Conversations with Mani Ratnam (2013 – Penguin) – Baradwaj Rangan – Part 2
முதல் பாகத்தைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யலாம்.
இங்கே ஒரு சிறிய விளக்கம். முதல் கட்டுரையும் சரி, இதுவும் சரி, இனி வரப்போகும் கட்டுரைகளும் சரி – இந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது பார்வை மட்டுமே. ஆங்காங்கே ஒரு சில கருத்துகளை நான் எழுதியிருந்தாலும், இவைகள் எனது விமர்சனங்கள் அல்ல. இந்தத் தொடரின் கடைசிக் கட்டுரையில், எனது விமர்சனத்தை (மட்டும்) எழுதுவேன்.[divider]
1980ல் தனது முதல் திரைக்கதையை மணி ரத்னம் என்ற இளைஞர் எழுத ஆரம்பிக்கிறார். அதன்பின் அந்தப் படமான ‘பல்லவி அனுபல்லவி’யின் படப்பிடிப்பு துவங்குகிறது. அந்தக் காலத்தில், முதல் படம் எழுக்கும் எந்தப் புதிய இயக்குநரும் செய்யத் தயங்கும் ஒரு விஷயத்தை மணி ரத்னம் செய்தார். அவரது முதல் படத்திலேயே, அந்தக் காலகட்டத்தில் மிகப் பிரபலமாக விளங்கிய நான்கு டெக்னீஷியன்கள் வேலை செய்தனர். பாலு மஹேந்திரா – ஒளிப்பதிவு; லெனின் – படத்தொகுப்பு; கலை – தோட்டா தரணி; இசை – இளையராஜா. இது எப்படி சாத்தியமானது?
அவர்களிடம் சென்று பேசித்தான் இது சாத்தியமானது என்கிறார் மணி ரத்னம். ஏன் அவரது பட்ஜெட்டுக்குள் இருந்த பிற டெக்னீஷியன்களை அவர் உபயோகப்படுத்திக்கொள்ளவில்லை? காரணம், திரைப்படத்தை எப்படி எடுக்கவேண்டும் என்பது மணி ரத்னத்துக்குத் தெரிந்திருந்தது என்பது அவரது பதில்களிலிருந்து தெரிகிறது. அவரது காலகட்டத்தில், இன்னமும் பெரிய பெல்பாட்டம் பேண்ட்கள், கர்லிங் க்ராப், பெரிய பக்கிள்களுடன் கூடிய பெல்ட்கள் போன்றவையெல்லாம் மிக சகஜமாக திரைப்படங்களில் உலவிக்கொண்டிருந்தன. ஆனால் மணி ரத்னத்துக்கு அதில் இஷ்டம் இல்லை. காரணம் அவரைச்சுற்றி வாழ்ந்த மனிதர்கள் அப்படி உடை உடுத்தவில்லை. எனவே கதாபாத்திரங்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவான முடிவு அவரிடம் இருந்தது. இதைப்போலவே, சிறந்த டெக்னீஷியன்களுடன் வேலை செய்தால், தான் சொல்லவரும் கருத்து இன்னும் எளிதாக வெளிவரும் என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது.
எனவே, மேலே சொல்லப்பட்ட நால்வரையும் மணி ரத்னம் நேரில் சென்று பார்க்கிறார். அவர்களிடம் கதையை விவரிக்கிறார். குறிப்பாக பாலு மஹேந்திராவைப் பற்றிச் சொல்லும்போது, முள்ளும் மலரும் படத்தில் அவர் உபயோகித்த ஒரு குறிப்பிட்ட கேமரா உத்தியான Baby zoom என்பதைப்பற்றி விளக்குகிறார் மணி ரத்னம். டக்கென்று முழுமையாக ஸூம் ஆகாமல், மிகச்சிறிய ஸூம் மூலம் ஃப்ரேமில் உள்ள கதாபாத்திரத்தை நோக்கிக் கேமரா மிகச்சிறிய மூவ்மெண்ட்டில் உள்ளே சென்று, பின்னர் வெளியேறிவிடுவதே பேபி ஸூம். அப்போதெல்லாம் இதை யாருமே செய்ததில்லை என்று சொல்லும் மணி ரத்னம், இதைப்போன்ற விஷயங்களை பாலு மஹேந்திரா சகஜமாக செய்துகொண்டிருந்ததை அறிந்திருந்ததாலேயே அவரை அணுகியதாகவும் சொல்கிறார்.
