில் அழைத்துசெல்லலாம் என்று அவ்வப்போது யோசிப்பேன். எப்படியும் கதறி அழத்தான் போகிறான். என் தந்தை எனக்கு அளித்த திரைப்பட ரசனையை அவனுக்கு நான் அளிப்பேன். விரைவில் நடக்கும் என்று நினைக்கிறேன் (Update on 2nd Oct 2015 – அவனது முதல் படமாகப் ‘பிசாசு’ அமைந்தது. அதனை மிகவும் ரசித்துப் பார்த்தான்).
பி.கு – எண்பதுகளின் தமிழ்ப்படங்களைப் பற்றிய என் கட்டுரைகளை இங்கே படித்துக்கொள்ளலாம் —> எண்பதுகளின் தமிழ்ப்படங்கள்.
you forgot Rainbow and Sreepathy. Besides Central, Rainbow theatre screens all hollywood movies. Too sad it is gone now.
சூப்பர், உங்க(நம்ம) கூட சினிமாவும், சினிமா கூட நீங்களும(நம்மளும்) வளர்ந்த விதம் அருமையாக(ன) எழுத்து வடிவத்தில் படிப்பதில் சந்தோசம். இந்த கட்டுரையை ரொம்ப நாள் தேடிக்கிட்டிருந்தேன்,நான் வளர்ந்ததும் கோவைதான், மாருதில animal (பத்தி சொல்லவே இல்லையேல்)படம் ரொம்ப நாள் ஓடுச்சே ஞாபகம் இருக்கா…? அதுதான் கோவையில் நான் பார்த்த முதல் ஆங்கிலப்படம். அழகி (பத்தி சொல்லவே இல்லயே) KGல் drop and pick ஆனது நினைவிருக்கா..?
நல்ல கட்டூரை. ஆனால் என்னவோ, என்னால் என் இரண்டு வயதின் ஞாபகங்களை நினைவுக் கூற முடியவில்லை.
மிக அருமையான பகிர்தல் . . .
ரசித்து படித்தேன் . . .
மயிலாடுதுறையில் நான் ரசித்து படங்கள் பார்த்ததும் . . .
அங்கு . . . தற்போது மூடப்பட்டுவிட்ட சுந்தரம் டாக்கீஸ் & கிருஷ்ணா பேலஸ் ஆகியவை நினைவுக்கு வந்தன . . .
நான் பார்த்த வேற்று மொழி படங்களில் ஆச்சர்யம் தந்தது ஜாக்கி சானின் protector , project A . the young master ஆகியவை