Conversations with Mani Ratnam (2013 – Penguin) – Baradwaj Rangan – Part 1

by Karundhel Rajesh January 22, 2014   Book Reviews

 

[quote]

திரைப்படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் யாராவது எனது இன்றுவரையிலான படங்களைக் காட்டி, இவற்றின்மூலம்தான் என்னை அடையாளம் காட்டப்போவதாகச் சொல்லியிருந்தால், சந்தோஷமாக அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்; ஆனால், இன்று, இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருப்பதால், படங்களில் இருக்கும் சில விஷயங்களைத் தவிர, பிற விஷயங்களை இன்னும் நன்றாக மாற்றியிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.. If only….

[/quote]மணி ரத்னத்தைப் பற்றி எனக்கு முதலில் தெரிந்தது, ‘இதயகோயில்’ (இப்படித்தான் படத்தின் பெயர் இருந்தது) திரைப்படத்தின் இசைத்தட்டு வெளிவந்தபோதுதான் (1985).  அது என் ஆறாவது வயது. அப்போது எனது மாமாவின் இசைத்தட்டு நூலகத்தில்தான் எப்போதும் கிடப்பேன். அந்த இசைத்தட்டின் பின்னட்டையில், கறுப்பு வெள்ளையில், பெரிய போண்டாக்கண்ணாடி அணிந்த ஒரு நபரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இருந்தது (கீழே இருக்கும் புத்தக அட்டையின் இரண்டாவது படத்தில் அந்த போண்டாக்கண்ணாடியைக் காணலாம்). அதற்குக் கீழே, ‘மணிரத்தினம்’ என்று எழுதியிருக்கும். அதன்பின்னர் ‘மௌனராகம்’ மற்றும்  ‘நாயகன்’ படங்களின் இசைத்தட்டு வெளிவந்தபோது அதே முகத்தை மறுபடியும் பின்னட்டைகளில் பார்த்தேன். அந்த இசைத்தட்டின் அட்டையில், கமலும் சரண்யாவும் பெரிய ஜட்கா வண்டியில் செல்லும் வண்ணமயமான புகைப்படம் இருக்கும்.

2013 செப்டம்பரில்,பெங்களூர் சர்ச் வீதியில் உள்ள Blossoms Book Houseல் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். வாங்கிய இரண்டு மூன்று நாட்களிலேயே படித்தும்விட்டேன். இதைப்பற்றி நான் ஃபேஸ்புக்கில் போட்ட ஒரு ஸ்டேட்டஸ் – இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

முன்னுரையைப் படித்ததுமே, ‘அடடா.. புத்தகம் முழுக்க மணிரத்னத்தை இப்படித்தான் புகழ்ந்து பரத்வாஜ் ரங்கன் எழுதியிருப்பாரோ?’ என்ற எண்ணம் எழுந்தது.

புத்தகத்தைப் படித்ததும் அதைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, வேறுசில வேலைகள் குறுக்கிட்டதால் மொத்தமாக மறந்துபோனேன். ஆனால்,  அராத்து இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பற்றிப் போட்ட ஸ்டேட்டஸை ஃபேஸ்புக்கில் படித்தபோதுதான் (ஸ்டேட்டஸின் மீது க்ளிக் செய்து படிக்கலாம்) இந்த விஷயம் நினைவு வந்ததால், ஆரம்பித்த வேலையை முடித்துவிடுவோம் என்று இதோ விமர்சனம்.

பொதுவாக மணிரத்னம் பல சினிமா இயக்குநர்கள் போல பேட்டிகளை அதிகமாக அளிப்பதில்லை. அட்லீஸ்ட் தமிழில். ‘இருவர்’ திரைப்படத்தைப் பற்றி விகடனில் மதனுக்கு மிக நீண்ட பேட்டி ஒன்றை, அந்தப்படம் வெளிவந்தபோது அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் படித்த பல விஷயங்கள் நினைவிருக்கின்றன. உதாரணமாக, படத்தின் பல காட்சிகளில் மணி ரத்னம் திரட்டிய கூட்டத்தைப் பற்றி. அந்தப் படத்தைப் பார்க்கையில் இந்தக் கூட்டத்தை கவனித்தீர்கள் என்றால், அவர்கள் அனைவருமே தத்ரூபமாக ரியாக்ட் செய்துகொண்டிருப்பதைக் காணலாம். அதுவும் பல படங்களில் அரிதுதான். இதேதான் பின்னாட்களில் மணிரத்னம் எடுத்த ‘குரு’ படத்துக்கும் பொருந்தும்.