அதேபோல் பல்லவி அனுபல்லவி உருவான இரண்டு வருடங்களிலும், திரைப்படங்கள் பற்றிய பல புத்தகங்களையும் மணி ரத்னம் படித்திருக்கிறார். ப்ரிட்டிஷ் கௌன்ஸில் மற்றும் அமெரிக்கன் லைப்ரரிகளில், வேறு எங்கும் கிடைக்காத பல அரிய புத்தகங்கள் இருந்தன. ஆகவே அங்கு சென்று அவற்றைப் படித்திருக்கிறார்.
தனது நெருங்கிய நண்பரான P.C ஸ்ரீராமை ஏன் மணி ரத்னம் முதல் படத்தில் பயன்படுத்திக்கொள்ளவில்லை? தயாரிப்பாளருக்கு, இயக்குநரைப் புதிதாகப் போட்டபின்னர் ஒளிப்பதிவாளரையும் புதிதாகக் களமிறக்கும் துணிவு இல்லை என்பதே காரணம்.
பாலு மஹேந்திராவுக்கும் முன்னர் மணி ரத்னம் பார்த்த நபர் – லெனின். அவர், மணி ரத்னத்தின் பக்கத்து வீட்டுக்காரர். உதிரிப்பூக்கள் படத்தில் சம்மந்தப்பட்ட எவரையும் விட்டுவைக்காமல் பார்த்துப் பேசிவிடவேண்டும் என்ற தீவிரமான எண்ணம் மணி ரத்னத்துக்கு இருந்திருந்தது. கூடவே மணி ரத்னத்தின் குடும்பமும் சினிமா சம்மந்தப்பட்ட குடும்பம் என்பதால் லெனினைச் சந்திப்பதில் அவருக்குப் பிரச்னை இல்லை. ஆனால், படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் நடக்கையில்கூட, எடிட்டிங்கைப் பற்றிய தெளிவான புரிதல் தனக்கு இல்லை என்று சொல்லும் மணி ரத்னம், லெனின் எப்படியெல்லாம் ஒவ்வொரு முறையும் எடிட்டிங் பற்றியும் காட்சிகளை எடிட் செய்வதைப் பற்றியும் விளக்கினார் என்று குறிப்பிடுகிறார்.
இதற்கும் முன்னால், தோட்டா தரணியைப் பார்த்துவிட்டார் மணி ரத்னம். ராஜபார்வை படப்பிடிப்பு நடக்கையில் அங்கு சென்ற மணி ரத்னமும் P.C ஸ்ரீராமும், படத்தின் ஒலிப்பதிவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நண்பரின் மூலம் தோட்டா தரணி உருவாக்கியிருந்த கமல்ஹாஸனின் வீட்டு செட்டைப் பார்த்திருக்கின்றனர். அது அவருக்குப் பிடித்துவிட்டதால் தோட்டா தரணியைப் பார்த்துப் பேசி அவரையும் உள்ளே கொண்டுவந்துவிட்டார் மணி ரத்னம்.