மணிரத்னம் படங்களில் டயலாக் சிறுகச்சிறுகக் குறைந்துகொண்டே வந்ததில், இவர் பொதுவாகப் பேசும்போதே அப்படித்தான் பேசுவார் போலும் என்ற கருத்து எல்லாருக்கும் பரவி, அதைப்பற்றிப் படங்களிலும் மீடியாவிலும் நகைச்சுவை துணுக்குகள் எழுதப்படுவதில் வந்து முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட வேளையில், மணி ரத்னமும் பிறரைப் போன்று நன்றாகப் பேசக்கூடியவர்தான் என்பதை நிரூபிக்கிறது இந்தப் புத்தகம். பல இடங்களில் மிக விரிவாகவே பேட்டியளித்திருக்கிறார்.

புத்தகத்துக்கு மணி ரத்னம் எழுதியிருக்கும் முன்னுரையில், அவரைப் பற்றி அவரே சொல்லும்போது, அவரது படங்களை எப்போது உட்கார்ந்து பார்த்தாலும், ஐந்து நிமிடங்களுக்கு மேல் படத்தில் ஒன்ற முடியாமல், அவர் செய்திருக்கும் தவறுகள் தொந்தரவு செய்வதாக எழுதியிருக்கிறார். புத்தகம் முழுதுமே மணி ரத்னம் மிகவும் வெளிப்படையாகப் பேசியிருப்பதற்கு அவரது முன்னுரையே ஒரு எடுத்துக்காட்டு.

பரத்வாஜ் ரங்கன் எழுதியிருக்கும் நீளமான முன்னுரையைப் படித்தபின் எனக்குத் தோன்றியது – மணி ரத்னம் மீதான நாஸ்டால்ஜியாவால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் ரங்கன் என்பதே. காரணம், தான் பிறந்து வளர்ந்த சென்னையைப் பற்றியும், ‘மணி ரத்னத்தின் காலம்’ என்பதில் தனது இளமையைக் கழித்தது பற்றியுமான ரங்கனின் வரிகள். ’Zeitgeist’ என்ற வார்த்தையால் (Zeitgeist defining showman) மணி ரத்னத்தைப் பற்றிச் சொல்கிறார். அந்த வார்த்தைக்கு, ’ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் கலாச்சாரத்தை influence செய்வது’ என்று பொருள். மணி ரத்னத்தின் படங்கள், எண்பதுகளின் இளைஞர்களை அப்படி பாதித்தன என்பது ரங்கனின் கருத்து. அவரே அப்படி பாதிக்கப்பட்டதை சொல்கிறார். ’அக்னி நட்சத்திரம்’ படத்தில், பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் டாப் ஒன்றை அணிந்துகொண்டு, வாக்மேனில் பாட்டு கேட்டபடியே அமலா வரும் காட்சியைப் போன்றதுதான் அக்கால இளைஞர்களின் fantasy என்றும், அப்படிப்பட்ட fantasyகளை கச்சிதமாக திரையில் காண்பித்ததுமூலம், அந்த இளைஞர்களின் சமுதாயத்தையே மணி ரத்னம் பாதித்தார் என்றும் ரங்கன் எழுதியிருக்கிறார். அதேபோல், முன்னுரையின் துவக்கத்தில், மணி ரத்னத்தின் சந்திப்புகளில் ஆரம்ப சில சந்திப்புகளில் மணி ரத்னத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், அவர் முன்னர் இருந்த மேஜையையே பார்த்துக்கொண்டே கேள்விகள் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார் ரங்கன். எந்த இளைஞனுக்குமே, அவன் சார்ந்த ஒரு உலகை திரைப்படங்களில் பார்க்கையில் அவசியம் தன்னை அந்தப் படத்துடன் ஒன்றுபடுத்திக்கொள்ளத்தான் தோன்றும். அப்படி மெட்ராஸைப் பற்றிப் பல விஷயங்களை ரங்கன் பகிர்கிறார். அவை எப்படியெல்லாம் மணி ரத்னத்தின் படங்களில் காண்பிக்கப்பட்டன என்பதைப்பற்றியும் எழுதியிருக்கிறார்.