இதன்பின்னர் அவர் சந்தித்தவர்தான் இளையராஜா. அப்போது எண்பதுகளின் துவக்கத்தில் இளையராஜா ஒரு சூப்பர் ஸ்டார் என்பதைச் சொல்கிறார் மணி ரத்னம். அவருக்கும் முன்னர் ஒரு கன்னட இசையமைப்பாளரைப் பார்த்து ஒப்பந்தம் செய்துவிட்ட மணி ரத்னம், அவரது ஒரு திரைப்படத்தைக் காணச்செல்கிறார். அந்தப் படத்தில் பின்னணி இசையைக் கேட்டு திகிலைடைந்து ஓடிவந்துவிட்ட மணி ரத்னத்துக்கு அப்போது இருந்த ஒரே வாய்ப்பு இளையராஜா மட்டுமே. காரணம், அந்தக் கன்னட இசையமைப்பாளரின் இசை – old school என்று சொல்கிறார் மணி ரத்னம். எண்பதுகளில் இருந்துவந்த அந்த இசையமைப்பாளர் old school என்றால், அவருக்குத் தனது காலகட்டத்துக்கு இளையராஜாவின் இசை பொருந்தும் என்றும் தோன்றியிருக்கிறது. இதேதான் ரஹ்மான் விஷயத்திலும் நடந்தது என்பது என் அவதானிப்பு. இளையராஜா – மணி ரத்னம் கூட்டணி வெற்றிகரமாக இருந்துவந்த நிலையிலும், தொண்ணூறுகளின் ஆரம்பகட்டத்திலேயே, ரஹ்மானின் இசைதான் நவீனகாலத்துக்குப் பொருந்தக்கூடிய இசை என்பதை அவரால் கவனிக்க முடிந்திருக்கிறது. இதனால் இளையராஜாவை Old school என்று மணி ரத்னம் சொல்லியிருக்க மாட்டார் என்றாலும், அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப தன்னை update செய்துகொள்ள அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதைச் சொல்லவந்தேன்.[divider]
இனி வருவது நான் ஃபேஸ்புக்கில் 2013 செப்டம்பரில் போட்ட ஒரு பதிவு.
அட்வான்ஸை பழைய இசையமைப்பாளரிடமிருந்து திரும்ப வாங்க அவருக்கு கூச்சம். எனவே, ஏற்கெனவே ஒளிப்பதிவாளராக புக் செய்யப்பட்டிருந்த பாலு மஹேந்திராவிடம், இளையராஜாவை அறிமுகம் செய்துவைக்க முடியுமா என்று கேட்கிறார் மணி ரத்னம். அறிமுகம் செய்துவைக்கப்படுகிறது.
இளையராஜாவிடம் இப்படி பேசுகிறார் முதல் பட இயக்குநர் மணி. ‘ஒரு சின்ன பட்ஜெட் கன்னடப்படம் பண்றேன். அதுக்கு நீங்க இசையமைச்சா நல்லா இருக்கும். ஆனா உங்க மார்க்கெட் ரேட்டை என்னால் கொடுக்க முடியாது…..’
அடுத்த நொடி, இளையராஜா சம்மதிக்கிறார். கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. மார்க்கெட் ரேட்டுக்கு ஐந்தில் ஒரு பங்கு ரேட்டுக்கு ஒகே சொல்கிறார். உடனடியாக படத்தின் கதையை மணி சொல்ல, உடனடியான எதிர்வினை -‘சீக்கிரமே கம்போஸிங்குக்கு போயிரலாம்’ – ஒரு புன்சிரிப்புடன்.
இப்படித்தான் மணி ரத்னத்தின் முதல் படத்துக்கு இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இங்கே ஒரு flash forward. ’மௌனராகம்’ மணி ரத்னத்தின் ஐந்தாவது படம். இதற்குள் இளையராஜா மணியுடன் நன்கு பொருந்திவிட்டார். இளையராஜாவிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்று மணி ரத்னத்தின் அவதானிப்பு இதோ:
‘இளையராஜா பொதுவாக இசையமைப்பதற்கு முன்னால் ஒவ்வொரு ஸீனாகப் படத்தைப் பார்ப்பார். ஒரு ஸீன் ஓடும்போது அதற்கேற்ற moodகளை பேப்பரில் குறித்துக்கொள்வார். அந்த ரீல் முடிந்ததும் கடகடவென்று இசையை எழுதிவிடுவார். அவ்வளவுதான். எங்கே இசை தொடங்கவேண்டும், எங்க மெதுவாக வரவேண்டும், எங்க முடியவேண்டும் என்பதெல்லாம் உடனடியாக அதிலேயே வந்துவிடும். அடுத்த கணமே அவரது ஆர்க்கெஸ்ட்ராவும் இசையை காப்பி செய்துவைத்துக்கொண்டு தயாராகிவிடுவார்கள். இதுதான் அவரது பாணி.
எனவே, ஒரு இயக்குநராக, இசையில் நமது இன்புட்கள் இருக்கவேண்டும் என்றால் இளையராஜா அந்தந்த ரீல்களைப் பார்க்கும்போதே சொன்னால்தான் உண்டு. அங்கே நமது எதிர்பார்ப்பைச் சொல்லத் த வறிவிட்டால் இசை அடுத்த சில நிமிடங்களில் படுவேகமாகத் தயாராகிவிடும். அதன்பின் மாற்றச்சொல்வது தயாரிப்பு ரீதியில் செலவை வைக்கும். இதனால், அவர் ரீல்களைப் பார்க்கும்போதே மெதுவாக அவரது காதுகளில் எனக்குத் தேவையான இன்புட்களைப் போட்டுவிடுவேன். அதன்படியே இசையும் தயாராகிவிடும். இதுதான் இளையராஜாவிடம் வேலை வாங்குவதன் ரகசியம்’.
இது உண்மையில் ஒரு எளிய வழிமுறை. ஆனால் அதனை, ’இளையராஜா’ என்ற பிரம்மாண்டமான பிம்பம் இருப்பதால் பிற இயக்குநர்களில் பலர் செய்யமாட்டார்கள். எனவே அவர்களுக்குத் திருப்தி இல்லாமல் இசை வரக்கூடிய வாய்ப்புகளே அதிகம்.
சரி. மௌன ராகத்தின் flash forward கட் செய்துவிட்டு பல்லவி அனுபல்லவியின் காலத்துக்கு வருவோம்.[divider]
இதன்பின்னர் நடிக நடிகையர் தேர்வு. அந்தக் காலகட்டத்தின் பெரிய நடிகையான லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏற்கெனவே ஒரு தெலுங்குப் படத்தில் (Vamsa Vriksham) நடித்திருந்த அனில் கபூர், எண்பதுகளின் துவக்கத்திற்கான ஒரு சமகால இளைஞனின் தோற்றத்தில் இருந்ததால் புக் செய்யப்பட்டார். இன்னொரு கதாபாத்திரத்துக்கு மணி ரத்னம் தேர்வு செய்தவர் சுஹாஸினி. ஆனால் அவர் அதை மறுத்துவிடவே, கிரண் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் பல்லவி அனுபல்லவி எடுத்து முடிக்கப்பட்டு வெளியானது. இந்த இடத்தில், திரைக்கதை எழுதுவதற்கும், அதனைப் படமாக மாற்றுவதற்குமான நுண்ணிய வேறுபாடுகளை மணி ரத்னம் தெளிவாகவே சொல்கிறார். படப்பிடிப்பு ஆரம்பித்த மூன்றாம் நாள், பாலு மஹேந்திராவிடம், ‘எனக்கு இங்கிருந்து ஓடிவிடலாம் என்று தோன்றுகிறது. எதுவுமே சரியாக வரவில்லை’ என்று சொல்லியிருக்கிறார் மணி ரத்னம். அவருக்கு தைரியம் ஊட்டியிருக்கிறார் பாலு மஹேந்திரா. சிறுகச்சிறுக ஒரு படத்தை இயக்கும் அனுபவத்தை இப்படியாக மணி ரத்னம் கற்றுக்கொண்டார். ஒரு இயக்குநரின் வேலைகளைப் பற்றியும் இங்கே விரிவாக விளக்குகிறார் மணி ரத்னம்.
இதன்பின், படத்தைப் பார்த்த மலையாளத் தயாரிப்பாளர் N.G. ஜான், மணிரத்னத்தை அவரது அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார். படத்தின் பெயர் – ‘உணரு’. அவரிடம், பல்லவி அனுபல்லவியின் உருவாக்கத்தின்போதே மணி ரத்னம் எழுதியிருந்த ‘திவ்யா’ என்ற கதையைச் சொல்கிறார். (இந்தக் கதைதான் மணி ரத்னத்தின் ஐந்தாவது படமாக, ‘மௌன ராகம்’ என்ற பெயரில் பிந்நாட்களில் வெளிவரப்போகிறது. அதுதான் மணி ரத்னத்தின் முதல் ஹிட்டும் கூட). ஆனால் தயாரிப்பாளர், இதெல்லாம் மலையாளத்துக்கு ஒத்துவராது என்று சொல்லிவிட, உணரு தயாராகிறது.