ரங்கனின் idolலாக இருந்தவர் மணி ரத்னம். எனவே, அப்படிப்பட்ட ஒரு மனிதரை நேரில் சந்திக்கும்போது அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால், இந்த இடத்தில் வேறொன்றும் தோன்றியது. கரன் தாப்பருக்கு அமிதாப் பச்சன் ஒரு idol என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், அமிதாப்பை கரன் தாப்பர் பேட்டி எடுக்கும்போது அவசியம் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்பார். காரணம், பேட்டிகளில் ஒரு ஆளுமையின் எல்லாப் பக்கங்களையும் முடிந்தவரை வெளிக்கொணர்வதுதான் அதைப் பார்ப்பவர்களுக்கும் அந்தப் பேட்டியின் பயனை முழுமையாக வழங்கும். ஆனால் மணி ரத்னத்தின் மீதான அதீத மரியாதையால் பல முக்கியமான கேள்விகளை புத்தகம் முழுதுமே ரங்கன் கேட்கவே இல்லை. கேட்டிருந்தால் புத்தகம் இன்னும் அட்டகாசமாக வந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

Donald Spoto என்ற அமெரிக்க எழுத்தாளரின் பாணியில்தான் புத்தகத்தை எழுதத் தலைப்பட்டதாகவும் (ஸ்போடோ, அமெரிக்கத் திரையுலகப் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதியவர்), ஆனால் அப்படி எழுதியபோது அது மணி ரத்னம் பேசுவதைப் போல் இல்லாமல் தானே பேசிக்கொள்வதைப் போல் தோன்றியதால், புத்தகத்தைக் கேள்வி பதில் பாணியில் (ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (François Truffaut) பாணி) அமைத்ததாகச் சொல்கிறார் ரங்கன். த்ரூஃபோ, ஹிட்ச்காக்குடன் விரிவாகக் கேள்விகள் கேட்டு ஒரு புத்தகம் எழுதினார். அதன் பெயர் – Hitchcock/Truffaut. அந்தப் புத்தகம் மிகவும் பிரபலம். அந்தப் புத்தகத்தைத்தான் மேலே த்ரூஃபோ பாணி என்று ரங்கன் சொல்கிறார். இந்தப் புத்தகமும், மைக்கேல் ஓண்டாட்ஜே (Michael Ondaatje) எழுதிய The Conversations: Walter Murch and the Art of Editing Film என்ற புத்தகமும்தான் ரங்கனின் இந்தப் புத்தகத்துக்குத் தாக்கங்களாக இருந்தன என்று சொல்லி, தனது விரிவான முன்னுரையை முடிக்கிறார்.

mani-ratnam-cover1

புத்தகம், மணி ரத்னத்தின் சிறு வயதில் இருந்து தொடங்குகிறது. தான் பார்த்த சில ஆரம்பகாலப் படங்களாக உத்தமபுத்திரன், பட்டினத்தில் பூதம் போன்ற படங்களைச் சொல்கிறார். கூடவே, அவரது மாமாவான தயாரிப்பாளர் ‘வீனஸ்’ கிருஷ்ணமூர்த்தியைப் பற்றியும் சொல்கிறார். மணி ரத்னத்தின் தந்தையான S.G ரத்னம், ஒரு சினிமா விநியோகஸ்தர். ஆகவே, இயல்பிலேயே சினிமாப் பின்னணி மணி ரத்னத்துக்கு இருந்தது. திரைப்படங்களில் சுவாரஸ்யமும் இதனாலேயே அதிகரித்ததாகவும் சொல்கிறார். மணி ரத்னத்துக்கு மிகவும் பிடித்த முதல் படமாக ஜான் வேய்னின் ’ஹடாரி’ (Hatari) இருக்கிறது. ஆச்சரியகரமாக, எனக்குத் தெரிந்து என் குடும்பத்திலேயே பல பெரியவர்களுக்கும் இந்தப் படம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. காரணம், அக்காலத்தில் தமிழகத்தில் மிகப் பிரபலமாக ஓடிய படம் அது. பெரும்பாலும் டூரிங் டாக்கீஸ்களில்தான் படங்களைப் பள்ளி நாட்களில் பார்த்ததாகவும், அவ்வப்போது ஹாஸ்டலில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோதெல்லாம் திரையரங்குகளிலும் படங்கள் பார்த்ததாகவும் சொல்கிறார் (தீபாவளி ரிலீஸ்கள் – இத்யாதி).