இந்தப் படம் எடுக்கும்போது மணி ரத்னம் சந்தித்த பிரச்னைகள் வேறுவிதமானவை. பல்லவி அனுபல்லவியில், ஒரு ஃப்ரேமில் அதிகபட்சம் நான்குபேர் இருப்பார்கள். இதனால் ஷாஅட் வைப்பது சுலபமாக இருந்தது. ஆனால் உணருவில், ஒரு ஃப்ரேமில் குறைந்தபட்சம் பத்து பேர். காரணம், அது தொழிலாளர் பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதனால் மணி ரத்னத்துக்கு ஷாட் வைப்பது மிகக்கடினமாக இருந்திருக்கிறது. இத்தனை பேர் இருந்தால் எப்படி எங்கிருந்து துவங்குவது? வரிசையான ஷாட்களை எப்படியெல்லாம் அமைப்பது? இதனையும் படுவேகமாகக் கற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம். அதையும் செய்திருக்கிறார் மணி ரத்னம்.
ஃபிப்ரவரி 1ம் தேதி ஷூட்டிங் துவங்குகிறது. படம் வெளியானது – 1984 ஏப்ரல் 14. மணி ரத்னத்தின் மிகக்குறுகியகாலப் படம் இது.
இதன்பின்னர் மணி ரத்னத்தின் முதல் தமிழ்ப்படமான பகல் நிலவு’ துவங்கியது. தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், மணி ரத்னத்தின் நெருங்கிய நண்பர். எனவே, படம் துவக்குவதில் பிரச்னை இல்லை. ஆனால் அவரும் ‘திவ்யா’ என்ற திரைக்கதையை நிராகரித்து, ஆக்ஷன் சேர்ந்த படம் ஒன்றுதான் தேவை என்று சொல்லிவிட, அப்போது எழுதப்பட்ட திரைக்கதைதான் பகல் நிலவு. படத்தில் யாருக்குமே ஒப்பனை இல்லை.
பகல் நிலவைப் பற்றிச் சொல்கையில், ஒரு விஷயத்தை கவனித்தேன். அதுதான் தமிழர்களின் குறியீட்டு வெறி. அதாவது, நமக்கு ஒரு இயக்குநரைப் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். அவர் சும்மா வைக்கும் ஷாட்களில் கூட ‘அதோ குறியீடு… இதோ குறியீடு’ என்று ஆர்கஸம் அடைவதே தமிழர்களாகிய நமக்கு ஒரு கைவந்த கலை என்பது என் அனுமானம். அது பலமுறை நிரூபணமும் ஆகியிருக்கிறது. அப்படி, படத்தில் ரேவதி, எப்போது பார்த்தாலும் கழுத்தில் கேமராவைத் தொங்கவிட்டுக்கொண்டு வருவது, அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிய ஒரு நுணுக்கமான விபரத்தை ஆடியன்ஸுக்குத் தெரிவிவிக்கிறது; எனவே கமர்ஷியல் படமான பகல் நிலவில் கூட மணி ரத்னம் இப்படி ஒரு நல்ல விஷயத்தைச் செய்திருக்கிறார் என்பது பரத்வாஜ் ரங்கனின் அவதானிப்பு.
இந்த இடத்தில் இடைமறிக்கும் மணி ரத்னம், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று அதை மறுக்கிறார். கிராமத்துக்கு முதன்முறையாக வரும் ஒரு பெண் என்ன செய்வாள்? அவளுக்கு எப்போது பார்த்தாலும் அலுப்பாகவே இருப்பதால் அங்குமிங்கும் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு திரிகிறாள். அவ்வளவுதான் விஷயம் என்று சொல்லிவிட்டு அடுத்த பதிலுக்குப் போய்விடுகிறார் மணி ரத்னம். அந்தக் கதாபாத்திரம் என்ன செய்ய விரும்புகிறது என்பதெல்லாம் பற்றித் திரைக்கதை எழுதும்போதும் சரி, படமாக எடுக்கும்போதும் சரி – எந்த எண்ணமுமே அவருக்கு இருந்ததில்லை என்கிறார் மணி ரத்னம்.
போலவே, பகல் நிலவில் மணி ரத்னத்தின் பாணி காட்சிகள் இல்லை. இதைப்பற்றி அவர் சொல்கையில், அப்போதெல்லாம் தனக்கு எது வருகிறது – வரவில்லை என்பதெல்லாம் இன்னும் பரிசோதனையிலேயே இருந்த காலகட்டம் அது என்றும், அதனால்தான் அந்தப்படம் அவரது பாணியில் இல்லை என்றும் சொல்கிறார்.