இதன்பின் பம்பாயில் MBA. ஃபைனான்ஸ். ஒரு மேனேஜ்மெண்ட் கன்ஸல்டன்ஸியில் வேலை. அப்போது, அந்த வேலையில் திருப்தி இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில், தனது நண்பர் ரவி ஷங்கர் (பி.ஆர். பந்துலுவின் மகன்) ஒரு கன்னடத் திரைப்படம் எடுக்க இருந்ததாகவும், அதற்குத் திரைக்கதை எழுதுவதில் உதவும்படி கேட்டுக்கொண்டதாகவும், அதனால்தான் ஒரு விபத்து போல திரைப்படங்களுக்குள் வந்ததாக மணி ரத்னம் சொல்கிறார். ஒவ்வொரு மாலையும், அலுவலகத்திலிருந்து வந்ததும் இந்த விவாதத்தில் நேரம் ஓடும். அப்போதெல்லாம், தந்தைக்கு எழுதிய ஒருசில கடிதங்களைத் தவிர வேறு எதனையும் எழுதியதே இல்லை என்றும், ஒரு வித அறியாமையில் எழுந்த குருட்டு தைரியத்தால்தான் இதையெல்லாம் அவர்கள் செய்தனர் என்றும் குறிப்பிடுகிறார். இதன்பின்னர் படப்பிடிப்பு துவங்கியது. மணி ரத்னத்னம், இதற்கு முன்னர் எந்தவித சினிமா அனுபவமும் இல்லாமல் நேரடியாகப் படம் எடுக்க வந்தவர் என்று ஒரு கருத்து பொதுவில் நிலவுகிறது. ஆனால், அப்போதிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்ல இருந்த போது கிடைத்த மூன்று மாத அவகாசத்தில் இந்தக் கன்னடப் படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றதாகவும், படப்பிடிப்பு கோலாரில் தொடர்ந்தபோது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அங்கேயே சென்றுவிட்டதாகவும் சொல்கிறார் மணி ரத்னம்.

அந்தத் திரைப்படம் வெளிவரவில்லை (Bangarutha Ghani). ஆனால், அந்தப் படப்பிடிப்பின்போதே, இனிமேல் திரைப்படங்கள் இயக்குவதில்தான் தனது எதிர்காலம் என்று உணர்கிறார் மணி ரத்னம். அந்தச் சமயத்தில் அவரது எண்ணம், ஒரு திரைக்கதையை எழுதி, அதை ஒரு இயக்குநருக்கு விற்று, அவர் கூடவே படப்பிடிப்புக்குச் சென்று, அங்கே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, அதன்பின் திரைப்படங்கள் இயக்கவேண்டும் என்பதாக இருந்தது. ஒருவேளை திரைப்படத்துறையில் எதுவும் சரியாக வரவில்லை என்றால், மறுபடியும் ஒரு வருடத்தில் வேலை ஒன்றைப் பிடித்து செட்டில் ஆகிவிடலாம் என்றெல்லாம் யோசித்திருக்கிறார். ஆனால், தனது முதல் திரைக்கதையான ‘பல்லவி அனுபல்லவி’யை எழுதியபின்னர், தானே அதனை இயக்கலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. அப்படியே செய்தார்.

இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான கருத்து மணி ரத்னத்தால் சொல்லப்படுகிறது. தனது சிறுவயதில், அதிகமான நல்ல படங்கள் தமிழில் வெளிவந்திருந்தால், ஒருவேளை பிந்நாட்களில் இயக்குநர் ஆகலாம் என்ற எண்ணம் தனக்கு வந்திருக்காது என்று சொல்கிறார். முதலில் பாலசந்தர். அதன்பின் எழுபதுகளின் பாதியில் பாரதிராஜாவும் மஹேந்திரனும் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். பதினாறு வயதினிலேவையும் உதிரிப்பூக்களையும் பார்த்து அதிர்ந்து போனதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் தனது படிப்பை முடித்துவிட்டு, மணி ரத்னத்தின் முதல் படத்தின் வேலைகளை அவர் துவக்கிய காலத்தில் வெளிவந்த உதிரிப்பூக்கள், இன்றுவரை அவர் பார்த்த சிறந்த தமிழ்ப்படங்களில் ஒன்றாக இருந்தாலும், தமிழ் சினிமா அந்தக் காலகட்டத்தில் தேங்கிய நிலையில் இருந்தது என்றும், அவரது கல்லூரிக் காலகட்டத்தில் இருந்து பல வருடங்கள் அதே நிலைதான் தொடர்ந்தது என்றும், இப்படிப்பட்ட மிகச் சாதாரணமான படங்கள் வெளிவந்ததால்தானோ என்னவோ தனக்கும் திரைப்படங்களை இயக்கும் எண்ணம் தோன்றியது என்றும் மணி ரத்னம் சொல்கிறார். ஒருவேளை பாலசந்தர்களும் பாரதிராஜாக்களும் மஹேந்திரன்களும் இன்னும் அதிக அளவில் இருந்திருந்தால், திரைப்படங்களை இயக்கும் ஆசையே தனக்கு வந்திருக்காது என்றும், திரைப்படங்களைப் பார்க்கும் ஒரு ரசிகனாகவே தனது வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன் என்றும் குறிப்பிடுகிறார்.

மணி ரத்னத்தின் படிப்பு 1977ல் முடிவடைந்தது. அதன்பின் ஒன்றரை வருடங்கள் கன்ஸல்டண்ட்டாக வேலை. 1979ன் பாதியிலிருந்து, திரைப்படத்துறையில்தான் தனது எதிர்காலம் என்ற முடிவு. பல்லவி அனுபல்லவியை இங்லீஷில் திரைக்கதையாக எழுத ஆரம்பித்தது 1980ல். அதை ஒரு மாதத்தில் முடித்தார். அதிலிருந்து, படம் வெளியான 1983 ஜனவரி வரை இருந்த காலம்தான் மிகவும் கடினமானது என்றும், அந்தச் சமயத்தில் திரைப்படங்களில் நுழைய ஆரம்பித்திருந்த ஒரு சிறு நண்பர்கள் கும்பலோடுதான் பெரும்பாலான நேரத்தைக் கழித்ததாகவும் சொல்கிறார். அந்த கும்பல் – ஒளிப்பதிவாளர்கள் P.C ஸ்ரீராம் மற்றும் சுரேஷ், இயக்குநர்கள் பாரதி – வாசு மற்றும் குட்டி பிரகாஷ் (தற்போது ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றின் உரிமையாளர்). மணி ரத்னத்தின் பல்லவி அனுபல்லவியின் முதல் ஷெட்யூல் முடிவடைந்த நேரத்தில், பாரதி – வாசுவின் பன்னீர் புஷ்பங்கள் வெளியாகிவிட்டது. இவர்கள் அத்தனை பேருமே அந்தக் கால உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன்னில்தான் காஃபி அருந்தியபடியே பெரும்பாலான தருணங்களை செலவிட்டிருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே, தங்களைப் பற்றிய பல கனவுகளையும் கொண்டிருந்திருக்கின்றனர்.

ஒரே கட்டுரையில் இந்தப் புத்தகத்தின் அத்தனை பக்கங்களையும் கடந்துவிடமுடியாது என்பதால், தொடருவோம். தொடரை முடிக்கும் நேரத்தில் புத்தகத்தைப் பற்றிய எனது கருத்தை எழுதுவேன்.

  Comments

7 Comments

  1. Dany

    இதைதான் உங்ககிட்ட எதிர்பார்தேன் ராஜேஷ்

    Reply
  2. i stopped reading the book (in english) after reading a couple of chapters… felt a little dry… i think now i should go back and try reading the book…

    Reply
    • Yes Karthik. The initial pages are dry. But the moment Mani ratnam starts talking about Mouna ragam – from then on, it’s a non-stop roller coaster ride 🙂

      Reply
  3. siva

    write fast and post rajesh… eagerly waiting

    Reply
  4. srinivasan

    i read all your reviews…they are really awesome…..one small request can u write an article about donnie darko if u are interested and time permits ( similar movies those who have multiple interpretations)

    Cheers!!!!

    Reply

Join the conversation