பகல் நிலவில் மணி ரத்னம் சந்தித்த பிரச்னை – நடன இயக்கம். அதுவரை முற்றிலும் கமர்ஷியலான ஒரு பாடல் ஃபார்மேட் அவரது படங்களில் இல்லை. பகல் நிலவில்தான் பாடல்கள் choreograph செய்யப்பட்டன. அதை எப்படியெல்லாம் செய்யல்லாம் என்பதில் மணி ரத்னத்துக்கு அனுபவம் இல்லை என்பதால் ஆரம்பத்தில் பிரச்னைகள் இருந்தன என்று சொல்கிறார். குரு தத், விஜய் ஆனந்த், ஸ்ரீதர் போன்றவர்களின் பாடல்கள் அட்டகாசமானவை என்று சொல்லி, அவற்றை இலக்காக வைத்து செயல்பட்டால்தான் நல்ல முறையில் பாடல்கள் வெளிவரும் என்று முயன்றதாகக் குறிப்பிடுகிறார். இங்கே நடன இயக்குநர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆகியவர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்கவேண்டும் என்று விரிவாக மணி ரத்னத்தின் கருத்து வருகிறது.
பகல் நிலவில் காமெடி ட்ராக் என்று ஒன்றும் தனியாக இருந்தது. இதைப்பற்றிச் சொல்கையில், லிவிங்ஸ்டன் மற்றும் குமார் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதியது அது என்றும், அது இடம்பெறுவதைப் பற்றி ஒரு இயக்குநராக அவரால் முடிவுகள் எடுக்கப்படமுடியாத காலகட்டம் அது என்றும் சொல்கிறார். புதிய இயக்குநர் என்பதால் தயாரிப்பாளர்கள் தரப்பில் சில டெம்ப்ளேட்கள் வலிந்து படத்தில் திணிக்கப்பட்டன. இதேதான் அவரது அடுத்த படமான இதயகோயிலிலும் நடந்தது. அதில் காமெடி ட்ராக்கை எழுதியவர் வீரப்பன். அந்த ட்ராக், பகல் நிலவின் காமெடி ட்ராக்கை விட பரவாயில்லை என்பது மணி ரத்னத்தின் கருத்து.
ஆனால் இங்கே இன்னொரு விஷயமும் இருக்கிறது. பகல் நிலவு மற்றும் இதயகோயில் படங்களின் காமெடி ட்ராக்குகள், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து திணிக்கப்பட்டன. ஆனால் பின்னர் வந்த ‘அக்னி நட்சத்திரம்’ மற்றும் ‘கீதாஞ்சலி’ (இதயத்தைத் திருடாதே) படங்களில் மணி ரத்னத்தாலேயே காமெடி ட்ராக்குகள் வைக்கப்பட்டன. இதற்குக் காரணம் என்னவெனில், ‘மௌன ராகம்’ படம் வெற்றிபெறமுடியாத இடங்களில் கூட இந்தப் படங்கள் வெல்லவேண்டும் என்ற எண்ணம்தான் என்கிறார் மணி ரத்னம். மௌன ராகம் ஹிட் தான் என்றாலும், அது ஒரு மென்மையான படம். ஹைக்ளாஸ் படம். அதைப்போல் இல்லாமல் அக்னி நட்சத்திரம் & கீதாஞ்சலி ஆகியவைகள் பக்கா மசாலாக்கள் என்பதையும் யோசிக்கவேண்டும்.
பகல் நிலவுக்குப் பின்னர் இதயகோயில். இந்தப் படம்தான் அவரது திரைவாழ்வின் மிக முக்கியமான படம் என்று மணி ரத்னம் குறிப்பிடுகிறார். காரணம், இந்தப் படம்தான் இனிமேல் எப்படிப் படம் எடுக்கவேண்டும் என்ற தெளிவை அவருக்கு வழங்கியது. இந்தப் படப்பிடிப்பு முழுதுமே, மிக மிக சோகமாகவும் வெறுப்பாகவும் உணர்ந்ததாக அவர் சொல்கிறார். அம்பிகா & ராதா ஆகியவர்களின் கால்ஷீட்டை வைத்திருந்த கோவைத்தம்பி, அவர்களுக்காக ஒரு கதையையும் வைத்துக்கொண்டு இயக்குநர் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்த சமயம் அது. கதையை ஒரு காஸெட்டில் பதிவு செய்து மணி ரத்னத்துக்கு அனுப்புகிறார் கோவைத்தம்பி. ஆனால் மணி ரத்னத்துக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை. அதை தயாரிப்பாளரின் முகத்துக்கு நேராக சொல்லத் தயங்கி, தற்போது பகல் நிலவின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருப்பதாகவும், அதை முடிக்க இன்னும் நேரம் அதிகம் எடுக்கும் எனவும், அதனால் இதைச் செய்யமுடியாது என்றும் சொல்கிறார் மணி ரத்னம். உடனடியாக அங்கேயே அம்பிகா & ராதாவின் மேனேஜர்களை ஃபோனில் அழைக்கும் கோவைத்தம்பி, அவர்களின் தேதிகளை ரத்து செய்து, பகல் நிலவை முடித்துவிட்டு வருமாறு மணி ரத்னத்திடம் சொல்கிறார்.
’எனக்குக் கதை பிடிக்கவில்லை. என்னால் முடியாது’ என்ற வார்த்தைகளை நேரடியாகச் சொல்லமுடியாமல் மணி ரத்னம் தயங்கியதால் வந்த வினைதான் இதயகோயில்.
இதய கோயிலின் திரைக்கதையை எழுதிய M.G வல்லபனிடம் மணி ரத்னம் மறுபடியும் ‘திவ்யா’ கதையைச் சொல்கிறார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவரிடம், ‘இண்டர்வெல்ல ஒரு ஹீரோயின் சாகுறாங்க.. க்ளைமேக்ஸ்ல இன்னொரு ஹீரோயின் சாகுறாங்க.. படம் அவசியம் ஹிட்’ என்று கோவைத்தம்பியின் தரப்பில் சொல்லப்படுகிறது. இதன்பின் அதே கதையை வைத்துக்கொண்டு, சார்லி சாப்ளினின் ‘Limelight’ படத்தைப் போன்ற ஒரு திரைக்கதையை எழுதித்தருகிறார் மணி ரத்னம். அதுவும் நிராகரிக்கப்படுகிறது. காரணம், அந்தக் கதை youngகாகவும் modernனாகவும் இல்லை என்று கோவைத்தம்பி சொல்லியதே. ‘நீங்க ஷாட்களை மட்டும் எடுங்க…. மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்’ என்று மணி ரத்னத்திடம் சொல்லப்பட்டது.
இந்த இடத்தில் மறுபடியும் பரத்வாஜ் ரங்கனின் ‘குறியீட்டு’ ஆர்வம். இதயகோயிலில் காதல் – மரணம் என்ற கரு, பிந்நாட்களில் கீதாஞ்சலியில் இன்னும் அழகாக, மணி ரத்னத்தின் பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, கீதாஞ்சலியை எழுதியபோது இதயகோயிலை மனதில் வைத்துதான் எழுதினீர்களா என்று கேட்கிறார் ரங்கன். இதற்கு பதிலாக, இதயகோயிலை சுத்தமாக மறக்கவே விரும்பியதாகவும், அதனால் அப்படியெல்லாம் நினைவு வைத்துக்கொள்ளவில்லை என்றும் பட்டென்று சொல்கிறார் மணி ரத்னம். இதயகோயிலின் ஒரே Saving grace – அதன் பாடல்கள் என்று நினைவு கூர்கிறார். குறிப்பாக ‘நான் பாடும் மௌன ராகம்’ பாடல், குரு தத்தின் Pyaasa (தன்னைத் தொலைத்த கவிஞன், யாருமற்ற அரங்கத்தில் தனது இறந்த காலத்துடனும், தனது கவிதையுடனும் மட்டுமே வாழும் நிலையைச் சொன்ன) படத்திற்கான மரியாதை என்று சொல்கிறார்.
மணி ரத்னத்தின் முக்கியமான படங்களை இனிவரும் கட்டுரையில் காணலாம்.
pls post next as soon as possible. waiting. much interesting. pls cover much and post.
A very interesting read.. Could you please post the ‘baby zoom’ scene.. Couldn’t get much help outside..